திருவாசகம் --- திருச்சாழல் --- ஒருபார்வை.

 


மணிவாசகப் பெருமான் அருளிய

திருவாசகம்

 

திருச்சாழல்

-----

 

"சாழல்" என்பதும் மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்று என்பதை மட்டும் அறிய முடிகிறது. சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை உரையில்,அடியார்க்கு நல்லார்பல்வரிக் கூத்தாவன இவை என்பதற்கு எடுத்துக் காட்டிய சூத்திரத்தில், "நல்லார் தம் தோள் வீச்சு நற்சாழல்" என்று காட்டப்பட்டு உள்ளது.

 

"சாழல்"என்பதுமகளிர் சிலர் எதிர் எதிராக நின்றுகொண்டுகைகளை நீட்டிகுறிப்பிட்ட பாடலைப் பாடிக்கொண்டுஎதிரே உள்ளவர் கைகளைத் தட்டுவதோ அல்லது அவர்கள் தோள்களைத் தட்டுவதோ அல்லது இருவர் கையையும் மேலே தூக்கிக் கும்பிடுவதுபோலக் கையைத் தட்டிப் பிணைத்துக்கொள்வதோ இவற்றுள் அடங்கும் எனக் கொள்ளலாம். "எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான்என்று சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டு உள்ளதால்,தோள் வீசி நின்று ஆடும் என்ற பொருளிலேயே கைகளை நீட்டல்,மடக்கல்வளைத்தல்,சுருட்டல்அரைவட்ட வடிவமாகக் கைகளை வீசுதல் முதலிய பத்து நிலைகள் சொல்லப்பெறுகின்றன.  எதிரேயுள்ள ஒருத்தி ஒரு கையைத் தூக்கி ஆட்டிக்கொண்டு தன்னுடைய கேள்விக்கு விடைகூற முடியுமாஎன்று கேட்பதுபோலஎதிரே உள்ளவள் கையைத் தட்டி"ஏடி என்று கேட்பாள். எதிரே உள்ளவள் மிக எளிதாக அந்த வினாவிற்கு விடை கூறிவிட்டதா,தன் கைகளை உயர்த்தி "சாழல்"என்ற சொல்லுடன் காட்டுவாள். 

 

சில அம்மானைப் பாடல்களில்தோழிகளில் ஒருத்தி வினாவை எழுப்புவதும்இன்னொருத்தி அந்த வினாவிற்கு விடை பகருவதுமாக வருவது காணலாம். இந்த தடைவிடை முறையைமணிவாசகப் பெருமான்அம்பலவாணப் பெருமானுடைய சிறப்புக்களை எடுத்து ஓதும் முகத்தான் அமைத்துக் காட்டினார் என்பதே உண்மை.

 

புறச்சமயத்தார் ஆகிய புத்தர்கள் முதலானோர் சிவபரம்பொருளினது உண்மைத் தன்மைக்குக் கூறும் தடைகளையும்அவற்றிற்குச் சிவனடியார் கூறும் விடைகளையும் அடக்கியது இத் திருப்பதிகம் என்று குறிப்பிட்டுஇதற்கு புத்தர்களை வாதில் வென்றது என்னும் வரலாறும் தோன்றியது. புறச்சமய்யதார்கள் என்னசைவத்தில் உள்ளவர்களேதாம் வழிபடும் பரம்பொருளின் தன்மையை அறியாதவர்களாகவே உள்ளனர்.

 

இவ்வாறு தடைகளை எழுப்பவதும்விடைகளை இறுப்பதும் ஆககந்தபுராணம்தக்க காண்டத்தில்ததீசி உத்தரப் படலத்துள்ளும் காணப்படும்.

 

விளையாட்டு (Game) என்பது பொழுது போக்குக்காகவும்மகிழ்ச்சிக்காகவும்சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு.  விளையாடலின் மூலம்உடல் வலிமை பெறும். தோல்வி வெற்றி இரண்டையும் சமமாகக் காணுவதன் மூலம்நட்புணர்வும்அன்பும் மேலிடுவதால்,உள்ளம் தனது வன்மையை இழந்து மென்மை பெற்றுப் பக்குவ நிலையை அடையும் என்பது உண்மை. "மாலை முழுதும் விளையாட்டு" என்றார் பாரதியார். மாலை என்பதன் பொருள் மயக்கம். அறிவு மயக்கம் தீரவேண்டுமானால்விளையாடல் வேண்டும் என்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுமாறு அவர் வற்புறுத்தியதன் உண்மை விளங்கும்.

 

"பொய் உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ?

பூண விழைந்தேனோவான் காண விழைந்தேனோ?

மெய் உடையாய் நீ என்னோடு விளையாட விழைந்தேன்,

விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே,

பைஉடைப் பாம்பு அனையரொடும் ஆடுகின்றோய்! எனது

பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு உடையோய்! இன்னே

செய்உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய்!

சித்த சிகாமணியே! என் திருநட நாயகனே!"

 

என வள்ளல்பெருமான் பாடி அருளிய திருவருட்பாவை நோக்குகையில்விளையாட்டு என்பது ஞானம் (அறிவு) விளைவதற்காகவே ஆடப்படுவது என்பதை அறியலாம். ஞானம் என்பது அறியாமையை நீக்குவது. சிவபரம்பொருளின் கடவுள் தன்மையைத் தெளிவாக அறிந்துகொள்ளாதார்தாம் கொண்டுள்ள அறியாமை காரணமாக எழுப்பும் தடைகளுக்கு எல்லாம்சிவஞானம் பெற்ற மெய்யடியார் விடை இறுப்பதாக அமைத்துப் பாடியதன் மூலம்இறைவனது மெய்யருள் தன்மையை நாம் அறிந்துகொள்ள வகை செய்து அருளி இருக்கின்றார் மணிவாசகப் பெருமான் என்று அறிந்து கொள்ளலாம். இறைவனுடைய செயல்கள் எல்லாம் உயிர்கள் மீது வைத்த கருணை காரணமாகத்தான் என்பதை "திருச்சாழல்" என்னும் இப்பகுதியில் அருளிச் செய்து உள்ளார் மணிவாசகப் பெருமான்.

 

திருச்சாழல் என்னும் இத் திருப்பதிகத்தில் முதல் பாடலாக,

 

பூசுவதும் வெண்ணீறுபூண்பதுவும் பொங்கு அரவம்,

பேசுவதும் திருவாயால்மறைபோலும் காண்,ஏடீ!

பூசுவதும் பேசுவதும்பூண்பதுவும் கொண்டு என்னை?

ஈசன் அவன் எவ்வுயிர்க்கும்இயல்பு ஆனான் சாழலோ.

 

என்று அருளிச் செய்தார் மணிவாசகப் பெருமான். இப் பாடலின் முற்பகுதி வினா. பிற்பகுதி விடை.

 

இதன் பொருள் ---

 

தோழி ஒருத்தியின் வினா ---

 

ஏடீ --- ஏனடிஎனது தோழியேஈசன் --- உங்கள் இறைவன்பூசுவதும் வெண்ணீறு --- பூசிக்கொள்வதும் வெண்மையான நீறு (சாம்பல்)பூண்பதுவும் பொங்கு அரவம் --- அணியாக அணிந்துள்ளதும் சீறுகின்ற பாம்புதிருவாயால் பேசுவதும் மறை போலும் காண் --- அவனது திருவாயினால் சொல்லுவதும்விளங்காத சொற்களைப் போன்றவை என்பதை அறிவாயாக.

 

இதற்கு விடையாக வருவது ---

 

பூசுவதும் ---- பூசுகின்ற பொருளும்பேசுவதும் --- பேசுகின்ற சொற்களும்பூண்பதுவும் கொண்டு என்னை?--- அணிகின்ற ஆபரணங்களும் ஆகிய இவற்றால் என்ன குறை? (இவற்றை வைத்து மட்டுமே என் இறையவனை மதிப்பிடாதே)அவன் எவ்வுயிர்க்கும் இயல்பு ஆனான் --- அவன் எல்லா உயிர்க்கும்இயல்பாகவே இறைவனாய் இருக்கின்றான்.

 

புறத்தே காணப்படுவதை வைத்துக் கொண்டுஇவன் எப்படித் தலைவன் ஆவான் என்று வினவுகின்றாயேஇது உனது அறியமையைக் காட்டுகின்றது. உலகம் முழுதையும் படைத்துக் காத்து அழிக்கின்ற ஒப்பற்ற ஒருவன் இயல்பாகவே தலைவனாக உள்ளான். அவன் முயன்று தலைவனாகவில்லை.

 

உலக வழக்கில் கூ,ஒரு குழுவிற்கு அல்லது கூட்டத்திற்கு அல்லது நாட்டிற்கு ஒருவர் தலைவர் என்றால். அத் தலைமைப் பதவி அவருக்கு இருவகையில் கிட்டலாம். ஒன்றுஅவராக முனைந்து அனைவரையும் ஆட்படுத்திதலைமைப் பதவியை வென்று பெறுவது. இரண்டாவதுஅனைவரும் கூடித் தங்களுக்குத் தலைமை ஏற்கக்கூடிய தகுதி அவரிடத்தில் உண்டு என்பதை அறிந்துதலைமைப் பதவியை அவருக்குத் தருவது. 

 

அருளியல் நிலையில்இந்த இரண்டு வகையிலும் சேராத ஒரு தலைவன்தான் இறைவன். பிரபஞ்சத்திலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் மூலகாரணமாய் இருந்துஉயிர்களைப் படைத்துகாத்துஅழித்துஉயிர்களுக்கு இளைப்பாறுதலைத் தந்து அருள் புரிவதன் மூலம்உயிர்களுக்கு இயல்பாகவே தலைவன் ஆகின்றான் இறைவன். அவன் எதைப் பூசினால் என்னஎதை அணிந்துகொண்டால் என்ன?அவனது எளிமைப்பாடு உனக்கு விளங்கவில்லை. எதைப் பேசினால் என்னஅவன் பேசுவது ஒலிக் குறிப்புக்களாகவே உள்ளதால்,அவை உனக்கு விளங்கவில்லை. அது வெறும் ஒலிக் குறிப்பு அல்ல. அது உண்மைப் பொருளை உணர்த்துவது. அவனது புறத்தோற்றத்தை மட்டுமே வைத்து அவனை மதிப்பிடுதல் அறியாமையே.

 

எந்த ஒரு சமயச் சின்னத்தையும் அதன் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு,நமது எண்ணங்களை வெளிப்படுத்தி இகழ்தல் கூடாது. சின்னங்களை ஏன் தரித்துக் கொள்ளுகின்றார்கள் என்பதற்கு அவரவர் சமயத்தில் ஒரு விளக்கம் இருக்கும். அது அவர்களது நம்பிக்கையும் கூட. அதன் உட்பொருளை உள்வாங்குதல் வேண்டும். அவற்றை ஏளனமாக எண்ணுதல் கூடாது.

 

சைவ சமயத்தில் திருநீறும் கண்டிகையும் சின்னங்களாகப் போற்றப்படுகின்றன. கண்டிகையைப் பூணாதவர்கள் இருக்கலாம். தீருநீற்றைத் தரித்துக் கொள்ளாத சைவர்களைக் காணமுடியாது. திருநீற்றின் சிறப்பு குறித்துதிருஞானசம்பந்தப் பெருமான் ஒரு திருப்படிகம் பாடி உள்ளார். வள்ளல்பெருமான் இரண்டு திருப்பதிகங்களைப் பாடி உள்ளார். திருநீறு தரித்தல் இன்றியமையாத சின்னமாகும். திருநீறுபசுவின் சாணத்தை எரித்தபின்னர் கிடைப்பது. அடியவர்களின் வினையைச் சாம்பல் ஆக்கிப் பக்குவப்படுத்துவது திருநீற்றின் அடையாளம். "தொழுது எழுவார்வினைவளம் நீறு எழ நீறு அணிஅம்பலவன்" எனத் திருக்கோவையார் என்னும் எட்டாம் திருமுறை நூலில்,மணிவாசகர் பாடி உள்ளார். தன்னை வணங்குகின்றவர்களின் வினையானது பொடிப்பட்டுப் போகபெருமான் திருநீற்றை அணிந்து ஆடுகின்றான் என்கின்றார்.

"நீறு அணிந்தார் அகத்து இருளும்நிறை கங்குல் புறத்து இருளும்மாற வரும் திருப்பள்ளி எழுச்சி" என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். திருநீற்றை அணந்துகொள்வதுஉள்ளத்தலே உள்ள அறியாமையாகிய இருளானது நீங்கிஅருள் ஒளி நிரம்புவதற்காகவே என்பதைக் காட்ட இவ்வாறு பாடினார்.சிவனருள் வெளிப்பாட்டினால் ஆன்மாக்களின் அக இருளும்ஞாயிறு வெளிப்படுவதால்உலகில் சூழ்ந்துள்ளபுற இருளும் மாறும்படி வருகின்ற திருப்பள்ளி எழுச்சியாகிய வழிபாட்டுக்குரிய காலம் என்றார். எனவேதிருநீற்றின் பெருமையை அறியாதவர்கள்,பெருமான் பூசுவது வெண்மையான சாம்பல் தானே என்று எண்ணுவார்கள் என்பதை வெளிப்படுத்திக் காட்டினார்.

 

சிவபெருமான் பூண்பது பாம்பாக இருக்கலாம். இதற்கு ஒரு வரலாறு சொல்லப்படும். அதாவதுகாசிபர் கத்ரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள்மாற்றந் தாய் ஆன வினதையின் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்த போதுஅவற்றை அவர் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டார். பாம்பு கொடிய விடத்தை உடையது. "பாம்பொடு பழகேல்" என்றார் ஔவையார். பாம்புக்குப் பால் வார்த்தாலும்அது நஞ்சையே கக்கும். கொடிய பாம்புகளும்இறைவனை அடைந்தால்நல்ல தன்மையை அடையும் என்பது இதனால் விளங்கும். சிவபெருமான் திருமுடியில் திங்களும் பாம்பும் ஒரு சேர உள்ளதால்,அவை தமது பகைமை உணர்வை மறந்து உள்ளன. சேர்ந்த இடத்தின் சிறப்பு அது. "பாம்பொடு நிங்கள் பகை தீர்த்து ஆண்டாய்" என்பது அப்பர் தேவாரம்.

 

"பேசுவதும் திருவாயால் மறை போலும்" என்று ஒரு தோழி சொன்னாள். இதில் "திருவாயால்" என்பதில் இகழ்ச்சிக் குறிப்பு உள்ளது. இறைவனது தன்மையை அறியாதார் இவ்வாறு இகழ்வர். "மறை" என்றது மறைபொருளாக வாழ்வியல் உண்மைகளைக் கூறும் வேதங்களுக்குப் பெயர். வேதம் என்பது எழுதாக் கிளவி ஆகும். வாயால் சொல்லப்பட்டுகாதால் கேட்கப்பட்டுவந்ததால்வேதத்திற்கு "சுருதி" என்று ஒரு பெயர் உண்டு. அறியாதார்க்குஏதோ பொருள் விளங்காத ஒரு ஓசையாகவே அது தோன்றும். அறிந்தவர்க்கு அதன் உண்மை விளங்கும். குழந்தை பேசுகின்ற மழலை மொழிஅதன் தாய்க்கு நன்கு விளங்கும். நமக்குப் புரியாத ஒரு மொழியில் யாராவது பேசினால், "என்னவோ பேசுகின்றான்" என்றுதான் சொல்வோம். அந்த மொழி தெரிந்தவருக்குஎன்ன பேசப்பட்டது என்பது தெரியும். ஏனவே, "பேசுவதும் திருவாயால் மறை போலும்" என்றவளுக்குஅவன் எது பேசினால் என்னஅவன் இயல்பாகவே பெரியவன்எல்லா உயிர்க்கும் தலைவன் அவனே என்ற விடை தரப்பட்டது.

 

திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழியிலும், "சாழலே" என்னும் பகுதியில் திருமாலின் பெருமைகளை வைத்து வினாவிடையாக ஒரு திருப்பதிகம் அருளப்பட்டுள்ளது காண்க.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...