வீணர்கள் யார் யார்?

 வீணர்கள் என்போர் யார்?

-----

 

     வீணர்கள் --- (உலகில் மனதிராய் பிறந்தும் பயன் அற்றவர்களாக வாழ்கின்றவர்கள் யார் யார் என்று வகைப்படுத்திவீணர்களிலேயே சிறந்தவர்வருவாய்க்கு வழி ஏதும் இல்லாமல்,செலவு மட்டும் செய்பவர் என்று."அறப்பளீசுர சதகம்" என்னும் நூல் கூறுவதைக் காண்போம்...

 

வேட்ட அகம் சேர்வோரும் வீணரே;வீண் உரை

     விரும்புவோர் அவரின் வீணர்;

  விருந்து கண்டு இல்லாள் தனக்கு அஞ்சி,ஓடி மறை

     விரகிலோர் அவரின் வீணர்;

 

நாட்டம் தரும் கல்வி இல்லோரும் வீணரே;

     நாடி அவர் மேல்கவி சொல்வார்

  நானிலம் தனில்வீணர்;அவரினும் வீணரே

     நரரைச் சுமக்கும் எளியோர்;

 

தேட்டஅறிவு இலாதபெரு வீணரே அவரினும்,

     சேர் ஒரு வரத்தும் இன்றிச்

  செலவு செய்வோர் அதிக வீணராம்;வீணனாய்த்

     திரியும் எளியேனை ஆட்கொண்டு

 

ஆட்டம் செயும் பதாம்புயம் முடியின் மேல் வைத்த

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

 

இதன் பொருள் ---

 

     வீணனாய்த் திரியும் எளியேனை ஆட்கொண்டு--- பயனற்றவனாய்த் தீ நெறியில் உழலுகின்ற எளியவனான என்னையும் ஆளாகக் கொண்டு,ஆட்டம் செய்யும் பத அம்புயம் முடியின் மேல் வைத்த அமலனே--- திருநடனம் புரிகின்ற திருவடித் தாமரையை என் தலை மீது வைத்த தூயவனே! அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதருசதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே--- அருமை மதவேள் என்பான்எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     வேட்ட அகம் சேர்வோரும் வீணரே--- மாமனார் வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருபவரும் பயன்றறவர்அவரின் வீண் உரை விரும்புவோர் வீணர்--- அவரினும் பயனற்ற சொற்களைப் பேசுவோர்,விரும்புவோர் வீணர்அவரின் விருந்து கண்டு இல்லாள் தனக்கு அஞ்சி ஓடி மறை விரகு இலோர் வீணர்--- இவர்களை விடவும்விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் விவேகம் இல்லாதவர் வீணர்நாட்டம் தரும் கல்வி இல்லோரும் வீணரே--- அறிவுக் கண்ணைத் தரும் கல்வி இல்லாதவரும் வீணரே;நானிலம் தனில் அவர் மேல் நாடிக் கவி சொல்வார் வீணர்--- உலகில் கல்வி அறிவு இல்லாதவரைத் தேடிச் சென்று அவர்மேல் பாடல்களைப் புனைந்து கூறுபவரும் வீணர்அவரினும் நரரைச் சுமக்கும் எளியோர் வீணரே--- அவரினும் மக்களைச் சுமக்கும் எளியவர் வீணர்தேட்ட அறிவு இலாத பெரு வீணரே அவரினும்சேர் ஒரு வரத்தும் இன்றிச் செலவு செய்வோர் அதிக வீணர் ஆம் ---பொருளைச் சம்பாதிக்கின்ற அறிவு இல்லாத பெருவீணர் ஆன அவரினும்வரக்கூடிய வருவாய் எதுவும் இல்லாமல் செலவு செய்பவர் பெரிய வீணர் ஆவார்.

 

விளக்கம்

 

வீணன் --- பயனற்றவன்சோம்பேறிதீய நெறியில் ஒழுகுவோன்,பதர்.

 

வேட்டல் --- விரும்புதல்திருமணம் புரிதல். 

 

விரகு --- வழிவகைதிறமைதந்திரம்சூழ்ச்சிவிவேகம்ஊக்கம்தின்பண்டம் என்று பொருள்படும்.

 

நானிலம் ---  நால் நிலம். குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல் என்னும் நால்வகை நிலங்களைக் கொண்டது. உலகம்.

 

நாட்டம் --- கண்நோக்கம்பார்வைஅழகுஆராய்ச்சிவிருப்பம்,நிலைநிறுத்துதல் என்று பொருள்படும். ஆராய்ச்சி என்பது உள்ளத்தில் நிகழும் தொழில். எனவே,அறிவுக்கண் எனப்பட்டது.

 

நரரைச் சுமப்போர் --- பல்லக்குத் தூக்குவோர்.

 

தேட்டம் --- தேடிய பொருள்சம்பாத்தியம்விருப்பம். 

 

வரத்து --- பொருள் வருகின்ற வாய். வருவாய்.

 

வேட்ட அகம் சேர்வோரும் வீணரே--- 

 

ஆண்மகனாகப் பிறந்தால் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். ஈட்டிய பொருளைக் கொண்டுதென்புலத்தார்தெய்வம் விருந்துஒக்கல்தான் என்ற ஐம்புலத்து ஆறு ஓம்ப வேண்டும். உழைக்காமல் உண்பதற்கு ஏதுவாகமாமனார் வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருபவர் பயன்றறவர்மரியாதை கெட்டுப் போகும். அவமானப் பட நேரும்.

 

மாமனார் வீட்டில் இருந்துகொண்டு சீவனம் செய்பவர்கள் குறித்து"குமரேச சதகம்"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

 

வேட்டகம் தன்னிலே மருகன் வந்திடும் அளவில்

     மேன்மேலும் உபசரித்து,

விருந்துகள் சமைத்து நெய் பால்தயிர் பதார்த்தவகை

     வேண்டுவ எலாம் அமைப்பார்;

 

ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர்;தைலம்இட்டு

     உறுதியாய் முழுகுவிப்பார்;

ஓயாது தின்னவே பாக்குஇலை கொடுத்திடுவர்;

     உற்றநாள் நாலாகிலோ,

 

நாட்டம்ஒரு படி இரங்குவதுபோல் மரியாதை

     நாளுக்கு நாள் குறைவுறும்;

நகைசெய்வர் மைத்துனர்கள்;"அலுவல் பார்,போ" என்று

     நாணாமல் மாமி சொல்வாள்;

 

வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள்;அவன்

     மட்டியிலும் மட்டி அன்றோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     மயில் ஏறி விளையாடு குகனே---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     வேட்ட அகம் தன்னிலே மருகன் வந்திடும் அளவில் --- மனைவியின் தந்தை வீட்டில் மருமகன் வந்தவுடன்மேன்மேலும் உபசரித்து --- மேலும் மேலும் ஆதரவு காட்டிவிருந்துகள் சமைத்து --- புதிய உணவுகளைச் சமைத்துநெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் --- நெய்யும் பாலும் தயிரும் கறிவகைகளுமாகவிரும்பியவற்றை எல்லாம் செய்து வைப்பார்கள்ஊட்டம் மிகு வர்க்கவகை செய்து இடுவர் --- உடலுக்கு வலிமை தரும் சிற்றுண்டி வகைகளைச் சமைத்துக் கொடுப்பார்கள்தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் --- எண்ணெய் தேய்ப்பித்து நலம் பெற நீராட்டுவார்கள்ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் --- தின்பதற்குத் தொடர்ச்சியாக வெற்றிலையும் பாக்கும்அளிப்பார்கள்உற்ற நாள் நாலாகிலோ --- (அப்படி மாமனார் வீட்டில்) தங்கிய நாட்கள் நான்கு ஆகிவிட்டால்நாட்டம் ஒருபடி இறங்குவது போல் நாளுக்கு நாள் மரியாதை குறைவுறும் --- அவனுக்குச் செய்யும் ஆதரவு ஒவ்வொரு வகையாகக் குறைவது போல,மதிப்பும் ஒவ்வொரு நாளாகக் குறையும்மைத்துனர்கள் நகை செய்வர் --- மைத்துனர்கள் எல்லோரும் இகழ்ந்து பேசுவர்மாமி அலுவல்பார் போ என்று நாணாமல் சொல்வாள் --- மனைவியின் தாய்,"சென்று ஏதாவது வேலைசெய்" என்று (முன் இருந்து) வெட்கம் இல்லாமல் விளம்புவாள்வாட்டம் மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் --- வழிபடுதற்குரிய மனைவியும் அவனை ஒரு துரும்புபோல நினைப்பள்அவன் மட்டியிலும் மட்டி அன்றோ? --- (ஆகையால்) அவன் பேதையிலும் பேதை அல்லவா

 

வீண் உரை விரும்புவோர் வீணர்---              

 

பயன்இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்,

மக்கட் பதடி எனல்.

 

என்றார் திருவள்ளுவ நாயனார். 

 

பயன் தரும் சொற்களையே ஒருவன் பேச வேண்டும்.

 

விருந்து கண்டு இல்லாள் தனக்கு அஞ்சி ஓடி மறை விரகு இலோர் அவரினும் வீணர் ---

 

ஆணுக்குப் பெண் அடங்கும் அடிமைத்தனம் குடும்ப முன்னேற்றத்தைக் குலைக்கும்.  பெண்ணுக்கு ஆண் ஆடங்கும் அடிமைத்தனம் பொது வாழ்க்கையைக் கெடுக்கும். 

 

கணவனும் மனைவியும்,மனம் ஒத்து இல்வாழ்க்கையை நடத்த வேண்டும். ஒருவருக்கு ஒருவர் அஞ்சி வாழ்வதோஅடிமைப்பட்டு வாழ்வதோ வாழ்வு ஆகாது. இல்லறத்தில் இன்றியமையாத ஒன்று விருந்தோம்பல் ஆகும்.

 

இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி

வேளாண்மை செய்தல் பொருட்டு

 

என்றும்

 

அகன் அமர்ந்து செய்யாள் உறையும்முகன் அமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

 

என்றும் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியது மறக்கற்பாலது அன்று.

 

இல்லாளோடு மனம் ஒத்து வாழ்தல் சிறப்பு உடையது. இல்லாளுக்கு அஞ்சி வாழ்தல் அதற்கு மாறானது.  பெரியோர்களால் அது இகழப்படும் என்பதால்,

 

"மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்" என்றார் திருவள்ளுவர். மனைவிக்கு அஞ்சுகின்றவனுக்கு மறுமைப் பயன் இல்லாமல் போகும். 

 

தன் மனைவிக்கு அஞ்சுகின்றவன் நல்லார்க்கு நல்லனவற்றைச் செய்வதற்கு எந்நாளும் அஞ்சுவான் என்னும் கருத்தில்,

 

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.

 

என்று திருக்குறளில் காட்டினார்.

 

விருந்து வந்தது என்று தன் மனைவிக்கு அறிவித்த ஒருவன் பட்ட பாட்டை ஔவையார் பாடிக் காட்டுவதைப் பாருங்கள்...

 

இருந்து முகம் திருத்தி,ஈரொடு பேன் வாங்கி,

விருந்து வந்தது என்று விளம்ப,- வருந்திமிக

ஆடினாள்,பாடினாள்,ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓட ஓடத் தான்

 

எனவேநல்ல மனைவி இல்லையெனில் செல்வம் பயனற்றது என்றார் ஔவைப் பிராட்டியார்.

 

சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் போல்

வடிவுகொண்டாளைப் பெண்டுஎன்று கொண்டாயே -தொண்டர்

செருப்படிதான் செல்லாஉன் செல்வம் என்ன செல்வம்?

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

 

தொண்டர்களின் காலடிக்கு ஈடாகாது ஒருவன் படைத்த செல்வம்.  

 

எனவே தான்ஆசிரியர், "விருந்து கண்டு இல்லாள் தனக்கு அஞ்சி ஓடி மறை விரகு இலோர் வீணர்" என்றார்.

 

நாட்டம் தரும் கல்வி இல்லோரும் வீணரே---

 

கல்வியே ஒருவனுக்கு எல்லாம் என்றார் குமரகுருபர அடிகள்.

 

கல்வியே கற்புடைப் பெண்டிர்அப் பெண்டிர்க்குச்    

செல்வப் புதல்வனே ஈர்ங்கவியா, - சொல்வளம்    

மல்லல் வெறுக்கையாமாணவை மண்உறுத்தும்    

செல்வமும் உண்டு சிலர்க்கு.      --- நீதிநெறி விளக்கம். 

 

கற்கின்றவர்க்குத் தாம் கற்ற கல்வியே கற்புடைய மனைவியாகவும்அம் மனைவிக்கு இனிய பாடலே அருமையான புதல்வனாகவும்அப்பாடலின் மொழி வளப்பமே நிறைந்த செல்வமாகவும் இருக்கமாட்சிமைப்பட்ட அறிஞர் அவையினை அழகுபடுத்தும் செல்வாக்கும் சிலரிடத்தில் உள்ளது.

 

கல்வி அழகே ஒருவனுக்கு அழகைத் தருவது என்கின்றது நாலடியார்.

 

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டு அழகும்

மஞ்சள் அழகும் அழகு அல்ல - நெஞ்சத்து

நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.                        --- நாலடியார்.

 

வார் விடப்பட்ட கூந்தல் அழகும்நன்கு உடுத்தப்பட்ட வண்ண உடை அழகும்முகத்தில் ஒப்பனையாகப் பூசப்படும் மஞ்சள் அழகும் ஒருவருக்கு உண்மையில் அழகைத் தருவன ஆகா. எள்ளத்தால் நல்லவர்களாய் வாழும்நடுநிலை தவறாத வழியில் ஒருவனைச் செலுத்தும் கல்வியே சிறந்த அழகு தரும்.

 

காம இன்பமானது தொடக்கத்தில் இன்பமாய்த் தோன்றிமுடிவில் துன்பத்தைத் தரும். ஆனால்கல்வியால் வரும் இன்பமோ,தொடக்கத்தில் துன்பமாய்த் தோன்றிமுடிவில் இன்பத்தையே தரும் என்கின்றது நீதிநெறி விளக்கம்.

 

எனவேகற்றாரோடு கூடி வாழ்தல் மிகுந்த இன்பத்தைத் தரும் என்கின்றது "நீதி வெண்பா" என்னும் நூல்,

 

கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல்

வல்லான் ஒருவனையே மானுவரோ, - அல்ஆரும்

எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்துஓர்

வெண்ணிலா ஆகுமோவிளம்பு.       ---  நீதிவெண்பா.

 

வானத்தில் இரவு நேரத்தில் நிறைந்துள்ள அளவில்லாத விண்மீன்கள் ஒன்றாய்த் தோன்றினாலும்ஒரு வெண்ணிலாவுக்குச் சமம் ஆகுமோ?  நீ சொல்லு. அது போலகல்லாதவர்கள் பலர் சேர்ந்து ஒருவரை ஒருவர் விரும்பி வாழ்ந்தாலும்கல்வியில் வல்ல பெரியார் ஒருவருக்கு ஒப்பாவார்களோ?மாட்டார்கள்.

 

"அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்" என்கின்றது நறுந்தொகை என்னும் நூல்.

 

"கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்

நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே".    --- நறுந்தொகை.

 

கல்லாதவன் தன் குலத்தின் மேன்மையைப் பாராட்டும் வார்த்தை நெல்லின் உள் பிறந்த பதர்போலப் பயனற்றதாகும்.

 

நெல் நற்குடிக்கு உவமை. பதர் என்பது நற்குடியில் பிறந்த கல்லாதவனுக்கு உவமை.

 

நானிலம் தனில் அவர் மேல் நாடிக் கவி சொல்வார் வீணர் ---

     

உலகத்தில் கல்வி அறிவு இல்லாத வீணர்களிடம் சென்றுபொருள் வேண்டியோ,புகழ் வேண்டியோ,இந்திரன் சந்திரன் என்று அவர்களைப் புகழ்ந்து கவி பாடுகின்றவர்கள் பயன் அற்றவர்கள். பொய்யாகப் பாடியதால்பொய் சொன்ன வாய்க்குப் போசனம் இல்லை என்று ஆகிவிடும். எல்லாம் உள்ள இறைவனைப் புகழ்ந்து பாடினால் வேண்டியது கிடைக்கும். 

 

மிடுக்கு இலாதானை வீம னேவிறல்

            விசய னேவில்லுக்கு இவன்என்று

கொடுக்க இலாதானைப் பாரி யேஎன்று

            கூறி னும்கொடுப் பார்இலை,

பொடிக்கொள் மேனிஎம் புண்ணி யன்புக

            லூரைப் பாடுமின் புலவீர்காள்,

அடுக்கு மேல்அமர் உலகம் ஆள்வதற்கு

            யாதும் ஐயுறவு இல்லையே.           --- சுந்தரர்.

 

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,

காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,

பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,

போர்முகத்தை அறியானைப் புலி ஏறு என்றேன்,

மல்ஆரும் புயம் என்றேன் சூம்பல் தோளை,

வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,

இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்,

யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.--- தனிப்பாடல்.

 

கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுஉரியார்

     தண்டலையைக் காணார் போலப்

பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்

     கிடையாது! பொருள் நில்லாது!

மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர்

     பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ?

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி

     வாழ்வதில்லை! மெய்ம்மை தானே! --- தண்டலையார் சதகம்.

 

அவரினும் நரரைச் சுமக்கும் எளியோர் வீணரே--- 

 

இவர்கள் யாவரையும் விமக்களைச் சுமக்கும் எளியவர்கள் வீணர்நரர்கள் என்றது யாருக்கும் பயன்படாமல் வாழ்பவர்களையே. மக்களில் சிறந்தோரைச் சுமந்தால் புண்ணியம் உண்டாகும்.

 

தேட்ட அறிவு இலாத பெரு வீணரே அவரினும் ---

 

ஆண்மகனாக ஒருவன் பிறந்தால் பொருளை ஈட்டவேண்டும். பொருளையும் அறிவோடு ஈட்டவேண்டும். அது இல்லையானால் அவன் பொருளை ஈட்டப் பயன்படமாட்டான்.

 

சேர் ஒரு வரத்தும் இன்றிச் செலவு செய்வோர் அதிக வீணர் --- 

 

வரக்கூடிய வருவாய் எதுவும் இல்லாமல் செலவு செய்பவர் வீணர்களிலும் பெரிய வீணர் ஆவார். வருவாய் இல்லாமல் செலவு என்றால் அது கடன்பட்ட வாழ்க்கையாக இருக்கும். கடன்பட்டு வாழும் வாழ்க்கை,ஒரு வாழ்க்கை அல்ல. அது கண்ணியத்தை ஒருவனுக்குத் தராது.

 

கருத்து

 

வீணர்கள் பலர் உண்டு. வருவாய் இல்லாமல் கடன்பட்டு வாழ்வோர் வீணரிலும் வீணர் ஆவார்.

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...