தென் கடம்பந்துறை --- 0930. புணரியும் அனங்கன்

                                                                அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

புணரியும் (தென்கடம்பந்துறை)

 

முருகா! 

தேவரீரது திருவடியில் திரிகரணங்களும் பொருந்தி இருக்கத் திருவருள் புரிவாய்.

 

தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்

     தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்

     தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான

 

 

புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்

     கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும்

     புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் .....பெறிவேலும்

 

பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்

     றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம்

     புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக் .....குழைமோதிக்

 

குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்

     படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங்

     கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் ......  கணினார்பால்                                     

 

குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்

     த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்

     குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற்று ...அமைவேனோ?

 

துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்

     புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்

     தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் ......திருதோளுந்

 

தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்

     பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்

     துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப்...பதிவாழ்வாய்

 

கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்

     குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்

     கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் .....குருநாதா

 

கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்

     குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்

     கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப் .....பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

புணரியும்,அனங்கன் அம்பும்சுரும்பும்கரும்

     கயலினொடு,கெண்டையும்,சண்டனும் கஞ்சமும்

     புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும்பொருப்பு .....எறிவேலும்,

 

பொரு என இகன்று அகன்றுங்கும் இங்கும் சுழன்று,

     இடை கடை சிவந்துவஞ்சம் பொதிந்துங்கிதம்

     புவி இளைஞர் முன்பயின்றும்பொனின் கம்பிதக் ....                                               குழைமோதிக்

 

குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்-

     படி அமர் புரிந்து அரும் சங்கடம் சந்ததம்

     கொடுமைசெய்து,சங்கொடும் சிங்கி தங்கும் கடைக் ......  கணினார்பால்                                               

 

குலவு பல செம் தனம் தந்து தந்து இன்புறும்,

     த்ரி வித கரணங்களும்,கந்த! நின் செம்பதம்

     குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று ...... அமைவேனோ?

 

துணர்விரி கடம்ப மென் தொங்கலும்,பம்பு உறும்

     புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம்

     தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றுபத்து .....இருதோளும்,

 

தொலைவில் சண்முகங்களும்,தந்த்ர மந்த்ரங்களும்,

     பழநிமலையும்பரங்குன்றமும்,செந்திலும்

     துதிசெயும் மெய்அன்பர்தம் சிந்தையும் சென்றுசெய்ப்....பதிவாழ்வாய்!

 

கணபண புயங்கமும்,கங்கையும்,திங்களும்,

     குரவும் அறுகும்குறும் தும்பையும்,கொன்றையும்

     கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்பு உடைக் ......குருநாதா!

 

கன குடகில் நின்ற குன்றமு தரும் சங்கரன்

     குறுமுனி கமண்டலம் கொண்டுமுன் கண்டிடும்

     கதிசெய் நதி வந்து உறும் தென்கடம்பந்துறைப் ......பெருமாளே.

 

 

பதவுரை

 

      துணர்விரி கடம்ப மென் தொங்கலும்--- பூந்தாது உதிர்கின்ற மென்மையான கடப்ப மலர் மாலையும்,

 

     பம்பு உறும் புழுகும்--- செறிந்துள்ள புழுகு என்னும் நறுமணப் பொருளும்,

 

     அசலம் பசும் சந்தனம்--- மலையில் விளையும் பசுமையான சந்தனமும்,

 

     குங்குமம்--- குங்குமமும்,

 

     தொகு களபமும் துதைந்து --- ஆகியவற்றைத் தொகுத்துள்ள கலவைச் சாந்தைப் பூசியுள்ள,

 

     என்று(ம்) நன்கு ஒன்று(ம்) பத்திரு தோளும்--- உயிர்களுக்கு என்றும் நன்மையைச் செய்கின்ற பன்னிரு திருத்தோள்களும்

 

      தொலைவு இல் சண்முகங்களும்--- நீங்காத அழகு உள்ள ஆறுதிருமுகங்களும்,

 

     தந்திர மந்த்ரங்களும்--- வழிபாட்டுக்கு உரிய மந்திங்களும்,நூல்களும்,

 

     பழனி மலையும் --- (அதிசயம் அநேகம் உற்ற) திருப்பழநி மலையும்,

 

     பரங் குன்றமும்--- திருப்பங்குன்றமும்,

 

     செந்திலும்--- திருச்செந்திலம்பதியும்,

 

     துதி செயு(ம்) மெய்அன்பர் தம் சிந்தையும் சென்று--- வழிபட்டுப் போற்றுகின்ற மெய்யன்பர்களின் சிந்தையும் ஆகிய இடங்களில் எல்லாம் சென்று (வீற்றிருப்பதோடு)

 

     செய்ப்பதி வாழ்வாய்--- வயலூர் என்னும் திருத்தலத்திலும் எழுந்தருளி உள்ளவரே!

 

      கணபண புயங்கமும் --- படத்தை உடைய பாம்புக் கூட்டங்களும்,

 

     கங்கையும்--- கங்கை நதியும்,

 

     திங்களும்--- பிறைச் சந்திரனும்,

 

     குரவும்--- குராமலரும்,

 

     அறுகும்--- அறுகம்புல்லும்,

 

     குறும் தும்பையும்--- சிறிய தும்பை மலர்களும்,

 

     கொன்றையும் கமழ் சடில--- கொன்றை மலர்களும் பரந்துள்ள திருச்சடையை உடையவரும் ஆகிய

 

     சம்புவும் கும்பிடும் பண்புடைக் குருநாதா --- சிவபரம்பொருளும் வணங்கும் பெருமை பொருந்திய குருநாதரே!

 

      கனகுடகில் நின்ற குன்றம் தரும் சங்கரன் குறுமுனி --- பெருமை வாய்ந்த குடகு மலையில் இருந்சிவபிரான் போற்றும் குறுமுனிவர் ஆகிய அகத்தியரின் 

 

     கமண்டலம் கொண்டு முன் கண்டிடும்--- கமண்டலத்தில் இருந்து வெளிப்பட்டு வருகின்,

 

      கதிசெய் நதி வந்து உறும்--- உயிர்களுக்கு நற்கதியை அருளுகின்ற காவிரி நதி வந்து பாய்கின்,

 

     தென் கடம்பந்துறை பெருமாளே--- தென் கடம்பந்துறையில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

      புணரியும்--- கடலும்,

 

     அனங்கன் அம்பும்--- மதவேளின் மலர்க்கணையும்,

 

     சுரும்பும்--- வண்டும்,

 

     கரும் கயலினொடு--- கரிய கயல் மீனும்,

 

     கெண்டையும் --- கெண்டை மீனும்,

 

     சண்டனும்--- இயமனும்,

 

     கஞ்சமும்--- தாமரையும்,

 

      புது நிலவு அருந்தியும்--- நிலவு ஒழுகும் அமிர்த தாரையை அருந்துவதாகிய சகோரப் பறவையும்

 

     துஞ்சு நஞ்சும்--- கொல்லுகின்ற விடமும்,

 

     பொருப்பு எறி வேலும் --- மலையைத் தொளைக்கின்ற தேவரீரது வேலும்,

 

      பொரு என--- ஒப்பு என்று சொல்லும்படியா,

 

     இகன்று--- மாறி மாறி,

 

     அகன்று--- அகன்றும்,

 

     அங்கும் இங்கும் சுழன்று--- அங்கும் இங்குமாகச் சுழன்று,

 

     இடை கடை சிவந்து--- நடுவிலும்ஓரத்திலும் சிவந்து,

 

     வஞ்சம் பொதிந்து--- வஞ்சகத்தைப் பொதிந்து வைத்து,

 

     இங்கிதம் புவி இளைஞர் முன் பயின்று--- இனிமையாக உலகில் உள்ள இளைஞர்கள் முன்பு நடமாடி,

 

      அம் பொனின் கம்பித குழை மோதி --- அழகிய பொன்னால் அஅசைகின்ற குண்டலங்களின் மீது மோதி,

 

     குணலையொடும் --- ஆரவாரித்து,

 

     இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து--- காண்பவரின் இந்திரியங்கள் சஞ்சலப்படும்படி போர் புரிந்து,

 

      அரும் சங்கடம்--- பெரிதும் வேதனை உண்டாகும்படி,

 

     சந்ததம் கொடுமைசெய் துசம்--- எந்நாளும் கொடுமை புரியும் கொடியினை உடையதும்,

 

     கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர் பால்--- கொடிய விடம் தங்கியுள்ள கடைக்கண்களை உடைய விலைமாதர்களிடத்தில்,

 

      குலவு பல செம் தனம் தந்து தந்து இன்புறும்---அடியேனிடத்தில் விளங்குகின்ற செம்மையான பொருள் (பலவற்றையும் பலகாலும்) கொடுத்துத் கொடுத்து இன்புறுகின்,

 

     த்ரி வித கரணங்களும்--- மனம் வாக்கு காயம் என்னும் மூன்று கருவிகளும்,

 

     கந்த--- கந்தவேளே!

 

     நின் செம் பதம் குறுகும் வகை --- தேவரீரது செம்மையான திருவடியை (அடைக்கலமாக) அடையும் வகையில்,

 

     அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ?--- காலையும் மாலையும் உலக பசுபாச தொந்தம் அற்று,மனம் ஒருமைப்பட்டு இருக்க மாட்டேனோ

 

 

பொழிப்புரை

 

 

     பூந்தாது உதிர்கின்ற மென்மையான கடப்ப மலர் மாலையும், செறிந்துள்ள புழுகு என்னும் நறுமணப் பொருளும்,மலையில் விளையும் பசுமையான சந்தனமும்குங்குமமும்ஆகியவற்றைத் தொகுத்துள்ள கலவைச் சாந்தைப் பூசியுள்ளஉயிர்களுக்கு என்றும் நன்மையைச் செய்கின்ற பன்னிரு திருத்தோள்களுடனும்,  நீங்காத அழகு உள்ள ஆறுதிருமுகங்களுடனும்வழிபாட்டுக்கு உரிய மந்திரங்களும்நூல்களும்,அதிசயம் அநேகம் உற்ற) திருப்பழநி மலையும்திருப்பங்குன்றமும்திருச்செந்திலம்பதியும்வழிபட்டுப் போற்றுகின்ற மெய்யன்பர்களின் சிந்தையும் ஆகிய இடங்களில் எல்லாம் சென்று வீற்றிருப்பதோடு,வயலூர் என்னும் திருத்தலத்திலும் எழுந்தருளி உள்ளவரே!

 

            படத்தை உடைய பாம்புக் கூட்டங்களும்கங்கை நதியும்பிறைச் சந்திரனும்குராமலரும்அறுகம்புல்லும்சிறிய தும்பை மலர்களும்கொன்றை மலர்களும் பரந்துள்ள திருச்சடையை உடையவரும் ஆகியசிவபரம்பொருளும் வணங்கும் பெருமை பொருந்திய குருநாதரே!

 

     பெருமை வாய்ந்த குடகு மலையில் இருந்சிவபிரான் போற்றும் குறுமுனிவர் ஆகிய அகத்தியரின்  கமண்டலத்தில் இருந்து வெளிப்பட்டு வருகின்,உயிர்களுக்கு நற்கதியை அருளுகின்ற காவிரி நதி வந்து பாய்கின்ற தென் கடம்பந்துறையில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            கடலும்மதவேளின் மலர்க்கணையும்வண்டும்கரிய கயல் மீனும்கெண்டை மீனும்இயமனும்தாமரையும்நிலவு ஒழுகும் அமிர்த தாரையை அருந்துவதாகிய சகோரப் பறவையும்,கொல்லுகின்ற விடமும்மலையைத் தொளைக்கின்ற தேவரீரது வேலும்ஒப்பு என்று சொல்லும்படியாமாறி மாறிஅகன்றும்அங்கும் இங்குமாகச் சுழன்றுநடுவிலும்ஓரத்திலும் சிவந்துவஞ்சகத்தைப் பொதிந்து வைத்துஇனிமையாக உலகில் உள்ள இளைஞர்கள் முன்பு நடமாடிஅழகிய பொன்னால் அஅசைகின்ற குண்டலங்களின் மீது மோதி,ஆரவாரித்துகாண்பவரின் இந்திரியங்கள் சஞ்சலப்படும்படி போர் புரிந்து,பெரிதும் வேதனை உண்டாகும்படி,

எந்நாளும் கொடுமை புரியும் கொடியினை உடையதும்,கொடிய விடம் தங்கியும் உள்ள கடைக்கண்களை உடைய விலைமாதர்களிடத்தில்,அடியேனிடத்தில் விளங்குகின்ற செம்மையான பொருள் (பலவற்றையும் பலகாலும்) கொடுத்துத் கொடுத்து இன்புறுகின்,மனம் வாக்கு காயம் என்னும் மூன்று கருவிகளும்கந்தவேளே!தேவரீரது செம்மையான திருவடியை (அடைக்கலமாக) அடையும் வகையில்காலையும் மாலையும் உலக பசுபாச தொந்தம் அற்று,மனம் ஒருமைப்பட்டு இருக்க மாட்டேனோ

 

 

விரிவுரை

 

     இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார்விலைமாதரின் கண்களைப் பற்றி எடுத்துக் கூறி அருளுகின்றார்.

 

புணரியும்--- 

 

புணரி --- கடல்அலை.

 

கடலின் பரப்பை அளந்து தெளியலாம். கடலின் ஆழத்தை அளக்கமுடியாது. "அடுத்தது காட்டும் பளிங்கு போல்நெஞ்சமு கடுத்தது காட்டும் முகம்" என்னும் திருவள்ளுவ நாயானார் அருளிச் செயலின்படிவிலைமாதர் கண்களைக் கொண்டு அவர்கள் உள்ளத்தை யாராலும் அளந்து தெளிய முடியாது என்பதால்விலைமாதரின் கண்களைக் கடலுக்கு ஒப்பாக்கினார் அடிகளார்.

 

     அளக்க முடியாதவை எவை?எவை?என்று "குமரேச சதகம்" கூறுவதைக் காணலாம்.

 

வாரி ஆழத்தையும்,புனல் எறியும் அலைகளையும்,

     மானிடர்கள் சனனத்தையும்,

மன்னவர்கள் நினைவையும்,புருடர் யோகங்களையும்,

     வானின்உயர் நீளத்தையும்,

 

பாரில்எழு மணலையும்,பல பிராணிகளையும்,

     படி ஆண்ட மன்னவரையும்,

பருப்பதத்தின் நிறையும்,ஈசுரச் செயலையும்,

     பனிமாரி பொழி துளியையும்,

 

சீரிய தமிழ்ப்புலவர் வாக்கில் எழு கவியையும்,

     சித்தர் தமது உள்ளத்தையும்,

தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி

     தெரிந்து அள விடக்கூடுமோ?

 

வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு

     மருகன் என வந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா --- தாமரைமலரில் இருக்கும் திருமகள் வாழும் திருமார்பனான திருமாலுக்கு மருகன் என்ற முறையிலே வந்த முருகப் பெருமானே! மயிலேறி.........குமரேசனே!மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் --- கடலின் ஆழத்தையும் அது வீசும் அலைகளையும்மானிடர்கள் சனனத்தையும் --- மக்களின் பிறப்பையும்மன்னவர்கள் நினைவையும் --- அரசர்கள் எண்ணத்தையும்புருஷர் யோகங்களையும் --- ஆடவர்களுக்கு வரும் சிறப்பையும்வானின் உயர் நீளத்தையும் --- வானத்தின் உயரத்தையும் நீளத்தையும்பாரில் எழு மணலையும் --- உலகில் தோன்றும் மணலையும்பல பிராணிகளையும் --- பலவகையான உயிர்களையும்படி ஆண்ட மன்னவரையும் --- உலகாண்ட அரசர்களையும்பருப்பதத்தின் நிறையும் --- மலையின் நிறையையும்,ஈசுரச் செயலையும் --- இறைவன் செய்வதையும்,பனிமாரி பொழி துளியையும் ---பனியும் மாரியும் பெய்யும் துளிகளையும்சீரிய தமிழ்ப்புலவர் வாக்கில் எழு கவியையும் --- சிறந்த தமிழ்ப்புலவருடைய நாவிலிருநது விளையும் கவிதைச் சிறப்பையும்சித்தர் தமது உள்ளத்தையும் --- சித்தருடைய நினைவின் உறுதியையும்தெரிவையர்கள் சிந்தையையும் --- பெண்களின் உள்ளத்தையும்இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிடக் கூடுமோ --- இத்தகைய என்று கூறும் முறையிலே ஆராய்ந்து அறுதியிட்டுக் கூற ஒவ்வுமே? (ஒவ்வாது).

 

அனங்கன் அம்பும்--- 

 

அனங்கன் --- அங்கம் இல்லாதவன். மதவேள்.

 

மன்மதனுக்கு ஐம்பெருங் கணைகள். தாமரைப்பூமாம்பூமுல்லைப்பூஅசோகம்பூநீலோற்பலப்பூ என்ற மலர்கள். 

 

தாமரைப்பூ --- நினைப்பூட்டும்

மாம்பூ --- பசலை நிறம் தரும்

அசோகம்பூ --- உணர்வை நீக்கும்

முல்லைப்பூ --- படுக்கச் செய்யும்

நீலோற்பலப்பூ --- கொல்லும். 

 

நினைக்கும் அரவிந்தம்,நீள்பசலை மாம்பூ,

அனைத்துணர்வு நீக்கும் அசோகம்,-வனத்திலுறு

முல்லை இடைகாட்டும்,மாதே முழுநீலம்

கொல்லுமதன் அம்பின் குணம்       --- இரத்தினச் சுருக்கம்.

 

புது நிலவு அருந்தியும்--- 

 

நிலவு ஒளியில் இருந்து ஒழுகும் அமிர்த தாரையை மட்டுமே உண்டு வாழ்கின்ற ஒரு பறவை.

 

"தவள நிலவு ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி" எனத் தாயுமான அடிகளார் அருளியது காண்க.

 

சகோரப் பறவையை விலைமாதரின் கண்ணுக்கு ஒப்பாக்கியதுபொருளை மட்டுமே விரும்புகின்ற தன்மையால் ஒக்கும் என்பது அறிக.

 

துஞ்சு நஞ்சும்--- 

 

துஞ்சுதல் --- கொல்லுதல்தொழிலின்ற இருத்தல்.

 

நஞ்சானது உண்டரை மட்டுமே கொல்லும். விலைமாதரின் கண்கள் கண்டாரைக் கொல்லும்.

 

பொருப்பு எறி வேலும் ---

 

பெண்களின் கண்களுக்கு வேலை ஒப்பாகக் கூறுவதும் உண்டு. 

 

வேல் வெல்லும் தொழிலை உடையது.  விலைமாதரின் கண்கள் ஆடவரின் உள்ளத்தை வெல்லும் தன்மை உடையவை.

 

வஞ்சம் பொதிந்து--- 

 

விலைமாதரின் கண்கள் வஞ்சகத்தைப் பொதிந்து வைத்துஉள்ளவை.

 

இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம் கொடுமைசெய் துசம்--- 

 

இந்திரியம் --- புலன்கள்.

 

சந்ததம் --- எந்நாளும்.

 

துசம் --- துவசம்கொடி.

 

விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும்சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள்.பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

 

"துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.

 

உலகப் பற்றுக்களை நீத்துஇறைவனது திருவடியைச் சாரபெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்திஅவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறுபொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

 

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனேதுறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்துபதைக்கப் பதைக்க வதைக்கும்கண்ணார்க்கு

இளைத்து,தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து  இரட்சிப்பையே?    ---  கந்தர் அலங்காரம்.       

                                                                                                    

வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச் செவ்வாய்கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான்இன்றுபோய்

வானுளான் காணாய்நீ மாளா வாழ்கின்றாயே.  --- திருவாசகம்.

 

அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி,பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு,...... அலர்வேளின்

 

சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவேபொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.        --- திருப்புகழ். 

 

மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள்,......முநிவோரும்  

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்'என் முழுப் புரட்டிகள்,...... வெகுமோகம்

 

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள்,...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர்,...... உறவுஆமோ?            --- திருப்புகழ்.

 

பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டுஎன்னை

கண்ணால் வெருட்டிமுலையால் மயக்கிகடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளிஎன் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே!

 

சீறும் வினை அது பெண் உருவாகிதிரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகிகொடுமையினால்,

பீறு மலமும்உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன்இறைவா! கச்சி ஏகம்பனே!             --- பட்டினத்தார்.

 

பால்என்பது மொழிபஞ்சு என்பது பதம்பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீசெந்திலோன் திருக்கை

வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலைவெட்சித்தண்டைக்

கால் என்கிலைநெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?. ---  கந்தர் அலங்காரம்.

 

மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.--- பட்டினத்தார்.

 

மாதர் யமனாம்அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம்- ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.                             ---திருப்போரூர்ச் சந்நிதி முறை. 

                                           

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

 

ஆனால்,இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது. திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான்அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

 

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.---  பெரியபுராணம்.

 

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலைபோமின்” என்று அருளிச் செய்தார்.ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள் என்பதை அறிக.

 

 

கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர் பால்--- 

 

சிங்கி --- குளிர்ந்து கொல்லும் விடம்.

 

விலைமாதரின் கண்களும் காண்பவர்க்கு இதம் செய்வது போன்று இருந்துநாளடைவில் கொல்லுவிக்கும் தன்மை உடையன.

 

 

குலவு பல செம் தனம் தந்து தந்து இன்புறும்---

 

பாடுபட்டுத் தேடயச் சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்த பொருளைவிலைமாதர் தரும் சிற்றின்பத்தை விரும்பிஅவர்க்குக் கொண்டு வந்து கொட்டி இன்புறுவார்கள். விலைமாதர்கள் சொல்லுகின்ற மொழியாலும்அவர்கள் புரியும் சாகசத்தாலும் மிகவும் இன்புற்று இருப்பர். நாளடைவில் பொருளும் வற்றிப் போய்,உடம்பும் வற்றிப போய்,பெருந்துன்பமே மிஞ்சும்.

 

த்ரி வித கரணங்களும் நின் செம் பதம் குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ?--- 

 

விலைமாதர் மேல் வைத்த மனதை மாற்றிஅவர்களைப் புகழ்ந்து பாழ்க்கு இரைத்த சொல்லை மாற்றிஅவர்களுக்கு ஏவல் புரிந்து வந்த உடம்பின் தொழிலை மாற்றிமனம்மொழிமெய்யால் முருகப் பெருமானின் திருவடிகளைப் பற்றிமனம் ஒருமைப்பட்டு இருக்கவேண்டும்.

 

கேட்டையே தருகின்ற இந்த இன்பத்தில் வைத்த மனத்தை மாற்றிஇறைவன் திருவடியில் வைக்க வேண்டும். எவ்வளவு புகழ்ந்தாலும் பொருள் இல்லாவதரைப் பொருந்த மனம் இல்லாதவர்கள் விலைமாதர்கள். விலைமாதரைப் பொருந்த மனம் மட்டும் இருந்தால் போதாது. மிக்க பொருளும் வேண்டும். பொருளின் அளவுக்கு ஏற்ப இன்பத்தை வழங்குவார்கள். பொருள் இல்லை என்றால்வெகுநாள் பழகியவரையும் ஓடஓட விரட்டும் தந்திரத்தை உடையவர்கள். இவர்களோடு பழகினால் பாழான நரகமே வாய்க்கும்.

 

ஆனால்இறைவன் திருவடியில் மனமானது பொருந்தினால் மட்டும் போதும். பொருள் வேண்டுவதில்லை. மலர்களை இட்டுத்தான் வழிபட வேண்டும் என்பது இல்லை. "நொச்சி ஆயினும்கரந்தை ஆயினும் பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும் இடைமருதன்" இறைவன்.

 

"பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே" என்கின்றார் அருணை அடிகள் பிறிதொரு திருப்புகழில்.

 

போதும் பெறாவிடில் பச்சிலை உண்டுபுனல் உண்டுஎங்கும்

ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றேஇணையாகச் செப்பும்

சூதும் பெறாமுலை பங்கர்,தென் தோணி புரேசர்,வண்டின்

தாதும் பெறாத அடித் தாமரை சென்று சார்வதற்கே. ---  பட்டினத்தார்.

 

யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை;

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய்உறை;

யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி;

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.--- திருமந்திரம்.

 

பத்தி அடியவர் பச்சிலை இடினும்

முத்தி கொடுத்து முன் நின்று அருளித்

திகழ்ந்து உளது ஒருபால் திருவடி....     ---  பதினோராம் திருமுறை.

 

பத்தியாகிப் பணைத்தமெய் அன்பொடு

நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்

பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் 

கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்

திருவிடை மருததிரிபுராந்தக,..         ---  பதினோராம் திருமுறை.

கல்லால் எறிந்தும்,கை வில்லால் அடித்தும்,கனிமதுரச்

சொல்லால் துதித்தும்நல் பச்சிலை தூவியும்,தொண்டர் இனம்

எல்லாம் பிழைத்தனர்,அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன்?

கொல்லா விரதியர் நேர் நின்ற முக்கண் குருமணியே.

 

எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து,

புல் ஆயினும்ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி

நில்லேன்நல் யோக நெறியும் செயேன்அருள் நீதி ஒன்றும்

கல்லேன்எவ்வாறு,பரமே! பரகதி காண்பதுவே.   --- தாயுமானார்.

 

"எவன் பத்தியோடுபயனை எதிர்பார்க்காமல்,எனக்கு இலைமலர்பழம்நீர் முதலிவற்றை அர்ப்பணம் செய்கின்றானோஅன்பு நிறைந்த அந்த அடியவன் அளித்த காணிக்கையான இலைமலர் முதலியவற்றை நான் சகுண சொருபமாக வெளிப்பட்டு அன்புடன் அருந்துகின்றேன்" என்று பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் 26 - ஆவது பாடலில் கூறப்பட்டு இருப்பதும் எண்ணுதற்கு உரியது.

 

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,

மெச்சிசிவபத வீடு அருள்பவனை,

முத்தி நாதனைமூவா முதல்வனை,

அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்

கண்ட அண்ணலைகச்சியில் கடவுளை,

ஏக நானைஇணை அடி இறைஞ்சுமின்,

போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே...

 

என்கின்றார் பட்டினத்து அடிகள். ஆகவேபோகத்தைத் தருகின்ற மாதரைப் பொருந்த நாடும் மனத்தைஅழியாத வீட்டு இன்பத்தை அருளுகின்ற இறைவன் திருவடியில் நாட்ட வேண்டும். 

 

மாதர் மேல் வைத்த அன்பினை ஒரு இலட்சம் கூறு செய்துஅதில் ஒரு கூறு மட்டுமே கூட இறைவன் திருவடியில் வைத்தால் போதும். அவர்க்கு இகபர நலன்களை அருள வல்லவன் இறைவன் என்கின்றார் திருமாளிகைத் தேவர்.

 

தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த

    தயாவை நூறு ஆயிரம் கூறு இட்டு,

அத்தில் அங்கு ஒரு கூறு உன்கண் வைத்தவருக்கு

    அமருலகு அளிக்கும் நின் பெருமை,

பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும்

    பிழைத்தவை பொறுத்து அருள் செய்யும்

கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த கங்கை

    கொண்ட சோளேச்சரத்தானே.                    --- திருவிசைப்பா.

 

தொழும்பினரை உடையவர்கள் ஆள்வது உறு

     கடன் என்னும் தொல்லை மாற்றம்,

செழும்பவள இதழ்மடவார் திறத்து அழுந்தும்

     எனது உளத்தைத் திருப்பி,தன் சீர்க்

கொழும்புகழின் இனிது அழுத்திப் புதுக்கி அருள்

     தணிகை வரைக் குமரன் பாதம்

தழும்பு படப் பலகாலும் சாற்றுவது அல்-

     லால் பிறர் சீர் சாற்றாது என் நா.  ---  தணிகைப் புராணம்.

 

இதன் பொருள் --- 

 

அடியாரை ஆள்வது உடையார் தம் பெருங்கடமை ஆகும் என்னும் முதுமொழிக்கு இணங்கசெழிப்புடைய பவளம் போன்று சிவந்த வாயினை உடைய மகளிர்பால் சென்று அழுந்திக் கிடந்த அடியேனுடைய புன்மையான நெஞ்சத்தை மீட்டு,தனது அழகிய கொழுவிய புகழின்கண் அழுந்துமாறு நன்கு பதித்து,அதனைப் புதுப்பித்து என்னைப் பாதுகாத்தருளிய திருத்தணிகை மலையின்கண் வீற்றிருக்கும் குமரப்பெருமானுடைய திருவடிப் புகழினைத் தழும்பு ஏறப் பலகாலும் பேசுவது அல்லது என்னுடைய செந்நா ஏனையோர் புகழை ஒரு சிறிதும்பேசமாட்டாது.

 

பெண்அருங் கலமேஅமுதமே எனபெண்

      பேதையர்ப் புகழ்ந்துஅவம் திரிவேன்,

பண்உறும் தொடர்பில் பித்த என்கினும்நீ

      பயன் தரல் அறிந்துநின் புகழேன்;

கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்

      கதிர்கள் நூறுஆயிரம் கோடித்

தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண

      சைலனே கைலைநா யகனே.    --- சோணசைல மாலை.

 

மின்னினில் நடுக்கம் உற்ற,நுண்ணிய நுசுப்பில்,முத்த

     வெண் நகையில்,வட்டம் ஒத்து,...... அழகு ஆர

விம்மி இளகிக் கதித்த கொம்மை முலையில்குனித்த

     வில் நுதலில் இட்ட பொட்டில்,...... விலைமாதர்,

 

கன்னல் மொழியில்சிறக்கும் அன்ன நடையில்கறுத்த

     கண்ணின் இணையில்சிவத்த ...... கனிவாயில்,

கண் அழிவு வைத்த புத்தி,ஷண்முகம் நினைக்க வைத்த,

     கன்மவசம் எப்படிக்கும் ...... மறவேனே.      ---  திருப்புகழ்.

 

அரும்பினால்தனிக் கரும்பினால் தொடுத்து,

     அடர்ந்து மேல் தெறித்து,...... அமராடும்

அநங்கனார்க்கு இளைத்துஅயர்ந்துஅணாப்பி எத்து

     அரம்பை மார்க்கு அடைக் ...... கலம் ஆகி,

 

குரும்பை போல் பணைத்துஅரும்பு உறாக் கொதித்து

     எழுந்து,கூற்று எனக் ...... கொலைசூழும்,

குயங்கள் வேட்டுஅறத் தியங்கு தூர்த்தனை,

     குணங்கள் ஆக்கி நல் ...... கழல்சேராய்.  ---  திருப்புகழ்.

தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே,

        சிற்றிடையிலேநடையிலே,

  சேல்ஒத்த விழியிலே,பால்ஒத்த மொழியிலே,

        சிறு பிறை நுதல் கீற்றிலே,

பொட்டிலே,அவர்கட்டு பட்டிலே,புனைகந்த

        பொடியிலே,அடியிலேமேல்

  பூரித்த முலையிலே,நிற்கின்ற நிலையிலே

        புந்தி தனை நுழைய விட்டு,

நெட்டிலே அலையாமல்;அறிவிலே,பொறையிலே,

        நின் அடியர் கூட்டத்திலே,

   நிலைபெற்ற அன்பிலே,மலைவு அற்ற மெய்ஞ்ஞான

        ஞேயத்திலேஉன்இருதாள்

மட்டிலே மனதுசெல,நினது அருளும் அருள்வையோ?

        வளமருவு தேவை அரசே!

   வரை ராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை

        வளர் காதலிப்பெண் உமையே.      --- தாயுமானார்.

 

துணர்விரி கடம்ப மென் தொங்கலும்--- 

 

துணர் --- பூந்தாது. 

 

தொங்கல் --- தொங்கும் முறையில் அமைக்கப்பட்ட மல்ரமாலை.

 

பம்பு உறும் புழுகும்--- 

 

பம்புதல் --- செறிதல்.

     

அசலம் பசும் சந்தனம்--- 

 

அசலம் --- மலை. 

     

என்று(ம்) நன்கு ஒன்று(ம்) பத்திரு தோளும் தொலைவு இல் சண்முகங்களும்...... துதி செயு(ம்) மெய்அன்பர் தம் சிந்தையும் சென்றுசெய்ப்பதி வாழ்வாய்  --- 

 

உயிர்களுக்கு என்றும் நன்மையைச் செய்கின்ற பன்னிரு திருத்தோள்களுடனும்ஆறுதிருமுகங்களுடனும் முருகப் பெருமான் வழிபாட்டுக்கு இரிய மந்தரங்களிலும்நூல்களிலும்பழநிமலையிலும்திருப்பரங்குன்றத்திலும்திருச்செந்தலம்பதியிலும்வயலூரிலும் எழுந்தருளி இருப்பவன்.வழிபடுகின்ற மெய்யடியார்களின் சிந்தையிலும் வீற்றிருப்பவன் என்கின்றார்.

 

"மந்திரமும்தந்திரமும் மருந்தும் ஆகி" என்பார் அப்பர் பெருமான்.

 

இமையவர் முடித்தொகையும்,வனசரர் பொருப்பும்,எனது

    இதயமும் மணக்கும் இரு பாதச் சரோருகனும்      --- வேடிச்சி காவலன் வகுப்பு     

                                

மருவும் அடியார்கள் மனதில் விளையாடு

    மரகத மயூரப் பெருமான் காண்   ---(திருமகளுலாவு) திருப்புகழ்.

 

துரியநிலையே கண்ட முத்தர் இதயா கமலம்

     அதனில் விளையா நின்ற புத்தமிர்த போதசுக

     சுயபடிக மாஇன்ப பத்மபதம்     --- (சுருதிமுடி) திருப்புகழ்.

 

 

சம்புவும் கும்பிடும் பண்புடைக் குருநாதா --- 

 

சம்பு --- உயிர்களுக்கு இன்பத்தைத் தருபவர் ஆன சிவபெருமான்.

 

சிவபரம்பொருளும் வணங்குகின்ற குருநாதராக விளங்குபவர் முருகப் பெருமான்.

 

கனகுடகில் நின்ற குன்றம் தரும் சங்கரன் குறுமுனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் கதிசெய் நதி ---

 

குறுமுனி --- அகத்தியர்.

 

குடகு --- மேற்குத் திணியல் உள்ள மலை. குடகுமலை. காவிரி தோன்றும் இடம்.

 

நாரதர் செய்த சூழ்ச்சியால் விந்தியமலையானது,மேருமலைக்குப் போட்டியாக பிரமலோகம் வரை உயர்ந்து வழியை அடைத்தது. தேவர்கள் அகத்தியரை வேண்டஅகத்தியர் சிவபிரானை வேண்டி விந்தத்தை அடக்கும் ஆற்றலைப் பெற்றார். அப்போது சிவபூஜைக்குத் தீர்த்தம் வேண்டும் என அகத்தியர் வேண்டசிவபிரான் காவிரியை அழைத்து ஒரு குண்டிகையில் அடங்கச் செய்து அகத்தியருடன் அனுப்பினார். அந்த குண்டிகை நீருடன் அகத்தியர் தென்திசைக்கு வரும்போது - வழியில் கிரவுஞ்ச கிரியையும்விந்தத்தையும் அடக்கிக் கொங்கு தேயத்துக்கு அருகே (குடகில்) தங்கிச் சிவபூசை செய்து வந்தனர். அப்போது சீகாழியில் இருந்த இந்திரன் தனது சிவபூசைக்கு நீரில்லாது வருந்த நாரதர் கூறிய தந்திரத்தின்படி விநாயகரை அவன் பூசித்து வணங்கஅவர் எதிர் தோன்றி வேண்டிய வரம் யாதென "அகத்திய முனிவரின் கமண்டலத்தில் காவிரி நதி அடங்கியுள்ளது. அந்தக் கமண்டலத்தை நீங்கள் கவிழ்த்துவிட்டால் பரவிவரும் நதி என் நந்தவனத்துக்கு வேண்டிய நீரைத் தரும்" என வேண்,விநாயகரும் அங்கனமே கவிழ்க்ககாவிரி பெருகி வந்து இந்திரனுடைய நந்தவனத்துக்கு வேண்டிய நீரைத் தந்தது என்பது வரலாறு.

 

கதிசெய் நதி --- வேகமாப் பாய்ந்து வந்த நதி என்பதை விஉயிர்களுக்கு நற்கதியை அருள்கின்ற காவிரி என்பது பொருந்தும். "கங்கையில் புனிதமாய காவிரி" என்று தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், "ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி ஓடும் மாகாவிரி" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அருளியுள்ளதால்காவிரி நதியானதுஉயிர்களின் பாவத்தைப் போக்கி,நற்கதியை அருளுகின்ற நதி என்பது புலன் ஆகும்.

 

தென் கடம்பந்துறை பெருமாளே--- 

 

தென்கடம்பந்துறைசோழ நாட்டுகாவிரித் தென்கரைத் திருத்தலம். இத்திருத்தலம் குளித்தலையில் இருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23கி.மீ. தொலைவிலும்திருச்சியில் இருந்து 55கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.  குளித்தலை இரயில் நிலையம் திருச்சி - கரூர் - ஈரோடு வழித்தடத்தில் இருக்கிறது.

 

இறைவர்: கடம்பவனேசுவரர்கடம்பவனநாதர்.

இறைவியார்  : பாலகுசாம்பாள்முற்றிலாமுலையாள்.

தல மரம்: கடம்பு.

தீர்த்தம்       : காவிரி.

 

அப்பர் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது. 

 

கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோயில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல்காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோயில் இது.  

 

இங்கு முருகப்பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் ஒரு திருமுகத்துடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். 

 

குளித்தலை அருகில் இருக்கு ம்மூன்று சிவத்தலங்களையும் ஒரே நாளில் காலைபகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. திருஈங்கோய்மலை என்னும் திருத்தலத்தில் உள்ள மரகதாசலேசுவரரை மாலையில் வழிபடுவதும்மிகவும் கடம்பர் கோயில் என்னும் தென்கடம்பந்துறையை காலையில் வழிபடுவதும், நண்பகலில் வாட்போக்கியையும் வழிபடுவதும் சிறப்பாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாறு ஒரே நாளில் தரிசிப்பதற்கு எல்லா நாள்களும் ஏற்றவை எனினும்கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

     

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கோள் போக்கி நில்லுங்கள் தம்ப நெறி போல் எனபூவை சொல்லும் கடம்பந்துறை நிறைவே" என்று போற்றி உள்ளார்.

 

கருத்துரை

 

முருகா! தேவரீரது திருவடியில் திரிகரணங்களும் பொருந்தி இருக்கத் திருவருள் புரிவாய்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...