இயல்பு அலாதன செய்யேல்

 


                                              24. இயல்பு அலாதன செயேல்.

 

(பதவுரை) இயல்பு அலாதன --- இயற்கைக்கு மாறான செயல்களை,செயேல் --- செய்யாதே.

 

(பொழிப்புரை) நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.

 

இயல்பு --- தன்மை, இலக்கணம், ஒழுக்கம், நற்குணம், நேர்மை, முறை.

 

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்

நல் ஆற்றின் நின்ற துணை.

 

இத் திருக்குறளில், "இயல்பு உடைய" என்பதுய,"அறத் தன்மை உடைய" என்னும் பொருளில் வருகின்றது.

 

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.    

 

என்னும் திருக்குறளில், "இயல்பு" என்பது இல்வாழ்க்கைக்கு உரிய நெறி அல்லது தன்மையைக் குறித்து நின்றது.

 

"அழுக்காறு இல்லாத இயல்பு" என்னும்போது, "இயல்பு" என்பது "நெறி" அல்லது "ஒழுக்கம்" என்னும் பொருளில் வருவது காண்க. "வேந்தர்க்கு இயல்பு" என்னும்போது, "இயல்பு" என்பது "தன்மை" அல்லது "ஒழுக்கம்" என்னும் பொருளில் வருவது காண்க.

 

இயல்பு எனப்படுவது வடமொழியில் "சுபாவம்" எனப்படும். தமிழில் "இயற்கை உணர்வு" என்றும், "கலப்படம் அற்றது" என்றும் "கபடு இல்லாதது" என்றும் "வஞ்சகம் அற்றது" என்றும் பொருள்படுவதைக் காண்க.

 

ஆசாரக் கோவை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில்,

"நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே தொல்வரவின் தீர்ந்த தொழில்" என்று, இயல்பு என்பது காட்டப்பட்டு உள்ளது.

 

இதன் பொருள் ---

 

நல்குரவு ஆற்றப் பெருகினும் --- வறுமையானது மிகுதியாக பெருகினாலும்தொல்வரவின் தீர்ந்த தொழில் செய்யார் --- தொன்றுதொட்டு வந்த தமது குலநெறியினின்றும் நீங்கிய செய்கையை அறிவுடையோர் செய்யமாட்டார்.

 

வறுமை வந்த காலத்து நல்லொழுக்கம் தவறுதலுக்கு ஏதுவாகும் தகாத காரியங்கள் இன்னின்னவை என்று இந் நூலில் காட்டப்பட்டு உள்ளது.

 

"ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்" என்று நான்மணிக் கடிகை கூறுவதும், "அயலார் என்று கருதப்படுபவர்கள் நல்லியல்பு இல்லாதவர்கள்" என்னும் பொருளிலேயே வந்தது 

 

எனவே, "இயல்பு" என்பது, நல்லியல்பையும், நற்குணத்தையும், நன்னெறியையும், நல்லொழுக்கத்தையும் குறிக்கும் என்பது தெளிவு. ஒழுக்கம் என்பது அவரவர் குடி நிலைக்கும், குடி மரபிற்கும் ஏற்ப அமைவது ஆகும். ஒரு குடிக்கு இயல்பான செயல்கள், அவர் பிறந்த நாட்டோடு, மனத்தால் பயிலப்படுவது ஆகும். ஒரு நிலத்திற்கு உரிய ஒழுக்கம், மற்றொரு நிலத்திற்குப் பொருந்தாது. ஒரு குலத்திற்கு உரிய ஒழுக்கம், மற்றொரு குலத்துக்குப் பொருந்தாது. இதை வடமொழியில், "சுவதர்மம்" என்பர். தெய்வச் சேக்கிழார் பெருமான், இந்தச் "சுவதர்மம்" என்பதை,"சாதிகள் நெறியில் தப்பா" என்று அழகுறக் காட்டினார்.

 

வீதிகள் விழவின் ஆர்ப்பும்;

   விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்;

சாதிகள் நெறியில் தப்பா;

   தனயரும் மனையில் தப்பா;

நீதிய புள்ளும் மாவும்;

   நிலத்து இருப்பு உள்ளும் மாவும்;

ஓதிய எழுத்தாம் அஞ்சும்;

    உறுபிணி வரத்தாம் அஞ்சும்.

 

திருநாட்டுச் சிறப்புக் கூற வந்த சேக்கிழார் மேற்குறித்த பாடலினை அருளிச் செய்து உள்ளார்.

 

இதன் பொருள் ---

 

வீதிகளில் அவ்வப்பொழுதும் எடுக்கும் திருவிழாக்களால் இனிய முழக்கங்கள் எழும். வீடுகளில் தம்மை விரும்பி வருவோர்களுக்குச் செய்யும் விருந்தின் முழக்கங்கள் எழும். அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் எனும் நால்வகை இனத்தவர்களும் தத்தமக்குரிய ஒழுக்க நெறியில் தவறாது இருப்பர். அவ்வவ் வீடுகளில் உள்ள சிறுவர்களும் தத்தம் மனைகளில் தவறாது உறைவர். பறவைகளும்விலங்குகளும் பகையின்றித் தத்தமக்குரிய நெறியில் வாழும். திருமகளும் அந்நாட்டகத்தில் உறைதலையே விரும்புவாள். அந்நாட்டு மக்களால் ஓதப்படுவன திருவைந்தெழுத்தே ஆம். அதனால் பிணி எவையும் அந்நாட்டில் வர அஞ்சும்.

 

எனவே, தத்தமது இயல்புக்கு ஏற்ற நன்னெறியில் ஒழுகவேண்டும். இயல்புக்கு மாறானவைகளைச் செய்யத் துணிதல் கூடாது. 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...