பிச்சை எடுப்பவர் யார்? பிச்சை எடுக்கப் போகின்றவர் யார்?

 


இன்று பிசை எடுப்பவர் யார்?

நாளை பிச்சை எடுக்கப் போகின்றவர் யார்?

------

 

     "விவேக சிந்தாமணி"என்னும் பழம்பெரும் நூலில் இருந்து ஒரு பாடல் வழியாக மேற்குறித்த வினாக்களுக்கு விடை காணலாம் 

 

     இந்த நூலை இயற்றியவர் யார் என்பது இந்நாள் வரையிலும் விளங்கவில்லை. இந் நூலில் நீதி புகட்டும் பாடல்கள் உள்ளன. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்நூலில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்வதுஐம்பது,அறுபது ஆண்டுகளுக்கு முன் வழக்கமாய் இருந்தது. எழுத்தறிவு இல்லாதவர்கள் கூடப் பிறர் சொல்லக் கேட்டு மனப்பாடமாகச் செய்து கொண்டவர்களை நான் அறிவேன். நாளடைவில் நல்ல நூல்கள் வெளிவருவதும் அருகிவிட்டது. மனப்பாடம் செய்யும் பழக்கமும் குறைந்து போனது. 

 

     சிறு வயதில் எனது ஊர்ப் பெரியவர்கள் சிலர்சில பாடல்களைச் சொல்லக் கேட்டது முதல்இந்த நூலைப் படிக்கவேண்டும் என்று ஆவல் இருந்தது. ஆனால்பலருக்கும் அவர்கள் சொல்லுகின்ற பாடல் எந்த நூலில் உள்ளது என்று தெரியாது. சிறிய கிராமம். ஏழ்மை நிலை. நூலைத் தேடுபவர்களும் மிகச் சிலரே. எனவேவாய்ப்புக் கிட்டவில்லை. 1967-ல் நான் சென்னைக்குப் பிழைப்புக்காக வந்தபோதுதெரு ஓரங்களில் உள்ள பழைய நூல்களில் தேடுவேன். இரத்தின நாயகர் அண்டு சன்ஸ்1939 - ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்த "விவேக சிந்தாமணி"என்னும் நூலும் "பட்டினத்தார் பாடல்" நூலும் இருந்தன. இரண்டையும் விலை பேசியபோதுகடைக்காரர் என்னைப் பார்த்து"இந்த சின்ன வயதில் இந்தப் புத்தகங்கள் உனக்கா அல்லது வேறு யாருக்காகவா?"என்று கேட்டார். "எனக்குத் தான்"என்றேன். "வாங்குவார் இல்லாமல் கிடந்த இந்தப் புத்தகங்கள் இரண்டும் இன்று உன்னால் விலை போகின்றது. பட்டினத்தார் பாடல் புத்தகத்திற்கு மட்டும் விலை கொடு. விவேக சிந்தாமணிக்கு விலை இல்லை"என்றுஅன்போடு எனது முதுகைத் தட்டிக் கொடுத்தார். அவ்வப்போது நூல்களைப் படித்து வருவேன். 

 

     அந்தப் பெரியவர் சொன்னதன் பொருள்விவேக சிந்தாமணி என்கின்ற அரியதொரு நூலைப் படிக்கும்தோறும் விளங்கும். ஆமாம். விவேக சிந்தாமணிக்கு விலை பேச முடியாது. அது விலைமதிப்புக் கூற முடியாததே.

 

     நிற்கசென்னைசைதாப்பேட்டையில்காரணீசுவரர் கோயில் தேரடிக்கு அருகில் "கௌரி நிவாஸ்" என்று ஒரு உணவகம். அது இன்றும் உள்ளது. அந்த உணவகத்தில்1970-க்கு முன்னர் ஒரு நாள்சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டேஇந்த நூலை நான் படிப்பதைஅதன் நிறுவனர் திரு. பழநி முதலியார் பார்த்தார். (உண்ணும்போது வேறு நினைவு கூடாது. இறைச் சிந்தனையோடு உண்ணவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதன் அருமை எனது மரமண்டையில் ஏறவில்லை. இந்த வயதிலும் அறிவு இல்லாத போதுஅந்த வயதில் அடிமுட்டாளாகத் தானே இருந்திருக்க வேண்டும்.)"என்னப்பாஇந்த வயதில் இதைப் படிக்கிறாய்" என்றார். "எனக்குப் பிடித்தது" என்றேன். மேலாளரை அழைத்து, "இந்தப் பையன் இனி வந்தால்காசு வாங்காமல்அவனுக்கு வேண்டியதைக் கொடுப்பா" என்றார். அன்று அவர் காசு வாங்கவில்லை. அரைப்பட்டினிகால்பட்டினி கிடந்த எனக்கு அது நல்லதுதான். இருந்தாலும்எனது மனம் இசையவில்லை. அவருக்கு நன்றி சொல்லி வந்த மறுநாள் முதல் அங்கு செல்வது இல்லை. என்றாவது வழியில் பார்த்தால்நலம் விசாரிப்பார். வாழ்த்துவார். எங்காவது வழிபாட்டு நிகழ்வுகளில் நான் திருமுறைதிருப்புகழ் பாடுவதைக் கேட்டு, "சிறப்பு" என்று சொல்லி மகிழ்ந்து வாழ்த்துவார். கௌரி திருமண மண்டபம் அவருக்கு உரிமையானது. குளக்கரை தெருவில் உள்ளது. இப்போது ரிலையன்ஸ் கடை உள்ளது. பின்னாளில் சைதைத் தமிழ்ச் சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளுக்குகட்டணம் இல்லாமலே தந்தவர்.

 

     பழம்பெரும் நூல்களுக்கு அவ்வளவு மரியாதை அப்போது. இன்றைய நிலை வேறு.நல்ல நூல்களுக்கு அன்று இருந்து மதிப்பும் மரியாதையுமே தனிச் சிறப்பு.

 

     அருமையான "விவேக சிந்தாமணி"என்னும் நூலில் மேற்குறித்த தலைப்பிற்கு விடை பகரும் பாடலைப் பார்ப்போம்...

 

"மண்ணார் சட்டி கரத்து ஏந்தி

     மறநாய் கௌவும் காலினராய்

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை 

     அறிந்தோம்அறிந்தோம்அம்மம்மா!

பண்ணார் மொழியார் பால் அடிசில்

     பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட

உண்ணா நின்ற போது ஒருவர்க்கு 

     உதவா மாந்தர் இவர்தாமே!"

 

இதன் பொருள் ---

 

     களிமண்ணால் செய்யப்பட்ட பிச்சைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டுகோபம் பொருந்திய தெரு நாய்கள் குரைத்துக் கொண்டு வந்து கடிப்பதற்குப் பாய்கின்ற கால்களை உடையவர்களாய்வீதிகள் தோறும் சென்றுதலையினை உயர்த்திப் பார்த்துபசியினால் வாடியாராவது தமக்குத் தருவார்களா என்று ஏக்கமுற்றுஇரந்து நிற்போரை இன்னார் என யாம் அடையாளம் கண்டு கொண்டோம்கண்டு கொண்டோம். அம்மஅம்மா!இவர் யார் என்றால்முற்பிறவியில் இசை ததும்பும்படியான இனிமை தரும் சொற்களைப் பேசுகின்ற தமது மனைவியர்பால் சோற்றை பசுமையான பொன்னால் ஆன கலத்தில் வைத்து அன்போடு தமக்கு ஊட்டஉண்டுகொண்டு இருந்த காலத்தில்முன் சொன்னது போல பிச்சை கேட்டு வந்த ஒருவருக்கும், (தாம் உண்ணுகின்ற சோற்றில் ஒரு பிடியேனும் கொடுத்து) உதவாத மனிதர் தான் இவர்.

 

     எவ்வளவு அருமையான பாடல்!!! மனிதனாகப் பிறந்தால் அவன் ஆறறிவு உடையவனாக இருக்கவேண்டும். ஆறாவது அறிவு மன அறிவு அல்லது உயிர் அறிவு ஆகும். உயிர் அறிவு உள்ளவன் என்றால்பிற உயிர் படும் துன்பத்தைக் கண்டு பொறுத்திருக்கமாட்டான். அப்படிப்பட்ட அறிவு இல்லாதபோதுஒருவன் செல்வத்தில் மிதந்து கொண்டு இருப்பதோடுநூல்களைக் கற்று இருந்தாலும் பயனில்லை.  

 

     "அறிவினால் ஆவது உண்டோபிறிதின் நோய் தன் நோய் போற்றாக் கடை" என்றார் திருவள்ளுவ நாயனார். ஒருவனது துன்பத்தைத் தனது துன்பமாக எண்ணும் மனம் இல்லையானால்எத்தனை நூல்களைப் படித்து எவ்வளவுதான் அறிவைப் பெற்றிருந்தாலும்அவற்றால் பயன் ஒன்றும் இல்லை.

 

     பசி என்பது எல்லா உயிர்க்கும் பொதுவானது. நோய்களோடு ஆண்டுக் கணக்கில் போராடி உயிர் வாழலாம். பசி என்னும் தீய நோயோடு சில மணி நேரமும் போராட முடியாது. பசி நோயை அறியாதவர் யாரும் இல்லை. பிறர் பசியால் துன்புறுவதைக்   கண்ணால் பார்த்தும்உள்ளம் பதைத்துஉதவ வேண்டும் என்ற எண்ணம் வராவிட்டால்ஒருவன்  படைத்த செல்வத்தால் என்ன பயன்அவன் கற்ற நூல்களின் அறிவால் என்ன பயன்"நீடிய பசியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உள்ளம் பதைத்தேன்"என்றார் வள்ளல்பெருமான்.

 

     பசியினால் துன்பப் படுவோருக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்து வாழ்வதேஇந்த உடம்பைக் கொண்டுஉயிரானது பெறுகின்ற பயன் ஆகும். பசித்தோர்க்குச் செய்யும் உதவிஅவரது பசியைத் தணிப்பதே ஆகும். காரணம் பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

 

"அற்றார் அழிபசி தீர்த்தல்அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.          

 

என்றார் திருவள்ளுவ நாயனார். 

 

     செல்வத்தை நிரம்பப் படைத்தவன்அதனைச் சேமித்து வைக்கும் இடமே பசித்தவர் வயிறுதான்.

 

     யாராய் இருந்தாலும்தாம் உண்ணுகின்ற வெந்த சோற்றில் ஒரு கைப் பிடியாவது பசித்தவர்க்குக் கொடுத்து உதவ வேண்டும். "யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். "பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இருவினையோம் இறந்தால்ஒரு பிடி சாம்பரும் காணாதுமாய உடம்பு இதுவே" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     எனவேஇன்று பிச்சை எடுப்பவர் யார் என்றால்முற்பிறவியில் பசித்தவர்க்குதாம் உண்ணுகின்ற அன்னத்தில் ஒரு பிடியாவது கொடுத்து உதவாதவர் தான். எனில்இன்று பசித்தோர்க்கு அன்னமிடாதவர் மறுபிறவியில்பிச்சை எடுக்கவேண்டி வரும் என்பது சொல்லாமலே விளங்கும்.

 

            மாடமாளிகைபொன் பொருள் எல்லாவற்றிலும் மிதந்து கொண்டு இருப்பர். ஒன்றும் இல்லாத வறுமையில் உள்ளவர்,அதுவும் தவத்தைப் புரிபவர் ஒருவர்பசிக்கு உணவு என்று தமது வாயிலில் வந்து நின்று, "ஐயாபசிக்கிறது. சிறிது அன்னம் படையும்" என்று கேட்டவுடன்,மிகவும் தாராளமாக "மேல் வீட்டில் போய்க் கேள்,கீழ் வீட்டில் போய்க் கேள்" என்று கூறி அவனை விரட்டி அடிப்பர். அவ் இரவலன் தனக்கு உண்டான பசியைப் பொறுக்கமாட்டாமல், "ஐயா! எல்லா இடங்களிலும் கேட்டேன்ஒன்றும் கிடைக்கவில்லை. பசி மிகவும் வாட்டுகிறது. ஏதாவது கொடுங்கள்" என்று கூறி சிறிது படி ஏறிவீட்டிற்குள் நுழைய முயலுமுன்அவனது எதிரில் முடுகிப் போய்நாய்போல் சீறி விழுந்து விரட்டி அடிப்பர். ஆனால்வீணாக வாழ்நாளைக் கழித்து விணாகப் போகின்றவருடைய சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொள்வர். இவர்கள் படைத்துள்ள செல்வம் எல்லாம் ஒருநாளில் வற்றிப் போய்விடும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"வெறுமிடியன் ஒருதவசி அமுதுபடை எனும் அளவில்,

     மேலை வீடுகேள்கீழை வீடுகேள்,

     திடுதிடு என நுழைவதன்முன்எதிர்முடுகி,  அவர்களொடு                                                                                        

சீறிஞாளிபோல் ஏறி வீழ்வதாய்,

     விரகினொடு வருபொருள்கள் சுவறிஇடமொழியும்ஒரு                                                                                                              

     வீணியார் சொ(ல்)லே மேலது ஆயிடா, ......                                                                             விதிதனை நினையாதே"                                                        --- திருப்புகழ்.

 

          பொருள் உள்ளபோதே பொருளற்ற ஏழைகளுக்குக் கொடாதவர்கள்தாம் நேர்மையற்ற வழியில் தேடிய செல்வத்தை மண்ணில் புதைத்து ஒளித்து வைத்திருந்த போதுஅப்பொருளைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டுதிகைத்து,உடல் மெலிந்துமனம் வாட்டமுற்று துக்கப்பட்டு தம் வாழ்நாளை வீணாக அழிப்பவர்களே இவர் ஆவர் என்றும் பாடுகின்றார்அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில்.

 

"வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய் அன்பினால்

பாடிக் கசிந்துஉள்ளபோதே கொடாதவர்பாதகத்தால்

தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து

வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே".

 

            "செருப்பாலே அடிப்பவர்க்குவிருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவர்" என்று இந்தக் கயவர்களை அடையாளம் காட்டுகின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

 

            ஆகஎதிர்காலத்தில் பிச்சை எடுக்கப் போகின்றவர்க்கு உள்ள அடையாளம் காட்டப்பட்டது.

 

            இனிஇப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானவர் யார் என்று பட்டினத்தடிகள் காட்டுவதைப் பார்ப்போம்.

 

"ஆற்றோடு தும்பை அணிந்து ஆடும் அம்பலவாணர் தமைப்

போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,

சோற்றாவி அற்றுசுகம் அற்றுசுற்றத் துணியும் அற்றே,

ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற்று இருப்பர்களே"

 

இதன் பொருள் ---

 

            கங்கை நதியுடன் தும்பை மலரையும் தரித்துஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமானைத் துதிக்காதவர்க்கு இந்த உலகத்தில் அடையாளம் உண்டு. (அது என்னவென்றால்)இந்தப் பூமியில் சோற்று வாசனை ஒழிந்துசுகம் ஒழிந்துஅரையில் உடுத்துக் கொள்ள ஆடையும் இல்லாமல்யாசித்தாலும் பிச்சை கிடைக்காமல் ஏக்கத்தோடு இருப்பார்கள்.

 

            "மண்ணினில் பிறந்தார் பெறும்பயன்மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில். இந்த அமுத வாசகம்தான்திருக்கோயில்களில் இன்று நற்பகலில் அன்னம் பாலிப்புச் செய்யும் நற்செயலுக்கு ஊக்கமாக அமைந்தது. 

 

     ஆகஇந்தப் பிறவி எடுத்ததன் பயனேபசியால் வாடுவோர்க்கு சோறு படைத்து வாழ்வதற்கே. 

 

            பசித்தோர்க்கு சோறு இட்டோர்க்கு என்ன வாய்க்கும்?சோறு வாய்க்கும்.

 

     சோறு என்னும் சொல்லுக்கு "அன்னம்"என்றும் "திருவடிப் பேறு" என்று பொருள் உண்டு. "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்றால், "தில்லையைத் தரிசிக்க முத்தி" என்றது போல,  தில்லைச் சிற்றம்பலமானது தன்னை வணங்குவோருக்குத் திருவடிப் பேற்றை அளிக்கும் என்றே பொருள். "பாதகமே சோறு பற்றினவா தோள்நோக்கம்" என்று மணிவாசகப் பெருமான் அருளியதும் காண்க.

 

            இதைப் பட்டினத்தடிகள் நெஞ்சறிவுறுத்தலாகநமக்கு அறிவுறுத்தம் பாடலைக் காண்க..

                                                                                                            

"அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயும்

சென்மம் எடுத்தும்சிவன் அருளைப் போற்றாமல்,

பொன்னும்மனையும்எழில்பூவையரும்வாழ்வும் இவை

இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே".

 

இதன் பொருள் ---

 

            நெஞ்சமே! நீ உண்ணுகின்ற அன்னத்தைஆதரவு அற்றுவயிற்றுப் பசி தீர்க்க சோற்றுக்காக அலைபவர்க்குபகிர்ந்து அளித்து உதவிபின் உண்ணுகின்றதற்காக இந்தப் பிறவியை எடுத்து இருக்கின்றாய். அவ்வாறு ஓர் அற்புதமான பிறவியைத் தந்த சிவபரம்பொருளின் திருவருளைப் போற்றாமல்பொன்னையும்மண்ணையும்,அழகு வாய்ந்த பெண்ணையும்இவற்றால் உண்டாகும் போகத்தையுமே இன்னும் கூடச் சதம் என்று நினைத்து இருக்கின்றாயே. 

 

"முன்தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்,

இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது,பாழ்மனமே!

அற்றவர்க்கும் ஈயாமல்அரன் பூசை செய்யாமல்,

கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறைந்து விட்டனையே".

 

இதன் பொருள் ---

 

            பாழான நெஞ்சமே! முந்தைய பிறவிகளில் நீ செய்து வைத்த புண்ணியத்தின் பலனாகஉனக்கு இப் பிறவியில் அனுபவிக்கவேஇந்தஐசுவரியாமானது வாய்த்தது என்று நினையாதுதரித்திரர்க்கும் கொடுக்காமல்சிவபூசையும் செய்யாமல்கற்ற பெரியோர்க்கும் கொடுத்து உதவாமல்செல்வச் செருக்கால் அறிவற்று வாழ்கின்றாயே.

 

     "இறைக்கின்ற கிணறு ஊறும். இறைக்காத கிணறு நாறும்." என்பது போல் பயன்படுத்தாத உள்ள கிணறு பாழும்கிணாறு ஆகி விடும். இறைக்க இறைக்க  நீர் உறும்போதுஅது பயனுள்ளதாகி விடும். செல்வத்தில் ஒரு பகுதியை நல்ல செயலுக்குப் பயன்படுத்தினால்அந்தச் செலவானதுநம்மிடம் எஞ்சி உள்ள செல்வத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும்.

 

     இந்தப் பிறவியில் வசதியாக வாழ்கின்றோம். "செல்வத்துப் பயனே ஈதல்துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகள் சிந்தனைக்கு உரியவை. சிந்திப்போம்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...