திருக்குறள்
பொருட்பால்
ஆ. அமைச்சியல்
அதிகாரம் 65 -- சொல்வன்மை
இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பெருக்கமும், அழிவும் தமது சொல்லினாலேயே வரும். ஆதலால், சொல்லினிடத்தில் சோர்வு உண்டாகாதபடி காத்துக்கொள்ள வேண்டும்" என்கின்றார் நாயனார்.
ஆக்கம் - மேன்மேல் உயர்தல். கேடு - கீழ்கீழ் தாழ்தல். சோர்வு - தளர்ச்சி.
ஆக்கத்திற்குக் காரணமாவது நற்சொல். கேட்டிற்குக் காரணமாவது தீச்சொல். சொல் என்னும் ஒப்புமை பற்றி இரண்டையும் ஒன்றாக வைத்து, "சொல்" என்றார்.
சொல்வன்மை இல்லாது ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லி, அதனிடத்து சோர்வு உண்டாகுமாயின், அதன் பயனாக சோர்வுபட்ட ஒருவனும், அவனைச் சார்ந்தவரும் தீமையை அடைதல் கூடும். எனவே, சொல்லில் சோர்வு கூடாது.
இதற்குத் திருக்குறள்---
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்,
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் --- தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்;
சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் --- அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க.
(ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின் சுட்டுப் பெயர் முன் வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
சிவனடி என்னும் அயன் சீர்பெறும் முன், பின்னர்ச்
சிவசமதை சொல்லலும் சீர்போம், --- எவரும்தம்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்,
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு.
முருகவேளின் சிறையில் இருந்து பிரமதேவனைச் சிவபெருமான் விடுதலை செய்வித்ததை எண்ணி, சீர் பெறும் என்றார். சீர் போம் என்றது தலைகளில் ஒன்றை இழந்ததைக் குறிக்கும். பிரமனது செருக்குச் சொல்லால் அவனது தலைகளில் ஒன்று போனது.
அடுத்து, அதே "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் மற்றொரு பாடல்...
பரமன் அருள் வேண்டிப் பகர்ந்த சுரர்ஆன
கரதூடணன் முதலோர் காதை --- வரவுஅறிவீர்,
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்,
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு.
செல்வமும் கேடும் சொல்லால் வருதலாலல் சொல் சோர்வு வராமல் காக்கவேண்டும். கரதூடணர்களைப் பற்றிய வரலாறு இது.
பஞ்சவடியில் தங்கியிருந்த இராமனைக் கண்ட சூர்ப்பனகைக்கு, இராமனை அடைய விருப்பம் உண்டானது. சூர்ப்பனகையின் விருப்பத்தை இராமன் மறுத்ததால், இலக்குவனிடம் தன் காதலை கூறினாள். சீதையின் பொருட்டு, இருவரும் தன் காதலை ஏற்கவில்லை எனக் கருதிய சூர்ப்பனகை, சீதையை விழுங்க முயற்சிக்கையில், இராமரின் ஆணைப்படி, இலக்குவன், சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் வாளால் வெட்டினார். இதனால் அவமானம் அடைந்த சூர்ப்பனகை, அவர்களைப் பழி தீர்க்க, இராவணனின் தம்பியர்களான கரன் மற்றும் தூஷணன் ஆகியவர்களிடம், சீதையைக் கவர்ந்து, இராமலக்குவணர்களை கொல்லத் தூண்டினாள். இராமலக்குவணர்களைக் கொல்ல பெரும்படையுடன் வந்த கரன், தூஷணன் ஆகிய அரக்கர்களை இராமர் கொன்றார். சூர்ப்பனகையிடத்து உண்டான சொல்லின் சோர்வால் இந்த அழிவு நேர்ந்த்து.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
நித்தியத்து வங்கேட்பான் நித்திரையென் றேமயக்கந்
துய்த்தனனாங் கும்பகன்னன், சோமேசா! - எத்திறத்தும்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு
இதன் பொருள்---
சோமேசா! ஆக்கமும் கேடும் - தம் அரசற்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள், அதனால் எத்திறத்தும் வருதலால் - தம் சொல்லான் எவ்வகையானும் வருமாகலான், சொல்லின்கண் சோர்வு - அப் பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை, காத்து ஓம்பல் - அமைச்சர் தம்மிடத்து நிகழாமல் போற்றிக் காக்க வேண்டும்,
கும்பகன்னன் - இராவணன் தம்பியாகிய கும்பகன்னன் என்பவன், நித்தியத்துவம் கேட்பான் - நித்தியத்துவம் கேட்கும்பொருட்டு வந்து, நித்திரை என்று - சொல் சோர்வால் நித்திரைத்துவம் என்று கேட்டு, மயக்கம் துய்த்தனன் - தூக்கத்தையே மிகுதியாக அனுபவித்தான் ஆகலான் என்றவாறு.
கும்பகர்ணன் நித்தியத்துவத்தை விரும்பிப் பிரமனை நோக்கித் தவம்புரிய, அது கண்டு தேவர்கள் அஞ்சிப் பிரமனை அடைந்து முறையிட, அவனுக்கு நித்தியத்துவம் அருளினால் தங்களுக்குக் கெடுதி உண்டாகுமென்று, கலைமகளை நோக்கி, அவன் நாவினின்று 'நித்திரைத்துவம்' கேட்கும்படி செய்ய ஏவிக் காட்சி தந்து, அவன் முன் நிற்ப, கலைமகள் உபாயத்தால், 'நித்தியத்துவம்' என்று கேட்பது ஒழிந்து 'நித்திரைத்துவம் வேண்டும்' என்று வரங்கேட்க, 'அது ஆகுக' என்று பிரமன் வரம் தந்து மறைந்தனன். அன்று தொட்டு கும்பகன்னன் நித்திரை மயக்கம் கொண்டான்.
இந்தப் படிக்கு நாமகளை
இசைவித்து அடவிஇருந் தவம்செய்
அந்தக் கும்ப கன்னனிடை
அமரர் சூழ அயன் வந்துஉன்
சிந்தைக்கினிய வரம் தருவென்
செப்பென்று உரைப்ப நாமகள்நா
உந்தத் துயில்வேண் டுவன்என்ன
உற்றாய்என்று அங்கு அயன் உரைத்தான்.
இது இராமாயணத்து உத்தரகாண்டத்து உள்ளது.
பினவரும் பாடல்கள் இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
சொற்சோர்வு படேல். --- ஆத்திசூடி.
இதன் பொருள் ---
சொல் - (நீ பிறரோடு பேசும்) சொற்களில், சோர்வு படேல் -குற்றம் உண்டாகப் பேசாதே
எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே;
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே;
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளா விடுதல் இனிது. --- இனியவை நாற்பது.
இதன் பொருள் ---
எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே - இரவுக் காலத்தில் வழி நடையை மேற்கொள்ளாது இருத்தல் மிகவும் இனிது; சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே - (பலவற்றைச் சொல்லுமிடத்து, ஒன்றிலும் சோர்வுபடாமல் சொல்வதன் மாட்சிமை இனிது: புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை கொள்ளா விடுதல் இனிது - வலியத் தாமாகவே வந்து பொருந்தி நட்புக் கொள்ளினும் ஒரு பொருளாக மதிக்கப்படாத கயவருடைய நட்பினைக் கொள்ளாது நீக்குதல் இனிது.
சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப. --- முதுமொழிக் காஞ்சி.
இதன் பொருள் ---
சொற்சோர்வு உடைமையின் - ஒருவன் சொல்லும் சொற்களில் தவறுதல் உடையனாதலால், எச் சோர்வும் - அவனிடத்துள்ள எல்லாத் தவறுகளையும், அறிப - அறிவர்.
ஒருவனிடத்தில் பலவித சோர்வுகள் உண்டு என்பதற்கு அவனுடைய சொற்சோர்வே அறிகுறி.
நல்லாவின் பாலில் நறுந்தேன்கலந்து என்னப் பன்னூல்
வல்லாரும் ஆகி, மதிநுட்பரும் ஆகி, சோர்வுஇல்
சொல்லால் அடையார் மனமுங்களி தூங்கச் சொல்லிப்
பல்லார் பிறர்சொற் பயனாய்ந்து கவர வல்லார். --- தி.வி. புராணம்.
இதன் பொருள் ---
நல் ஆவின் பாலில் நறுந்தேன் கலந்தென்ன - நல்ல பசுவின் பாலில் நறுந்தேன் கலந்தாற்போல, பல்நூல் வல்லாருமாகி மதிநுட்பருமாகி - பல நூல்களும் கற்று வல்ல செயற்கை அறிவுடையராய் அதனோடு இயற்கையாகிய நுண்ணறிவும் கலத்தல் உடையராய், சோர்வு இல் சொல்லால் - சோர்வில்லாத சொற்களால், அடையார் மனமும் களிதூங்கச் சொல்லி - பகைவர் மனமுங் களிப்படையுமாறு பேசி, பிறர் பல்லார் சொல் பயன் ஆய்ந்து கவர வல்லார் - பிறர் பலருங் கூறுஞ் சொற்களிலுள்ள குற்ற நோக்காது அவற்றின் பயனை மட்டும் ஆராய்ந்து கொள்ளுதலில் வல்லார்.
No comments:
Post a Comment