திருத்தவத்துறை --- 0927. நிரைத்த நித்தில

                                                             அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

நிரைத்த நித்தில (திருத்தவத்துறை)

 

குருவாய் வருவாய்அருள்வாய் குகனே!

 

 

தனத்த தத்தன தானன தானன

     தனத்த தத்தன தானன தானன

     தனத்த தத்தன தானன தானன ...... தனதான

 

 

நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்

     பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி

     நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ....முகமானார்

 

நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை

     யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்

     நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே

 

கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்

     வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன

     கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக்

 

கதித்த பத்தமை சாலடி யார்சபை

     மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்

     கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ

 

வரைத்த னுக்கரர் மாதவ மேவின

     ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு

      மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய.....வடிவேலா

 

மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ

     ருரைத்து ளத்திரு வாசக மானது

     மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத்

 

திரைக்க டற்பொரு காவிரி மாநதி

     பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி

     செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ..குவையாகச்

 

செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்

     வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி

     திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்

     பொருத்த வெற்பு இணை மார்முலை மேல்அணி,

     நெறித்த நெய்க்குழல்,வாள்விழி,மாமதி .....முகமானார்,

 

நெளித்த சிற்றிடை மேல்கலை ஆடையை

     உடுத்தி,அத்தம் உளோர் தமையே மயல்

     நிரப்பி,நித்தமும் வீதியில் நேர்உறு ...... நெறியாலே,

 

கரைத்து,இதக்குயில் போல்மொழி மாதர்கள்

     வலைக்குளில் சுழலா வகையே

     கழலு துதித்திடு வாழ்வவு அதுதான் மனது ...... உறமேவிக்

 

கதித்த பத்தமை சால் அடியார் சபை

     மிகுத்து இழிக்குண பாதகனேன்,உயர்

     கதிக்கு அடுத்து உயர்வு ஆகவுமே அருள் ...... உரையாதோ?

 

வரைத் தனுக் கரர்,மாதவம் மேவினர்

     அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு

      மணிச் செவிக்குள் மெய்ஞ்ஞானம் அதுஓதிய.....வடிவேலா!

 

மதித்த முத்தமிழ் ஆய்வினர்,மேலவர்,

     உரைத்து உ(ள்)ளத் திருவாசகம் ஆனது

     மனத்துள் எத்துழகார்புகழ் வீசிய ...... மணிமாடத்

 

திரைக்கடல் பொரு காவிரி மாநதி

     பெருக்கு எடுத்துமெ பாய்வள நீர்பொலி

     செழித்த நெல்செநெல் வாரிகளே குவை .....குவையாகச்

 

செருக்கு செய்ப்பதி வாழ் முருகா! அறம்

     வளர்த்த நித்யகல்யாணிக்ருபாகரி

     திருத்த வத்துறை மாநகர் தான் உறை ...... பெருமாளே.

 

பதவுரை

 

     வரைத் தனுக் கரர்--- மேரு மலையை வில்லாகத் தனது திருக்கரத்தில் ஏந்தியவரும்,

 

     மாதவம் மேவினர் அகத்து இடத்தினில்வாழ் சிவனார்--- பெருந்தவம் புரிபவர் உள்ளத்தில் விளங்குகின்றவரும் ஆகிய சிவபரம்பொருளின்,

 

     திரு மணிச் செவிக்குள்--- அழகும் சிறப்பும் வாய்ந்த திருச்செவிகளில்,

 

     மெய்ஞ்ஞானம் அதுஓதிய வடிவேலா--- மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்த வடிவேலரே     

 

     மதித்த முத்தமிழ் ஆய்வினர்--- போற்றிச் சொல்லப்படும் முத்தமிழை ஆய்ந்தவர்களும்,

 

     மேலவர் உரைத்துள திருவாசகம்ஆனது--- மேலோர்களும் உரைத்துள்ள திருவாசகத்தின் கருத்துக்களை,

 

     மனத்துள் எத்து--- மனத்தில் கொண்டு வழிபாடு செய்கின்,

 

     அழகார் புகழ் வீசிய--- அழகும் புகழும் விளங்குகின்,

 

     மணிமாட --- மணிமாடங்களை உடையதும்,

 

     திரைக் கடல் பொரு காவிரிமாநதி பெருக்கு எடுத்துமெ பாய் வளநீர் பொலி செழித்த--- கடல் போல் அலைகள் வீசுகின்ற காவிரி மாநதியானது பெருக்கு எடுத்துப் பாய்கின்ற வளம் பொருந்திய நீரால் செழிப்புற்று விளங்குகின்றதும்,

 

     நெல் செ(ந்)நெல் வாரிகளே குவை குவையாகச் செருக்கு செய்ப்பதி வாழ் முருகா--- நெற்பயிரும்செந்நெல் பயிரும் குவியல்  குவியலாக விளைந்து பெருகும் வயல்களை உடையதும் ஆகிய வயலூர் என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற முருகப் பெருமானே!

 

     அறம் வளர்த்த நித்ய கல்யாணி --- உயிர்கள் செழிக்க முப்பத்திரண்டு அறங்களை வளர்த்த நிலைத்த இன்ப வடிவத்தினளும்,

 

     க்ருபாகரி--- உயிர்களுக்குக் கருணை புரிபவளும் ஆகிய உமையம்மை எழுந்தருளி உள்ள,

 

     திருத்தவத்துறைமாநகர் தான் உறை பெருமாளே--- திருத்தவத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

     நிரைத்த நித்தில நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு--- வரிசையாக அணியப்பெற்ற நீண்ட முத்துமாலைகளைத் தாங்கி உள்ள,

 

     இணை மார் முலை மேல் அணி--- மார்பில் இணையாக உள்ள முலைகளின் மேல் அணியப்பட்டுள்ள,

 

     நெறித்த நெய்க் குழல்--- நெய் பூசப்பெற்றுசுருண்டு வளர்ந்துள்ள கூந்தலும்,

 

     வாள்விழி--- வாளினை ஒத்த கண்களும்,

 

     மா மதிமுக மானார்--- திங்களை ஒத்த முகத்தினையும் உடைய மாதர்கள்,

 

     நெளித்த சிற்றிடை மேல் கலை ஆடையை உடுத்தி--- துவளுகின்ற சிறிய இடையின் மேல் மேகலை என்னும் ஆடையை உடுத்தி,

 

     அத்தம்உளோர் தமையே மயல் நிரப்பி--- பொருள் உள்ளோர்கள் காம மயக்கம் கொள்ளுமாறு செய்து,

 

     நித்தமும் வீதியில் நேர் உறு நெறியாலே கரைத்து--- நாள்தோறும் தெருவில் நேர்ப்படுகின்ற விதத்திலே நின்று அவர்கள் உள்ளத்தைக் கரைத்து,

 

     இதக்குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உ(ள்)ளில் சுழலா வகையே --- இனிமையான குயில் போலப் பேசுகின்ற விலைமாதர்களின் வலையில் விழுந்து அடியேன் துன்பத்தில் உழலாதபடிக்கு,

 

     உன கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனது உற மேவி--- தேவரீரது திருவடிகளை வணங்குகின்ற பெருவாழ்வு ஒன்றையே தமது மனத்தில் இருத்தி வைத்து,

 

     கதித்த பத்திமை சால் அடியார் சபை மிகுத்து இழிக் குணபாதகனேன் --- நிறைந்த பத்தி உள்ள அடியார்கள் திருக்கூட்டத்தை மிகவும் இழிவாகப் பேசுகின்ற குணத்தை உடைய பாதகன் ஆகிய நான்,

 

     உயர் கதிக்கு அடுத்து உயர்வாகவுமே--- நற்கதியை நாடி மேன்மை பெறுமாறு,

 

     அருள்உரையாதோ --- அருள் உபதேசம் புரிதலாகாதோ?

 

 

பொழிப்புரை

 

     மேரு மலையை வில்லாகத் திருக்கரத்தில் ஏந்தியவரும்,பெருந்தவம் புரிபவர் உள்ளத்தில் விளங்குகின்றவரும் ஆகிய சிவபரம்பொருளின்அழகும் சிறப்பும் வாய்ந்த திருச்செவிகளில்,

மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்த வடிவேலரே!

 

     போற்றிச் சொல்லப்படும் முத்தமிழை ஆய்ந்தவர்களும்மேலோர்களும் உரைத்துள்ள திருவாசகத்தின் கருத்துக்களைமனத்தில் கொண்டு வழிபாடு செய்கின்,அழகும் புகழும் விளங்குகின்,மணிமாடங்களை உடையதும்கடல் போல் அலைகள் வீசுகின்ற காவிரி மாநதியானது பெருக்கு எடுத்துப் பாய்கின்ற வளம் பொருந்திய நீரால் செழிப்புற்று விளங்குகின்றதும்,நெற்பயிரும்செந்நெல் பயிரும் குவியல் குவியலாக விளைந்து பெருகும் வயல்களை உடையதும் ஆகிய வயலூர் என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற முருகப் பெருமானே!

 

     உயிர்கள் செழிக்க முப்பத்திரண்டு அறங்களை வளர்த்த நிலைத்த இன்ப வடிவத்தினளும்உயிர்களுக்குக் கருணை புரிபவளும் ஆகிய உமையம்மை எழுந்தருளி உள்ள,திருத்தவத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

     வரிசையாக அணியப்பெற்ற நீண்ட முத்துமாலைகளைத் தாங்கி உள்ளமார்பில் இணையாக உள்ள முலைகளின் மேல் அணிந்துள்ள, நெய் பூசப்பெற்றுசுருண்டு வளர்ந்துள்ள கூந்தலும்வாளினை ஒத்த கண்களும்,திங்களை ஒத்த முகத்தினையும் உடைய மாதர்கள்,

துவளுகின்ற சிறிய இடையின் மேல் மேகலை என்னும் ஆடையை உடுத்திபொருள் உள்ளோர்கள் காம மயக்கம் கொள்ளுமாறு செய்துநாள்தோறும் தெருவில் நேர்ப்படுகின்ற விதத்திலே நின்று அவர்கள் உள்ளத்தைக் கரைத்துஇனிமையான குயில் போலப் பேசுகின்ற விலைமாதர்களின் வலையில் விழுந்து அடியேன் துன்பத்தில் உழலாதபடிக்குதேவரீரது திருவடிகளை வணங்குகின்ற பெருவாழ்வு ஒன்றையே தமது மனத்தில் இருத்தி வைத்துநிறைந்த பத்தி உள்ள அடியார்கள் திருக்கூட்டத்தை மிகவும் இழிவாகப் பேசுகின்ற குணத்தை உடைய பாதகன் ஆகிய நான்நற்கதியை நாடி மேன்மை பெறுமாறுஅருள் உபதேசம் புரிதலாகாதோ?

 

 

விரிவுரை

 

 

அத்தம்உளோர் தமையே மயல் நிரப்பி--- 

 

அத்தம் --- பொருள். வடமொழியில் அர்த்தம் என வரும்.

 

உன கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனது உற மேவி கதித்த பத்திமை சால் அடியார் சபை மிகுத்து இழிக் குணபாதகனேன்---

 

கதித்த பத்திமை --- மிகுந்த பத்தி.

 

பத்தர்கள் என்பவர் உலகியலில் இருந்து கொண்டே இறைவனிடத்து அன்பு கொண்டவர்கள்.

 

பத்திமை நிறைந்த அடியார்கள் உள்ள திருக்கூட்டத்தில் இருந்துகொண்டுஅடியார்களது அருமையை அறியாமல் அவர்களை இழிவாகப் பேசுவது பெரும்பாவம்.

 

புவியரசர் போற்றும் கவியரசர்கள் பலர் நம் நாட்டில் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள். அவர்கள் அறங்களை வற்புறுத்தி உலகிற்கு ஓதுவார்கள். நல்ல உவமான உவமேயங்களுடன் கூறுவார்கள்.உவமேயத்தினால் அறிவுக்கு நலன் ஏற்படுவது போல் உவமானத்தினாலும் நலன் ஏற்படும். உவமான உவமேயம் என்ற இரண்டும் பயன்படக்கூடிய முறையில் பேசும் திறன் திருவள்ளுவர், சேக்கிழார், காளிதாசர், கம்பர் முதலிய சிலரிடமே அமைந்து இருந்தது.

 

ஒருவருடைய முகத்தை அறிவிக்கவேண்டும். சந்திரனைப் போன்ற முகம் என்று கூறலாம். இதில் சந்திரன் உவமானம்.  முகம் உவமேயம்.இந்த உவமானத்தினால் சந்திரன் குளிர்ந்தவன். குளிர்ந்த முகம் என்பது மட்டும் புலனாகின்றது. இது சிறந்த உவமானமாகாது.  சந்திரன் குளிர்ந்தவன் என்பது உலகமறிந்தது. அதனால் நம் அறிவு வளர்ச்சிக்கு இடமில்லை. அபகாரம் புரிந்தோர்க்கும் உபகாரம் புரிபவனுடைய உள்ளம் போன்ற முகம் என்பதனை நோக்குக. உவமானத்தினால் ஒரு சிறந்த அறம் வலியுறுத்தப்படுகின்றது.

 

நல்ல இனத்தைச் சேர்ந்தவனுக்கு எல்லாக் காரியங்களும் இனிது முடியும் என்று கூறவந்த திருவள்ளுவதேவர், அதற்கு உவமை, மனம் தூயார்க்கு நன்மக்கள் பேறு பிறப்பதைக் குறிப்பிடுகின்றார். அதனால் நல் மனம் படைத்தவருக்கு உத்தமமான மக்கள் தோன்றுவர் கன்ற இனிய கருத்து புலனாகின்றது.

 

மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்,இனந்தூயார்க்கு 

இல்லைநன்று ஆகா வினை.               --- திருக்குறள்.

 

இரவு காலம் எய்தியது. எங்கும் இருள் சூழ்ந்தது. அந்த இருள் எத்தன்மையது என்று தெய்வச் சேக்கிழார் கூறுமாறு காண்க. 

 

பொது மகளிரது உள்ளம் போலவும், வஞ்சனையாளர் வினைபோலவும், பஞ்சாக்கரம் ஓதாதவர் உள்ளம் போலவும் இருண்டது என்கின்றார். 

 

பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்,

வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்,அரன்

அஞ்செ ழுத்தும் உணரா அறிவிலோர்

நெஞ்சும், என்ன இருண்டது நீண்டவான்.         --- பெரியபுராணம்.

 

அனுமனால் அசோக வனத்தில் அரக்கர் அழிந்ததைக் கூற வந்த கம்பர், பொய் சாட்சி கூறும் புல்லர்களுடைய குலம் விரைவில் அழிவது போல் அநுமனால் அரக்கர் மாண்டனர் என்கின்றார்.

 

புலம்தெரி பொய்க்கரி புகலும் புன்கணார்

குலங்களின் அவிந்தனர் குரங்கினால் என்றார்.

 

"அடியவரது உள்ளம் துன்புறப் பழி கூறிய பாவிகள், கொடிய பிணியினால் வேதனை உற்று,உடல் அழுகி, கண்டவர்கள் சீ சீ என்று வெறுத்து நகைக்க, அனல் போல் உடலும் உயிரும் கொதிப்புற்று விரைவில் மாள்வது போல் அடியேன் மலங்கள் மாயவேண்டும்" என்று கூறுகின்றார். காரணம் அடியவரைப் பழிப்பது கொடிய பாவம்.

 

ஆண்டான் அடியவர் ஆர்க்கு விரோதிகள்?

ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர்;

ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்

தாந்தாம் விழுவது தாழ்நரகு ஆகுமே.

 

என்கின்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

சிவனடியார் உலகில் உள்ளாரில் யார்க்கு என்ன தீங்கு செய்கின்றனர்?அவர்கள் அற உள்ளம் உடையவர்கள். பிறர்இடுகின்ற பிச்சையை ஏற்று உண்டு போகின்றார்கள். ஆதலின்அவரிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே.

 

     மதுரையம்பதியிலே அடியார் திருக்கூட்டத்துடன்திருஞானசம்பந்தப் பெருமான் தங்கி இருந்து திருமடத்திற்கு,சமணர்கள் தீயினை இட்டார்கள். அந்தக் கொடிய பாவத்திற்கு அவர்களைக் கழுவில் ஏற்றுவதே அரச நீதியாகும் என்று பாண்டியன் உத்தவிட்டான். அரசநீதியை மீறுதல் கூடாது என்றுதிருஞானசம்பந்தபெ பெருமான் அதனை விலக்கவில்லை.

 

மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கித்

துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தாங்கள்

முன்னமே பிள்ளையார்பால் அனுசிதம் முற்றச் செய்தார்

கொன்னுனைக் கழுவில் ஏற்றி முறைசெய்க என்று கூற.

 

புகலியில் வந்த ஞான புங்கவர் அதனைக் கேட்டும்

இகல்இலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு

தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே

மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த எல்லை.

                                                                                                

எனவரும் பெரியபுராணப் பாடல்களை நோக்கஅடியாருக்குச் செய்த அபராதம் மிகவும் கொடியது என்பது தெளிவாகும்.

 

இறைவனை நிந்தித்தவரும் ஒருகால் உய்வு பெறுவர். அடியவரை நிந்தித்தவர் எக்காலும் உய்வு பெறமாட்டார். கதிரவன் வெய்யிலில் நெடுநேரம் நிற்கலாம். கதிரவன் அருள் பெற்ற நொய் மணலில் சிறிது நேரம் கூட நிற்க முடியாது.

 

ஈசன்எதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த

நேசர்எதிர் நிற்பது அரிதாமே - தேசுவளர்

செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணம்

தங்குமணல் நிற்கரிதே தான்.               --- நீதிவெண்பா.

 

நெடும் காலமாக சிவநிந்தனை புரிந்து வந்த சமணர்கள், அடியவராகிய திருஞானசம்பந்தரை நிந்தித்தவுடனே அத்தனை பேரும் அழிந்து விட்டனர்.ஐந்து கோடி இருபத்தைந்து இலட்சத்து முப்பத்தையாயிரம் ஆண்டுகளாக திருமாலை நிந்தித்த இரணியன், அடியவராகிய பிரகலாதரை நிந்தித்த உடனே மாண்டு ஒழிந்தான்.

 

ஆதலின், அடியவர்களை இகழ்வது பெரிய பாவம் என அறிக. அப் பாவத்தினால் மிகவும் கொடிய நோய்கள் வந்து சேரும். பலரும் பழிப்பர். இம்மையில் பழியும், மறுமையில் பாவமும் நேரும் என்க. எனவே, அடியவர் நிந்தனை இம்மை மறுமை என்ற இரண்டிடத்தும் தீது ஆகும். 

 

உயர் கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள்உரையாதோ--- 

 

உயர் கதிக்கு ஒருவன் செல்லவேண்டுமானால்குருநாதரின் கருணை அவசியம். அவரது அருள் உபதேசம் நன்னெறியில் ஒருவனைக் கொண்டு செலுத்தும்.

  

வரைத் தனுக் கரர்--- 

 

தனு --- வில். திரிப தகன காலத்தில் மேரு மலையை வில்லாகத் தனது திருக்கரத்தில் ஏந்தியவர் சிவபெருமான்.

 

மாதவம் மேவினர் அகத்து இடத்தினில்வாழ் சிவனார்--- 

 

உள்ளம் உருகி நினைப்பவர் உள்ளக் கோயிலில் இறைவன் உறைகின்றான்.

 

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்.--- அப்பர்.

 

நினைப்பவர் மனத்துளான்                  --- திருஞானசம்பந்தர்.

 

ஒயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை --- மணிவாசகர்.

 

"சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்,

திருப்பெருந்துறை உறை சிவனே!

எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்,"       --- மணிவாசகர்.

 

இறைவனையே நினைப்பதால் ஏனைய நினைப்புகள் தானே நீங்குகின்றன. அதனால் அமைதியும் ஆறுதலும் உண்டாகின்றன.  ஓயாத உலக நினைவுநம்மை அல்லல் படுத்துகின்றது. மற்றைய நினைப்புகள் அ,மயில்வாகனனை நினைந்து உய்வு பெறவேண்டும்.

 

"உருகுதலைச் சென்ற உள்ளத்தும்அம்பலத்தும்ஒளியே

பெருகுதலைச் சென்று நின்றோன்" பெருந்துறைப் பிள்ளைகள்ஆர்

முருகுதலைச் சென்ற கூழைமுடியாமுலை பொடியா,

ஒரு குதலைசில் மழலைக்குஎன்னோஐய! ஓதுவதே.  ---  மணிவாசகர்.

 

உளன்கண்டாய்,நன்னெஞ்சே!. உத்தமன் என்றும்

உளன்கண்டாய்உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்,

விண்ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்,

மண்ஒடுங்கத் தான்அளந்த மன்.        --- பூதத்தாழ்வார்.

 

உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்

உளன்கண்டாய்உள்ளுவா ருள்ளத்து உளன்கண்டாய்,

வெள்ளத்தின் உள்ளானும்வேங்கடத்து மேயானும்,

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.  --- பொழ்கை ஆழ்வார்.

 

 

சிவனார் திரு மணிச் செவிக்குள் மெய்ஞ்ஞானம் அதுஓதிய வடிவேலா--- 

 

வேதங்களுக்கு முதலில் சொல்லப்படுவது பிரணவம் என்னும் மந்திரம் ஆதலால், "மறை ஆதி எழுத்து என்று உகந்த பிரணவம்" என்றார் குமரகுருபர அடிகள்.. "ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன் உடல் எரியக் கனல் சேரந்த கண்ணானே" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். "எல்லையில்லா மறைமுதல்" என்பார் தெய்வச் சேக்கிழார். பிரணவம் சிவபெருமானுக்கு இருப்பிடமாகவும்,வேதங்களுக்கு முதலாகவும்பிரமன் முதலிய தேவர்களுக்குப் பிறப்பிடம் ஆகவும்,காசிப் பதியில் இறப்பவர்களுக்கு எம்பெருமான் உபதேசிக்கும் தாரக மந்திரமாகவும்முருகக் கடவுளின் திருமுகங்களில் ஒன்றாகவும் விளங்குவது.  

 

சிவபெருமான் முருகப் பெருமானைத் தமது திருத்தொடையின் மீது வைத்துக் கொண்டு, "பிரமதேவன் அறியாபத பிரணவப் பொருளை எமக்கு நீ சொல்லுதல் வேண்டும்என்று அருளியபோதுஆறுமுகக் கடவுள்சிவபரம்பொருளை நோக்கி, "எந்தையேதேவரீர் எமது அன்னையாருக்குப் பிறர் அறியா வண்ணம் அருளிய பிரணவப் பொருளை யாவரும் கேட்கும்படி உரைக்கலாமோ?" எனஎம்பெருமான் புன்னகை கொண்டு, "மைந்தனேஎமக்கு மறைவாகவே உரைக்கக் கடவைஎன்று தமது திருச்செவி சாய்க்ககுமரவேள் குடிலை என்னும் பிரணவப் பொருளை அருளிச் செய்தனர்.இந்த  அற்புத நிகழ்வைக்  கந்தபுராணம் - அயனைச் சிறை நீக்கு படலத்தில் கச்சியப்ப சிவாசாசரியார் பின்வருமாறு பாடுகின்றார் -

 

அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து,அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து,அவனைப் பற்றித்

திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.

 

காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால் தழுவியே,"அயனும் தேற்றா

ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில்,அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.

 

"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள்,உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத்தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ மறையினால் இசைப்பது அல்லால்".

 

என்றலும்,நகைத்து,"மைந்த எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க,சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன்,உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப ஞான நாயகனாம் அண்ணல்.

 

எனவரும் கந்தபுராணப் பாடல்களைச் சிந்திக்கவும்.

 

"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.

 

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.      --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

 

நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்   --- கந்தர்அநுபூதி 

 

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாததுஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு,வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.  ---(குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

 

     "சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள்,மாணவபாவத்தை உணர்த்தி,உலகத்தை உய்விக்கும் பருட்டும்தனக்குத்தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர,முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.  ---  தணிகைப் புராணம்.

                                                                                                 

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

     அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு,எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.   --- அபிராமி அந்தாதி.

 

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.  --- சிவஞான சித்தியார்.

 

மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர் உரைத்துள திருவாசகம்ஆனது மனத்துள் எத்து அழகார் புகழ்--- 

 

ஏத்துதல் --- வழபடுதல். "ஏத்து" என்னும் சொல் பாடலின் சந்தம் நோக்கி, "எத்து" என வந்தது.

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே. இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும்பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும்சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.கற்புணையை நற்புணையாக்கியது தமிழ்.எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ்இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ்குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ்.கற்றூணில் காட்சிதரச் செய்தது தமிழ்பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்இயற்கையான மொழி தமிழ்பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். 

சிவபெருமானும் தமிழ்ப் பாடலில் காதல் உடையவர். சுந்தர்மூர்த்தி சுவாமிகள் பாடலை மிகவும் விரும்பியவர்.

"மற்று,நீ வன்மை பேசிவன்தொண்டன் என்னும் நாமம்  

பெற்றனைநமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்;  ஆதலால் மண்மேல் நம்மைச்

சொல்தமிழ் பாடுகஎன்றார் தூமறை பாடும் வாயார்".

 

"சொல்ஆர் தமிழ் இசைபாடிய தொண்டன் தனை இன்னும்    

பல்லாறு உலகினில் நம்புகழ் பாடுஎன்று உறு பரிவின்

நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்

எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்".

 

"என்ற பொழுதில் இறைவர்தாம்

     எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்

மன்றின் இடை நம் கூத்து ஆடல்

     வந்து வணங்கி வன்தொண்டன்

ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி

     உரைசேர் பதிகம் பாடுதலால்

நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்

     என்றார் அவரை நினைப்பிப்பார்".

 

என வரும் பெரியபுராணப் பாடல்களையும்,அவை சார்ந்த அருள் வரலாறுகளையும் எண்ணி இன்பம் உறுக.

 

இறைவன், "தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்" என்று போற்றினார் மணிவாசகப் பெருமான். பெருமானுக்குஅவர் ஆய்ந்த தமிழில் விருப்பம் மிகுதி. ஆதலால்,

 

"சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்

    பலத்தும்,என் சிந்தையுள்ளும்

உறைவான்,உயர்மதிற் கூடலின்

    ஆய்ந்த ஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ?அன்றி

    ஏழிசைச் சூழல்புக்கோ?

இறைவா! தடவரைத் தோட்கு என்கொல்

    ஆம் புகுந்து எய்தியதே"

 

என்று மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் வைத்துப் பாடி அருளினார்."தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

 

கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்உறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ்,ஏனை

மண்ணிடைச் சில இலக்கண வரம்புஇலா மொழிபோல்

எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?

 

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும்முதலை

உண்ட பாலனை அழைத்ததும்எலும்பு பெண் உருவாக்

கண்டதும்மறைக் கதவினைத் திறந்ததும்கன்னித்

தண்தமிழ்ச் சொலோமறுபுலச் சொற்களோ சாற்றீரே.

 

எனத் திருவிளையாடல் புராணம் கூறுமாறு காண்க.

 

எனவேதமிழ் மொழிக்கு முதல்வராகிய முருகப் பெருமானைக் குறித்தும்,சிவபரம்பொளைக் குறித்தும் அடியவர்கள் பலரும் பாடியுள்ள அருள்மொழிகளை எளத்தில் இருத்தி இறைவனை வழிபடவேண்டும்.

 

அறம் வளர்த்த நித்ய கல்யாணி --- 

 

நித்திய கலியாணி --- நிலைத்த இன்ப வடிவினள்.

 

உமாதேவியார் காஞ்சி மாநகரில் நாழி என்ற அளவையைக் கையில் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் செய்து அருளினார். செய்தும் வருகின்றார்.

 

இச்சைப்படி தன்பேரறம் எண்நான்கும் வளர்க்கும்

பச்சைக்கொடி,விடையான்ஒரு பாகம் திறைகொண்டாள்,

செச்சைத்தொடை இளையான் நுகர் தீம்பால் மணநாறும்

கச்சைப்பொரு முலையாள் உறை கச்சிப்பதி கண்டான். ---  வில்லிபாரதம்.

                                                                                                            

எண்அரும் பெரு வரங்கள்முன் பெற்றுஅங்கு

            எம்பி ராட்டிதம் பிரான் மகிழ்ந்து அருள

மண்ணின் மேல்வழி பாடுசெய்து அருளி

            மனைஅறம் பெருக்கும் கருணையினால்

நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க

            நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்

புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப்

            பொலிய முப்பதோடு இரண்டுஅறம் புரக்கும்.  ---  பெரியபுராணம்.

 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டுஅண்டம்மெல்லாம்

உய்ய அறம் செயும் உன்னையும்போற்றிஒருவர் தம்பால் 

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று

பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய்இதுவோஉன் தன் மெய்யருளே ---  அபிராமி அந்தாதி.

 

க்ருபாகரி--- 

 

கிருபை --- கருணை. உயிர்களுக்குக் கருணையைப் பொழிபவள் உமையம்மை.

 

திருத்தவத்துறைமாநகர் தான் உறை பெருமாளே--- 

 

திருத்தவத்துறை ஒரு தேவார வைப்புத் திருத்தலம். லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து ஊருள் செல்லும் சாலையில் நேரே சென்று ரயில்வே லைனைக் கடந்து - சுமார் 2 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். திருச்சிக்கு அருகாமையில் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.தற்போது மக்கள் வழக்கில் "லால்குடி" என்று வழங்குகிறது. 

 

கருத்துரை

 

குருவாய் வருவாய்அருள்வாய் குகனே!

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...