இராசிபுரம் --- 0943. சங்கு வார்முடி

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

சங்கு வார்முடி (ராஜபுரம்)

 

முருகா! 

பாவிகளைப் புகழாமல் உன்னைப் புகழ அருள்.

 

தந்த தானன தத்தனதந்த தானன தத்தன

     தந்த தானன தத்தன ...... தனதான

 

 

சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை

     தண்டு மாகரி பெற்றவன் ...... வெகுகோடிச்

 

சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி

     சண்ட மாருத மற்றுள ...... கவிராஜப்

 

பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர

     பந்த போதமு ரைத்திடு ...... புலவோன்யான்

 

பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில

     பஞ்ச பாதக ரைப்புகழ் ...... செயலாமோ

 

வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ

     ருண்டு மூலமெ னக்கரு ...... டனிலேறி

 

விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி

     தம்ப ராவஅ டுப்பவன் ...... மருகோனே

 

கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு

     கொங்கின் வீரக ணப்ரிய ...... குமராபொற்

 

கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி

     கொங்கு ராஜபு ரத்துறை ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

சங்கு,வார்முடி,பொன்கழல்,பொங்கு சாமரை,கத்திகை,

     தண்டு,மாகரி பெற்றவன்,...... வெகுகோடிச்

 

சந்த பாஷைகள் கற்றவன்,மந்த்ர வாதிசதுர்க்கவி

     சண்ட மாருதம்,மற்று உள ...... கவிராஜப்

 

பங்கி,பால சரச்வதி,சங்க நூல்கள் விதித்த ப்ர-

     பந்த போதம் உரைத்திடு ...... புலவோன்யான்,

 

பண்டை மூஎழுவர்க்கு எதிர் கண்ட நீயும் எனச் சில

     பஞ்ச பாதகரைப் புகழ் ...... செயல்ஆமோ?

 

வெங்கை யானை வனத்திடை,துங்க மா முதலைக்கு

     வெருண்டு,மூலம் எனகரு- ...... டனில் ஏறி,

 

விண் பராவ,அடுக்கிய மண் பராவஅதற்கு

     விதம் பராவ அடுப்பவன் ...... மருகோனே!

 

கொங்கண ஆதி தரப்பெறு கொங்கின் ஊடு சுகித்திடு

     கொங்கின் வீர! கணப்ரிய! ...... குமரா! பொன்

 

கொங்கு உலாவு குறக்கொடி கொங்கையே தழுவி,செறி

    கொங்கு ராஜபுரத்து உறை ...... பெருமாளே.

 

பதவுரை

 

      வெம் கை யானை வனத்து இடை துங்க மாமுதலைக்கு வெருண்டு--- விரும்பத் தக்க துதிக்கையை உடைய (கஜேந்திரன் என்ற) யானை காட்டிடையே ஒரு பொய்கையில் இருந்த வலிய முதலைக்கு அஞ்சி,

 

      மூலம் என--- ஆதிமூலமே என முறையிடவும்,

 

     கருடனில் ஏறி--- கருடன் மீசை ஊர்ந்து வந்து,

 

     விண் பராவ--- விண்ணுலகத்தோர் போற்றவும்,

 

     அடுக்கிய மண் பராவ--- அடுக்கடுக்காக உள்ள பதினாலு உலகங்களும் போற்றவும்,

 

     அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே--- அந்த யானைக்கு நன்மை பெருகும்படி அடுத்து வந்து உதவும் திருமாலின் திருமருகரே!

 

     கொங்கணாதி தரப் பெறு--- கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்) தரப்பட்ட

 

     கொங்கினூடு சுகித்திடு--- கொங்கு நாட்டில் சுகமாக விளங்குகின்,

 

     கொங்கின் வீர--- மணம் வீசும் மாலைகளை அணிந்த வீரரே!

 

     கண ப்ரிய--- பூதகணங்களுக்குப் பிரியமானவரே!

 

     குமரா--- குமாரக் கடவுளே!

 

     பொன் கொங்கு உலாவு குறக் கொடி கொங்கையே தழுவி--- அழகும் மணமும் விளங்குகின்ற குறக்கொடியாகிய வள்ளிநாயகியின் மார்பகங்களைத் தழுவியவரே!

 

     செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே--- செழிப்பான கொங்கு மண்டலத்தில் உள்ள இராசிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

      சங்கு--- சங்குவாத்தியம் என்ன?

 

     வார் முடி--- திருமுடி என்ன?

 

     பொன்கழல்--- பொன்னால் அகிய கழல் என்ன?

 

     பொங்கு சாமரை--- வீசுகின்ற சமாரம் என்ன?

 

     கத்திகை --- துகில்கொடி என்ன?

 

     தண்டு---சிவிகை என்ன?

 

     மாகரி--- குதிரை என்னயானை என்ன?

 

     பெற்றவன்--- இவைகளை எல்லாம் பெற்ற சிறப்பை உடையவன்,

 

     வெகு கோடிச் சந்த பாஷைகள் கற்றவன்---அளவற்ற பலவிதமான செய்யுள்களை உடைய  மொழிகளைக் கற்றவன்,

 

     மந்த்ர வாதி--- மந்திரத்தில் வல்லவன்,

 

     சதுர்க் கவி--- நான்கு விதமான கவிளிலும் வல்லவன்,

 

     சண்ட மாருதம்-- கொடும் காற்றைப் போல விரைந்து பேசவும்பாடவும் வல்லவன்,

 

     மற்றுள கவிராஜப் பங்கி--- மற்றும் பல விருதுகளை உடைய கவியரசன் என்னும் சிறப்பை உடையவன்,

 

     பால சரச்வதி--- பாலசரசுவதி என்னும் விருதினைப் பெற்றவன்,

 

     சங்க நூல்கள் விதித்த--- சங்க நூல்களில் விதிக்கப்பட்டுள்ள,

 

     ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான்--- பிரபந்த வகைகளில் அறிவு நூல்களை எடுத்து இயம்பவல்ல புலவன் நான், (என்று சொல்லிக் கொண்டு)

 

      பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என--- தலைஇடைகடை ஏழு என இருபத்தோரு வள்ளல்களுக்கும் ஒப்பானவன் நான் கண்ட நீ என,

 

     சில பஞ்ச பாதகரைப் புகழ் செயலாமோ --- ஐம்பெரும் பாதகங்களைப் புரியும் சிலரைப் புகழ்ந்து திரிதல் தகுமோ?  (தகாது).

 

பொழிப்புரை

 

     விரும்பத் தக்க துதிக்கையை உடைய (கஜேந்திரன் என்ற) யானை காட்டிடையே ஒரு பொய்கையில் இருந்த வலிய முதலைக்கு அஞ்சிஆதிமூலமே என முறையிடவும்கருடன் மீசை ஊர்ந்து வந்துவிண்ணுலகத்தோர் போற்றவும்அடுக்கடுக்காக உள்ள பதினாலு உலகங்களும் போற்றவும்அந்த யானைக்கு நன்மை பெருகும்படி அடுத்து வந்து உதவும் திருமாலின் திருமருகரே!

 

      கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்) தரப்பட்டகொங்கு நாட்டில் சுகமாக விளங்குகின்,மணம் வீசும் மாலைகளை அணிந்த வீரரே!

 

     பூதகணங்களுக்குப் பிரியமானவரே!

 

     குமாரக் கடவுளே!

 

     அழகும் மணமும் விளங்குகின்ற குறக்கொடியாகிய வள்ளிநாயகியின் மார்பகங்களைத் தழுவியவரே!

 

     செழிப்பான கொங்கு மண்டலத்தில் உள்ள இராசிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

      சங்குவாத்தியம் எனது முன்னர் முழங்நீண்டு திருமுடி தரித்துபொன்னால் அகிய கழல் விளங்சாமரை வீசதுகில்கொடி அசைசிவிகை மீதும்,குதிரை மீதும்யானை மீதும்வலம் வருகின்ற சிறப்பைப் பெற்றவன் நான்அளவற்ற பலவிதமான செய்யுள்களை உடைய மொழிகளைக் கற்றவன்;மந்திரத்தில் வல்லவன்நான்கு விதமான கவிகளிலும் வல்லவன்கொடும் காற்றைப் போல விரைந்து பேசவும்பாடவும் வல்லவன்;மற்றும் உள்ள விருதுகளைப் பெற்றுள்ள கவியரசன் என்னும் சிறப்பை உடையவன்;பாலசரசுவதி என்னும் விருதினைப் பெற்றவன்சங்க நூல்களில் விதிக்கப்பட்டுள்ள,பிரபந்த வகைகளில் அறிவு நூல்களை எடுத்து இயம்பவல்ல புலவன் நான்என்று சொல்லிக் கொண்டு,தலைஇடைகடை ஏழு என இருபத்தோரு வள்ளல்களுக்கும் ஒப்பானவன் நான் கண்ட நீ என ஐம்பெரும் பாதகங்களைப் புரியும் சிலரைப் புகழ்ந்து திரிதல் தகுமோ?  (தகாது).

 

விரிவுரை

 

     விருதுகள் பலவற்றை ஒருவன் பெற்றிருந்தாலும். செல்வச் செழிப்பில் மிகுந்து இருந்தாலும்பல நீல்களைக் கற்று இருந்தாலும்சண்ட மாருதம் போலக் கவிகளை இயற்றுவதில் ஒல்லவராய் இருந்தாலும்உரை சொல்ல வல்லவராய் இருந்தாலும்,தான் கற்ற நூலறிவைக் கொண்டுநுண்ணறிவைப் பெறாமல்கற்றதனால் ஆய பயன் வாலறிவன் திருவடியைத் தொழுதலே என்னும் நல்லறிவைப் பெறாமல்தன்னைத் தானே புகழ்ந்து கொண்டும்உலக வாழ்வில் மேலும் சிறந்து விளங்குதற்குஅறிவில்லாத புல்லரை எல்லாம் புகழ்ந்து பாடிக் கொண்டும் உழலுவது தகாது என்பதை அடிகளார் இப் பாடலின் மூலம் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

 

     புலவர்கள் இவ்வாறு தனமுடையவர் பால் சென்று அருமையினும் அருமையான இனிய தமிழைஈசனுக்கு அர்ப்பணியாமல் அழிந்து போகின்றவர்களும்பரமலோபிகளும்மகா மூடர்களுமாகியப் பாவிகளைப் பாடிப் பரதவிக்கின்றார்கள். இந்த அவல நிலையைக் கண்டு அருணகிரிநாதர் இத் திருப்புகழில் வருந்துகின்றார். அந்தோ! இவர்கட்கு என்ன மதிகேட்டதெல்லாம் தரும் பரம கருணாநிதியாகிய முருகனைப் பாடினால் இகம்பரம் இரண்டு நலன்களையும் வழங்குவானேஅப் பரமனை வாழ்த்தக் கூடவேண்டாம். தமிழால் வைதாலும் வாழவைப்பானே

 

     கற்றவர்களில் பெரும்பகுதியினர் தமக்கு இல்லாத தகுதிகள் எல்லாம் தம்மிடத்தில் உள்ளதாக உளறிக் கொண்டுபொருளாசை காரணமாகப் பொருள் உள்ளவர்களைத் தேடிச் சென்றுஅவர்களிடத்தில் தீய குணங்கள் நிறைந்து இருந்தாலும்அவர்களைப் பலவிதமாகப் புகழ்ந்து பாடிக் கொண்டு திரிவது இயல்பு.செல்வ வளம் படைத்து இருந்தும்யாருக்கும் உதவ மனம் இல்லாத மூடர்களாகிய உலோபிகளை,  "தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அருச்சுனனே!" என்றுஎன்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனமிரங்கி அரைக் காசும் உதவமாட்டார்கள்.எல்லா நலங்களையும் அருளவல்ல இறைவனைப் புகழ்ந்து பாடி உய்ய வேண்டும் என்னும் எண்ணம் சிறிதும் இராது.

 

கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுஉரியார்

     தண்டலையைக் காணார் போலப்

பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்

     கிடையாது! பொருள்நில் லாது!

மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர்

     பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ?

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி

     வாழ்வதில்லை! மெய்ம்மை தானே! --- தண்டலையார் சதகம்.

 

மெய்அதைச் சொல்வார் ஆகில் விளங்கிடும் மேலாம் நன்மை,

வையகம் அதனைக் கொள்ளும்,மனிதரில் தேவர் ஆவார்,

பொய்அதைச் சொல்வார் ஆகில்,போசனம் அற்பம் ஆகும்,

நொய்யர் இவர்கள் என்று நோக்கிடார் அறிவு உள்ளோரே.   --- விவேக சிந்தாமணி.

                                                                                                

ஆகவேபொய்யாகஎந்த நலமும் இல்லாத உலுத்தர்களைப் பாடிப் பாவத்தைச் சேர்த்துக் கொள்ளுதல் கூடாது. புகழக் கூட வேண்டாம்.  "முத்தமிழால் வைதாரையும் கூட வாழ வைப்பவன் முருகப் பெருமான்" என்பதை உணர்தல் வேண்டும். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப் பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடக் கூட வேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளைநீலிமகன்தகப்பன் சாமிபெரு வயிற்றான் தம்பிபேய் முலையுண்ட கள்வன் மருமகன்;  குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.

 

அத்தன்நீ,எமது அருமை அன்னை நீ,தெய்வம் நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல் நீ,மாரன் நீ,

    ஆண்மைஉள விசயன் நீ,என்று

எத்தனை விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கம் செயார்,

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சி எனை ஏத்த வேண்டாம்,

பித்தனொடு நீலியும் பெறு தகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பிஅப்

பேய்ச்சிமுலை உண்டகள் வன்மருகன்,வேடுவப்

    பெண்மணவன்,என்று ஏசினும்,

சித்தமகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,

    சிறுபறை முழக்கி அருளே!                            ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்.

                                                            

சுந்தர் மூர்த்தி நாயனார் பாடுகின்றார்.

 

நலம்இலாதானை நல்லனே என்றும்,

            நரைத்த மாந்தரை இளையனே,

குலம் இலாதானைக் குலவனே என்று

            கூறினும் கொடுப்பார் இலை,

புலம் எலாம் வெறி கமழும் பூம்புக-

            லூரைப் பாடுமின் புலவீர்காள்!

அலமராது அமருலகம் ஆள்வதற்கு

            யாதும் ஐயுறவு இல்லையே.

 

பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என--- 

 

முதல் ஏழு வள்ளல்கள் ---

 

சகரன்காரிநளன்துந்துமாரிநிருதிசெம்பியன்விராடன்

 

இடை ஏழு வள்ளல்கள் ---

 

அக்குரன்அந்திமான்கர்ணன்சந்தன்சந்திமான்சிசுபாலன்வக்கிரன்

 

கடை எழு வள்ளல்கள் ---

 

பாரி ஓரி காரி நள்ளி எழினி பேகன் ஆய்

 

சில பஞ்ச பாதகரைப் புகழ் செயலாமோ --- 

 

பாவங்கள் பல. அவற்றுள் ஐந்து பெரும் பாவங்களாகும். அவற்றை மகாபாதகங்கள் என்பர்.

 

கள்காமம்கொலைகளவுசூது என்பன. இவற்றைப் புரிவோர் பற்பல நரகங்கள் சென்று துன்புறுவர்.

 

வெம் கை யானை வனத்து இடை துங்க மாமுதலைக்கு வெருண்டுமூலம் எனகருடனில் ஏறிவிண் பராவ,  அடுக்கிய மண் பராவஅதற்கு இதம் பராவ அடுப்பவன்--- 

 

திருமால்கஜேந்திரம் என்னும் யானைக்கு அருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார் அடிகளார்.

 

திருப்பாற்கடலால் சூழப்பட்டதாயும்பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும்பெரிய ஒளியோடு கூடியதாயும்திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம்மந்தாரம்சண்பகம் முதலிய மலர்தரும் மரங்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும்இந்திரர் முதலிய இமையவரும்வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில்வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானதுஅநேக பெண் யானைகளாலே சூழப்பட்டுதாகத்தால் மெலிந்துஅந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது.  உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது கஜேந்திரம். யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்திபக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலைபாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,உடனே கருடாழ்வான் மீது தோன்றிசக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்துகஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால்உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

 

மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய

 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

 

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம்நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோதுஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவாதலைவனைத்தானே அழைத்தான்நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால்தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவாஆதலால்சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.

 

கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே--- 

 

கொங்கு நாட்டிலே விளங்கும் இராசிபுரம் என்று இப்போது வழங்கப் பெறும் திருத்தலம் இராஜபுரம் ஆகும். இத் திருத்தலத்துக்கு மேற்கில் கொங்கணகிரி உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! பாவிகளைப் புகழாமல் உன்னைப் புகழ அருள்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...