விண்ணப்பக் கலிவெண்பா

                                                            விண்ணப்பக் கலிவெண்பா

------

 

     அண்மைக் காலங்களில்WHATSAPP குழுக்களில், "தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது -- ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது" என்பது முதலாகசில செய்திகள் வலம் வருகின்றது. இது முற்றிலும் உண்மை. ஆசையே பிறவிக்கு வித்து. பிறக்கின்ற உயிர்களுக்கு ஆசை என்பது அறுவதே இல்லை. ஆசை உள்ள வரையில் இவ்விதமான குற்றங்கள் மலிந்தே இருக்கும். அனுபவம் முதிர முதிரஅறிவு முதிர முதிரகுற்றங்கள் நீங்கும் என்பது உண்மை."ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் --- ஆசை விடவிட ஆனந்தம் ஆமே" என்பார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

      வள்ளல் இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய திருவருட்பா ஆறுதிருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. மூன்றாம் திருமுறையில், "விண்ணப்பக் கலிவெண்பா" என்னும் ஒரு பகுதி, 417 கண்ணிகளால் ஆனதொரு அருமையான பாடல் ஆகும். ஒரு சிறிய நூலாகவே இது அமைந்துள்ளது. "சொல்" எனத் தொடங்கி, "மலர்" என முடியும் இந்த நூல்,ஒரு "சொல்மலர்" ஆகவே உள்ளது. இறைவனுக்கு உகந்த மலர், "சொல்மலர்" தான். பிற மலர்கள் வாடும். சொல்மலர் என்றும் வாடாது.

 

     தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் தோறும் எழுந்தருளி இறைவனைக் குறித்து ஓதிஉயிர்க்கு உள்ள குற்றங்களை இறைவனிடத்தில் விண்ணப்பித்துஅவற்றைப் போக்கி ஆட்கொள்ளுமாறு சுவாமிகள் வேண்டுகின்றார்.

 

     பலகாலும் இந்த "விண்ணப்பக் கலிவெண்பா"வை ஓதுகின்ற வழக்கம் என்னிடத்தில் உள்ளது.  சுவாமிகள் எனக்காகவே பாடி வைத்துள்ளதாகத் தோன்றும்.

 

     WHATSAPP குழுக்களில், "தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது -- ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது" என்பது முதலாக உள்ள சில செய்திகள் போலமனிதர்களிடத்தில்பொருந்தி உள்ள குற்றங்கள் எவை எவை என்று சுவாமிகள் பாடியுள்ளதை அறிந்து கொள்வோம்.....

-----------

 

எல்லார்க்கும் நல்லவனே! எல்லாம்செய் வல்லவனே!

எல்லார்க்கும் ஒன்றாய் இருப்போனே!  

 

பொருள் --- இந்தப் பெரிய உலகில் உள்ள எல்லார்க்கும் நல்லவனே! எல்லவாற்றையும் செய்ய வல்லவனே! எல்லார்க்கும் ஒன்றுபோலவே இருப்பவனே!

 

தொல் ஊழி

ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடிநிழலில்

சேர்ந்து ஒடுங்க மாநடனம் செய்வோனே! 

 

பொருள் --- தொன்று தொட்டு வரும் சர்வசங்கார காலத்தில்எங்கும் விளங்குகின்ற அசைகின்றஅசையாத பொருள்கள் அனைத்தும்உனது திருவடி நிழலில் ஒடுங்குமாறு மாபெரும் ஊழித் தாண்டவத்தைப் புரிபவனே!

 

சார்ந்து உலகில்

எத்தேவர் மெய்த்தேவர் என்று உரைக்கப் பட்டவர்கள்,

அத்தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே!  

 

பொருள் --- இந்த உலகத்தில் இருந்துஎந்தக் கடவுளர் உண்மையான கடவுளர் என்று சொல்லப்பட்டுள்ளனரோஅவர்கள் அனைவர்க்கும் முன்னவனாக உள்ளவவனே!

 

சத்தான

வெண்மைமுதல் ஐவணமும் மேவிஐந்து தேவர்களாய்த்

திண்மைபெறும் ஐந்தொழிலும் செய்வோனே! 

 

பொருள் --- சத்துவம் என்று சொல்லப்படும் வெண்மை நிறம் முதல்பொன்னிறம்செந்நிறம்கருநிறம்புகைநிறம் என்னும் ஐந்து நிறங்களும் ஆகிபிரமன்திருமால்உருத்திரன்மகேசன்சதாசிவன் என்னும் ஐந்து கர்த்தர்கள் ஆகிமுறையே படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் (பஞ்ச கிருத்தியங்களையும்) ஆற்றுபவனே!

 

மண்முதலாம்

ஐந்தாய்,இருசுடராய்,ஆன்மாவாய்,நாதமுடன்

விந்து ஆகி எங்கும் விரிந்தோனே! 

 

பொருள் --- மண் முதலாநீர்நெருப்புகாற்றுவானம் என்னும் ஐந்து நுட்பங்கள் ஆகிசந்திர சூரியர் என்னும் இரு ஒளிப் பொருள்கள் ஆகிஆன்மாவும் ஆகிநாத தத்துவத்தோடு விந்து முதலாகிய எல்லாப் பொருள்களுமாய் எங்கும் வியாபகமாக விளங்குபவனே!

 

அந்தண! வெண்

நீறு உடையாய்! ஆறு உடைய நீள்முடியாய்! நேட அரிய

வீறு உடையாய்! நின் தனக்கோர் விண்ணப்பம்,

 

பொருள் --- அழகும்தண்மையும் பொருந்தியவனே! திருவெண்ணீற்றை அணிந்தவனே! கங்கை நதி பொருந்திய நீண்ட சடைமுடியை உடையவனே! யாராலும் தேடிக் காணமுடியாத மேலோனே! உன்னிடத்தில் நான் செய்து கொள்ளும் ஒரு விண்ணப்பம் (அதைக் கேட்டு)

 

மாறுபட

எள்ளல்டியேன் எனக்குள் ஒளியாமல்

உள்ள படியே உரைக்கின்றேன்,

 

பொருள் --- எளியேனை மாறுபட்டு இகழவேண்டாம். உனது அடிமையாகிய நான்எதையும் ஒளிக்காமல்எனக்கு உள்ள குறைகளை உள்ளது உள்ளபடியே சொல்லுகின்றேன், (கேட்டு அருள்வாய்)

 

விள் உறும் யான்

வன்சொல் உடன் அன்றி,வள்ளல்! உனது அன்பர் தமக்கு

இன்சொல் உடன் பணிந்துஒன்றுஈந்தது இ(ல்)லை;

 

பொருள் --- வரையாது அருள் வழங்கும் கொடையானே! (உன்னிடத்தில் இப்போது) விண்ணப்பம் செய்கின்ற அடியவன் ஆகிய நான்இதுவரையில் யாரிடமும் கடுமையான மொழிகளையே கையாண்டது அல்லாமல்பணிவாகப் பேசிஅவர்களுக்கு ஒரு சிறு பொருளையும் உதவியது இல்லை,  

 

புன்சொல் எனும்

பொய் உரைக்க என்றால் புடை எழுவேன்,அன்றிஒரு

மெய் உரைக்க என்றும் விழைந்தது இ(ல்)லை;

 

பொருள் --- அற்பமான சொல் எனப்பெறும் பொய்களைச் சொல்லுவது என்றால்குதித்துப் புறப்படுவேன். அது அல்லாமல்ஒரு மெய் வார்த்தையும் பேச எந்த நாளிலும் நான் விரும்பியது இல்லை.

 

வையகத்தில்

பொல்லா விரதத்தைப் போற்றி உவந்து உண்பது அல்லால்

கொல்லா விரதத்தைக் கொண்டது இ(ல்)லை;

 

பொருள் --- உலகத்தில்இரக்கம் அற்ற பொல்லாத நோன்புகளை ஏற்றுஉவகையோடு உண்பது அல்லாமல்கொல்லாமையாகிய கனிவு மிக்க விரதத்தை நான் ஒருநாளும் கைக்கொண்டது இல்லை.

 

அல்லாதார்

வன்புகழைக் கேட்க மனம் கொண்டது அல்லாமல்,

நின்புகழைக் கேட்க நினைந்தது இ(ல்)லை;

 

பொருள் --- புண்ணிய நெறிக்குப் புறம்பானவர்களின் குற்றம் கொண்ட புகழைக் கேட்க மனம் விரும்பியது அல்லாமல்சிறந்த உனது திருப்புகழைக் கேட்க நான் நினைத்ததும் இல்லை.

 

வன்புகொண்டே

இல் அடிக்கு நுண்ணிடையார்க்கு ஏவல் புரிந்தேன்லது உன்

பொன்னடிக்குத் தொண்டு புரிந்தது இ(ல்)லை;

 

பொருள் --- வன்மையான உள்ளத்தோடுஇல்லற வாழ்க்கையில் நாடகம் ஆடும்காமவயப்பட்டசிற்றிடையை உடைய பெண்களுக்கு குற்றேவல் புரிந்தது அல்லாதுஉனது அழகிய திருவடிக்குத் தொண்டு புரிந்தது இல்லை.

 

பன்னுகின்ற

செக்கு உற்ற எள்எனவே சிந்தை நசிந்தேன்அ(ல்)லது

முக்குற்றம் தன்னை முறித்தது இ(ல்)லை;

 

பொருள் --- ஓசை எழுப்புகின்ற செக்கில் அகப்படுக் கொண்ட எள் என்று சொல்லும்படி மனம் நொந்து வருந்தினேன். அல்லாமல்அதற்குக் காரணம் ஆன காமம்வெகுளிமயக்கம் என்னும் முக் குற்றங்களை முறியடித்து நீக்கியது இல்லை.

 

துக்கம் மிகும்

தா இல் வலங்கொண்டு சஞ்சரித்தேன் அல்லதுநின்

கோவில் வலங் கொள்ளக் குறித்தது இ(ல்)லை;

 

பொருள் --- கொடுமையான துன்பம் வந்து கூடும்படிபலத்துடன் நாசம் கூடுகின்ற இடத்தில் இருந்தேன். அல்லாமல், (வாழ்வு அருளும்) உனது திருக்கோயிலை வலம் வர எண்ணியது இல்லை.

 

பூவுலகில்

வன்நிதியோர் முன்கூப்பி வாழ்த்தினேன்,அன்றிஉன்றன்

சன்னிதியில் கைகூப்பித் தாழ்ந்தது இ(ல்)லை;

 

பொருள் --- இந்த நிலவுலகத்தில்பெரும் செல்வந்தர் முன் சென்று கைகளைக் குவித்துக் கும்பிட்டுஅவர்களை வாழ்த்திப் பாடியது அல்லாமல்உனது சந்நிதியில் வந்து ஒருநாளும் கைகுவித்துக் கும்பிட்டது இல்லை.

 

புன்னெறி சேர்

மிண்டரொடு கூடி வியந்தது அல்லால்,ஐயா! நின்

தொண்டரொடும் கூடிச் சூழ்ந்தது இ(ல்)லை;

 

பொருள் --- அற்ப வழியில் செல்லுகின்ற முரடர்களோடு கூடியிருந்து,அவர்களை வியந்தது அல்லாமல்ஐயனே! உனது தொண்டர்களோடு கூடியிருந்துஅவர்களை வலம் செய்து வணங்கியது இல்லை.

 

கண்டவரைக்

கன்றுமுகம் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பதுல்லால்

என்றும் முகமலர்ச்சி ஏற்றது இ(ல்)லை;

 

பொருள் ---  என்னைப் பார்க்க வந்தவரை எல்லாம்கடுகடுத்த முகத்தோடுசினந்து பார்ப்பது அல்லாமல்ஒரு நாளும் அவர்களை முகம் மலர்ந்து வரவேற்றது இல்லை.

 

நன்றுபெறு

நன்னெஞ்சர் உன்சீர் நவில,அதுகேட்டுக்

கல் நெஞ்சைச் சற்றும் கரைத்தது இ(ல்)லை;

 

பொருள் --- நன்மையை உடைய உத்தமர்கள்உனது திருப்புகழை விரித்துச் சொல்லஅது கேட்டும்எனது கல்மனமானது ஒரு சிறிதும் கரைந்து உருகவில்லை.

 

பின் எஞ்சாப்

பண்நீர்மை கொண்டதமிழ்ப் பாமாலையால் துதித்துக்

கண்ணீர் கொண்டு உன்பால் கனிந்தது இ(ல்)லை;

 

பொருள் --- குறையாத பண்ணின் தன்மை கொண்ட தமிழ்ப் பாடல்களை மாலையாக உனக்கு அணிந்து உன்னை வணங்கித் துதித்துகண்ணீர் மல்கி ஒரு நாளும் உள்ளம் கனிந்தது இல்லை.

 

தண்ணீர் போல்

நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல்,எனைநீ

அஞ்சல் என நின்தாள் அடுத்தது இ(ல்)லை;

 

பொருள் --- குளிர்ந்த நீரைப் போல உள்ளம் உருகி உன்னை நினைக்கும் அடியவர்களைப் போஎன்னை நீ, "அஞ்சாதே" என்று உனது திருவடிகளை அருளியது இல்லை.

 

விஞ்சு உலகர்

மெய்யடியன் என்று உரைக்க,வித்தக! நின் பொன்னடிக்குப்

பொய்யடிமை வேடங்கள் பூண்டது உண்டு;

 

பொருள் --- ஞான வடிவானவனே! உலகில் உள்ள பெரியோர்கள்என்னைப் பார்த்து ஏமாந்துஉண்மையான அடியவன் எனக் கூறுமாறுபொன்னான உனது திருவடிக்கு அன்பன் என்னும்படிபொய்யான வேடங்களைப் புனைந்து நின்றது உண்டு.

 

நையமிகு

மையல் வினைக்கு வந்த மாதர் புணர்ச்சி எனும்

வெய்ய வினைக் குழியில் வீழ்ந்தது உண்டு;

 

பொருள் --- நாளாக நாளாக நைந்த நிலை வளருமாறுஉள்ள மயக்கத்தைத் தருகின்ற பெண்களோடு கூடுதற்குவெப்பத்தைத் தருகின்ற குழியில்விறுவிறுப்போடு பலநாள் விழுந்தது உண்டு,

 

துய்யர் தமை

என் ஒன்றும் இல்லாதுயல்பாகப் பின் ஒன்று

முன்ஒன்றும் ஆக மொழிந்தது உண்டு;

 

பொருள் --- தூயவர்களையாதொரு காரணமும் இல்லாமல்இயல்பாகவேஅவர்களைக் கண்டபோது ஒன்றும்அவர்கள் இல்லாதபோது ஒன்றுமாக உளறி வழிந்தது உண்டு.

 

மன்னுகின்ற

மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்குத்

தானம் செய்வாரைத் தடுத்தது உண்டு;

 

பொருள் --- பொருந்தி இருக்க வேண்டிய மானத்தைப் பொருட்படுத்தாதுமனம் வருந்தி வந்து பிச்சை ஏற்பவர்களுக்குதானம் அளிப்பவர்களைஅவ்வாறு செய்யாமல் தடுத்தது உண்டு.

 

ஈனம் இலா

வாரம் உரையாது,வழக்கின் இடைஓர

வாரம் உரைத்தே மலைந்தது உண்டு;

 

பொருள் --- இழிவு இல்லாத மேலான அன்பு மொழி பேசாமல்வாதப் பிரதிவாதிகளுக்குள் உண்டான வழக்கில்ஒருதலைப் பட்சமாகப் பேசிவல்லடி வாழ்க்கையை நான் வாழ்ந்தது உண்டு.

 

ஈரம் இலா

நெஞ்சர் உடன்கூடி நேசஞ் செய்தும் அடியே

தஞ்சம் எனத் தாழாது தாழ்ந்தது உண்டு;

 

பொருள் ---உள்ளத்தில் இரக்கம் இல்லாதவர்களுடன் நட்புப் பூண்டு இருந்து,உனது திருவடியே தஞ்சம் என எண்ணித் தாழ்ந்து பணியாதுதாழ்ந்து போனது உண்டு,

 

எஞ்சல் இலாத்

தாய் அனையாய் உன்தனது சந்நிதி நேர் வந்தும்ஒரு

நேயமும் இல்லாது,ஒதி போல் நின்றது உண்டு;

 

பொருள் --- தளர்ச்சியை அறியாத தாயைப் போன்றவனே! உன்னுடைய சந்நிதியில் வந்து இருந்தும்ஒரு சிறிதும் அன்பு வைத்து உன்னைப் பணியாமல்ஒதியமரம் போலச் சும்மா நின்றது உண்டு,

 

தீயவினை

மாளாக் கொடிய மனச் செல்வர் வாயிலில் போய்க்

கேளாச் சிவநிந்தை கேட்டது உண்டு;

 

பொருள் --- தீய செயலில் ஒரு நாளும் தீராத கொடிய மனத்தை உடைய செல்வர் வீட்டு வாயிலில் போய் நின்றுஅவர்கள் சொல்லுகின்ற கேட்கத் தகாத சிவநிந்தனைகளைக் கேட்டது உண்டு.

 

 

மீளாத

பொல்லாப் புலையரைப் போல் புண்ணியரை வன் மதத்தால்

சொல்லா வசை எல்லாம் சொன்னது உண்டு;

 

பொருள் --- தீய பொல்லாங்குகளில் இருந்து என்றும் மீளாது உள்ள அற்பர்களைப் போல் இறுமாப்புக் கொண்டுசிவபுண்ணியத்தில் சிறந்தவர்களை சொல்லத் தகாத நிந்தனைகள் பலவும் சொல்லியது உண்டு.

 

நல்லோரைப்

போற்றாது,பொய் உடம்பைப் போற்றி,சிவபூசை

ஆற்றாது,சோற்றுக்கு அலைந்தது உண்டு;

 

பொருள் --- நல்லவர்களைப் போற்றி வணங்காமல்இந்தப் பொய் உடலைப் பாதுகாத்து,சிவபூசை செய்யாமல், (அந்தப் பாவத்தின் விளைவாக) சோற்றுக்குத் திண்டாடி அலைந்தது உண்டு.

 

தேற்றாமல்

ஈ பத்தா என்று இங்கு இரப்போர் தமைக் கண்டு

கோபத்தால் நாய்போல் குரைத்தது உண்டு; 

 

பொருள் --- எனது தகுதியை எண்ணிப் பாராமல்,  (என்னைப் பார்த்து)அன்பனே! எனக்கு உதவி செய்யவேண்டும் என்று கையேந்தி நிற்பவரைப் பார்த்துகோபத்தினால்அவர்களை ஏசிநாயைப் போல் குரைத்து நின்றது உண்டு.  

 

 

பாபத்தால்

சிந்தை ஒன்று,வாக்கு ஒன்று,செய்கை ஒன்றாய்ப் போகவிட்டே

எந்தை! நினை ஏத்தாது இருந்தது உண்டு;

 

பொருள் --- நான் செய்த பாவங்களின் விளைவா, (மனம் ஒருமைப் படாமல்) வார்த்தை ஒன்றாகவும்செயல் வேறாகவும் கொண்டுஎனது தந்தையே! உன்னைப் போற்றிப் புகழாமல்பொழுது கழித்து இருந்தது உண்டு.

 

புந்தி இந்த

சொல்லைக் கல் என்று நல்லோர் சொன்னபுத்தி கேளாமல்,

எல்லைக் கல் ஒத்தே இருந்தது உண்டு;

 

பொருள் --- அறிவுடைய இந்த சொல்லைக் கற்றுக்கொள் என்று நல்லோர் சொன்ன அறிவுரையைக் கேளாமல்எல்லையை அறிவிக்கின்ற கல்லைப் போன்று அசைவில்லாமல்சும்மா இருந்தது உண்டு.

 

தொல்லைவினை

ஆழ்த்து ஆமய உலகில் அற்ப மகிழ்ச்சியினால்

வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு;

 

பொருள் --- முந்தைய விளைகளின் விளைவாக நிலையில்லாப் பிறவிகளை எடுத்து உழன்ற இந்த உலகத்தில்உண்டான அற்ப மகிழ்ச்சியினால்உன்னை வாழ்த்தாமல் மறந்து இருந்தது உண்டு.

 

தாழ்த்தாமல்

பூணா எலுமபு அணியாய்ப் பூண்டோய்! நின் பொன்வடிவம்

காணாது வீழ்நாள் கழித்தது உண்டு;

 

பொருள் --- இவை தாழ்ந்தவை என்று கருதாமல்யாரும் பூண்டுகொள்ள விரும்பாத எலும்புகளை அணிகலன்களாகப் பூண்டவனே! உனது அழகிய திருமேனியைக் கண்ணாரக் காணாமல்வாழ்நாளை வீண் போக்கியது உண்டு.

 

மாணாத

காடுபோல் ஞாலக் கடுநடையிலேஇருகால்

மாடுபோல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு;

 

பொருள் --- பெருமை இல்லாத காடு போன்ற கடிய நடை உள்ள இந்த உலக ஒழுக்கத்தில்இரு கால்களை உடைய மாடு போலவாழ்நாள் முழுதும் வயிறு வளர்க்க மட்டும் வாழ்ந்து இருந்தது உண்டு.

 

நாடு அகன்ற

கள்ளிவாய் ஓங்கு பெருங் காமக் கடுங்காட்டில்

கொள்ளிவாய்ப் பேய்போல் குதித்தது உண்டு;

 

பொருள் --- நாட்டிற்குப் புறம்பே உள்ள (ஒழுக்கத்திற்குப் புறம்பான) வரம்பு கடந்த காமம் என்னும் பெரிய கள்ளிச் செடிகள் வளர்ந்துள்ள காட்டில்,கொள்ளிவாய்ப் பேயைப் போலக் குதித்துக் கூத்தாடியது உண்டு.

 

ஒள்ளியரால்

எள் உண்ட மாயா இயல்பு உறுபுன் கல்வி எலாம்

கள் உண்ட பித்தனைப்போல் கற்றது உண்டு;

 

பொருள் --- சான்றோர்களால் மதிக்கப்படாததும்அறிவு மயக்கும் இயல்பை உடையதும் ஆன அற்பமான கல்வி அனைத்தையும்கள்ளைக் குடித்து மயக்கம் கொண்டு பிதற்றுகின்ற பித்தனைப் போலக் கற்றது உண்டு.

 

நள்உலகில்

சீராசை எங்குஞ்சொல் சென்றிடவே வேண்டும் எனும்

பேராசைப் பேய்தான் பிடித்தது உண்டு;

 

பொருள் --- மேலான நட்புப் பூண்டு ஒழுகுவதற்கு உரிய இந்த உலகத்தில்சிறந்த எந்தத் திசையிலும்எனது சொல்லே செல்லுபடியாக வேண்டும் என்கின்ற பேராசை என்னும் பேய் என்னைப் பிடித்து நின்றது உண்டு. (ஆசை --- திசை)

 

தீரா என்

சாதகமோ?தீவினையின் சாதனையோ?நான் அறியேன்

பாதகம் என்றால் எனக்குப் பால்சோறு;

 

பொருள் --- முடிவு இல்லாத எனது சாதகப் பலனோநான் முன்னர் செய்த பாதகச் செயல்களின் விளைவோஇன்னது என்று என்னால் அறிந்துகொள்ள இயலவில்லை. பாவ காரியம் செய்வது என்றால்எனக்குப் பால் சோறு உண்டது போல இருக்கின்றது.

 

தீது அகன்ற

தூய்மை நன்றாம் என்கின்ற தொன்மையினார் வாய்க்குனிய

வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும்;

 

பொருள் --- பாவம் இல்லாத சுத்த அறிவை இது விளைவிக்கும் என்று அறிவுறுத்துகின்ற முன்னோர்கள் வாய்க்கு,இன்பத்தை விளைக்கின்ற சொல்லை எவரேனும் சொன்னால்அந்த ஓசையானது என்னுடைய காதில் புகுந்துவாய் வழியாக வாந்தி எடுப்பது போல் உள்ளது. (நல்லோர்கள் விரும்புகின்ற உண்மையைப் பேசுவது எனக்குப் பிடிக்காது)

 

காய்மை தரும்

கற்கு நிகராம் கடுஞ்சொல் அன்றி நன்மதுரச்

சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண்;

 

பொருள் --- கடுமை தருகின்ற கல்லுக்கு நிகரான கடுமையான சொற்கள் அல்லாமல்நல்ல இனிமை பயக்கும் சொற்களுக்கும் எனக்கும் வெகுதூரம்.

 

பொற்புமிக

நண்ணி உனைப் போற்றுகின்ற நல்லோர்க்கு இனியசிவ

புண்ணியம் என்றால் எனக்குப் போராட்டம்;

 

பொருள் --- பொலிவு மிகுமாறு உன்னை விரும்பிப் போற்றி வழிபடுகின்ற நல்லவர்க்குஇனிமை தருகின்ற சிவபுண்ணியச் செயலைச் செய்வது என்பது எனக்குப் போராட்டமாகத் தோன்றுகின்றது.

 

அண்ணல் உனை

நாள் உரையாது ஏத்துகின்ற நல்லோர்மேல்,இல்லாத

கோள் உரை என்றால் எனக்குக் கொண்டாட்டம்;

 

பொருள் --- அண்ணலே! உன்னை ஒரு நாளும் தவறாமல் வழிபடுகின்ற நலத்தை உடைய நல்லவர்கள் மீதுஇல்லாத குறைகளை எல்லாம் சொல் என்று யாராவது சொன்னால்எனக்குக் கொண்டாட்டமாக உள்ளது.

 

நீள நினை

நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகமநூல்

வாசிக்க என்றால் என் வாய் நோகும்;

 

பொருள் --- உன்பால் அன்பு வளரச் செய்யும் நல்ல நெறியை அருளுகின்ற சிவாகம நூல்களை வாசிப்பது என்றால்என்னுடைய வாய் வலிக்கும். (அருள் நூல்களைப் படிக்க மனம் வராது)

 

காசிக்கு

நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லதுவீண்

வேடிக்கை என்றால் விடுவது இல்லை;

 

பொருள் --- வடதிசையில் உள்ள காசிக்கு அப்புறம் நெடுந்தூரத்தில் நிகழ்ந்தாலும்வீண் வேடிக்கைகள் எங்கு நடந்தாலும் விடுவதில்லை. சென்று கண்டு அறிந்து திரும்புவது எனது வழக்கம். 

 

நாடு அயலில்

வீறாம் உனது விழாச் செயினும் அவ் இடந்தான்

ஆறாயிரம் காதம் ஆம் கண்டாய்;

 

பொருள் --- வீட்டுக்கு அண்மையில்பெருமைக்கு உரிய உனது திருவிழா நடக்கின்றது என்றாலும்அந்த இடமானதுஎனக்கு ஆறாயிரம் காத தூரம் போல் தோன்றுகின்றது. (திருவிழாக் காண மனம் இல்லை)

 

மாறான

போகம் என்றால் உள்ளம் மிகப் பூரிக்கும்,அன்றிசிவ

யோகம் என்றால் என்னுடைய உள் நடுங்கும்;

 

பொருள் --- இயற்கைக்கு மாறான உலக இன்பங்கள் என்றால் எனது உள்ளமானது மிகவும் பூரிப்பு அடையும். அல்லாமல்சிவயோகம் என்றாலோஎனது உள்ளமானது மிகவும் நடுங்கும்.

 

சோகம் உடன்

துள்ளல் ஒழிந்து என் நெஞ்சம் சோர்ந்து அழியும் காலத்தில்

கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும்;

 

பொருள் --- துன்பத்துடன் எனது உள்ளத் துடிப்பு சோர்வு அடைந்துமரணம் சம்பவிக்கின்ற காலத்திலும் கூடகள்ளத் தனம் என்றால் எனது மனமானது மகிழ்ச்சியால் துள்ளி எழும்.

 

அள்ளல் நெறி

செல் என்றால் அன்றி,சிவசிவா என்று ஒருகால்

சொல் என்றால் என் தனக்குத் துக்கம் வரும்;

 

பொருள் --- (சேறு மிகுந்த) துன்பத்தைத் தருகின்ற தீயவழியில் நடக்கவேண்டும் என்றால்அதுஎனக்கு இன்பத்தைத் தரும். அல்லாமல்சிவசிவ என்று ஒருமுறையாவது சொல் என்று யாரேனும் சொன்னால்எனக்குத் துக்கம் வரும்.

 

நல்ல நெறி

வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறாக் கொடிய

சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண்;

 

பொருள் --- நல்லநெறியில் பயின்று பயன் பெற்ற நல்லோர்கள்அயர்ந்த போதும் மறந்தகொடிய சோம்பல் குணம் என்பதுதான் நான் கொண்டுள்ள உறவு ஆகும்.

 

ஏம்பலுடன்

எற்றோ இரக்கம் என்பது என்தனைக் கண்டு அஞ்சிஎனை

உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண்;

 

பொருள் --- மகிழ்ச்சியைத் தருகின்ற உயிர் இரக்கம் (சீவகாருண்ணியம்) என்பது என்னைக் கண்டால் அஞ்சி. என்னை மட்டும் அல்லாமல்என்னைச் சார்ந்தோரையும் ஒரு சேரக் கைவிட்டு ஓடிவிடும்.

 

சற்றேனும்

ஆக்கமே சேராது அறத் துரத்துகின்ற வெறும்

தூக்கமே என் தனக்குச் சோபனம் காண்;

 

பொருள் ---  சிறிதளவும் ஆக்கம் என்னும் திருவருளானது சேராதபடிஅடியோடு துரத்தி விடுகின்றவெறும் தூக்கம் என்பது தான் எனக்கு நற்செய்தி ஆகும்.(நல்ல பொழுதை எல்லாம் தூக்கத்தில் கழிக்கின்றவனுக்குஆக்கம் சேராது. தூக்கம் ஆக்கத்தைத் தொலைக்கும்)

 

ஊக்கம் மிகும்

ஏறு உடையாய்! நீறு அணியா ஈனர்மனை ஆயினும்,வெண்

சோறு கிடைத்தால் அதுவே சொர்க்கம் காண்;

 

பொருள் --- எழுச்சி உள்ள தரும விடையினை வாகனமாக உடையவனே! புனிதமான திருநீற்றை அணியாத இழிந்தவர்கள் வீடு ஆனாலும்அங்கே வெண்மையான சோறு கிடைத்தால் அந்த இடமே எனக்குச் சுவர்க்க இன்பத்தைத் தரும்.

 

வீறுகின்ற

வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர் தமை எஞ்ஞான்றும்

தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண்;

 

பொருள் --- பெருமைக்கு உரிய வாழ்விற்கு வழிகாட்டும் நல்ல மனத்தை உடையவர்களை எப்போதும்தாழ்த்திப் பேசுவது எனது பிறப்பு இயல்பு( பிறவிக் குணம்) ஆகும். (எனது சாதகத்தில் உள்ளது தான்).

 

வேள்வி செயும்

தொண்டர் தமைத் துதியாத் துட்டரைப்போல் எப்பொழுதும்

சண்டை என்பது என்தனக்குத் தாய்தந்தை;

 

பொருள் --- வேள்விகளை இயற்றுகின்ற தொண்டர்களைத் துதித்து வணங்காத துட்டர்களைப் போல்எப்பொழுதும் சண்டை இடுவதுஎனக்குத் தாய்தந்தையர் போன்ற தொடர்பை உடையது.

 

கொண்டஎழு

 தாதாட ஓங்கித் தலையாட வஞ்சரொடு

வாதாட என்றால் என் வாய் துடிக்கும்;

 

பொருள் --- உடலில் கொண்ட எழுவகைத் தாதுக்களும் கலங்கிஎனது தலையானது ஆட்டம் காணுமாறுவஞ்சகர்களோடு வாதம் புரிவது என்றால் எனது வாயானது துடிதுடிக்கும்.

 

கோதாடச்

சிந்தை திரிந்து உழலும் தீயரைப்போல்,நல் தரும

நிந்தை என்பது என் பழைய நேசம் காண்;

 

பொருள் ---குற்றங்கள் நிறைந்து விளங்க உழலுகின்ற தீயவர்களைப் போல்நல்ல அறச் செயல்களை நிந்தித்தல் என்பது எனக்குப் பழைய தொடர்பு ஆகும்.

 

முந்த நினை

எண் என்றால் அன்றி,இடர் செய்திடும்கொடிய

பெண் என்றால் தூக்கம் பிடியாது;

 

பொருள் --- முதலில்,உன்னை நினை என்று சொன்னால் எனக்குத் தூக்கம் வரும். அல்லாமல்துயரத்தை விளைக்கின்ற கொடுமையான பெண் என்று சொன்னாலோஎனக்குத் தூக்கம் வராது.

 

பெண்கள் உடல்

புல் என்றால் தேகம் புளகிக்கும்,அன்றி விட்டு

நில் என்றால் என்கண்ணில் நீர் அரும்பும்;

 

பொருள் --- பெண்கள் உடலைத் தழுவி இரு என்று சொன்னால் எனது உடம்பு புளகாங்கிதம் அடையும். மாறாஅவர்களை விட்டு நில் என்று சொன்னால் எனது கண்களில் நீர் அரும்பும்.

 

புல்லர் என்ற

பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறு

நீர்க்குழியே யான் குளிக்கும் நீர்ப்பொய்கை;

 

பொருள் --- ஒழுக்கத்தில் தாழ்ந்தோர் என்று சொல்லப்படுகின்றவர்க்கும் அருவருப்பை விளைவிக்கும்பெண் பேய்களின் வெப்பமான சிறுநீர்க் குழிதான் நான் முழுகிக் குளிக்கும் குளம்.(பெண் பேய்கள் என்று சுவமிகள் சொல்லியதுபொருள் காரணமாககாம மயக்கத்தை உண்டுபண்ணுகின்ற பொதுமகளிரை ஆகும்)

 

சீர்க்கரையின்

ஏறாப் பெண் மாதர் இடைக்குள் அளிந்துன்றும்

ஆறாப் புண்ணுக்கே அடிமை நான்;

 

பொருள் --- சிறந்த (முத்தி எனும்) கரையில் ஏற எண்ணாத பெண்களின் அழகிய இடையின் அருகில் நைந்த இரணம் போல இருக்கும்எந்த நாளிலும் ஆறாத அந்தப் புண்ணுக்கே நான் அடிமை ஆனேன்.

 

தேறாத

வெஞ்சலம் செய் மாயா விகாரத்தினால் வரும்வீண்

சஞ்சலம் எல்லாம் எனது சம்பந்தம்;

 

பொருள் --- மாயையின் விகற்பம் காரணமாக,தெளியாவெம்மையான வஞ்சக எண்ணத்தினால் வருகின்ற வீணாண துன்பங்கள் எல்லாம் எனக்குத் தொடர்பு உடையவை.

 

அஞ்செழுத்தை

நேர்ந்தார்க்கு அருள்புரியும் நின் அடியர் தாமேயும்

சார்ந்தால் அது பெரிய சங்கட்டம்;

 

பொருள் --- அஞ்செழுத்தைத் தகுதி உடையோர்க்கு உபதேசிக்கின்ற அருள் நிறைந்த உனது அடியவர்கள் வலிந்து வந்தாலும்அது எனக்குப் பெரிய சங்கடத்தைத் தருகின்றது.

 

ஆர்ந்திடும் மான்,

காந்தும் விழிப் புலியைக் கண்டதுபோல்,நல்லகுண

சாந்தம் எனைக் கண்டால் தலைசாய்க்கும்;

 

பொருள் ---புல்லைப் புசித்து வாழுகின்ற மானாதுகோபத்தோடு பார்க்கும் புலியைக் கண்டு விரைந்து ஓடுவது போலநல்ல சாந்த குணமானது என்னைக் கண்டால்தலைகுனியும். (நல்ல குணம் என்னை நெருங்காது)

 

ஆம் தகையோர்

சேர மனத்தில் செறிவித்திடும் புருட

தீரம் எனைக் கண்டால் சிரிக்கும் காண்;

 

பொருள் --- தகுதி உடையோர் மனத்தில் சேருமாறு நிறைகின்ற ஆடவர்க்கு உரிய தைரியம் என்பதுஎதற்கும் தகுதி அற்ற என்னைக் காண்டால்நாணிச் சிரிக்கும்.

 

கோரம் அதைக்

காணில்,உலகில் கருத்து உடையோர் கொள்ளுகின்ற

நாணம் எனைக்கண்டு நாணும் காண்;

 

பொருள் --- எனது கொடுமையைக் கண்டால்இந்த உலகில் சிறந்த எண்ணங்களை உடையவர்கள் கொண்டுள்ள (சிறந்த அணிகலமான) நாணம் என்பது என்னைக் கண்டு நடுக்கம் அடையும்.

 

ஏண் உலகில்

ஞானம் கொளா எனது நாமம் உரைத்தாலும்பி

மானம் பயம் கொண்டு மாய்ந்துவிடும்;

 

பொருள் --- உயர்ந்த இந்த உலகத்தில்நல்லறிவு சற்றும் இல்லாத எனது பெயரைச் சொன்னாலும்மேன்மை பொருந்திய மானம் (பெருமை) என்பது அச்சம் கொண்டு மறைந்து போய்விடும்.

 

ஆன உன்தன்

கேண்மைக் குலத்தொண்டர் கீர்த்தி பெறக்கொண்ட

ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது;

 

பொருள் --- உன்னிடத்தில் உண்டான அன்பில் சிறந்த தொண்டர்கள் பெற்றுள்ள புகழ் மிக்க வீரத்திற்கு எனது பெயரைச் சொன்னாலும் ஏற்காது மறுத்துவிடும். (ஈர அன்பினர்யாதும் குறைவு இலர்,வீரம் என்னால் விளம்பும் தகையதோ --- சேக்கிழார்)

 

வாண்மை பெறும்

ஐய! நின்தாள் பூசிக்கும் அன்பர் உள்ளத்து அன்பிற்கும்

பொய்யன் எனக்கும் பொருத்தம் இலை;

 

பொருள் --- பேரொளிப் பிழம்பாகத் திகழும் ஐயனே! உனது திருவடியைப் போற்றி வழிபடுகின்ற அன்பர்கள் உள்ளத்தில் திகழும் அன்பிற்கும்பொய்யவன் ஆகிய எனக்கும் ஒரு சிறிதும் பொருத்தம் இல்லை.

 

வையகத்தோர்

இல் எனினும் சும்மா நீ ஈகின்றேன் என்றுருசொல்

சொல் எனினும் சொல்லத் துணிவு கொ(ள்)ளேன்;

 

பொருள் --- உலகில் உள்ளோர்என்னைப் பார்த்து"கொடுப்பதற்கு மனம் இல்லையானாலும்கொடுக்கின்றேன் என்று சும்மா ஒரு சொல் வாயால் சொல்" என்று சொன்னால் கூடஅவ்வாறு சொல்ல எனது மனம் துணியாது.

 

நல்லை எமக்கு

ஈ என்பார் அன்றி,அன்னை என் பயத்தால்நின்சோற்றில்

ஈ என்பதற்கும் இசையாள் காண்;

 

பொருள் --- நல்லவனே! வறிஞர்களாகிய எங்களுக்கு ஏதேனும் உதவுக (ஈ) என்று வேண்டுவது அல்லாமல்என்னைப் பெற்ற தாயானவள்ஈ (கொடு) என்று சொன்னால்,நான் கோபிப்பேன் என்று என் மீது உள்ள பயத்தால்நான் உண்ணுகின்ற சோற்றில் ஈ உள்ளது என்று சொல்லவும் விரும்பமாட்டாள்.

 

ஈ என்பார்க்கு

எண்ணும் சிலர்மண் இடுவார்,எனக்கு அந்த

மண்ணும் கொடுக்க மனம் வாராது;

 

பொருள் --- ஈயென்று இரந்து வந்தோர்க்குதீயவர்கள் சிலர், "இந்தா" என்று மண்ணைக் கொடுப்பார்கள். எனக்கோஅந்த மண்ணையும் கொடுக்க மனம் வராது.

 

அண்ணுறும் என்

இல்லை இடைந்தே இரப்பவருக்கு,எப்போதும்

இல்லை என்பது என் வாய்க்கு இயல்புகாண்;

 

பொருள் --- பக்கத்தில் உள்ள எனது வீட்டை அடைந்து இருகை நீட்டி யாசிப்பவர்களுக்குஎந்த நேரத்திலும் இல்லை என்று சொல்வது தான் எனது இயல்பு.

 

தொல் உலகை

ஆண்டாலும் அன்றி,அயலார் புன் கீரைமணிப்

பூண்டாலும் என் கண் பொறுக்காது;

 

பொருள் --- தொன்மையான இந்த உலகத்தை (ஒரு குடைக் கீழ்) ஆட்சி புரியும் செய்தி மட்டும் அல்லாதுஅயலில் உள்ளவர் அற்பமான கீரைமணியை அணிகலனாகப் பூண்டு இருந்தாலும்அதைக் காண எனது கண்கள் பொறுக்காது.

 

நீண்ட எழு

தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும்

கோபம் அது நான் கொடுக்கில் உண்டு;

 

பொருள் --- நீண்ட ஏழுவகைத் தீவுகளில் வாழ்பவர்கள் மற்றும் எட்டுத் திசைகளில் வாழுகின்றவர்க்கும்பிற அனைவருக்கும்கோபம் என்பது நான் கொடுத்தால் தான் உண்டு.

 

ஆபத்தில்

வீசம் கொடுத்துட்டு வீசம் எனப் பிறரை

மோசம் செய நான் முதல்பாதம்;

 

பொருள் --- ஆபத்துக் காலத்தில் வீசம் அளவு கடன் தந்துவிட்டுஎட்டு வீசம் தரவேண்டும் என்று பிறரை மோசம் செய்வதில் நான் முன்னங்காலை வைத்து முன்னேறியவன். (வீசம் என்பது பதினாறில் ஒரு பகுதி என்னும் பழைய கணித முறை)

 

பாசம் உளோர்

கைக் குடையவே எழுதிக் கட்டிவைத்த இவ்வுலகப்

பொய்க் கதையே யான்படிக்கும் புத்தகங்கள்;

 

பொருள் --- உலகில் பந்தபாசத்தில் அழுந்தியவர்கள்பொருளுக்காகத் தமது கை வருந்தும்படி இரவுபகலாககற்பனையாக எழுதித் தொகுத்து வைத்த பெய்யான கதைகளே நான் படிக்கின்ற புத்தகங்கள்.

 

மெய்ப்படும் நின்

மந்திரத்தை உச்சரியா வாய் உடையேன்,என்போலத்

தந்திரத்தில் கை தேர்ந்தவர் இல்லை;

 

பொருள் --- மெய்ம்மையாகவே நன்மையை விளைக்கும் உனது திருமந்திரத்தை உச்சரிக்காத வாயை உடையவன் நான். என்னைப் போலத் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை.

 

எந்தை! இனி

ஏது என்று உரைப்பேன்ருங்கடல் சூழ் வையகத்தில்

சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண்;

 

பொருள் --- எனது தந்தையே! நான் இனி என்ன சொல்லுவேன்பெரிய கடலால் சூழப்பட்டு உள்ள இந்த உலகத்தில்சூது என்று சொல்லப்படும் எல்லாமே என்னை உறவினர் போலச் சூழ்ந்தவையே ஆகும்.

 

ஓதுகின்ற

நஞ்சம் எல்லாங் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத

வஞ்சம் எல்லாம் என் கைவசம் கண்டாய்;

 

பொருள் --- உலகத்தவர் கூறுகின்ற நஞ்சு அனைத்தையும் ஒன்றாகக் கூட்டினாலும்அதற்கு ஒப்பு ஆகாத வஞ்சகம் எல்லாம் எனது வசத்திலே அடங்கி உள்ளவை. (நஞ்சு உணாடல்தான் கொல்லும்வஞ்சகம் நினைத்தாலே கொல்லும்)

 

அஞ்சவரும்

வீண் அவமாம் வஞ்ச வினைக்கு முதலாகி நின்ற

ஆணவமே என் காணி ஆட்சியதாம்;

 

பொருள் --- அச்சம் கொள்ளுமாறு வருகின்றதும்வீணான விரயத்தைத் தருகின்றதும் ஆகிய வஞ்சகச் செயல்களுக்குக் காரணமாக உள்ள அகங்காரமே என்னைக் கண்காணிக்கும் ஆட்சி நிலயம் ஆகும்.

 

மாண் நிறைந்த

நல்லறிவே என்னை நெடுநாள் பகைத்ததுன்றிமற்றைப்

புல்லறிவே என்னுள் பொருள் கண்டாய்;

 

பொருள் --- பெருமை மிகுந்த நல்ல அறிவே என்னைப் பலகாலமும் பகைத்து நின்றது. அல்லாமல்அதற்குப் புறம்பான அற்ப அறிவே என்னுள் விளங்குகின்ற பொருளாக உள்ளது.

 

சொல்ல ஒணா

வேடருக்கும் கிட்டாத வெங்குணத்தால் இங்கு உழலும்

மூடருக்குள் யானே முதல்வன் காண்;

 

பொருள் --- வாயால் சொல்ல முடியாத கொடூரம் மிக்க வேடர்களுக்கும் இல்லாத கொடுமையான குணத்தால் இந்த உலகத்தில் அலைந்து திரிகின்ற அறிவிலிகளுக்கு அடியேன் தலைவன் ஆகியவன்.

 

வீடு அடுத்த

மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற

பேதை என்பது என் உரிமைப் பேர்கண்டாய்;

 

பொருள் --- முத்திநெறியைச் சார்ந்து இருக்கும் ஞானிகளால் வெறுக்கப்படும் விலங்கு என்று உலவுகின்ற அறிவில்லாதவன் என்று சொல்லப்பெறுவது எனக்கே உரிய பெயர் ஆகும். 

 

பேதம் உற

ஓதுவது என்?பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த

தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண்;

 

பொருள் --- பற்பலவாக வேறுபடுத்தி நான் சொல்வதால் என்ன பயன்பலவாகத் தவத்தைப் புரிபவர்கள் விரும்பாது ஒழித்த தீமைகள் எல்லாம் நான் தேடித் தொகுத்து செல்வங்கள் ஆக நின்றன.

 

ஆதலினால்

பேயினை ஒத்து இவ்வுலகில் பித்தாகி நின்ற இந்த

நாயினை நீ ஆண்டிடுதல் நன்கு அன்றே.

 

பொருள் --- ஆதலினால்அமைதி இன்றி அலையும் பேயினைப் போலஇந்த உலகத்தில் பித்துப் பிடித்து இருக்கின்ற இந்த நாயேனை தேவரீர் ஆண்டுகொள்ளுதல் நல்லது அல்ல.

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...