“உண்பொழுது நீராடி உண்டலும், என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும், - தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.” -- திரிகடுகம்.
விதித்த காலங்களில் நீராடக் கூடாமல் போனாலும், உண்ணும் பொழுதாயினும் நீராடுதல் இன்றியமையாதது என்பதால், உண்ணுதற்கு உரிய காலத்தில் குளித்து உண்ணுதலும்; எவ்வளவு பெரும் பயனை அடைவதாய் இருந்தாலும், ஒரு பக்கம் சார்ந்து பொய் சாட்சி சொல்லாமல் இருத்தலும்; உணவு இன்மையால் உடம்பு இளைத்து, அழிவதாய் இருந்தாலும், பல நற்குணங்களால் நிறைந்து அவற்றை ஆளுதல் குறையாமையும் ஆகிய இவை மூன்றும் மனம் மொழி மெய்களால் குற்றம் அற்றவர்களாய் இருக்கின்றோம் என்று கருதுவோருடைய செயல்கள் ஆகும்.
நீராடுவதனால் அழுக்கு முதலிய உடம்பின் குற்றம் நீங்குதலும், பால்பற்றிச் சொல்லாமையினால் பொய் முதலிய வாய்க்குற்றம் நீங்குதலும், சான்றாண்மை குன்றாமையினால் வஞ்சனை முதலிய மனக்குற்றம் நீங்குதலும் சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment