நாம மந்திரம் --- பெரும்பெயர் மந்திரம்

 

நாம மந்திரம் --- பெரும்பெயர் மந்திரம்.

-----

 

     உலகில் வழங்கப்படும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு குறிப்பட்ட பண்பு இருப்பதாக பழங்காலம்தொட்டே மக்கள் நம்பி வந்துள்ளனர். அடைய விரும்பும் பண்புகளுக்கு ஏற், பெயர்களை வைத்துக் கொள்ளும் பழக்கம் மக்களிடம் இன்றும் இருந்து வந்ததைக் காணலாம். விரும்பிப் போற்றப்படுகின்ற ஒருவரது பெயரை, மற்றொருவருக்கு வைப்பதோடு, வழங்கப்படுவதால், அப் பெயருக்கு உரிய பண்பைத் தாமும் பெறலாம் என்று மக்கள் கருதுகின்றனர். நம்மால் விரும்பப்படுகின்ற நமது முன்னோர் பெயரையே, பின்னர் வரும் குழந்தைகளுக்கு வைப்பது வழக்கமாக உள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

 

     ஒருவருக்குப் பெயர் வைப்பதில் பல வகைகள் உண்டு. வறுமையினால் வாடும் பெற்றோர்கள், தமது குழந்தையாவது வறுமையின் கொடுமையால் துன்புறாமல் வாழவேண்டும் என விரும்பி, "செல்லப்பன்" "கோடீசுவரன்" எனப் பெயர் வைப்பது உண்டு. ஆனால், உண்மை வாழ்க்கையில் அதற்கு பறுதலையாக முடிவதும் உண்டு. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, "உமாயூன்" என்னும் மொகலாய அரசனின் பெயர் ஆகும். "உமாயூன்" என்றால் அதிருஷ்டசாலி என்பது பொருளாயினும், அவரைப் போன்ற துரதிருஷ்டசாலியான சில அரசர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. அதற்காக, நம்பிக்கையை இழத்தல் கூடாது.

 

     சுந்தரமூர்த்தி சுவாமிகள், கல்வியறிவு சிறிதும் பெறாத திண்ணனாரை, "கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்" என்றார். பிறவிக் குருடராய் இருந்த தண்டியடிகளை, சேக்கிழார் பெருமான், "நாட்டம் மிகு தண்டி" என்றார். சூழ்ச்சியால் கொல்லப்பட்டு தோல்வி அடைந்த மெய்ப்பொருள் நாயனாரை, "வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள்" என்றார். அது அவர்கள் பெற்றிருந்த சிறந்த பண்புகளை விளக்கி நின்றது.

 

     பொருள்களின் இயற்கைத் தன்மைக்கு ஏற்ப அவற்றின் பெயர்கள் இருத்தல் வேண்டும் (The names must be in accordance with the nature  of things) என்று தாமஸ் அக்வினாஸ் என்னும் மேனாட்டு அறிஞர் கூறுவார். வானில் இருந்து ஒலி வடிவத்தில் வருவதை "ஆகாயவாணி" என்றும் "வானொலி" என்றும் தான் கூறவேண்டும். வெகு தொலைவில் இருந்து காட்சி வாயிலாகக் காணப்படுவதை, "தொலைக் காட்சி" என்றுதான் வழங்கவேண்டும்.

 

     நமக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த பெரியோர்கள், அருளாளர்களின் பெயர்கள், அவர்களிடத்தில் சிறப்பாகத் திகழ்ந்த பண்புகளுக்கு ஏற்ப அமைந்திருந்ததால் தான், அவர்களின் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். பெயரைக் கேட்டாலே, அவரது பண்பு மனக்கண் முன்னர் தோன்றி, ஒரு ஈர்ப்பு உண்டாவது இயல்பு. "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்றும், "இளம் பிறையாளன் திருநாமம் எனக்கு ஒருகால் பேசாயே" என்று அப்பர் பெருமான் பாடிய பாடல்கள் இவ்வுண்மைக்குச் சான்றாக உள்ளன.

 

     திருதராஷ்டிரன் என்னும் பெயர் வாய்த்த விதம் சுவையானது. திருதராஷ்டிரன் குருடன். அவனை மற்றவர்கள் காணமுடியும். பிறரை அவன் காண முடியாது. அவன் ஒருவகையில் கண்ணாடி போன்றவன். கண்ணாடியைப் பிறர் காணலாம். அது பிறரைக் காண முடியாது. திருதராஷ்டிரனுக்கு, முகுரானன், தர்ப்பணானன் என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன. (முகுரம் - கண்ணாடி. தர்ப்பணம் - கண்ணாடி. ஆனனம் - முகம்).

 

     இராமனை, "அசகாயசூரன்" என்று வாலியின் வாய்மொழியாகச் சொல்லவந்த கம்பர், "கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ!" என்றார். யாருடைய சகாயமும் (கூட்டும்) இல்லாமலேயே வெல்லக் கூடியவன் இராமன் என்றார்.

 

     முருகன் என்னும் திருநாமத்தை உச்சரித்தால், எல்லா நலமும் வாய்க்கும் என்பதால், "அரும்பெறல் மரபில் பெரும்பயர் முருக" என்றார் நக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுபடையில். "முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்" என்று வேண்டினார் அருணகிரிநாதர்.

 

     பெரியவர்களின் திருப்பெயரானது, பெரும்பயனை விளைக்கும் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன.

 

     வெப்புநோய் கண்டு வருந்தி இருந்த பாண்டிய மன்னனைச் சூழ்ந்து இருந்து, அவனுக்கு உண்டான நோயின் "மூலநெறி அறியாமல்" "காவாய் அருகனே" என்று ஓதி மருத்துவம் புரிந்தனர் சமணர்கள். மருத்துவர் உண்மையிலேயே மருத்துவராகவும், கைராசி உள்ளவராகவும் இருக்கவேண்டும். சமணர்கள் புரிந்த மருத்துவம் நோய் பெருகுவதற்கே காரணமாய் அமைந்தது. "என்னை விட்டு நீங்கிச் செல்லுங்கள்" என்று பாண்டியன் அவர்களைக் கடிந்து கொள்ளுகின்றான்.

 

     அந் நேரம் பார்த்துக் காத்திருந்த குலச்சிறையார் என்னும் முதலமைச்சர், "இவர்கள் உடல் மாசு நீக்காவதர்கள் மட்டும் அல்ல. மனமாசும் நீங்காதவர்கள். இவர்களின் இந்தச் செயலானது நோயை வளர்ப்பதற்கே ஏதுவாகும். சிவபரம்பொருளால் ஞானம் பெற்றவர் ஆகிய திருஞானசம்பந்தர் விரும்பிப் பார்த்தாலும், தீய இந்தப் பிணி மட்டுமல்லாது, பிறவிப் பிணியும் தீரும்" என்றார். சிறந்த மருத்துவர் ஆகிய திருஞானசம்பந்தரின் திருப்பெயரைக் கேட்ட உடனே, பாண்டியனின் உள்ளச் சோர்வு நீங்குகின்றது. நோயின் கொடுமையும் ஓரளவு தணிகின்றது. இந்த நிலைமையை,

 

"மீனவன் செவியின் ஊடு, மெய்யுணர் அளிப்போர் கூற,

ஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல,

ஆனபோது அயர்வு தன்னை அகன்றிட"

 

என்று காட்டியுள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான். "ஞானசம்பந்தர்" என்ற பெயரை, இதற்கு முன்னும் சமணர்கள் கூறக் கேட்டவன்தான் இந்தப் பாண்டியன். மெய்யுணர்வு இல்லாதவர்கள் சொன்னதால், அவன் மெய்யுணர்வு பெறவில்லை. மெய்யுணர்வு உடைய குலச்சிறை நாயனார் இப்போது சொன்னதால், பாண்டியன் இப்போது நல்லுணர்வு சிறிது பெற்றான். பின்னர், ஞானசம்பந்தப் பெருமானை நேரில் காணும் பேறும் (சட்சு தீட்சை), அவரது திருகையால் தீண்டப் பெறும் பேறும் (பரிச தீட்சை) பெற்றதால் அவனது உடல் கூனும், உள்ளக் கூனும் நீங்கப் பெற்றுப் புனிதன் ஆனான்.

 

     அப்பூதி அடிகள் அந்தணர். அவர் வழிபட்ட திருநாவுக்கரசர் வேளாளர். இதில் குலம் என்ன வந்தது? அப்பூதி அடிகள் என்னும் அந்தணர், தவம் செய்யவில்லை. தீயிடை நின்று தியானிக்கவில்லை. வெறும் நீரை மட்டுமே உண்டு கடினமான விரதங்களைக் கடைப்பிடிக்கவில்லை. "திருநாவுக்கரசு" என்னும் பெயரை இடைவிடாமல் கூறியும், எழுதிவைத்துமே வீடுபேற்றை எளிதில் அடைந்தார்.

 

"உற்றான் அலன் தவம், தீயில் நின்றான் அலன், ஊண் புனலா 

அற்றான் அலன் நுகர்வும், "திருநாவுக்கரசு" எனும் ஓர்

சொல்தான் எழுதியும் கூறியுமே, என்றும் துன்பில் பதம்

பெற்றான் ஒரு நம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே"

 

என்று "நால்வர் நான்மணிமாலை" வாயிலாக இதனை அறிவுறுத்துகின்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

     சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தனது கண்கண்ட தெய்வமாகவே போற்றியவர், பெருமிழலைக் குறும்பர் என்னும் நாயானர். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பிள்ளைப் பெயர் ஆகிய "நம்பியாரூர்" என்னும் நாம மந்திரத்தை நாளும் ஓதி, தியானித்து வந்ததால், அட்டமா சித்திகளும், இறையருளும் வாய்க்கப் பெற்று வீடுபேற்றை மிக எளிதில் பெற்றார்.

 

"நாளும் நம்பி ஆரூரர்

   நாமம் நவின்ற நலத்தாலே,

ஆளும் படியால் அணிமாதி

   சித்தி யான அணைந்ததற்பின்,

மூளும் காதல் உடன்பெருக

   முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்

கேளும் பொருளும் உணர்வுமாம்

   பரிசு வாய்ப்பக் கெழுமினார்"

 

என்னும் பெரியபாரணப் பாடலால் இதன் அறியலாம்.

 

     அடியவர்களின் திருநாமத்தை "பக்த பஞ்சாட்ரம்" என்று பெருமிதமாகச் சொல்லும் வழக்கம் தொன்று தொட்டு உள்ளது. இறைவனது பஞ்சாட்சரத்தைச் செபிப்பதால் உண்டாகும், பலன், "பக்த பஞ்சாட்ரம்" என்னும் அடியவர் திருநாமத்துக்கும் உண்டு. எனவேதான், "உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ?" என்று மலையரையன் மகளாகிய (பர்வதவர்த்தனி) உமையம்மையிடம் தாயுமான அடிகளார் முறையிடுகின்றார்.

 

     எழுத்தை எண்ணும்போது, ஒற்று நீக்கி எண்ணுதல் விதி. ஒற்று எழுத்துக்களை நீக்கி, ஐந்தெழுத்து வந்தால், அது பஞ்சாட்சரம் அல்லது ஐந்தெழுத்து ஆகும்.

 

     திரு என்னும் அடையை நீக்கி, ஒற்றும் நீக்கி, "ஞானசம்பந்தர்", "சம்பந்தமூர்த்தி", "நாவுக்கரசர்", "நம்பியாரூரர்", "சுந்தரமூர்த்தி", "மணிவாசகர்", "அருணகிரி", "இராமலிங்கர்" என்பன போன்ற திருப்பெயர்கள் எல்லாம் ஐந்தெழுத்தாகவே அமைந்துள்ளதைக் காணலாம். இவை எல்லாம் "பக்த பஞ்சாட்ரம்" ஆகும்.

 

     நமது முன்னோர் வைத்த பெயர்களின் அருமையை உணராது, நமது விருப்பம் போல் பெயர்களை வைத்துக் கொள்கின்றோம். அதற்கு நாமாகவே ஒரு காரணத்தையும் கற்பித்துக் கொள்கின்றோம். பெயர் என்பது ஒரு அடையாளம் மட்டும் அல்ல.

 

     மனிதப் பெயர்களை இட்டு அழைக்காமல், இறைவன் திருப்பெயரை வைத்து, பெயர்களின் ஆற்றலையும் சிறப்பையும் உணர்ந்து தெளியவேண்டும் என்பதற்காக, பெரியாழ்வார் தம்முடைய திருப்பதிகம் ஒன்றில், கடவுளின் பெயரை மக்களுக்கு இட்டு, அப் பெயர்களை வாயார அழைப்பதுதான் சிறப்பு உடையது, "குழந்தைக்கு நாராயணன் பேர் வைத்து அழைக்கின்ற அன்னை நரகம் புகாள்"

என்று உபதேசித்து, பின்வருமாறு வற்புறுத்திப் பாடியுள்ளார்.

 

"காசும், கறையுடைக் கூறைக்கும், அங்கோர் கற்றைக்கும்

ஆசையினால் அங்கு அவத்தப் பேர்இடும் ஆதர்காள்!

கேசவன் பேர்இட்டு நீங்கள் தேனித்து இருமினோ!

நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்".

 

இதன் பொருள் --- சாதாரண மனிதரிடம் காசுக்கும், ஆடைக்கும், நெல்லுக்கும் ஆசைப்பட்டு, தாழ்வான பெயரை இடுகின்ற இழிவானவர்களே! கேசவனது திருநாமத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வைத்து, நீங்கள் மனம் மகிழ்ந்து தியானித்துக் கொண்டு இருங்கள். எல்லார்க்கும் தலைவனும், நாராயணனுமான பெருமானின் திருநாமத்தை உங்கள் பிள்ளைகளுக்கு இட்டால், அப் பிள்ளைகளின் தாய் நரகத்தை அடையமாட்டாள்.

 

(தேனிப்பு --- தியானிப்பு. தேனித்து இருத்தல் --- தியானம் செய்து இருத்தல்)

 

"உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து

எச்சம் பொலிந்தீர்காள்! என்செய்வான் பிறர் பேர் இட்டீர்?

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே

நச்சுமின், நாரணன் தம் அன்னை நரகம் புகாள்". 

 

இதன் பொருள் --- மக்களால் பெருமை பெற்று விளங்குபவர்களே! பிள்ளைகளுக்கு உச்சியில் இடவேண்டிய எண்ணெயையும், நெற்றியில் சூட்டும் சுட்டியையும், தோளில் இடும் வளையையும் பெற விரும்பி, எதற்காக மற்ற பெயர்களை உங்களுடைய பிள்ளைகளுக்கு இட்டீர்கள்? பிச்சை எடுத்தாலும், எம்பிரானது திருப்பெயரையே உங்கள் பிள்ளைகளுக்கு இடுங்கள். நாராயணனது பெயரினை உடைய உமது மகனது தாயானவள் நரகம் புகமாட்டாள்.

 

"மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை,

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை;

வானுடை மாதவா! கோவிந்தா! என்று அழைத்தக்கால்

நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்."

 

இதன் பொருள் --- மனித சாதியிலே பிறந்த ஒரு மனிதக் குழந்தைக்கு, மனித சாதியினரின் பெயரை இட்டு அழைத்தால், மறுபிறப்பில் நற்கதி அடைய வழியில்லை. பரமபதத்தை உடைய திருமகள் கணவனே! கோவிந்தனே! எனப் பெயரிட்டு அழைத்தால், என்னுடைய நாராயணனது பெயரைத் தாங்கிய பிள்ளையின் அன்னை நரகம் புகமாட்டாள்.   

 

"மலமுடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை,

மலமுடை ஊத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை

குலமுடைக் கோவிந்தா! கோவிந்தா! என்று அழைத்தக்கால்

நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்."   

 

இதன் பொருள் --- அசுத்தத்தை உடைய இழிந்ததான உடலில் இருந்து தோன்றிய ஓர் அசுத்தமும் இழிவும் உடைய தேகத்தைக் கொண்ட குழந்தைக்கு, அதைப் போலவே அசுத்தமும், இழிவும் உள்ள தேகத்தைக் கொண்ட ஒன்றின் பெயரை இட்டால், மறுபிறப்பில் நற்கதி அடைய வழியில்லை. எம்பெருமானது பெயரை இட்டு, கோவிந்தா! கோவிந்தா! என்று அழைத்தால், அப் பிள்ளையின் அன்னை நரகம் புகமாட்டாள்.

 

"மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு, அங்கு

எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்!

கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே

நண்ணுமின், நாரணன் தம் அன்னை நரகம் புகாள்."

 

இதன் பொருள் --- மண்ணில் தோன்றி மண்ணாகப் போகின்ற மனித சாதியின் பெயரை உம்முடைய பிள்ளைக்கு இட்டதில் ஒரு கவலையும் இல்லாது இருக்கின்ற அறியாமையை உடைய மனிதர்களே! கருநிற மேகம் போன்ற திருநிறம் உடைய பெருமானது திருநாமத்தையே உமது பிள்ளைக்குப் பெயராக வைத்திட விரும்புங்கள். அவ்வாறு இட்டால், அப் பிள்ளையின் தாய் நரகம் புகமாட்டாள்.

 

"நம்பி நம்பி என்று நாட்டும் மானிடப் பேரிட்டால்,

நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில்அழுங்கிப் போம்;

செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால்

நம்பிகாள், நாரணன் தம் அன்னை நரகம் புகாள்."

 

இதன் பொருள் --- நம்பி என்றும், பிம்பி என்றும் நாட்டில் உள்ள மனித சாதியின் பெயரை உங்கள் பிள்ளைக்கு வைத்தால், அபெ பெயர்களுக்கு அடிப்படையான பெருமைகள் எல்லாம் சில நாளில் அழிந்துவிடும். அறிவுடையவர்களே! நாராயணன் என்று பெருமானின் பெயரை இட்டு அழைத்தால், அந்தப் பிள்ளையின் தாய் நரகம் புகமாட்டாள்.

 

"ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்

மூத்திரப் பிள்ளையை என் முகில்வண்ணன் பேரிட்டு

கோத்துக் குழைத்துக் குணாலம் ஆடித் திரிமினோ!

நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்."  

 

இதன் பொருள் --- ஊத்தை நிரம்பிய குழியிலே, அமுதம் பாய்வது போல், உமது மூத்திரப் பிள்ளைக்கு நீலமேகம் போன்ற திருநிறம் உடைய பெருமானின் திருநாமத்தை இட்டு, பகவானோடு கூடிக் குலாவி, குணாலக் கூத்து அடித் திரியுங்கள். இது உமது நாவுக்குத் தகும். நாராயணன் திருநாமம் இடப் பெற்ற பிள்ளையின் தாய் நரகம் புகமாட்டாள்.

 

(குணாலம் --- வெற்றி தோன்ற  மெய் மறந்து ஆடும் ஒரு கூத்து)

 

     குழந்தைக்கு நாராயணன் என்னும் திருநாமத்தை வைத்து, நாராயணா எழுந்திரு, நாராயணா பல் துலக்கு, நாராயணா பள்ளிக்கு நேரமாச்சு, நாராயணா சாப்பிடு, நாராயணா படி, நாராயணா எழுது, நாராயணா தூங்கு என்று அவ்வப்போது நாள்தோறும் வாயார அழைத்துக் கொண்டு இருந்தாலே போதும். பிரகலாத ஆழ்வார் செபித்துக் கொண்டு இந்த நாராயண மந்திரத்தை, நம்மை அறியாமலே, அபுத்திபூர்வமாக அனந்தம் முறை செபித்த பலன் வந்து சேரும்.

 

     ஆனால், நடைமுறையில் எவற்றைச் சுருக்கவேண்டுமோ அவற்றைச் சுருக்காமல், சுருக்கக் கூடாதவற்றைச் சுருக்குகின்றோம். சுப்ரமண்யோம் என்ற வேதங்கள் கூறுவதாகச் சொல்லிக் கொண்டே, "சுப்பிரமணியன்" என்று பெயரிட்டு, "சுப்பு" என்கின்றோம். கற்ற பெரியவர்களில் சிலரே, தமது பிள்ளைத் திருநாமம் ஆகிய "சுப்பிரமணி" அல்லது "சுப்பிரமணியன்" என்னும் திருப்பெயரைச் சுருக்கி, "மணியன்" என்று அழைக்கவேண்டும் என்பதைக் காண்கின்றோம். "வெங்கடேசன்", "வேங்கடராமன்" என்று பெயரை வைத்துவிட்டு, "வெங்கிட்டு", "வெங்கட்" என்கின்றோம். "பார்த்தசாரதி" என்று அழகாகப் பேரிட்டுவிட்டு, "பாச்சா" என்கின்றோம். "நடராசன்" என்று அற்புதமாகப் பேரிட்டு விட்டு, "நட்டு" என்கின்றோம். "சரசுவதி" என்று பேரிட்டுவிட்டு, "சச்சு" என்கின்றோம். "சச்சு" என்றால், மட்டமான புகையிலை, சிறுமை, பதர், சந்தடி, தொந்தரவு, பறவைமூக்கு, கொஞ்சம் என்றுதான் பொருள். இப்படி நமது குழந்தை ஆகவேண்டும் என்று விரும்புவோமா? "மங்கையர்க்கரசி" என்று அற்புதமான பெயரை வைத்து, "மங்கு" என்கின்றோம். குழந்தை மங்கிப் போவதையா விரும்புகின்றோம்? பெயர்களை உள்ளவாறு, நீட்டி அழைப்பதில் என்ன அவ்வளவு சிரமம்? நாம் சிரமப்படக் கூடாது என்று எண்ணுவது, நமது குழந்தைகளைச் சிரமப்பட வைத்து விடலாமா? நமது வாயிலிருந்து பிறக்கும் சொற்கள் நமது குழந்தைகளளை வாழவைக்க வேண்டாமா?

 

     இதுவரை கூறியவற்றால், பெயர்களுக்கு உள்ள சிறப்பும் ஆற்றலும் நன்கு விளங்கும். கடவுளின் திருநாமத்தையும், அடியவர்களின் திருப்பெயரையும், முன்னோர்களின் திருப்பெயரையும், தமது குழந்தைகளுக்கு இட்டு வழங்குவது சிறப்பு.

 

     கடவுளின் திருநாமத்தையும், அடியவர் திருநாமத்தையும் சொல்வதால் நமது குற்றங்கள் நீங்கும். இழிவுகள் வழியும். துன்பம் நம்மை நலியாதபடி, எளிதில் கடக்கலாம்.

 

     "உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ?" என்று மலையரையன் மகளாகிய (பர்வதவர்த்தனி) உமையம்மையிடம் தாயுமான அடிகளார் முறையிட்டதை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பாருங்கள். உண்மை விளங்கும்.

 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...