கரூர் --- 0937. முகில் அளகம்சரி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

முகில்அள கஞ்சரி (கருவூர்)

 

முருகா! 

உன்னை எப்போதும் மறவேன்

 

 

தனதன தந்தன தாத்தன 

தனதன தந்தன தாத்தன

     தனதன தந்தன தாத்தன ...... தனதான

 

 

முகிலள கஞ்சரி யாக்குழை

யிகல்வன கண்சிவ வாச்சிவ

     முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ ...... வநுபோக

 

முலைபுள கஞ்செய வார்த்தையு

நிலையழி யும்படி கூப்பிட

     முகுளித பங்கய மாக்கர ...... நுதல்சேரத்

 

துயரொழு குஞ்செல பாத்திர

மெலியமி குந்துத ராக்கினி

     துவளமு யங்கிவி டாய்த்தரி ...... வையர்தோளின்

 

துவயலி நின்றன வ்யாத்தமும்

வயலியல் வஞ்சியில் மேற்பயில்

     சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே

 

சகலம யம்பர மேச்சுரன்

மகபதி யுய்ந்திட வாய்த்தருள்

     சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச்

 

சருவுக்ர வுஞ்சசி லோச்சய

முருவவெ றிந்தகை வேற்கொடு

     சமரமு கந்தனில் நாட்டிய ...... மயிலேறி

 

அகிலமு மஞ்சிய வாக்ரம

விகடப யங்கர ராக்கத

     அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ

 

அமரர டங்கலு மாட்கொள

அமரர்த லங்குடி யேற்றிட

     அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

முகில் அளகம் சரியாகுழை

இகல்வன கண் சிவவாச் சிவ

     முறுவல் முகம் குறுவேர்ப்பு எழ,...... அநுபோக

 

முலை புளகம் செய,வார்த்தையும்

நிலை அழியும்படி கூப்பிட,

     முகுளித பங்கயமாக் கர ...... நுதல்சேர,

 

துயர் ஒழுகும் செல பாத்திரம்

மெலியமிகுந்து உதர அக்கினி

     துவளமுயங்கி விடாய்த்துரி ...... வையர்தோளின்

 

துவயலி,நின்தன வ்யாத்தமும்,

வயல்இயல் வஞ்சியில் மேற்பயில்

     சொருபமும்,நெஞ்சில் இராப்பகல் ...... மறவேனே.

 

சகல மயம் பரமேச்சுரன்

மகபதி உய்ந்திட வாய்த்து அருள்

     சரவண சம்பவ! தீர்க்க ஷண் ...... முகம்ஆகிச்

 

சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம்

உருவ எறிந்த கை வேல்கொடு

     சமர முகந்தனில் நாட்டிய ...... மயில்ஏறி

 

அகிலமும் அஞ்சிய ஆக்ரம,

விகட பயங்கர ராக்கத

     அசுரர் அகம் கெட ஆர்த்திடு ...... கொடி கூவ

 

அமரர் அடங்கலும் ஆட்கொள,

அமரர் தலம் குடி ஏற்றிட,

     அமரரையும் சிறை மீட்டு அருள் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

      சகல மயம் பரமேச்சுரன்--- எல்லாப் பொருள்களிலலும் நிறைந்த பொருளாகிய பரமேச்சுரன்,

 

     மகபதி உய்ந்திட வாய்த்து --- தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் உய்யும் பொருட்டு தோற்றுவித்த 

 

     அருள் சரவண சம்பவ--- அருள் நிறைந்த சரவணப் பொகையில் தோன்றியவரே!

 

     தீர்க்க ஷண்முகமாகி--- அறிவுத் தெளிவும்கவர்ச்சியும் கொண்ட ஆறு திருமுகங்களை உடையவராகி,

 

      சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமரமுகம் தனில் நாட்டிய மயில் ஏறி --- போரிலே எதிர்த்து வந்த கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் செல்லும்படி விடுத்தருளிய வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்தி,போர்க்களத்தில் நடனம் செய்யும் மயில்மீது அமர்ந்து,,

 

     அகிலமும் அஞ்சிய--- சர்வ லோகத்திலும் உள்ளோர் அஞ்சும்படியாக 

 

     ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட--- வீரமும்,  ஆரவாரிப்பும் கொண்டுபயங்கரமாக வந்த அசுரர்களின் அகங்காரம் அழியுமாறு,

 

     ஆர்த்திடு கொடி கூவ--- தேவரீரது கொடியில் விளங்கிய கோழியானது கூவ,

 

      அமரர் அடங்கலும் ஆட்கொள --- தேவர்கள் அனைவரையும் ஆட்கொண்டு,

 

     அமரர் தலம் குடி ஏற்றிட--- அவர்கள் தத்தம் ஊர்களில் குடி ஏறுமாறும்,

 

     அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே --- தேவர்களைச்  சிறையினின்றும் மீட்டு அருளிய பெருமையில் மிக்கவரே!

 

      முகில் அளகம் சரியா --- மேகம் போன்ற கரிய கூந்தல் சரியவும்,

 

     குழை இகல்வன கண் சிவவா--- காதில் உள்ள குண்டலங்களோடு பகைத்து வருவன போன்ற கண்கள் மிகச் சிவக்கவும்,

 

     சிவ முறுவல் முகம் குறுவேர்ப்பு எழ--- களிப்புடன் கூடிய முகத்தில் சிறு வியர்வை தோன்றவும்,

 

      அநுபோக முலை புளகம் செய --- இன்ப நுகர்ச்சிக்கு இடமான முலைகள் புளகாங்கிதம் கொள்ளவும்,

 

     வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட--- சொற்களும் நிலை அழிந்து கூப்பிடவும்,

 

     முகுளித பங்கயமாக் கரம் நுதல் சேர--- குவிந்த தாமரையாகிய கைகள் நெற்றியில் சேரவும்

 

      துயர் ஒழுகும் செல பாத்திர(ம்) மெலிய---- துயரமே பெருகி நிற்பதும்நீரோடு கூடியதுமான பாத்திரமாகிய இந்த உடம்பு மெலிந்து,

 

     மிகுத்து உதர அக்கினி துவள முயங்கி விடாய்த்து--- வயிற்றில் எரி மிக மூள,  உடம்பு துவண்டு போகும் அளவுக்கு தழுவிப் புணர்ந்து களைப்பு அடைந்து,

 

      அரிவையர் தோளின் துவயலி--- விலைமாதர்களின் தோள்களில் துவண்டு கிடக்கும் அடியேன்,

 

     நின் தன வ்யாத்தமும்--- தேவரீருடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும்,

 

     வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு(ம்)--- (அடியார்களை ஆட்கொள்ளும் பொருட்டு) வயல்கள் பொருந்திய வஞ்சி என்னும் கருவூரில் பொருந்தி விளங்கும் வடிவழகையும் 

 

     நெஞ்சில் இராப் பகல் மறவேனே--- என் மனத்தில் இரவும் பகலும் மறக்க மாட்டேன்.

 

 

பொழிப்புரை

 

            எல்லாப் பொருள்களிலலும் நிறைந்த பொருளாகிய பரமேசுரன்தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் உய்யும் பொருட்டு தோற்றுவித்துஅருள் நிறைந்த சரவணப் பொகையில் தோன்றியவரே!

 

     அறிவுத் தெளிவும்கவர்ச்சியும் கொண்ட ஆறு திருமுகங்களை உடையவராகிபோரிலே எதிர்த்து வந்த கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் செல்லும்படி விடுத்தருளிய வேலாயுதத்தைதி திருக்கையில் ஏந்தி,போர்க் களத்தில் நடனம் செய்யும் மயில்மீது அமர்ந்து,சர்வ லோகத்திலும் உள்ளோர் அஞ்சும்படியாக  வீரமும்,  ஆரவாரிப்பும் கொண்டுபயங்கரமாக வந்த அசுரர்களின் அகங்காரம் அழியுமாறுதேவரீரது கொடியில் விளங்கிய கோழியானது கூவதேவர்கள் அனைவரையும் ஆட்கொண்டுஅவர்கள் தத்தம் ஊர்களில் குடி ஏறுமாறுதேவர்களைச்  சிறையினின்றும் மீட்டு அருளிய பெருமையில் மிக்கவரே!

 

            மேகம் போன்ற கரிய கூந்தல் சரியவும்காதில் உள்ள குண்டலங்களோடு பகைத்து வருவன போன்ற கண்கள் மிகச் சிவக்கவும்களிப்புடன் கூடிய முகத்தில் சிறு வியர்வை தோன்றவும்இன்ப நுகர்ச்சிக்கு இடமான முலைகள் புளகாங்கிதம் கொள்ளவும்சொற்களும் நிலை அழிந்து கூப்பிடவும்குவிந்த தாமரையாகிய கைகள் நெற்றியில் சேரவும்,  துயரமே பெருகி நிற்பதும்நீரோடு கூடியதுமான பாத்திரமாகிய இந்த உடம்பு மெலிந்துவயிற்றில் எரி மிக மூள,  உடம்பு துவண்டு போகும் அளவுக்கு தழுவிப் புணர்ந்து களைப்பு அடைந்துவிலைமாதர்களின் தோள்களில் துவண்டு கிடக்கும் அடியேன்தேவரீருடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும்அடியார்களை ஆட்கொள்ளும் பொருட்டு வயல்கள் பொருந்திய வஞ்சி என்னும் கருவூரில் பொருந்தி விளங்கும் வடிவழகையும் என் மனத்தில் இரவும் பகலும் மறக்க மாட்டேன்.

 

 

விரிவுரை

 

முகில் அளகம் சரியா ---

 

முகில் அளகம் --- மேகம் போன்ற கருநிறக் கூந்தல்.

 

சிவ முறுவல் முகம் குறுவேர்ப்பு எழ--- 

 

சிவம் --- மங்கலம்நன்மைஉயர்வுகளிப்பு.

 

இங்கே களிப்பு என்னும் பொருளில் வந்தது. 

 

முகுளித பங்கயமாக் கரம் நுதல் சேர--- 

 

முகுளம் --- அரும்பு. முகுளித --- அரும்பு போல் குவிந்த.

 

பங்கயம் --- தாமரை.

 

துயர் ஒழுகும் செல பாத்திர(ம்) மெலிய---- 

 

செலம் --- தண்ணீர். நீரின் தன்மை நிறைந்த்து இந்த உடம்பு. 

 

"நீர் இன்றி அமையா யாக்கை" என்பது மணிமேகலை.

 

மிகுத்து உதர அக்கினி துவள முயங்கி விடாய்த்து--- 

 

உதரம் --- வயிறு. அக்கினி --- நெருப்பு.

 

"வயிற்றில் எரி மிக மூள" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

 

சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமரமுகம் தனில் நாட்டிய மயில் ஏறி---

 

சருவுதல் --- போர் புரிதல்.

 

சிலோச்சயம் --- மலை. இங்கே கிரவுஞ்ச மலையைக் குறித்தது. 

 

நாட்டிய மயில் --- திருநடனம் புரிகின்ற மயில்.

 

"நடன இத மயிலின் முதுகில்வரும்இமைய மகள் குமர" என்றார் திருமயிலைத் திருப்புகழில்.

 

"நடம் நவில் மரகத துரகதம் வரவல பெருமாளே" என்றார் பொதுத் திருப்புகழில்.

 

"சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கும் மயிலாம்" எனவும்,"வித்தார நிர்த்த மயிலாம்" எனவும் அருளினார் மயில் விருத்தப் பாடலில்.

நின் தன வ்யாத்தமும்வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு(ம்)--- 

 

வ்யாத்தம்வியாத்தம் --- எங்கும் நிறைந்து இருக்கும் தன்மை. எங்கும் எதிலும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் இறைவன். "பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே" என்பார் தாயுமானார்.

 

அந்தப் பரம்பொருள்,யார் யார் எந்தெந்த வடிவத்தில் எண்ணுகின்றார்களோஅந்த வடிவிலே வந்து அருள் புரிகின்றது. "என் தனை ஆட்கொள்ள,என்தனது உள்ளம் மேவிய வடிவு உறும் வேலவா போற்றி" என்பது கந்தர் சட்டி கவசம். 

 

தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்

     தூநெறிக்கும் தூநெறி ஆய் நின்றார் போலும்;

பண்டு இருவர் காணாப் படியார் போலும்

     பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்;

கண்டம் இறையே கறுத்தார் போலும்

     காமனையும் காலனையும்காய்ந்தார் போலும்;

இண்டைச் சடை சேர் முடியார் போலும் 

     இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே.                 --- அப்பர்.

 

ஆருருவ உள்குவார் உள்ளத்து உள்ளே

    அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்,

வார்உருவுஅப் பூண்முலைநன் மங்கை தன்னை

    மகிழ்ந்துஒருபால் வைத்துஉகந்த வடிவம் தோன்றும்,

நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை

    நெறுநெறென அடர்த்திட்ட நிலையும் தோன்றும்,

போருருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்,

    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.     --- அப்பர்.

 

சுருதி வானவனாம்,திருநெடு மாலாம்,

    சுந்தர விசும்பின் இந்திரனாம்,

பருதி வானவனாம்,படர்சடை முக்கண்

    பகவனாம்,அகஉயிர்க்கு அமுதாம்,

எருது வாகனனாம்,எயில்கள்மூன் றெரித்த

    ஏறு சேவகனுமாம்,பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம்,கங்கை

    கொண்டசோ ளேச்சரத் தானே.               --- திருவிசைப்பா.

 

அறையோஅறிவார்க்குஅனைத்து உலகும் ஈன்ற

மறையோனும்மாலும்மால் கொள்ளும் இறையோன்;

பெருந்துறையுள் மேய பெருமான்பிரியாது

இருந்து உறையும்என் நெஞ்சத்து இன்று.             --- திருவாசகம்.

 

வானத்தான் என்பாரும் என்கமற்று உம்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாம் என்க,- ஞானத்தான்,

முன்நஞ்சத் தால் இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்,

என்நெஞ்சத் தான் என்பன் யான்.            --- அற்புதத் திருவந்தாதி.

 

"மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்" என்னும் திருக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர், "அன்பால் நினைவாரது எஉள்ளக் கமலத்தின் கண்அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்" எனபு பொருள் கண்ட அருமையை எட்டுதல் வேண்டும்.

 

அத்தமைய பரம்பொருள்,அடியார்களுக்கு அருள் புரிந்து ஆட்கொள்ளும் பொருட்டுத் திருக்கோயில் கொண்டு எழுந்தருள்கின்றான். 

 

எங்கும் வியாத்தமாகி நின்ற முருகப் பெருமான்தனது அடியார்களுக்காககருவூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளதாக சுவாமிகள் பாடுகின்றார். 

 

கருவூர் என்பது இக்காலத்தில் கரூர் என வழங்கப்படுகின்றது. கரூர் நகரின் மத்தியில் திருக்கோயில் உள்ளது. கோயமுத்தூர்ஈரோடுதிருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் இரயில் நிலையம்,திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் இருக்கிறது. "ஆனிலை" என்பது திருக்கோயிலின் பெயர்.

 

இறைவர்: பசுபதீசுவரர்ஆனிலையப்பர்.

இறைவியார்  : கிருபாநாயகிசௌந்தர்யநாயகி

தல மரம்     : கொடி முல்லை

தீர்த்தம்       : ஆம்பிராவதி ஆறு

 

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

 

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும்பன்னிருதிருக்கரங்களுடனும்தேவியர் இருவருடனும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கம் உள்ளது.

 

எறிபத்த நாயனார் அவதரித்த தலம்.

 

கருவூர் ஆனிலையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைப்பவர்களை எறிந்து வீழ்த்த மழுப்படை தாங்கி நின்றவர் ஒருவர் இருந்தார். அவர்எறிபத்த நாயனார் என்னும் திருப்பெயர் உடையவர். அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்.  ஆனிலையப்பருக்கு பூத் தொண்டு செய்பவர். ஒருநாள்அதாவது நவமி முன்னாளில்சிவகாமியாண்டார் வழக்கம்போல் பூக்களால் கூடையை நிரப்பிஅக் கூடையைத் தண்டில் தூங்கச் செய்து,திருக்கோயில் நோக்கிச் செல்லலானார். அவ் வேளையில் அவ் வழியே புகழ்ச்சோழ மன்னவரின் பட்டவர்த்தன யானை காவிரியில் மூழ்கிபாகர்கள் மேலேயிருப்பகுத்துக்கோல்காரர்கள் முன்னே ஓடவிரைந்து நடந்து வந்தது. அந்த யானை சிவாகமியாண்டாரை நெருங்கித் தண்டில் இருந்த பூங்கூடையைப் பற்றி மலர்களைச் சிந்தியது. அதைக் கண்ட பாகர்கள்யானையை வாயு வேகமாக நடத்திச் சென்றார்கள். சிவகாமியாண்டார் சினந்து வேழத்தைத் தண்டினால் புடைக்க விரைந்து நடந்தார். யானையின் கதிநடை எங்கேசிவகாமியாண்டார் மூப்பு நடை எங்கேமூப்பால் சிவகாமியாண்டார் கால் தவறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் தரையைக் கையால் மோதி எழுந்து நின்று, "ஆனிலையப்பாஉன் திருமுடி மீது ஏறும் மலரை ஒரு யானையா மண்ணில் சிந்துவதுசிவதா! சிவதா!" என்று ஓலமிடலானார். அவ் ஓலம் கேட்டுக் கொண்டுஅவ் வழியே வந்த எறிபத்த நாயனார்சிவகாமியாண்டாரை அடைந்து பணிந்து, "அக் கொடிய யானை எங்குற்றது?" என்று கேட்டார். சிவகாமியாண்டார், "அந்த யானை இவ் வீதி வழியே போயிருக்கிறது" என்றார். என்றதும்எறிபத்த நாயனார் காற்றெனப் பாய்ந்துயானையைக் கிட்டிஅதன் மீது பாயந்தார். யானையும் எறிபத்தர் மீது பாய்ந்தது. நாயனார் சிறிதும் அஞ்சாது யானையை எதிர்த்துத் தமது மழுவினால் அதன் துதிக்கையைத் துணித்தார். யானை கதறிக் கொண்டு கருமலைபோல் கீழே விழுந்தது. பின்னை குத்துக்கோல்காரர்கள் மூவரையும்,பாகர் இருவரையும் நாயனார் வெட்டி வீழ்த்தினார். மற்றவர்கள் விரைந்து ஓடி, "பட்டவர்த்தனத்தைச் சிலர் கொன்றனர்" என்று புகழ்ச்சோழ மன்னருக்கு அறிவித்தார்கள்.

 

சோழர் பெருமான்வடவை போல் சீறிஒரு குதிரை மீது ஏறிப் புறப்பட்டார்.  நால்வகைச் சேனைகளும்பிறவும் அவரைச் சூழ்ந்து சென்றன. மன்னர் பெருமான்யானை இறந்துபட்ட இடத்தைச் சேர்ந்தார். யானையைக் கொன்றவர் எறிபத்தர் என்று கொள்ளாதவராய், "மழுவைத் தாங்கி நிற்கும் இவரே நமது யானையைக் கொன்றவர்" என்றார்கள். புகழ்ச்சோழ நாயனார் திடுக்கிட்டு, "இவர் சிவனடியார். குணத்தில் சிறந்தவர். யானை பிழைசெய்து இருத்தல் வேண்டும். இல்லையேல் இவர் அதைக் கொன்று இருக்கமாட்டார்" என்று எண்ணிச் சேனைகளை எல்லாம் நிறுத்திகுதிரையில் இருந்து இறங்கி, "இப் பெரியவர் யானைக்கு எதிரே சென்றபோதுவேறு ஒன்றும் நிகழாது இருக்க,நான் முன்னே என்ன தவம் செய்தேனோஅடியவர் இவ்வளவு முனியக் கெட்டேன். நேர்ந்த பிழை என்னவோ?" என்று அஞ்சிநாயனார் முன்னே சென்று தொழுது, "யானையைக் கொன்றவர் அடியவர் என்று நான் அறியேன்.  நான் கேட்டது ஒன்று. இந்த யானை செய்த பிழைக்கு இதனைப் பாகரோடும் மாய்த்தது போதுமா?" என்று கேட்டார். நாயனார் நிகழ்ந்ததைக் கூறினார். சோழர் பெருமான் எறிபத்த நாயனாரை வணங்கிச் "சிவனடியாருக்கு விளைத்த தீங்குக்கு யானையையும் பாகர்களையும் கொன்றது போதாது.  என்னையும் கொல்லுதல் வேண்டும். அடிகளின் மங்கல மழுவால் என்னைக் கொல்லுதல் முறைமை அல்ல" என்று சொல்லிதமது உடைவாளை எடுத்து, "இதனால் என்னைக் கொன்று அருள்க" என்று நீட்டினார். எறிபத்தர், "அந்தோ! இவர் அன்பர். இவர் தம் அன்பிற்கு ஓர் அளவு இல்லை.  வாளை வாங்கா விட்டால் தற்கொலை செய்துகொள்வார்" என்று கருதி வாளை வாங்கினார். புகழ்ச்சோழர், "ஆ! இப் பெரியவர் அடியேனைக் கொன்று என் பிழை தீர்க்கும் பேறு பெற்றேன்" என்று மனம் மகிழ்ந்தார். எறிபத்தர், "இத் தகைய அன்பருக்கோ தீங்கு நினைத்தேன்நான் பாவி! பாவி! முதலிலே என் உயிரை மாய்த்துக் கொள்வதே முறை" என்று உறுதிகொண்டுவாளைக் கழுத்தில் இட்டு அரியப் புகுந்தார். அக் காட்சி கண்ட சோழர் பெருமான், "கெட்டேன்கெட்டேன்" என்று வாளையும் கையையும் பிடித்தார். அரசர் கையைப் பற்றினாரே என்று எறிபத்தர் வருந்தி நின்றார்.

 

"இது அன்பின் பெருக்கால் நேர்ந்த இடுக்கண். இந்த இடுக்கணை மாற்றஉங்கள் தொண்டின் மாண்பை உலகத்தவர்க்குக் காட்டவேண்டிச் சிவபெருமான் திருவருளால் இவை யாவும் நிகழ்ந்தன" என்று ஓர் அசரீரி வானில் எழுந்தது. எழுந்ததும்யானை பாகர்களோடு உயிர் பெற்று எழுந்தது. எறிபத்த நாயனார் வாளை விடுத்துபுகழ்ச்சோழ நாயனாரை வணங்கினார். புகழ்ச்சோழ நாயனார் வாளை எறிந்த சிவபத்தரைப் பணிந்தார். இருவரும் திருவருளை வழுத்தினர்.  திருவருளால் பூக்கூடை நிறைந்தது. சிவகாமியாண்டார் ஆனந்த வாரிதியில் திளைத்தார். பட்டவர்த்தனத்தை அழைத்துக் கொண்டு பாகர்கள் அரசர் முன்னே வந்தனர். எறிபத்த நாயனார் வேண்டுகோளுக்கு இணங்கிபுகழ்ச்சோழ நாயனார் யானைமீது எழுந்தருளிச் சேனைகள் புடைசூழ அரண்மனையை அடைந்தார்.  சிவகாமியாண்டார் பூக்கூடையைத் தண்டில் தாங்கித் தம் திருத்தொண்டின் மேல் சென்றார். எறிபத்த நாயனார் தாம் ஏற்ற திருத்தொண்டினைக் குறைவறச் செய்து வாழ்ந்துதிருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவரானார்.

 

பொழில் கருவூர்த் துஞ்சிய

புகழ்ச் சோழ நாயனார்

வரலாறு

 

புகழ்ச்சோழ நாயனார் சேழநாட்டை ஆண்ட மன்னருள் ஒருவர். ஊறையூரிலே ஆட்சி புரிந்தவர். சைவம் தழைக்க முயன்றவர்.  திருக்கோயில்களில் பூசனைகளை வழாது நடத்துவித்தவர். திருத்தொண்டர்களின் குறிப்பறிந்து உதவுபவர்.

 

கொங்கு நாட்டு அரசர்களிடம் இருந்தும் குடகு நாட்டு அரசர்களிடம் இருந்தும் திறை வாங்குதல் பொருட்டுப் புகழ்ச்சோழ நாயனார் கருவூருக்குச் சென்றார்.  அத் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஆனிலைப் பெருமானை வழிபட்டுத் திருமாளிகை சேர்ந்துஅரியாசனத்தில் வீற்றிருந்தார். கொங்கரும்குடகரும் திறை செலுத்தினர். புகழ்ச்சோழர் அவர்கட்கு ஆசி கூறிஅரசுரிமைத் தொழில் அருளினார்.மேலும் சோழர் பெருமான்அமைச்சர்களை நோக்கிநமது ஆணைக்குக் கீழ்ப்படாத அரசர் எவரேனும் உளரோ அறிந்து சொல்லுங்கள் என்று கட்டளை இட்டார்.

 

அந்நாளில்சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஆனிலைப் பெருமானுக்கு வழக்கம்போல் திருப்பள்ளித்தாமம் கொண்டு போனார்.  அதனைப் பட்டத்து யானைபற்றி ஈர்த்துச் சிதறச் செய்தது. எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டிக் கொன்றார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழ நாயனார்எறிபத்த நாயனார் எதிரே சென்றுநேர்ந்த அபராதத்திற்குபட்டத்து யானையையும்பாகரையும்பறிக்கோல் காரர்களையும் கொன்றது போதாது. தன்னையும் கொல்லுமாறுதனது உடைவாளை எறிபத்த நாயனாரிடம் கொடுத்தார்.  எறிபத்த நாயனார் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தபோதுஇறைவர் வானிலே காட்சி கொடுத்தருளினார். பட்டத்து யானையும்மாண்டோரும் எழுந்தனர். இவ்வாறு கருவூரில் இருந்த காலத்தில் புகழ்ச்சோழ நாயனார் திருத்தொண்டில் மேம்பட்டவராக விளங்கினார்.

 

அமைச்சர்கள் மன்னரிடம் வந்து நின்று, "உங்கள் ஆட்சிக்குக் கீழ்ப்படியாத அரசன் ஒருவனே உள்ளான். அவன் அதிகன் என்பவன்.  அவன் அருகே உள்ள மலை அரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள்.  உடனேபுகழ்ச்சோழ நாயனார் அமைச்சர்களைப் பார்த்து, "அவ் அரணை அதம் செய்து வாருங்கள்" என்றார். அமைச்சர்கள் அப்படியே செய்தார்கள். அதிகன் ஓடி ஒளித்துக் கொண்டான். புகழ்ச்சோழரின் சேனை வீரர்கள் அதிகனுடைய சேனை வீரர்களின் தலைகளையும்செல்வங்களையும்பிறவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

 

ஒரு வீரரின் சடைத்தலை புகழ்ச்சோழ நாயனாரின் கண்ணுக்குப் புலனாயிற்று. நாயனார் அலறுகிறார்கதறுகிறார். "சைவம் தழைக்க அரசு இயற்றுபவன் நானாநல்லது! நல்லது!" என்றார். "சோற்றுக் கடன் முடிக்கப் போர்புரிந்த அடியவரையோ என் சேனை கொன்றது?" என்றார். "இப் பழிக்கு என் செய்வேன் என் உயிர் நீங்கவில்லையே" என்றார்.

 

இவ்வாறு நாயனார் புலம்பிஅமைச்சர்களை நோக்கி, "இவ் உலகத்தை ஆளுமாறும்சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள்" என்று கட்டளை இட்டார்.  அமைச்சர்கள் மனம் கலங்கி நின்றார்கள்.  நாயனார் அவர்களைத் தேற்றினார். நெருப்பை வளர்ப்பித்தார். நீற்றுக் கோலப் பொலிவுடன்திருச்சடைத் தலையை ஒரு மாணிக்கத் தட்டிலே ஏந்தினார். அதைத் தமது திருமுடியிலே தாங்கினார். நெருப்பை வலம் வந்தார்.  திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டே நெருப்பில் இறங்கினார்.  ஆண்டவன் திருவடி நீழலை அடைந்தார்.

 

கருவூர்த் தேவர் வரலாறு

 

திருவிசைப்பா அருளிய ஆசிரியர்கள் ஒன்பதின்மரில் ஒருவர் கருவூர்த்தேவர். இவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் அவதரித்தவர். அதனால் கருவூர்த்தேவர் எனப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் இன்னது என விளங்கவில்லை. இவர் அந்தணர் குலத்தினர். வேதங்களையும் கலைகளையும் நன்கு உணர்ந்து ஓதியவர். இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். சைவ சமயத்தின் வழி ஒழுகியவர். போகநாதரிடம் உபதேசம் பெற்றுஞான நூல்களை ஆராய்ந்து சிவயோகத்தில் நின்றவர்.  காயகற்பம் உண்டவர். தம்மை இகழ்ந்தவர்களுக்குப் பலப்பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். பித்தர் என்று தம்மை மதிக்கும்படியாகத் திரிந்தவர். பிச்சை ஏற்று உண்ணும் துறவு வாழ்க்கைய மேற்கொண்டவர். தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் பற்று அற்று இருந்தவர். மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவர்.

 

ஒரு சமயம் கருவூர்த் தேவர் வடநாடுகொங்கு நாடுதொண்டை நாடுநடுநாடு முதலிய இடங்களில் உள்ள திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு தென்பாண்டி நாட்டுத் திருப்புடைமருதூர் சென்று இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். திருவைகுண்டம் அடுத்த காந்தீசுவரம் என்னும் சிவத்தலத்தில் இறைவனின் பேரொளியைக் கண்டு தரிசித்தார். பின்னர்இவர் நெல்லைப் பதியை அடைந்துநெல்லையப்பர் சந்நிதியில் நின்று, "நெல்லையப்பா" என்று அழைக்கஅப்பொழுது நெல்லையப்பர் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டுசிறிது தாமதிக்க, "இங்குக் கடவுள் இல்லை போலும்" என்று அவர் சினத்துடன் நீங்கஆலயம் பாழாகியது. அதனை அறிந்த ஊரார் நெல்லையப்பரை வேண்டநெல்லையப்பர் கருவூர்த்தேவரை மானூரில் சந்தித்து,அருள் புரிந்து நெல்லைப் பதிக்கு அழைத்து வந்து காட்சியளித்தார். பின்பு ஆலயம் செழித்து ஓங்கியது என்பர்.

 

கருவூர்த்தேவர் நெல்லைப் பதியை விடுத்துதிருக்குற்றாலம் சென்றுஅங்குச் சிலநாள் தங்கியிருந்துபின்னர் பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து,அருள் பெற்றுபலநாள் அங்கே இருந்தார்.

 

அப்பொழுது தஞ்சாவூரில் இராசராச சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய தஞ்சை இராசராசேச்சரத்துப் பேராவுடையார்க்கு அட்டபந்தன மருந்து பலமுறை சாத்தியும் இறுகாமல் இளகி நின்றது.  அது கண்டு மன்னன் வருந்தினான். அதனை அறிந்த போகநாதர்பொதியமலையில் இருந்து கருவூர்த்தேவரை அழைப்பித்தார். கருவூர்த் தேவர் விரைந்து தஞ்சைக்கு வந்துதம் குருவையும் அரசனையும் கண்டார். இறைவனை வழிபட்டுஅட்டபந்தன மருந்தை இறுகச் செய்து பேராவுடையாரை நிலை நிறுத்தினார்.

 

கருவூர்த் தேவர் தஞ்சாவூரில் இருந்து திருவரங்கம் சென்றுஅரங்கநாதர் அருள் பெற்றுச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்து பின் கருவூரை அடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப் பிராமணர்கள்கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கத்தை விட்டவர் என்றும்,வாமபூசைக்காரர் என்றும் பழிச்சொல் தூற்றி அவருக்கு அடிக்கடி பலப்பல தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினர். ஒருநாள் கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல் நடித்துகருவூர்த் திருஆனிலை ஆலயத்தை அடைந்துபசுபதீசுவரரைத் தழுவிக் கொண்டார்.

 

கருவூர்த் தேவர் திருவுருவச்சிலை சிறு சந்நிதியாகக் கருவூர்ப் பசுபதீசுரர் ஆலயத்துள் வெளிப் பிராகாரத்திலே தென்மேற்குத் திக்கிலும்தஞ்சாவூர் பேராவுடையார் ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்குத் திக்கிலும் தெய்வீகச் சிறப்புடன் இள்ளது. அங்கு நாள்தோறும் பூசைகள் நடைபெறுகின்றன.

 

கருவூர்த் தேவர் திருத்தில்லைதிருக்களந்தை ஆதித்தேச்சரம்திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்திருமுகத்தலைதிரைலோக்கிய சுந்தரம்கங்கைகொண்ட சோளேச்சரம்திருப்பூவணம்திருச்சாட்டியக்குடிதஞ்சை இராசராசேச்சரம்திருவிடைமருதூர் ஆகிய பத்துச் சிவாலயங்களுக்கும்தலங்களுக்கு ஒவ்வொன்றாகத் திருவிசைப்பாப் பதிகங்கள் பத்துப் பாடியுள்ளார். திருவிசைப்பாப் பாடிய ஆசிரியர்களுள் இவர் பாடிய பதிகங்களே மிகுதியாக உள்ளன.

 

நெஞ்சில் இராப் பகல் மறவேனே--- 

 

"ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

 

விரகுஅற நோக்கியும்,உருகியும்,வாழ்த்தியும்,

     விழிபுனல் தேக்கிட,...... அன்புமேன்மேல்

மிகவும்,இராப்பகல் பிறிது பராக்கு அற,

     விழைவு குராப் புனை ...... யுங்குமார,

 

முருக,ஷடாக்ஷர,சரவண,கார்த்திகை

     முலை நுகர் பார்த்திப,...... என்று பாடி

மொழி குழறாத் தொழுது அழுதுஅழுது ஆட்பட

     முழுதும் அலாப்பொருள் தந்திடாயோ..      --- திருப்புகழ்.

 

கருத்துரை

 

முருகா! உன்னை எப்போதும் மறவேன்

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...