நல்லோர் நட்பு

  

நல்லோர் நட்பு

-----

 

     நல்லாரோடு கொண்ட நட்பு, இன்பத்திலும், துன்பத்திலும் ஒரு தன்மைத்தாகவே இருக்கும். நல்லார் அல்லாதாரோடு கொண்ட நட்பானது ஆக்கம் உள்ளபோது அகம் மகிழ்ந்து, கொஞ்சிக் குலாவி இருக்கும். அல்லாத காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும். நண்பனும் பகைவனாக மாறிப் போகும் நிலையும் வரும். எனவே, நட்புக் கொள்ளும் முன்னர் ஆராயவேண்டும் என்பதால், "நட்பு ஆராய்தல்" என்று ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவ நாயனார் வைத்தார். நட்பு செய்வதற்கு உரியவரை அவரது கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கங்களால் தெளிந்து கொள்ளவேண்டும்.

 

     நல்லோர் நட்பு குறித்து, "குமரேச சதகம்" கூறுவதைக் காண்போம்.

 

மாமதியில் முயல் ஆனது அது தேயவும் தேய்ந்து,

     வளரும் அப்போது வளரும்;

வாவிதனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர்வற்றில்

     வற்றிடும், பெருகில்உயரும்;

 

பூமருவு புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்,

     பொங்கு காலம் தழைக்கும்;

புண்டரிகம் இரவிபோம் அளவில் குவிந்திடும்,

     போது உதயம் ஆகில்மலரும்;

 

தேம்உடல் இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்,அது

     தேறில் உயிரும் சிறக்கும்;

சேர்ந்தோர்க்கு இடுக்கண் அது வந்தாலும் நல்லோர்

     சிநேகம் அப்படி ஆகுமே;

 

வாமன சொரூபமத யானைமுக னுக்கு இளைய

     வால! குருபர! வேலவா!

மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     வாமன சொரூப மதயானை முகனுக்கு இளைய --- குறுகிய தோற்றமும் மதம் பொருந்திய யானையின் முகமும் உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையபிள்ளையாரே!

வால --- குமாரக் கடவுளே! குருபர --- குருநாதனே! வேலவா --- வேலாயுதக் கடவுளே! மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     மாமதியில் முயல் ஆனது அது தேய்வுழித் தேய்ந்து, வளரும் அப்போது வளரும் --- பெருமை மிக்க சந்திரனில் காணப்பெறும் முயல் கறையானது, சந்திரன் தேயும்போது தேய்ந்து, வளரும் போது வளரும்;

 

     வாவி தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும், பெருகில் உயரும் --- குளத்தில் இருக்கும் அல்லியும் கொட்டியும், அந்தக் குளத்தில் நீர் வற்றினால் வற்றிக் கிடக்கும், நீர் பெருகினால் உயர்ந்து வளரும்;

 

     பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும், பொங்கு காலம் தழைக்கும் --- நிலத்திலே பொருந்தியுள்ள புதரும் பூண்டும் வெயில் காலத்திலே தீய்ந்து விடும், மழையாலே செழிப்புறும் காலத்திலே செழித்து நிற்கும்;

 

     புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும், போது உதயம் ஆகில் மலரும் --- தாமரை மலரானது சூரியன் மறையும் மாலை நேரத்தில் குவிந்து விடும்;  சூரிய உதய காலத்தில் மலர்ந்து விடும்;

 

     தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும், அது தேறில் உயிரும் சிறக்கும் --- இனிய உடம்பானது வாடினால் உயிரும் சோர்வு அடையும்,  உடம்பு தெளிவு பெற்றால் உயிரும் தெளிவு பெறும்;

 

     சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகும் --- தன்னை அடைந்தோர்களுக்குத் துன்பம் வந்தாலும் நல்லோர் தானும் துன்புறுவர், இன்பம் வந்துற்ற போது தானும் இன்புறுவர்.

 

விளக்கம்

 

 

     ஒரு குளத்தில் நீர் நிறைந்திருந்த பொழுது தவளைகள் பல வந்து சேரும். அங்கே நீர் வற்றியவுடன் அவை யாவும் அதனை விட்டு அகன்று போகும். செல்வம் உள்ள பொழுது இல்லாத உரிமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டாடி, எல்லாரும் வந்து அவனை அடுத்து நிற்பர். அவனது செல்வம் ஒழிய நேர்ந்தால் யாவரும் ஒருங்கே ஒழிந்து போவர். கிளைஞர் மாத்திரம் பரிவுடன் பழைய உரிமையாளராய்க் கெழுமி வளமை தோய்ந்து நிற்பர்.

 

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.

 

என்னும் ஔவையாரின் "முதுரை" இங்கு நினைவு கூரத்தக்கது.

 

     நீர் உற்றபொழுது கொக்கு நாரை முதலிய பறவைகள் குளத்தில் வந்து கூடி நிற்கும். அது அற்றபோது அவை அயலே பறந்துபோகும். குமுதம் நெய்தல் முதலிய மலர்கள் நீர் உற்ற போதும் அற்ற போதும் அலர்ந்தும் புலர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கும். இந்த மலர்கள் போல்பவரே நல்ல உறவினர் என ஒளவையார் இவ்வாறு சுவையாய் உணர்த்தி இருக்கின்றார்.

 

     பற்று அற்ற நிலைக்கு, நீர் அற்ற குளமும், பழமை அற்ற நிலைக்குப் பறந்துபோன பறவைகளும், கிழமை உற்ற கேண்மைக்கு மேன்மையான மலர்களும் இதில் ஒப்பாய் வந்துள்ளன. கொட்டி என்பது நீரில் நிலவும் கொடி. பழமை பாராட்டும் பண்பு கிழமையான சுற்றத்தாரிடமே வளமையாய் வலிமை வாய்ந்து உள்ளது என்பதை உவமானத்தால் இது தெளிவாக விளக்கியுள்ளது. எத்தகைய நிலையிலும் மாறாமல் அன்பு புரிகின்ற இத்தகைய உறவினரைப் பேணி வருபவர் பெருமை உறுவர் என்கின்றது விநாயக புராணம்.

 

பற்றும் வெறுக்கை ஒழிந்துழியும்

     பழைமை எடுத்துப் பாராட்டும்

சுற்றம்; அதனைப் பெருங்கொடையால்

     தூய மொழியால் தழுவல்உறின்,

அற்றம் அவனுக்கு ஒருகாலும்

     அணுகாது; ஆக்கம் மிகப்பெருகும்;

முற்ற நினைக்கும் பகைவர் தொழில்

     முற்றாது; ஏம கண்டனே!       --- விநாயக புராணம்.

 

     பின்வரும் நாலடியார் பாடல்களின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.

 

பலநாளும் பக்கத்தார் ஆயினும், நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பலநாளும்

நீத்தார் எனக் கை விடல் உண்டோ, ம் நெஞ்சத்து 

யாத்தாரோடு யாத்த தொடர்பு.    

 

இதன் பொருள் ---

 

     பலகாலம் நெருக்கமாக இருந்தவர்கள் ஆனாலும், உள்ளன்பு இல்லாதவர்களுடன் பெரியோர் நட்பாக இருக்கமாட்டார்கள்.  ஆனால், தம்மைப் பிரிந்து சென்று வெகுநாள் ஆகி இருந்தாலும், தம்மோடு ஒத்த நல்லியல்பு உடையவர் நேசத்தை விட்டுவித மாட்டார்கள்.

 

கோட்டுப் பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது,

வேட்டதே வேட்டதாம் நட்பு ஆட்சி;- தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பின் கூம்புவாரை

நயப்பாரும் நட்பாரும் இல்.

 

இதன் பொருள் ---

 

     மரத்தின் உச்சியில் பூத்த மலர் ஒரு முறை மலர்ந்தால், பின் குவியாது மணம் வீசிக் கொண்டே இருக்கும். அது போலவே, விரும்பி நட்புக் கொண்டவர்கள் நட்பானது நாளும் வளர்ந்தபடியே இருக்கும். ஆனால், குளத்தில் பூத்த சிறுமலர்கள், பூத்த சமயத்தில் பார்த்தால் அழகாக இருக்கும். பிறகு போகப் போகப் பொலிவினை இழக்கும். இப்படிப்பட்ட இயல்பு உடையவர்களை எவரும் விரும்பவும் மாட்டார். நட்பாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.                 

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...