26. இலவம் பஞ்சின் துயில்

 


                                                   26. இலவம் பஞ்சின் துயில்.

 

"இலவம் பஞ்சில் துயில்" என்பதைப் பாடமாக வைத்துக் கொண்டு பின்வருமாறு பொருள் உரைப்பதும் உண்டு.

 

(பதவுரை) இலவம் பஞ்சில் --- இலவம்பஞ்சு மெத்தையிலேதுயில் --- உறங்கு.

 

(பொழிப்புரை) இலவம்பஞ்சினால் ஆன மெத்தையிலே படுத்து உறங்கு.

 

     உறக்கத்திற்கு வாய்ப்பாக மென்மையான மெத்தையிலே படுத்து உறங்குதல் வேண்டும் என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

 

     இது பொருந்தாது. வாழ்வியில் நெறிகளை எடுத்துக் கூறிஉலகவரை நெறிப்படுத்த வந்த ஔவையார் அந்தப் பொருளில் கூறினார் என்பது சரியல்ல. 

 

     இலவம் பஞ்சினால் ஆன மெத்தையில் உறங்குவதுகுளிர் காலத்திற்கும், குளிர் மிகுந்த நாட்டிற்கும் பொருந்தாது. இலவம் பஞ்சு மெத்தை என்பது எல்லார்க்கும் ஏற்றதும் அல்ல. ஏழ்மை நிலையில் உள்ளவர்க்கு இது இயலாது."உறங்கப் புறம் திண்ணை உண்டு" என்று கூறப்பட்டதன் மூலம், திண்ணையில் உறங்குவாரும் உண்டு என்பது வெளிப்படை. கோரைப் புல்லால் ஆனதும்பனை ஓலையால் ஆனதும் ஆன பாயில் படுத்து உறங்குவோரும் உண்டு. வெற்றுத் தரையில் படுத்து உறங்குவோரும் உண்டு. இக் காலத்தில் விதவிதமான படுக்கைகள் வந்துவிட்டன.

 

     உறக்கம் என்பது இயல்பாகவே வந்து சேர்ந்துவிடும். அதைத் தள்ளிப் போட முடியாது. அதனால் உடல் கேடு உண்டாகும். ஆனால்தூக்கம் என்பதை வரையறுத்துக் கொள்ளுதல் வேண்டும். வீண்பொழுது கழிப்பவர்கள்சோம்பேறிகள் தூக்கமே சுகம் என்று எண்ணுவர். விழிப்பு நிலையிலும் கூடபடுக்கையில் கிடப்பவர்கள் உண்டு. எனவேஉறங்குவதற்கன ஓர் உபாயத்தை,ஔவைப் பிராட்டியார் சொன்னார் என்று கொள்வது எப்படியாயினும் பொருத்தம் ஆகாது.

 

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோபேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்தத் தயிர் அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?  --- திருப்பாவை.

 

என்று நாச்சியார் பாடியது காண்க. ஒரு பக்கம் பறவைகளின் ஒலி. இன்னொரு பக்கம் அணிகலன்கள் கலகலக்கின்ற ஒலியோடுமத்தினால் தயிரைக் கடைகின் ஒலி. இவற்றுக்கு இடையில்ஒருவன் உறங்குவது என்பதை எண்ணிப் பார்க்கவும் முடியாது. ஓசை அதிகமானால்,உறக்கம் நிச்சயம் கலையும். விடியும் காலம் வந்துஒரு நற்பணியைச் செய்யும் காலம் வந்த பிறகும்சோம்பல் காரணமாகபடுக்கைச் சுகத்தை விட்டொழிக்க முடியாத நிலை இப்பாடலில் அழகுறக் காட்டியுள்ளது.

 

"மாமீர்! அவளை எழுப்பீரோஉம் மகள்தான்

ஊமையோஅன்றிச் செவிடோ அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?"   --- திருப்பாவை.

 

காதிருந்தும்எந்த ஓசையும் விழாதது போலவாய் திறந்து பேசினால் விழித்து வித்தடாக எண்ணிக் கொள்வார்கள் என்பதற்காகபொய்யுறக்கம் கொள்வோர் உண்டு என்பது தெளிவாகும்.

 

"கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?" --- திருப்பாவை.

 

கும்பகர்ணனைப் போல்பெருந்தூக்கம் கோள்வோரும் உண்டு. 

 

"பள்ளிக் கிடத்தியோபாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்."  --- திருப்பாவை.

 

உள்ளத்தில் உள்ள கள்ளத் தனம் காரணமாக படுக்கையிலேயே காலம் கழிக்க எண்ணுவோரும் உண்டு.

 

"எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில் என்று அழையேன்மின்நங்கைமீர்! போதர்கின்றேன்;

வல்லைஉன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!

வல்லீர்கள் நீங்களேநானேதான் ஆயிடுக!

ஒல்லைநீ போதாய்உனக்கென்ன வேறு உடையை?’

எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார்போந்து எண்ணிக்கொள்" --- திருப்பாவை.

 

இந்த உரையாடலைக் கேட்டால்பொய்யுறக்கம் கொண்டுள்ளவர்க்கு சினம் வரும் என்பது புரியும். படுக்கையில் இருந்து எழுவதற்கு ஏதாவது சாக்குப் போக்குக் காட்டுகின்றவர்கள் உண்டு என்பதும் அறியரும்.

 

பொரு அரிய சமயங்கள்

    புகல்கின்ற புத்தேளிர்,

இரு வினையும் உடையார்போல்

    அருந்தவம் நின்று இயற்றுவார்;

திரு உறையும் மணிமார்ப!

    நினக்கு என்னை செயற்பால?

ஒரு வினையும் இல்லார்போல்

    உறங்குதியால் உறங்காதாய்!  --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

     திருமகள் தங்கிய அழகிய திருமார்பை உடையவனே!;ஒப்பில்லாத பிறமதங்கள் சிறப்பித்துக் கூறும் தெய்வங்கள், நல்வினை தீவினை என்பவற்றைக் கொண்ட எளிய மக்கள் போல செயற்கரிய தவம் செய்கின்றவர் ஆவார்.உனக்குச் செய்ய வேண்டிய தவம் என்ன உள்ளதுஒன்றுமில்லை. ஆயினும், தூக்கமின்றி விழிப்பு நிலையில் உள்ளவனே! எந்த ஒரு செயலும் இல்லாதவர் போலத் தூங்குகிறாய்.

 

     கம்பநாட்டாழ்வார் காட்டியபடி, எந்த ஒரு செயலும் இல்லாதவர்களும், எந்த ஒரு செயலையும் செய்யும் எண்ணம் இல்லாதவர்களும் நாடுவது படுக்கை ஒன்றையே. உறக்கம் வரவில்லையானாலும், படுக்கையில் கிடப்பதை விரும்புவோர் உண்டு. "போதார் அமளியின் மேல் நின்றும் கிடந்து, இங்ஙன் ஏதேனும் ஆகாள், கிடந்தாள், என்னே! என்னே! ஈதே எம் தோழி பரிசு" என்று மணிவாசகப் பெருமான் காட்டியது போல், படுக்கை சுகமானது சோம்பலையே வளர்க்கும். அது "வெறும் தூக்கம்" என்றார் வள்ளல்பெருமான்.

 

"சற்றேனும்ஆக்கமே சேராது அறத் துரத்துகின்ற வெறும்

தூக்கமே என் தனக்குச் சோபனம் காண்" 


என்றார் விண்ணப்பக் கலிவெண்பாவில்.

 

இதன் பொருள் ---  

 

     சிறிதளவும் ஆக்கம் என்னும் திருவருளானது சேராதபடிஅடியோடு துரத்தி விடுகின்றவெறும் தூக்கம் என்பது தான் எனக்கு நற்செய்தி ஆகும்.(நல்ல பொழுதை எல்லாம் தூக்கத்தில் கழிக்கின்றவனுக்குஆக்கம் சேராது. தூக்கம் ஆக்கத்தைத் தொலைக்கும்)

 

     பகலில் உறங்கிப் பொழுதைக் கழித்துஉடலைக் கெடுத்துக் கொள்வோரும் உண்டு. 

 

"பகலில் விழுந்து உறு தூக்கம் வரஅது தடுத்தும்விட்டிடா வன்மையால் தூங்கி எழுந்தபோது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன்" 

 

என்றும்

 

"தூக்கம் வந்தபோது எல்லாம் பயத்தொடு படுத்தேன்மற்று நான் எழுந்தபோது எல்லாம்தொந்தம் ஆம் பயத்தால்சிவசிவ தூக்கம் தொலைவது எக்காலம் என்று எழுந்தேன்" 

 

என்றும்,

 

"பகல் இரவு அடியேன் படுத்தபோது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமேஇகல் உறு கனவாம் கொடிய வெம்பாவி எய்துமேஎன் செய்வோம் என்றேஉகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உள்ளம் அறியுமே எந்தாய்"

 

என்றும்வள்ளல்பெருமான் பாடியருளிய அருமையை எண்ணிப் பார்த்தால்காலத்தைக் கழிப்பதற்காகப் படுக்கையில் விழுந்து கிடப்பது கூடாது என்பது புரியும்.

 

ஏன் ஔவைப் பிராட்டியார், "இலவம் பஞ்சில் துயில்" என்று கூறாமல், "இலவம் பஞ்சின் துயில்" என்றார் என்பதைச் சற்றுச் சிந்திப்போமானால், ஓர் உண்மை விளங்கும். இலவம் பஞ்சின் துயில் என்றதால், இலவம் பஞ்சுபோல் துயில் என்று பொருள். இலவம் பஞ்சானது, சிறு காற்றுக்கும் பறக்கும் தன்மையை உடையது. பருத்திப் பஞ்சு, இலவம் பஞ்சினை விடவும் மென்மையானது.

 

 உடல் சோர்வு நீங்கத் தான் உறக்கம் கொள்ளவேண்டும். தூக்கமானது, சோம்பேறிகளுக்குவாழ்க்கையில் குறிக்கோள் இல்லாதவர்க்கு,மிக இன்பம் தருவதாக அமையும். முயற்சி இன்மையை உடையவர் விரும்புவது படுக்கையே ஆகும். அப்படிப்பட்டவர் துன்பத்தில் விழுதல் ஒருதலைப் பட்சமானது என்பதைக் காட்ட,

 

"நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்"

 

என்ற திருவள்ளுவ நாயனார் காட்டினார், எனவே, தூக்கம் என்பது ஆக்கத்திற்குக் கேடு என்பது தெளிவாகும்.

 

எனவே, சிறுகாற்றிற்கும் அசைந்து கொடுக்கின்ற இலவம்பஞ்சினைப் போல,மென்மையாகத் துயில் கொள்ளுதல் வேண்டும் என்று காட்டவே, "இலவம் பஞ்சின் துயில்" என்றார் ஔவைப் பிராட்டியார்.

 

தூக்கத்தை நாமாக நியமித்துக் கொள்ளுதல் வேண்டும். தூக்கம் நம்மை நியமித்துக் கொள்ளுதல் கூடாது. உறக்கம் நம்மை ஆட்கொள்ளுதல் கூடாது. உறக்கத்தை நாம்தான் ஆட்கொள்ளுதல் வேண்டும். அருச்சுனனுக்கு வழங்கப்படும் பல பெயர்களுள், "குடாகேசன்" என்பதும் ஒன்று. "உறக்கத்தை வென்றவன்" அல்லது "உறக்கத்தை நியமிப்பவன்" என்று இதற்குப் பொருள். நினைத்தபடி, நினைத்தபொழுது தூங்கவோ அல்லது தூங்காது இருக்கவோ அவனுக்கு இயலும். மனத்தை வென்றவனுக்கே இது சாத்தியம் ஆகும்.

 

எனவே, சிறுகாற்றுக்கும் அசைந்து கொடுக்கும் இலவம் பஞ்சு போல், மென்மையாகத் துயில் கொள்ளுதல் வேண்டும். துயில் எழவேண்டிய காலம் வந்ததும்துயில் உணர்ந்துதொழிலைத் தொடங்குதல் வேண்டும். 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...