வெஞ்சமாக்கூடல் --- 0939. வண்டுபோல்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வண்டுபோல் சாரத்து (திருவெஞ்சமாக்கூடல்)

 

முருகா! 

மெய்யறிவு தந்தருள்வாய்

 

 

தந்தனாத் தானத் ...... தனதான

 

 

வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி

 

மந்திபோற் காலப் ...... பிணிசாடிச்

 

செண்டுபோற் பாசத் ...... துடனாடிச்

 

சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே

 

தொண்டராற் காணப் ...... பெறுவோனே

 

துங்கவேற் கானத் ...... துறைவோனே

 

மிண்டராற் காணக் ...... கிடையானே

 

வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

வண்டுபோல் சாரத்து ...... அருள்தேடி,

 

மந்திபோல் காலப் ...... பிணிசாடி,

 

செண்டுபோல் பாசத்து ...... உடன்ஆடிச்

 

சிந்தை மாய்த்தே சித்து ...... அருள்வாயே.

 

தொண்டரால் காணப் ...... பெறுவோனே!

 

துங்கவேல் கானத்து ...... உறைவோனே!

 

மிண்டரால் காணக் ...... கிடையானே!

 

வெஞ்சமாக் கூடல் ...... பெருமாளே.

 

பதவுரை

 

 

            தொண்டரால் காணப் பெறுவோனே--- அடியார்களால் காணப்பெறும் தன்மை உடையவரே!

 

            துங்க வேல் கானத்து உறைவோனே--- தூய்மையான தலமாம் திருவேற்காட்டில் வாழ்பவரே!

 

            மிண்டரால் காணக் கிடையானே --- ஆணவம் மிக்கவர்களால் காணக் கூடாதவரே!

 

            வெஞ்சமாக் கூடல் பெருமாளே--- திருவெஞ்சமாக்கூடல் என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            வண்டுபோல் சாரத்து அருள்தேடி--- வண்டு எவ்வாறு மலர்களின் தேனைத் தேடிக் களிக்கிறதோ,அவ்வாறு உனது அருளை நான் தேடிக் களிக்குமாறும்,

 

            மந்திபோல் காலப் பிணிசாடி --- குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத் தாண்ட வல்லதோ,அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின் பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும்

 

            செண்டுபோல் பாசத்துடன் ஆடி--- செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ,அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும்

 

            சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே--- அலைந்து திரியும் என் மனத்தை மாய்த்து,சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக. 

 

பொழிப்புரை

 

            அடியார்களால் காணப்பெறும் தன்மை உடையவரே!

 

            தூய்மையான தலமான திருவேற்காட்டில் வாழ்பவரே!

 

            ஆணவம் மிக்கவர்களால் காணக் கூடாதவரே!

 

            திருவெஞ்சமாக்கூடல் என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            வண்டு எவ்வாறு மலர்களின் தேனைத் தேடிக் களிக்கிறதோ,அவ்வாறு உனது அருளை நான் தேடிக் களிக்குமாறும்குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத் தாண்ட வல்லதோ,அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின் பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும்,  செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ,அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும்அலைந்து திரியும் என் மனத்தை மாய்த்து,சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக. 

 

விரிவுரை

 

வண்டுபோல் சாரத்து அருள்தேடி--- 

 

சாரம் --- இனிமைசாறுஇரசம்.

 

வண்டு தேன் உள்ள மலர்களைத் தேடிச் சென்று,தேனைத் தேறும். மறந்தும் தேன் இல்லாத மலர்களை நாடி வண்டுகள் செல்வதில்லை.

 

மக்களும் துன்ப சொரூபமாக உள்ள சிற்றின்பங்களில் நாட்டம் கொள்ளாமல்நிலைத்த இன்பத்தை நாடிச் செல்லுதல் வேண்டும் என்று குறிப்பால் அறிவுறுத்துகின்றார் அடிகளார்.

 

ஆன்மாவை ஓர் அரச வண்டாக உருவகித்து, "ஏ அரச வண்டேநீ தேடிச் செல்லுகின்ற மலர்களில் சிறிதளவு தேன் மட்டுமே உள்ளது என்பதை அறிவாயாக. நீ தேடிச் செல்லுகின்ற தேன்,உலகியல் தேன். அது உண்டால் மட்டுமே இனிக்கும். அப்போது மட்டும் இனிக்கும். எப்போது நினைத்தாலும்,எப்போது கண்டாலும்,எப்போது பேசினாலும்,அப்போதெல்லாம் உனது எலும்புகளும் உருகும்படி இனிமையைத் தருகின்ற ஆனந்தத் தேனைச் சொரிகின்ற அம்பலவாணப் பெருமானிடத்திலே சென்று ஊதுவாயாக என்கின்றார் மணிவாசகப் பெருமான். 

 

தினைத்தனை உள்ளது,ஓர்,

    பூவினில்தேன் உண்ணாதே,

நினைத்தொறும் காண்தொறும்

    பேசுந்தொறும் எப்போதும்

அனைத்து எலும்பு உள்நெக

    ஆனந்தத் தேன்சொரியம்

குனிப்பு உடையானுக்கே

    சென்று ஊதாய் கோத்தும்பீ! 

 

அற்புதமான திருவாசகப் பாடல். "ஓர் பூவினில்" என்று கொண்டு ஒரு பூ என்பது பொருத்தமாகாது. நீ சென்று தேடுகின்ற பூவினில்தேனானது தினைத்தனை மட்டுமே உள்ளது என்பதை "ஓர்" - ஆராய்ந்து அறிவாயாக என்று பொருள் கொள்வது சிறப்பாக இருக்கும்.

 

மந்திபோல் காலப் பிணிசாடி --- 

 

குரங்கு மரக்கிளைகளில் தாவித் தாவிச் செல்வது போல்ஆன்மாவும் இயமனின் பாசப் பிணிப்புக்கு ஆட்படாமல் தாவிச் செல்லும் வல்லமையை இறையருளால் பெறவேண்டும் என்கின்றார் அடிகளார்.

 

செண்டுபோல் பாசத்துடன் ஆடி--- 

 

செண்டு என்பது ஒரு வகை ஆயுதம். 

 

உக்கிரபாண்டியனுக்கு ஆலவாய்ச் சொக்கன் செண்டு ஆயுதத்தை வழங்கியதாகவும்செறுக்குக் கொண்டு இருந்த மேருமலையை,பாண்டியன் அந்த ஆயுததத்தால் அடித்து அதன் செறுக்கை நீக்கினான் எனவும் திருவிளையாடல் புராணத்தின் செண்டால் அடித்த படலத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

 

கரிகால் சோழன் வடக்கே படையெடுத்துச் சென்று வென்றுஇமயத்தைச் செண்டால் அடித்ததுபுலி பொறித்ததான் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது

 

இறையருள் என்னும் செண்டு கொண்டுபாசத்தை வென்றுநேசத்தை வளர்த்து,அறையருளைப் பெறுதல் வேண்டும்.

 

சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே--- 

 

சிந்தை --- மனம். மனமானது மாய்ந்து போகவேண்டும் என்கின்றார். மனம் மாய்ந்தால்தான் அமைதி நிலவும். மனமானது அலைபாய்ந்துகொண்டு இருந்தால் அமைதி இல்லை.

 

சித்து --- மெய்யறிவு.

 

வான்கெட்டு,மாருதம்மாய்ந்துழல் நீர் மண்கெடினும்

தான்கெட்டல் இன்றிசலிப்பு அறியாத் தன்மையனுக்கு,

ஊன்கெட்டு,உயிர்கெட்டு,உணர்வுகெட்டுன் உள்ளமும்போய்

நான்கெட்டவா பாடித்தெள்ளேணம் கொட்டாமோ.  ---திருவாசகம்.

 

பாத்திரத்தில் உள்ள அழுக்கை நீக்கிய பின்னரே,  அதில் பாலைக் கொள்ளுதல் வேண்டும். இல்லையானாலநல்ல பால் பயன்தராது கெட்டுப் போகும். பற்றுக்களை எல்லாம் அறத் துடைத்த பின்னரேஅனுபூதி நிலை வாய்க்கும்.

 

சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையில் செல்ல எனை விட்டவா" என்பார் அடிகளார் கந்தர் அலங்காரத்தில். "சும்மா இரு சொல் அற" என்று முருகப் பெருமான் தனக்குப் பணித்ததாஅருணை வள்ளல்அனுபைதியில் பாடுகின்றார்.

 

"மனம் பாழ் படுக்கும் மலர்ப் பூசனைசெய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார்" என்று திருஞானசம்பந்தர் பாடி உள்ளது காண்க. மேலும், "ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்த வாயான்" என்றும் அருளி உள்ளது காண்க.

 

தொண்டரால் காணப் பெறுவோனே--- 

 

எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும்அவர்களால் இறைவனைக் காண இயலாது. காண்பதற்கு அருமையாகவே இறைவன் இருப்பான். எல்லாவற்றையும் விட்ட உண்மைத் தொண்டர்க்கே இறையருள் வாய்க்கும். வாய்த்தால்தான்அருட்காட்சி

கிடைக்கும்.

 

பலகாலம் சிவ வழிபாட்டிலே நின்றிருந்த சிவபாத இருதயரால்பிரமதீர்த்தக் குளக்கரையில் நிகழ்ந்த அதிசயத்தைக் காண வாய்க்கவில்லை. திருஞானசம்பந்தர் சொன்னதை வைத்துநிகழ்ந்ததை உணர்ந்துகொண்டார்.

 

தாணுவினைத் தனி கண்டுதொடர்ந்தவர் தம்மைப்போல்,

காணுதல் பெற்றிலரேனும்நிகழ்ந்தன கண்டு உள்ளார்,

தோணிபுரத்து இறை தன் அருளாதல் துணிந்து,ர்வம்

பேணு மனத்தொடு முன்புகுகாதலர் பின்சென்றார்.

 

என்பது பெரியபுராணம் கூறுவது. இதன் பொருள் ---

 

சிவபெருமானைத் தாமே தனியே கண்டு அவரைத் தொடர்ந்தவரான திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் போல், (சிவபாத இருதயர்) தாம் அவ் இறைவரைக் காணாராயினும்நிகழ்ந்தனவான அடையாளக் குறிகளையும் திருப்பதிகத் தமிழ்பாடிச் சுட்டிக் காட்டியதையும் கண்டவராதலால்இது தோணிபுர இறைவரின் திருவருள் என்பதை உணர்ந்துமீதூர்ந்த அன்பு பொருந்திய மனத்துடன் தம்முன்பு சென்று கொண்டிருக்கும் திருமகனாரைத் தொடர்ந்து சென்றார்.

 

மேலும்கண்ணப்ப நாயனாருடைய சிறந்த அன்பு நெறியை இதில் காணலாம். கண்ணப்பருடைய அன்பும் அவருடைய புனித வரலாறும் மாற்றம் மனம் கழிய நின்றவை ஆகும்.

 

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்,

கேளார் கொல்அந்தோ கிறிப்பட்டார், –-- கீளாடை

அண்ணற்கு அணுக்கராய்க் காளத்தி உள்நின்ற

கண்ணப்பர் ஆவார் கதை.

 

என்கின்றார் தக்கோர் புகழும் நக்கீர தேவர். "கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்" என்பார் அன்புக் களஞ்சியமாகிய மணிவாசகனார்.

 

விதிமார்க்கமாவது முறையே வேதாகமங்களை ஓதி உணர்ந்து,அவற்றில் கூறியவாறு ஒழுகிமுறைப்படி இறைவனை வழிபட்டு மாறுபாடு இன்றி நிற்றலாம்.

 

அன்பு மார்க்கமாவதுஓரே அன்பு மயமாக நிற்றலாம். அன்பு நெறியில் கலைஞானம் கூறும் விலக்குகள் எல்லாம் தீ முன் எரியும் பஞ்சுபோல் பறந்து ஒழியும்.

 

விதி மார்க்கத்தில் சென்றவர் சிவகோசரியார்.

அன்பு மார்க்கத்தில் நின்றவர் கண்ணப்பர்.

 

விதிமார்க்கத்தில் செல்பவர் அன்பு மார்க்கத்தினை அடைதல் வேண்டும். அதனாலே தான்சிவபெருமான் கண்ணப்பர் கனவிலே போய், "திண்ணப்பா நீ ஊன் வேதிப்பதும்வாயில் உள்ள நீரை உமிழ்வதும்செருப்பு அணிந்த காலுடன் திருக்கோயிலுக்குள் வருவதும் நமக்கு அருவருப்பை விளைக்கின்றன. அவைகளை இனி செய்ய வேண்டாம். நமது அன்பன் சிவகோசரியார் வந்து பூசை செய்யும் விதியையும்மதியையும் எனக்குப் பின் ஒளிந்து இருந்து நீ தெரிந்து கொள்" என்று இறைவர் கண்ணப்பருக்குக் கூறியருளவில்லை. ஏனெனில்அன்பு மார்க்கத்திற்கு விதிமார்க்கத்தைக் காட்ட வேண்டியது இல்லை.

 

அன்பும் அறிவும் உடைய அருமை நேயர்கள் உற்று நோக்க வேண்டும். சிவபெருமான் விதிமார்க்கத்திற்கு அன்புநெறியைக் காட்டுவார் ஆகிசிவகோசரியார் கனவிலே போய் உரைத்தருளுகின்றார்.

 

அன்றுஇரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே

மின்திகழும் சடைமவுலி வேதியர்தாம் எழுந்தருளி

"வன்திறல் வேடுவன் என்று மற்றுஅவனை நீ நினையேல்

நன்றுஅவன்தன் செயல்தன்னை நாம்உரைப்பக் கேள்"என்று.

 

"அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும்

அவனுடைய அறிவுஎல்லாம் நமைஅறியும் அறிவுஎன்றும்

அவனுடைய செயல்எல்லாம் நமக்குஇனிய ஆம் என்றும்

அவனுடைய நிலைஇவ்வாறு அறிநீ" என்று அருள்செய்வார்.

 

"அன்பனேதிண்ணனாகிய அண்ணல் வேடன் வந்து என்மீது உள்ள பழைய மலர்களைச் செருப்பு அணிந்த காலால் நீக்குகின்றனன்.  அது எனது இளங்குமரன் திருமுருகன் செய்ய திருவடியினும் சிறப்பாக நமக்கு இன்பத்தைத் தருகின்றது”.

 

"பொருப்பினில் வந்துஅவன் செய்யும்

            பூசனைக்கு முன்புஎன்மேல்

அருப்பு உறும் மென்மலர் முன்னை

            அவை நீக்கும் ஆதரவால்,

விருப்பு உறும் அன்பு என்னும்

            வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த

செருப்பு அடிஅவ்விளம்பருவச்

            சேய் அடியின் சிறப்பு உடைத்தால்”,

 

"அவன் நமக்கு நீராட்டும் பொருட்டு உமிழும் எச்சில் நீரானதுகங்கை முதலிய புண்ணிய நீரினும் புனிதமானது”.

 

"உருகிய அன்புஒழிவு இன்றி

            நிறைந்த  அவன் உரு என்னும்

பெருகிய கொள்கல முகத்தில்

            பிறங்கிஇனிது ஒழுகுதலால்

ஒருமுனிவன் செவி உமிழும்

            உயர்கங்கை முதல் தீர்த்தப்

பொருபுனலின்எனக்கு அவன்தன்

            வாய்உமிழும் புனல் புனிதம்",

 

"அவ் வேடர் கோமான் தனது அழுக்கு அடைந்த தலை மயிராகிய குடலையில் கொணர்ந்து நமக்கு அன்புடன் சூட்டும் மலர்களுக்கு மாலயனாதி வானவர்கள் மந்திரத்துடன் சூட்டும் மலர்கள் யாவும் இணையாக மாட்டா”.

 

"இம்மலை வந்து எனை அடைந்த

            கானவன் தன் இயல்பாலே

மெய்ம்மலரும் அன்புமேல்

            விரிந்தன போல் விழுதலால்,

செம்மலர்மேல் அயனொடு மால்

            முதல்தேவர் வந்து புனை

எம்மலரும் அவன் தலையால்

            இடும் மலர்போல் எனக்கு ஒவ்வா”,

 

அவன் "வெந்து உளதோ" என்று மெல்ல கடித்தும், "சுவை உளதோ" என்று நாவினால் அதுக்கியும் பார்த்துப் படைத்த ஊனமுது வேள்வியின் அவி அமுதினும் இனியதாகும்.

 

"வெய்யகனல் பதம்கொள்ள

            வெந்துளதோ எனும் அன்பால்

நையும் மனத்து இனிமையினில்

            நையமிக மென்றிடலால்

செய்யும் மறை வேள்வியோர்

            முன்பு தரும் திருந்து அவியில்

எய்யும் வரிச் சிலையவன்தான்

            இட்ட ஊன் எனக்கு இனிய",

 

முனிவர்கள் கூறும் வேதாக மந்திரங்களினும்அச் சிலை வேடன் நெக்கு உருகி அன்புடன் கூறும் கொச்சை மொழிகள் மிகவும் நன்றாக என் செவிக்கு இனிக்கின்றன.

 

"மன்பெருமா மறைமொழிகள்

            மாமுனிவர் மகிழ்ந்து உரைக்கும்

இன்ப மொழித் தோத்திரங்கள்

            மந்திரங்கள் யாவையினும்,

முன்பு இருந்து மற்று அவன்தன்

            முகம் மலர அகம் நெகிழ

அன்பில் நினைந்து என்னைஅல்லால்

            அறிவுறா மொழி நல்ல”.

 

என்று சிவபெருமான் கூறியருளிய திருமொழிகள் கல் மனத்தையும் கரைத்து உருக்குவனவாம்.

 

எனவேஇறைவன் தொண்டரால் மட்டுமே காணக் கூடியவன் என்பது தெளிவாகும்.

  

துங்க வேல் கானத்து உறைவோனே--- 

 

துங்கம் --- உயர்வு. தூய்மை.

 

கானம் --- காடு. இங்கே திருவேற்காடு என்னும் திருத்தலத்தைக் குறித்து வந்தது.

 

"அருள் பாவு வேலங்காடு உறை சீல! பெருமாளே" என்று திருவேற்காட்டுத் திருப்புகழில் அடிகளார் அருளி உள்ளது காண்க.

 

மிண்டரால் காணக் கிடையானே --- 

 

மிண்டர் --- ஆணவம் மிக்கவர். அறிவில்லாதவன்.

 

ஆணவம் தன்னையே யார் என்று காட்டாது. அப்படி இருக்கஆண்டவனை அது காட்டுமாகாட்டாது. அணவத்தை விட்டொழித்தவர்க்கே அது இயலும். திருமாலும்பிரமனும் தேடிக் காணமுடியாத பரம்பொருள்.

 

"மிண்டரை விலக்கிய விமலன்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடி உள்ளார் என்பதை அறிக.

 

மண்டையில் குண்டிகை மாசுதரும்

மிண்டரை விலக்கிய விமலன் நகர்

பண்டுஅமர் தருபழங் காவிரியின்

தெண்திரை பொருதுஎழு சிவபுரமே.

 

இதன் பொருள் --- உண்கலன் குண்டிகை ஆகியனவற்றை ஏந்திய வராய்,மாசேறிய உடலினராய்த் தருக்கொடுதிரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர்பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.

 

வெஞ்சமாக் கூடல் பெருமாளே--- 

 

வெஞ்சமாக்கூடல் என்னும் திருத்தலம்தற்காலத்தில்வெஞ்சமாங்கூடலூர் என வழங்கப் பெறுகின்றது.

 

இறைவர்:    கல்யாணவிகிர்தேசுவரர்விகிர்தநாதேசுவரர்.

இறைவியார்  :    மதுரபாஷிணிபண்ணேர்மொழியம்மை

தல மரம்     :     வில்வம்

தீர்த்தம்      :     குடகனாறு. விகிர்த தீர்த்தம்

 

இத்தலம்வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்அமராவதியின் கிளை நதியான சிற்றாறுஅமராவதியுடன் கூடுமிடத்தில் (கூடல்) உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.

 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டுப் பாடிய அற்புதமான திருப்பதிகம் வாய்க்கப் பெற்றது. "தொழுவார்க்கு எளியாய்! துயர் தீர நின்றாய்" என்று பாடி இருப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

 

வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து,குடகனாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து இக்கோயில் கருங்கற்கள் 2 கி.மீ தூரம் அடித்துச் செல்லப்பட்டுஊரும் அழிந்த நிலை நேர்ந்து பல்லாண்டுகட்கு பிறகுபெரும் பொருட்செலவில் இத்திருக்கோயிலை புதியதாக எடுப்பித்து 1986-ல் திருக்குடமுழுக்கு நடத்தியுள்ளனர்.

 

கருத்துரை

 

முருகா! மெய்யறிவு தந்தருள்வாய்

 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...