வறுமையிலும் செம்மை

 

கொடைப் பண்பு பிறவிக் குணம்

-----

 

     சிலவற்றைப் பழக்கத்தால் உண்டாக்கிக் கொள்ளமுடியும். சித்திரம் எழுதும் திறம் வேண்டுமா?  நாளும் எழுதப் பழகுவதால் அது நாளடைவில் கைவந்து விடும். சித்திரமும் கைப்பழக்கம்.

     அழகுத் தமிழில் பேச வேண்டுமா? நாளும் பொருள் பொதிந்த நூல்களைப் படித்துப் பேசிப் பயின்று வந்தாலே, நல்ல தமிழ் நம்மிடம் விளையாடும். நடிகர் நடிகையர் தமக்கு உரிய வசனங்களை, நிலைக் கண்ணாடி முன் நின்று, அபிநயத்தோடு பேசிப் பழகுவர். பாடகர்கள் நல்ல தமிழ்ப் பாடல்களை உச்சரிப்புப் பிசகாது பாடிப் பழகி, சபை ஏறுவர். எனவே, செந்தமிழானது, நாவினது பழக்கத்தால் அமைந்து விடும். செந்தமிழும் நாப்பழக்கம்.

     நாளும் கற்க வேண்டியவைகளைக் கற்று, மனப்பாடம் செய்து, உருவேற்றி வந்தால் கல்வியானது சிறக்கும். எனவே, வைத்தது ஒரு கல்வி மனப்பழக்கத்தால் வரும். "ஓதுவது ஒழியேல்" என்பது ஆத்திசூடி. "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்பதும் ஔவையார் வாக்கு.

     நடை என்பதை நடந்து பழகுதல் என்று கொண்டாலும் சரி.  நடக்காமல் அமர்ந்தபடியே இருந்தால் நடை வராது. நாளும் நடந்து பழகவேண்டும். எனவே, நடைப்பழக்கம் என்பது நித்தம், அதாவது, நாளும் அமையவேண்டும்.

     நடை என்பதற்கு ஒழுக்கம் என்றும் பொருள் உண்டு. அப்படிக் கொண்டால், சில ஒழுகலாறுகளை நாளும் கடைப்பிடித்து வந்தால், அதுவே இயல்பாக அமைந்து விடும். எனவே, நடையும் நித்தம் நடைப் பழக்கத்தால் அமைந்து விடும்.

     இவை எல்லாம் தனிமனித முயற்சியாலும் கூடும். பிறர் துணையாலும் கூடும்.

     ஆனால், நட்பு, தயவு, கொடை முதலிய போற்றத்தக்க குணங்கள், வெற்றுப் பழக்கத்தால் அமைவது இல்லை. அப்படி அமைந்தாலும் நிலைத்து நிற்பது இல்லை. இவை மூன்றும் பிறவியிலேயே ஒருவருக்கு அமைந்து இருக்கவேண்டும்.

     நட்பு என்பது ஒத்த கருத்து உள்ளவரோடு கொள்ளுதல். கருத்து ஒருமிக்கவில்லையானால், அது தீ நட்பாக அமைந்து கேட்டை விளைக்கும். அல்லது கூடா நட்பாக அமைந்தும் கேட்டை விளைவிக்கும்.  நல்ல நட்பு என்பது, தவறு செய்யும்போது இடித்துக் கூறி, நல்வழிப்படுத்துவது. முகம் நக (சிரிக்கச் சிரிக்கப் பேசி, உபசாரமாக) நட்புக் கொள்வது அல்ல. நல்ல கருத்துக்களை வருந்தும்படி சொல்லியும், நலமற்ற செயல்களைச் செய்யும்போது கூடாது என்று இடித்துரைத்தும், நடக்க வேண்டிய முறைமையினை அறிந்து வழிநடத்துவோரின் நட்பினை ஆராய்ந்து அறிந்து, அதனையே கொள்ளுதல் வேண்டும். பழிக்கு அஞ்சுகின்ற நற்குணம் படைத்தவனுடைய நட்பினை, எந்தவிதப் பொருள் கொடுத்தாவது பெற்றுக் கொள்ளவேண்டும் என்கின்றார் திருவள்ளுவர். பொருந்திய நட்பினர் மீது பொறாமை கொண்டு, கலகத்தை விளைத்து, நட்பினைப் பிரிக்கும் காரியத்தைச் செய்பவரும் உண்டுழ உண்மை நட்பு இதனால் பாழாகாது.

     தயை என்பது அன்பையும், அதனால் உண்டாகும் அருளையும் குறிக்கும். "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்பது திருக்குறள். அன்பு என்பது ஒருவன் தனக்குத் தொடர்பு உடையோரிடத்தில் கொள்ளுவது. அருள் என்பது தொடர்பு இல்லாத பிற உயிர்களிடத்திலும் கொள்ளுவது.

     கொடை என்பது கொடுத்தலைக் குறிக்கும். பயன் கருதாது, நற்பணிகளுக்கும், நல்லோர்க்கும், இல்லாதோர்க்கும் உதவுதலைக் குறிக்கும். இது குறித்தே, "நன்கொடை" என்னும் சொல் உருவானது.


"ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே.

தா என் கிளவி ஒப்போன் கூற்றே.

கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே".

என்பது ஒல்காப் புகழ் பெற்ற தொல்காப்பியம் காட்டுவது.

     ஆக, நட்பு, தயவு, கொடை என்னும் நற்குணங்கள் ஒருவனுக்குப் பிறவிக் குணமாக அமைந்து இருத்தல் வேண்டும்.

     இது, மனதைப் பிற நிலைகளில் செலுத்தாமல், நல்லோர் காட்டிய வழியில் கட்டுப்படுத்தி நடந்து, மெய்ப்பொருளை உணர்ந்து ஒழுகுவதால், பிறவிகள் தோறும் வரும் நல்வினைப் பயனாக அமையும். ஒரே இரவில் இது அமையாது.

 

இக் கருத்துக்களை எல்லாம் ஒருசேர வைத்து,

 

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம், – நித்தம்

நடையும் நடைப்பழக்கம், நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்.

 

என்று ஒரு பாடலின் மூலம் ஔவையார் நமக்குக் காட்டினார்.

 

"தோன்றின் புகழொடு தோன்றுக, அஃது இல்லார்

தோன்றலின் தோன்றாமை நன்று"

 

என்னும் திருக்குறளின் வழி, "மனிதராய்ப் பிறந்தால், புகழ் பெறுதற்குக் காரணமாகிய குணத்தோடு பிறக்கவேண்டும். அது இல்லாதவர் மனிதராய்ப் பிறத்தலை விட, பிறவாது இருத்தல் நல்லது" என்கின்றார் நாயனார். 

     மக்களாய்ப் பிறவாமல் இருப்பது நல்லது என்றதால், அருத்தாபத்தியினால், விலங்குகளாய்ப் பிறத்தல் நல்லது என்பது பெறப்படும். புகழிற்கு ஏதுவான குணங்கள் அமையப் பெறாதார், அன்பு இல்லாதவர் என்றும், அருள் இல்லாதவர் என்றும் இகழப்படுவர். விலங்குகளை அவ்வாறு இகழுதல் இல்லாமையால், புகழுக்கு ஏதுவான குணங்கள் இல்லாதவர் மக்களாய்ப் பிறத்தலினும், விலங்காய்ப் பிறத்தல் நல்லது எனலாம்.

     புகழுக்கு ஏதுவாக விளங்குவது ஈகைச் செயலே என்பதைக் காட்ட,

ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு

என்றார் திருவள்ளுவ நாயானர். இதனால், "வறியவர்க்குக் கொடுப்பதும், அதனால் புகழ் உண்டாக வாழ்வதும் அல்லாமல், மக்கள் உயிர்க்கு பயன் வேறு இல்லை" என்கின்றார் நாயனார்.

     ஒருவனுக்குப் புகழ் உண்டாக வாழ்வதற்கு, கல்வி, ஆண்மை, நல்ல குடிப்பிறப்பு, நல்ல ஒழுக்கம், செல்வம், தீவினைக்கு அஞ்சுதல், நடுவு நிலைமை முதலிய வேறு காரணங்களும் இருந்தாலும், அவற்றுள், ஈகையே சிறந்தது என்றார். அந்த ஈகையானது, மனித இனத்தைத் தவிர பிறருக்கு வாய்க்காது. மனித இனத்தால்தான், பிற இனத்தையும் வாழவைக்க முடியும். "ஈகை" என்னும் அதிகாரத்தின் பின்னர், "புகழ்" என்னும் அதிகாரத்தைத் திருவள்ளுவ நாயனார் அமைத்தருளிய அருமை சிந்தனைக்கு உரியது.

     "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்றும், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும், "உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே" என்றும், "செல்வத்துப் பயனே ஈதல்" என்றும் புறநானூறு கூறும். "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்" என்று கலித்தொகை கூறும். "ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை" என்று மணிமேகலை அறிவுறுத்தும். இதனால், இசைபட ஒருவன் வாழ்கின்றான் என்பதை, அவனுடைய ஈகைப் பண்பு அறிவிக்கின்றது என்று அறியலாம்.

     ஈகைக் குணம் என்பது பிறவிக் குணம் என்பதை மேலே கண்டோம். ஈகைப் பண்பைப் பிறவியிலேயே பெற்றிருப்பவர், எக்காலத்திலும் அப் பண்பில் இருந்து மாறமாட்டார். செல்வம் உள்ள காலத்தில் மட்டுமல்லாது, வளம் குன்றிய காலத்தும், தமது கொடைப் பண்பில் இருந்து மாறமாட்டார். 

     இளையான்குடிமாற நாயனார் என்னும் அடியவர், தனது வேளாண்மையில் வந்த பொருளை எல்லாம் கொண்டு, தன்னை நாடி வருபவர் யாவராயினும் அன்னம் பாலிப்பதைத் தொண்டாகச் செய்து வந்தார். அதனால் அவரது செல்வம் மிகப் பெருகி, குபேரனைப் போல வாழலானார். அவர் வறுமை வந்தபோதும் தனது தொண்டு நிலையில் இருந்து மாறமாட்டார் என்பதை உலகவர்க்கு அறிவுறுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் அவரது செல்வத்தை மாற்றினார். வறுமை வந்தது. வறுமை வந்ததற்காக வருத்தப்படாமல், தன்னிடத்தில் உள்ள பொருளை எல்லாம் விற்று விற்றுத் திருத்தொண்டு செய்து வந்தார். திருத்தொண்டு செய்து உவந்தார். செல்வ வளம் சுருங்கினாலும், மனம் சுருங்கவில்லை.

 

செல்வம் மேவிய நாளில் இச்செயல்

     செய்வது அன்றியும், மெய்யினால்

அல்லல் நல்குரவு ஆன போதினும்

     வல்லர் என்று அறிவிக்கவே,

மல்லல் நீடிய செல்வம் மெல்ல

     மறைந்து, நாள்தொறும் மாறிவந்து,

ல்லையில் வறுமைப் பதம் புக

     உன்னினார்  தில்லை மன்னினார்.

 

இன்னவாறு வளம் சுருங்கவும்,

     எம்பிரான் இளையான்குடி

மன்னன் மாறன் மனம் சுருங்குதல்

     ன்றி, ள்ளன மாறியும்,

தன்னை மாறி றுக்க உள்ள

     கடன்கள் தக்கன கொண்டு, பின்

முன்னை மாறு இல் திருப்பணிக்கண்

     முதிர்ந்த கொள்கையர் ஆயினார்.

 

எனவரும் பெரியபுராணப் பாடல்களால் இந்த உண்மையை அறியலாம்.

     இவ்வாறே குங்கிலியக் கலய நாயனாரும், தமக்கு வறுமை வந்து நேர்ந்தபோதும், தமக்கு உள்ள நிலபுலங்களையும், பிறவற்றையும் விற்றுத் திருத்தொண்டு புரிந்து வந்தார். அதனால் அவரது வறுமைக் கொடுமை அளவில்லாது பெருகியது, அதனால் தனது மனைவியாரின் தாலியை விற்று நெல்கொள்ளும் துன்பத்துக்கு ஆளானார் என்பதை,

 

இந்நெறி ஒழுகு நாளில், இலம்பாடு நீடு செல்ல,

நன்னிலம் முற்றும் விற்றும், நாடிய அடிமை விற்றும்

பல்நெடும் தனங்கள் மாளப் பயில்மனை வாழ்க்கை தன்னின்

மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தி னார்கள்.

 

யாது ஒன்றும் இல்லை ஆகி,

     இருபகல் உணவு மாறிப்

பேதுஉறும் மைந்தரோடும்

            பெருகு சுற்றத்தை நோக்கிக்

காதல்செய் மனைவியார், தம்

            கணவனார் கலயனார் கைக்

கோதில் மங்கலநூல் தாலி

            கொடுத்து, நெல்கொள்ளும் என்றார்.

 

என வரும் பெரியபுராணப் பாடல்களால் அறியலாம்.

     தேடி வைத்த பொருளும், மாடும் மனையும், கூடு விட்டு உயிர் போகும் போது, துணையாக வருவதில்லை. செய்த புண்ணிய பவத்தின் பயன்களே உயிரின் பின் தொடர்ந்து வரும் என்பதை,

 

"பொங்கு ஆர வேலையில் வேலை விட்டோன்

     அருள் போல் உதவ,

எங்கு ஆயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது,

     இடாமல் வைத்த இடாமல் வைத்த

வங்காரமும் உங்கள் சிங்கார

     வீடும் மடந்தையரும்

சங்காதமோ, கெடுவீர், உயிர்போம்

     அத் தனி வழிக்கே?"

 

என அருணகிரிநாதப் பெருமான் பாடியருளிய கந்தர் அலங்காரப் பாடலினால் அறியலாம்.

     நிலையில்லாதது இந்த உலகமும் உலகப் பொருள்களும். அவ்வாறே நிலையில்லாதது நாம் எடுத்து வந்த இந்த உடம்பு. எனவே, நிலையில்லாத பூத உடம்பை நீத்த பின், நிலையான புகழுடம்பை இந்த உலகத்தில் விட்டுச் செல்லவேண்டும். அதற்கு, தன்னிடத்தில் உள்ள பொருளை, தன்னை நாடி வந்த வறியவர்க்குக் கொடுத்து உதவுவதே தக்க வழி ஆகும்.

 

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே;

துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்,

இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில்

தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;

 தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல்

ஆடுஇயல் யானை பாடுநர்க்கு அருகாக்

கேடு இல் நல்இசை வயமான் தோன்றலைப்

பாடி நின்றனென் ஆக, கொன்னே

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல், என்

நாடு இழந்த அதனினும் நனி இன்னாது என,

வாள் தந்தனனே தலை எனக்கு ஈயத்

தன்னில் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்,

ஆடுமலி உவகையொடு வருவல்

ஓடாப் பூட்கைநின் கிழமையோன் கண்டே.  --- புறநானூறு.

என்பது, ஒரு காலத்தில் வள்ளலாக இருந்து பெரும்புகழ் பெற்று விளங்கி, ஏதும் கொடுத்தற்கு இயலாத மிகக் கொடுமையானதொரு நிலைக்கு ஆளாகி இருந்த குமண வள்ளலின் கொடைத் திறத்தை வியந்து போற்றிய பாடல் ஆகும்.

    கடை ஏழு வள்ளல்களின் காலத்திற்குப் பிறகு கொடையில் சிறந்தவனாக விளங்கியவன் வள்ளல் குமணன். அவன் முதிரமலைப் பகுதியை ஆண்டு வந்தான். அவன் பெரும் புகழோடு நல்லாட்சி நடத்தியதைக் கண்டு பொறாமை அடைந்த அவன் தம்பியாகிய இளங்குமணன், குமணனோடு போரிட்டான். (பொறாமை என்று வந்துவிட்டால், அண்ணன் என்ன? தம்பி என்ன? பொறாமை அவ்வளவும் கொடியது) போரில் தோற்ற குமணன், காட்டிற்குச் சென்று அங்கே வாழ்ந்து வந்தான். அச்சமயம், பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் குமணனைக் காண அவன் இருக்கும் இடம் நாடி வந்தார். அவனைப் பார்த்து, "வேந்தே, நீ வயிரியர் வறுமை தீர்க்கும் குடியில் பிறந்தவன். வறுமை உற்று வாடும் என் மனையாள் துன்பத்தைக் காணமாட்டேனாய், உன்னை நினைந்து இங்குப் போந்தேன். என் நிலை இதுவாகும். இந்நிலையில் நான் உன்னைக் கொண்டு ஏதேனும் பரிசில் பெற்றல்லது மீளேன்” என்றார். எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கிக் கொண்டு இருந்த குமணன், இப்போது அவருக்கு எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். பெருந்தலைச் சாத்தனார் தன்னிடம் இருந்து பரிசிலாக எதையும் பெற்றுக் கொள்ளமல் திரும்பிச் செல்வதை குமணன் விரும்பவில்லை. குமணனின் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பெரும் பரிசில் தருவதாக, தனது தம்பி அறிவித்து இருந்ததைக் குமணன் அறிவான். ஆகவே, தன் தலையை வெட்டி, அதைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால், அவன் பெருமளவில் பரிசு கொடுப்பான் என்று கூறித் தன்னிடம் இருந்த உடைவாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்தான். அவ்வாளைப் பெற்றுக் கொண்ட புலவர், குமணன் சொல்லியவாறு செய்யாமல், இளங்குமணனிடம் சென்று, தான் குமணனைச் சந்தித்ததையும், அவன் வாள் கொடுத்ததையும் கூறி, "இப்படிப்பட்ட அண்ணனையா நீ வெறுத்துக் காட்டுக்கு அனுப்பினாய்" எள்ளி நகையாடி, இப்பாடலைப் பாடினார்.

     வறுமை நிலையில் இருந்தாலும், தனது தலையைக் கொடுக்கத் துணிந்த குமணனின் கொடைத் தன்மைக்கும், வறுமை நிலையில் இருந்தாலும், செம்மை நிலையில் இருந்து மாறாத புலவர்களின் சான்றாண்மைக்கும் இப் பாடல் சிறந்து எடுத்துக் காட்டு ஆகும்.

     மேற்குறித்த புறநானூற்றுப் பாடலின் பொருள் ---

     நிலையில்லாத இவ்வுலகத்தில், தமது புகழ் நிலைத்து இருக்குமாறு செய்யவேண்டும் என்னும் எண்ணம் உடையவர்கள், தம்முடைய புகழை நிலைநிறுத்தத் தமது உயிரையும் விட்டு இருக்கின்றனர். பிறரால் நெருங்க முடியாத செல்வச் சிறப்பினை உடைய குடியில் பிறந்தோர், பசி என்று யாசித்து வருபவர்களுக்குத் தந்து உதவாத காரணத்தால், புகழுக்காகத் தமது உயிரையும் கொடுக்கும் பெருமை மிக்க சான்றோர் காட்டிய வழியை அறியாதவர்கள் ஆவர். கால்வரை நீண்டு தொங்கும், மணி எழுப்ப வருகின்ற, புள்ளிகளை உடைய துதிக்கையோடு கூடிய வெற்றி யானைகளைத் தம்மைப் பாடி வருவோர்க்குப் பரிசிலாகத் தந்து உதவும், குறைவற்ற புகழை உடையவனும், வலிமை மிக்க குதிரைகளை உடையவனும் ஆகிய, முதிரமலைத் தலைவன் ஆகிய குமண வள்ளலைப் பாடிச் சென்ற நான், பரிசில் எதுவும் பெறாது வெறுங்கையோடு திரும்பிப் போவதை எண்ணி, மனம் வருந்தி, தான் நாட்டினை இழந்து தவிப்பதிலும் கொடுமையானது, ஒரு நல்ல புலவன் தன்னைதே தேடி வந்து பரிசில் பெறாது திரும்புவது என எண்ணித், தன்னிடம் இருந்த உடைவளை என்னிடம் தந்து, "எனது தலையை வெட்டிக் கொண்டு போய், எனது தம்பியிடம் தந்து, உமக்கு வேண்டிய பரிசிலைப் பெற்று மகிழுந்து இருங்கள். இதைவிடச் சிறந்த ஒன்று இப்போது என்னிடம் இல்லை. எனவே, எனது தலையைக் கொண்டுபோகச் சொல்லுகின்றேன்" என்று சொன்ன -- போரில் புறங்காட்டாத வீரத்தை உடைய --- உனது அண்ணன் குமணனை, நான் காட்டில் கண்டு (இப்போது, உன்னைக் காண) வந்திருக்கின்றேன். (இப்படிப்பட்ட அண்ணனையா, நீ காட்டிற்கு அனுப்பும் கொடுமையைச் செய்தாய்)

     வறுமை நிலையில் இருந்தாலும், தமது செம்மை நிலையில் மாறாது, தமக்குக் கிடைத்த பொருளை எல்லோர்க்கும் கொடுத்து உதவவேண்டும் என்னும் சான்றாண்மையில் சிறந்து வாழ்ந்தவர்கள் நமது புலவர்கள். ஒருமுறை குமணனை, அவனது நாட்டில் கண்டு பெரும் பொருளைப் பரிசிலாகப் பெற்றுச் சென்ற, பெருஞ்சித்திரனார் என்னும் புலவர், தான் பரிசிலாகப் பெற்றுச் சென்ற பொருளைத் தமது மனைவியிடம் தந்து, பின்வருமாறு பாடினார்...

 

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,

பன்மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,

கடும்பின் கடும்பசி தீர யாழ, நின்

நெடும் குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,

இன்னோர்க்கு என்னாது, ன்னொடும் சூழாது,

வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!

பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

 திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.  --- புறநானூறு.

 

இப் பாடலின் பொருள் ---

 

    எனது அன்பு மனையாளே! உன்னை விரும்பி நேசித்து வாழ்பவர்களுக்கும், நீ விரும்பி நேசிப்பவர்களுக்கும், கற்பில் சிறந்த உன்னுடைய சுற்றத்தார் பலருக்கும், நாமும் நமது சுற்றமும் பசியால் வாடியபோது, நம்மிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்து உதவியவர்களுக்கும், யார் எவர் என்றும் பார்க்காமல், எவருக்கு என்ன தரலாம் என்று என்னிடம் கூடக் கேட்காமலும், இந்தப் பரிசுப் பொருளானது நம்மிடம் இருந்தால் பின்னாளில் உதவும் என்று கருதி, சேமித்து வைக்க எண்ணாமலும், நான் கொண்டு வந்த இந்தப் பரிசுப் பொருள்களை எல்லோர்க்கும் பகிர்ந்து அளிப்பாயாக. பழமரங்கள் நிறைந்த முதிரமலைக்குத் தலைவனும், வெற்றிவேலை ஏந்தியவனும் ஆன குமண வள்ளல் கொடுத்த செல்வங்கள் இவை எல்லாம். அவன் நமக்கு வழங்கியது போலவே நாமும் பிறர்க்கு வழங்குவோம்.

 

    புலவரின் சான்றாண்மை விளங்குவது மட்டுமல்லாமல், தனது இல்லக் கிழத்தியை அவர் மதித்த விதமும் இதனால் விளங்கும்.

 

    பூதவுடம்பு என்றாவது ஒருநாள் அழியத்தான் போகின்றது. பாரதியார் பாடியபடி,

 

"தேடிச் சோறு நிதம் தின்று, பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம்

வாடித் துன்பம் மிக உழன்று, பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து, நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி, கொடுங்

கூற்றுக்கு இரை எனப் பின்மாயும் பல

வேடிக்கை மனிதரைப் போலே நான்

வீழ்வேன் என்று நினைத் தாயோ?"

 

என்னும் உள்ள உறுதியுடன், வேடிக்கை மனிதராக வாழ்ந்து மடியாமல், புகழ் மிக்க மனிதராக வாழ்ந்திருந்து, உலகில் பூத உடம்பு அழிந்தாலும், புகழ் உடம்பை நிலைநிறுத்திச் செல்வோம்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...