கருவூர் --- 0933. தசையாகிய

                                                              அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தசையாகிய (கருவூர்)

 

முருகா! 

அடியேன் அனுபூதி ஞானத்தைப் பெற அருள்வாய்.

 

 

தனனா தனனத் தனனா தனனத்

     தனனா தனனத் ...... தனதான

 

தசையா கியகற் றையினால் முடியத்

     தலைகா லளவொப் ...... பனையாயே

 

தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்

     றவிரா வுடலத் ...... தினைநாயேன்

 

பசுபா சமும்விட் டறிவா லறியப்

     படுபூ ரணநிட் ...... களமான

 

பதிபா வனையுற் றநுபூ தியிலப்

     படியே யடைவித் ...... தருள்வாயே

 

அசலே சுரர்புத் திரனே குணதிக்

     கருணோ தயமுத் ...... தமிழோனே

 

அகிலா கமவித் தகனே துகளற்

     றவர்வாழ் வயலித் ...... திருநாடா

 

கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்

     கமலா லயன்மைத் ...... துனவேளே

 

கருணா கரசற் குருவே குடகிற்

     கருவூ ரழகப் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

தசை ஆகிய கற்றையினால் முடிய,

     தலை கால் அளவு ஒப் ...... பனையாயே,

 

தடுமாறுதல் சற்று ஒருநாள் உலகில்

    தவிரா உடலத் ...... தினை நாயேன்

 

பசு பாசமும் விட்டு, அறிவால் அறியப்

     படு பூரண நிட் ...... களம் ஆன

 

பதி பாவனை உற்று அநுபூதியில், அப்-

     படியே அடைவித்து ...... அருள்வாயே.

 

அசல ஈசுரர் புத்திரனே! குண திக்கு

     அருண உதய! முத் ...... தமிழோனே!

 

அகில ஆகம வித்தகனே! துகள்அற்-

     றவர் வாழ் வயலித் ...... திருநாடா!

 

கசிவார் இதயத்து அமிர்தே! மதுபக்

     கமல ஆலயன் மைத் ...... துனவேளே!

 

கருணா கர! சற் குருவே! குடகில்

     கருவூர் அழகப் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

            அசல ஈசுரர் புத்திரனே--- கயிலைமலை இறைவரான (திருவாரூர் அறநெறியில் எழுந்தருளி இருக்கும்) சிவபெருமான் பெற்றருளிய திருப்புதல்வரே!

 

            குண திக்கு அருணோதய--- கீழ்த் திசையில் உதிக்கின்ற சூரியனின் செம்மை ஒளி உடையவரே!

 

            முத்தமிழோனே--- இயல்இசைநாடகம் என்னும் முத்தமிழ் வடிவானவரே!

 

            அகில ஆகம வித்தகனே--- சகல ஆகமங்களிலும் வல்லவரே!

 

            துகள் அற்றவர் வாழ் வயலித் திருநாடா--- குற்றம் அற்ற அடியவர்கள் வாழும் வயலூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே! 

 

            கசிவார் இதயத்து அமிர்தே--- உள்ளம் கசிந்து தொழுபவர்களின் இதயத்தில் ஊறுகின்ற அமிர்தம் போன்றவரே!

 

            மதுபக் கமலாலயன் மைத்துனவேளே --- வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரை ஆசனமாக உடைய பிரமதேவனின் மைத்துனரே! 

 

            கருணாகர--- கருணைக்கு இருப்பிடமானவரே!

 

      சற்குருவே --- சற்குரு நாதரே!

 

            குடகில் கருவூர் அழக--- மேற்குத் திசையில் உள்ள கருவூரில் வீற்றிருக்கும் அழகரே! 

 

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

 

            தசையாகிய கற்றையினால் முடிய--- சதைத் திரளால் முழுமையும் உள்ள,

 

            தலைகால் அளவு ஒப்பனையாயே --- தலை முதல் கால் வரை அலங்காரமாகவே அமையப்பெற்று,

 

            தடுமாறுதல் சற்று ஒருநாள் உலகில் தவிரா--- தடுமாற்றம் என்பது சற்றும் ஒருநாள் கூட இந்த உலகில் நீங்குதல் இல்லாத (தடுமாற்றமே நிறைந்துள்ள),

 

            தவிரா உடலத்தினை நாயேன்--- உடம்பைப் பெற்றுள்ள நாயேன்

 

            பசுபாசமும் விட்டு---  பசு ஞானத்தையும்பாச ஞானத்தையும் விட்டு

 

            அறிவால் அறியப்படு பூரண நிட்களமான--- பதி ஞானத்தால் மட்டுமே அறியப் பெறுகின்றதும்,நிறைவானதும்உருவம் அற்றதும் ஆகிய

 

            பதி பாவனை உற்று அநுபூதியில்--- பரம்பொருளை உள்ளத்தில் பாவித்து தியானத்தை மேற்கொண்டுமேலான அந்த அனுபவ ஞானத்தில் 

 

            அப்படியே அடைவித்து அருள்வாயே--- அப்படியே அடியேனை அடையச் செய்து அருள் புரிவாயாக.

 

பொழிப்புரை


 

            கயிலைமலை இறைவரும் திருவாரூர் அறநெறியில் எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபெருமான் பெற்றருளிய திருப்புதல்வரே!

 

            கீழ்த் திசையில் உதிக்கின்ற சூரியனின் செம்மை ஒளி உடையவரே!

 

             இயல்இசைநாடகம் என்னும் முத்தமிழ் வடிவானவரே!

 

            சகல ஆகமங்களிலும் வல்லவரே!

 

            குற்றம் அற்ற மனத்தவர்கள் வாழும் வயலூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே! 

 

            உள்ளம் கசிந்து தொழுபவர்களின் இதயத்தில் ஊறுகின்ற அமிர்தம் போன்றவரே!

 

            வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரை ஆசனமாக உடைய பிரம தேவனுக்கு மைத்துனரே! 

 

            கருணைக்கு இருப்பிடமானவரே!

 

      சற்குரு நாதரே!

 

            மேற்குத் திசையில் உள்ள கருவூரில் வீற்றிருக்கும் அழகரே! 

 

     பெருமையில் மிக்கவரே!

 

            முழுமையும் சதையின் திரளால் அமைந்து, தலை முதல் கால் வரை அலங்காரமாகவே அமையப்பெற்று,தடுமாற்றம் என்பது சற்றும் ஒருநாள் கூட நீங்குதல் இல்லாத இந்த உலகில், உடம்பைப் பெற்றுள்ள நாயேன், பசு ஞானத்தையும்பாச ஞானத்தையும் விட்டு, பதி ஞானத்தால் அறியப் பெறுகின்ற நிறைவானதும்உருவம் அற்றதும் ஆகிய பரம்பொருளை உள்ளத்தில் பாவித்து தியானத்தை மேற்கொண்டுமேலான அந்த அனுபவ ஞானத்தில் அப்படியே அடியேனை அடையச் செய்து அருள் புரிவாயாக.

 

விரிவுரை

 

தசையாகிய கற்றையினால் முடிய தலைகால் அளவு ஒப்பனையாயே தடுமாறுதல் சற்று ஒருநாள் உலகில் தவிரா உடலத்தினை--- 

 

இந்த உடலானது சதைத் திரளால் ஆனது. இந்த உடம்பையே பெரிதாக மதித்துஇது எதற்காக வந்தது என்பதை அறியாமல்தலையிலிருந்து பாதம் முடிய அழகு செய்து கொண்டு வாழ்கின்றோம். உள்ளத்தில் காமம்குரோதம்உலோபம்மோகம்மதம்மாச்சரியம் என்னும் அழுக்குகள் நிறைய உள்ளதை நீக்க எண்ணாமல்நான் எனது என்னும் செருக்கு மூடி வாழுகின்றோம். இதனால் நாளும் தடுமாற்றம் உண்டாகின்றது. தடுமாற்றம் நீங்கியபாடு இல்லை.

 

ஜீரணம் ஆவதனால் உடம்பு சரீரம் எனப்பட்டது. இது நீர்மேல் குமிழிக்கு நிகரானது. யாக்கை நிலையாமையை உணர்வதுவே அறிவுடமையாகும். நில்லாத உடம்பை நிற்பதாக நினைப்பது பேதமையாகும்.

 

நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்

புல்லறி வாண்மை கடை                 ---  திருக்குறள்.

 

நேற்றிருந்தார் இன்றில்லை என்று கூறுவதுதான் இவ்வுலகில் உள்ள பெருமை.

 

ஒரு இளமையான கணவன்அழகிய மனைவிகனவன் மனைவியை அடைப் பணியாரம் பிழிந்து கொடுக்குமாறு கேட்டான். அவள் மிக்க அன்பாக அரிசியை ஊற வைத்து அடை செய்தாள். செய்து தட்டில் வைத்துக் கொணர்ந்தாள். உண்ட கணவன் இடப்பக்கம் கொஞ்சம் வலிக்கின்றது என்று படுத்தான். அப்படியே கண்ணை மூடிவிட்டான். இவ்வளவுதான் இந்த உலக வாழ்வு.

 

அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்

இடப் பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே.          --- திருமந்திரம்.

 

தோன்றிய மாயாகாரியப் பொருள்கள் யாவும் மாற்றத்தை அடைந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் உள்ளது போல ஒருநாள் இருக்காது. இந்த உடம்பு என்றும் நிலையாக இருக்கும் என்றுதான் எண்ணுகின்றோம். கிழிந்த துணியைப் போல இது வருநாள் இற்றுப் போகும். இற்றுப் போன பிறகுஅந்த உடம்பில் உள்ள உயிரைக் கொண்டு போகஇயமன் வருவான் என்னும் எண்ணம் இருப்பதில்லை. அப்போது அழுது புலம்புவோம். ஆகஇறுதி வரையில் தடுமாற்றமே மிகுந்து உள்ளது.

 

எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,

அப்போது,அந்தக் கூற்றுவன் தன்னைப்

போற்றவும் போகான்பொருள்தரப் போகான்;

சாற்றவும் போகான்தமரொடும் போகான்;

நல்லார் என்னான்நல்குரவு அறியான்;

தீயார் என்னான்செல்வர் என்று உன்னான்;

தரியான் ஒருகணம்தறுகணாளன்;

உயிர்கொடு போவான்உடல்கொடு போகான்;

ஏதுக்கு அழுவீர்?ஏழை மாந்தர்காள்!

உயிரினை இழந்தோ?உடலினை இழந்தோ?

                                         

என்று "கபிலர் அகவல்" அறிவுறுத்துகின்றது.

 இதன் பொருள் ---

எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போகூற்றுவன் என்பவன் வருவான். அந்த சமயத்தில்,அந்தக் கூற்றுவன் ஆனவன்,தன்னைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான். "வேண்டிய பொருளைத் தருகின்றோம்விட்டுவிடு" என்றுமிக்க பொருளைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான வார்த்தைகளைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான்.நமது சுற்றத்தார்களை நாளடைவில் பிடித்துச் சென்று இருந்தாலும்நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகாது. ஆகையினால்நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான்.தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான்,தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான்,மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான். ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால்ஒரு கணப் பொழுதும் தாமதிக்க மாட்டான்அவன் அஞ்சாநெஞ்சம் படைத்தவன்,உயிரைத் தன்னோடு கொண்டு போவான். உடம்பைக் கொண்டு போக மாட்டான். (அது பயன்றறது என்று தள்ளி விடுவான். பயனற்றுப் போகக் கூடிய ஒன்றுக்குத் தானே இத்தனை பாடுபடுகின்றோம்?????) அறத்தைச் செய்யாது இருந்து,வாழ்நாளை வீணாக்கிவிட்டுநீங்கள் நிலைத்திருக்கும் என்ற கருதி இருந்த உடலை விட்டு விட்டுஉயிரைக் கொண்டு போன மாத்திரத்திலேயே நீங்கள் எதையோ இழந்து விட்டதாக எண்ணி,அறிவுற்ற மனிதர்களே! நீங்கள் எதற்கு அழுவீர்கள்?

நமன் உயிரை உடம்பினின்றும் பிரித்துத் தன் உலகத்துக்குக் கொண்டு போவான். அந்த வழி போகப்போகத் தொலையாத அளவுக்கு நெடுந்தூரம் உள்ளது. வழியும் கல்லும் முள்ளும் அடர்ந்து பசி தாகம் தரத்தக்க வெப்பமுடையதாக இருக்கும்.

 தான் அல்லாத உடம்பை "நான்" என்றும்,தன்னோடு இயைபு இல்லாத பிற உயிர்களையும் பொருள்களையும் "எனது" என்னும் எண்ணுகின்ற தடுமாற்றம் அறிவில் இருக்கக் கூடாது. அது இருக்கும் வரையில் உயர்கதியை அடை முடியாது.

"யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்."

 

என்று நாயனார் அருளிய திருக்குறளின் கருத்தினை ஓர்க.

 

ஆன்மா வேறு. உடம்பு வேறு என்று உணராதுஆன்மாவும் உடம்பும் ஒன்று என்று உணர்வது அறியாமை. 

 

பாராதி பூதம் நீ அல்லை - உன்னிப்

பார்இந்திரியம் கரணம் நீ அல்லை,

ஆராய் உணர்வு நீ என்றான் - ஐயன்

அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி.  --- தாயுமானார்.

 

ஒரு வீட்டிற்குள் ஒரு மனிதன் குடி இருப்பது போல்இவ் உடம்புக்குள் உயிர் உறைகின்றது. குடியிருக்கும் மனிதன் வேறுவீடு வேறுபோல்உயிர் வேறுஉடம்பு வேறு என்று உணர்க.

 

குடம்பை தனித்துஒழிய புள்பறந்து அற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.

 

என்றார் தெய்வப் புலவராம் திருவள்ளுவ நாயனாரும்.

 

பசு பாசமும் விட்டு, அறிவால் அறியப்படு பூரண நிட்களம் ஆன பதி பாவனை உற்று ---

 

அறிவு --- மெய்யறிவு. 

 

பூரணம் --- முழுமையான.

 

நிட்களம் --- உருவமில்லாதூய்மையான.

 

பாவனை --- தியானம்.

பதிபசுபாசம் என்பன முப்பொருள்கள். 

பதி --- இறைவன்,  பசு - உயிர். பாசம் - உயிர்களைப் பற்றி உள்ள அறியாமை.பசுபாச தொந்தம் அற்றுஉயிரானது பதியினைப் பாவனை செய்து இருக்கவேண்டும். பதியாகிய இறைவன் உள்பொருள் என்பதற்குப் பிரமாணம்பதியின் இலக்கணம். பசு என்னும் உயிர்க்குப் பிரமாணம்அதன் இலக்கணம். பாசம் என்பதற்குப் பிரமாணம்அதன் இலக்கணம். இவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும். 

 பதிபசுபாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றிதிருமந்திரம் சுருக்கமாக,

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்,

பதியினைப் போல்பசு பாசம் அனாதி,

பதியினைச் சென்று அணுகா பசு பாசம்,

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.

 

என்று அறிவிக்கும்.

 இதன் பொருள் ---

(பதி ஒன்றுதனே என்றும் உள்ளதுஏனைய பசுபாசம் இரண்டும் எவ்வாறு தோன்றினஎன்று ஐயுறும் மாணாக்கரைக் குறித்து,) `பதிபசுபாசம்என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே,ஏனைப் பசுவும்,பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம். (இவ்வுண்மை அறியாதார் பலவாறு கூறி மலைவர் என்பது கருத்து) பாசங்கள் பசுவைப் பற்றுமே அல்லாமல்அவை பதியினிடத்து அணுகமாட்டா. பசுபதியினிடத்து அணுகும்.அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றி நில்லாது விட்டு நீங்கும். என்று அருளிச்செய்தார்.

ஆன்மா என்றோ அன்றே மூலமலமாகிய ஆணவம் உண்டு.  செம்புக்குக் களிம்பு போலும்அரிசிக்குத் தவிடு போலும். ஆவ் ஆணவ மலத்தை நீக்கும் பொருட்டு கன்ம மலமும்மாயா மலமும் ஆகந்துகமாக இடையில் தோன்றின. வேட்டியில் உள்ள அழுக்கை உவர் மண்ணாலும்சாணத்தாலும் நீக்குவது போல என்று அறிக.

 

மும்மல நீக்கமே முத்திக்குச் சாதனமாம். அரிசியின் சுபாவமான வெண்மை நிறத்தை மறைத்த தவிடு போல்ஆன்மாவின் ஞானத்தை ஆணவ அழுக்கு மறைத்திருக்கின்றது.  

 

அரிசி - ஆன்மா. தவிடு - ஆணவம். முளை - கன்மம். உமி - மாயை.  

 

எனவேஅரிசிக்கு தவிடு முளை உமி என்ற மூன்றின் தொடக்கு உள்ளதுபோல்ஆன்மாவுக்கு ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலத் தொடக்கு உண்டு. உலக்கையால்தவிடு முளை உமிகளை நீக்குவது போல்குருநாதனுடைய ஞானோபதேசம் என்னும் உலக்கையால் மும்மலத் தொடர்பை ஒழிக்கவேண்டும்.

 

களிம்பு நீங்கிய உடனேசெம்பு பொன்னாவது போல்மலபரிபாகம் நீங்கிய உடனேசீவன் சீவன் ஆகின்றது. செம்பு தனியாக இருந்தால் களிம்பு நீங்காது. அது தங்கத்தோடு சேர்ந்தால் களிம்பு பற்றாது. ஆன்மா இறை தியானத்தில் இருந்தால் ஆணவம் சிறிது சிறிதாக நீங்கப் பெறும்.

 

ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடிமெய்ஞ்ஞானத்

தாணுவினோடு அத்துவிதம் சாரும்நாள் எந்நாளோ..--- தாயுமானார்.

இறைவனைப் பாசஞானத்தாலும்பசுஞானத்தாலும் அறிய முடியாது. பதிஞானம் ஒன்றாலேயே அறிந்து அணுகமுடியும். இதைகுருமுகமாக அறிந்து உய்தல் வேண்டும்.உடல்கருவிஉலகம்நுகர் பொருள்கள் ஆகியவை மாயையாகிய பாசப் பொருள்கள். பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகப் பொருள்களை அறியும் அறிவு பாச அறிவு அல்லது "பாசஞானம்" எனப்படும்.

கண்களுக்கு விளக்குப் போலக் கருவிகள் உலகப் பொருள்களை அறிவதற்குத் துணை செய்கின்றன. அக்கருவிகளே அறிவதில்லை. கருவிகளுக்கு வேறாக அறியும் தன்மையுடைய உயிர் உள்ளது. அவ்வுயிரால் அறியும் அறிவு உயிர் அறிவு அல்லது "பசுஞானம்" எனப்படும். 

 பதியைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்பெறும் திருவருள் ஞானமே பதிஞானம் அல்லது சிவஞானம் எனப்படும். 

பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்

            பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே

நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத

            நீழல்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்

ஆசைதரும் உலகம்எலாம் அலகைத்தே ராம்என்று

            அறிந்து அகல அந்நிலையே ஆகும் பின்னும்

ஓசைதரும் அஞ்சு எழுத்தை விதிப்படி உச்சரிக்க

            உள்ளத்தே புகுந்து அளிப்பன் ஊனமெலாம் ஓட.

 

என்பது சிவஞானசித்தியார்.

சிவபெருமான் பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறிய இயலாத தன்மையினை உடையவன். அப்பெருமானை அவனுடைய திருவருள் வழியில் நின்று பதிஞானத்தால் தன் உள்ளத்தின் உள்ளே அன்பினோடும் தேடி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத போது இவ்வுலகியல் உணர்வு மேல் எழுதல் கூடும். உலகியல் உணர்வை வெறும் கானல் நீர். நொடிப் பொழுதில் மறையும் தன்மை உடையது என்று உணர்ந்து அதனை விட்டு நீங்கி இறைவன் திருவடியை விட்டு விலகாத ஆற்றலைத் தரவல்ல திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். அந்நிலையில் திருவடி ஞானம் விளங்கி உயிரின் குற்றம் எல்லாம் நீங்குமாறு இறைவன் திருவருள் பாலிப்பான்.

அநுபூதியில்அப்படியேஅடைவித்துஅருள்வாயே--- 

அநுபூதி என்ற சொல்லுக்குபட்டறிவுஅநுபவஞானம்உடனாதல் என்று பொருள். மெய்யுணர்வோடு அநுபவப்பட்டுவருவதுஅநுபூதி ஆயிற்று. அநுபவம் என்றால் "அழுந்தி அறிதல்" என்றும் அநுபவ பூர்வமாய் உணர்தல் என்றும் பொருள்படும். 

அசல ஈசுரர் புத்திரனே--- 

 

அசலம் --- மலை. இங்கே திருக்கயிலை மலையைக் குறிக்கும். 

 

திருவாரூர் அறநெறியில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் "அசலேசர்" எனப்படுகின்றார்.

 

குண திக்கு அருணோதய--- 

 

அருணன் --- சூரியன். குண திக்கு --- கீழ்த் திசை.

 

மிக்க ஒளிக் கிரணங்களை உடைய சூரியன் உதயமாகும் காலத்தில்உலகை மூடியிருந்த செறிந்த இருளானதுசிறிது சிறிதாக ஒழிந்து,உலகமெங்கும் ஒளி விளங்குகின்றது. அதுபோலவேஅஞ்ஞானம் என்னும் இருள்தரு துன்பத்தில் மூழ்கி இருந்து அல்லல்படும் உயிர்களுக்குஇறைவன் திருவருள் ஒளி வெளிப்பட வெளிப்பட்டஉண்மை ஞானம் தலைப்பட்டு,அளவில்லாத ஆனந்தம் உண்டாகும்.

 

இதனைத் திருவாசகத்தில்,திருப்பளி எழுச்சி என்னும் பகுதியில்மணிவாகப் பெருமான் அழகுறக் காட்டுமாறு காண்க.

 

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்

            அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழஎழ நயனக்

            கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்

திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்

            திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

            அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.

 

இதன்பொருள் --- 

 

     அண்ணலே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபரம்பொருளே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்றஇன்ப மலையேஅலைகளையுடைய கடல் போன்றவனே சூரியனது தேர்ப்பாகன் ஆகிய அருணன்இந்திரன் திசையாகிய கீழ்த்திசைசை அடைந்தான்உலகை மூடியிருந்தஇருள் முழுதும் நீங்கிவிட்டதுதாமரை மலர் போலும் உனது திருமுகத்தினின்றும் தோன்றுகின்ற கருணையைப் போலசூரியன் மேல் எழுந்தோறும்உனது திருக்கண் போன்ற வாசனை பொருந்திய தாமரையானதுவிரிந்து மலரமலரஅவ்விடத்தில் கூட்டமாகவும் வரிசையாகவும்வந்து பொருந்தி விளங்குகின்ற வண்டுகள்,இசை பாடுகின்றனஇவற்றைத் திருவுள்ளம் பற்றிப் பள்ளியெழுந்தருள்வாயாக.

 

திருப்பள்ளியெழுச்சி என்பதன் பொருளைதெய்வச் சேக்கிழார் பெருமான் அருமையாக விளக்கி அருளி உள்ளார். திலகவதியார் அளித்த திருநீற்றை அணிந்திருந்த மருள்நீக்கியாருடைய திருவுள்ளத்தில் இருந்த இருளாகிய அறியாமையும்கரிய நிறம் நிறைந்த இரவு வேளையில் வெளியில் உள்ள இருட்டும் மாறுமாறு வரும் திருப்பள்ளி எழுச்சியில் பெரிய தவத்ததைப் புரிந்த சிறிய திருவடிகளை உடைய திலகவதியார் அழகிய துடைப்பத்தையும்அழகிய மெழுவதற்குரிய சாணத்தையும்ஒரு தோண்டியையும் எடுத்துக் கொண்டு கங்கையாற்றைத் ம்முடைய திருமுடியில் அணிந்தவராகிய விரட்டானேசுவரர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்துக்குள் புகுந்தார்கள். புற இருள் நீங்கிஒளி நிரம்புவதைப்போஆன்மாக்களின் அகவிருள் நீங்கி,ஞானம் ஒளிருவதுதிருப்பள்ளி எழுச்சி ஆகும்.

 

நீறு அணிந்தார் அகத்து இருளும்,

     நிறைகங்குல் புறத்து இருளும்

மாறவரும் திருப்பள்ளி

     எழுச்சியினில் மாதவம்செய்

சீறடியார் திருவலகும் 

     திருமெழுக்கும் தோண்டியும் கொண்டு

ஆறுஅணிந்தார் கோயிலினுள் 

     அடைந்தவரைக் கொடுபுக்கார்.  --- பெரியபுராணம்.

 

 

துகள் அற்றவர் வாழ் வயலித் திருநாடா--- 

 

துகள் --- குற்றம். காமம்வெகுளிமயக்கம் என்னும் உயிர்க் குற்றம்அற்ற அடியவர்கள் வாழுகின்ற இடத்தில் இறைவன் விளங்கி அருள் புரிவான். "மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடிவிளையாடியேஅங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

 

கசிவார் இதயத்து அமிர்தே--- 

 

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதி வழிபடுகின்ற அடியவர்கள் இதயத்தில் ஊறுகின்ற இன்பத்துக்கு ஒப்பானவன் என்றதால் "அமிர்தே" என்றார். அழியாத இன்பத்தைத் தருவது அமிர்தம் ஆகும்.

 

"உருகும் மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை" என்றும்,"கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்தேன்அவன் காண்" என்றும் அப்பரடிகள் ஓதுமாறு காச்க.

 

மதுபக் கமலாலயன் மைத்துனவேளே --- 

 

மதுபம் --- வண்டு. 

 

கமலாலயன் --- தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்.

 

பிரமன் திருமாலின் மைந்தன். திருமால் முருகப் பெருமானுக்கு மாமன். எனவேபிரமன் முருகப் பெருமானுக்கு மைத்தனர் ஆகின்றார்.

 

குடகில் கருவூர் அழக--- 

 

கருவூர் என்பது இக்காலத்தில் கரூர் என வழங்கப்படுகின்றது. கரூர் நகரின் மத்தியில் திருக்கோயில் உள்ளது. கோயமுத்தூர்ஈரோடுதிருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் இரயில் நிலையம்,திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் இருக்கிறது. "ஆனிலை" என்பது திருக்கோயிலின் பெயர்.

 

இறைவர்: பசுபதீசுவரர்ஆனிலையப்பர்.

இறைவியார்  : கிருபாநாயகிசௌந்தர்யநாயகி

தல மரம்     : கொடி முல்லை

தீர்த்தம்       : ஆம்பிராவதி ஆறு

 

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

 

ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். பிரம்மாகாமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர்ச் சித்தர் சந்நிதி உள்ளது.

 

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும்பன்னிருதிருக்கரங்களுடனும்தேவியர் இருவருடனும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கம் உள்ளது.

 

எறிபத்த நாயனார் அவதரித்த தலம்.

 

கருவூர் ஆனிலையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைப்பவர்களை எறிந்து வீழ்த்த மழுப்படை தாங்கி நின்றவர் ஒருவர் இருந்தார். அவர்எறிபத்த நாயனார் என்னும் திருப்பெயர் உடையவர். அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்.  ஆனிலையப்பருக்கு பூத் தொண்டு செய்பவர். ஒருநாள்அதாவது நவமி முன்னாளில்சிவகாமியாண்டார் வழக்கம்போல் பூக்களால் கூடையை நிரப்பிஅக் கூடையைத் தண்டில் தூங்கச் செய்து,திருக்கோயில் நோக்கிச் செல்லலானார். அவ் வேளையில் அவ் வழியே புகழ்ச்சோழ மன்னவரின் பட்டவர்த்தன யானை காவிரியில் மூழ்கிபாகர்கள் மேலேயிருப்பகுத்துக்கோல்காரர்கள் முன்னே ஓடவிரைந்து நடந்து வந்தது. அந்த யானை சிவாகமியாண்டாரை நெருங்கித் தண்டில் இருந்த பூங்கூடையைப் பற்றி மலர்களைச் சிந்தியது. அதைக் கண்ட பாகர்கள்,யானையை வாயு வேகமாக நடத்திச் சென்றார்கள். சிவகாமியாண்டார் சினந்து வேழத்தைத் தண்டினால் புடைக்க விரைந்து நடந்தார். யானையின் கதிநடை எங்கேசிவகாமியாண்டார் மூப்பு நடை எங்கேமூப்பால் சிவகாமியாண்டார் கால் தவறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் தரையைக் கையால் மோதி எழுந்து நின்று, "ஆனிலையப்பாஉன் திருமுடி மீது ஏறும் மலரை ஒரு யானையா மண்ணில் சிந்துவதுசிவதா! சிவதா!" என்று ஓலமிடலானார். அவ் ஓலம் கேட்டுக் கொண்டுஅவ் வழியே வந்த எறிபத்த நாயனார்சிவகாமியாண்டாரை அடைந்து பணிந்து, "அக் கொடிய யானை எங்குற்றது?" என்று கேட்டார். சிவகாமியாண்டார், "அந்த யானை இவ் வீதி வழியே போயிருக்கிறது" என்றார். என்றதும்எறிபத்த நாயனார் காற்றெனப் பாய்ந்துயானையைக் கிட்டிஅதன் மீது பாயந்தார். யானையும் எறிபத்தர் மீது பாய்ந்தது. நாயனார் சிறிதும் அஞ்சாது யானையை எதிர்த்துத் தமது மழுவினால் அதன் துதிக்கையைத் துணித்தார். யானை கதறிக் கொண்டு கருமலைபோல் கீழே விழுந்தது. பின்னை குத்துக்கோல்காரர்கள் மூவரையும்பாகர் இருவரையும் நாயனார் வெட்டி வீழ்த்தினார். மற்றவர்கள் விரைந்து ஓடி, "பட்டவர்த்தனத்தைச் சிலர் கொன்றனர்" என்று புகழ்ச்சோழ மன்னருக்கு அறிவித்தார்கள்.

 

சோழர் பெருமான்வடவை போல் சீறிஒரு குதிரை மீது ஏறிப் புறப்பட்டார்.  நால்வகைச் சேனைகளும்பிறவும் அவரைச் சூழ்ந்து சென்றன. மன்னர் பெருமான்யானை இறந்துபட்ட இடத்தைச் சேர்ந்தார். யானையைக் கொன்றவர் எறிபத்தர் என்று கொள்ளாதவராய், "மழுவைத் தாங்கி நிற்கும் இவரே நமது யானையைக் கொன்றவர்" என்றார்கள். புகழ்ச்சோழ நாயனார் திடுக்கிட்டு, "இவர் சிவனடியார். குணத்தில் சிறந்தவர். யானை பிழைசெய்து இருத்தல் வேண்டும். இல்லையேல் இவர் அதைக் கொன்று இருக்கமாட்டார்" என்று எண்ணிச் சேனைகளை எல்லாம் நிறுத்திகுதிரையில் இருந்து இறங்கி, "இப் பெரியவர் யானைக்கு எதிரே சென்றபோதுவேறு ஒன்றும் நிகழாது இருக்க,நான் முன்னே என்ன தவம் செய்தேனோஅடியவர் இவ்வளவு முனியக் கெட்டேன். நேர்ந்த பிழை என்னவோ?" என்று அஞ்சிநாயனார் முன்னே சென்று தொழுது, "யானையைக் கொன்றவர் அடியவர் என்று நான் அறியேன்.  நான் கேட்டது ஒன்று. இந்த யானை செய்த பிழைக்கு இதனைப் பாகரோடும் மாய்த்தது போதுமா?" என்று கேட்டார். நாயனார் நிகழ்ந்ததைக் கூறினார். சோழர் பெருமான் எறிபத்த நாயனாரை வணங்கிச் "சிவனடியாருக்கு விளைத்த தீங்குக்கு யானையையும் பாகர்களையும் கொன்றது போதாது.  என்னையும் கொல்லுதல் வேண்டும். அடிகளின் மங்கல மழுவால் என்னைக் கொல்லுதல் முறைமை அல்ல" என்று சொல்லிதமது உடைவாளை எடுத்து, "இதனால் என்னைக் கொன்று அருள்க" என்று நீட்டினார். எறிபத்தர், "அந்தோ! இவர் அன்பர். இவர் தம் அன்பிற்கு ஓர் அளவு இல்லை.  வாளை வாங்கா விட்டால் தற்கொலை செய்துகொள்வார்" என்று கருதி வாளை வாங்கினார். புகழ்ச்சோழர், "ஆ! இப் பெரியவர் அடியேனைக் கொன்று என் பிழை தீர்க்கும் பேறு பெற்றேன்" என்று மனம் மகிழ்ந்தார். எறிபத்தர், "இத் தகைய அன்பருக்கோ தீங்கு நினைத்தேன்நான் பாவி! பாவி! முதலிலே என் உயிரை மாய்த்துக் கொள்வதே முறை" என்று உறுதிகொண்டுவாளைக் கழுத்தில் இட்டு அரியப் புகுந்தார். அக் காட்சி கண்ட சோழர் பெருமான், "கெட்டேன்கெட்டேன்" என்று வாளையும் கையையும் பிடித்தார். அரசர் கையைப் பற்றினாரே என்று எறிபத்தர் வருந்தி நின்றார்.

 

"இது அன்பின் பெருக்கால் நேர்ந்த இடுக்கண். இந்த இடுக்கணை மாற்றஉங்கள் தொண்டின் மாண்பை உலகத்தவர்க்குக் காட்டவேண்டிச் சிவபெருமான் திருவருளால் இவை யாவும் நிகழ்ந்தன" என்று ஓர் அசரீரி வானில் எழுந்தது. எழுந்ததும்யானை பாகர்களோடு உயிர் பெற்று எழுந்தது. எறிபத்த நாயனார் வாளை விடுத்துபுகழ்ச்சோழ நாயனாரை வணங்கினார். புகழ்ச்சோழ நாயனார் வாளை எறிந்த சிவபத்தரைப் பணிந்தார். இருவரும் திருவருளை வழுத்தினர்.  திருவருளால் பூக்கூடை நிறைந்தது. சிவகாமியாண்டார் ஆனந்த வாரிதியில் திளைத்தார். பட்டவர்த்தனத்தை அழைத்துக் கொண்டு பாகர்கள் அரசர் முன்னே வந்தனர். எறிபத்த நாயனார் வேண்டுகோளுக்கு இணங்கிபுகழ்ச்சோழ நாயனார் யானைமீது எழுந்தருளிச் சேனைகள் புடைசூழ அரண்மனையை அடைந்தார்.  சிவகாமியாண்டார் பூக்கூடையைத் தண்டில் தாங்கித் தம் திருத்தொண்டின் மேல் சென்றார். எறிபத்த நாயனார் தாம் ஏற்ற திருத்தொண்டினைக் குறைவறச் செய்து வாழ்ந்துதிருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவரானார்.

 

பொழில் கருவூர்த் துஞ்சிய

புகழ்ச் சோழ நாயனார்

வரலாறு

 

புகழ்ச்சோழ நாயனார் சேழநாட்டை ஆண்ட மன்னருள் ஒருவர். ஊறையூரிலே ஆட்சி புரிந்தவர். சைவம் தழைக்க முயன்றவர்.  திருக்கோயில்களில் பூசனைகளை வழாது நடத்துவித்தவர். திருத்தொண்டர்களின் குறிப்பறிந்து உதவுபவர்.

 

கொங்கு நாட்டு அரசர்களிடம் இருந்தும் குடகு நாட்டு அரசர்களிடம் இருந்தும் திறை வாங்குதல் பொருட்டுப் புகழ்ச்சோழ நாயனார் கருவூருக்குச் சென்றார்.  அத் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஆனிலைப் பெருமானை வழிபட்டுத் திருமாளிகை சேர்ந்துஅரியாசனத்தில் வீற்றிருந்தார். கொங்கரும்குடகரும் திறை செலுத்தினர். புகழ்ச்சோழர் அவர்கட்கு ஆசி கூறிஅரசுரிமைத் தொழில் அருளினார்.மேலும் சோழர் பெருமான்அமைச்சர்களை நோக்கிநமது ஆணைக்குக் கீழ்ப்படாத அரசர் எவரேனும் உளரோ அறிந்து சொல்லுங்கள் என்று கட்டளை இட்டார்.

 

அந்நாளில்சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஆனிலைப் பெருமானுக்கு வழக்கம்போல் திருப்பள்ளித்தாமம் கொண்டு போனார்.  அதனைப் பட்டத்து யானைபற்றி ஈர்த்துச் சிதறச் செய்தது. எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டிக் கொன்றார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழ நாயனார்எறிபத்த நாயனார் எதிரே சென்றுநேர்ந்த அபராதத்திற்குபட்டத்து யானையையும்பாகரையும்பறிக்கோல் காரர்களையும் கொன்றது போதாது. தன்னையும் கொல்லுமாறுதனது உடைவாளை எறிபத்த நாயனாரிடம் கொடுத்தார்.  எறிபத்த நாயனார் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தபோதுஇறைவர் வானிலே காட்சி கொடுத்தருளினார். பட்டத்து யானையும்மாண்டோரும் எழுந்தனர். இவ்வாறு கருவூரில் இருந்த காலத்தில் புகழ்ச்சோழ நாயனார் திருத்தொண்டில் மேம்பட்டவராக விளங்கினார்.

 

அமைச்சர்கள் மன்னரிடம் வந்து நின்று, "உங்கள் ஆட்சிக்குக் கீழ்ப்படியாத அரசன் ஒருவனே உள்ளான். அவன் அதிகன் என்பவன்.  அவன் அருகே உள்ள மலை அரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள்.  உடனேபுகழ்ச்சோழ நாயனார் அமைச்சர்களைப் பார்த்து, "அவ் அரணை அதம் செய்து வாருங்கள்" என்றார். அமைச்சர்கள் அப்படியே செய்தார்கள். அதிகன் ஓடி ஒளித்துக் கொண்டான். புகழ்ச்சோழரின் சேனை வீரர்கள் அதிகனுடைய சேனை வீரர்களின் தலைகளையும்செல்வங்களையும்பிறவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

 

ஒரு வீரரின் சடைத்தலை புகழ்ச்சோழ நாயனாரின் கண்ணுக்குப் புலனாயிற்று. நாயனார் அலறுகிறார்கதறுகிறார். "சைவம் தழைக்க அரசு இயற்றுபவன் நானாநல்லது! நல்லது!" என்றார். "சோற்றுக் கடன் முடிக்கப் போர்புரிந்த அடியவரையோ என் சேனை கொன்றது?" என்றார். "இப் பழிக்கு என் செய்வேன் என் உயிர் நீங்கவில்லையே" என்றார்.

 

இவ்வாறு நாயனார் புலம்பிஅமைச்சர்களை நோக்கி, "இவ் உலகத்தை ஆளுமாறும்சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள்" என்று கட்டளை இட்டார்.  அமைச்சர்கள் மனம் கலங்கி நின்றார்கள்.  நாயனார் அவர்களைத் தேற்றினார். நெருப்பை வளர்ப்பித்தார். நீற்றுக் கோலப் பொலிவுடன்திருச்சடைத் தலையை ஒரு மாணிக்கத் தட்டிலே ஏந்தினார். அதைத் தமது திருமுடியிலே தாங்கினார். நெருப்பை வலம் வந்தார்.  திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டே நெருப்பில் இறங்கினார்.  ஆண்டவன் திருவடி நீழலை அடைந்தார்.

 

கருவூர்த் தேவர் வரலாறு

 

திருவிசைப்பா அருளிய ஆசிரியர்கள் ஒன்பதின்மரில் ஒருவர் கருவூர்த்தேவர். இவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் அவதரித்தவர். அதனால் கருவூர்த்தேவர் எனப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் இன்னது என விளங்கவில்லை. இவர் அந்தணர் குலத்தினர். வேதங்களையும் கலைகளையும் நன்கு உணர்ந்து ஓதியவர். இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். சைவ சமயத்தின் வழி ஒழுகியவர். போகநாதரிடம் உபதேசம் பெற்றுஞான நூல்களை ஆராய்ந்து சிவயோகத்தில் நின்றவர்.  காயகற்பம் உண்டவர். தம்மை இகழ்ந்தவர்களுக்குப் பலப்பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். பித்தர் என்று தம்மை மதிக்கும்படியாகத் திரிந்தவர். பிச்சை ஏற்று உண்ணும் துறவு வாழ்க்கைய மேற்கொண்டவர். தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் பற்று அற்று இருந்தவர். மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவர்.

 

ஒரு சமயம் கருவூர்த் தேவர் வடநாடுகொங்கு நாடுதொண்டை நாடுநடுநாடு முதலிய இடங்களில் உள்ள திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு தென்பாண்டி நாட்டுத் திருப்புடைமருதூர் சென்று இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றார். திருவைகுண்டம் அடுத்த காந்தீசுவரம் என்னும் சிவத்தலத்தில் இறைவனின் பேரொளியைக் கண்டு தரிசித்தார். பின்னர்இவர் நெல்லைப் பதியை அடைந்துநெல்லையப்பர் சந்நிதியில் நின்று, "நெல்லையப்பா" என்று அழைக்கஅப்பொழுது நெல்லையப்பர் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டுசிறிது தாமதிக்க, "இங்குக் கடவுள் இல்லை போலும்" என்று அவர் சினத்துடன் நீங்கஆலயம் பாழாகியது. அதனை அறிந்த ஊரார் நெல்லையப்பரை வேண்டநெல்லையப்பர் கருவூர்த்தேவரை மானூரில் சந்தித்து,அருள் புரிந்து நெல்லைப் பதிக்கு அழைத்து வந்து காட்சியளித்தார். பின்பு ஆலயம் செழித்து ஓங்கியது என்பர்.

 

கருவூர்த்தேவர் நெல்லைப் பதியை விடுத்துதிருக்குற்றாலம் சென்றுஅங்குச் சிலநாள் தங்கியிருந்துபின்னர் பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து,அருள் பெற்றுபலநாள் அங்கே இருந்தார்.

 

அப்பொழுது தஞ்சாவூரில் இராசராச சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய தஞ்சை இராசராசேச்சரத்துப் பேராவுடையார்க்கு அட்டபந்தன மருந்து பலமுறை சாத்தியும் இறுகாமல் இளகி நின்றது.  அது கண்டு மன்னன் வருந்தினான். அதனை அறிந்த போகநாதர்,பொதியமலையில் இருந்து கருவூர்த்தேவரை அழைப்பித்தார். கருவூர்த் தேவர் விரைந்து தஞ்சைக்கு வந்துதம் குருவையும் அரசனையும் கண்டார். இறைவனை வழிபட்டுஅட்டபந்தன மருந்தை இறுகச் செய்து பேராவுடையாரை நிலை நிறுத்தினார்.

 

கருவூர்த் தேவர் தஞ்சாவூரில் இருந்து திருவரங்கம் சென்றுஅரங்கநாதர் அருள் பெற்றுச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்து பின் கருவூரை அடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப் பிராமணர்கள்கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கத்தை விட்டவர் என்றும்,வாமபூசைக்காரர் என்றும் பழிச்சொல் தூற்றி அவருக்கு அடிக்கடி பலப்பல தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினர். ஒருநாள் கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல் நடித்துகருவூர்த் திருஆனிலை ஆலயத்தை அடைந்துபசுபதீசுவரரைத் தழுவிக் கொண்டார்.

 

கருவூர்த் தேவர் திருவுருவச்சிலை சிறு சந்நிதியாகக் கருவூர்ப் பசுபதீசுரர் ஆலயத்துள் வெளிப் பிராகாரத்திலே தென்மேற்குத் திக்கிலும்தஞ்சாவூர் பேராவுடையார் ஆலயத்தில்

வெளிப்பிரகாரத்தில் தென்மேற்குத் திக்கிலும் தெய்வீகச் சிறப்புடன் இள்ளது. அங்கு நாள்தோறும் பூசைகள் நடைபெறுகின்றன.

 

கருவூர்த் தேவர் திருத்தில்லைதிருக்களந்தை ஆதித்தேச்சரம்திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்திருமுகத்தலைதிரைலோக்கிய சுந்தரம்கங்கைகொண்ட சோளேச்சரம்திருப்பூவணம்திருச்சாட்டியக்குடிதஞ்சை இராசராசேச்சரம்திருவிடைமருதூர் ஆகிய பத்துச் சிவாலயங்களுக்கும்தலங்களுக்கு ஒவ்வொன்றாகத் திருவிசைப்பாப் பதிகங்கள் பத்துப் பாடியுள்ளார். திருவிசைப்பாப் பாடிய ஆசிரியர்களுள் இவர் பாடிய பதிகங்களே மிகுதியாக உள்ளன.

 

கருத்துரை

 

முருகா! அடியேன் அனுபூதி ஞானத்தைப் பெற அருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...