விருப்பும் வெறுப்பும் வேண்டா. தொண்டு செய் - துயர் தீரும்.

 


விருப்பும் வெறுப்பும் வேண்டா.

தொண்டு செய் - துயர் தீரும்.


-----

வேண்டா விருப்பும் வெறுப்பும் - அந்த

     வில்லங்கத் தாலே விளையும் சனனம்,

ஆண்டான் உரைத்த படியே,- சற்றும்

     அசையாது இருந்துகொள் அறிவாகி நெஞ்சே! 

 

இது தாயுமானார் பாடியருளிய ஆனந்தக் களிப்பு என்னும் பகுதியில் வரும் ஒரு பாடல்...

 

இதன் பொருள் ---

 

     மனமே! விருப்பும் வெறுப்பும் கொள்ளதே. அவை உன்னை ஒரு கட்டுக்குள் கொண்டு செலுத்திவிடும். அந்தப் பிணிப்பினாலேமீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கின்றது. அதனால் விருப்பு வெறுப்பை விட்டு,குருநாதனாகி எழுந்தருளி வந்த ஞானாசாரியன் உனக்கு அறிவித்ததை உணர்ந்துசற்றும் சோர்வு கொள்ளாமல்அறிவு மயமாகஅசையாது இருந்துவிடு.

 

     ஆசையே பிறவிக்கு வித்து. அந்த ஆசை காரணமாககாணுகின்றஅனுபவிக்கின்றபுழக்கத்தில் உள்ள எந்த ஒரு பொருளின் மீதும் உயிர்களுக்கு விருப்பு அல்லது வெறுப்பு உண்டாகின்றது. பொருளின் இயல்பை அறிந்தும்,அறியாமலும் கூட இந்த விருப்பும் வெறுப்பும் விளையும். இதனை ராகத் துவேஷம் என்பர் வடநூலார்.

 

     ஒருவர் விரும்புகின்ற பொருளை மற்றவர் விரும்புவது இல்லை. அதுபோலவேஒருவர் வெறுப்புக் கொள்ளுகின்ற ஒரு பொருளின் மீதுஇன்னொருவர்க்கு விருப்பு உண்டாகின்றது. இந்த விருப்பு வெறுப்பு ஆகியவற்றிற்குக் காரணம் என்ன என்பதை அறிதல் மிகவும் கடினம். எந்த ஒரு காரணமும் இல்லாமலேயேஒரு பொருளின் மீது விருப்புக் கொள்வதும்வெறுப்புக் கொளவதும் உயிரின் இயல்பு. இதனை, "வேண்டுதல் வேண்டாமை" என்றார் திருவள்ளுவ நாயனார். இது உள்ளவரையில் உயிர்க்குதுன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

     ஒரு பொருளின் மீது விருப்பு உண்டாகும்போதுஅது தனக்கு வேண்டும் என்னும் எண்ணம் தோன்றும். அதனை அடைய முயற்சிகள் உண்டாகும். முயற்சி பலிக்காதபோது,கோபம் தோன்றும். அது வளர வளர,அறிவு மழுங்கிவிடும். "ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு". ஆத்திரம் வந்த பிறகுசெய்யத் தகுவதுசெய்யத் தகாதது என்று வேறுபாட்டு உணர்ச்சி இல்லாமல் போகும். அதன் பிறகு செய்யும் செயல்கள் எல்லாம் பெரும் தீங்கை விளைப்பதாகவே அமையும். இத்தனைக்கும் மூலமாய் இருப்பது "வேண்டும்" என்னும் ஆசை அல்லது விருப்பு தான்.

 

     இதற்கு எதிராக உள்ள "வேண்டாமை" அல்லது "வெறுப்பு" என்பதும் சிக்கலானதாகவே உள்ளது. ஒரு பொருள் தனக்கு வேண்டாம் என்று நினைக்கலாம். ஆனால்அது வந்து எப்படியோ தன்னிடத்தில் பொருந்தி விடும். இந்த நிலையில், "வேண்டுதல்" என்னும் விருப்பு உள்ளபோது நடைபெறுகின்ற வில்லங்கங்கள் அனைத்தும்வேண்டாமையிலும் நடைபெறும்.

 

     விருப்புவெறுப்பு காரணமாகவினைகள் விளைகின்றன. வினைகள் காரணமாக பிறப்பு உண்டாகின்றது. பிறப்பு உண்டானால் இறப்பும் உண்டு. சங்கிலித் தொடர் போலஇவை யாவும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பொருளை விரும்புவதால்,அது நிலைக்காமல் போய்விடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. வெறுப்புக் கொள்வதால்அது நம்மிடம் வந்து சேர்ந்துவிடக் கூடாதே என்னும் அச்சம் உண்டாகின்றது. இந்த அச்சமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது. 

 

     பிறவித் துன்பங்கள் ஆவன --- தன்னைப் பற்றி வருவனவும்பிற உயிர்களைப் பற்றி வருவனவும்தெய்வத்தைப் பற்றி வருவனவும் ஆகிய மூவகைத் துன்பங்கள். 

 

     விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவன் திருவடியைச் சேர்தலால்விருப்புவெறுப்புக் காரணமாக வருகின்ற மூவகைத் துன்பங்களும் இல்லை என்று ஆகும்.

 

     வேண்டுதல் --- பற்றாலும்ஆசையாலும்பாசத்தாலும் ஒன்றின் மீது விருப்பம் கொள்ளுதல்.

 

     வேண்டாமை --- வெறுப்பாலும்பொருந்தாமையாலும்பகைமையாலும் ஒன்றை விரும்பாமை.

 

     நெருப்பைப் புகை மூடியிருப்பது போலவும்கண்ணாடியை அழுக்கு மறைத்திருப்பது போலவும்கருவை கருப்பை மூடியிருப்பது போலவும்,ஆசையானதுஉண்மை அறிவை விளங்கவொட்டாமல் மறைத்திருக்கிறது. உயிருக்கு உள்ள மயக்க அறிவு காரணமாகஒன்றை விரும்புதலும்ஒன்றை வெறுத்தலும்அவற்றால் விளையும் இன்பத் துன்பங்களும் மாறி மாறி வருகின்றன. ஒரு காலத்தில் விருப்புக் கொண்டதால் இன்பமாய்த் தோன்றிய ஒன்றுபிற்காலத்தில் துன்பம் தருவதாக அமைந்தால்வெறுப்பு வருகின்றது.

 

     இந்த ஆசையும்அதனால் வினையின் விளைவும்,அதன் காரணமாக விருப்பு வெறுப்புக் கொள்வதும்அதனால் உண்டாகும் பிறப்பு இறப்புத் துன்பங்களும் நம்மைப் பற்றாமல் இருக்கவேண்டுமானால்அவற்றால் வரும் துன்பங்களை இல்லாமல் போக வேண்டுமானால்ஆசையை அடக்க வேண்டும். எது விதிக்கப்பட்டதோஅதன்படி நடந்துகொள்ளவேண்டும். அப்போது விருப்பு வெறுப்புத் தோன்றாது. பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். தொந்தம் துவந்தம் இரட்டைகள் என்னும்,விருப்பு - வெறுப்பு,சுகம் - துக்கம் ஆகியவற்றில் இருந்து விடுபடவேண்டும்.

 

     ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையை உடையது. ஏதாவது ஒன்றைச் சார்ந்து தான் அது இயங்கும். விரும்புதலும் இல்லை என்னும் நிலை வந்துவிட வேண்டும். ஆனால்இது மிகவும் அரியதே. வேண்டாமை என்னும் நிலை வந்தால்,வேண்டுதல் என்னும் நிலை வந்து நிற்கும். இரண்டில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் வாழ்க்கை நடக்கும். அந்த இரண்டிலும் பற்றை ஒழித்து வாழவேண்டும் என்றால்இந்த இரண்டும் இல்லாத ஒருவரின் துணை வேண்டும். அந்த ஒருவன்தான் இறைவன் என்றார் திருவள்ளுவ நாயனார். அவனைப் பற்றிக் கொண்டுவிட்டால்துன்பங்கள் இல்லையாகும் என்று காட்ட,

 

"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல"

 

என்று அருளினார்.

 

     "அடி சேர்ந்தார்" என்பதற்குதிருவடியை அடையும் நோக்கத்துடன்எக்காலத்தும் திருவடியையே சிந்தித்தல் என்று பரிமேலழகர் காட்டியது சிந்தனைக்கு உரியது.

 

     எந்த மனத்தில் ஆசை உண்டானதோஅந்த மனத்தில் ஆசை அடங்கவேண்டும். எந்த மனத்தில் விருப்பும் வெறுப்பும் உண்டானதோஅந்த மனத்தில் விருப்பும் வெறுப்பும் இல்லாத சமநிலை உண்டாகவேண்டும். அதற்கு இறைவன் திருவடியே பற்றுக்கோடு.

 

சிந்தை பிறந்ததும் ஆங்கே,- அந்தச்

     சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே,

எந்த நிலைகளும் ஆங்கே - கண்ட

     யான்தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே.

 

என்கின்றார் தாயுமானார். 

 

இதன் பொருள் ---

 

     எவ்விடத்தில் இருந்து மனம் தோன்றியதோஅங்கேயே அம் மனம் ஒடுங்கி விடுகின்றது. எல்லா நிலைகளும் அங்கே உள்ளன. அங்கேயே எனது அறிவும் தெளிவு அடைந்தது. அங்கேயே அடியேன் இறைவன் திருவடியில்,இரண்டறக்கலந்து மெய்யின்பத்தையும் பெற்றேன்.

 

     இரண்டற்ற நிலை வாய்க்கவேண்டுமானால்எதையும் அறிவுக் கண் கொண்டு பார்ப்பதை விட்டுவிட வேண்டும். நம்முடைய அறிவு சிற்றறிவு. நமது அறிவு நிலைக்கு ஏற்பவே எந்தப் பொருளையும் பார்ப்போம். "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்அப் பொருள்மெய்ப்பொருள் காணுகின்ற அறிவு" நமக்கு இல்லை. எனவேநமது அறிவு நிலைஎன்னும் தற்போத நிலையில் இருந்து விடுபடவேண்டும். நமது அறிவு செத்துப் பொகவேண்டும். திருவாசகத்தில், "செத்திலாப்பத்து" அறிவுறுத்துவது இதைத்தான்.

 

     நமது கண்ணுக்கு ஒரு பொருள் தெரியவில்லைதெளிவாகத் தெரியவில்லை என்றால்கைவிளக்கு ஒன்றை ஏற்றி வைத்து,அதை முன்னே பிடித்துபின்னே இருந்து பொருளைக் காண்கின்றோம். அதுபோலவேநமது அறிவால் தெளிய முடியாத போதுதிருவருள் அல்லது குருவருள் என்னும் விளக்கைக் கொண்டு காணவேண்டும். திருவருள் அல்லது குருவருளின் துணைக் கொண்டுஎதையும் காணுகின்ற பக்குவம் வந்துவிடவேண்டும்.

 

அருளால் எவையும்பார் என்றான். - அத்தை

     அறியாதே,சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்,

இருளான பொருள்கண்டது அல்லால் - கண்ட

     என்னையும் கண்டிலன் என்னேடி தோழி.

 

என்று தாயுமானார் அறிவுறுத்துகின்றார். 

 

இதன் பொருள் ---

 

     தோழியே! திருவருளை முன்னிட்டு எப் பொருளையும் பார்ப்பாயாக என்று குருநாதன் திருவாய் மலர்ந்தருளினார். அதன் உண்மையினை உணராமலேஎளியேன் சுட்டறிவாகிய எனது அறிவினாலே எதையும் பார்க்கலானேன். அவ்வாறு பார்த்தபோதுஇருளானதும்துன்பத்திற்கு இடமானதும் ஆகியஉலகியல் காரியப் பொருள்களைக் கண்டேனே அல்லாமல்,அவற்றைப் பார்த்த என்னையும் நான் காணவில்லை. இது என்ன புதுமையாக உள்ளதே.

 

     விருப்புவெறுப்பு அற்ற இன்பநிலை வேண்டுமானால் விருப்பு வெறுப்பு அற்ற, "வேண்டுதல் வேண்டாமை இல்லாத" ஒரு பொருளை நாடவேண்டும். நாடிவிட்டால்இன்பம் உண்டாகுமா?இல்லை. நாம் பிறவிகள்தோறும் ஈட்டிய வினைகள் தொலையவேண்டும். பிராரத்தம் தொலையவேண்டும்.

 

பண்டு செய்த பழவினையின் பயன்

கண்டும் கண்டும்,களித்திகாண் நெஞ்சமே!

வண்டு உலாமலர்ச் செஞ்சடை ஏகம்பன்

தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே.

 

என்று வழிகாட்டுகின்றார் அப்பர் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சமே! நீ முற்பிறவிகளில் செய்த பழவினைகள் ஆகிய சஞ்சிதம்அதன்பயனாகிய பிராரத்தம் ஆகிய வினைகளின் பயனை அனுபவத்தால் கண்டு வைத்து இருந்தும்இன்னும் மகிழ்ந்து இருக்கலாம் என்று எண்ணுகின்றாய். ஆனாலும்துன்பங்கள் உன்னை விட்டு அகன்றபாடு இல்லை. வண்டுகள் உலாவுகின்ற மலர்களை அணிந்த செஞ்சடை உடையவன் ஆகிய திருஏகம்பநானுக்குத் தொண்டன் ஆகித் தொண்டுகள் புரிந்து வந்தால்உனது துயரங்கள் தீரும்.

 

     பழவினையின் பயன் --- பழவினையாகிய சஞ்சிதத்தின் பயனாகிய பிராரத்தம். அதன் காரணமாக வரும் பிறப்பு.

 

     தொண்டு செய்வதில்ஆசைக்கோவிருப்பு வெறுப்புகளுக்கோ இடமில்லை. பலனை எதிர்பாராமல்எல்லா உயிர்க்கும் இன்பம் விளையும் செயல்களைச் செய்து வருவதே தொண்டு நிலை. தொண்டு செய்யப் புகுந்துவிட்டால்அது எக்காலத்தும் தொடரவேண்டும். என்னால் முடிந்தபோது செய்வேன்முடியாத போது ஒதுங்கி இருப்பேன் என்பதெல்லாம் தொண்டு ஆகாது. உடலையும் உயிரையும் ஒரு பொருட்டாகக் கருதாது,இயன்றபோது இவ்விரண்டையும் அர்ப்பணித்துபிற உயிர்களுக்குத் தொண்டு செய்வதே திருத்தொண்டு ஆகும். 

 

     கருத்தால் செய்வதுகரத்தால் செய்வது எனத் தொண்டு இருவகைப்படும். பிறர் நன்மையைக் கருத்தில் கொண்டு அவர் கேட்டும் கேட்காமலும்,அவருக்கத் தெரிந்தும் தெரியாமலும் உடல்கொண்டு உழைத்து உதவினால் அது கைத்தொண்டு எனப் போற்றப்படும். இத்தகையை தொண்டு புரிபவர்களுக்கு இறைவன் தானே முன்வந்து உதவி செய்கிறான்.

 

     இதைத் தான் நமது நாயன்மார்களும்ஆழ்வார்களும்பிற அருளாளர்களும்,அக்காலத்தில் செய்து நமக்கு வழிகாட்டினார்கள். அவர்கள் காட்டிய வழியிலே தொண்டு செய்யப் புகுந்தவர்களும் உண்டு. தொண்டு செய்யப் புகுந்துபுகழும் பொருளும் சேர்ந்த பிறகு,அதைத் தொழில் ஆக்கியவர்களும் உண்டு. தொண்டைத் தொழில் ஆக்கியவர்கள் துன்பத்தில் தான் உழன்று கொண்டு இருக்கின்றார்கள்.

 

     தொண்டு செய்யும்போது எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கும் நிலை வாய்க்கும். தொண்டு தொழிலாக மாறும்போதுபிறர்க்குத் துன்பம் தருவதில் தொடங்கிபின்னால் தன்னையே அழித்துக் கொள்ளும் நிலை உண்டாகும்.

 

"எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பது அல்லமால்,

வேறு ஒன்று அறியேன் பராபரமே".       --- தாயுமானார்.

 

     எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவேண்டும் என்று மனத்தால் நினைப்பதே தொண்டு. நினைப்பதைச் செயலில் காட்டுவதே தொண்டு. 

 

     தொண்டு செய்வது குறித்துதமிழ்மாமுனிவர்அருள்நெறித் தந்தை,தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறி அருளியதை காண்போம்...

 

     "மனிதன் சிந்திக்கும் இயல்பினன். சிந்தனை சிறந்தால் மனிதன் வளர்வான். மனிதனின் சிந்தை அன்பு உடையதாக அமையவேண்டும். மானுடத்தின் உயிர்நிலையே அன்புதான். "அன்பின் வழியது உயிர்நிலை" என்றார் திருவள்ளுவர். "அன்பே சிவம்" என்றார் திருமூலர். அடியார்கள் என்றும் அன்புறு சிந்தையர்களாக இருப்பார்கள். சிவனை அன்புறு சிந்தையில் கொண்டு விளங்கும் நாயன்மார்கள் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொள்வர். பயன் பற்றிக் கருதார். அதனால்,துன்புறுதல் இலர். துன்பம் என்பதே ஒன்றை விரும்பும் போதுதான் வருகிறது. விருப்பத்தைக் கடந்த நிலையில்,சிவசிந்தனையுடன் தொண்டு செய்தால்துன்பம் வருவதில்லை".

-----------------------------------

இங்கே அடிகளார் எடுத்துக் கொண்டதுதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்...

 

அன்புறு சிந்தையர் ஆகி. அடியவர் 

நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்று. 

இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் 

துன்புறுவார் அல்லர்: தொண்டு செய்வாரே.

 

என்பதாகும். இதன் பொருள் ---

 

மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி காரணமாகஅனைத்து உயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த சிந்தையராக விளங்குவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நல்ல தவத்தைச் செய்பவர். அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில்பெருமணம் என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றஅனைத்து உயிர்கட்கும் இன்பம் தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத்தொண்டு செய்வர்.

 

"தொண்டு செய்பவர் துன்புறுவார் அல்லர்"

--------------------------------

குன்றக்குடி அடிகாளாரின் அருளிப்பாடு தொடர்கின்றது....

 

     "இன்று அன்புறு சிந்தையர் அருகி வரும் நிலை. எங்கும் எதிலும் வாணிகப் போக்கு. ஒரு காலத்தில் தொண்டாக விளங்கிய பணிகள் பலவும் இன்று தொழிலாக மாறி விட்டன. இன்று திருக்கோயில்களில்திருமடங்களில் கூடதொழிலாளர்களே உள்ளனர். தொண்டர்கள் இல்லை. அதனால்தொழிலுலகத்திற்கு உரிய பணிநிறுத்தம் முதலியன திருக்கோயில்களுக்கும் வந்து விட்டன.

 

     தொண்டு செய்தல் மனிதராய்ப் பிறந்தோர் ஒவ்வொருவரின் கடமை ஆகும். தொண்டர்கள் பெருகி வளர்ந்துதொண்டு சிறந்தால்தான் இந்த வையகம் துன்பத்தினின்று நீங்கும். இன்புறும். இத்தகு தொண்டு அருகிப் போனமையால் இன்று எங்கும் துன்பம். காவல் நிலையங்களும்சிறைச்சாலைகளும்ஆட்சி அதிகாரச் சட்டங்களும் பல்கிப் பெருகி வளவர்வதன் காரணம் தொண்டு செய்வோர் குறைந்து போனதல்லஇல்லாது போனதுதான். ஒரோவழி "தொண்டின் புனைவில்" விளம்பர வாணிகம் நடைபெறுகின்றது. தொண்டு என்பது,அன்புறு சிந்தையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப் பெறுவது. அதனால்தான்அப்பரடிகள், "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார்.

 

     அன்பில் விளைவது நலம். நலம் வேண்டுவோர் அன்பு உடையர் ஆதல் அன்றி வேறு வழி இல்லை. அன்புக்குநலம் எ்று கூறும் வழக்கும் உண்டு. மானிட வாழ்க்கையின் இயக்கத்திற்குப் பொறுப்புள்ள உறுப்பு சித்தம். சித்தத்தின் தொழில் சிந்தனை. சிந்தனையில் அன்பு இருப்பின்சொல் செயல் அனைத்தும் நலமாக அமையும்".

-----------------------------------

 

தொண்டு செய்தால் துயர் தீரும்.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...