உய்த்துணர்வும் சொல்வன்மையும்
எத்துணைய ஆயினும் கல்வி இடம்அறிந்து
உய்த்து உணர்வு இல்எனின் இல்லாகும் - உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை இன்றுஎனின் என்ஆகும் அஃது உண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து. -- நீதிநெறி விளக்கம்.4
சொல்வன்மை எப்படி அமைதல் வேண்டும் என்பது குறித்து அடிகளார் கூறும் அறிவுரை.
இதன் பொருள் ---
கல்வி எத்துணைய ஆயினும் – ஒருவன் கற்ற கல்வி எவ்வளவு மிகுதியாய் இருந்தாலும், இடம் அறிந்து – தான் கற்ற நூல்களில் ஆழமாகப் பொதிந்து உள்ள நுட்மான கருத்துக்களைத் தெரிந்து,உய்த்து உணர்வு இல் எனின் - ஆராய்ந்து உணரும் உணர்ச்சி இல்லையானால், இல்லாகும் - அக் கல்வி பயனில்லை ஆகும். உய்த்து உணர்ந்தும் - அங்ஙனம் ஆராய்ந்து நுட்பமான பொருளைத் தெளிந்தாலும், சொல்வன்மை இன்று எனின் என் ஆம் – பிறர் உணருமாறு எடுத்து உரைக்கும் வல்லமை இல்லாமற்போனால், கற்ற கல்வியால் என்ன பயன் உண்டு? அஃது உண்டேல் - அச் சொல்வன்மை என்னும் ஆற்றல் ஒருவனுக்கு இருக்குமானால், பொன்மலர் நாற்றம் உடைத்து - அது பொன்னால் செய்யப்பட்ட மலர் ஒன்று நறுமணத்தையும் உடையது போல் ஆகும்.
“இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர், கற்றது
உணர விரித்து உரையாதார்.”
என்னும் திருவள்ளுவ நாயனாரின் பொய்யாமொழிக்கு விளக்கமாக அமைந்துள்ளது இப் பாடல் என்பதை அறிக. “தாம் கற்று வைத்த நூலைப் பிறர் அறியும் வண்ணம் விரித்துச் சொல்லமாட்டாதவர், கொத்தாக மலர்ந்து இருந்தும் மணம் இல்லாத மலரைப் போன்றவர்" என்கின்றார் நாயனார்.
அழகு பெற மலர்ந்து இருந்தும், மணம் இல்லாமையால், பிறர் விரும்பிச் சூடிக்கொள்ளுதல் இல்லாதது போல, நூலைக் கற்று இருந்தும் பிறர் விரும்பும்வண்ணம் சொல்லமாட்டாதவர் நன்கு மதிக்கப்படார் என்பது நாயனார் கருத்தும், அதை ஒட்டிய அடிகளார் கருத்தும் ஆகும்.
பின்வரும் பாடல்களின் கருத்தையும் இங்கு வைத்து உணர்தல் வேண்டும். கற்று அறிந்தவரின் கடமை குறித்து மிக அழகாக கூறப்பட்டு உள்ளது காண்க.
“நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும், நூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை, - நன்மொழியைச்
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும், இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்.“ --- திரிகடுகம்.
இதன் பொருள் ---
மொழி நோக்கிப் பொருள் கொளலும் - நூல்களின் சொற்களை ஆராய்ந்து நுட்பமாகிய பொருள்களைக் கொள்ளுதலும்; நூற்கு ஏலா வெண்மொழி வேண்டினும் சொல்லாமை - நூல்களுக்குத் தகாத பயனற்ற சொற்களை, பிறர் விரும்பினாலும், சொல்லாது ஒழிதலும்; நல்மொழியை சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் -(உயிர்க்கு உறுதி கொடுக்கும்) நல்ல சொற்களை, கீழ்க்குலம், ஆகாதவரிடத்துச் சொல்லுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், கற்று அறிந்தார் பூண்ட கடன் - பல நூல்களையும் படித்தறிந்தவர் மேற்கொண்ட கடமையாம்.
“செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பு அறுக்க கில்லாவாம் தேரை: - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.” --- நாலடியார்.
இதன் பொருள் ---
செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்பு அறுக்ககில்லாவாம் தேரை - நீர் நிறைந்த பெரிய குளத்தின்கண் உயிர் வாழ்ந்தாலும், தன்மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக்கொள்ளும் ஆற்றல் தவளைக்கு இல்லை. (அதுபோல) வழும்பு இல் சீர் நூல் கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது - பிழையற்ற சிறப்பினையுடைய மெய்ந்நூல்களைப் பயின்றாலும் நுட்பமான அறிவு சிறிதும் இல்லாதவர், தம்மை அதனால் மேம்படுத்திக் கொள்ளும் மாட்சிமை இல்லை.
“குலம் மிக உடையர் எழில் மிக உடையர்
குறைவு இல் செல்வமும் மிக உடையர்,
நலம் மிக உடையர் என்னினும் கல்வி
ஞானம் அற்பமும் இலாதவரை,
வலம் மிகு திகிரிச் செங்கையாய்! முருக்கின்
மணம் இலா மலர் என மதிப்பேன்,
சலம் மிகு புவியில் என்றனன் வாகைத்
தார் புனை தாரைமா வல்லான்.”. --- வில்லிபாரதம்.
இதன் பொருள் ---
வாகை தார் புனை - வெற்றிமாலையை அணியவல்ல, தாரை மா வல்லான் - தாரையை உடைய குதிரை ஒட்டும் தொழிலிலே வல்லவனான நகுலன், (கிருஷ்ணனை நோக்கி), வலம் மிகு - வெற்றி பொருந்திய, திகிரி செங்கையாய் – சக்கரப்படையைச் சிவந்த திருக் கைகளில் உடையவனே! சலம் மிகு புவியில் - நிலையாமை மிக்க இந்த உலகத்திலே, (ஒருவர்), குலம் மிக உடையர் - சிறந்த உயர் குடிப்பிறப்பினை உடையவர்: எழில் மிக உடையர் - மிக்க அழகினை உடையவர்: குறைவு இல் செல்வமும் மிக உடையவர் – குறைவு இல்லாத மிக்க செல்வமும் உடையவர்: நலம் மிக உடையர் - நற்காரியங்களை மிகுதியாக உடையவர்: என்னினும் - என்றாலும், கல்வி ஞானம் - கல்வியினாலாகிய அறிவு, அற்பமும் இலாதவரை - சிறிதும் இல்லாத மானுடரை, முருக்கின் மணம் இலா மலர் என - பலாச மரத்தின் வாசனை இல்லாத [பார்வைக்கு மாத்திரம் அழகாகத் தோன்றுகிற] மலர்போல, மதிப்பேன் --- எண்ணுவேன்.
மலருக்குச் சிறப்பு, மணத்தினால் ஆகும். அவ்வகை மணம் இல்லாது பார்வைக்குப் பகட்டான மலர் மதிப்பைப் பெறாதவாறுபோல, குலநலம் முதலியன இருந்தும் கல்வி அறிவில்லாதவர் மதிக்கப்பெறார் என்றது, “பொன்மலர் நாற்றம் உடைத்து” என்தற்கு ஏற்ப அமைந்துள்ளது அறிக.
No comments:
Post a Comment