ஆத்திசூடி --- 25. அரவம் ஆட்டேல்

 


25. அரவம் ஆட்டேல்.

 

(பதவுரை) அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளைஆட்டேல் - பிடித்து ஆட்டாதே.

 

(பொழிப்புரை) பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.

 

அளை உறை பாம்பும்,அரசும்,நெருப்பும்,

முழை உறை சீயமும் என்று இவை நான்கும்

இளைய எளிய பயின்றன என்று எண்ணி

இகழின் இழுக்கம் தரும்.                    

 

என்பது "ஆசாரக் கோவை" கூறும் நெறியாகும்.

 

புற்றில் வாழும் பாம்பும்அரசரும்நெருப்பும், குகையில் தங்குகின்ற சிங்கமும் என்ற இவை நான்கையும்இளையன என்றும், எளியன என்றும்பழகின என்றும் நினைத்து இகழ்ந்தால் துன்பத்தைத் தரும் என்கின்றது ஆசாரக் கோவையின் இந்தப் பாடல்.

 

கொல்யானைக்கு ஓடும் குணம் இலியும்,எல்லில்

பிறன்கடை நின்று ஒழுகுவானும்,- மறம்தெரியாது

ஆடும்பாம் பாட்டும் அறிவிலியும்,இம்மூவர்

நாடுங்கால் தூங்கு பவர்.               --- திரிகடுகம்.

 

     கொலை செய்வதாகிய மதயானைக்குப் பின்வாங்கி ஓடுகின்றகுணம் இல்லாத வீரனும்;இரவிலே பிறன் வீட்டு வாயிலில் அவன் மனையாளை விரும்பி, தனக்கு வாய்ப்பான சமயம் பார்த்து நின்று நடப்பானும்;படம் எடுத்து ஆடும் தொழிலுள்ள பாம்பை,அதனுடைய(நன்றி செய்தார்க்கும் தீமையைச் செய்கிற) கொடுமை தெரியாமல் ஆட்டுகின்ற அறிவில்லாதவனும் ஆகிய இம் மூவரும், ஆராயுமிடத்து விரைவில் கெடுபவர் ஆவார்.

 

     உட்பகை என்னும் அதிகாரத்தில், உட்பகை ஆயினாரை ஒழித்தல் வேண்டும் என்று அறிவுறுத்த வந்த திருவள்ளுவ நாயனார், "இளைதாக முள்மரம் கொய்க,களையுநர் கை கொல்லும் காழ்த்த இடத்து" என்றார். "பகையை அதன் தொடக்கத்திலேயே களைந்து விடுதல் வேண்டும்; முற்றிய பின் அது துன்பத்தையே தரும்" என்று அறிவுறுத்த வந்த நாயனார், பிறிது மொழிதல் அணியாக,பகை என்பதை, முள்மரம் என்று காட்டினார். "பிறிது மொழிதல்" என்பதுஒன்றைச் சொல்லிபிறிது ஒன்றைச் சொல்லாமல் விளக்குவது. சொல்ல வந்ததை வெளிப்படையாகச் சொல்லாமல்வேறு ஒன்றைச் சொல்லி விளக்குவது.

 

     பாம்பு,தான் ஆட்டப்படுகின்ற வரையில், அமைதியாக ஆடிக் கொண்டு இருந்தாலும், சிறிது அயர்ந்தாலும், தன்னை வளர்த்து, ஆட்டியவரையே அது தீண்டிவிடும். "அச்சமே கீழ்களது ஆசாரம்" என்றார் திருவள்ளுவ நாயனார். கீழ்மக்கள்தமக்குத் துன்பம் உண்டாகும் என்னும்அச்ச உணர்வு உள்ளவரையில் ஒழுங்காக இருப்பர். அச்ச உணர்வு நீங்கி விட்டால்தமது இயற்கை உணர்வைக் காட்டிவிடுவார்கள். (சிறுவயதில்ஆசிரியர் இல்லாதபோதுமாணவர்கள் வகுப்பில் கொட்டம் அடிப்பர். ஆசிரியர் வருகின்ற அரவம் கேட்டாலும் அமைதியாகி விடுவர். இது அறியாமையால் விளைந்தது.) அதுபோலவேஅறிவற்றவர்கள் இருப்பர்.

 

     இதன் மூலம், புறத்திலே குளிர்ந்து இருந்து, உள்ளத்தில் நஞ்சு போன்ற தீய உணர்வைக் கொண்டு இருந்து, தமக்கு ஒருகால் நன்மை புரிந்தவர்க்கும்தம்மோடு பயின்றவர்க்கும் கேடு விளைவிக்கும்தீயவர்களோடு இணக்கம் கூடாது. 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...