காங்கேயம் --- 0946. சந்திதொறும் நாணம்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

சந்திதொறும் நாணம் (சிங்கை - காங்கேயம்)

 

முருகா! 

அடியேனது வினைகள் நீங்கி

நன்மை விளையத் திருவருள் புரிவாய்.

 

 

தந்ததன தான தந்ததன தான

     தந்ததன தான ...... தனதான

 

 

சந்திதொறு நாண மின்றியகம் வாடி

     உந்திபொரு ளாக ...... அலைவேனோ

 

சங்கைபெற நாளு மங்கமுள மாதர்

     தங்கள்வச மாகி ...... அலையாமற்

 

சுந்தரம தாக எந்தன்வினை யேக

     சிந்தைகளி கூர ...... அருள்வாயே

 

தொங்குசடை மீது திங்களணி நாதர்

     மங்கைரண காளி ...... தலைசாயத்

 

தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி

     என்றுநட மாடு ...... மவர்பாலா

 

துங்கமுள வேடர் தங்கள்குல மாதை

     மங்களம தாக ...... அணைவோனே

 

கந்தமுரு கேச மிண்டசுரர் மாள

     அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே

 

கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல

     சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி

     உந்தி பொருள் ஆக ...... அலைவேனோ?

 

சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர்

     தங்கள் வசம் ஆகி ...... அலையாமல்,

 

சுந்தரம் அதுஆக,எந்தன் வினை ஏக,

     சிந்தை களி கூர ...... அருள்வாயே.

 

தொங்கு சடை மீது திங்கள்அணி நாதர்

     மங்கை ரண காளி ...... தலைசாய,

 

தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி

     என்று நடம் ஆடும் ...... அவர்பாலா!

 

துங்கம்உள வேடர் தங்கள் குலமாதை

     மங்களம் அதுஆக ...... அணைவோனே!

 

கந்த! முருகேச! மிண்ணு அசுரர் மாள

     அந்தமுனை வேல்கொடு ...... எறிவோனே!

 

கம்பர் கயிலாசர் மைந்த! வடிவேல!

     சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.

 

பதவுரை

 

            தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர்--- தொங்குகின்ற திருச்சடையின் மேல் பிறைச்சந்திரனை அணிந்துள்ள தலைவரும்,

 

           மங்கை ரண காளி தலை சாய--- போர்க்களத்தை ஆள்கின்ற மங்கையாகிய காளி வெட்கித் தலை சாயுமாறு,

 

            தொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்று நடம் ஆடும் அவர்  பாலா---  தொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்னும் தாளவொத்துக்கு இசையத் திருநடனம் புரிந்த சிவபெருமானின் திருக்குமாரரே!

 

            துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே--- பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளிநாயகியை மங்களம் பொருந்தத் தழுவியவரே!

 

            கந்த!--- கந்தக் கடவுளே!

 

            முருகேச--- முருகப் பெருமானே!

 

            மிண்டு அசுரர் மாள--- நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் மாண்டு ஒழி,

 

            அந்த முனைவேல் கொடு எறிவோனே--- கூரிய வேலாயுதத்தை  எறிந்தவரே!

 

            கம்பர்--- திருக்கச்சியிலே விளங்கும் ஏகம்பர்,

 

           கயிலாசர்--- திருக் கயிலாய நாதர்,

 

            மைந்த--- திருமகனாரே!

 

            வடிவேல--- கூரிய வேலாயுதத்தை உடையவரே!

 

            சிங்கை நகர் மேவு பெருமாளே--- சிங்கை என்னும் காங்கேய நகரில் பொருந்தி இருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக அலைவேனோ --- இரவும் பகலும் வெட்கம் இல்லாமல் உள்ளம் சோர்வுற்று வயிறு வளர்ப்பதையே எண்ணி அலைவேனோ?

 

            சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர் தங்கள் வசமாகி அலையாமல்--- தினந்தோறும் எண்ணம் கொண்டுஉடல் அழகுள்ள விலைமாதர்களின் வசப்பட்டு அலையாமல்,

 

            சுந்தரம் அது ஆக--- நன்மை விளையுமாறு,

 

           எந்தன் வினை ஏக --- அடியேனுடைய வினையானது ஒழிய

 

           சிந்தை களிகூர அருள்வாயே--- திருவுள்ளம் மகிழிந்து அருள் புரிய வேண்டும்.

 

பொழிப்புரை

 

            தொங்குகின்ற திருச்சடையின் மேல் பிறைச்சந்திரனை அணிந்துள்ள தலைவரும்போர்க்களத்தை ஆள்கின்ற மங்கையாகிய காளி வெட்கித் தலை சாயுமாறுதொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்று திருநடனம் புரிந்த சிவபெருமானின் திருக்குமாரரே!

 

            பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளிநாயகியை மங்களம் பொருந்தத் தழுவியவரே!

 

            கந்தக் கடவுளே!

 

           முருகப் பெருமானே!

 

           நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் மாண்டு ஒழி,கூரிய வேலாயுதத்தை  எறிந்தவரே!

 

            திருக்கச்சியிலே விளங்கும் ஏகாம்பரதாநர்திருக் கயிலாய நாதர்திருமகனாரே!

 

           கூரிய வேலாயுதத்தை உடையவரே!

 

           சிங்கை என்னும் காங்கேய நகரில் பொருந்தி இருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            இரவும் பகலும் வெட்கம் இல்லாமல் உள்ளம் சோர்வுற்று வயிற்றையே எண்ணி அடியேன் அலைவேனோ?

 

          தினந்தோறும் எண்ணம் கொண்டுஉடல் அழகுள்ள விலைமாதர்களின் வசப்பட்டு அலையாமல்நன்மை விளையுமாறு,அடியவனுடைய வினையானது ஒழிதிருவுள்ளம் மகிழிந்து அருள் புரிய வேண்டும்.

 

விரிவுரை

 

சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக அலைவேனோ --- 

 

உந்தி --- வயிறு. வயிறு வளர்ப்பதையே பொருளாகக் கொண்டு அல்லும் பகலும் அலைதல்.

 

தூராக் குழியாகிய வயிற்றுக்கு உணவு தேடி அல்லும் பகலும் அலைவர்.பசிப் பிணி மிகவும் கொடியது. கொடிது கொடிது வறுமை கொடிது என்பார் ஔவைப் பிராட்டியார். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். உடம்பில் நோய்களோடு பலகாலம் தள்ளலாம். ஆனால்பசியோடு ஒரு கணமும் இருக்கமுடியாது.

 

பசி வந்தவுடன் மானம்குலம்கல்விவண்மைபெருமிதம்,தானம்தவம்உயர்ச்சிமுயற்சிகாமம்என்ற பத்துக் குணங்களும் பறந்து போய்விடும். 

 

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்.                      ---ஔவையார்.

 

.....     .....அவல உடலம் சுமந்து   தடுமாறி

மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி

     மன வழி திரிந்து மங்கு        வசைதீர......   --- (அனைவரும்) திருப்புகழ்.

 

அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று

அநுதினமும் நாணமின்றி அழிவேனோ.     --- (கருவினுருவாகி) திருப்புகழ்.

    

அவல வயிற்றை வளர்ப்பதற்கே 

     அல்லும் பகலும் அதில் நினைவாய்க்

கவலைப் படுவது அன்றிசிவக் 

     கனியைச் சேரக் கருதுகிலேன்,

திவலை ஒழிக்குந் திருத்தணிகைத் 

     திருமால் மருகன் திருத்தாட்குக்

குவளைக் குடலை எடுக்காமல் 

     கொழுத்த வுடலை எடுத்தேனே.             --- திருவருட்பா.

 

அத்திமுதல் எறும்பு ஈறான உயிர் அத்தனைக்கும்

சித்தம் மகிழிந்து அளிக்கும் தேசிகா! --- மெத்தப்

பசிக்குது ஐயா! பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி

இசிக்குது ஐயா! காரோணரே!.               ---  பட்டினத்தார்.

 

சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர் தங்கள் வசமாகி 

அலையாமல்--- 

 

சங்கை --- எண்ணம்.

 

காமேவேட்கை காரணமாக அலைதல்.

 

சுந்தரம் அது ஆக--- 

 

சுந்தரம் --- நன்மை.

     

மங்கை ரண காளி தலை சாய,தொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்று நடம் ஆடும் அவர்--- 

 

திருவாலங்காட்டின் பெருமையைச் சிவபெருமான் சொல்லக் கேட்ட சுநந்த முனிவர்பெருமான் அருளிய வண்ணம் தாண்டவ அருட்கோலத்தைக் காண விழைந்து,திருவாலங்காடு சென்று தவம் புரிந்து கொண்டு இருந்தனர். கண்ணுதற் பெருமானது கைவிரல் அணியாகிய கார்க்கோடகன் திருவிரலில் விடத்தைக் கக்கபெருமான் “நம்மைக் கருதாது தருக்குடன் நீ செய்த தீமைக்காகத் திருக்கயிலை மலையினின்று நீங்குக” எனப் பணித்தனர். நாகம் நடுநடுங்கிப் பணிய சிவமூர்த்தி, “திருவாலங்காட்டில் அநேக ஆண்டுகளாக அருந்தவம் இயற்றும் சுநந்தருடன் சண்ட தாண்டவத்தைத் தரிசித்துப் பிறகு வருவாய்” என்று அருளிச் செய்தனர். கார்க்கோடகன் கருடனுக்கு அஞ்ச,எம்பெருமான் “இத் தீர்த்தத்தில் முழுகி அங்குள்ள முத்தி தீர்த்தத்தில் எழுக” என்று அருள்பாலிக்கஅரவு அவ்வாறே ஆலவனம் வந்துசுநந்தரைக் கண்டு தொழுதுதனது வரலாற்றைக் கூறி நட்புகொண்டு தவத்திருந்தது. சுநந்தர் நெடுங்காலம் தவத்திருப்பஅவரைப் புற்று மூடி முடிமேல் முஞ்சிப்புல் முளைத்துவிட்டது. அதனால் அவர் முஞ்சிகேச முனிவர் எனப் பெயர் பெற்றனர். இது நிற்க,

 

நிசுபன்சும்பன் என்னும் அசுரர் இருவர் ஒப்பாரு மிக்காரும் இன்றி பல தீமைகளைச் செய்து வந்தனர். அத் துன்பத்திற்கு அஞ்சிய தேவர்கள் உமாதேவியாரை நோக்கி அருந்தவம் செய்தனர். அகிலாண்டநாயகி அமரர் முன் தோன்றி, “உங்களைத் துன்புறுத்தும் அசுரரை அழிப்பேன்” என்று அருளிச்செய்து,மலைச்சாரலை அடைந்துதவ வடிவத்தைக் கொண்டு உறைகையில்சண்டன் முண்டன் என்னும் அவுணர் இருவர் அம்பிகையை அடைந்து “நீ யார்தனித்து இருக்குங் காரணம் என்னசும்பனிடம் சேர்வாயாக” என்னலும்உமையம்மையார், “தவம் இயற்றும் நான் ஆடவர்பால் அணுகேன்” என்று கூறஅவ்வசுரர் சும்பன்பால் சென்று தேவியின் திருமேனிப் பொலிவைக் கூறிஅவனால் அனுப்பப்பட்ட படையுடன் வந்து அழைத்தும் அம்பிகை வராமையால்வலிந்து இழுக்க எண்ணுகையில் இமயவல்லிசிறிது வெகுளஅம்மையார் தோளிலிருந்து அநேகஞ் சேனைகளும் ஒரு சக்தியும் தோன்றிஅவற்றால்அசுர சேனையும் சண்டனும் முண்டனும் அழிந்தனர். உமாதேவியார் “சண்டணையும் முண்டனையும் கொன்றதனால் சாமுண்டி எனப் பெயர் பெற்று உலகோர் தொழ விளங்குவாய்” என அச் சக்திக்கு அருள் புரிந்தனர். அதனை அறிந்த நிசும்பன்சும்பன் என்போர் வெகுண்டு ஆர்த்துஅளப்பற்ற அசுர சேனையுடன் வந்துஅம்பிகையை எதிர்த்துக் கணைமாரி பெய்தனர். அகில ஜக அண்டநாயகி தனது உடலினின்றும் சத்தமாதர்களையும் சிவதூதியரையும் உண்டாக்கிப் போருக்கு அனுப்பிஅவர்களால் அசுரசேனையை அழிப்பித்துதாமே முதலில் நிசும்பனையும் பிறகு சும்பனையும் கொன்றருளினார்.

 

அவ்விரு நிருதர்கட்கும் தங்கையாகிய குரோதி என்பவள் பெற்ற இரத்த பீசன் என்று ஒருவன் இருந்தான். அவன் தனது உடலினின்றும் ஒரு துளி உதிரம் தரைமேல் விழுந்தால்அத்துளி தன்னைப்போல் தானவன் ஆமாறு வரம் பெற்றவன். அவன்இச்செய்தி அறிந்து இமைப் பொழுதில் எதிர்த்தனன். அந் நிருதனுடன் சத்த மாதர்கள் சமர் செய்கையில்அவன் உடம்பினின்றும் விழுந்த உதிரத் துளிகளினின்றும் அவனைப் போன்ற அசுரர்கள் பல ஆயிரம் பேர் தோன்றி எதிர்த்தனர். இவ்வற்புதத்தைக் கண்ட சத்த மாதர்கள் அம்பிகையிடம் ஓடிவந்து கூறஅம்பிகை வெகுளஅவர் தோளினின்றும் பெரிய உக்கிரத்துடன் காளி தோன்றினாள். “பெண்ணேநான் இரத்த பீசனைக் கொல்லும்போது உதிரத்துளி ஒன்றும் மண்ணில் விழாமல் உன் கைக் கபாலத்தில் ஏந்திக் குடிக்கக் கடவாய்” என்று பணித்து,இரத்த பீசனை அம்பிகை எதிர்த்துகாளி உதிரத்தைப் பருகஇறைவியார் இரத்தபீசனை சங்கரித்தருளினார். இமையவரைத் தத்தம் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டுகாளியை மகிழ்வித்து அவளுக்கு சாமுண்டி என்ற பெயரும் தெய்விகமும் சிவபெருமானிடம் நிருத்தஞ் செய்து அவர் பக்கலில் உறைதலுமாகிய நலன்களைத் தந்தருளி,சத்த மாதர்கட்கும் அருள்புரிந்து மறைந்தருளினார்.

 

காளி,அசுரர் உதிரம் குடித்த ஆற்றலாலும்உமையிடம் பெற்ற வரத்தாலும் இறுமாந்து ஊன்களைப் புசித்துமோகினிஇடாகினிபூத பிசாசுகள் புடைசூழ ஒரு வனத்திலிருந்து மற்றொரு வனத்திற்குப் போய்உலகம் முழுவதும்உலாவிதிருவாலங்காட்டிற்கு அருகில் வந்து அனைவருக்கும் துன்பத்தைச் செய்து வாழ்ந்திருந்தனர்.

 

ஒரு நாள் திருவாலங்காடு சென்ற நாரத முனிவருக்குக் காளியின் தீச்செயலை கார்கோடக முனிவர் கூறநாரதர் கேட்டுச் செல்லுகையில் காளி விழுங்க வரஅவர் மறைந்து சென்று திருமாலிடம் கூறி முறையிட்டார். திருமால் சிவபெருமானிடஞ் சென்று, “எந்தையே! காளியின் தருக்கை அடக்கி அருள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய,முக்கட்பெருமான் “இப்போதே காளியின் செருக்கை அடக்க வடாரண்யத்திற்கு வருவோம்” என்று திருவாய் மலர்ந்துசுநந்த முனிவர் கார்க்கோடக முனிவர்கட்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு திருவாலங்காட்டிற்கு எழுந்தருளினார்.

 

கூற்றை உதைத்த குன்றவில்லிவயிரவ வடிவு கொண்டனர். உடன் வந்த பூதங்களுடன் காளியின் சேனை எதிர்த்து வலியிழந்து காளியிடம் கூறஅவள் போர்க்கோலம் தாங்கி வந்துஅரனாரைக் கண்டு அஞ்சி “நிருத்த யுத்தம் செய்வோம்” எனக் கூறகண்ணுதற் கடவுள் இசைந்துமுஞ்சிகேச கார்க்கோடகர்கட்குத் தரிசனம் தந்து,திருநடனத்திற்குத் தேவருடன் வந்தருளினார். அக்காலை அமரர் அவரவர்கட்கு இசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர். அநவரதம்அற்புதம்ரௌத்ரம்கருணைகுற்சைசாந்தம்சிருங்காரம்பயம்பெருநகைவீரியம் என்னும் நவரசங்களும் அபநியமும் விளங்க வாத்தியங்கட்கு ஒப்ப பாண்டரங்கம் என்னும் சண்ட தாண்டவத்தைக் காளியுடன் அதியற்புத விசித்திரமாகச் செய்தருளினார்.

 

இவ்வாறு நடனஞ் செய்கையில்பெருமானது திருச்செவியில் இருந்து குண்டலமானது நிருத்த வேகத்தால் நிலத்தில் விழஅதை இறைவரே திருவடி ஒன்றினால் எடுத்துத் தரித்து ஊர்த்துவ தாண்டவம் செய்ய,காளி செயலற்று நாணிப் பணிந்தனள். சிவபெருமான் “நீ இங்கு ஒரு சத்தியாய் இருப்பாய்” எனத் திருவருள் புரிந்துஇருமுனிவரும்எண்ணில்லா அடியவரும் தமது தாண்டவத் திருவருட் கோலத்தை எந்நாளும் தெரிசிக்க ஆங்கு எழுந்தருளியிருந்தார்.

 

துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே--- 

 

துங்கம் --- பெருமை.

 

வேடர்கள் குலத்தில் வள்ளிநாயகி வளர்ந்ததால்,அந்த குலம் பெருமை பெற்றது. வேடர் குலமாதை முருகப் பெருமான் திருமணம் புணர்ந்ததால்வேடர் குலமானது மேலும் பெருமை பெற்றது.

 

சிங்கை நகர் மேவு பெருமாளே--- 

 

சிங்கை எனப்படும் காங்கேயம்ஈரோடு திருப்பூர் இரயில் பாதையில் ஊத்துக்குழி என்னும் ஊருக்கு அருகில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! அடியேனது வினைகள் நீங்கிநன்மை விளையத் திருவருள் புரிவாய்.

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...