14. அற்பருக்கு நல்ல புத்தி வராது

 



"சங்கையறப் படித்தாலும் கேட்டாலும்

     பிறர்க்குறுதி தனைச்சொன் னாலும்

அங்கண்உல கினிற் சிறியோர் தாமடங்கி

     நடந்துகதி அடைய மாட்டார்!

திங்கள் அணி சடையாரே! தண்டலையா

     ரே! சொன்னேன் சிறிது காலம்

கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய்

     நல்லசுரைக் காயா காதே!"

இதன் பொருள் ---

திங்கள் அணி சடையாரே - பிறைச்சந்திரனை திருச்சடையில் தரித்த சிவபரம்பொருளே!  தண்டலையாரே - திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியவரே!, அங்கண் உலகில் சிறியோர் சங்கை அறப்படித்தாலும் கேட்டாலும்  பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும் - அழகிய இடத்தை உடைய உலகத்தில் அற்பர்கள் ஐயம்  இன்றிப் படித்தாலும் பெரியோர் சொல்வதைக் கேட்டாலும் மற்றவர்களுக்கு  நலம் உரைத்தாலும், தாம் அடங்கி நடந்து கதி அடைய மாட்டார் - தாங்கள்  மட்டும் அடக்கமாக  நடந்து நல்ல கதி சேரமாட்டார்கள், கங்கையிலே  பேய்ச் சுரைக்காய்  சிறிது காலம் படர்ந்தாலும் நல்ல சுரைக்காய் ஆகாது -  கங்கைக் கரையிலே பேய்ச்சுரைக்காய் கொஞ்ச காலம் படர்ந்தாலும் (கங்கை நீரில் வளர்ந்ததால்) இனிய சுரைக்காய் ஆகாது.

பேய்ச்சுரை இயல்பாகக் கசக்குந் தன்மை உடையது. தன்னிடம் முழுகுவோரைத் தூய்மைப் படுத்தும் கங்கை நீர்க்குப் பேய்ச்சுரையின்  கசப்பை நீக்கும் ஆற்றல் இல்லாமற் போனாற்போல, அறிவை ஊட்டும்  கல்வியாலும் கேள்வியாலும் பிறர்க்குக் கூறுவதனாலும் மட்டும் அற்பர்களுக்கு இயற்கையிலே உள்ள தீய பண்பு விலகாது.


"கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்

பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்;

சொற் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லி னாலும்

நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே."


 என்பது விவேக சிந்தாமணி.


63. சிறப்புடைய ஒன்று வேண்டும்.

 


"கொங்கையில் லாதவட் கெத்தனைப் பணியுடைமை

     கூடினும் பெண்மையில்லை;

கூறுநிறை கல்வியில் லாமலெத் தனைகவிதை

     கூறினும் புலமையில்லை;


சங்கையில் லாதவர்க் கெத்தனை விவேகம்

     தரிக்கினும் கனதையில்லை;

சட்சுவை பதார்த்தவகை உற்றாலும் நெய்யிலாச்

     சாதமும் திருத்தியில்லை;


பங்கயம் இலாமல்எத் தனைமலர்கள் வாவியில்

     பாரித்தும் மேன்மையில்லை;

பத்தியில் லாமல்வெகு நியமமாய் அர்ச்சனைகள்

     பண்ணினும் பூசையில்லை;


மங்கையர் இலாமனைக் கெத்தனை அருஞ்செல்வம்

     வரினும்இல் வாழ்க்கையில்லை;

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கொங்கை இல்லாதவட்கு எத்தனைப் பணி உடைமை கூடினும் பெண்மை இல்லை - கொங்கையில்லாத பெண்ணுக்கு எவ்வளவு அணிகளும் ஆடைகளும் இருந்தாலும் பெண்மையின் அழகு வராது. 

கூறும் நிறைகல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை - புகழத் தக்க நிறைந்த கல்வி இல்லாமல் எவ்வளவு செய்யுள் இயற்றினாலும் புலமையாகாது; 

சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை - நாணம் இல்லாதவர்களுக்கு எத்துணை அறிவிருப்பினும் பெருமை உண்டாகாது; 

சட்சுவை பதார்த்தவகை உற்றாலும் நெய்யிலாச் சாதமும் திருத்தி இல்லை - அறுசுவைக் கறிகள் இருந்தாலும்,  நெய் இல்லாத உணவு மனநிறைவு தராது; 

பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை - தாமரைமலர் இல்லாமல் வேறு எத்துணைப் பூக்கள் பொய்கையில் நிறைந்தாலும் உயர்வு இல்லை; 

பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை - அன்பின்றி மிக ஒழுங்காக மலரிட்டு வணங்கினாலும் வழிபாடாகாது; 

மங்கையர் இலா மனைக்கு எத்தனை அருஞ்செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை - மனைவியர் இல்லாத இல்லத்திற்கு எவ்வளவு அரிய செல்வம் வந்தாலும் இல்லறம் ஆகாது.

      எப்பொருளும் அதனைச் சிறப்பிக்கக் கூடிய ஒன்று இல்லாவிடின் மேன்மை இல்லை என்பது இப்பாடலின் கருத்து.  


விளக்கம் ---


"சந்திரன் இல்லா வானம், 

தாமரை இல்லாப் பொய்கை,

மந்திரி இல்லா வேந்தன், 

மதகரி இல்லாச் சேனை,

சுந்தரப் புலவர் இல்லாத் 

தொல்சபை, சுதர்இல் வாழ்வு,

தந்திகள் இல்லா வீணை, 

தனம் இலா மங்கை போல் ஆம்."

என்பது விவேக சிந்தாமணி.

சந்திரன் ஒளி இல்லாத வானம் அழகற்றது. தாமரை மலர் இல்லாத குளம் அழகற்றது. நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிவுறுத்தும் நல்லறிவு படைத்த அமைச்சர் இல்லாத அரசன் பயன்றறவன். மதம் பொருந்திய யானைகள் இல்லாத சேனை முழுமை பெறாது. சிறந்த புலவர்கள் இல்லாத பழமையான சபை பொலிவு பெறாது. நல்ல மக்கள் பேறு இல்லாத வாழ்வு பயனற்றது. இசையை மீட்டுவதற்கு உரிய நரம்புகள் இல்லாத வீணை பயனற்றது. இவை போலவே, பெண்மை இன்பத்தை விழையும் கொங்கைகள் இல்லாத மங்கையும் பயனற்றவள் ஆவாள். "கல்லாதான் சொல் காமுறுதல், முலை இரண்டும் இல்லாதாள் தமியள் மூத்து அற்று" என்பது திருக்குறள். நூல்களைக் கல்லாத ஒருவன் கற்றவர் அவையில் சொல்லுதலை விரும்புதல், கொங்கைகள் இரண்டும் இல்லாதவள் ஒருத்தி, பெண்மை நலத்தை விரும்புதலைப் போன்றது என்பது இதன் கருத்து.

கனதை - பெருமை. ச்சுவை - அறுசுவை. திருத்தி - மனநிறைவு. "நெய் இல்லா உண்டி பாழ்" என்னும் ஔவையின் அருள்வாக்கை எண்ணுக.

இறை வழிபாடு என்பது உள்ளத்தில் அன்போடு, மனம் ஒன்றிச் செய்தல் வேண்டும். இல்லையேல் அது பயனற்றதே.

"கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்துஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்

மெய் ஒன்று சார, செவிஒன்று கேட்க, விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய், வினை தீர்த்தவனே."

என்கிறார் பட்டினத்து அடிகளார்.

"அடியவர்களின் இருவினைகளை எப்படியாவது களைந்து, அவர்களைப் பேரானந்தப் பெருவாழ்வில் வைக்கும் பெருமானே, அடியேனுடைய கையானது ஒரு செயலைச் செய்ய, கண்ணானது ஒரு பொருளை நாட, பொய் பொருந்திய வஞ்சகமே வடிவான என்னுடைய நாக்கு ஒன்றைப் பேச, புலால் நாற்றம் வீசுகின்ற எனது உடம்பு ஒன்றை அடைய, காது ஒரு செய்தியைக் கேட்க விரும்ப, இந்த நிலையிலே நான் செய்கின்ற பூசையை நீ எவ்வாறு ஏற்றுக் கொள்ளுவாய்" என்பது இப் பாடலின் பொருள்.

ஐம்புலன்களும் போன வழியிலேயே மனமும் போய்க் கொண்டு இருக்கின்றது.  அதனால் படும் பாட்டையும் ஆன்மா அநுபவித்துக் கொண்டு இருக்கின்றது.  அந்தப் பாட்டைப் போக்கிக்கொள்ள ஒரு துணையையும் தேடுகின்றது.  வந்த துணையெல்லாம் எண்ணியபடி இல்லை.  இறைவனே துணை என்று முடிவில் துணிந்து நிற்கின்றது.  அப்போது, உள்ளம் உருகுகின்றது.  அந்த உருக்கத்தால் வழிபாடு செய்ய முனைகின்றது. அதவும் பயன் கருதியே என்பதால், பயன் அடைந்தவுடன், மனமானது வேறு விஷயங்களில் புகுகின்றது. மனம் ஒரு முகப்படவில்லை. மனம் ஒருமுகப் படாதபோது, ஐம்புலன்களின் வழியே செல்லுகின்றது.  அதனால், கை ஒரு வேலையைச் செய்யவும், கண் ஒரு பொருளைப் பார்க்கவும், மனதிலே ஒரு கருத்து இருக்கவும், நாக்கு ஒன்று பேசவும், உடம்பு ஒன்றை விரும்பவும், காது ஒன்றைக் கேட்கவும் செய்து கொண்டே அரைகுறை பூசையை ஆற்றுகின்றது.  இதனை எப்படிப் பெருமான் ஏற்றுக் கொள்வான் என்ற ஐயமும் அதே நேரத்தில் பிறக்கின்றது.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை" என்பதைக் காட்டி பின்வருமாறு ஒரு பாடலை மூதுரை என்னும் நூலில் ஔவையார் பாடி உள்ளார்.

"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்று இல்லை,

இல்லாளும் இல்லாளே ஆம்ஆயின், - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்."

இதன் பொருள் ---

        நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருந்தால், அவ் வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. மனையாள் இல்லாமல் போனாலோ,  மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொன்னாலோ, அந்த வீடானது புலி தங்கிய புதர் போல் ஆகி விடும்.

நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அது அல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே ஆகும். 

திருமந்திரம் என்னும் நூலும் இந்த உலகியல் முறையையே காட்டி, திருவருட் சத்தியின் அருளைப் பெறுகின்ற பேற்றினைப் பற்றிப் பேசுகின்றது.

"கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்

கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது

பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்

இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே." --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

சிவனது விளக்கமாம் சத்திகளையும், அவள்வழி நிற்கும் தேவியரையும் பல சக்கரங்களிலும் உடம்பினுள் ஆதார பங்கயங்களிலும் வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள், உலகத்திற்குக் காரணமாய் உள்ள முதற்பொருளைக் கண்டிருப்பார்கள். அம்முதற் பொருளை வேதங்களும் எங்கும் சென்று தேடி அலைகின்றன. ஆயினும் இஃது இன்று எனது உள்ளத்தையே இல்லமாகக் கொண்டு அதனை ஆளுகின்றது.

கூத்தனார் ஒளியினைக் கொண்டு அங்கு எழுந்தருளி இருக்கும் திருவருள் அம்மையை அகத்தவம் உடையோர் கண்டிருந்தனர். கூத்தனாரும் திருவருள் அம்மையாகிய சிவகாமியாரும் கலந்த கலப்பால் உலகு உடல் பொருள்கள் எல்லாம் காரியப்பட்டுத் தோற்றுகின்றன. தொன்மைச் செந்தமிழ்த் திரு நான்மறைகளெல்லாம் அம்மையின் அடியிணையை எங்கணும் தேடுகின்றன. அத்தகைய அம்மை என் உள்ளத்தைக் குடியிருப்பாகக்கொண்டு என்னை ஆண்டருளினள் என்க.


"இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை,

இல் அடைந்தானுக்க் இரப்பது தான் இல்லை,

இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்,

இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்ஆன்ஐயே."    ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

இல்லத்தைத் திறமையாக ஆளுகின்ற துணைவியைப் பெற்றால், அவளுக்கே அன்றி, பெற்ற அவனுக்கும் இல்லாத நன்மை ஒன்று இல்லை. எல்லா நன்மைகளும் குறைவின்றி உளவாம். அதனால், அவன் பிறரிடம் சென்று இரந்து பெற வேண்டுவது யாதும் இல்லை. ஆகவே, இன்ப நுகர்ச்சியில் தேவரும் அவனுக்கு நிகராகார். ஆதலின், `இல்லாதது` என்பது யாதும் இல்லாதவனாகிய சிவனையே அவனுக்கு உவமிக்க.

பராசத்தியைத் தன் உடம்பினுள் குடிகொள்ளப் பெற்றவனுக்கு, இல்லாத செல்வம் இல்லை. அவன் இறப்பது இல்லை. அவனுக்கும் தேவரும் நிகர் ஆவார். அவனிடம் சிவம் இல்லாதது இல்லை. 

என்றும் நிலைத்த மாறாத இல்லாகிய திருவருள் அம்மையின் திருவடியைப் பெற்றவர் இல் அடைந்தார் ஆவர். அத்தகைய திருவடியாகிய இல்லத்தை அடைந்தார் யாண்டும் எவரிடத்தும் ஒன்றினையும் இரவார். அத்தகையோர்க்கு விண்ணாட்டில் வாழும் வினைப்பயன் சேர் இமையவரும் ஒப்பாகார்; தாழ்ந்தவரே ஆவர். அவர்கட்குக் கிடைத்தற்கரிய பொருள் என்று ஏதும் இல்லை. அதற்குக் காரணம், அவர்கள் புகலிடமாக ஆருயிர்க்குத் தலைவனாம் சிவபெருமானையே கொண்டிருத்தலான் என்க. 


79. மழைநாள் குறித்து

 


"சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல

     சீரான பரணி மழையும்,

  தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்

     சேரும்நா லாநா ளினில்


ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்

     ஓங்கும்ஏ காத சியினில்

  ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,

     உண்டா யிருந்தாடியில்


பத்திவரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்

     பகரும்ஆ வணிமூ லநாள்

  பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்

     பாரில்வெகு விளைவும் உண்டாம்;


அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்

     அண்ணல் எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அத்தனே - தலைவனே!, பைங் குவளை மாலை அணி மார்பன் ஆம் அண்ணல் எமது அருமை மதவேள் - பசிய குவளை மலர்மாலை அணிந்த மார்பனாகிய பெருமை மிக்க எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

சித்திரை திங்கள் பதின்மூன்றுக்கு மேல் நல்ல சீரான பரணி மழையும் - சித்திரை மாதத்திலத் பதின்மூன்று நாட்களுக்கு மேல் புகழ்பெற்ற பரணி நாளில் பெய்யும் மழையும், 

தீது இல் வைகாசியில் பூரணை கழிந்தபின் சேரும் நாலாம் நாளினில் ஒத்துவரும் மழையும் - குற்றம் அற்ற வைகாசித் திங்களில் முழுமதிக்குப் பிறகு வரும் நாலாம் நாளில் சரியாகி வரும் மழையும், 

அ ஆனியில் தேய் பிறையில் ஓங்கும் ஏகாதசியினில் ஒளிர் பரிதி வீழ் பொழுதில் மந்தாரமும் மழையும் - அந்த ஆனித் திங்களில் தேய்பிறையிலே சிறப்புறும் ஏகாதசியில் ஒளிவிடும் ஞாயிறு மறையும்போது மந்தாரத்துடன் பெய்யும் மழையும், உண்டாயிருந்து - பெய்திருந்து, 

ஆடியில் பத்தி வரு தேதி ஐந்தினில் ஆதிவாரமும் - ஆடித் திங்களில் ஒழுங்காக வரும் ஐந்தாம் நாளில் ஞாயிற்றுக் கிழமையும், 

பகரும் ஆவணி மூலநாள் பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திட - கூறப்படும் ஆவணித்திங்களில் மூலநாளில் ஞாயிறு மறைந்தபிறகு, பெருமழை பெய்தலும் நேர்ந்தால், 

பாரில் வெகு விளைவும் உண்டாம் - உலகில் மிகுந்த விளைவு உண்டாம்.


உலகநீதி - 6

 



"வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்,

    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்,

மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்,

    முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்,

வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்,

    வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்,

சேர்த்தபுக ழாளன்ஒரு வள்ளி பங்கன்

    திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே!"


பதவுரை ---


வார்த்தை சொல்வார் - (பயனில்லாத சொற்களைக் கூறுவாருடைய, வாய் பார்த்து - வாயைப் பார்த்துக் கொண்டு, திரியவேண்டாம் - அவரோடு கூட அலையாதே.


மதியாதார் - நன்கு மதிக்காதவருடைய, தலைவாசல் - கடை வாயிலில், மிதிக்க வேண்டாம்- அடியெடுத்து வைக்காதே.


மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற்பெரியோர்களும், சொல் வார்த்தைகளை - உன்னை நல்வழிபடுத்தும் முகத்தான் கூறுகின்ற அறிவுரைகளை, மறக்க வேண்டாம் - மறவாமல் கடைப்பிடிக்க வேண்டும்.


முன்கோபக்காரரோடு - முன்கோபம் உடையாருடனே, இணங்க வேண்டாம் - சேராதே.


வாத்தியார் - கல்வி கற்பித்த ஆசிரியருடைய, கூலியை - சம்பளத்தை, வைத்திருக்க வேண்டாம் - கொடுக்காமல் வைத்துக் கொள்ளாதே.


வழி பறித்து - வழிப்பறி செய்து, திரிவாரோடு- திரிந்து கொண்டிருப்பவருடன், இணங்கவேண்டாம் - சேராதே.


சேர்த்த - ஈட்டிய, புகழாளன் - புகழுடையவனாகிய, ஒரு - ஒப்பற்ற, வள்ளி பங்கன் - வள்ளியம்மையாரைப் பக்கத்தில் உடையவனாகிய, திருகை - அழகிய கையின்கண், வேலாயுதனை-வேற்படையை உடைய முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, செப்பாய் - புகழ்வாயாக.


பொழிப்புரை ---

வீண் பேச்சுப் பேசுவார் சொற்களைக் கேட்டுக்கொண்டு அவர்பின் அலைதல் கூடாது. பயனில்லாத சொற்களைப் பேசுவோரை 'மனிதனில் பதர்' என்னும் முகத்தான், "பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல், மக்கட் பதடி எனல்" என்று திருவள்ளுவ நாயனார் திருவாய் மலர்ந்து அருளிதை இங்கு வைத்து எண்ணுக. 

உன்னை அவமதிப்புச் செய்தாருடைய வீட்டிற்குச் செல்லுதல் கூடாது. (மிதித்தல் - அடியெடுத்து வைத்தல், சேர்தல்.) "மதியாதார் முற்றம் மதித்து ஒருகால் சென்று மிதியாமை கோடி பெறும்" என்னும் ஔவையின் அருள்வாக்கை இங்கு வைத்து எண்ணுக.

பெரியோர் கூறியனவற்றை மறத்தல் கூடாது; பெரியோர் சொன்னபடி நடக்க வேண்டும். மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான், அரசன் (இக்காலத்தில் மேலதிகாரி) முதலியவர்களும், அறிவிற்பெரியோர்களும் ஆவர். இவர்கள் நன்னெறிப்படுத்தும் முகத்தானும், தவறு கண்டபோது திருத்தும் முகத்தானும் கூறுகின்ற நல்வார்த்தைகளை மறக்கல் ஆகாது. "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" எனவும், "மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன் துவர்க்கும், பின் இனிக்கும்" என்னும் முதுமொழிகளைக் கருத்தில் கொள்ளுக.

மிக்க கோபம் உடையாருடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. முன்கோபம் - பொறுமையின்றி முதலெடுப்பில் உண்டாகும் சினம். கோபக்காரருடன் சேரவேண்டாம் என்றதனால் கோபம் கூடாது என்பதும் ஆயிற்று.

கல்வி கற்பித்த ஆசிரியருக்கு உரிய காணிக்கையைக் கொடாமல் இருத்தல் கூடாது. உபாத்தியாயர் என்பது வாத்தியார் எனத் திரிந்தது.

வழிப்பறி செய்யும் கள்வருடன் சேர்தல் கூடாது. வழிப்பறி செய்தல் - வழியில் பயணம் போகிறவர்களின் பொருளைப் பறித்துக்கொள்ளுதல்.


உலகநீதி - 5

"வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்,

    மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்,

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்,

    வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்,

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்,

    தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்,

வாழ்வுஆரும் குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


பதவுரை ---

பெண்ணை - மனையாளை, வைத்து - (வீட்டில் துன்பமுற) வைத்து, வாழாமல் - (அவளோடு கூடி) வாழாமல், திரியவேண்டாம் - அலையாதே.

மனையாளை - மனைவியின் மீது, குற்றம் ஒன்றும் - குற்றமான சொல் யாதொன்றும், சொல்லவேண்டாம் - சொல்லாதே.

வீழாத - விழத் தகாத, படுகுழியில் - பெரும் பள்ளத்தில், வீழ வேண்டாம் - வீழ்ந்துவிடாதே.

வெஞ்சமரில் - கொடிய போரில், புறங்கொடுத்து - முதுகு காட்டி, மீள வேண்டாம் - திரும்பி வாராதே.

தாழ்வான - தாழ்வாகிய, குலத்துடன் - குலத்தினருடன், சேர வேண்டாம் - சேரக் கூடாது.

தாழ்ந்தவரை - தாழ்வுற்றவர்களை, பொல்லாங்கு - தீங்கு, சொல்ல வேண்டாம் - சொல்லாதே.

வாழ்வு ஆரும் - செல்வம் நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி - வள்ளி நாச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே , வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


பொழிப்புரை ---

மனையாளோடு கூடி வாழாமல் அலைதல் கூடாது. திரிதல் - வேசையர் முதலியோரை விரும்பி அலைதல். பெற்ற பெண்ணைக் கணவனுடன் வாழாமல் தன் வீட்டில் வைத்து மாறுபட வேண்டாம் என்பதும் ஆம்.

மனைவியைப் பற்றி எவ்வகைக் குற்றமும் அயலாரிடத்துச் சொல்லுதல் கூடாது. மனைவிக்கு உள்ளது தனக்கும் உள்ளது. மனைவிக்குப் பழி என்றாலும், புகழ் என்றாலும் அது தனக்கும் உரியதே. எனவே, மனைவியைக் குற்றம் சொல்லக்  கேட்ட அயலார் ஒருவேளை பழிக்கக்கூடும் என்பதால், சொல்ல வேண்டாம் என்றார். கற்புடைய மனைவிமீது குற்றம் சுமத்துவது பாவம்.

விழத் தகாத படுகுழியில் விழுதல் ஆகாது. படுகுழி என்பது கொடுந்துன்பத்திற்கு ஏதுவாகிய தீய செய்கையைக் குறிக்கின்றது. மீளாத துன்பத்தை உண்டாக்கும் தீச்செய்கையைச் செய்யலாகாது.

போரில் அச்சத்தால் முதுகுகாட்டி ஓடுதல்கூடாது, ஆண்மையுடன் எதிர்த்து நின்று போர் புரிய வேண்டும். புறம் - முதுகு. சமர் - போர், யுத்தம்.

தாழ்ந்த குலத்தாருடன் சேர்தல் கூடாது. குலம், அதனை உடையார்க்கு ஆகுபெயர். தாழ்ந்த குலத்தார் - இழிதொழில் செய்யும் குடியில் பிறந்தவர். சேர்தல் - நட்புக்கொள்ளுதலும் சம்பந்தம் செய்துகொள்ளுதலும்.

உயர்ந்த நிலையில் இருந்து தாழ்வு அடைந்தவர்களைத் தீமையாகப் பேசுதல் கூடாது. தாழ்ந்தவர் என்பதற்குக் கீழோர் என்றும், வணங்கினவர் என்றும் பொருள் கூறுதலும் பொருந்தும். "கீழோர் ஆயினும் தாழ உரை" என்பது கொன்றைவேந்தன். கேட்பவர் உனக்குக் கீழ்ப்பட்டவராய் இருந்தாலும், உன் சொல் வணக்கம் உடையதாய் இருக்கும்படி அவருடன் பேசு என்பது இதன் பொருள்.


14. அற்பருக்கு நல்ல புத்தி வராது

  "சங்கையறப் படித்தாலும் கேட்டாலும்      பிறர்க்குறுதி தனைச்சொன் னாலும் அங்கண்உல கினிற் சிறியோர் தாமடங்கி      நடந்துகதி அடைய மாட்டார்!...