065. சொல்வன்மை - 03. கேட்டார்ப் பிணிக்கும்

திருக்குறள்

பொருட்பால்

ஆ. அமைச்சியல்

அதிகாரம் 65 -- சொல்வன்மை


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "நட்பாய் ஏற்றுக் கொண்டவர் பின்னர் வேறுபடாமல் கட்டும் குணங்களை உடையதாய்ச் சொல்லுதலும், பகையாய் உள்ளவர் தமது பகைமை உணர்வை மறந்து நட்புக் கொள்ளும் வண்ணம் சொல்லப்படுவதுமே சொல் ஆகும்" என்கின்றார் நாயனார்.


சொற்களைச் சொல்லுங்கால் தவறுபடாது இருத்தலும், சுருக்கமாகச் சொல்லுதலும், விளங்கும்படிச் சொல்லுதலும், இனிமை உடையதாய் இருத்தலும், பெரும்பயன் தருதலும் ஆகிய குணங்களை உடையதாய் இருப்பின் கேட்பவர் இருந்து விரும்பிக் கேட்பார், கேட்க விருப்பம் அற்று இருந்தோரும் விரும்புவர்.


"சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்த்தல், ஓசை உடைமை, ஆழம் உடைத்து ஆதல், முறையின் வைப்பே, உலகம் மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே" என்னும் நன்னூல் சூத்திரப் பொருள் அறியத் தக்கது.


இதற்குத் திருக்குறள்---


கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்,  கேளாரும்

வேட்ப மொழிவது ஆம் சொல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் --- நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; 


கேளாரும் வேட்ப மொழிவது --- மற்றைப் பகையாய் ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே; 


சொல்லாம் --- அமைச்சர்க்குச் சொல்லாவது.


(அக்குணங்களாவன : வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வு உடையோர் கொள்பவற்றின் மேலும் நோக்கு உடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென் எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. இனிக் 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வினவியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர். 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.)


No comments:

உய்த்துணர்வும் சொல்வன்மையும்

உய்த்துணர்வும் சொல்வன்மையும் எத்துணைய ஆயினும் கல்வி இடம்அறிந்து உய்த்து உணர்வு இல்எனின் இல்லாகும் - உய்த்துணர்ந்தும் சொல்வன்மை இன்றுஎனின் என...