ஆத்திசூடி --- 22. பருவத்தே பயிர்செய்

 

 

                                                              22. பருவத்தே பயிர்செய்.

 

(பதவுரை) பருவத்தே --- தக்க காலத்திலே, பயிர்செய் --- பயிரிடு.

(பொழிப்புரை) விளையும் பருவமறிந்து பயிரிடு.

     பயிர் செய்வது என்பது, நிலத்தை உழுது பண்படுத்துவது தொடங்கி, விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், களை கட்டுதல் ஆகிய தொழில்களை அவற்றிற்கு உரிய காலத்தில் தொடங்கவேண்டும் என்பதை உணர்த்தும்.

     உண்ணவேண்டிய காலத்தில் உண்பதற்கு வேண்டிய உணவை, சமைக்க வேண்டிய காலத்தில் சமைத்து வைக்காதது அறிவற்ற செயல் மட்டுமல்லாது, பயன்தராத செயலும் ஆகும் என்பதை உணர்த்து, "பின்பகல் உணங்கல் அட்டும் பேதை" என்றார் அப்பர் பெருமான்.

     எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்; தவறிச் செய்தால், அம் முயற்சி பயன்தாரது போகும் என்பது கருத்து. 

     பயிர் --- பயன்தரத் தகுவது. பயிரைக் குறித்துச் சொன்னதால், பயன் தருகின்ற செயல்களை எல்லாம் அவற்றிற்கு உரிய காலத்திலேயே செய்தல் வேண்டும் என்னும் கருத்து பெறப்படும்.

     இது கருதியே, "இளமையில் கல்" என்றும் ஔவைப் பிராட்டியார் கூறினார். "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது" என்பது போல, இளமையில் கற்பதுதான் சிறப்பு.

     இது கருதியே, திருவள்ளுவ நாயனார்,

 

பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.   

என்று அருளிச் செய்தார். உரிய காலத்தோடு பொருந்துமாறு வாழ்வதானது, ஒருவன் தான் பெற்ற செல்வத்தைத் தன்னை விட்டு நீங்காதபடி கட்டுகின்ற கயிறு ஆகும் என்றார் நாயனார்.

 

     கல்வி பயிலவேண்டிய காலத்தில் கல்வி பயிலவேண்டும். விளையாட வேண்டிய காலத்தில் விளையாட வேண்டும். உண்ண வேண்டிய காலத்தில் உண்ணுதல் வேண்டும். உறங்க வேண்டிய காலத்தில் உறங்கவேண்டும். அவ்வாறே பணியாற்ற வேண்டிய இடத்தில், பணியாற்றுதற்கு உரிய காலத்தில் பணியாற்றுதல் வேண்டும்.

 

     இறைவழிபாட்டையும் இளமைக் காலத்திலேயே மேற்கொண்டு ஒழுகுதல் வேண்டும் என்பது பின்வரும் பாடல்களால் பெறப்படும்.

                               

காலம் ஆன கழிவதன் முன்னமே

ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்துமின்,

மாலும் மாமல ரானொடு மாமறை

நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே.  --- அப்பர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

        

     திருமாலும், பிரமனும், பெருமைமிக்க வேதங்கள் நான்கும் வல்லவர்களாகிய முனிவர்களும் ஆகிய அனைவர்க்கும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருநல்லம். ஆதலால், பொருந்திய காலம் கழிவதற்கு முன்பே, இயலும் நெறியில் வணங்கி நின்று வழிபடுவீராக.

 

காலமும் நாள் கழியும், நனி

    பள்ளி மனத்தின் உள்கிக்

கோலம் அதுஆயவனைக் குளிர்

    நாவல ஊரன் சொன்ன

மாலை மதித்து உரைப்பார், மண்

    மறந்து வானோர் உலகில்

சாலநல் இன்பம் எய்தித் தவ

    லோகத்து இருப்பவரே         ---  சுந்தரர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     நாள் ஒன்று கழியக் கழி, காலமும் கழிந்து போகும்.  அதனால், குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன், கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடுவோர், தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து, பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து, சிவலோகத்தில் இருப்பவரே ஆவர்.

 

காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின், கருத அரிய

ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்ண அரிய

ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான், தன்அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான், வந்து முந்துமினே.   ---  திருவாசகம்.

 

இதன் பொருள் ---

  

     நினைத்தற்கு அருமையான உலகத்தை உண்ட திருமாலோடு, பிரமர், மற்றைய தேவர்களும் அடைதற்கு அரிய, அருமையான நஞ்சத்தை அமுதாகக் கொண்டவனாகிய, எங்கள் பாண்டிப் பெருமானாகிய இறைவன் தன் அடியவர்களுக்குத் தனது முதல் கருவூலத்தைத் திறந்து அள்ளி வழங்குகின்றான். அதனைப் பெறுவதற்கு விரைவாக வந்து முந்திக் கொள்ளுங்கள். காலம் உள்ளபோதே அவனிடத்தில் அன்பு செய்து பிழையுங்கள்.

 

பெருவெள்ளம் சேர்ந்தபின்னர், தைத் திருப்ப

     ஒண்ணுமோ? பெருத்து நீண்ட

தருவின் கோணலை நிமிர்க்கத் தகுமோ?

     பாவங்களை நீ தள்ளி, மேலாம்

கருமம் அதில் முயல் என்றால், பின்னை

     ஆகட்டும் என்றாய், கசடு விஞ்சி

ஒருமலைபோல் ஆனபின் எவ்வாறு அதை நீ

  சாம்பருவத்து ஒழிப்பாய் நெஞ்சே.      --- நீதிநூல்.

 

         மனமே! வெள்ளம் பெருகிவிட்டால் வேண்டியபடி கால்வாய்களில் திருப்ப முடியாது. மூங்கில் முதலிய பெரிய மரங்களை முதிர்ந்தபின் வளைக்க முடியாது. அவைபோலப் தொடக்கத்திலேயே பாவச் செயல்களைத் தள்ளி நீக்கி,  மேலான புண்ணியத்தை விடாது செய்க என்றால், பின்னர் ஆகட்டும் என்கின்றாய். வாழ்நாளில் சிறிது சிறிதாக  நீ செய்யும் தீமைகள் பெருகி, ஒரு மலையைப் போல் பெருகி நின்ற பின்பு, சாகின்ற காலத்தில் எவ்வாறு உன்னால் அவற்றை ஒழிக்கமுடியும்? எப்படி நல்வினை செய்தல் கூடும்?

 


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...