திருக்குறள்
பொருட்பால்
ஆ. அமைச்சியல்
அதிகாரம் 65 -- சொல்வன்மை
சொல் நிறைவேறும் வகையில் சொல்லும் வல்லமையைக் குறித்துச் சொன்னது.
முந்தைய அதிகாரத்தில், "தேர்ந்து செயலும், ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு" என்பதற்கேற்ப, இந்த அதிகாரம் அமைந்தது.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "நாவன்மை என்று சான்றோரால் சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையவராய் இருத்தல் இன்றியமையாதது. அது எவ்வகை நலத்திலும் அடங்குவதும் இல்லை; அதுவே எல்லாவற்றிலும் மிகுந்தது" என்கின்றார் நாயனார்.
இதற்குத் திருக்குறள்---
நா நலம் என்னும் நலன் உடைமை, அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
நாநலம் என்னும் நலன் உடைமை --- அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்;
அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.
('நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியாமையாததாயபின், அத் தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.)
இத் திருக்குறளுக்கு பின் வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....
மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்,
உகிர்வனப்பும், காதின் வனப்பும், - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும், வனப்புஅல்ல, நூற்குஇயைந்த
சொல்லின் வனப்பே வனப்பு. --- சிறுபஞ்சமூலம்.
இதன் பொருள் ---
மயிர் வனப்பும் – தலைமயிரால் உண்டாகும் அழகும், கண்கவரும் மார்பின் வனப்பும் - (கண்டவர்) கண்களைக் கவர்தற்குரிய மார்பினால் உண்டாகும் அழகும், உகிர் வனப்பும் - நகத்தால் உண்டாகும் அழகும், காதின் வனப்பும் - செவியினால் உண்டாகும் அழகும், செயிர் தீர்ந்த பல்லனி வனப்பும் - குற்றம் நீங்கின பல்லினால் உண்டாகும் அழகும், வனப்பு அல்ல - அழகல்ல, நூற்கு இயைந்த வனப்பே வனப்பு - நூல்கட்குப் பொருந்திய சொல்லினது அழகே அழகாகும்.
எத்துணைய ஆயினும் கல்வி இடம்அறிந்து
உய்த்து உணர்வு இல்எனின் இல்லாகும் - உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை இன்றுஎனின் என்ஆகும் அஃது உண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து. --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
கல்வி எத்துணைய ஆயினும் - கற்ற கல்வி எவ்வளவு பெரியனவானாலும், இடம் அறிந்து - நூலின் இடந்தெரிந்து, உய்த்து உணர்வு இல் எனின் - ஆராய்ந்து உணரும் உணர்ச்சி இல்லையானால், இல்லாகும் - அக் கல்வி பயனில்லை ஆகும், உய்த்து உணர்ந்தும் - அங்ஙனம் உய்த்து உணர்ந்தாலும், சொல்வன்மை இன்று எனின் என் ஆம் - பிறர்க்கு எடுத்துச் சொல்லும் வல்லமை இல்லையென்றால் அக் கல்வியால் என்ன பயனாகும்? அஃதுண்டேல் - அச்சொல்வன்மை இருக்குமானால், பொன்மலர் நாற்றம் உடைத்து - அது பொன்னால் செய்யப்பட்ட மலர் மணம் உடையது போலாகும்.
No comments:
Post a Comment