திருப் பாண்டிக் கொடுமுடி --- 0941. காந்தள் கரவளை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

காந்தள் கரவளை (திருப்பாண்டிக்கொடுமுடி)

 

முருகா! 

விலைமாதர் உறவை விட்டு

உனது உறவைப் பற்ற அருள்.

 

தாந்தத் தனதன தாந்தத் தனதன

     தாந்தத் தனதன ...... தனதான

 

 

காந்தட் கரவளை சேந்துற் றிடமத

     காண்டத் தரிவைய ...... ருடனூசி

 

காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி

     காண்டற் கநுபவ ...... விதமேவிச்

 

சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்

     சாய்ந்திட் டயில்விழி ...... குழைமீதே

 

தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி

     தாங்கித் தழுவுத ...... லொழியேனோ

 

மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்

     வாஞ்சைப் படியருள் ...... வயலூரா

 

வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை

     மான்சிற் றடிதொழு ...... மதிகாமி

 

பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய

     பாண்டிக் கொடுமுடி ...... யுடையாரும்

 

பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு

     பாண்சொற் பரவிய ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

காந்தள் கரவளை சேந்து உற்றிடமத

     காண்டத்து அரிவையர் ...... உடன்சி

 

காந்தத்து உறவு என வீழ்ந்து,அப்படி குறி

     காண்டற்கு அநுபவ ...... விதம் மேவிச்

 

சாந்தைத் தடவிய கூந்தல் கருமுகில்

     சாய்ந்திட்டு,அயில்விழி ...... குழைமீதே,

 

தாண்டிப் பொர,உடை தீண்டி,தன கிரி

     தாங்கித் தழுவுதல் ...... ஒழியேனோ?

 

மாந்தர்க்கு,அமரர்கள் வேந்தற்குவரவர்

     வாஞ்சைப் படி அருள் ...... வயலூரா!

 

வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை

     மான் சிற்றடி தொழும் ...... அதிகாமி!

 

பாந்தள் சடைமுடி ஏந்திக் குலவிய

     பாண்டிக் கொடுமுடி ...... உடையாரும்

 

பாங்கில் பரகுருவாம் கற்பனை யொடு

     பாண்சொல் பரவிய ...... பெருமாளே.

 

பதவுரை

 

      மாந்தர்க்கு--- மனிதர்களுக்கும்,

 

     அமரர்கள் வேந்தற்கு---தேவர்கள் தலைவனாகிய இந்திரனுக்கும்,

 

      அவரவர் வாஞ்சைப் படி அருள் வயலூரா--- அவரவர் விருப்பப்படியே இருள் புரிகின்ற வயலூர் முருகா!

 

      வான் கிட்டிய பெருமூங்கில் புனம்மிசை --- வானளாவ உயர்ந்து பெரிய மூங்கில்கள் வளர்ந்துள்ள வள்ளிமலைக் காட்டில் உள்ள தினைப்புனத்தில் இருந்த,

 

     மான் சிற்றடி தொழும் அதிகாமி--- மானின் வயிற்றில் உதித்த எம்பிராட்டி வள்ளிநாயகியின் திருவடிகளைத் தொழுகின்ற காதல் மிக்கவரே!

 

      பாந்தள் சடை முடி ஏந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி உடையாரும்--- பாம்பைத் திருச்சடையில் தாங்கியவரும்பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில் விளங்குபவரும் ஆகிய சிவபெருமானும்,

 

     பாங்கில் பரகுருவாம் கற்பனையொடு--- மேலான குருநாதர் என்னும் பாங்கில் பாவனையோடு இருந்து,

 

     பாண்சொல் பரவிய பெருமாளே--- (தேவரீர் அருளிய) பண்ணோடு கூடிய சொற்களைக் கேட்டுத் துதித்த பெருமையில் மிக்கவரே!

 

      காந்தள் கரவளை சேந்து உற்றிட மத காண்டத்து அரிவையருடன்--- காந்தள் மலரைப் போன்றவளையல் அணிந்துள்ளகைகள் சிவக்கமன்மதனுடைய வில்லுக்குப் பயன்தரும் விலைமாதர்களுடன்

 

     ஊசி காந்தத்து உறவு என வீழ்ந்து--- ஊசியானது காந்தத்தைக் கண்டதும் அணுகுவது போன்று நெருங்கி உறவாடி  (காம மயக்கத்தில்) விழுந்து

 

     அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி --- அக்கணமே பெண் குறியைக் காண்பதற்கு ஏதுவான அனுபவ வழிகளை நாடிப் பொருந்தி,

 

     சாந்தைத் தடவிய கூந்தல் கருமுகில் சாய்ந்திட்டு--- நறுஞ்சாந்து பூசபட்ட கரிய மேகம் போன்ற கூந்தலின் மேல் சாய்ந்து படுத்து

 

      அயில் விழி குழை மீதே தாண்டிப் பொர--- (அந்த நேரத்தில் காம மிகுதியால்விலைமாதரின் வேல் போன்ற கண்கள் (காதில் உள்ள) குண்டலங்களின் மேல் தாவிச் சென்று தாக்க,

 

     உடை தீண்டித் தனகிரி தாங்கித் தழுவுதல் ஒழியேனோ--- அவர்களது ஆடையைத் தொட்டு மார்பகங்களாகிய மலையை எனது கைகளால் தாங்கித் தழுவிக் கொள்ளும் செயலை ஒழிக்க மாட்டேனோ

 

பொழிப்புரை

 

     மனிதர்களுக்கும்தேவர்கள் தலைவனாகிய இந்திரனுக்கும்அவரவர் விருப்பப்படியே இருள் புரிகின்ற வயலூர் முருகா!

 

     வானளாவ உயர்ந்து பெரிய மூங்கில்கள் வளர்ந்துள்ள வள்ளிமலைக் காட்டில் உள்ள தினைப்புனத்தில் இருந்த,மானின் வயிற்றில் உதித்த எம்பிராட்டி வள்ளிநாயகியின் திருவடிகளைத் தொழுகின்ற காதல் மிக்கவரே!

 

            பாம்பைத் திருச்சடையில் தாங்கியவரும்பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில் விளங்குபவரும் ஆகிய சிவபெருமானும், மேலான குருநாதர் என்னும் பாங்கில் இருந்துதேவரீர் அருளிய பண்ணோடு கூடிய சொற்களைக் கேட்டுத் துதித்த பெருமையில் மிக்கவரே!

 

            காந்தள் மலரைப் போன்றவளையல் அணிந்துள்ளகைகள் சிவக்கமன்மதனுடைய வில்லுக்குப் பயன்தரும் விலைமாதர்களுடன் ஊசியானது காந்தத்தைக் கண்டதும் அணுகுவது போன்று நெருங்கி உறவாடிகாம மயக்கத்தில் விழுந்துஅக்கணமே பெண் குறியைக் காண்பதற்கு ஏதுவான அனுபவ வழிகளை நாடிப் பொருந்திநறுஞ்சாந்து பூசபட்ட கரிய மேகம் போன்ற கூந்தலின் மேல் சாய்ந்து படுத்து,  அந்த நேரத்தில் காம மிகுதியால்விலைமாதரின் வேல் போன்ற கண்கள் காதில் உள்ள குண்டலங்களின் மேல் தாவிச் சென்று தாக்கஅவர்களது ஆடையைத் தொட்டு மார்பகங்களாகிய மலையை எனது கைகளால் தாங்கித் தழுவிக் கொள்ளும் செயலை ஒழிக்க மாட்டேனோ

 

விரிவுரை

 

காந்தள் கரவளை சேந்து உற்றிட மத காண்டத்து அரிவையருடன்--- 


காந்தள் பெண்களின் கைகளுக்கு உவமை சொல்லப்படுவது.

 

"வரைசேரும் முகில்முழவ,மயில்கள்பல

            நடம்ஆட,வண்டுபாட,

விரைசேர்பொன் இதழிதர,மென்காந்தள்

            கைஏற்கும் மிழலையாமே."

 

என்பது திருஞாசனசம்பந்தர் தேவாரம்.

 

"பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட"   --- திருவாசகம்.

 

கரவளை --- கைகளில் அணிந்துள்ள வளையல்கள்.

 

சேந்து --- சிவப்பு.

 

மத காண்டம் --- காமகாண்டம்.

 

ஊசி காந்தத்து உறவு என வீழ்ந்து--- 

 

ஊசி --- காமுகர்.

 

காந்தம் --- விலைமாதர்.

 

ஊசி காந்தததைக் கண்டதும் அணுகும். காந்தம் ஆட்டியபடி ஆடும்.

 

"ஊசி காந்தத்தினைக் கண்டு அணுகல் போலவே

             ஓர் உறவும் உன்னி உன்னி"  --- தாயுமானார்.

 

காந்தம் கண்ட பசாசத்து அவையே.--- சிவஞானபோதம்.

 

"இரும்பைக் காந்தம் வலித்தால்போல் இயைந்து"   --- சிவஞானசித்தியார்.

                                    

 

மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப் படி அருள் வயலூரா--- 

 

மனிதர்களானாலும்தேவர்கள் தலைவனாகிய இந்திரனே ஆனாலும்தன்னை வழிபடுகின்ற அடியவர்க்கு அவரவர் வேண்டுவதை அருள்பொன் முருகப் பெருமான் என்கின்றார். "அடியவர் இச்சையில் எவை எவை உற்றன,அவை தருவித்து அருள் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில்.

 

வான் கிட்டிய பெருமூங்கில் புனம்மிசை மான் சிற்றடி தொழும் அதிகாமி --- 

 

வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் என்பது வள்ளிமலையைக் குறிக்கும். வள்ளிமலையில் எம்பிராட்டி வள்ளிநாயகிதினைப்புனத்தைக் காவல் கொண்டு,முருகப் பெருமானை அடைவதற்காக அருந்தவத்தை மேற்கொண்டும் இருந்தார். "மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடிவிளையாடிஅங்ஙனே நின்று வாழுகின்ற மயில் வீரராகிய முருகப் பெருமான்" அவர் மீது இச்சை கொண்டு தேடிச் சென்று ஆட்கொண்டார்.

 

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறுபெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால்அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

 

இந்த அற்புதமான அருள் வரலாற்றைவள்ளிநாயகியிடம் முருகப் பெருமான் சக்கு ஆகி நின்றதைஅருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் ஆங்காங்கே வைத்து அழகாகப் பாடி அருளி உள்ளார். பின்வரும் மேற்கோள்களைக் காண்க.

 

முருகப் பெருமான் கிழவேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது...

 

குறவர் கூட்டத்தில் வந்து,கிழவனாய்ப் புக்கு நின்று,

     குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,

குணமதாக்கிசிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த

     குமரகோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.--- கச்சித் திருப்புகழ்.

 

புன வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்

     புணர் காதல் கொண்ட அக் ...... கிழவோனே!--- பழநித் திருப்புகழ்.

 

செட்டி வேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது....

 

செட்டி என்று வன மேவி,இன்ப ரச

     சத்தியின் செயலினாளை அன்பு உருக

     தெட்டி வந்துபுலியூரின் மன்றுள் வளர் ......பெருமாளே.  --- சிதம்பரத் திருப்புகழ்.

                                    

 

சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,

செட்டி என்று எத்தி வந்துடி நிர்த்தங்கள் புரி

    சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும் ...... எங்கள் கோவே!      --- சிதம்பரத் திருப்புகழ்.

                                   


வள்ளிநாயகிக்ககாக மடல் ஏறியது ....

 

பொழுது அளவு நீடு குன்று சென்று,

     குறவர்மகள் காலினும் பணிந்து,

          புளிஞர் அறியாமலும் திரிந்து,...... புனமீதே,

புதியமடல் ஏறவும் துணிந்த,

     அரிய பரிதாபமும் தணிந்து,

          புளகித பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே.   --- பொதுத் திருப்புகழ்.

                                    

 

முருகப் பெருமான் வள்ளிமலையில் திரிந்தது .....

 

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்

     மங்கை தனை நாடி,...... வனமீது

வந்த,சரண அரவிந்தம் அது பாட

     வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.

 

குஞ்சர கலாப வஞ்சி,அபிராம

     குங்கும படீர ...... அதி ரேகக்

கும்பதனம் மீது சென்று அணையும் மார்ப!

     குன்று தடுமாற ...... இகல் கோப!           --- நிம்பபுரத் திருப்புகழ்.

 

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை

     கலகலன் கலின் கலின் என,இருசரண்

     மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,

 

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்

     உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை

     மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,

 

அருகு சென்றுடைந்துவள் சிறு பதயுக

     சத தளம் பணிந்துதி வித கலவியுள்

     அற மருண்டுநெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......அணைவோனே

                                                                               --- திருவருணைத் திருப்புகழ்.

 

வள்ளிநாயகி தந்த தினைமாவை முருகப் பெருமான் உண்டது...

 

தவநெறி உள்ளு சிவமுனி,துள்ளு

     தனி உழை புள்ளி ...... உடன் ஆடித்

தரு புன வள்ளி மலை மற வள்ளி,

     தரு தினை மெள்ள ...... நுகர்வோனே!--- வெள்ளிகரத் திருப்புகழ்.

 

வள்ளிநாயகி முன்னர் அழகனாய் முருகப் பெருமான் தோன்றியது....

 

மால் உற நிறத்தைக் காட்டி,வேடுவர் புனத்தில் காட்டில்,

     வாலிபம் இளைத்துக் காட்டி,...... அயர்வாகி,

மான்மகள் தனத்தைச் சூட்டி,ஏன் என அழைத்துக் கேட்டு,

     வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.       --- பொதுத் திருப்புகழ்.

                                    

 

வள்ளிநாயகியின் திருக்கையையும்திருவடியையும் பிடித்தது...

 

பாகு கனிமொழி மாது குறமகள்

     பாதம் வருடிய ...... மணவாளா!--- சுவாமிமலைத் திருப்புகழ்.

 

கனத்த மருப்பு இனக் கரி,நல்

     கலைத் திரள்கற்புடைக் கிளியுள்

     கருத்து உருகத் தினைக்குள் இசைத்து,...... இசைபாடி

கனிக் குதலைச் சிறுக் குயிலைக்

     கதித்த மறக் குலப் பதியில்

     களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே.   --- பொதுத் திருப்புகழ்.

                                   


வள்ளிநாயகியின் எதிரில் துறவியாய்த் தோன்றியது...

 

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்

     வேங்கையும் ஆய் மறமின் ...... உடன்வாழ்வாய்.  --- திருவேங்கடத் திருப்புகழ்.

                                

 

வள்ளிநாயகியைக் கன்னமிட்டுத் திருடியது....

 

கன்னல் மொழி,பின்அளகத்துன்னநடை,பன்ன உடைக்

     கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்

கன்னம் இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்

     கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே!    --- கண்ணபுரத் திருப்புகழ்.

                                

 

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் தோளில் ஏற்றி ஓடியது...

 

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு

     உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!

உரத்தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,

     ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா!          --- திருவருணைத் திருப்புகழ்.

                                

 

வள்ளிநாயகியை முருகப் பெருமான் வணங்கி,சரசம் புரிந்தது.....

 

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை

     கலகலன் கலின் கலின் என,இருசரண்

     மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,

 

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்

     உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை

     மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,

 

அருகு சென்றுடைந்துவள் சிறு பதயுக

     சத தளம் பணிந்துதி வித கலவியுள்

     அற மருண்டுநெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......அணைவோனே

                                                                                   --- திருவருணைத் திருப்புகழ்.

தழை உடுத்த குறத்தி பதத் துணை

     வருடி,வட்ட முகத் திலதக் குறி

     தடவி,வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே

தரள பொன் பணி கச்சு விசித்துரு

     குழை திருத்தி,அருத்தி மிகுத்திடு

     தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே. --- திருத்தணிகைத் திருப்புகழ்.

 

முருகப் பெருமானை அடிகளார், "அதிகாமி" என்றது எத்துணைப் பொருத்தமானது என்பதை,

 

உலப்பறு இலம்பகம் மினுக்கிய செந்திரு,

உருப்பணி யும்பல தரித்து,அடர் பைந்தினை

ஓவல் இலா அரணே செயுமாறு,

 

ஒழுங்கு உறும் புனம் இருந்து மஞ்சுலம்

உறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட

ஓலமதே இடுகானவர் மா  . . . . . . மகள்எனும் ஒருமானாம்

 

மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து,அதி

வனத்து உறை குன்றவர் உறுப்பொடு நின்று,

மான் இனியே கனியே,இனிநீ

 

வருந்தும் என்தனை அணைந்து சந்ததம்

மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்

மயிலே குயிலே எழிலே  . . . . . . மட அன நினதுஏர்ஆர்

 

மடிக்கு ஒரு வந்தனம்,அடிக்கு ஒரு வந்தனம்,

வளைக்கு ஒரு வந்தனம்,விழிக்கு ஒரு வந்தனம்,

வா எனும் ஓர் மொழியே சொலுநீ,

 

மணம் கிளர்ந்த நல் உடம்பு இலங்கிடு

மதங்கி இன்று உளம் மகிழ்ந் திடும்படி

மான்மகளே எனைஆள் நிதியே..... எனும் மொழி பலநூறே

 

படித்துவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன

படிக்கு மணந்துஅருள் அளித்த அனந்தகிரு

பா கரனே! வரனே! அரனே!

 

படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு

பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்

பா வகியே! சிகியூர் இறையே!  . . . . . . திருமலிசமர் ஊரா!

 

எனப் பாம்பன் சுவாமிகள் பாடி அருளிய "பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்" சொல்லும். முருகா! முருகா! முருகா!

 

பாந்தள் சடை முடி ஏந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி உடையாரும்பாங்கில் பரகுருவாம் கற்பனையொடு பாண்சொல் பரவிய பெருமாளே--- 

 

பாந்தள் --- பாம்பு.

 

பாண்டிக் கொடுமுடி உடையார் --- சிவபிரான்.

 

பரகுரு ஆம் கற்பனையொடு --- மேலான குருநாதர் என்னும் பாவனையில்.

 

பாண் --- பாட்டு. புகழ்ச்சொல்.

 

திருப் பாண்டிக்கொடுமுடி என்னும் திருத்தலம்ஈரோட்டில் இருந்து சுமார் 40கி.மீ. தொலைவு. கரூரிலிருந்து வடமேற்கே சுமார் 26கி.மி. தொலைவு. கொடுமுடி இரயில் நிலயம்,திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. இரயில் நிலயம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் ஆலயம் உள்ளது.

 

இறைவன்    ---   கொடுமுடிநாதர்மகுடேசுவரசுவாமி,  மலைக்கொழுந்தீசர்.                                                                     

இறைவி     ---   வடிவுடைநாயகிசௌடாம்பிகை,  பண்மொழிநாயகி,                                                                                         

தல மரம்     ---   வன்னி

தீர்த்தம்       --- காவிரிபிரமதீர்த்தம்தேவதீர்த்தம்

 

திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரர் ஆகிய தேவார மூவரால் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளபெ பெற்றது.

 

ஒருமுறை ஆதிசேடனுக்கும்வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் பூசல் ஏற்பட்டது. இந்திரன் விதித்த போட்டி விதிமுறைகளின்படி,ஆதிசேடன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும்வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேருமலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழஒவ்வொன்றும் ஒரு தலமானது.

 

சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும்மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் இரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி)மரகதமணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும்நீலமணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும்வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமணி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடித் தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேசுவரர் என்றும்தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.

 

வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி திருத்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோயில் அமைந்துள்ளது. 

 

குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைப்புள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும். 

 

இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் 2000ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது. இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும்மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரம் பூப்பதில்லைகாய்ப்பதில்லை என்பது சிறப்பு. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத் தான் அன்பர்கள் பாதயாத்திரையாகக் கொண்டு செல்கிறார்கள்.

 

பிரம்மாவின் சந்நிதிக்கு  வடமேற்கில் பெருமாள் சந்நிதி  உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் சந்நிதிக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும்,ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. பிரம்மாவும்பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

 

 காவிரி நதிவன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம்பாரத்வாஜ தீர்த்தம்மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும். காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடிஇறைவனையும்மகாவிஷ்ணுவையும் வழிபட பிணிகளும்பேய்பிசாசுபில்லி சூன்யம் போன்ற் குற்றங்களும்மனநோயும் நீங்கும்.

 

மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும்மண்டபங்களும் கட்டிமேலும் பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் உறவை விட்டுஉனது உறவைப் பற்ற அருள்.

 

 

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...