வயலூர் --- 0913. கடல்போல் கணைவிழி

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கடல்போல் கணைவிழி (வயலூர்)

 

முருகா!

மாதர் மயலால் உண்டாகும் துன்பம் தவிர அருள்.

 

 

தனனாத் தனதன தனனாத் தனதன

     தனனாத் தனதன ...... தனதான

 

 

கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்

     கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும்

 

கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை

     கடிபோற் பணியரை ...... யெனவாகும்

 

உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ

     ளுடையாற் கெறுவித ...... நடையாலும்

 

ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்

     ஒழியாத் துயரது ...... தவிரேனோ

 

குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி

     கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள்

 

கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்

     குடியேற் றியகுக ...... வுயர்தாழை

 

மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி

     வயலூர்ப் பதிதனி ...... லுறைவோனே

 

மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை

     மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

கடல்போல் கணைவிழி, சிலைபோல் பிறைநுதல்,

     கனிபோல் துகிர் இதழ், ...... எழில் ஆகும்

 

கரிபோல் கிரிமுலை, கொடிபோல் துடிஇடை,

     கடிபோல் பணி அரை ...... என ஆகும்

 

உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம், இவள்

     உடையால், கெறுவித ...... நடையாலும்,

 

ஒருநாள் பிரிவதும் அரிதாய்ச் சுழல்படும்

     ஒழியாத் துயர் அது ...... தவிரேனோ?

 

குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள், நரி,

     கொளிவாய், பல அல ...... கைகள், பேய்கள்,

 

கொலை போர்க்களம் மிசை தினம் ஏற்று, மரர்கள்

     குடி ஏற்றிய குக! ...... உயர்தாழை

 

மடல் கீற்றினில் எழு விரை பூப் பொழில் செறி,

     வயலூர்ப் பதிதனில் ...... உறைவோனே!

 

மலைமேல் குடி உறை கொடு வேட்டுவர் உடை

     மகள் மேல் ப்ரியம் உள ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

      குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் --- போர்க்களத்தில் மடிந்துள்ள அரக்கர்களின் உடல்களில் இருந்து குடலை இழுத்து,

 

     காக்கைகள் நரி --- காக்கைகளும், நரிகளும்,

 

     கொளிவாய்ப் பல அலகைகள் --- கொள்ளிவாய்ப் பிசாசுகளும்,

 

     பேய்கள் --- பேய்களும்,

 

     கொலை போரக்களம் மிசை தினம் ஏற்று --- கொல்லுதலை உடைய போர்க்களத்தில் நாள்தோறும் ஏற்று உண்ண,

        

     அமரர்கள் குடி ஏற்றிய குக --- தேவர்களை அவர்களது பொன் நாட்டில் மீண்டும் குடிபுகும்படியாக அருள் புரிந்த குகப் பெருமானே!

 

     உயர்தாழை மடல் கீற்றினில் எழு விரை பூப்பொழில் செறி வயலூர்ப் பதி தனில் உறைவோனே --- உயர்ந்த தாழையின் மடல் கீற்றினில் உண்டாகின்ற நறுமணமானது நிறைந்துள்ள பூஞ்சோலைகள் மிகுந்த வயலூரில் வாழ்பவரே!

 

      மலை மேல் குடி உறை --- வள்ளிமலையின் மேல் வாழ்ந்துகொண்டு இருந்,

 

     கொடு வேட்டுவருடை மகள் மேல் --- கொடிய வேடர்களின் மகளாக வளர்ந்து இருந்த வள்ளிநாயகியின் மீது,

 

     ப்ரியம் உ(ள்)ள பெருமாளே --- அன்பு கொண்ட பெருமையில் மிக்கவரே!

 

      கடல்போல் கணைவிழி --- கடல் போன்று ஆழம் மிக்கதாகவும், அம்பைப் போலக் கூர்மை உடையதாகவும் உள்ள கண்கள்;

 

     சிலைபோல் பிறைநுதல் --- வில்லைப் போன்றும், பிறைச் சந்திரனைப் போன்றும் வளைந்துள்ள நெற்றி;

 

      கனிபோல் துகிர் இதழ் --- கொவ்வைக் கனி போலவும், பவளம் போலவும் உள்ள வாயிதழ்;

 

     எழில் ஆகும் கரிபோல் கிரி முலை --- அழகு பொருந்திய யானையைப் போலவும், மலையைப் போலவும் பருத்து உள்ள முலைகள்,

 

      கொடிபோல் துடி இடை --- கொடியைப் போன்றும், உடுக்கையைப் போன்றும் உள்ள இடுப்பு;

 

     கடிபோல் பணி அரை என ஆகும் --- காவலாகவும், பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறி என்று உவமானம் சொல்லத்தக்க,

 

      உடல் காட்டு இனிமையில் --- இனிமையாக உடலைக் காட்டுகின்,

 

     எழில் பாத்திரம் இவள் --- அழகுக்குக் கொள்கலமாக உள்ளவள் இவள் என்று கூறும்படி,

 

     உடையால் --- உடையாலும்,

 

     கெறுவித நடையாலும் --- செருக்கான நடையாலும், (மயக்கம் கொண்டு)

 

     ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் --- (இவளை விட்டு) ஒரு நாள் கூடப் பிரிந்து இருப்பது அரிது என்னும்படியாக மனம் சுழன்று,

 

     ஒழியாத் துயர் அது தவிரேனோ --- படுகின்ற நீங்காத துன்பத்தை அடியேன் தவிரமாட்டேனோ?

 

பொழிப்புரை

 

     போர்க்களத்தில் மடிந்துள்ள அரக்கர்களின் உடல்களில் இருந்து குடலை இழுத்து காக்கைகளும், நரிகளும், கொள்ளிவாய்ப் பிசாசுகளும், பேய்களும், கொல்லுதலை உடைய போர்க்களத்தில் நாள்தோறும் ஏற்று உண்ண, தேவர்களை அவர்களது பொன் நாட்டில் மீண்டும் குடிபுகும்படியாக அருள் புரிந்த குகப் பெருமானே!

 

     உயர்ந்த தாழையின் மடல் கீற்றினில் உண்டாகின்ற நறுமணமானது நிறைந்துள்ள பூஞ்சோலைகள் மிகுந்த வயலூரில் வாழ்பவரே!

 

         வள்ளிமலையின் மேல் வாழ்ந்துகொண்டு இருந், கொடிய வேடர்களின் மகளாக வளர்ந்து இருந்த வள்ளிநாயகியின் மீது அன்பு கொண்ட பெருமையில் மிக்கவரே!

 

         கடல் போன்று ஆழம் மிக்கதாகவும், அம்பைப் போலக் கூர்மை உடையதாகவும் உள்ள கண்கள்; வில்லைப் போன்றும், பிறைச் சந்திரனைப் போன்றும் வளைந்துள்ள நெற்றி; கொவ்வைக் கனி போலவும், பவளம் போலவும் உள்ள வாயிதழ்; அழகு பொருந்திய யானையைப் போலவும், மலையைப் போலவும் பருத்து உள்ள முலைகள்; கொடியைப் போன்றும், உடுக்கையைப் போன்றும் உள்ள இடுப்பு; காவலாகவும், பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறி என்று உவமானம் சொல்லத்தக்க, இனிமையாக உடலைக் காட்டுகின், அழகுக்குக் கொள்கலமாக உள்ளவள் இவள் என்று கூறும்படி, அவளது உடையாலும், செருக்கான நடையாலும், அறிவு மயக்கம் கொண்டு, இவளை விட்டு ஒரு நாள் கூடப் பிரிந்து இருப்பது அரிது என்னும்படியாக மனம் சுழன்று, அதனால் படுகின்ற நீங்காத துன்பத்தை அடியேன் தவிரமாட்டேனோ?

 

 

விரிவுரை

 

கடல்போல் கணைவிழி ---

 

கடலின் ஆழத்தைக் கண்டு அறியமுடியாது என்கின்றபடி, மாதரின் உள்ளக் கிடக்கையையும் யாராலும் அறிந்து கொள்ள முடியாது. உள்ளத்தில் உள்ளதைக் காட்டுவது கண். "அடுத்தது காட்டு பளிங்கு போல், நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

அத்தியின் மலரும், வெள்ளை

     யாக்கைகொள் காக்கைதானும்,

பித்தர்தம் மனமும், நீரில்

     பிறந்த மீன் பாதம் தானும்,

அத்தன் மால் பிரம தேவ

     னால் அளவிடப் பட்டாலும்,

சித்திர விழியார் நெஞ்சம்

     தெரிந்தவர் இல்லை கண்டீர்.

 

என்பது விவேக சிந்தாமணி.

 

     அத்தி மரத்தினுடைய மலர், வெண்ணிறம் பொருந்திய காக்கை, பித்துப் பிடித்தவனின் மனக்கருத்து, நீரில் பிறந்த மீனின் பாதம் ஆகிய இவைகளை எமது அத்தனாகிய சிவபெருமான், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளாலும் ஒருக்கால் அளவிடப்பட்டாலும், சித்திரப் பாவையைப் போலும் கண்களை உடைய பெண்களின் மனக்கருத்தை அறிந்து சொல்ல அந்த மும்மூர்த்திகளுள்ளும் யாரும் இல்லை. பெண்களின் நெஞ்ச ஆழத்தை யாராலும் அளவிட்டு அறிய முடியாது.

 

சிலைபோல் பிறைநுதல் ---

 

சிலை --- வில்.  

 

கனிபோல் துகிர் இதழ் ---

 

துகிர் - பவளம்.

 

கடிபோல் பணி அரை ---

 

கடி --- காவல்.

 

பணி --- பாம்பு.

 

அரை என்பது இடுப்பு. இங்கே மறைவாகவும், பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறியைக் குறித்தது.

 

உயர்தாழை மடல் கீற்றினில் எழு விரை பூப்பொழில் செறி வயலூர்ப் பதி தனில் உறைவோனே ---

 

வயலூர் என்னும் திருத்தலத்தின் இயற்கை எழிலை அடிகளார் காட்டினார்.

 

வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி, திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன், வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும் சோழர் காலத்திய கல்வெட்டுகள் திருகோவிலின் பழமைக்கு சான்றாகும். முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.

 

வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால், அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.

 

வயலூரில் எம்பெருமான் மிகவும் வரதராக விளங்கி, வேண்டுவார் வேண்டுவன யாவும் வெறாது உதவுவார்.

 

கருத்துரை

 

முருகா! மாதர் மயலால் உண்டாகும் துன்பம் தவிர அருள்.

 


கீழோர் செவியில் அறவுரை ஏறாது

 

 

                                              கீழோர் செவியில்  அறிவுரை ஏறாது
                                                                     ----

கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்

தன்ம நூல் புக்காலும் தங்காதே---சன்மம் எலும்பு

உண்டு சமிக்கும் நாய், ஊண் ஆவின் நெய்யதனை

உண்டு சமிக்குமோ? ஓது.

நீதி வெண்பா என்னும் நூலில் வரும் இப் பாடலின் பொருள்....

தோலையும் எலும்பையும் உண்டு பசியாறுகின்ற நாயானது, பசு நெய் கலந்த நல்ல உணவினை உண்டு அமையுமோ? நீ சொல். அது போலவே, தீவினையே மிகுந்து, அதன் பயனால் உருவான உடம்பை உடைய கீழ்மக்களின் செவியில் அறநூல் கருத்துக்களை எடுத்துப் புகட்டினாலும் அவர்களிடத்தில் அக் கருத்து தங்குமோ? தங்காது.

கன்மம் --- வினை. இங்குத் தீவினை என்னும் பாவத்தைக் குறித்தது. பூரித்த --- மிகுந்த. தன்ம நூல் --- அறநூல். சன்மம் --- தோல். வடமொழியில் சருமம் எனப்படும். சமிக்கும் --- பசியாறும்.

கெடுவது காட்டும் குறிகள்

 

கெடுவது காட்டும் குறிகள்

----

 

நட்புப் பிரித்தல், பகைநட்டல், ஒற்று இகழ்தல்,

பக்கத்தார் யாரையும் ஐயுறுதல், - தக்கார்

நெடுமொழி கோறல், குணம்பிறிது ஆதல்,

கெடுவது காட்டும் குறி.

 

            ஒருவன், பின்னாளில் கெட்டுப் போவான் என்பதை முன்னே அறிவிக்கும் ஆறு வகையான அடையாளங்கள் பற்றி, குமரகுருபர அடிகள், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில், மேல் குறித்த பாட்டில் கூறி அருளுகின்றார்.

 

இதன் பொருள் ---

 

            (1) நட்புப் பிரித்தல் --- பழமையான நண்பரைப் பிரியும்படி செய்து, பகைவர் ஆக்கிக் கொள்ளுதல், (நண்பர்களாக இருப்பவரைப் பிரித்து, அவர்க்குள் பகைமை உண்டாக்குதல்)

 

            (2) பகை நட்டல் --- (நெடுங்காலம்) பகைவராக உள்ளவரை நண்பர் ஆக்கிக் கொள்ளுதல்,

 

            (3) ஒற்று இகழ்தல் --- (பகைவர், அயலவர், நட்பினர் ஆகிய மூவரிடத்தும் நிகழும்) நன்மை தீமைகளை அறிந்து சொல்லுகின்ற நல்லோரை இகழ்தல்.

 

            (4) பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் --- தன் பக்கத்தில் உள்ளவர் யாரையும் சந்தேகத்தோடு பார்த்தல், அணுகுதல்.

 

            (5) தக்கார் நெடுமொழி கோறல் --- தக்க சான்றோர் கூறும் அறிவுரைகளை இகழ்ந்து கேளாது ஒழிதல், மீறுதல், அலட்சியம் பண்ணுதல்.

 

            (6) குணம் பிறிது ஆதல் --- தனது இயல்பான நல்ல குணத்தில் மாறுபடுதல்.

 

            (ஆகிய இந்த ஆறு குணங்களும், ஒருவன்) கெடுவது காட்டும் குறி --- இனிக் கெட்டு அழியப் போவதைக் காட்டுகின்ற குறிகள் (அடையாளங்கள்) ஆகும்.

விளக்கம்

            "நட்பிடைக் குய்யம் வைத்தான்" என்று பின்னால் வரும் பாடலில் அடிகளார் குறிப்பிடுவார். நண்பர்களிடையே வஞ்சகம் கொள்ளுதல் தவறு. ஒருவருக்கொருவர் நன்மை கருதி வாழ்தல், தவறு கண்டபோது இடித்துக் கூறித் திருத்துதல், துன்பத்தில் பங்கு கொள்ளுதல் என்பவை நட்புக்கு இலக்கணம். சிரித்துப் பேசிப் பழகி, நன்மை வந்தபோதெல்லாம் உடன் இருந்து, கொஞ்சிக் குலாவி, இடுக்கண் வந்தபோது நீங்குகின்றவர் நண்பர் ஆகார். நண்பர்களாக இருப்பவரைப் பிரித்து, அவர்களுக்குள் பகைமையை உண்டாக்குதலும் கூடாது. நண்பராகப் பழகிய ஒருவரைப் பகைவர் ஆக்கிக் கொள்ளவும் கூடாது. பிடிக்கவில்லையானால், சொல்லாமல், கொள்ளாமல், ஒதுங்கிப் போய்விட வேண்டும். "நட்புப் பிரித்தல்" கூடாது. அது, கேட்டினைத் தரும் என்றார்.

 

            "சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வோர் புல்லர்" என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல். கீழோரின் துற்புத்தியைக் கேட்டு, ஆராயமல் நட்பை இகழ்பவர்கள் அற்பர்கள் ஆவர். இவர்களைக் "குண்டர்கள்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். "தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள்" என்பார் வல்லக்கோட்டைத் திருப்புகழில்.

 

            குண்டன் என்னும் சொல்லுக்கு, கணவனைப் பிழைத்து, சோர நாயகனுக்குப் பிறந்தவன் என்று பொருள். மனத்தினால் பிழைத்தவள் வயிற்றில் பிறந்தவனுக்கு நற்குணங்கள் அமையாது. ஒருவனிடம் நட்புக் கொண்டு, பழகிய பின்னர், அந்த நண்பனுக்குத் தீங்கு செய்தல் கூடாது. மித்திரத் துரோகம் மிகப் பொல்லாதது. சலம் - வஞ்சகம், துரோகம்.

            ஏதோ ஒரு காரணம் கருதி, நல்லோரைப் பகைத்துக் கொள்ளுபவர்களும் உண்டு. அது மிக்க தீமையைத் தரும். "பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே, நல்லார் தொடர்கை விடல்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க. மேலோராகிய சான்றோரின் தொடர்பை விடுவதானது, பலருடைய பகையைக் கொள்வதைக் காட்டிலும், பத்து மடங்கு தீமையை உடையது என்கின்றார் நாயனார்.


    ஏதோ ஒரு நன்மை கருதி,  நெடுங்காலம் பகைவராக உள்ளவரை நண்பர் ஆக்கிக் கொள்ளுதலும் கூடாது. "இவ்வளவு காலம் பகைமை பாராட்டியவன், இப்பொழுது ஏன் நட்பு பாராட்டுகின்றான்" என்று எண்ணி, காலம் வரும்போது, தனது பழைய பகைமையைத் தீர்த்துக் கொள்ள அது வழிவகுக்கும். எனவே, "பகை நட்டல்" என்பது கேட்டினைத் தரும் என்றார். "பகை நட்பாம் காலம் வருங்கால், முகம் நட்டு, அகம் நட்பு ஒரீஇ விடல்" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியது காண, பகைவனாக இருந்த ஒருவன், தம்மிடம் நட்புக் கொள்ளும் சமயம் வரும்போது, முகத்தால் நேசித்து, உள்ளத்தால் கொள்ளும் நட்பினை நீக்கி விடுதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

    ஒற்று இகழ்தல் என்பது பெரும்பாலும் அரசர்க்குக் கூறியது ஆகும். என்றாலும்,  நம்மிடத்தில் அன்பு பூண்ட ஒருவர், நமது நலம் விரும்பியாக உள்ள ஒருவர், நமக்கு நண்பராக உள்ளவர், அயலவர், பகைவர் ஆகிய மூவரிடத்திலும் உண்டாகும் நன்மை தீமைகள் அவ்வபோது நமக்கு எடுத்துக் கூறி நல்வழிப் படுத்துகின்றவர் உண்டு. அத்தகையோர் கூறும் மொழிகளை இகழ்வதால் கேடு உண்டாகும்.

    பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் --- தமது பக்கத்தில் உள்ள எல்லோரையும் எல்லாக் காலத்திலும் சந்தேகிக்கக் கூடாது. "தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார். ஆராயாமல் ஒருவனிடத்துத் தெளிவு கொள்ளுதலும், தெளிந்த ஒருவனிடத்தில் ஆராயாமல் ஐயம் கொள்ளுதலும், தீராத துன்பத்தையே தரும்.

    தக்கார் நெடுமொழி கோறல் --- கோறல் என்னும் சொல்லுக்கு, இகழ்தல், கேளாது ஒழிதல், மீறுதல், அலட்சியம் பண்ணுதல் எனப் பல பொருள் உள்ளது. தக்கார் என்றது தகுதி உள்ள சான்றோரை. சான்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது போல, அவரொடு வஞ்சகமாக இருந்து, நன்மைகளைத் துய்த்துவிட்டு, அதன் பின் அவரோடு மாறுபாடு கொண்டு, பிறர் முன்னிலையில் இகழ்ந்து பேசுதல். இது இக்காலத்தில் வாலாயமாகக் காணப்படுவது. தக்கோராக இருந்தாலும், தனக்கு ஏற்றது போல், தனது கருத்துக்கு இசைவாக ஏதும் கூறாமல் மாறுபட்டால், அவரைத் தூக்கி ஏறிந்து, தூற்றுவது அனுபவத்தால் அறியப்படும். இது பெரியாரைப் பிழைத்தல் ஆகும். "எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார் பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்" என்று திருவள்ளுவ நாயனார் கூறுகின்றார். நெருப்பினால் சுடப்பட்டாலும் கூட ஒருவகையில் உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், பெரியார் ஒருவரிடத்தல் பிழை செய்தவன் தப்பிப் பிழைக்கமாட்டான் என்கின்றார் நாயனார்.

    குணம் பிறிது ஆதல் --- தீய எண்ணங்கள் மனதில் உதிக்க உதிக்க, தீய குணங்கள் தொற்றிக் கொள்ளும். இதுவரையில் அந்நியமாக இருந்த குணங்களைக் கொள்ளும் நிலை உண்டாகும். சூதாடுதல், கள்ளுண்ணல், துரோகம், பொறாமை, நன்றி மறத்தல், இன்ன பிற விரும்பத் தகாத குணங்களைக் கைக்கொள்ளுதல். சுருங்கச் சொன்னால், அறநெறிக்கு மாறாக நடத்தல்.

    "கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே" என்னும் முதுமொழியை இங்கே நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

    மேலே குறித்த ஆறு குணங்களும் ஒருவனிடத்தில் பொருந்தி இருக்குமாயின், அவன் நிச்சயம் கெட்டுப் போவான் என்பதை, மகாபாரதத்தில் துரியோதனனைக் கொண்டு அறியலாம். அவனது செயல்கள், இந்தப் பாட்டில் அடிகளார் கூறியுள்ளதற்கு இலக்கியமாக அமைந்துள்ளன. அவன் பாண்டவரைப் பகைத்துக் கொண்டான். சகுனி முதலான தீயவரோடு நட்புப் பூண்டு இருந்தான். அசுவத்தாமன் முதலானோரை ஐயப்பட்டான். பீஷ்மர், விதுரர், கண்ணன், தருமன் முதலானோர் கூறிய உறுதிமொழிகளைக் கேளாது ஒழிந்தான். நல்லோர் யாரும் விரும்பத் தகாத தீய குணங்களில் அவன் தலை நின்றான். பாஞ்சாலியை அரசவையில் மானபங்கம் செய்தான். அவனது இச்செயல்கள் யாவும், அவனது அழிவுக்குக் காரணமாக அமைந்தன.


சமயப் பூசல் கூடாது.

 

 

சமயப் பூசல் சமயத்துக்கு உதவாது

-----

 

     சமயங்களுக்கு இடையில் பூசல். சமயங்களில் கொள்கைப் பூசல். அவரவர் தாம் கருதியதே சரி என்று கொண்டாடி, தமக்கென்று ஒரு கும்பலைச் சேர்த்துக் கொண்டதால், சமயங்களில் உட்பிரிவுகள் தோன்றின. சமயப் பூசல்களால், மனிதகுலம் இதுவரையில் பட்டபாடு சொல்லிமுடியாது. சமயக் கருத்தையும், கடவுள் உண்மையையும் தெளிந்து கொள்ளாத சமயிகளால் உண்டான இந்த ஊறு இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டே உள்ளது.

 

அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்,

          ஆனந்த பூர்த்தியாகி,

     அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குளே

          அகிலாண்ட கோடியெல்லாம்

தங்கும் படிக்குஇச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த்

         தழைத்ததுஎது? மனவாக்கினில்

     தட்டாமல் நின்றதுஎது? சமய கோடிகள் எ(ல்)லாம்

          தம்தெய்வம் எம்தெய்வம் என்று

எங்கும் தொடர்ந்துஎதிர் வழக்குஇடவும் நின்றதுஎது?

          எங்கணும் பெருவழக்காய்

     யாதினும் வல்ல ஒரு சித்தாகி, இன்பமாய்

          என்றைக்கும் உள்ளதுஎது? மேல்

கங்குல்பகல் அறநின்ற எல்லை உளதுஎது, அது

          கருத்திற்கு இசைந்தது, அதுவே

     கண்டன எலாம் மோன உருவெளி அது ஆகவும்

          கருதி அஞ்சலி செய்குவாம்.

 

     இது தாயுமான அடிகளார் அருளிய பாடல். எல்லாப் பொருள்களிலும், எங்கும் நீக்கம் அற நிறைந்து இருக்கின்ற பரம்பொருளின் தன்மைகளை இந்தப் பாடலில் விரித்துக் கூறுகின்றார்.

 

        இதன் பொருள் ---

 

      வெளிப்பட்டும் மறைந்தும் உள்ளதாகிய அண்டங்களுள், தொலைவில் உள்ளவை, நிலவுலகம், கீழுலகம் ஆகிய அண்மையில் உள்ளவை என்று சுட்டிக் கூறி அறியமுடியாதபடி, எவ்விடத்திலும் பேரொளியாய், முழுநிறை இன்பமாகி, தனது அறிவு ஆற்றலொடு பிரிப்பு இல்லாமல் நிறைவாய் உள்ளது எந்தப் பொருளோ? தன்னுடைய அருள் வெளியிலே, எல்லா உலகங்களும், நிலைக்குமாறு பெருங்கருணை வைத்து, உயிருக்குள் உணர்வாகி விரிந்து இருப்பது எந்தப் பொருளோ? மனத்தால் நினைப்பற்கும், வாயால் சொல்வற்கும் எட்டாமல் நிலைபெற்று உள்ளது எந்தப் பொருளோ? பல்வேறு சமயங்களும் எம்முடைய தெய்வம், எம்முடைய தெய்வம் என்று, எவ்விடங்களிலும் எப்போதும் விடாது நின்று வழக்கிடும்படியாக அவரவர் கற்பித்துக் கொண்ட தெய்வமாக நின்றது எந்தப் பொருளோ? இம்முறையாக எவ்விடத்தும், முடிவு பெறாத பெரிய வழக்காகி, எத்தொழிலும் வல்லதும், தானே தனக்கு நிகராய் விளங்குகின்ற ஒப்பற்ற  பேரறிவுப் பொருளாக, பேரின்பப் பெருவடிவாக, எக்காலத்தும் ஒன்றாய், மாறா இயல்பாய் இருப்பது எந்தப் பொருளோ? பின்னும், இரவு பகல் அல்லாது (நினைப்பு மறப்பு, இன்பம் துன்பம், பிறப்பு இறப்பு என்ற எல்லா நிலைகளையும் கடந்து) நின்ற ஓரிடத்தினை வாய்ந்தது எந்தப் பொருளோ? அந்தப் பொருளே எல்லாருடைய கருத்திற்கும் இசைவாக உள்ளது. ஆதலால் அப் பரம்பொருளையே, காணப்பட்ட பூதங்களும், பூதத் தொடர்புகளாகவும், மௌன வடிவமான வெளியீடாகவும் தியானித்து நாம் கைகூப்பி வணங்குவாம்.

 

     பள்ளிக்குச் சென்று படிநிலையிலே நின்று அறிவைப் பெற்றுப் பெருக்கிக் கொள்வது போல, பரம்பொருளின் நிறைவான தன்மையை உணர்ந்து, அந்த உணர்விலேயே திளைத்து, நுண்ணுர்வு பெற்று இருப்பதற்கான வழியாக, ஆங்காங்கே சமய நெறிகள் உண்டாயின. நாமம் (NAME) ரூபம் (FORM) இல்லாத கடவுளை, ஒரு குறியில் வைத்து வழிபடுவதற்காக, சமய நெறிகள் வகுக்கப்பட்டன.

 

     அவ்வாறு வகுக்கப்பட்ட, அறுவகைச் சமயங்களும் இறைவனை அடைதற்கு வகுக்கப்பட்ட நெறிகளே. அவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து தெளியாது, சமய நெறிகளுக்கு உரை சொல்லுகின்ற அறிவற்றவர்கள், அவரவர் உணர்ந்தபடியே, சமய நெறிகளில் நல்லது இது, தீயது இது என்று, சொல்லித் திரிகின்றனர். இவர்களைப் பார்த்து,

 

ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள

என்றது போல இருமுச் சமயமும்;

நன்றுஇது தீதுஇது என்று உரையாளர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

 

என்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நயானார்.

 

     சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும், கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. நாம் கூறும் இதுவே நன்று, பிறர் கூறும் இது தீது என்று இங்ஙனம் தம்முள் பிணங்குகின்ற சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

 

     எல்லாச் சமயங்களும், மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு, மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே"  என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், 'ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள' என்றார்.

 

     அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத்தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார். மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன?. குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன. தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

 

சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்

 

என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது இதன் பொருள்.

 

     சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

 

     இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதனால்தான் "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

 

     கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும் பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.

 

"பித்தர்குணம் அதுபோல, ஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

 

     சரயு நதியின் அழகைப் பாடவந்த கம்பர், மேற்குறித்த திருமந்திரப் பாடலின் கருத்தை வைத்துப் பின்வருமாறு பாடியுள்ளார்.

 

கல் இடைப் பிறந்து போந்து

    கடல் இடைக் கலந்த நீத்தம்

எல்லை இல் மறைகளாலும் இயம்பு

    அரும் பொருள் இது என்னத்

தொல்லையின் ஒன்றே ஆகித்

    துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்

பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்

    போல் பரந்தது அன்றே.    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

     இமய மலையில் தோன்றி, அங்கிருந்து வந்து, கடலிலே கலந்துவிட்ட சரயு நதியின் வெள்ளமானது, அளவிட முடியாத வேதங்களாலும் சொல்லுதற்கரிய பரம்பொருள் போன்றது  இந்த வெள்ளம்  என்று சொல்லும்படியாக, ஆதிமுதலில் ஒன்றாகவே  இருந்து, ஏரி குளம் முதலிய வேவ்வேறு இடங்களில் எல்லாம்; விரிந்த ஆராய்ச்சியுடைய  பல்வேறு சமயவாதிகள் விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போலப் பரந்து ஓடியது.

 

     பரம்பொருள் ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப்   பரம்பொருளும் வெவ்வேறு நாம,  ரூப பேதங்களாக  விளங்குகிறது.  அதுபோலவே சரயுவின் வெள்ளநீரும் ஏரி,  குளம்,  கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கிறது.

 

     தாயுமான அடிகளாரும், இக் கருத்தையே வலியுறுத்திப் பாடுகின்றார்...

 

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,

     விளங்கு பரம்பொருளே! நின் விளையாட்டு அல்லால்,

மாறுபடும் கருத்து இல்லை, முடிவில் மோன

     வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா.

 

இதன் பொருள் ---

 

     ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பலவகைச் சமயங்கள் அனைத்தினையும் புகுந்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, அனைத்திற்கும் மேலாகத் திகழும் தனிமுதற்பொருளே!  உன்னுடைய திருவிளையாடலே அல்லாமல் மாறுபாடு எய்தும் கருத்துகள் இல்லையாகும். பல ஆறுகளின் வெள்ளமானது, கடலில் கலந்த போது, கடல் நீரில் உள்ளது எந்த ஆறு என்று பகுத்து அறியமுடியாதவாறு போல முடிவில்லாத மவுனப் பெருங்கடலில், எல்லாச் சமயங்களும் கலந்து வேறுபாடு இன்றி, சமரசம் உற்று விளங்குகின்றன.

 

     எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்ப மதித்தல் வேண்டும் என அறுவுறுத்தி உள்ளார்கள். "ஆறு அனைத்தும் புகும் கடல்போல் சமய கோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே" என்று தாயுமான அடிகளார் வேறு ஒரு பாடலிலும் காட்டி உள்ளார்.

 

இவ்வுண்மையை வள்ளல்பெருமானும்,  

                       

பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்

     புகுந்து கலந்திட, நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே! எங்கும்

     கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர்

தங்க நிழல் பரப்பி,மயல் சோடை எல்லாம்

     தணிக்கின்ற தருவே! பூந் தடமே! ஞானச்

செங்குமுதம் மலரவரு மதியே! எல்லாம்

     செய்யவல்ல கடவுளே! தேவ தேவே!

 

என்று அருளிச் செய்தார்.

 

     முன்னர் குறிப்பிட்டது போல, சமயங்களின் உண்மையைத் தெளிந்து அறிந்து கொள்ளமாலேயே, அவைகளுக்கு இடையில் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிணங்குவதே, சமயவாதிகளின் போக்காக உள்ளது என்பதை, அருணகிரிநாதப் பெருமானும்,     

"கலகல கல என, கண்ட பேரொடு  சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்" என்றும், "சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள், சமய பஞ்ச பாதகர்" என்றும் தமது அருளிச் செயலாகிய திருப்புகழ்ப் பாடல்களில் ஆங்காங்கே காட்டி உள்ளார்.

 

     கடலானது எப்போதும் ஒவென்று இரைந்து கொண்டே இருக்கும். சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பிறிதொரு திருப்புகழில். "கலகல எனச் சில கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். சமயநூல்கள், உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்குத் துணை பிரிவதற்காக எழுந்தவை ஆகும். சண்டையிட்டுப் பிணங்கி, அறிவழிந்து போவதற்கு அல்ல.

 

"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     பொய்யான சமயங்களும், ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்து, தடுமாறுகின்ற துன்பத்தைப் போக்கி,  தனது திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற திருவருட்செயலைப் போற்றி, நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

     , அருளாளர்கள் அனைவரும், அவரவர் சார்ந்து உள்ள சமயத்தின் உட்பொருளை உணர்ந்து தெளிந்து, திருவருள் பெற்று உயரவேண்டும் என்பது அல்லாமல், சமயக் கருத்துக்களைத் தெளியாமல், உயர்வு தாழ்வு கற்பித்து, ஒருவரோடு ஒருவர் பிணக்கம் கொண்டு அறிவிழந்து அழிந்து போதல் கூடாது என்றே அருளி உள்ளனர்.

 

     ஒரு சமயத்தைச் சார்ந்தவர், பிற சமயத்தாரை இகழ்ந்து, பரிகசிப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவரவர் கொண்ட சமயத் தெய்வத்தைப் புகழ்ந்து பேசுவதும், பிற சமயத்தார் கருதும் தெய்வங்களை இகழ்ந்து பேசுவதும் நன்மையைத் தராது. ஆனால், இவ்வாறுதான் மனிதர்கள் உள்ளார்கள் என்பதை, கம்பர் காட்டுமாறு காண்போம்.

 

     மிதிலை நகரின் வீதிகளில் அழியா அழகு உடையவனாகிய இராமபிரான், தனது தம்பியோடும், விசுவாமித்திரரோடும் போகின்றான். அவனது அழகைக் கண்டு மயங்கிய பெண்களில், இராமனின் தோளைக் கண்டவர்கள், அதை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தோள்களின் அழகில் மயங்கிய பெண்களுக்கு, மற்ற உறுப்புக்களின் அழகு தோன்றவில்லை. இது எப்படி இருந்தது? ஒவ்வொரு சமயத்தாரும் தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று கொண்டாடுகின்றார்கள். மற்ற மதங்கள் போற்றுகின்ற கடவுளர்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட மாட்டாதவர்களைப் போல் உள்ளது.

 

     சமயவாதிகள் யாரும், நாமரூபம் அற்ற கடவுளின் தன்மையை முழுமையாக உணரவில்லை என்பது போல, மிதிலை நகரில் உள்ள பெண்களில் யாரும் இராமனது முழு அழகைக் கண்டு களிக்கவில்லை.

 

தோள் கண்டார் தோளே கண்டார்;

    தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்;

    தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே

    வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான்

    உருவு கண்டாரை ஒத்தார்.    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

     (மிதிலையில் இருந்த மகளிருள்) இராமபிரானது தோள்  அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டு, களித்து முடியாமையால், பிற உறுப்புக்களின் அழகைப் பார்க்க  இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவண்ணம் இருந்தார்கள். வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள்  போன்ற (இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு    பார்க்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அவனது)   பெரிய திருக்கரங்களின் அழகைப் பார்த்தவர்களும் அவ்வாறே  (பிறவற்றை நோக்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, வாள் போன்ற ஒளி பொருந்திய

கண்களை உடைய பெண்களுள் இராமனது திருமேனி அழகினை முழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள், பிற சமயங்கள் கூறும் தெய்வங்களின் வடிவங்களை நோக்காது, தமது தெய்வ வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல,  இராமனைக் காண வந்த மகளிர் (அப் பெருமானின்) உறுப்புக்கள்  பலவும் நோக்காது, அவர்கள் தாம் தாம் கண்ட ஓர் உறுப்பின்

அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர்.

 

     எனவே, சார்ந்துள்ள சமயம் பற்றிய உண்மையையே முழுதும் அறியாமல், பிற சமயக் கருத்துக்களோடு பிணங்குவது அறியாமை என்பதை அறிதல் வேண்டும்.

 

     "எம்மதம் (எம் + மதம்) சம்மதம் தான்". (சம் --- நல்ல. சம்மதம் --- நல்ல மதம் தான்). அதே நேரத்தில் "எம்மதமும் "சம்மதம் (எந்த மதம் ஆனாலும் நல்ல மதம்தான்) என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

 

 

 

 


மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு, ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும், நாவகமே நாடின் நகை...