அச்சம் அகற்றி வாழ்வோம்

 


ஆசையை அளவு அறுப்போம். 

அச்சம் இன்றி வாழ்வோம். 

ஆண்டவன் அருள்வான்.

-----

 

     குகையில் வாழ்ந்திருந்த ஆதி மனிதன் வேட்டையாடுதல் முதலிய தொழில்களால் தனது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு இருந்தான். அவனது அறிவையும்செயலையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் ஆற்றல் அவனுக்கு அப்போது இருக்கவில்லை. அவனுக்கு அன்று இருந்த பிரச்சினைகள் இரண்டே. ஒன்று அச்சம்இன்னொன்று கவலை. முரண்பட்ட சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த அவனுக்குவீடு என்ற ஒன்றை அமைத்துக் கொண்டு வாழத் தெரியாத அவனுக்குவிலங்குகளைக் கண்டு அச்சம்இருளைக் கண்டு அச்சம்இயற்கைச் சீற்றங்களைக் கண்டு அச்சம். நாளை என்ன நடக்குமோ என்ற அச்சம். நாளைய பசியைப் போக்கிக் கொள்ள என்ன செய்யலாம் என்ற கவலை. தனியே திரிந்துகொண்டு இருந்த அவனுக்கு,அச்சமும் கவலையும் இல்லாமல் இருக்க முடியாது.

 

     அறிவு மெல்ல மெல்ல வளரத் தொடங்கிசிக்கிக் கல் மூலம் தீயை மூட்டவும்கற்களைக் கொண்டு ஆயுதங்களைச் செய்து கொள்ளவும்இவற்றின் உதவியால் விலங்குகளை வேட்டையாடவும் அவன் கற்றுக் கொண்டான். உணர்ச்சிகளை வெளியிடுவதற்கு ஒலிக் குறிப்புகளைப் பழகிக் கொண்டான். நாளாவட்டத்தில் அந்த ஒலிகள் சொல் வடிவம் பெற்றன. சொல்லுக்கு வரிவடிவத்தையும் அவன் கொடுத்துக் கொண்டான்.

 

     இதன்பிறகு அவன் வேகமாக வளரத் தொடங்கிவிட்டான். அறிவு வளர்ச்சிமொழி வளர்ச்சி இரண்டும் வளர்ந்த நிலையில்கணித வளர்ச்சியும் கண்டான். இந்த வளர்ச்சிஇந்த நூற்றாண்டில் அசுர வேகம் எடுத்து உள்ளது. ஆதி மனிதனின் நிலையை இன்றுள்ள நிலையோடு ஒப்பிடவும் முடியாது. "அவனில் இருந்தா நாம் வந்தோம்" என்று எண்ணத் தோன்றும்.

 

     ஆனால்அறிவு வளர்ந்ததே ஒழியஆதி மனிதன் மனத்தில் தோன்றிய அச்சம்கவலை என்ற இரண்டும் இன்றும் தொடர்கின்றது. அன்று இருளைக் கண்டும்விலங்குகளைக் கண்டு அஞ்சினான். பிற மனிதர்களைக் கண்டும் அச்சம் கொண்டான். இன்று இருளை ஒளிவெள்ளமாக மாற்றிவிட்டோம். விலங்குகளைக் காட்டுக்கு உள்ளேயே அடைத்துப் பாதுகாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால்மனிதன் மனிதனைக் கண்டு அஞ்சுகின்ற நிலை மட்டும் இன்னமும் மாறவில்லை. மனிதனுக்கு மனிதன் பயம். சமுதாயத்திற்குள் பயம். ஓர் ஊரார் இன்னொரு ஊராரைக் கண்டு பயம். ஒரு நாடுமற்றொரு நாட்டைக் கண்டு பயம் கொள்ளுகின்றது. 

 

     காரணம்என்ன என்று ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். அறிவு வளர்ந்த வேகத்தில்மனிதனுக்கு ஆசையும் தாராளமாகவே வளர்ந்து விட்டது. பொன்னாசைபொருளாசைமண்ணாசை என்னும் மூவாசையும் மிகுந்துவிட்டது. அத்தோடுஇன்று பதவி ஆசை என்னும் ஒன்றும் தொற்றிக் கொண்டுவிட்டது. இது மற்ற மூன்று ஆசைகளோடு தொடர்பு உடையதாகி விட்டது.

 

     இன்றைய நிலையில் இருந்து மனதைச் சற்றுத் திருப்பிபொறுமையாகநமது சங்க நூல்களைப் பார்த்தால்,ஓர் உண்மை விளங்கும். "யாதும் ஊரேயாவரும் கேளிர்" என்ற ஒருமை நிலை அன்று இருந்தது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்னும் ஒருமித்த நோக்கு இருந்தது. அரசனும்புலவரும் நண்பராக இருந்த வரலாறுகள் உண்டு. யாரிடத்தும் எவ்வித பேதமும் இல்லை. இரப்போர்க்கு இல்லை என்னாமல் கொடுத்து வாழ்ந்த காலம் அது. 

 

     அச்சம் என்பது அன்றும் இருந்தது. அது பகைவரால் அச்சம்விலங்குகளால் அச்சம்கள்வரால் அச்சம். மன்னனது பரிவாரங்களால் அச்சம். ஆளுகின்ற மன்னன் இந்த அச்சங்களை எல்லாம் போக்கிதன்னாலும் மக்களுக்கு அச்சம் உண்டாகாதவாறு ஆளுவது கடமை என்று இருந்தது. 

 

மாநிலம் காவலன் ஆவான்,மன்னுயிர் காக்கும் காலைத்

தான் அதனுக்கு இடையூறு தன்னால் ,தன் பரிசனத்தால்,

ஊனமிகு பகைத் திறத்தால்,கள்வரால்,உயிர் தம்மால்

ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ

 

என்பது மனுநீதிச் சோழன் வரலாற்றால் அறியப்படுவது.

 

     "சாதிகள் நெறியில் தப்பா" என்று பெரியபுராணத்தில் காட்டியபடிஅன்றும் சாதிகள் இருந்தன. ஆனால்சாதியின் பெயரால் இன்று நடக்கும் அசிங்கங்கள் இல்லை. அந்தணர் குலத்தில் பிறந்த சுந்தமூர்த்தி சுவாமிகள்சேரநாட்டு அரசனுக்கு நண்பர். இவர் வீட்டிற்கு அவர் வந்து விருந்து அயர்வார். அவர் இவரது அரண்மனைக்குச் சென்று மிக உயர்ந்த உபசாரங்களைப் பெற்றுக் கொள்வார். அந்தணர் குலத்தில் பிறந்த திருஞானசம்பந்தருடன் எந்நேரமும் ஆயிரக் கணக்கான அடியவர்கள் இருந்தார்கள். அவருக்கு அணுக்கராக மாறியவர்தாழ்த்தப்பட்ட குலம் என்று இன்று பேசுகின்ற பாணர் குலத்தில் வந்தஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர். அந்தணர் ஆகிய திருஞானசம்பந்தரோடு என்றும் பிரியாமல் உடன் செல்கின்றார். (இன்று அது போன்றதொரு நிகழ்வைக் காண முடியாது) திருநீலநக்க நாயனார் என்கின்ற அந்தணர் வீட்டில்திருஞானசம்பந்தர்மற்ற அடியார்களோடு உணவு கொள்ளுகின்றார். திருநீலநக்க நாயனார் தனது வீட்டில்உள்ள யாகசாலைக்கு அருகில் பாணரையும்அவரது மனைவியாரையும் இரவு தங்க வைக்கின்றார். யாகசாலைக்கு அருகில் இன்று இதுபோல் ஒரு நிகழ்வு காணமுடியுமாஅப்பூதி அடிகள் என்னும் அந்தணர்வேளாளர் குலத்தில் பிறந்த அப்பர் அடிகளைத் தனது குருவாகக் கொள்கின்றார். திருநாவுக்கரசு என்னும் திருப்பெயரை எழுதியும் சொல்லியுமே வீடுபேற்றை அடைந்தவர் அப்பூதி அடிகள். இப்படிசொல்லிக் கொண்டே போகலாம். அவர்களில் யாருக்காவதுயாரிடத்திலேனும் அச்சம் இருந்ததா என்றால்அச்ச உணர்வு அறவே இல்லை. சாதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற அச்சமோஅறிவில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற அச்சமோபொருளாதாரத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற அச்சமோ இல்லவே இல்லை.

 

     வடநாட்டிலே தோன்றிய சாணக்கிய நீதிசுக்கிர நீதிமனுநீதி என்பன போன்ற அறிவு நூல்கள் இங்கே தோன்றவே இல்லை. காரணம்அவற்றுக்கான அவசியம் இங்கு இல்லை. எல்லா இனத்தவர்க்கும்எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவான நீதியைச் சொல்லும் திருக்குறள் தான் இங்கே தோன்றியது. "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்று அறிவுறுத்தியது திருக்குறள். வேறுபாடற்ற ஒரு சமுதாயத்தில் திருக்குறளைத் தவிர வேறு விதமான நூல் தோன்ற வழியே இல்லை.வேதங்களிலோஉபநிடதங்களிலோ அறிவுக்கே முதலிடம் தரப்பட்டு உள்ளது. அங்கே பத்திக்கு இடமில்லை. வேதங்களைப் பலகாலம் ஓதினாலும்உள்ளம் கனிந்து கண்ணீர் வருவதில்லை. ஆனால்பத்தி நூலாகிய திருவாசகத்தைஒருகால் ஓதினாலும் கூடஉள்ளம் உருகிகண்ணீர் பெருகுவதைக் காணலாம்.

 

விளங்கு இழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்

காரணன் உரை எனும் ஆரண மொழியோ?

ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்

மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ?

யாதோ சிறந்ததுன்குவீர் ஆயின்,

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

நெஞ்சம் நெக்கு உருகி நிற்பவர்க் காண்கிலேம்;

திருவாசகம் இங்கு ஒருகால் ஓதில்

கருங்கல் மனமும் கரைந்து உக,கண்கள்

தொடுமணல் கேணியில் சுரந்துநீர் பாய,

மெய்ம்மயிர் பொடிப்ப,விதிர்விதிர்ப்பு எய்தி

அன்பர் ஆகுநர் அன்றி,

மன்பதை லகில்மற்றையர் இலரே.

 

     முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயலாமல்பத்திநெறியில் நின்ற அடியார்கள் எல்லாரும்தம்மைஒப்பு உயர்வு அற்ற ஒரு தலைவனாகிய இறைவனுக்கு ஆட்படுத்திக் கொண்டவர்கள். ஆண்டான் இறைவன் ஒருவனே. அவனுக்கு நாம் எல்லாம் அடிமைகளே என்னும் ஒருமை உணர்வு அடியவர்களிடத்தில் இருந்தது. மற்ற வேற்றுமைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆதிமனிதனுக்கு இருந்த அச்ச உணர்வும்அறிவு வளர்ந்த நிலையில் இன்றைய மனித குலத்துக்கு உள்ள அச்ச உணர்வும்அந்த அடியார்களிடத்தில் காண முடியவில்லை. அச்ச உணர்வு இருக்கின்றது என்றால் அவர்கள் அடியார்கள் இல்லை. அடியார் கோலத்தில் உள்ளவர்கள்.

 

     இறைவன் நம்மை உடையவன். நாம் எல்லாம் அவனது உடைமைகள் என்று வந்துவிட்ட பிறகுஅச்சம் எப்படி உண்டாகும்காப்பதற்குத் தான் ஒருவன் உள்ளானே. அடியார்களுக்கு அச்ச உணர்வு இல்லை என்பதைப் பின்வரும் நிகழ்வுகளால் காணலாம்.

 

     சோழமன்னனது பட்டத்து யானையை எறிபத்த நாயனார் தனது மழு ஆயுதத்தால் கொன்று விடுகின்றார். செய்தி அறிந்த மன்னன் படைகளோடும்பரிவாரங்களோடும் வருகின்றான். குற்றம் புரிந்தவர் தப்பி ஓடுவது இயல்பு. ஆனால்சிறிதும் அச்ச உணர்வோகுற்ற உணர்வோ இல்லாமல்நிகழ்விடத்திலேயே எறிபத்த நாயனார் நின்று கொண்டு இருப்பதைப் படைகளோடு வந்த மன்னன் காண்கின்றான். தலையான அன்பு உள்ள இடத்தில் அச்சம் சிறிதும் இருக்காது என்பதை உணர்த்த, "அச்சம் தாய்தலை அன்பின் முன்பு நிற்குமே?" என்று வினாவினை எழுப்பிஅச்சம் இருக்காது என்ற விடையைத் தந்துவிட்டார் சேக்கிழார் பெருமான். ஏன் படைகளோடு வந்தான் என்றால்அப்போதும் இப்போது உள்ளது போல்ஒன்றை ஒன்றாகத் திரித்துக் கூறி ஆதாயம் தேடுபவர்கள் இருந்தார்கள். "மன்னாஉனது பட்டத்து யானையை ஒருவர் கொன்று விட்டார்" என்றுதான்நேரில் கண்ட உண்மையைச் சொல்லி இருக்கவேண்டும். ஆனால், "பகைவர்களே இல்லாத மன்னா! உனது பட்டவர்த்தனத்தைச் சிலர் கொன்றார்கள்" என்று உண்மைக்கு மாறாகச் சொல்லிசோழனது சொரணையைத் தீண்டிவிட்டார்கள். உண்மையைச் சொல்லி இருந்தால்அவன் படைகளோடு வந்திருக்க மாட்டான். அவனும் கூட வந்திருக்கவே மாட்டான். ஆனால் வந்துவிட்டான். நடந்ததை நாயனார் கூறக் கேட்ட மன்னன்அவர் மீது தவறு இல்லை என்பதை உணர்ந்து அவருக்கு அடியவன் ஆனான். நேர்மை நெறியில் நின்ற அடியவர்க்கு அச்சம் என்பது இல்லை.

 

     சமணர்களால் அளவில்லாத துன்பத்திற்கு ஆளானார் திருநாவுக்கரசு நாயனார். அன்புகொல்லாமை என்னும் அரிய கொள்கையை உடைய உண்மைச் சமணர்கள் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள். திருநாவுக்கரசு நாயனாரைத் துன்பத்துக்கு ஆளாக்கியவர்கள் போலிச் சமணர்கள். தமது கொள்கையைக் காற்றில் விட்டவர்கள். அவர்கள் வயப்பட்டு நின்ற பல்லவ மன்னன்திருநாவுக்கரசரை அழைத்து வருமாறு தனது ஏவலர்களை அனுப்புகின்றான். வந்தவர்களைப் பார்த்துஅவர்கள் சொன்னதைக் கேட்டுசிறிதும் அச்ச உணர்வு இல்லாமல், "வந்தவர்களாகிய நீங்கள் யார்உங்களது மன்னவன் யார்?" என்றுதானே கேட்டார். கேட்டதோடு நில்லாமல்ஒரு பாட்டையும் பாடி வைத்தார்.

 

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;நமனை அஞ்சோம்;

     நரகத்தில் இடர்ப்படோம்;நடலை இல்லோம்;

ஏமாப்போம்;பிணி அறியோம்;பணிவோம் அல்லோம்;

     இன்பமே எந்நாளும்,துன்பம் இல்லை;

தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மையான

     சங்கரன்நற் சங்கவெண் குழை ஒர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்

     கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

 

     "மன்னவன் உங்களை வரப் பணித்தான்" என்று ஒரு வார்த்தை சொன்னதற்குப் பதிலாக எத்தனை வார்த்தைகள் அள்ளி வீசி இருக்கின்றார் பாருங்கள். இத்தனை துணிச்சல் எங்கிருந்து வந்தது?. அச்ச உணர்வு அவரிடத்தில் ஏன் அணு அளவும் இல்லை?. காரணம்அவர் அடியார். பத்திநெறியில் நின்றவர். தன்னைக் காக்க ஒருவன் இருக்கின்றான் என்றபோது அச்சம் எங்கிருந்து உண்டாகும்அது மட்டும் அல்லாதுபல்லவ மன்னன்தன்னை அழிக்க,தனது பட்டத்து யானையைத் தன்மேல் ஏவியபோதும்"அஞ்சுவது யாது ஒன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை" என்று பாடினார்.

 

     இறைவன் திருநாமங்களை எண்ணி இருந்தால்வினைகள் அறும்அவற்றால் வரும் துன்பமும் இல்லையாகும் என்று நெஞ்சறிவுறுத்தலாக அப்பர் பெருமான் பாடியும் காட்டி உள்ளார்.

 

அச்சம் இல்லைநெஞ்சே! அரன் நாமங்கள்

நிச்சலும் நினையாய் வினை போய் அற,

கச்ச மாவிடம் உண்ட கண்டா! என

வைச்ச மாநிதி ஆவர் மாற்பேறரே .

 

இதன் பொருள் ---

     

     நெஞ்சே! அரன் திருநாமங்களை உனது வினைகள் விட்டு நீங்குவதற்காகநித்தமும் நினைவாயாக.உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவா!கைப்பு நிறைந்த ஆலகால விடத்தை உண்ட திருநீலகண்டா! என்று அன்பொடு நீ கூறி வந்தால்சேமித்து வைத்த மாநிதியைப் போல அவர் உனக்குப் பயன்படுவார்.

 

     இறைவனுக்கு ஆட்பட்ட அடியார்கள் எவ்வகையான நலங்கள் உள்ளவராக விளங்குவார் என்பதைதிருஞானசம்பந்தர் தேவாரத்தில் காட்டி உள்ளார்.

 

அச்சம் இலர்பாவம் இலர்கேடும் இலர்அடியார்,

நிச்சம் உறு நோயும் இலர்,தாமும் நின்றியூரில்

நச்சம் மிடறு உடையார்நறுங்கொன்றை நயந்து ஆளும்

பச்சம் உடை அடிகள்திருப்பாதம் பணிவாரே.

 

இதன் பொருள் ---

 

     கடலிலே வந்து எழுந்த நஞ்சைத் கண்டத்திலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும்மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும்தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய திருநின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிகின்ற அடியவர்கள் அச்சம்பாவம்கேடு,நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.

 

     சிறந்த அடியாராகத் திகழ்ந்த பாரதியார்பாடி வைத்துள்ளதைக் காண்போம்.

 

பக்தியினாலே - இந்தப்

     பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ!

சித்தம் தெளியும்,-இங்கு

     செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும்,

வித்தைகள் சேரும்,-நல்ல

     வீரர் உறவு கிடைக்கும்,மனத்திடைத்

தத்துவம் உண்டாம்,-நெஞ்சில்

     சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்.

 

ஆசையைக் கொல்வோம்,-புலை

     அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட

பாசம் அறுப்போம்,-இங்குப்

     பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை

மோசம் செய்யாமல் - உண்மை

     முற்றிலும் கண்டு வணங்கி,வணங்கியொர்

ஈசனைப் போற்றி - இன்பம்

     யாவையும் உண்டு புகழ்கொண்டு வாழ்குவம்.

 

கல்வி வளரும்,-பல

     காரியம் கையுறும்,வீரியம் ஓங்கிடும்,

அல்லல் ஓழியும்,-நல்ல

     ஆண்மை உண்டாகும்,அறிவு தெளிந்திடும்,

சொல்லுவது எல்லாம் - மறைச்

     சொல்லினைப் போலப் பயன் உளது ஆகும்,மெய்

வல்லமை தோன்றும்,-தெய்வ

     வாழ்க்கை உற்றே இங்கு வாழ்ந்திடலாம்.

 

     ஆசையை அளவு அறுப்போம். அச்சம் இன்றி வாழ்வோம். ஆண்டவன் அருள்வான். 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...