குரு க்ஷேத்திரம்

 


"குரு ஷேத்திரம்" ஒரு போர்க்களம் என்பது தெரியும். 

 

க்ஷேத்திரம் --- இந்த உடல்.

 

க்ஷேத்திரக்ஞன் --- இந்த உடம்பை இடமாகக் கொண்டு நிற்கும் ஆன்மா. 

 

குரு --- ஒளி. 

 

ஒளி,  ஞானத்தைக் குறிக்கும். 

இருள்அஞ்ஞானத்தையும்அதற்குக் காரணமாக ஆணவத்தையும் குறிக்கும். 

 

குரு க்ஷேத்திரத்தில் ஆணவம் தோற்றது. 

 

அன்புஞானம் வென்றது. 

 

மகாபாரதம் காட்டும் தாத்பரியம் இது. மக்கள் உணர்வு சிறக்க வேண்டியே,இறையருளால் அதிஷ்டிக்கப்பட்ட அருளாளர்கள் அவரவருக்கு வேதப் பொருள் எப்படி அர்த்தமானதோ அதை மையமாக வைத்துகால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப காவியங்களைப் புனைந்தார்கள். 

 

இராமாயணம் மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களும் மொழிக்கு மொழி வேறுபட்ட நிலைகளிலேயே ஆக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. 

 

ஆனால் அவற்றில் உயர்வு தாழ்வு கற்பிப்பது அவரவர் விருப்பு வெறுப்பின்பால் பட்டதே. இது குறித்து எவ்வளவு காலம் வாதிட்டாலும் ஏற்பவர்களும் மறுப்பவர்களும் இருக்கவே இருப்பார்கள். அவர்களிலும் கருத்தை மாற்றிக் கொள்பவர்களும் எக்காலத்திலும் இருப்பார்கள். 

 

தமிழில் உள்ள புராணங்களும் இதில் அடங்கும். 

 

உதாரணமாகமணிவாசகர் வரலாறு ஆறு புராணங்களில் உள்ளது. அனைத்துமே ஒரே நிலையில் இல்லை. காரணம் ஆறும் ஒரே காலத்தவை அல்ல.  அவரவருக்கு உணர்வில் என்ன தோன்றியதோ அதைச் சொல்லி வைத்தார்கள். ஒன்றை ஏற்பவர்கள் மற்றவற்றை ஏற்பதில்லை.

 

இராமாயணம் கூடவால்மீகியின் காலம் வேறு. கம்பரின் காலம் வேறு. வால்மீகியின் நாடும் அதன் கலாச்சாரமும்  வேறு. கம்பரின் நாடும் கலாச்சாரமும் வேறு. அதனால் பல இடங்களில் வால்மீகியில் இருந்து கம்பர் மாறுபடுகின்றார். அது போலவே இன்னும் பல மொழிகளில் அவ்வப்போது தோன்றிய இராமகாதைகளும் வேறுபடுகின்றன. 

 

அதுபோலவே வியாச பாரதமும்வில்லிபாரதமும்மற்ற பாரதங்களும். 

 

இவ்வாறு வேறுபட்ட புராணங்கள் ஏன் வந்தன என்னும் ஐயம் தோன்றவேண்டும். 

 

திருஞானசம்பந்தப் பெருமானைக் குருவுக்கு கொண்டகாழிக் கண்ணுடைய வள்ளல் பாடியருளிய   "ஒழிவில் ஒடுக்கம்" என்னும் சாத்திரத்தில்  காலமறைகல்மறைதேசமறை என்னும் மூன்று  நிலைகள் சொல்லப்பட்டு உள்ளன. 

இவற்றை விளக்கப் புகுந்தால் மிகப் பெருகும்.  

 

ஒவ்வொரு மாமனிதர் வாழ்க்கையும் ஒரு பாடம். வரலாறு. வாழ்வியலில் நாம் படித்து அறியாத அனுபவ உண்மைகள் யாவும் இவர்கள் வரலாற்றால் விளங்கும். கற்ற பிற நீதி நூல்களின் கருத்துஇந்த வரலாறுகள் மூலமாக விளங்கும். 

 

அதனால் தான் அவரவர் சொல்ல வந்த வாழ்வியல் உண்மைகளுக்கு ஏற்ப புராணேதிகாச (புராணம்+இதிகாசம்) வரலாறுகள் அமைந்தன. ஆகஎல்லாம் ஒரு உன்னதமான வாழ்க்கை உண்மையைச் சொல்ல வந்தவையே. 

 

சரிமகாபாரதம் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் உண்மைஅதன் தாத்பரியம் பற்றிய செய்திக்கு வருவோம். 

 

திரௌபதி ஆன்மா. 

பஞ்சபாண்டவர்கள் ஆன்மாவின் ஐந்து புலன்கள். ஐம்புலன்களுக்கும் அடிமைப்பட்டு ஆன்மா இயங்குகிறது. 

 

துரியோதனன் முதலானவர்கள் ஆணவத்தை முதலாக உடைய 96தத்துவங்கள். நுற்றுவர் கௌரவர். கௌரவரமானவை அல்ல தத்துவங்கள். அவைகளை உணர்ந்து ஒவ்வொன்றுக்கும் ஆட்படாமல் அவற்றைக் கடக்க வேண்டும். கௌரவர்கள் என்னும் பெயர் படைத்து இருந்தாலும் அவர்கள் உண்மையில் கௌரவமானவர்கள் அல்லர். 

 

திருதராட்டிரன் ஆணவம். ஆணவத்திற்கு அறிவு இல்லை என்பதை உணர்த்த அவன் குருடன் ஆனான்.

 

 ஆணவத்திற்குத் துணையாக இருந்த காந்தாரியும்சார்பு காரணமாக குருடியாக இருக்கவேண்டிதாயிற்று. 

 

ஆணவம் முதலான தத்துவங்கள் ஆன்மாவின் ஐம்புலன்களுக்கு ஆசை காட்டிசூதாட்டம் ஆட வைத்தது. ஐம்புலன்கள் ஆகிய பாண்டவர்கள் தத்துவங்களுக்கு அடிமை ஆனார்கள். ஆன்மாவான திரௌபதியும் ஐம்புலன்கள் தனது அறிவில் தடுமாறஆணவத்துக்கு அடிமையானாள். 

 

தத்துவங்கள் ஆகிய கௌரவர்களால் ஆன்மாவான திரௌபதி மானபங்கம் அடைய நேர்கிறது. 

 

கற்ற நூல் அறிவு துணை செய்யாது. ஆணவத்தின் வலி குன்றிப்போய் உண்மை அறிவு விளங்காது என்பதுசபையில் இருந்த பெரியோர்களான பீஷ்மர்விதுரர்துரோணர் முதலானவர்களைக் குறிக்கும். 

 

மானபங்கத்துக்கு ஆளாகப் போகும் திரௌபதியைக் காக்கஆணவத்திற்கு அடிமையான ஐம்புலன்கள் ஆகிய பாண்டவர்களால் முடியவில்லை. கற்ற நூல்களும் துணைக்கு வர முடியவில்லை.  

 

யாரிடம் முறையிட்டும் பயனில்லை. 

 

ஆணவத்தின் வடிவமான துரியோதனன் ஆணையால் திரௌபதியின் மானபங்கம் தொடர்கின்றது. யாரும் துணைக்கு வராத நிலையில்ஆன்மாவான திரௌபதி தன் முனைப்பு என்னும் தற்போதத்தால் தன்னைக் காத்துக் கொள்ள முயல்கின்றாள். தன்னால் முடியாத போது கண்ணன் என்னும் தெய்வத்தின் துணையை வேண்டிஅதுவரையில் மார்பகத்தை மறைத்த கைகளை உயர்த்தி, "ஹரி ஹரி ஹரி" என்று அவன் சரணத்தையே கதி எனக்கொண்டு முறையிட்டுக் கதறினாள். சரணாகதி ஆனது. 

 

இறுதியாக தெய்வமே ஆன்மாவைக் காத்தது. உயிருக்கு இறுதி வரும்போது உற்றார் உறவினர்கள்,  கற்ற கல்விதேடிய செல்வம் எதுவும் துணை வராது என்னும் அதி அற்புதமான வாழ்வியல் உண்மையை உணர்த்துவது இந்த நிகழ்வு. 

 

ஒவ்வொருவர் வாழ்வும் குருக்ஷேத்திரம் என்பதுகீதையில் உள்ள "க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ யோகம்" என்னும் பகுதியை குருமுகமாக ஓதிஉணர்ந்து தெளிந்தால் விளங்கும். 

 

குரு என்றால் நிறம் ஒளி என்று பொருள். 

 

க்ஷேத்திரம் என்பது இந்த உடம்பு. 

 

உடம்பில் குடிகொண்டுள்ள ஆன்மாவில் அஞ்ஞான இருள்ஆணவ இருள் மண்டிக் கிடக்கிறது. அதனால் ஆன்மாவானது நல்லுணர்வு பெறமுடியாமல் துன்பத்திற்கு ஆளாகிறது. இதிலிருந்து மீளவேண்டுமானால்ஆன்மாவுக்கு அமைந்துள்ள தீய நினைவுதீய வாக்குதீய செயல்கள் இவற்றில் இருந்து விடுபடவேண்டும். விடுபட்டால் ஆன்மா ஆணவ இருள் நீங்கிஒளி நிலையை அடைந்துநிரதிசயானந்தம் என்னும் என்றும் குறையாதமாறுபாடு இல்லாத நித்திய இன்பத்தில் திளைத்து இருக்கும். 

 

குருக்ஷேத்திரம் என்பது நல்லவற்றுக்கும் தீயவற்றுக்கும் நிகழும் இறுதிப் போர்க்களம். மனப் போராட்டம். இதில் நல்லவர்களுக்கு என்றும் துணையாக இருந்து,நல்லறிவு புகட்டிஅறிவு மயக்கத்தை தெய்வம் நீக்கி அருள் புரியும் என்பதுதான் போர்க்களத்தில் கண்ணன் புரிந்த கீதோபதேசம்.

 

நல்லவர் பக்கம் நின்று அவர்களின் துன்பத்தைப் போக்கிதனது எளிவந்த கருணை என்னும் சௌலப்பியத்தால் இறைவன்  அருள் புரிவான் என்பது கண்ணன் பார்த்தனுக்கு சாரதி ஆனது உணர்த்தும். 

 

ஆன்ம ஒளி விளங்கும் இடமே "குரு க்ஷேத்திரம்".

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...