பட்டாலியூர் --- 0947. இருகுழை இடறி


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

இருகுழை இடறி (பட்டாலியூர்)

 

முருகா! 

விலைமாதர் மயக்கில் ஆழாமல் காத்து

உனது திருவடி நிழலில் சேர்த்து அருள்.

 

 

தனதன தனனத் தான தானன

     தனதன தனனத் தான தானன

          தனதன தனனத் தான தானன ...... தனதான

 

 

இருகுழை யிடறிக் காது மோதுவ

     பரிமள நளினத் தோடு சீறுவ

          இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர

 

எமபடர் படைகெட் டோட நாடுவ

     அமுதுடன் விடமொத் தாளை யீருவ

          ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும்

 

உருகிட விரகிற் பார்வை மேவுவ

     பொருளது திருடற் காசை கூறுவ

          யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல்

 

உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்

     மயல்தரு கமரிற் போய்வி ழாவகை

          உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே

 

முருகவிழ் தொடையைச் சூடி நாடிய

     மரகத கிரணப் பீலி மாமயில்

          முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே

 

முரண்முடி யிரணச் சூலி மாலினி

     சரணெனு மவர்பற் றான சாதகி

          முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம்

 

பருகினர் பரமப் போக மோகினி

     அரகர வெனும்வித் தாரி யாமளி

          பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும்

 

பறையறை சுடலைக் கோயில் நாயகி

     இறையொடு மிடமிட் டாடு காரணி

          பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

இருகுழை இடறி,காது மோதுவ,

     பரிமள நளினத்தோடு சீறுவ,

          இணைஅறு வினையைத் தாவி மீளுவ,...... அதிசூர

 

எமபடர் படை கெட்டு ஓட நாடுவ,

     அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ,

          ரதிபதி கலை தப்பாது சூழுவ,...... முநிவோரும்

 

உருகிட விரகில் பார்வை மேவுவ,

     பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ,

          யுகமுடிவு இது எனப் பூசல் ஆடுவ,......வடிவேல்போல்

 

உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்,

     மயல்தரு கமரில் போய் விழா வகை,

          உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ...... ஒருநாளே?

 

முருகு அவிழ் தொடையைச் சூடி,நாடிய

     மரகத கிரணப் பீலி மாமயில்,

          முதுரவி கிரணச் சோதி போல்வய- ....லியில்வாழ்வே!

 

முரண்முடி இரணச் சூலி,மாலினி,

     சரண் எனும் அவர் பற்று ஆன சாதகி,

          முடுகிய கடினத் தாளி,வாகினி,...... மதுபானம்

 

பருகினர் பரமப் போக மோகினி,

     அரகர எனும் வித்தாரி,யாமளி,

          பரிபுர சரணக் காளி,கூளிகள் ...... நடமாடும்

 

பறைஅறை சுடலைக் கோயில் நாயகி,

     இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி,

          பயிரவி அருள் பட்டாலியூர் வரு ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

            முருகு அவிழ் தொடையைச் சூடி நாடிய மரகத கிரணப் பீலி மாமயில்--- நறுமணம் கமழும் மாலையை அணிந்துஉனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல்

 

            முது ரவி கிரணச் சோதி போல் வயலியில் வாழ்வே--- முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமே

 

            முரண்முடி இரணச் சூலி மாலினி--- வலிமை வாய்ந்த முடியை உடைய,போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள்மாலையை அணிந்தவள்

 

            சரண் எனும் அவர் பற்றான சாதகி--- அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள்,

 

            முடுகிய கடினத்து ஆளி வாகினி --- வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள்

 

            மதுபானம் பருகினர் பரம போக மோகினி--- கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி

 

            அரகர எனும் வித்தாரி யாமளி--- அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள்சியாமளப் பச்சை நிறத்தை உடையவள்

 

            பரிபுர சரண காளி --- சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி,

 

            கூளிகள் நடமாடும்--- பேய்கள் நடனமாடுவதும்,

 

            பறை அறை சுடலைக் கோயில் நாயகி--- பறைகள் ஒலிப்பதுமானசுடுகாட்டுக் கோயிலின் தலைவி

 

            இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி--- சிவபெருமானோடுஅவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டேகாரணமாக நடனம் செய்பவள்

 

            பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே--- அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவரும்பட்டாலியூரில் வீற்றிருப்பவருமானபெருமையில் மிக்கவரே!.

 

            இரு குழை இடறிக் காது மோதுவ--- காதுகளில் உள்ள இரண்டு குண்டலங்களையும் சீறி மோதுவனவும்;

 

            பரிமள நளினத்தோடு சீறுவ--- மணம் மிகுந்த தாமரை மலர்களோடு (எங்களுக்கு நீ உவமையா என்று) சீறிக் கோபிப்பனவும்; 

 

            இணை அறு வினையைத் தாவி மீளுவ--- (பயன் தருவதில்) நிகர் இல்லாத முந்தை வினைகளை விட வேகமாகத் தாவி மீள்வனவும்;

 

            அதி சூர எமபடர் படை கெட்டு ஓட நாடுவ--- மிக்க சூரத் தனம் உடைய இயமனுடைய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவனவும்;

 

            அமுது உடன் விடம் ஒத்து ஆளை ஈருவ--- அமுதமும் வடமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவனவும்;

 

            ரதிபதி கலை தப்பாது சூழுவ--- இரதிதேவியின் கணவனான மன்மதனுடைய காம சாத்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வனவும்;

 

            முநிவோரும் உருகிட விரகில் பார்வை மேவுவ--- முனிவர்களும் காமத்தால் உருகும்படியாகதந்திரத்துடன் கூடிய பார்வையை உடையனவும்;

 

            பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ--- பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவனவும்;

 

            யுக முடிவு இது எனப் பூசல் ஆடுவ--- யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பனவும்;

 

            வடிவேல் போல் உயிர் வதை நயனக் காதல் மாதர்கள்--- கூர்மையான வேலாயுதத்தைப் போல உயிரை வதைப்பனவும் ஆகிய கண்களை உடைய ஆசை மாதர்களின் 

 

            மயல் தரு கமரில் போய் விழா வகை --- காம மயக்கத்தைத் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு,

 

            உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே--- உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை ஒரு நாள் கிடைக்குமோ

 

பொழிப்புரை

 

     நறுமணம் கமழும் மாலையை அணிந்துஉனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல்முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமே!

 

            வலிமை வாய்ந்த முடியை உடையபோர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள்மாலையை அணிந்தவள்அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள்வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள் கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள்சியாமளப் பச்சை நிறத்தை உடையவள்சிலம்பு அணிந்த கால்களை உடைய காளிபேய்கள் நடனமாடுவதும்பறைகள் ஒலிப்பதுமானசுடுகாட்டுக் கோயிலின் தலைவி சிவபெருமானோடுஅவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டேகாரணமாக நடனம் செய்பவள்அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவரும்பட்டாலியூரில் வீற்றிருப்பவருமானபெருமையில் மிக்கவரே!.

 

            காதுகளில் உள்ள இரண்டு குண்டலங்களையும் சீறி மோதுவனவும்மணம் மிகுந்த தாமரை மலர்களோடு (எங்களுக்கு நீ உவமையா என்று) சீறிக் கோபிப்பனவும்;பயன் தருவதில் நிகர் இல்லாத முந்தை வினைகளை விட வேகமாகத் தாவி மீள்வனவும்மிக்க சூரத் தனம் உடைய இயமனுடைய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவனவும்;அமுதமும் விடமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவனவும்;இரதிதேவியின் கணவனான மன்மதனுடைய காம சாத்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வனவும்; முனிவர்களும் காமத்தால் உருகும்படியாகதந்திரத்துடன் கூடிய பார்வையை உடையனவும்பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவனவும்;யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பனவும்;கூர்மையான வேலாயுதத்தைப் போல உயிரை வதைப்பனவும் ஆகிய கண்களை உடைய ஆசை மாதர்களின் காம மயக்கத்தைத் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டுஉனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை ஒரு நாள் கிடைக்குமோ?

 

விரிவுரை

 

     இத் திருப்புகழின் முற்பகுதியில் பொருளை நாடும் விலைமாதர்களின் கண்களை சுவாமிகள் வருணனை செய்துஅவற்றின் கொடுமையைக் காட்டி அருளினார்.

 

அருளை நாடும்அருட்பெண்டிரின் கண்களைப் பற்றி மணிவாசகப் பெருமான்திருக்கோவையாரில்......

 

ஈசற்கு யான் வைத்த அன்பின்

    அகன்றுவன் வாங்கிய என்

பாசத்தில் கார்என்றுவன்தில்லை

    யின்ஒளி போன்றுவன்தோள்

பூசு அத் திருநீறு எனவெளுத்து

    ஆங்கு அவன் பூங்கழல்யாம்

பேசுஅத் திருவார்த்தையில் பெரு

    நீளம் பெருங்கண்களே.

 

என்று தலைவியின் கண்களைத் தலைவன் வியந்து உரைத்ததாகப் பாடி உள்ளார்.

 

தலைவியின் கண்கள் தான் சிவபெருமான் மீது வைத்துள்ள அன்பினைப் போல அகன்று இருந்தது. இறைவனால் என்னிடத்தில் இருந்து (அடியவர்களிடம் இருந்து) வாங்கப் பெற்ற ஆணவ இருளைப் போல கருநிறம் உடையதாய் இருந்தது. அவனுடைய தில்லையைப் போல ஒளி பொருந்தியதாக இருந்தது. அவனுடைய திருத்தோள்களில் பூசப் பெற்ற திருநீற்றைப் போல வெளுத்து இருந்ததது. அவனுடைய திருவடித் தாமரைகளின் சிறப்பைப் புகழ்ந்து நான் பேசுகின்ற திருவார்த்தைகளைப் போல நீண்டு இருந்தது.

 

 

இரு குழை இடறிக் காது மோதுவ--- 

 

கண்களாகிய மீன்கள்காதுகளில் உள்ள மகரக் குழையை மீனாக எண்ணி,அவற்றோடு போரிடுகின்றன. தன் இனமாக இருந்தாலும்வாழவிடாமல் போர் புரியும் தன்மையை இது காட்டியது.

 

பரிமள நளினத்தோடு சீறுவ--- 

 

பரிமளம் --- நறுமணம்.

 

நளினம் --- தாமரை.

 

பெண்களின் கண்களைத் தாமரைக்கு ஒப்பாகச் சொல்வர். என்னைப் போன்ற அழகு உனக்கு உள்ளதாஎன்று தாமரை மலரைப் பார்த்துவிலைமாதரின் கண்கள் சீறுகின்றன.

 

இணை அறு வினையைத் தாவி மீளுவ--- 

 

வினையானதுசெய்தவனை நாடி எங்கும் சென்று பயன் தரக் கூடியது. பயன் தருவதில் தவறாது. ஒரு காலத்தில் செய்த வினைமறுகாலத்தில் பயனைத் தரும். ஓரிடத்தில் செய்த வினைமற்றோரிடத்தில் வந்து பயனைத் தரும். எனவேஇணை அறு வினை என்றார் அடிகளார். விலைமாதரின் கண்கள்வினையை விடவும் வேகமாக இங்கும் அங்குமாகத் தாவுகின்றன. வினைசெய்தவனை நாடும். விலைமாதரின் கண்கள் பொருள் உள்ளவரை நாடும்.

 

 

அதி சூர எமபடர் படை கெட்டு ஓட நாடுவ--- 

 

யமபடர் உயிர்க்கு அச்சத்தை விளைவித்து,உடம்பில் இருந்து உயிரைப் பிரித்துச் செல்வர்.

 

விலைமாதரின் கண்கள்காமுகர்க்கு அச்சத்தை விளைவித்து,உடம்பையும் வதைத்து,உயிரையும் வதைப்பவை.

 

அதனால்விலைமாதரின் கண்கள்எமனது படைக்குத் தோற்றுப் போவன என்றார்.

 

அமுது உடன் விடம் ஒத்து ஆளை ஈருவ--- 

 

அமுதம் --- உண்டாரைக் காக்கும். இனிமை தரும்.

 

விடம் --- உண்டாரைக் கொல்லும். 

 

விலைமாதரின் கண்கள்காமவயப்பட்டோரைக் கொல்லுகின்ற விடம் போன்றன.

பொருள் கொடுத்துச் சேர்ந்தோரைகாம இன்பத்தில் திளைக்கச் செய்து மகிழ்விப்பன.

 எனவேவிலைமாதரின் கண்கள் அமுதம் போலவும்விடம் போலவும் இருந்தன என்கின்றார்.

 

ரதிபதி கலை தப்பாது சூழுவ--- 

 

இரதிபதி --- இரத்தேவியின் பதி ஆகிய காமன். அவனது கலைக்குகாமக் கலை என்று பெயர். 

 

காமக் கலைக்குத் தப்பியவர் யாரும் இல்லை. அது யாரையும் தப்பாது சூழவல்லது.

 

முநிவோரும் உருகிட விரகில் பார்வை மேவுவ---

 

விரகு --- உபாயம். தந்திரம்.

 

விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும்சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள்.

 

பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால்அதற்கு ஒரே வழிஇறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

 

"துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.

 

உலகப் பற்றுக்களை நீத்துஇறைவனது திருவடியைச் சாரபெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்திஅவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறுபொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

 

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனேதுறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்துபதைக்கப் பதைக்க வதைக்கும்  கண்ணார்க்கு                                                                                                                                  

இளைத்து,தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து  இரட்சிப்பையே?                                                                        

                                                                                                    ---  கந்தர் அலங்காரம்.

 

வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச்  செவ்வாய்கரிய                                                          

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான்இன்றுபோய்

வானுளான் காணாய்நீ மாளா வாழ்கின்றாயே.                        ---  திருவாசகம்.

 

அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி,பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு,...... அலர்வேளின்

 

சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவேபொன் பாதம் எனக்குத் ......தருவாயே.   --- திருப்புகழ். 

 

மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள்,......முநிவோரும்  

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்'என் முழுப் புரட்டிகள்,...... வெகுமோகம்

 

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள்,...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர்,...... உறவுஆமோ?         --- திருப்புகழ்.

 

பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டுஎன்னை

கண்ணால் வெருட்டிமுலையால் மயக்கிகடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளிஎன் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே!

 

சீறும் வினை அது பெண் உருவாகிதிரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகிகொடுமையினால்,

பீறு மலமும்உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன்இறைவா! கச்சி ஏகம்பனே!       --- பட்டினத்தார்.

 

பால்என்பது மொழிபஞ்சு என்பது பதம்பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீசெந்திலோன் திருக்கை

வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலைவெட்சித்தண்டைக்

கால் என்கிலைநெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே ---  கந்தர் அலங்காரம்.

 

மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.           --- பட்டினத்தார்.

 

மாதர் யமனாம்அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம்- ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.                                     ---திருப்போரூர்ச் சந்நிதி முறை. 

                                        

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

 

ஆனால்,இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது. திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான்அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

 

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.                   ---  பெரியபுராணம்.

 

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலைபோமின்” என்று அருளிச் செய்தார். 

 

பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ--- 

 

அருளைக் கருதாது பொருளைக் கருதுவதால்பொருட்பெண்டிர் எனப் பெயர் வந்தது. பொருளைக் களவினால் கொள்வது அவர் கருத்து ஆகும்.

 

தம்பால் வந்து மருவியுள்ள ஆடவர்களது பணம் காலி ஆனவுடன்அவர்களை முடுக்கி ஓட்டுவர். பின் வந்தவர்களிடம் மிகவும் அன்புடன் பழகி, “உம்மை என் உயிர் பிரிகின்ற வரை பிரியமாட்டேன். இது சத்தியம்” என்றெல்லாம் கூறிஅவர்கள் பால் உள்ள செல்வம் முழுவதும் பறித்துக் கொண்டுஅவர்களையும் அகற்றி பின்னே எவன் வருவான் என்று எதிர்பார்த்து நிற்பர்.

 

களபம் ஒழுகிய புளகித முலையினர்,

     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்,

     கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர்,...... எவரோடும்

 

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்,

     பொருளில் இளைஞரை வழிகொடு,மொழிகொடு,

     தளர விடுபவர்,தெருவினில் எவரையும் ...... நகையாடி,

 

பிளவு பெறில்அதில் அளவுஅளவு ஒழுகியர்,

     நடையில் உடையினில் அழகொடு திரிபவர்,

     பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு,......  குழைவோடே,                                              

 

பிணமும் அணைபவர்,வெறிதரு புனல்உணும்

     அவச வனிதையர்,முடுகொடும் அணைபவர்,

     பெருமை உடையவர்,உறவினை விட,அருள் ...... புரிவாயே. --- திருப்புகழ்.

                                        

 

உயிர்க்கூடு விடும் அளவும் உமைக் கூடி மருவு தொழில்

     ஒருக்காலும் நெகிழ்வது இலை ...... எனவேசூள்

உரைத்தே,முன் மருவினரை வெறுத்தும திரவியம்

     அது உடைத்தாய் பின் வருகும் அவர் ......எதிரேபோய்ப்

 

பயில் பேசிரவுபகல் அவர்க்கான பதமை பல

     படப்பேசி,உறுபொருள் கொள் ...... விலைமாதர்,..  --- திருப்புகழ்.

                              

படுக்கை வீட்டின் உள் அவுஷதம் உதவுவர்,

     அணைப்பர்,கார்த்திகை வருது என உறுபொருள்

     பறிப்பர்,மாத்தையில் ஒருவிசை வருக என,...... அவரவர்க்கு உறவாயே

                                    

அழைப்பர்ஸ்திகள் கருதுவர்ருவரை

     முடுக்கி ஓட்டுவர்ழிகுடி அரிவையர்,

     அலட்டினால் பிணை எருது என,மயல் எனும்...... நரகினில் சுழல்வேனோ?

                                                                            --- திருப்புகழ்.

 

சிந்துர கூர மருப்புச் செஞ்சரி

     செங்கை குலாவ நடித்துத்,தென்பு உற

     செண்பக மாலை முடித்து,பண்புஉள ...... தெருஊடே

சிந்துகள் பாடி முழக்கி,செங்கயல்

     அம்புகள் போல விழித்து,சிங்கியில்

     செம்பவள ஆடை துலக்கிப் பொன் பறி ......விலைமாதர்,

 

வந்தவர் ஆர் என அழைத்து,கொங்கையை

     அன்புற மூடிநெகிழ்த்தி,கண்பட

     மஞ்சள் நிர் ஆடி மினுக்கி,பஞ்சணை ...... தனில்ஏறி

மந்திர மோகம் எழுப்பிக் கெஞ்சிட,

     முன்தலை வாயில் அடைத்துச் சிங்கிகொள்,

      மங்கையர் ஆசை விலக்கிப் பொன்பதம்....அருள்வாயே. --- திருப்புகழ்.

                                         

 

யுக முடிவு இது எனப் பூசல் ஆடுவ--- 

 

பிரளய காலம் வந்ததோ என மனம் வேதனைப்படும்படி காமுகர் மனத்தில் விசனத்தை விளைவிப்பவர் விலைமாதர்.

            

மயல் தரு கமரில் போய் விழா வகை --- 

 

கமர் --- நிலவெடிப்பு. பள்ளம்.

 

நிலவெடிப்பில் விழுந்தவர்கள் கரை ஏற வழி உண்டு. கரையேற்றுவாரும் உண்டு. 

 

விலைமாதர் மயல் என்னும்  பெரும்பள்ளத்தில் விழுந்தவர்கள் கரை ஏறுவது மிகவும் அரிது. எனவேஅந்தப் பள்ளத்தில் விழாதவகை முருகப் பெருமான் திருவருளை வேண்டுகின்றார்.

 

மாதர் யமனாம்அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநரகம்--- ஓத அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லைபோரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.          --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை      

                             

பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டுஎன்னை

கண்ணால் வெருட்டிமுலையால் மயக்கிகடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளிஎன் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே!

 

சீறும் வினை அது பெண் உருவாகிதிரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகிகொடுமையினால்,

பீறு மலமும்உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன்இறைவா! கச்சி ஏகம்பனே!    --- பட்டினத்தார்.

 

முடுகிய கடினத்து ஆளி வாகினி --- 

 

ஆளி வாகினி --- சிங்க வாகனத்தை உடையவள்.

 

மதுபானம் பருகினர் பரம போக மோகினி--- 

 

வாம மார்க்கத்தில் இருந்து தேவியை வழிபடுபவர்கள் கள் உண்பது வழக்கம்.

 

அரகர எனும் வித்தாரி யாமளி--- அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள்

 

யாமளி --- பச்சை நிறத்தை உடையவள்.

            

கூளிகள் நடமாடும் பறை அறை சுடலைக் கோயில் நாயகி--- 

 

பேய்கள் நடனமாடுவதும்பறைகள் ஒலிப்பதுமானசுடுகாட்டுக் கோயிலின் தலைவிஉமாதேவியார் என்பது,

 

நேரியன் ஆகும் அல்லன்;ஒருபாலும் மேனி

            அரியான்முன் ஆய ஒளியான்;

நீர்இயல் காலும்ஆகி,நிறைவானும் ஆகி,

            உறுதீயும் ஆய நிமலன்;

ஊர்இயல் பிச்சைபேணி உலகங்கள் ஏத்த

            நல்க உண்டு,பண்டு சுடலை

நாரியொர் பாகம்ஆக நடமாட வல்ல

            நறையூரின் நம்பன் அவனே.

 

என்னும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில், "சுடலை நாரி ஓர் பாகமாக நடமாட வல்ல நம்பன்" என்பதால் தெரியவரும்.

 

பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே--- 

 

காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி. மீ. தொலைவில் உள்ளது. பட்டாலியூர் என்றும் அழைக்கப்படும். முருகப்பெருமான் வள்ளி நாயகியுடன் சிவாசலபதி என்ற பெயருடன் காட்சி தருகின்றார். இச்சந்நிதியின் இடப்பாகத்தில் வள்ளியும்தெய்வானையும் உள்ள சந்நிதி உள்ளது. சிவன் மலை சிறிய குன்று. மலையில் ஏறுவதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. தல விருட்சம் கொட்டி மரம். பதினெட்டு சித்தர்களில் ஒருவராகிய சிவவாக்கியர் தவம் புரிந்த தலம்.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் மயக்கில் ஆழாமல் காத்து, உனது திருவடி நிழலில் சேர்த்து அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...