கருவூர் --- 0934. நித்தப் பிணிகொடு

                                                               அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

நித்தப் பிணிகொடு (கருவூர்)

 

முருகா! 

அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவாய்

 

தத்தத் தனதன தானன தானன

     தத்தத் தனதன தானன தானன

          தத்தத் தனதன தானன தானன ...... தனதான

 

 

நித்தப் பிணிகொடு மேவிய காயமி

     தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு

          நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி

 

நிற்கப் படுமுல காளவு மாகரி

     டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு

          நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ......மடவாண்மை

 

எத்தித் திரியுமி தேதுபொ யாதென

     வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ

          டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ..லுழல்வேனை

 

எத்திற் கொடுநின தாரடி யாரொடு

     முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு

          திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய்

 

தத்தத் தனதன தானன தானன

     தித்தித் திமிதிமி தீதக தோதக

          டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... வெனபேரிச்

 

சத்தத் தொலிதிகை தாவிட வானவர்

     திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட

          சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே

 

வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல

     சத்திக் கிடமருள் தாதகி வேணியர்

          வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா

 

வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி

     சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள

          வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

நித்தப் பிணிகொடு மேவிய காயம்இது,

     அப்புப் பிருதிவி வாயுவு தேயுவு

          நில்பொன் ககனமொடு ஆம்இவை பூத ...... கலவைமேவி

 

நிற்கப் படும், உலகு ஆளவும்,மாகர்

     இடத்தைக் கொளவுமெ நாடிடும், ஓடிடும்,

          நெட்டுப் பணிகலை பூண்இடு நான்எனும் ......மடஆண்மை

 

எத்தித் திரியும் இதது ஏது பொயாது என

     உற்றுத் தெளிவு உணராது,மெய் ஞானமொடு

          இச்சைப் பட அறியாது,பொய் மாயையில் .....உழல்வேனை

 

எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும்

     உய்த்திட்டு, உனது அருளால் உயர் ஞானஅமுது

          இட்டு,திருவடியாம் உயர் வாழ்வுஉற ...... இனிதுஆள்வாய்

 

தத்தத் தனதன தானன தானன

     தித்தித் திமிதிமி தீதக தோதக

          டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... எனபேரிச்

 

சத்தத்து ஒலி திகை தாவிட, வானவர்

     திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட,

          சர்ப்பச் சதமுடி நாணிட வேல்அதை ...... எறிவோனே!

 

வெற்றிப் பொடிஅணி மேனியர், கோகுல

     சத்திக்கு இடம்அருள் தாதகி வேணியர்,

          வெற்புப் புரம்அது நீறுஎழ காணியர் ...... அருள்பாலா

 

வெற்புத் தட முலையாள் வ(ள்)ளி நாயகி

     சித்தத்து அமர் குமரா! எமை ஆள்கொள

          வெற்றிப் புகழ் கருவூர் தனில் மேவிய ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

      தத்தத் தனதன தானன தானனதித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட என--- தத்தத் தனதன தானன தானனதித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட என்ற தாள ஒத்துடன்,

 

     பேரி சத்தத்து ஒலி திகை தாவிட--- பேரிகையின் பேரொலி திசைகளைக் கடந்து தாவிச் செல்ல,

 

      வானவர் திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட--- தேவர்கள் வாழும் திசைகள் கலங்கிக் கெட வந்த அசுரர்கள் தூளாகிப் பொடிபட

 

     சர்ப்பச் சதமுடி நாணிட--- ஆதிசேடனின் நூறு பணாமுடிகள் அச்சம் கொள்ள,

 

     வேல் அதை எறிவோனே---வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

 

      வெற்றிப் பொடி அணி மேனியர்--- வெற்றியைத் தரும் திருநீற்றை அணிந்த திருமேனியை உடையவர்,

 

     கோகுல சத்திக்கு இடம் அருள் --- கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனுக்குத் தமது திருமேனியில் ஒரு பாகத்தைத் தந்தருளியவர், 

 

     தாதகி வேணியர்--- ஆத்தி மாலை உடைய சடையர்,

 

     வெற்புப் புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா--- முப்புரங்களும் வெந்து பொடியாகுமாறு செய்தவராகிய சிவபெருமான் அருளிய குழந்தைவேலரே!

 

      வெற்புத் தடமுலையாள் வ(ள்)ளி நாயகி சித்தத்து அமர் குமரா--- மலைபோன்ற பெரிய முலைகளை உடைய வள்ளிநாயகியின் உள்ளத்தில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

 

      எமை ஆள் கொள வெற்றிப் புகழ் கருவூர் தனில் மேவிய பெருமாளே--- எம்மைப் போன்ற அடியார்களை ஆட்கொள்வதற்காகவெற்றிப் புகழ் விளங்கும் கருவூரில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

       நித்தம் பிணி கொடு மேவிய காயம் இது--- நாள்தோறும் ஏதாவது ஒரு நோய்க்கு இடமாக உள்ள இந்த உடம்பானது,

 

      அப்புப் பிருதிவி வாயுவு தேயுவு நில் பொன் ககனம் ஒடு ஆம் இவை பூத கலவை மேவி நிற்கப்படும்--- நீர்மண்காற்றுடன்நெருப்பும்உள்ளதான பொலிவுள்ள வானம் எனப்படும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டானது,

 

       உலகு ஆளவும் --- இந்த உலகம் முழுதையும் ஆளவும்,

 

     மாகர் இடத்தைக் கொளவுமே --- விண்ணவர் உலகத்தையும் கைக் கொள்ளவேண்டும் என்று ஆசை கொண்டு 

 

     நாடிடும் ஓடிடும்--- நாடி ஓடி அலையும்.

 

       நெட்டுப் பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை எத்தித் திரியும் --- மிக்க செருக்குடன், அணிகலன்களையும் ஆடைகளையும் அணிந்துகொண்டு, நான் என்னும் முட்டாள்தனமான அகங்காரத்துடன் ஏமாற்றித் திரியும்.

 

       இது ஏது பொ(ய்)யாது என உற்று--- இது ஒருபோதும் பொய்யாகாமல் நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்து

 

     தெளிவு உணராது--- உண்மையைத் தெளிந்து உணராமல் 

 

     மெய் ஞானமொடு இச்சைப் பட அறியாது--- மெய்ஞ்ஞானத்தைத் தெளிந்து அறிய இச்சை கொள்ளாமல்,

 

     பொய் மாயையில் உழல்வேனை--- பொய்யான உலக மாயைகளில் உழலுகின்ற அடியேனை,

 

            எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு--- எப்படியாவது உமது மெய்யடியார்களுடன் கொண்டு சேர்ப்பித்து,

 

     உனது அருளால் உயர் ஞான அமுது இட்டு--- தேவரீரது திருவருட் கருணையால் சிறந்த ஞானமாகிய அமுதத்தைத் தந்து 

 

     திருவடியாம் உயர் வாழ்வு உற இனிது ஆள்வாய்--- தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்து இருக்கும் பேரானந்தப் பெருநிலையை அடையும்படி இனிதே ஆண்டு அருள்வாயாக.

 

பொழிப்புரை

 

 

     தத்தத் தனதன தானன தானனதித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட என்னும் தாள ஒத்துடன் பேரிகையின் பேரொலி திசைகளைக் கடந்து தாவிச் செல்ல,தேவர்கள் வாழும் திசைகள் கலங்கிக் கெட வந்த அசுரர்கள் தூளாகிப் பொடிபட ஆதிசேடனின் நூறு பணாமுடிகள் அச்சம் கொள்ள,

வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

 

            வெற்றியைத் தரும் திருநீற்றை அணிந்த திருமேனியை உடையவர்,கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனுக்குத் தமது திருமேனியில் ஒரு பாகத்தைத் தந்தருளியவர், ஆத்தி மாலை உடைய சடையர், முப்புரங்களும் வெந்து பொடியாகுமாறு செய்தவராகிய சிவபெருமான் அருளிய குழந்தைவேலரே!

 

     மலை போன்ற பெரிய முலைகளை உடைய வள்ளிநாயகியின் உள்ளத்தில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

 

     எம்மைப் போன்ற அடியார்களை ஆட்கொள்வதற்காகவெற்றிப் புகழ் விளங்கும் கருவூரில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            நாள்தோறும் ஏதாவது ஒரு நோய்க்கு இடமாக உள்ள இந்த உடம்பானது,நீர்மண்காற்றுடன்நெருப்பும்உள்ளதான பொலிவுள்ள வானம் எனப்படும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டானதாகும். இந்த உடம்பில் குடிகொண்டுள்ள உயிரானது,இந்த உலகம் முழுதையும் ஆளவும், விண்ணவர் உலகத்தையும் கைக் கொள்ளவேண்டும் என்று ஆசை கொண்டு நாடி ஓடி அலையும். மிக்க செருக்குடன், அணிகலன்களையும் ஆடைகளையும் அணிந்து கொண்டு, நான் என்னும் முட்டாள்தனமான அகங்காரத்துடன் ஏமாற்றித் திரியும்.இந்த உடம்பு ஒருபோதும் பொய்யாகாமல் நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்துஅதன்உண்மையைத் தெளிந்து உணராமல், மெய்ஞ்ஞானத்தைத் தெளிந்து அறிய இச்சை கொள்ளாமல், பொய்யான உலக மாயைகளில் உழலுகின்ற அடியேனை,எப்படியாவது உமது மெய்யடியார்களுடன் கொண்டு சேர்ப்பித்து,தேவரீரது திருவருட் கருணையால் சிறந்த ஞானமாகிய அமுதத்தைத் தந்து, தேவரீரது திருவடி இன்பத்தில் திளைத்து இருக்கும் பேரானந்தப் பெருநிலையை அடையும்படி இனிதே ஆண்டு அருள் புரியவேண்டும்.

 

விரிவுரை

 

நித்தப் பிணி கொடு மேவிய காயம் இது---

 

காயம் --- உடம்பு.

 

பிணி --- பிணிக்கப்படுவது பிணி. 

 

"பிணி மேய்ந்து இருந்தஇருகால் குரம்பை" என்பார் அப்பரடிகள். நோயையே கூரையாக உடையது இந்த உடம்பு. 

 

"ஊன் அடைகின்ற குற்றம் முதலாகி உற்றபிணிநோய்" என்பார் திருஞானசம்பந்தப் பெருமான். "நிச்சம் உறும் நோயும்" என்பார் அவரே.

 

அப்புப் பிருதிவி வாயுவு தேயுவு நில் பொன் ககனம் ஒடு ஆம் இவை பூத கலவை மேவி நிற்கப்படும்--- 

 

ஒருவனால் செய்யப்படுகின்ற பொருள் காரியப் பொருள் எனப்படும். அவன் பலவாகிய பகுதிகளை இணைத்துச் சேர்த்து அக்காரியப் பொருளை உருவாக்குகிறான். எனவே காரியப் பொருள் எல்லாம் பகுதிகளை உடையதாக இருக்கும் என்பது தெளிவு. நாம் கையில் அணியும் கடிகாரம்உடம்பில் அணியும் ஆடைதோளில் அணியும் மாலைகழுத்தில் அணியும் நகை முதலியவையெல்லாம் பல பகுதிகளை உடைய காரியப் பொருள்களே ஆகும். உற்று நோக்கினால் உலகப் பொருள்கள் அனைத்துமே இத்தகைய காரியப் பொருள்கள்தான் என்பது புலனாகும். நாம் வாழுகின்ற இப்பெரிய நிலவுலகமே மண்நீர்தீகாற்றுவெளி என்னும் ஐம்பூதங்களாகிய பகுதிகளின் சேர்க்கையால் உருவானது. எனவே இவ்வுலகமும் ஒரு காரியப் பொருளே.

 

காரியப் பொருள் எதுவாயினும் அதற்கு ஒரு மூலப்பொருள் வேண்டும். குடம் என்ற காரியப் பொருளுக்குக் களிமண் மூலப் பொருள். நாற்காலிக்கு மரம் மூலப்பொருள். நகைக்குப் பொன் மூலப் பொருள். மூலப் பொருளை முதற்காரணம் என்று குறிப்பிடுவர். மற்றவை எல்லாம் நிரம்ப இருப்பினும் எந்த ஒன்று இல்லாமல் காரியம் தோன்றாதோ அந்த ஒன்றே முதற்காரணம் எனப்படும். குடம் என்ற செயப்படுபொருள் உருவாவதற்குச் சக்கரம்கழி முதலியவை பயன்படுகின்றன. அவற்றையெல்லாம் குறைவறப் பெற்றிருந்தாலும் களிமண் என்ற ஒன்று இல்லையேல் குடம் தோன்றாது. அது பற்றியே களிமண் முதற்காரணம் எனப்படுகிறது. இவ்வுண்மை பிற காரியப் பொருள்களுக்கும் பொருந்தும். உலகம் காரியப் பொருள். காரியமாகிய உலகுக்கும் ஒரு முதற் காரணம் இருத்தல் வேண்டும். அம்முதற் காரணமாகிய மூலப் பொருளே மாயை என்பது.

 

பூதாதி அகங்காரத்திலிருந்து முதலில் தன்மாத்திரைகள் தோன்றும். அவை சத்தம்பரிசம்ரூபம்ரசம்கந்தம் என்பன. சத்த தன்மாத்திரைபரிச தன்மாத்திரைரூப தன்மாத்திரைரச தன்மாத்திரைகந்த தன்மாத்திரைஆகிய இவை ஐந்தும் இம் முறையிலே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றும். இவ் வைந்து தன்மாத்திரைகளிலிருந்தே பின்பு ஐம்பூதங்கள் தோன்றும். ஐம்பூதங்களுக்கு முதற்காரணமாய் நிற்றல் பற்றியே இவ்வகங்காரம் பூதாதி அகங்காரம் எனப்பட்டது. இதிலிருந்து பூதங்கள் நேரே தோன்றுவதில்லை. முதலில் தன்மாத்திரைகள் தோன்றஅவற்றிலிருந்தே பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் காரியமான பூதங்கள் பருமையானவை. தன்மாத்திரைகளைச் சூக்குமபூதம் எனவும். பூதங்களைத் தூலபூதம்மகாபூதம் எனவும் வழங்குவர். பொதுவாகப் பூதம் என்றால் அது தூலபூதத்தையே குறிக்கும்.

  

தன்மாத்திரை என்ற சொல்லுக்கு அதனளவில் நிற்பது என்பது பொருள். அதனளவில் நிற்றல் என்பதாவதுஓசையை நாம் கேட்கும் பொழுது அது வல்லோசை என்றோமெல்லோசை என்றோஇனிய ஓசை என்றோஇன்னா ஓசை என்றோ சில வேறுபாடுகளை உடையதாய்ச் சிறப்பு வகையால் நமக்குப் புலனாகுமேயன்றிஅவ்வேறுபாடுகள் இல்லாமல் வெறும் ஓசை என்னும் அளவில் பொதுவாய் அது புலனாகாது. ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது வழுவழுப்புசொரசொரப்புபிசுபிசுப்பு என்றாற் போலச் சிறப்பு வகையால் உணர்கின்றோம். அல்லாமல் அவ்வேறுபாடுகள் அற்ற வெறும் ஊற்றினை நாம் உணர்வதில்லை. சுவையும் இவ்வாறேதித்திப்புகைப்புபுளிப்பு என்றாற் போலச் சிறப்பாகப் புலனாகுமேயன்றி வெறும் சுவை என்னும் நிலையில் பொதுவாய் அது புலனாவதில்லை. ஏனையவையும் இவ்வாறே.

 

ஓசை முதலிய ஐந்தும் இங்குக் கூறிய சிறப்பு நிலையை எய்தாமல் பொதுவாய் நிற்கும் நிலை உண்டு. அதாவது ஓசை வன்மை மென்மை முதலிய பாகுபாடு இன்றி ஓசை என்னும் அளவில் நிற்கும். ஊறு வழுவழுப்பு முதலிய பாகுபாடு இன்றி ஊறு என்னும் அளவில் நிற்கும். சுவை இனிப்பு கசப்பு முதலிய பாகுபாடு இன்றிச் சுவை என்னும் அளவில் நிற்கும். அதனளவில் நிற்றல் என்பதன் பொருள் இதுதான். இவ்வாறு நிற்கும் பொதுநிலையிலே அவை தன் மாத்திரைகள் எனப்படுகின்றன. செவி முதலிய பொறிகளுக்குப் புலனாகாத நுண்ணிய நிலை இது.

 

ஓசை முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்றுபின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும் அவ்வாறு பரிணமித்த பொழுது இவ்வோசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது அவற்றின் குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம்பரிசம்ரூபம்ரசம்கந்தம் என்னும் பெயர்களையே பெறும். தமிழில் அவை ஓசைஊறுஒளிசுவைநாற்றம் எனப்படும். இந்நிலையில் அவை செவி முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும் குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முலிய பெயர்களைப் பெறும். புலன்களும் அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும்குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும். தன்மாத்திரைகள்பூதங்களும் முதற்காரணமாகிய தத்துவங்கள்புலன்கள் தத்துவங்கள் அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள் எனப்படும்.

            

சத்தம் முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். இரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.

 

காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும். இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும். ஊறு காற்றின் குணமாய் நிற்கும்ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும்சுவை நீரின் குணமாய் நிற்கும்நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும். 

 

தன்மாத்திரைகளைப் பற்றி அறிய வேண்டிய மற்றொரு செய்தி உண்டு. அதாவதுசத்த தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய் நிற்கும். பரிச தன்மாத்திரை சத்தம்மும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய் நிற்கும். உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும் உடையதாய் நிற்கும். இரச தன்மாத்திரை சத்தம்பரிசம்உருவம் ஆகிய மூன்றோடு இரசத்தையும் உடையதாய் நிற்கும். கந்த தன்மாத்திரை சத்தம்பரிசம்உருவம்இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும் உடையதாய் நிற்கும்.

 

காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும்இரண்டும்மூன்றும்நான்கும்ஐந்தும் உடையனவாம். ஆதலின்அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்றுஇரண்டு மூன்றுநான்குஐந்து ஆகிய குணங்களை உடையவாயிருக்கும். 

 

அதாவதுஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும். காற்றுஓசை ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும். நெருப்பு ஓசைஊறு ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும். நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும். நிலம்ஓசை ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும். இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும்ஏனையவை பொதுக் குணங்கள் எனவும் அறிதல் வேண்டும்.

 

பூதங்கள் இக்குணங்களையே அன்றி வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலையும் உடையது. பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும்உலகத்தில் காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும்.  பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாய் இருத்தல் தெளிவு. இவற்றிற்கு எல்லாம் முதற்காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம் எனவும்அது தாமதகுணக் கூறு எனவும் பார்த்தோம். தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது. அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும். இதுகாறும் கூறியவற்றால் பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் காரியங்கள் இவை இவை என்பது புலனாகும். பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே பின் உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை. வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும்அது பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.

 

தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். எவ்வகையாலேனும் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுவதே தத்துவம் ஆகும். மேற்கூறிய தத்துவங்களில் அந்தக்கரணங்கள் நான்கும்ஞானேந்திரியங்கள் ஐந்தும்கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பதினான்கும் ஆன்மாவின் அறிவுதொழில்களுக்குக் கருவியாய் நிற்றல் வெளிப்படை. அவற்றின் பின்னர்த் தோன்றும் தன் மாத்திரைகளும் பூதங்களும் ஆகிய தத்துவங்கள் பத்தும் ஆன்மாவிற்கு கருவியாய் நின்று உதவுகின்றன. தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய் அமைந்து அவை தம்மைப் பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை இந்திரியங்களுக்கும் துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும். தன்மாத்திரைகளும் பூதங்களும் இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன. 

 

தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம்வைகாரிக அகங்காரம்பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. 

 

பல்வேறு வகையான உடம்புகளும்அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும். பின்வரும் அட்டவணையில் அவற்றைக் காணலாம்.

 

பிருதிவி என்னும் மண்ணின் கூறு

5

எலும்புதசைமயிர்தோல்நரம்பு

அப்பு என்னும் நீரின் கூறு

5

சிறுநீர்இரத்தம்சிலேத்துமம்வியர்வைசுக்கிலம் அல்லது சுரோணிதம்

தேயு என்னும் தீயின் கூறு

5

இருதயத்தில் வெப்பம்வயிற்றில் பசித் தீகண்ணில் வெப்பம்உடம்பில் வெப்பம்கபால வெப்பம்

வாயுவின் கூறு

10

உதானன்பிராணன்அபானன்சமானன்வியானன்நாகன்கூர்மன்கிருகரன்தேவதத்தன்தனஞ்சயன் என்னும் வாயுக்கள்

ஆகாயத்தின் கூறு

10

அத்திஅலம்புடைஇடைபிங்கலைசுழுமுனைகாந்தாரிகுகுதைசங்கினிசிகுவைபுருடன் என்னும் நாடிகள்

ஞானேந்திரியங்களின் விடயங்கள்

5

சத்தம் என்னும் ஓசை

பரிசம் என்னும் ஊறு

ரூபம் என்னும் ஒளி

ரசம் என்னும் சுவை,           

கந்தம் என்னும் நாற்றம்.

கன்மேந்திரியங்களின் விடயங்கள்

5

வசனம் (பேச்சு)கமனம் (நடை)தானம் (கொடை)விசர்க்கம் (போக்கு)ஆனந்தம் (இன்பம்)

அகங்காரத்தின் கூறு

3

தைசதம்வைகாரியம்பூதாதி

மனத்தின் கூறு

5

காமம்குரோதம்உலோபம்மோகம்மதம் (மாற்சரியம் குரோதத்துள் அடங்கும்)

குணத்தின் கூறு

3

சத்துவம்இராசதம்தாமதம்

வாக்கு

4

சூக்குமைபைசந்திமத்திமைவைகரி

  

இவ்வாறு பிரகிருதி மாயை இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி உலக நுகர்ச்சியைத் தருகிறது. காரணத்தில் உள்ளது காரியத்திலும் இருக்கும். 

 

முதற்காரணமாகிய பிரகிருதி முக்குண வடிவானது. ஆகவே அதன் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமாய் இருக்கும். இவற்றைப் பொருந்துகிற ஆன்மாக்களும் முக்குண வயப்பட்டு இன்ப துன்ப மயக்க உணர்வுகளை அடையும். பிரகிருதி தனது முக்குண வேறுபாட்டால் உயிர்களது உள்ளத்தைப் பலவாறு மயங்கச் செய்யும். இவ்வகையில் பிரகிருதி மயக்கும் தன்மையுடைய ஒரு பெண்மகளைப் போன்றது. அவள் தன் ஆடை அணிகளாலும் குணங்களாலும் ஆடவனை மயக்குவது போலப் பிரகிருதி தன் காரியமாகிய முக்குணங்களால் ஆன்மாக்களை மயக்குகிறது என்று சொல்லப்படுகிறது. மேற்கூறிய தத்துவம் இருபத்து நான்கும் ஆன்மாக்களுக்குப் போக சாதனமும்போக்கியமுமாய் அமைகின்றன.

 

     எனவேஇந்த உடம்பு மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினால் ஆகியது. பஞ்சபூத பரிணாம சரீரம். ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் இது வந்துள்ளது. நிலைபேறு இல்லாதது. நீர்மேல் குமிழிக்கு நிகரானது.

 

ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்

      ஆகின்ற ஆக்கைநீர் மேல்

அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்னநான்

      அறியாத காலம் எல்லாம்

புந்திமகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே

      போந்தநெறி என்று இருந்தேன்,

பூராயம் ஆக நினது அருள் வந்து உணர்த்தஇவை

      போனவழி தெரியவில்லை,

எந்தநிலை பேசினும் இணங்கவிலை,அல்லால்

      இறப்பொடு பிறப்பை உள்ளே

எண்ணினால்,நெஞ்சு அது பகீர் எனும்,துயில் உறாது

       இருவிழியும்,இரவுபகலாய்ச்

செந்தழலின் மெழுகு ஆனது அங்கம்இவை என்கொலோ?

       சித்தாந்த முத்திமுதலே!

சிரகிரி விளங்கவரு தட்சிணா மூர்த்தியே!

      சின்மய ஆனந்தகுருவே.            --- தாயுமானவர்.

 

  ககனமும்,அநிலமும்,அனல்புனல்,நிலம்,அமை

     கள்ளப் புலால் ...... கிருமிவீடு,

கனல் எழ மொழி தரு சினம் என,மதமிகு

     கள்வைத்த தோல்பை ...... சுமவாதே,

 

யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒருபொருள்

     உள்ளக் கண் நோக்கும் ...... அறிவுஊறி,

ஒளி திகழ் அருஉரு எனும் மறை இறுதியில்

     உள்ள அத்தை நோக்க ...... அருள்வாயே.---  திருப்புகழ்.

 

உலகு ஆளவும்மாகர் இடத்தைக் கொளவுமேநாடிடும் ஓடிடும் ---

 

பொய்யானதும்நிலையில்லாததும்நோய்க்கு இடமானதுமான இந்த உடம்பு என்றும் நிலைத்திருக்கும் என்று எண்ணிஅந்த உடம்பைப் பேணுதற்கு என்று,

 

"உடுக்கத் துகில் வேணும்,நீள்பசி

     அவிக்கக் கனபானம் வேணும்நல்

     ஒளிக்குப் புனல் ஆடை வேணும்மெய் ......உறுநோயை

 

ஒழிக்கப் பரிகாரம் வேணும்,உள்

     இருக்கச் சிறுநாரி வேணும்ஒர்

          படுக்கத் தனிவீடு வேணும்"

 

என்று பொன்னையும் பொருளையும் தேடித் தேடி ஆன்மா அலையும். அவ்வாறு அலவைதற்கு அடங்காத ஆசையே காரணம் ஆகும். 

 

ஆசையே பிறவிக்கு வித்து என்பதால், "அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து" என்றும், "அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம்அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும்" என்றும் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.  

 

"ஆசைக்கு ஓர் அளவு இல்லை" என்று பாடினார் தாயுமானார். "ஆசையை அளவு அறுத்தார் இங்கு ஆரே" என்றது திருவிசைப்பா."ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்ஆசை விட விட ஆனந்தம் ஆமே" என்றது திருமந்திரம்.

 

நான் எனும் மட ஆண்மை எத்தித் திரியும் இது ஏது பொ(ய்)யாது என உற்றுத் தெளிவு உணராது --- 

 

நான் என்னும் ஆணவம் அறிவு அல்ல. அறியாமையின் வெளிப்பாடு அது. எனவே, "மட ஆண்மை" என்றார். அது காரணமாக,இந்த உடம்பு பொய்யாது என்று நினைப்பது இயல்பு. காரணம்அறிவில் தெளிவு இல்லை.

 

பொய்யான உடம்பை மெய் என்று நம்பிதவநெறி சேராது அவநெறி சேர்ந்துகாமதேனுவின் பாலைக் கமரில் கொட்டியதுபோல் தமது நேரத்தை வீணாக்கி மானுடர் வறிதே கெடுகின்றனர்இது பரிதாபத்திற்கு உரியது.

 

காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டுக்

     கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்

கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர்எங்கே

     குடியிருப்பீர்ஐயோ!நீர் குறித்தறியீர். இங்கே

பாடுபட்டீர்! பயன்அறியீர்! பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்!

     பட்டதெலாம் போதும். இது பரமர் வரு தருணம்.

ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்.

     எண்மைஉரைத்தேன் அலன்நான் உண்மை உரைத்தேனே.

 

ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்,

     அகங்காரப் பேய்பிடித்தீர்ஆடுதற்கே அறிவீர்,

கூற்று வருங்கால் அதனுக்கு எது புரிவீர்ஐயோ!

     கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே,

வேற்று உரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்,

     வீண்உலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,

சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற

     தருணம்இதுசத்தியம்சிற்சத்தியைச் சார்வதற்கே.

 

பொய் விளக்கப் புகுன்றீர்போது கழிக்கின்றீர்,

     புலைகொலைகள் புரிகின்றீர்கலகல என்கின்றீர்,

ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்

    அடிவயிற்றை முறுக்காதோகொடிய முயற்றுலகீர்,

கைவிளக்குப் பிடித்து ஒருபாழ்ங் கிணற்றில் விழுகின்ற

     களியர் எனக் களிக்கின்றீர்கருத்து இருந்தும் கருதீர்,

மெய்விளக்கும் எனது தந்தை வருகின்ற தருணம்

       மேவியதுஇங்கு அடைவீரேல் ஆவிபெறுவீரே.

 

என்று உலகினரை நோக்கி அருளால் பாடுகின்றார் இராமலிங்க அடிகளார்

 

பொய்க்கூடு கொண்டு புலம்புவனோஎம்இறைவர்

மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே. ---  தாயுமானவர்.

 

இந்த உடம்பு இறைவனை அறிவதற்குக் கருவியாக அமைந்தது. இதனைப் பேணுவது அவசியம் தான். ஆனால் உடம்பையே பேணிக்கொண்டு இருந்தால்உடம்பினால் ஆய பயனைப் பெறுவதுதான் எக்காலம்?  வீடு அவசியம் வேண்டியதுதான். ஆனால் ஆயுள் முடிகின்ற வரை வீட்டையே கட்டிக்கொண்டும்வீட்டை அலங்கரிப்பதுமாகவே இருக்கக் கூடாதல்லவாஆன படியினால்உடம்பைப் பெரிதென்று கருதி உடம்பைப் பேணுவதிலேயே வாழ்நாள் முழுவதும் கழிந்துவிட்டால்ஆவி உய்வது எங்ஙனம்?  எனவேஇந்த உடம்பு நிலையில்லாததுஇது மாலினால் எடுத்த கந்தல்சோறினால் வளர்த்த பொந்திநோய்களுக்கு இருப்பிடமானதுஅருவருப்பானதுமலபாண்டம்புழுக்கூடு என்று எண்ணி இந்த உடம்பை வெறுத்துஉடம்புக்குள் உறையும் உத்தமனைக் கண்டு பற்றற்று இருக்கவேண்டும்.

 

ஊற்றைச் சரீரத்தைஆபாசக் கொட்டிலைஊன்பொதிந்த

பீற்றல் துருத்தியைசோறுஇடும் தோல்பையைபேசரிய

காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே

ஏற்றுத் திரிந்துவிட்டேன்இறைவாகச்சி ஏகம்பனே.

 

காதுஅளவு ஓடிய கலகப் பாதகக்

கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்

காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள்

பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்

சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கு இருந்து,        

      

அங்கோடு இங்கோடு அலமரும் கள்வர்

ஐவர் கலகமிட்டு அலைக்கும் கானகம்;

சலமலப் பேழைஇருவினைப் பெட்டகம்;

வாதபித்தம் கோழை குடிபுகும் சீறூர்;

ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை;      

 

நாற்றப் பாண்டம்நால் முழத்து ஒன்பது

பீற்றல் துண்டம்பேய்ச்சுரைத் தோட்டம்

அடலைப் பெரிய சுடலைத் திடருள்;

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;

ஓயா நோய்க்கிடம்ஓடும் மரக்கலம்;          

      

மாயா விகாரம்மரணப் பஞ்சரம்;

சோற்றுத் துருத்திதூற்றும் பத்தம்;

காற்றில் பறக்கும் கானப் பட்டம்;

விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;

சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;       

      

ஈமக் கனலில் இடுசில விருந்து;

காமக் கனலில் கருகும் சருகு;

கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,

பவக்கொழுந்து ஏறும் கவைக் கொழுகொம்பு;

மணமாய் நடக்கும்,வடிவின் முடிவில்  

      

பிணமாய்க் கிடக்கும் பிண்டம்பிணமேல்

ஊரில் கிடக்க ஒட்டா உபாதி;

கால் எதிர் குவித்த பூளைகாலைக்

கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;

அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;

      

அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;

நீரில் குமிழிநீர்மேல் எழுத்து;

கண்துயில் கனவில் கண்ட காட்சி;

அதனினும் அமையும் பிரானே! அமையும்;

இமைய வல்லி வாழிஎன்று ஏத்த  

      

ஆனந்தத் தாண்டவம் காட்டி

ஆண்டுகொண்டு அருள்கை நின் அருளினுக்கு அழகே!  

 

என்று வருந்தி வேண்டுகின்றனர் பற்றற்ற பரமஞானியாகிய பட்டினத்துச் சுவாமிகள். இவ்வுடம்பைப் பற்றி தவசீலராகிய தாயுமானார் கூறுமாறும் காண்க..

    

காக மோடுகழுகு அலகை நாய்நரிகள்

     சுற்று சோறு இடு துருத்தியை,

  கால் இரண்டுநவ வாசல் பெற்றுவளர்

            காமவேள் நடன சாலையை,

    

போகஆசைமுறி இட்ட பெட்டியைமும்

            மலம் மிகுந்து ஒழுகு கேணியை,

  மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை,

            முடங்கல் ஆர் கிடை சரக்கினை,

 

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக

             வேதம் ஓதியகு லாலனார்

   வனையவெய்ய தடிகாரன் ஆன யமன்

             வந்து அடிக்கும் ஒரு மட்கலத்

    

தேகம் ஆன பொய்யைமெய் எனக் கருதி

             ஐயவையமிசை வாடவோ?

    தெரிவதற்கு அரிய பிரமமே! அமல

             சிற்சு கோதய விலாசமே.

 

மெய் ஞானமொடு இச்சைப் பட அறியாதுபொய் மாயையில் உழல்வேனைஎத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு--- 

 

இப்படிப் பொய்யான உலக வாழ்விலேயே இச்சையை வைத்து உழலுவதால்மெய்ஞ்ஞானம் தலைப்படுவது இல்லை. உலக வாழ்வு பொய் என்று யார் சொன்னாலும் நம்புவதும் இல்லை. பொய்யை உணர்ந்தால்மெய்யில் நாட்டம் செல்லும்.

 

மெய்யை உணர்வதற்குச் சாதனம்அதை உணர்ந்தவரோடு கூடி இருப்பதே ஆகும்.  எனவேஎப்படியாவது தன்னை அடியார் திருக்கூட்டத்தில் கூட்டி அருளவேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார். அடியார் திருக்கூட்டத்தில் தன்னைச் சேர்த்து வைத்து அருள் புரிய வேண்டுகின்றார் அடிகளார். இதனை அடிகளார் பல இடங்களிலும் பாடி உள்ளார். 

 

"புகழ் ஓதும் பண்பு உடைய சிந்தை அன்பர் தங்களின் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல் அஞ்சல் என வாராய்" என்று திருச்செந்தூர்த் திருப்புகழிலும்,

 

"உரையையும்அறிவையும்உயிரையும் உணர்வையும் உன்பாத கஞ்ச மலர் மீதே உறவொடு புனைதர நினைத் தொழும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ"என்று திருச்செங்கோட்டுத் திருப்புகழிலும்,

 

"சீறல் அசடன்வினை காரன்,முறைமை இலி,

     தீமை புரி கபடி,......          பவநோயே

தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை

     சீர்மை சிறிதும் இலி,......     எவரோடும்

கூறு மொழி அது பொய் ஆன கொடுமை உள

     கோளன்றிவிலி ...... உன்அடிபேணாக்

கூளன்னினும் எனை நீ உன் அடியரொடு

     கூடும் வகைமை அருள் ...... புரிவாயே"

 

என்று பழநித் திருப்புகழிலும்,

 

வாதம்,பித்தம்மிடாவயிறுஈளைகள்,

     சீதம்பற்சனிசூலைமகோதரம்,

     மாசு அம் கண்பெரு மூல வியாதிகள், .....குளிர்காசம்,

மாறும் கக்கலொடேசில நோய்பிணி-

     யோடும்தத்துவ காரர் தொணூறு அறு-

     வாரும் சுற்றினில் வாழ் சதிகாரர்கள், ......வெகுமோகர்,

சூழ் துன் சித்ர கபாயைமு ஆசைகொடு

     ஏதும் சற்று உணராமலெ மாயைசெய்,

     சோரம் பொய்க் குடிலே சுகமாம் என, ......இதின்மேவித்

தூசின் பொன் சரமோடு குலாய்உலகு

     ஏழும் பிற்பட ஓடிடு மூடனை,

     தூ அம் சுத்த அடியார் அடி சேர,நின் ......அருள்தாராய்.

 

என்று பின்னும் பழநித் திருப்புகழிலும் அடிகளார் வேண்டியுள்ளதில் இருந்து அடியார் திருக்கூட்டத்தின் சிறப்பு விளங்கும்.

 

எத்தனை குணக்கேடனாக இருப்பினும் முருகா! எளியேனை இகழ்ந்து ஒதுக்கிவிடாமல்தாய் சேய் மீது கருணை வைப்பதுபோல்கோடி அவகுணங்களையும் அகற்ற வல்லதாகிய அடியவர் குழுவில் சேர்த்துவிடு என்று அடிகளார் வேண்டுகின்றார்.

 

குருட்டு மாட்டை மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால்,அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

 

முத்தி வீட்டுக்குத் தகுதி அற்றவர் ஆயினும்,அடியார் திருக்கூட்டம் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய எளிய வழி.

 

திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

 

வைப்பு மாடு என்றும் மாணிக்கத்து ஒளி என்றும் 

     மனத்திடை உருகாதே

செப்பு நேர்முலை மடவரலியர் தங்கள் 

     திறத்து இடை நைவேனை

ஒப்பு இலாதன உவமனில் இறந்தன 

     ஒண் மலர்த் திருப்பாதத்து

அப்பன் ஆண்டு,தன் அடியரில் கூட்டிய 

     அதிசயம் கண்டாமே. 

 

துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ

தொண்டரொடு கூட்டு கண்டாய்           ---  தாயுமானார்.

 

"    ....   ....   நின் அன்பர் கூட்டம் எய்த 

நினைவின் படிக்கு நீ முன் நின்று காப்பதே

நின் அருள் பாரம்"                        --- தாயுமானார்.

 

"தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு

சேரவும் கருணை கூர்வையோ?

தெரிவதற்கு அரிய பிரமமே! அமல

சிற்சுகோதய விலாசமே!"              --- தாயுமானார்.

 

"மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும்,

வந்து நின் அன்பர் தம் பணியாம்

அறம் அது கிடைக்கின்"                --- தாயுமானார்.

 

ஊன்பொதி அழுக்கு உடம்பிற்கும் உயிர்க்கும் இங்கு

உதவு தின்பண்டங்களில் 

ஒதுக்காதவை கொளல்,ஒதுக்கியவை தள்ளல்இறை

ஒருவனைச் சிந்தனை புரிதல்,

மால் மருள் மயக்கு எலாம் எற்றுதல்நறும் பத்தி

மாறாது நிலை கொள்ளுதல்,

மற்றும் உள இயல்பு அனைத்தும் புறம் போகவிடல்,

மனதில் தன் இயல்பு கண்டு,

தான் கவலை மிக்கு உறுதல்தன் பிழை பொறுக்கும் ஒரு 

தகைமை என்பது தேடுதல்,

தலைவனார் வல்லமைக்கு ஒல்லாத முறை கண்டு

சந்ததம் இரங்கல் என்னும்,

தேன்மலர்க் கழல் அன்பர் செய்கை ஒன்பதையும்இச்

சிறியனேன் மருவல் என்றோ,

திருநீடு பதிஆய கயிலாச மலைமேவு

சிவஞான குரு சாமியே.

 

என்று பாம்பன் சுவாமிகள் அருளிய ஆற்றால்அடியாருக்குள்ள நற்செயல்கள் பொருந்த வேண்டும் என்றால்அடியார் திருக்கூட்டத்தில் பொருந்தி இருப்பது பொருத்தம் ஆகும். 

 

அடியார் வாழ் சபையின் ஏற்றின் ஞானபோதமும் அருளி ஆட்கொள்ளும் ஆறே தான் அது தமியனேற்கு முன்னே நீ மேவுவது ஒரு நாளே” என்று "நிருதரார்க்கொரு" எனத் தொடங்கும் திருப்புகழ்ப் பாடலிலும் அருணை அடிகள் வேண்டியமை காண்க.

 

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம்

சாரில்,கதி அன்றி வேறு இலைகாண்,தண்டு தாவடி போய்த்

தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்

நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே.

 

என்று கந்தரலங்காரப் பாட்டில் நெஞ்சுக்கு மிக உருக்கமாக உபதேசிக்கின்றார்.மிக உயர்ந்த பாடல். உள்ளத்தை உருக்கும் பாடல்.

 

இப்படி அருணகிரிநாத சுவாமிகள் முருகனிடம் ஆண்டவனே! அடியேனை அடியாருடன் கூட்டிவைக்க வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

 

வேண்டுவார் வேண்டியதை வெறாது உதவும் வேற்பரமன் அந்த விண்ணப்பத்தை நிறைவேற்றி வைத்தார். நிறைவேற்றி விட்டார் என்பதை நாம் எப்படி அறிய முடியும்நிறைவேறப் பெற்ற அருணகிரிநாதப் பெருமானே கந்தரலங்காரத்தில் விளக்கமாக நன்றி பாராட்டும் முறையில் கூறுகின்றார்.

 

இடுதலைச் சற்றும் கருதேனை,போதம் இலேனை,அன்பால் கெடுதல் இலாத் தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை

அடுதலைச் சாத்தித்த வேலோன். பிறவி அற,இச் சிறை

விடுதலைப்பட்டதுவிட்டது பாச வினை விலங்கே.

 

அபிராமி அன்னையிடம், 

 

1.   கலையாத கல்வியும்

 

2.   குறையாத வயதும்,

 

3.   ஓர் கபடு வாராத நட்பும்,

 

4.   கன்றாத வளமையும்

 

5.   குன்றாத இளமையும்,

 

6.   கழுபிணி இலாத உடலும்,

 

7.   சலியாத மனமும்

 

8.   அன்பு அகலாத மனைவியும்,

 

9.   தவறாத சந்தானமும், 

 

10.  தாழாத கீர்த்தியும்

 

11.  மாறாத வார்த்தையும்,

 

12.  தடைகள் வாராத கொடையும்,

 

13.  தொலையாத நிதியமும்

 

14.  கோணாத கோலும்,

 

15.  ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,

 

16.  துய்ய நின்பாதத்தில் அன்பும் 

 

ஆக,பதினாறு பேறுகளை வேண்டி, இறுதியில்,பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் என்று வேண்டுகின்றார். பதினாறு பேறுகளும் இறையருளால் ஓருவன் பெற்றாலும், அடியார் திருக்கூட்டத்தில் சேர்ந்து இராமல், அல்லாதார் கூட்டத்தில் இருப்பானாயின், பயனில்லாமல் போகும் என்பதையே இது காட்டுகின்றது. 

 

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர் குழாம் 

சாரில் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடி போய்த்

தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வமெல்லாம்

நீரில் பொறி என்று அறியாத பாவி நெடு நெஞ்சமே.  --- கந்தர்அலங்காரம்.

 

வெற்றிப் பொடி அணி மேனியர்--- 

 

பொடி --- திருநீறு. தீருநீற்றை, "வெற்றிப் பொடி" என்று அடிகளார் அருளியது சிந்திக்கத்தக்கது. 

 

கோகுல சத்திக்கு இடம் அருள் --- 

 

கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனுக்குத் தமது திருமேனியில் ஒரு பாகத்தைத் தந்தருளியவர் சிவபெருமான்.சிவபெருமானிடம் இருந்து அவரது அருளாகவே வெளிப்பட்ட பராசக்தியின் புருஷாகார வடிவமே திருமால். திருமாலையும் தனது சத்திகளுள் ஒரு சத்தியாகக் கொண்டு ஒரு பாகத்தில் உடையவர் சிவபரம்பொருள் என்பதுபின் வரும் பாடல்களால்தெளிவாகும்.....

 

பாதியாஉடன் கொண்டது மாலையே

            பம்பு தார்மலர்க் கொன்றைநன் மாலையே

கோதுஇல் நீறுஅது பூசிடும் ஆகனே

            கொண்ட நல்கையின் மான்இடம் ஆகனே

நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன்ஐயே

            நாடிஅன்றுஉரி செய்ததும் ஆனையே

வேதநூல் பயில் கின்றது வாயிலே

            விகிர்தன்ஊர்திரு ஆலநல் வாயிலே. --- திருஞானசம்பந்தர்.

 

மண்ணும் ஓர் பாகம் உடையார்,

     மாலும் ஓர் பாகம் உடையார்,

விண்ணும் ஓர் பாகம் உடையார்,

     வேதமு உடைய விமலர்,

கண்ணும் ஓர் பாகம் உடையார்,

     கங்கை சடையில் கரந்தார்,

பெண்ணும்ஓர் பாகம் உடையார்,

     பெரும்புலி யூர்பிரி யாரே.             --- திருஞானசம்பந்தர்.

 

கார்ஏறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்

            கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்

போர்ஏறு நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண்

            புண்ணியன்காண் எண்அரும்பல் குணத்தி னான்காண்

நீர்ஏறு சுடர்ச்சூலப் படையி னான்காண்

            நின்மலன்காண் நிகர்ஏதும் இல்லா தான்காண்

சீர்ஏறு திருமால் ஓர் பாகத் தான்காண்

            திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.          --- அப்பர்.

 

புரிந்துஅமரர் தொழுதுஏத்தும் புகழ்தக் கோன்காண்

            போர்விடையின் பாகன்காண் புவனம் ஏழும்

விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்

            விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேதம் நான்கும்

தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண் டோன்காண்

            தீர்த்தன்காண் திருமால்ஓர் பாகத் தான்காண்

திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்

            திருத்தளியான் காண்அவன்என் சிந்தை யானே.        --- அப்பர்.

 

எரிஅலால் உருவம் இல்லை ஏறுஅலால் ஏறல் இல்லை

கரிஅலால் போர்வை இல்லை காண்தகு சோதி யார்க்குப்

பிரிவுஇலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்

அரிஅலால் தேவி இல்லை ஐயன் ஐயாற னார்க்கே.       ---அப்பர்.

        

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் 

     பிரமனைத்தன் உந்தியிலே தோற்று வித்து,

கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில் 

     கலந்தவன் தாள் அணைகிற்பீர்கழுநீர் கூடித்

துறைதங்கு கமலத்துத் துயின்று, கைதைத் 

     தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி,

சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச் 

     சீராம விண்ணகரே சேர்மி னீரே.        --- திருமங்கையாழ்வார்.

 

 

தாதகி வேணியர்---

 

தாதகி --- ஆத்தி மலர்.

 

வேணி --- திருச்சடை.

 

வெற்றிப் புகழ் கருவூர் தனில் மேவிய பெருமாளே--- 

 

கருவூர் என்பது இக்காலத்தில் கரூர் என வழங்கப்படுகின்றது. கரூர் நகரின் மத்தியில் திருக்கோயில் உள்ளது. கோயமுத்தூர்ஈரோடுதிருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் இரயில் நிலையம்,திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் இருக்கிறது. "ஆனிலை" என்பது திருக்கோயிலின் பெயர்.

 

இறைவர்: பசுபதீசுவரர்ஆனிலையப்பர்.

இறைவியார்  : கிருபாநாயகிசௌந்தர்யநாயகி

தல மரம்     : கொடி முல்லை

தீர்த்தம்       : ஆம்பிராவதி ஆறு

 

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

 

ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். பிரம்மாகாமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர்ச் சித்தர் சந்நிதி உள்ளது.

 

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும்பன்னிருதிருக்கரங்களுடனும்தேவியர் இருவருடனும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கம் உள்ளது.

 

எறிபத்த நாயனார் அவதரித்த தலம்.

 

கருவூர் ஆனிலையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைப்பவர்களை எறிந்து வீழ்த்த மழுப்படை தாங்கி நின்றவர் ஒருவர் இருந்தார். அவர்எறிபத்த நாயனார் என்னும் திருப்பெயர் உடையவர். அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்.  ஆனிலையப்பருக்கு பூத் தொண்டு செய்பவர். ஒருநாள்அதாவது நவமி முன்னாளில்சிவகாமியாண்டார் வழக்கம்போல் பூக்களால் கூடையை நிரப்பிஅக் கூடையைத் தண்டில் தூங்கச் செய்து,திருக்கோயில் நோக்கிச் செல்லலானார். அவ் வேளையில் அவ் வழியே புகழ்ச்சோழ மன்னவரின் பட்டவர்த்தன யானை காவிரியில் மூழ்கிபாகர்கள் மேலேயிருப்பகுத்துக்கோல்காரர்கள் முன்னே ஓடவிரைந்து நடந்து வந்தது. அந்த யானை சிவாகமியாண்டாரை நெருங்கித் தண்டில் இருந்த பூங்கூடையைப் பற்றி மலர்களைச் சிந்தியது. அதைக் கண்ட பாகர்கள்,யானையை வாயு வேகமாக நடத்திச் சென்றார்கள். சிவகாமியாண்டார் சினந்து வேழத்தைத் தண்டினால் புடைக்க விரைந்து நடந்தார். யானையின் கதிநடை எங்கேசிவகாமியாண்டார் மூப்பு நடை எங்கேமூப்பால் சிவகாமியாண்டார் கால் தவறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் தரையைக் கையால் மோதி எழுந்து நின்று, "ஆனிலையப்பாஉன் திருமுடி மீது ஏறும் மலரை ஒரு யானையா மண்ணில் சிந்துவதுசிவதா! சிவதா!" என்று ஓலமிடலானார். அவ் ஓலம் கேட்டுக் கொண்டுஅவ் வழியே வந்த எறிபத்த நாயனார்சிவகாமியாண்டாரை அடைந்து பணிந்து, "அக் கொடிய யானை எங்குற்றது?" என்று கேட்டார். சிவகாமியாண்டார், "அந்த யானை இவ் வீதி வழியே போயிருக்கிறது" என்றார். என்றதும்எறிபத்த நாயனார் காற்றெனப் பாய்ந்துயானையைக் கிட்டிஅதன் மீது பாயந்தார். யானையும் எறிபத்தர் மீது பாய்ந்தது. நாயனார் சிறிதும் அஞ்சாது யானையை எதிர்த்துத் தமது மழுவினால் அதன் துதிக்கையைத் துணித்தார். யானை கதறிக் கொண்டு கருமலைபோல் கீழே விழுந்தது. பின்னை குத்துக்கோல்காரர்கள் மூவரையும்,பாகர் இருவரையும் நாயனார் வெட்டி வீழ்த்தினார். மற்றவர்கள் விரைந்து ஓடி, "பட்டவர்த்தனத்தைச் சிலர் கொன்றனர்" என்று புகழ்ச்சோழ மன்னருக்கு அறிவித்தார்கள்.

 

சோழர் பெருமான்வடவை போல் சீறிஒரு குதிரை மீது ஏறிப் புறப்பட்டார்.  நால்வகைச் சேனைகளும்பிறவும் அவரைச் சூழ்ந்து சென்றன. மன்னர் பெருமான்யானை இறந்துபட்ட இடத்தைச் சேர்ந்தார். யானையைக் கொன்றவர் எறிபத்தர் என்று கொள்ளாதவராய், "மழுவைத் தாங்கி நிற்கும் இவரே நமது யானையைக் கொன்றவர்" என்றார்கள். புகழ்ச்சோழ நாயனார் திடுக்கிட்டு, "இவர் சிவனடியார். குணத்தில் சிறந்தவர். யானை பிழைசெய்து இருத்தல் வேண்டும். இல்லையேல் இவர் அதைக் கொன்று இருக்கமாட்டார்" என்று எண்ணிச் சேனைகளை எல்லாம் நிறுத்திகுதிரையில் இருந்து இறங்கி, "இப் பெரியவர் யானைக்கு எதிரே சென்றபோதுவேறு ஒன்றும் நிகழாது இருக்க,நான் முன்னே என்ன தவம் செய்தேனோஅடியவர் இவ்வளவு முனியக் கெட்டேன். நேர்ந்த பிழை என்னவோ?" என்று அஞ்சிநாயனார் முன்னே சென்று தொழுது, "யானையைக் கொன்றவர் அடியவர் என்று நான் அறியேன்.  நான் கேட்டது ஒன்று. இந்த யானை செய்த பிழைக்கு இதனைப் பாகரோடும் மாய்த்தது போதுமா?" என்று கேட்டார். நாயனார் நிகழ்ந்ததைக் கூறினார். சோழர் பெருமான் எறிபத்த நாயனாரை வணங்கிச் "சிவனடியாருக்கு விளைத்த தீங்குக்கு யானையையும் பாகர்களையும் கொன்றது போதாது.  என்னையும் கொல்லுதல் வேண்டும். அடிகளின் மங்கல மழுவால் என்னைக் கொல்லுதல் முறைமை அல்ல" என்று சொல்லிதமது உடைவாளை எடுத்து, "இதனால் என்னைக் கொன்று அருள்க" என்று நீட்டினார். எறிபத்தர், "அந்தோ! இவர் அன்பர். இவர் தம் அன்பிற்கு ஓர் அளவு இல்லை.  வாளை வாங்கா விட்டால் தற்கொலை செய்துகொள்வார்" என்று கருதி வாளை வாங்கினார். புகழ்ச்சோழர், "ஆ! இப் பெரியவர் அடியேனைக் கொன்று என் பிழை தீர்க்கும் பேறு பெற்றேன்" என்று மனம் மகிழ்ந்தார். எறிபத்தர், "இத் தகைய அன்பருக்கோ தீங்கு நினைத்தேன்நான் பாவி! பாவி! முதலிலே என் உயிரை மாய்த்துக் கொள்வதே முறை" என்று உறுதிகொண்டுவாளைக் கழுத்தில் இட்டு அரியப் புகுந்தார். அக் காட்சி கண்ட சோழர் பெருமான், "கெட்டேன்கெட்டேன்" என்று வாளையும் கையையும் பிடித்தார். அரசர் கையைப் பற்றினாரே என்று எறிபத்தர் வருந்தி நின்றார்.

 

"இது அன்பின் பெருக்கால் நேர்ந்த இடுக்கண். இந்த இடுக்கணை மாற்றஉங்கள் தொண்டின் மாண்பை உலகத்தவர்க்குக் காட்டவேண்டிச் சிவபெருமான் திருவருளால் இவை யாவும் நிகழ்ந்தன" என்று ஓர் அசரீரி வானில் எழுந்தது. எழுந்ததும்யானை பாகர்களோடு உயிர் பெற்று எழுந்தது. எறிபத்த நாயனார் வாளை விடுத்துபுகழ்ச்சோழ நாயனாரை வணங்கினார். புகழ்ச்சோழ நாயனார் வாளை எறிந்த சிவபத்தரைப் பணிந்தார். இருவரும் திருவருளை வழுத்தினர்.  திருவருளால் பூக்கூடை நிறைந்தது. சிவகாமியாண்டார் ஆனந்த வாரிதியில் திளைத்தார். பட்டவர்த்தனத்தை அழைத்துக் கொண்டு பாகர்கள் அரசர் முன்னே வந்தனர். எறிபத்த நாயனார் வேண்டுகோளுக்கு இணங்கிபுகழ்ச்சோழ நாயனார் யானைமீது எழுந்தருளிச் சேனைகள் புடைசூழ அரண்மனையை அடைந்தார்.  சிவகாமியாண்டார் பூக்கூடையைத் தண்டில் தாங்கித் தம் திருத்தொண்டின் மேல் சென்றார். எறிபத்த நாயனார் தாம் ஏற்ற திருத்தொண்டினைக் குறைவறச் செய்து வாழ்ந்துதிருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவரானார்.

 

பொழில் கருவூர்த் துஞ்சிய

புகழ்ச் சோழ நாயனார்

வரலாறு

 

புகழ்ச்சோழ நாயனார் சேழநாட்டை ஆண்ட மன்னருள் ஒருவர். ஊறையூரிலே ஆட்சி புரிந்தவர். சைவம் தழைக்க முயன்றவர்.  திருக்கோயில்களில் பூசனைகளை வழாது நடத்துவித்தவர். திருத்தொண்டர்களின் குறிப்பறிந்து உதவுபவர்.

 

கொங்கு நாட்டு அரசர்களிடம் இருந்தும் குடகு நாட்டு அரசர்களிடம் இருந்தும் திறை வாங்குதல் பொருட்டுப் புகழ்ச்சோழ நாயனார் கருவூருக்குச் சென்றார்.  அத் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஆனிலைப் பெருமானை வழிபட்டுத் திருமாளிகை சேர்ந்துஅரியாசனத்தில் வீற்றிருந்தார். கொங்கரும்குடகரும் திறை செலுத்தினர். புகழ்ச்சோழர் அவர்கட்கு ஆசி கூறிஅரசுரிமைத் தொழில் அருளினார்.மேலும் சோழர் பெருமான்அமைச்சர்களை நோக்கிநமது ஆணைக்குக் கீழ்ப்படாத அரசர் எவரேனும் உளரோ அறிந்து சொல்லுங்கள் என்று கட்டளை இட்டார்.

 

அந்நாளில்சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஆனிலைப் பெருமானுக்கு வழக்கம்போல் திருப்பள்ளித்தாமம் கொண்டு போனார்.  அதனைப் பட்டத்து யானைபற்றி ஈர்த்துச் சிதறச் செய்தது. எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டிக் கொன்றார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழ நாயனார்எறிபத்த நாயனார் எதிரே சென்றுநேர்ந்த அபராதத்திற்குபட்டத்து யானையையும்பாகரையும்பறிக்கோல் காரர்களையும் கொன்றது போதாது. தன்னையும் கொல்லுமாறுதனது உடைவாளை எறிபத்த நாயனாரிடம் கொடுத்தார்.  எறிபத்த நாயனார் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தபோதுஇறைவர் வானிலே காட்சி கொடுத்தருளினார். பட்டத்து யானையும்மாண்டோரும் எழுந்தனர். இவ்வாறு கருவூரில் இருந்த காலத்தில் புகழ்ச்சோழ நாயனார் திருத்தொண்டில் மேம்பட்டவராக விளங்கினார்.

 

அமைச்சர்கள் மன்னரிடம் வந்து நின்று, "உங்கள் ஆட்சிக்குக் கீழ்ப்படியாத அரசன் ஒருவனே உள்ளான். அவன் அதிகன் என்பவன்.  அவன் அருகே உள்ள மலை அரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள்.  உடனேபுகழ்ச்சோழ நாயனார் அமைச்சர்களைப் பார்த்து, "அவ் அரணை அதம் செய்து வாருங்கள்" என்றார். அமைச்சர்கள் அப்படியே செய்தார்கள். அதிகன் ஓடி ஒளித்துக் கொண்டான். புகழ்ச்சோழரின் சேனை வீரர்கள் அதிகனுடைய சேனை வீரர்களின் தலைகளையும்செல்வங்களையும்பிறவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

 

ஒரு வீரரின் சடைத்தலை புகழ்ச்சோழ நாயனாரின் கண்ணுக்குப் புலனாயிற்று. நாயனார் அலறுகிறார்கதறுகிறார். "சைவம் தழைக்க அரசு இயற்றுபவன் நானாநல்லது! நல்லது!" என்றார். "சோற்றுக் கடன் முடிக்கப் போர்புரிந்த அடியவரையோ என் சேனை கொன்றது?" என்றார். "இப் பழிக்கு என் செய்வேன் என் உயிர் நீங்கவில்லையே" என்றார்.

 

இவ்வாறு நாயனார் புலம்பிஅமைச்சர்களை நோக்கி, "இவ் உலகத்தை ஆளுமாறும்சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள்" என்று கட்டளை இட்டார்.  அமைச்சர்கள் மனம் கலங்கி நின்றார்கள்.  நாயனார் அவர்களைத் தேற்றினார். நெருப்பை வளர்ப்பித்தார். நீற்றுக் கோலப் பொலிவுடன்திருச்சடைத் தலையை ஒரு மாணிக்கத் தட்டிலே ஏந்தினார். அதைத் தமது திருமுடியிலே தாங்கினார். நெருப்பை வலம் வந்தார்.  திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டே நெருப்பில் இறங்கினார்.  ஆண்டவன் திருவடி நீழலை அடைந்தார்.

 

கருவூர்த் தேவர் வரலாறு

 

திருவிசைப்பா அருளிய ஆசிரியர்கள் ஒன்பதின்மரில் ஒருவர் கருவூர்த்தேவர். இவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் அவதரித்தவர். அதனால் கருவூர்த்தேவர் எனப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் இன்னது என விளங்கவில்லை. இவர் அந்தணர் குலத்தினர். வேதங்களையும் கலைகளையும் நன்கு உணர்ந்து ஓதியவர். இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். சைவ சமயத்தின் வழி ஒழுகியவர். போகநாதரிடம் உபதேசம் பெற்றுஞான நூல்களை ஆராய்ந்து சிவயோகத்தில் நின்றவர்.  காயகற்பம் உண்டவர். தம்மை இகழ்ந்தவர்களுக்குப் பலப்பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். பித்தர் என்று தம்மை மதிக்கும்படியாகத் திரிந்தவர். பிச்சை ஏற்று உண்ணும் துறவு வாழ்க்கைய மேற்கொண்டவர். தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் பற்று அற்று இருந்தவர். மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவர்.

 

ஒரு சமயம் கருவூர்த் தேவர் வடநாடுகொங்கு நாடுதொண்டை நாடுநடுநாடு முதலிய இடங்களில் உள்ள திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு தென்பாண்டி நாட்டுத் திருப்புடைமருதூர் சென்று இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். திருவைகுண்டம் அடுத்த காந்தீசுவரம் என்னும் சிவத்தலத்தில் இறைவனின் பேரொளியைக் கண்டு தரிசித்தார். பின்னர்இவர் நெல்லைப் பதியை அடைந்துநெல்லையப்பர் சந்நிதியில் நின்று, "நெல்லையப்பா" என்று அழைக்கஅப்பொழுது நெல்லையப்பர் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டுசிறிது தாமதிக்க, "இங்குக் கடவுள் இல்லை போலும்" என்று அவர் சினத்துடன் நீங்கஆலயம் பாழாகியது. அதனை அறிந்த ஊரார் நெல்லையப்பரை வேண்டநெல்லையப்பர் கருவூர்த்தேவரை மானூரில் சந்தித்து,அருள் புரிந்து நெல்லைப் பதிக்கு அழைத்து வந்து காட்சியளித்தார். பின்பு ஆலயம் செழித்து ஓங்கியது என்பர்.

 

கருவூர்த்தேவர் நெல்லைப் பதியை விடுத்துதிருக்குற்றாலம் சென்றுஅங்குச் சிலநாள் தங்கியிருந்துபின்னர் பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து,அருள் பெற்றுபலநாள் அங்கே இருந்தார்.

 

அப்பொழுது தஞ்சாவூரில் இராசராச சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய தஞ்சை இராசராசேச்சரத்துப் பேராவுடையார்க்கு அட்டபந்தன மருந்து பலமுறை சாத்தியும் இறுகாமல் இளகி நின்றது.  அது கண்டு மன்னன் வருந்தினான். அதனை அறிந்த போகநாதர்பொதியமலையில் இருந்து கருவூர்த்தேவரை அழைப்பித்தார். கருவூர்த் தேவர் விரைந்து தஞ்சைக்கு வந்துதம் குருவையும் அரசனையும் கண்டார். இறைவனை வழிபட்டுஅட்டபந்தன மருந்தை இறுகச் செய்து பேராவுடையாரை நிலை நிறுத்தினார்.

 

கருவூர்த் தேவர் தஞ்சாவூரில் இருந்து திருவரங்கம் சென்றுஅரங்கநாதர் அருள் பெற்றுச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்து பின் கருவூரை அடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப் பிராமணர்கள்கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கத்தை விட்டவர் என்றும்,வாமபூசைக்காரர் என்றும் பழிச்சொல் தூற்றி அவருக்கு அடிக்கடி பலப்பல தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினர். ஒருநாள் கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல் நடித்துகருவூர்த் திருஆனிலை ஆலயத்தை அடைந்துபசுபதீசுவரரைத் தழுவிக் கொண்டார்.

 

கருவூர்த் தேவர் திருவுருவச்சிலை சிறு சந்நிதியாகக் கருவூர்ப் பசுபதீசுரர் ஆலயத்துள் வெளிப் பிராகாரத்திலே தென்மேற்குத் திக்கிலும்தஞ்சாவூர் பேராவுடையார் ஆலயத்தில்

வெளிப்பிரகாரத்தில் தென்மேற்குத் திக்கிலும் தெய்வீகச் சிறப்புடன் இள்ளது. அங்கு நாள்தோறும் பூசைகள் நடைபெறுகின்றன.

 

கருவூர்த் தேவர் திருத்தில்லைதிருக்களந்தை ஆதித்தேச்சரம்திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்திருமுகத்தலைதிரைலோக்கிய சுந்தரம்கங்கைகொண்ட சோளேச்சரம்திருப்பூவணம்திருச்சாட்டியக்குடிதஞ்சை இராசராசேச்சரம்திருவிடைமருதூர் ஆகிய பத்துச் சிவாலயங்களுக்கும்தலங்களுக்கு ஒவ்வொன்றாகத் திருவிசைப்பாப் பதிகங்கள் பத்துப் பாடியுள்ளார். திருவிசைப்பாப் பாடிய ஆசிரியர்களுள் இவர் பாடிய பதிகங்களே மிகுதியாக உள்ளன.

 

கருத்துரை

 

முருகா! அடியார் திருக்கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவாய்

No comments:

Post a Comment

பொது --- 1080. கலந்த மாதும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கலந்த மாதும் (பொது) தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங...