ஆபத்தில் யாருக்கும் உதவ வேண்டும்.

“அஞ்சல்என நாயினுடல் தருமன் சுமந்துமுன்

     ஆற்றைக் கடத்துவித்தான்;

அடைக்கலம் எனும்கயற் காகநெடு மாலுடன்

     அருச்சுனன் சமர்புரிந்தான்;


தஞ்சம்என வந்திடு புறாவுக்கு முன்சிபி

     சரீரம் தனைக்கொடுத்தான்;

தடமலைச் சிறகரிந் தவனைமுன் காக்கத்

     ததீசிமுது கென்பளித்தான்;


இன்சொலுட னேபூத தயவுடையர் ஆயினோர்,

     எவருக்கும் ஆபத்திலே

இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்

     திரங்கிரட் சிப்பர் அன்றோ!


வஞ்சகிர வுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்

     வளர்சூரன் உடல்கீண்டவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே.”


இதன் பொருள் ---


        வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர்சூரன் உடல் கீண்டவா – வஞ்சகச் செயலுடைய கிரவுஞ்ச மலையையும் தாருகனையும் சிங்கமுகனையும் சூரபதுனையும் உடலைப் பிளந்த வீரரே!  

        மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

முன் அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து ஆற்றைக் கடத்துவித்தான் - முற்காலத்தில் அஞ்சாதே என்று ஒரு நாயைத் தருமபுத்திரன் சுமந்துசென்று ஆற்றைக் கடப்பித்தான்;

        அடைக்கலம் எனும் கயற்கு ஆக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான் - அடைக்கலம் என வந்த கயன் என்னும் கந்தருவனைக் காப்பாற்றத் (தன் ஆருயிர் நண்பனும் தலைவனுமான) திருமாலுடன் அருச்சுனன் போரிட்டான்; 

        முன் தஞ்சம் என வந்திடு புறாவுக்குச் சிபி சரீரந்தனைக் கொடுத்தான் -  முற்காலத்தில் அடைக்கலம் என்று வந்த புறாவைக் காப்பாற்றச் சிபிச்சக்கரவர்த்தி தன் உடம்பையே அதற்கு ஈடாகத் தந்தான்; 

        முன் தடமலைச் சிறகு அரிந்தவனைக் காக்கத் ததீசி முதுகு என்பு அளித்தான் - முன்னாளில் பெரிய மலைகளின் சிறகை வெட்டிய இந்திரனைக் காப்பாற்றத் ததீசிமுனிவன் தன் முதுகெலும்பை (வச்சிராயுதமாக்க) அளித்தான்; 

        இன்சொலுடனே பூத தயவு உடையர் ஆயினோர் – இனிய மொழியும் உயிர்களிடம் இரக்கமும் கொண்டோர், ஆபத்திலே எவருக்கும் தம் இனிய சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ? – ஆபத்து நேர்ந்த காலத்தில் தம் இனிய உயிரைவிட்டாவது இரக்கத்துடன் யாரையும் காப்பாற்றி அருளுவர் அல்லவா?


விளக்கம்

    திருவள்ளுவ நாயனார், அன்பு இல்லாதவர்கள் பிறர்க்குப் பயன்படாதவர்கள் என்பதால், எல்லாப் பொருளையும் தமக்கே உரியவர்கள் அவர்கள் என்றும், அன்பு உடையவர்கள் பொருளால் மட்டும் அல்லாது தமது உடம்பாலும் பிறருக்கு உரியவர்கள் என்றும் காட்டினார். “அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர், அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பது திருக்குறள். எலும்பு, ஆகுபெயராய் உடம்பை உணர்த்தியது.

தருமன் கதை

தருமன் சுவர்க்கத்தை நாடிப்போகையில், ஒரு நாய் இழிந்த நாற்றத்துடன் பின் தொடர்ந்தது. அங்குக் குறுக்கிட்ட ஆற்றைக் கடக்கமுடியாமல் அது வருந்த நாயைத் தருமன் தன் தோளிலே சுமந்து அக்கரையில் கொண்டுசேர்த்தான்.


அருச்சுனன் கதை:

தன்னைக் கொல்லவேண்டிச் சக்கரத்தை ஏவிய கண்ணனுக்கு அஞ்சிய கயன் என்னும் கத்தருவன் அருச்சுனனைச் சரணடைந்தான். அவனைக் காப்பதற்காகக் கண்ணனோடு அருச்சுனன் போர் செய்ய நேர்ந்தது, முடிவில் இருவரும் சமாதானம் அடைந்து கந்தருவனை விடுவித்தனர்.


சிபிச்சக்கரவர்த்தி கதை:

தன்னை இழந்தும் பிறர் நலம் காணும் வள்ளலாய் வாழ்ந்தவர்  சூரியகுலத் தோன்றலாகிய சிபி என்னும் சக்கரவர்த்தி. அவர்தம் வள்ளல் தன்மையை உலகறியச் செய்ய எண்ணிய இந்திரன் பருந்தாகவும், இயமன் புறாவாகவும் உருக் கொண்டனர். புறாவினைப் பருந்து துரத்த, புறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. ''என்   இரையைக் கொடு'' என்று பருந்து சிபியைக் கேட்க, சக்கரவர்த்தியோ, தன்பால் அடைக்கலம் புகுந்த ஒன்றனைத் தருதல் இயலாது என மறுத்து, ஈடாக வேறு எதனை வேண்டினும் தருவதாகக் கூறினான். அதற்கு உடன்பட்ட பருந்து, அந்தப் புறாவின் எடை அளவுக்குச் சிபியின் உடலில் இருந்து ஊன் தந்தால் போதும் என்றது. மகிழ்ந்த சிபி, புறாவினை ஒரு தட்டில் வைத்து, தன் உடல் தசையில் பகுதியை துலாக்கோலின் வேறு தட்டில் இட்டான். ஆனால், தன் உடல் உறுப்புகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அரிந்து வைத்த போதும் துலாக்கோல் சமன் அடையாது, புறாவின் தட்டு தாழ்ந்தே நின்றது. பின்னர், தானே தட்டில் ஏறி நின்றனன். தட்டுகள் சமநிலை உற்றன. அப்போது இந்திரனும் இயமனும் தத்தம் உண்மை உருவோடு தோன்றி அவர்க்கு வேண்டிய வரங்களைத் தந்து போயினர் என்பது வரலாறு.

"புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க

   பெருந்தகைதன் புகழில் பூத்த

அறன் ஒன்றும் திரு மனத்தான். அமரர்களுக்கு

   இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்

திறல் உண்ட வடி வேலான். ‘’தசரதன்’’ என்று.

   உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்.

விறல்கொண்ட மணி மாட அயோத்திநகர்

   அடைந்து. இவண் நீ மீள்தல்!’ என்றான்".


"இன் உயிர்க்கும் இன் உயிராய்

   இரு நிலம் காத்தார் என்று

பொன் உயிர்க்கும் கழலவரை

   யாம் போலும். புகழ்கிற்பாம்?-

மின் உயிர்க்கும் நெடு வேலாய்! -

   இவர் குலத்தோன். மென் புறவின்

மன் உயிர்க்கு. தன் உயிரை

   மாறாக வழங்கினனால்"

என்று கம்பநாட்டாழ்வார் போற்றி உள்ளார்.


"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்

தன் அகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி அஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக"

என்று புறநானூற்றுப் பாடலிலும் சிபியின் பெருமை போற்றப்பட்டு இருப்பது காண்க.


ததீசியின் கதை:

முற்காலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன. அவைகள் தாம் நினைத்த இடங்களுக்குப் பறந்து சென்று ஊர்களையும் அவைகளில் உள்ள மக்களையும், மேல் விழுந்து கொன்று பாழாக்கின. எல்லாரும் இந்திரனை வேண்டிக் கொண்டதனால், அவன் அவைகளின் சிறகுகளை வெட்டி உலகத்திற்கு உபகாரம் பண்ண எண்ணினான். தன்னுடைய வச்சிராயுதம் மழுங்கி இருந்தமையால் அங்ஙனம் செய்ய அவனால் ஆகவில்லை. உடனே, அவன் பூலோகத்தில் தவம் செய்துகொண்டிருந்த ததீசி முனிவரைக் கண்டு, "ஐயனே! அடியேனுடைய வச்சிராயுதம் மழுங்கினமையால், அதனால் மலைகளின் சிறகுகளை வெட்டி இப்பூலோகத்து உயிர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லை. தேவரீருடைய முதுகெலும்பால் வேறொரு புதிய வச்சிராயுதம் செய்துகொண்டால், அவைகளை நான் சிறகு அரிந்து அடக்கி விடுவது நிச்சயம். ஆகையால், அதை எனக்கு அருளவேண்டும்" என்று தன் குறையிரந்து வேண்டினான். அது கேட்டவர், முதல் எழு வள்ளல்களில் ஒருவராகையால், "இந்திரனே! ஜீவகாருண்யமே எமக்கு முதற்படியாய் உள்ளது. அதுவே அன்பை வெளிப்படுத்துவது. இச் சரீரம் நிலையற்றது. இது யாருக்குச் சொந்தம்? செத்தால் நாய்க்கும் பேய்க்கும் ஈக்கும் எறும்புக்கும், காக்கைக்கும் கழுகுக்கும் சொந்தம், எனக்கும் சொந்தம், உனக்கும் சொந்தம். இது ஒரு சாக்குப்பை. இருகாலில் செல்லும் பேய்த்தேர், இது நீர்க்குமிழி போன்றது. இது இருக்கும் இப்பொழுதே பல்லுயிர்க்கும் உபகாரம் புரியவேண்டும். இந்தா, இதை எடுத்து உனது விருப்பம் போல் செய்துகொள்" என்றார்.  தமது ஜீவனைக் கபாலமூலமாய் வெளிப்படுத்தி விட்டுக் கட்டைப் பிணமாய் இருந்தார். அதுகண்ட இந்திரன் அவருடைய ஜீவகாருண்யத்தையும் அன்பையும் வியந்தபடியே, அந்த உடலின் முதுகெலும்பைக் கொண்டு ஒரு புதிய வச்சிராயுதம் செய்து, அதனால் மலைகளின் சிறகுகளைக் கொய்து, பல்லுயிரையும் காத்தான்.  

பிறர்மேல் அன்பற்ற சுயநலப் பிரியர்கள் தமது உடல் பொருள் ஆவி முன்றும் தம்மது என்று தாம் இருப்பர். அன்பு உடையார் அங்ஙனம் இன்றித் தமது கண்ணைப் பிடுங்கி அப்பின கண்ணப்பரைப் போல், தமது உயிரையும் பிறர்க்கு வழங்கச் சித்தமாய் இருப்பார்கள். பிரதி உபகாரம் கருதி செய்ய மாட்டார்கள். "கைம்மாறு வேண்டா கடப்பாடு, மாரி மாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு" என்றபடி பிரதி உபகாரம் வேண்டாமலே பகைவர்க்கும் நன்றி செய்வார்கள்.


49. இறைவனை வணங்கு

“பிறக்கும்போ தொருபொருளும் கொடுவந்த

     தில்லை; உயிர் பிரிந்து மண்மேல்

இறக்கும்போ திலுங்கொண்டு போவதிலை

     என்று, சும்மா இருந்து வீணே

சிறக்குந்தா யினும்அருள்வார் தண்டலையிற்

     சேராமல், தேசம் எல்லாம்

பறக்குங்கா கமதிருக்கும் கொம்பறியா

     தெனத்திரிந்து பயன்பெ றாரே!”


இதன் பொருள் –


    பிறக்கும்போது ஒரு பொருளும் கொடு வந்தது இல்லை - பிறக்கும் காலத்தில் ஒரு பொருளையும் நாம் கொண்டு வந்தது இல்லை, உயிர் பிரிந்து மண்மேல் இறக்கும் போதிலும் கொண்டு போவது இலை - உயிர் நீங்கி உலகத்தில் சாகும் காலத்திலும் எதையும் எடுத்துச் செல்வதும் இல்லை, என்று வீணே சும்மா இருந்து – என்று நினைந்து எதையும் செய்யாமல் வீணே காலத்தைக் கழித்து இருந்து, சிறக்கும் தாயினும் அருள்வார் தண்டலையிற் சேராமல் - சிறப்புடைய அன்னையினும் அருள்புரியும் இறைவன் எழுந்தருளி இருக்கின்ற திருத்தண்டலை என்னும் திருத்தலத்தை அடைந்து வணங்காமல், பறக்கும் காகம் அது இருக்கும் கொம்பு அறியாது என - பறக்கும் இயல்புடைய காகமானது, தான் அமர்ந்து இருக்க ஒரு கொம்பையும் நிலையாகப் பெறாது என்பதைப்போல, தேசம் எல்லாம் திரிந்து பயன் பெறார் - உலகெங்கும் சுற்றி அலைந்து (சிலர்) நலம் பெறாதவர் ஆயினார்.


    பிறந்தபோது எதையும் கொண்டு வந்த்து இல்லை, இறக்கும்போதும் எதையும் கொண்டு செல்வதும் இல்லை என்று சிலர் வாய் வேதாந்தம் பேசிக் கொண்டு, வாழுகின்ற காலத்தில் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு, அனுபவிப்பதற்காகவே பொருளைத் தேடி, மனம் விரும்புகின்ற உணவை உண்டு, நல்ல ஆடை ஆணிகலன்களை அணிந்து மகிழ்ச்சியாக வாழ்வதே சுகம் என்று வாழ்ந்து,  நல்வினை எதையும் செய்யாமல் வீணில் காலத்தைக் கழித்துக் கொண்டு சிலர் இருப்பார்கள். 


    கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள் உலகாயதர்கள் எனப்படுவர். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். முதலில் சொல்லப்படுகின்ற ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்க மறுப்பர். நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் சம்பந்தத்தால் ஆகியதே உடம்பு என்பர். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் ஒருவன் வாயில் இட்டு உண்கின்ற போது, செந்நிறம் தோன்றுவது போல, இந்த நான்கு பூதங்களின் சேர்க்கையால் இந்த உடம்பு ஆனது என்பர். உடம்பிற்கு வேறாக உயிர் என்பது உண்டு என்பது பொய் என்பது அவர் கூற்று. அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்ப துன்பங்கள் என்பதும் பொய்.  இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும்,  நோயாலும்,  வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை.


    இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடு விடம்" என்றார் மணிவாசகப் பெருமான்.


    மேலும், இவ்விதம் கூறிய நான்கு பூதங்களின் கூட்டுறவில், பிராணவாயு என்பது நீங்குமானால், முன் வளர்ந்த உணர்வு என்பது நீங்கி, உடம்பு என்பது நாசம் ஆகும். அதுவே, வீடு என்கின்ற மோட்சத்தை அடைகின்ற பேறு ஆகும். எனவே, இந்த உண்மையை உணராதோர் மறுபிறவி உண்டு என்றும், வீடு என்பது உண்டு என்றும் சொல்லி, தவம் கிடந்து, பட்டினி கிடந்து, உடலை வருத்துகின்றனர். அல்லாமலும், பொன் தானம், நிலத் தானம், உணவுத் தானம் என்பவர்கள் வறுமமை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலயம், தண்ணீர்ப்பந்தல், கிணறு, சோலை, குளம் முதலியவைகளை தருமத்துக்கு அமைப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற நூல்கள், வழிச் செல்பவர்கள் தாம் செல்லுகின்ற காலத்து இளைப்பு அடையாமலும், உடம்பு வருந்தாமலும், பொருள் செலவு இல்லாமலும்,  தங்களின் பயணத்தை முடிப்பதன் நிமித்தம் எழுதிய நூல்கள் ஆகும் என்பவர் உலகாயதர். ஆகையால், இவைகளை எல்லாம் விட்டுவிட்டு, மனம் விரும்பு உணவு உண்டு, நல்ல வத்திரம் அணிந்து, இளம்பெண்களோடு சுகித்து வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பது இவர்தம் கொள்கை.


    ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர். கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் கயவர்கள். அவரது கூட்டுறவு கூடாது என்பதை, வள்ளல்பெருமான் பின்வரும் பாடலால் காட்டினார்.


"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,

                  பசுஏது, பாசம்ஏது,

         பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,

                  பாவபுண் ணியங்கள் ஏது,

வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,

                  மனம்விரும்பு உணவு உண்டு, நல்

         வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு

                  மலர்சூடி, விளையாடி,மேல்

கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு

                  கலந்து மகிழ்கின்ற சுகமே

         கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்

                  கயவரைக் கூடாது அருள்,

தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

                  தலம் ஓங்கு கந்தவேளே!

         தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

                  சண்முகத் தெய்வமணியே!"


    உடம்பே உயிர், உடம்பால் அடையும் இன்பமே மோட்சம் எனக் கருதுகின்ற உலகாயத நிலை விருதா என்றும், மடவார் மயலாலே அந்த வாழ்வு அவமாகிப் போகும் என்றும் அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் அறிவுறுத்தினார்.


"மின்அனைய பொய்உடலை நிலைஎன்றும், மைஇலகு

                 விழிகொண்டு மையல்பூட்டும்

      மின்னார்கள் இன்பமே மெய் என்றும், வளர்மாட

                 மேல்வீடு சொர்க்கம் என்றும்,

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி, இப்

                 பொய்வேடம் மிகுதிகாட்டி,

      பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நற்குணம் எலாம்

                 போக்கிலே போகவிட்டு,

தன்நிகர் இல் உலோபாதி பாழ்ம்பேய் பிடித்திட,

                 தரணிமிசை லோகாயதன்

      சமயநடை சாராமல், வேதாந்த சித்தாந்த

                 சமரச சிவாநுபூதி

மன்ன, ஒருசொல் கொண்டு, எனைத் தடுத்து ஆண்டன்பின்

                 வாழ்வித்த ஞானகுருவே!

      மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே! மூலன்

                 மரபில்வரு மௌனகுருவே." -- தாயுமானாவர்.


காகத்திற்கு எந்த மரக்கிளையும் நிலையானது அல்ல என்பது சிந்தனைக்கு உரியது. உயிருக்கு வாய்த்த இந்த உடம்பு நிலையானது அல்ல. உடம்பே நிலையானது என்பவர், பிறப்பு இறப்பு இரண்டுக்கும் உரியவர் ஆகிறார். உயிருக்கு நிலையான இடம் வீடுதான். நிலையான வீட்டை உதவும் இறைவனை வணங்க வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டது.


பொது - 1109. உம்பரார் அமுது

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

உம்பரார் அமுது (பொது)


முருகா! 

காமக் கடலினின்றும் முத்திக் கரை சேரத் திருவருள் புரிவாய்.


தந்தனா தனதனந் தந்தனா தனதனந்

     தந்தனா தனதனந் ...... தனதான


உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்

     டுண்டுமே கலைகழன் ...... றயலாக


உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்

     பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே


செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ்

     சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத்


திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ்

     சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன்


கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்

     கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக்


கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்

     கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா


அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்

     றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள


அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்

     தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


உம்பர் ஆர் அமுது எனும் தொண்டைவாய் அமுதம்உண்டு,

     உண்டு, மேகலை கழன்று, ...... அயலாக,


உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி, அன்பு

     ஒன்று இலாரொடு துவண்டு, ...... அணைமீதே


செம்பொன்ஆர் குடம் எனும் கொங்கை, ஆபரணமும்

     சிந்த, வாள் விழி சிவந்து, ...... அமர் ஆடத்


திங்கள் வேர்வு உற அணைந்து, இன்ப வாரியில் விழும்

     சிந்தையேன் என விதம் ...... கரைசேர்வேன்?


கொம்புநால் உடைய வெண் கம்ப மால் கிரிவரும்

     கொண்டல் ப்லோமசையள் சங்க் ...... ரம, பாரக்


கும்பமால் வரைபொருந்து, இந்த்ர பூபதி தரும்

     கொண்டல் ஆனையை மணம் ...... செயும்வீரா!


அம்பு ராசியும் நெடும் குன்றும், மாமரமும் அன்று

     அஞ்ச, வானவர் உறும் ...... சிறைமீள,


அங்க நான் மறைசொலும் பங்கயாசனம் இருந்து,

     அங்கை வேல் உற விடும் ...... பெருமாளே.


பதவுரை


கொம்பு நால் உடைய --- நான்கு தந்தங்களைக் கொண்டதும் 

        வெண் கம்ப மால் கிரி வரும் கொண்டல் --- வெண்மையான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனனும், 

புலோமசையள் சங்க்ரம பார கும்ப மால் வரை பொருந்து இந்த்ர பூபதி தரும் --- புலோமசை எனப்படும் இந்திராணியின் மிக்கு எழுந்து, கனத்து குடத்தைப் போன்றும், பெரிய மலையினைப் போன்றும் உள்ள தனங்களை அணைகின்ற இந்திரனின் யானை வளர்த்த,

        கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா --- மேகத்தைப் போன்று அருள்மிக்கவர் ஆகிய தேவயானையைத் திருமணம் புணர்ந்த வீரரே!

அம்புராசியும் --- பெரிய கடலும்,

        நெடும் குன்றும் --- நெடிய கிரவுஞ்ச மலையும்,

        மா மரமும் அன்று அஞ்ச --- மாமரமாய் நின்ற சூரபதுமனும் அச்சம் கொள்ளவும், 

        வானவர் உறும் சிறை மீள --- தேளவர்கள் தாங்கள் அடைபட்டு இருந்த சிறையினின்றும் வெளியேறவும்,

அங்க நான்மறை சொ(ல்)லும் பங்கயாசனம் இருந்து --- ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும் உபதேசித்து அருள்கின்ற பதும ஆசனத்தில் வீற்றிருந்து,

  அம் கை வேல் உற விடும் பெருமாளே --- அழகிய திருக்கையில் விளங்கும் வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

        அணை மீதே --- படுக்கையில் கிடந்து,

உம்பர் ஆர் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டு உண்டு --- தேவர்கள் உண்ணுகின்ற அமுதம் போன்றது என்று எண்ணி, பொதுமகளிரின் கொவ்வைப் பழம் போலச் சிவந்த வாயில் ஊறுகின்ற எச்சிலைப் பருகிப் பருகி,

        மேகலை கழன்று அயலாக --- இடையில் உள்ள ஆடை விலகி விழ, 

உந்தி வாவியில் விழுந்து --- கொப்பூழ் ஆகிய குளத்தில் விழுந்து,

        இன்பமா(க) முழுகி –-- சுகமாக அழுந்தி அனுபவித்து, 

    அன்பு ஒன்று இலாரொடு துவண்டு --- அன்பு என்பது இல்லாத பொதுமகளிரோடு கலந்து சோர்வுற்று,

செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த --- அழகிய பொன்னால் ஆன குடம் போன்று உள்ள முலைகளின் மீது தரித்துள்ள அணிகலன்கள் கழல,

    வாள் விழி சிவந்து அமராட ---  ஒளி பொருந்திய கண்கள் செந்நிறம் கொண்டு கலவிப் போரில் ஈடுபட,

திங்கள் வேர்வு உற அணைந்து --- திங்களைப் போன்ற முகத்தில் வியர்வை அரும்பத் தழுவி,

        இன்ப வாரியில் விழும் சிந்தையேன் --- கலவி இன்பமாகிய கடலிலே விழுவதையே கருத்தாகக் கொண்ட அடியேன், 

        எ(ன்)ன விதம் கரை சேர்வேன் --- எந்த விதத்தில் காமக் கடலிலே இருந்து நற்கதி ஆகிய கரையைச் சேர்வேன்?


பொழிப்புரை


நான்கு தந்தங்களைக் கொண்டதும், வெண்மையான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதம் என்னும் வெள்ளையானையின் மீது வரும் மேகவாகனனும், புலோமசை எனப்படும் இந்திராணியின் மிக்கு எழுந்து, கனத்து குடத்தைப் போன்றும், பெரிய மலையினைப் போன்றும் உள்ள தனங்களை அணைகின்ற இந்திரனின் யானை வளர்த்த, மேகத்தைப் போன்று அருள்மிக்கவர் ஆகிய தேவயானை அம்மையைத் திருமணம் புணர்ந்த வீரரே!


பெரிய கடலும், நெடிய கிரவுஞ்ச மலையும், மாமரமாய் நின்ற சூரபதுமனும் அச்சம் கொள்ளவும், தேவர்கள் தாங்கள் அடைபட்டு இருந்த சிறையினின்றும் வெளியேறவும், ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும் உபதேசித்து அருள்கின்ற பதும ஆசனத்தில் வீற்றிருந்து, அழகிய திருக்கையில் விளங்கும் வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!


படுக்கையில் கிடந்து, தேவர்கள் உண்ணுகின்ற அமுதம் போன்றது என்று எண்ணி, பொதுமகளிரின் கொவ்வைப் பழம் போலச் சிவந்த வாயில் ஊறுகின்ற எச்சிலைப் பருகிப் பருகி, இடையில் உள்ள ஆடை விலகி விழ, கொப்பூழ் ஆகிய குளத்தில் விழுந்து, சுகமாக அழுந்தி அனுபவித்து, அன்பு என்பது இல்லாத பொதுமகளிரோடு கலந்து சோர்வுற்று, அழகிய பொன்னால் ஆன குடம் போன்று உள்ள முலைகளின் மீது தரித்துள்ள அணிகலன்கள் கழல, ஒளி பொருந்திய கண்கள் சிவக்க, கலவிப் போரில் ஈடுபட்டு, திங்களைப் போன்ற முகத்தில் வியர்வை அரும்பத் தழுவி, கலவி இன்பமாகிய கடலிலே விழுவதையே கருத்தாகக் கொண்ட அடியேன், எந்த விதத்தில் காமக் கடலிலே இருந்து நற்கதி ஆகிய கரையைச் சேர்வேன்?


விரிவுரை


உம்பர் ஆர் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டு உண்டு --- 

        இனிமையாகவும், மென்மையாகவும் பேசும் இயல்பை உடைவயர்கள் பெண்கள். "பாலொடு தேன் கலந்து அற்றே, பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்" என்றார் திருவள்ளுவ நாயனார். பால் சுவை மிக்கது. தேனும் சுவை மிக்கது. இரண்டுமே நன்மை பயப்பவை. பாலும் தேனும் கலந்த போது, அந்தக் கலவையின் சுவையானது இன்னது என்று அறியலாகாத இனியதொரு சுவையை உடையது. அதுபோல இன்னது என்று அறிய முடியாத இன்பம் தருகின்ற இனிய மொழியை உடையவள் ஆகிய தலைவியின் காதல் சிறப்பை உரைத்தது இத் திருக்குறள். பணிவுடைய சொல் என்பதால், பணிமொழி என்று நாயனார் காட்டிய நயத்தையும் எண்ணுக. இது பெண்மக்களின் இயல்பு. அன்பு மிகுந்தபோது, தலைவியின் வாழிதழில் ஊறும் எச்சிலைத் தலைவன் சுவைப்பான்.

        அது போலவே, விலைமாதர்களின் இதழூறலைக் காம வயப்பட்டவர்கள், பால் என்றும் அரிய அமுதம் என்றும், கற்கண்டு என்றும், தேன் என்றும் கூறி மகிழ்வர். தம்பால் வரும் ஆடவரை மயக்குவதே தொழிலாக உடையதால், இனிமையாகவும் மென்மையாகவும் பேசுவதில் தேர்ந்தவர்கள் விலைமாதர்கள்.

        இதழூறலைப் பற்றி, இத் திருப்புகழில் அடிகளார், அமுதத்தினை மிகவும் விட்டு, அதில் மாம்பழச் சாற்றினைக் கலந்து, பாலையும், தேனையும் கூட்டி, இனிய கற்கண்டையும் விரவியது போன்ற இனுமையைத் தருகின்ற இதழூறல் என்று காட்டி இருப்பது காண்க.

        இனிமைக்குச் சிறப்புச் சேர்க்க இவ்வாறு கூறினார்.

        இறையின்பமானது எப்படி இனிக்கும் என்பதை, வள்ளல் பெருமான் திருவருட்பாவில் காட்டி உள்ளார்.

தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி,

    சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,

தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தேங்கின்

      தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,

இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி

      எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,

அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,

      அடிமலர்க்கு என்சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!


“எதிரும் புலவன் வில்லிதொழ

    எந்தை உனக்குஅந் தாதிசொல்லி

ஏழைப்புலவர் செவிக்குருத்தோடு

    எறியும் கருவி பறித்தெரிந்த,


அதிரும் கடல்சூழ் பெரும்புவியில்

    அறிந்தார் அறியார் இரண்டுமில்லார்,

ஆரும் எனைப்போல் உனைத் துதிக்க

    அளித்த, அருண கிரிநாதன்


உதிரும் கனியை நறும்பாகில்

    உடைத்துக் கலந்து, தேனை வடித்து

ஊற்றி, அமுதின் உடன்கூட்டி,

    ஒக்கக் குழைத்த ருசிபிறந்து


மதுரம் கனிந்த திருபுகழ்ப்பா

    மாலை புனைந்தான் வருகவே!

வரதச் சரதத் திருமலையின்

    மழலைக் குழவி வருகவே!”                                                    


எனத் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடல் காட்டி இருப்பதும் காண்க.

இறையருள் வயப்பட்டோர்க்கு  உண்டாகும் இன்பத்தை இப் பாடல்கள் உணர்த்தி நின்றன. இந்த இன்பம் மேன்மையை அளிக்கும்.

ஆனால், காமவயப்பட்டோர்க்கு விலைமாதர் தரும் அதரபானமானது எப்படித் தித்திக்கும் என்பதை இப் பாடலில் அடிகளார் காட்டி, விலைமாதர் தரும் இன்பம் கேட்டினை அளிக்கும் என்பதை உணர்த்தினார்.


உந்தி வாவியில் விழுந்து --- 

உந்தி – கொப்பூழ். வாவி – குளம்.

“உந்தி என்கின்ற மடு” என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளார்.

ஆழமுள்ள மடுவில் வீழ்ந்தோர்கள் கரை சேர்வது எத்துணை அரிதோ, அத்துணை அரிது பொதுமாதரின் உந்தித் தடத்தில் வீழ்ந்தோர்களும் முத்திக் கரை சேர்வது.

“அவத்தமாய்ச் சில படுகுழி தனில் விழும்"    ---(பழிப்பர்)  திருப்புகழ்.                                                              

“பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்

 பலபல விதமுள துன்ப சாகர

 படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக னென்று சேர்வேன்”.   -- உரைதரு (திருப்புகழ்)                              

“அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன்”     --- திருவருட்பா.   


இன்ப வாரியில் விழும் சிந்தையேன், எ(ன்)ன விதம் கரை சேர்வேன் --- 

வாரிதி – கடல். காமத்தைக் கடலாக உருவகித்தார் அடிகாளர்.

“காமக் கடல் மன்னும் உண்டே, அது நீந்தும்

ஏமப் புணை மன்னும் இல்.” -- திருக்குறள்.


“காமம்வீழ் இன்பக் கடலாமே, காதலரின்

ஏம இருக்கையே தூந்திரையாம், - ஏமத்தீண்டு

ஆம்பரலே தோன்றும் அளி, ஊடல் ஆம்பரலில்

தெற்றித் தெறிப்பாம் ஒளி,ஒளிபாய் கண்ணேசீர்த்து

உற்று உகப்பாய்ப் பெற்ற மகவு.” ---  இன்னிலை.

        காமமானது யாவரும் விரும்புகின்ற இன்பக் கடலாகும். காதலன் காதலி இருவரும் கூடிய இன்பத்தின் இருக்கையே வீசும் அலையாகும். அவ்வின்பத்தினின்று உண்டாகும் அன்பே முத்தாகும், அம்முத்தினின்று தெளிந்து எழுகின்ற ஒளியே ஊடலாம், அவ்வொளி பாய்கின்ற இடமே சிறந்து மகிழ்வுடன் பெற்ற குழவிகளாம். காதலர் இருவர்க்கும் காமத்தின் அளவு குறைவு நிறைவின்றி என்றும் பெருகியிருப்பதால் காமத்தைக் கடல் என்றார். அலை வருவது போலப் புணர்ச்சி மேன்மேலும் நிகழ்வதால் அதனை அலை என்றார்.  காதலன் காதலியாகிய இருவரிடத்தும் புணர்ச்சி நிகழினும் ஒத்த அன்பு தோன்றுவது அருமையாதலால் அதனை முத்து என்றார்.                                            

      ஆழமாகிய பெரிய மடுவில் வீழ்ந்தோர்கள் புணையின் துணையின்றி எங்ஙனம் கரையேறுதல் முடியாதோ, அங்ஙனமே பொதுமாதரின் உந்தி என்கின்ற பெரிய மடுவில் வீழ்ந்தோர்கள் கரை சேர முடியாது. அவர்கள் முருகப்பெருமானது தண்டை அணி வெண்டையங் கிண்கிணி சதங்கைகள் கொஞ்சும் திருவடித் தாமரையைப் புணையாகப் பற்றினாலன்றி, அம் மடுவினின்றும் உய்ந்து முத்தி என்கிற கரைசேர்ந்து முடிவிலா இன்பத்தை நுகர முடியாது.

        தன் நாயகனுக்கு மாத்திரம் இன்பம் அளிக்க அலங்காரம் பண்ணிக் கொள்ளும் பெண்ணின் அழகு பிறர் கண்களில் படாது. பிறர் கண்களில் படவேண்டும் என்றே தம்மை அலங்காரம் பண்ணிக் கொண்டு,  ஆடவர் உள்ளங்களை மயக்கிக் கவரும் சித்திர மாதர்கள் உள்ளனர்.  அத்தகைய சித்திர மாதர் மேனி முழுவதும் வெங்காம சமுத்திரம் படர்ந்திருக்கிறது. அருணகிரிநாதர் இங்கே கற்புடைய பெண்களைக் குறிக்கவில்லை. பிறர் கண்ணில் பட்டும் மையல் செய்யாத கற்புடைய மங்கையர்களுடைய அழகு அவர்களுடைய கணவர்களுக்கு மட்டுமே குளிர்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கும். கடல் பரவிக் கிடக்கின்றது என்றாலும் அதில் ஒரு துளியாவது மனிதனுடைய தாகத்தை அடக்காது. கடல் நீரைப் பருகப் பருகத் தாகந்தான் அதிகமாகும். அதைப்போல, காமத்தை அனுபவிக்க அனுபவிக்க மேலும் மேலும் தாகம் உண்டாகும்.  காமம் மேலும் வளரும். அந்தக் காமக்கடல் புறப் பார்வையில் படும்படியாகப் பொதுமாதர்களுடைய உறுப்புக்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தன் புறக் கண்களால் இந்த அழகைப் பார்த்து மனத்தை இழப்பவன், அக்கடலுள் மூழ்கித் துன்புறுகிறான். வாழ்நாளை வீணாக்கிக் கொண்டு ஆழ்ந்து போகிறான். 

        சமுத்திரத்தைக் கடக்க வேண்டுமானால் தெப்பம் வேண்டும். தெப்பம் ஏது?  என்றால்,  "கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத் திடத்தில் புணை என யான் கடந்தேன்" என்கின்றார் அருணகிரிநாதர். காமத்தை வெல்லக் காமத்தை வென்றவன்தான் வழி காட்ட முடியும். குறமகள் வள்ளியை நாடித் தேடிச்சென்று திருமணம் புணர்ந்த முருகப் பெருமான் திருவருள் என்னும் தெப்பம் தனக்குத் துணையாக வாய்த்தது என்கின்றார். வள்ளித் திருமணம் என்பது, காமத் திருமணம் அல்ல.  அது ஞானத் திருமணம். பக்குவப் பட்ட ஆன்மாவைத் தேடிச் சென்று இறைவன் அருள் புரிந்த வரலாற்றைக் குறிப்பால் உணர்த்துவது அது. இறைவன் மாசு இல்லாத அடியார்களைத் தேடிச் சென்று ஆட்கொண்டு அருள்வான். "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே, அங்ஙனே நின்று வாழும் மயில் வீரன்" என்று முருகப் பெருமானைக் காட்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

கற்பில் சிறந்த பெண்களைக் காணும்போது காம உணர்வு தலைக் காட்டாது. ஆண்களுடைய பெயர்களுக்குப் பிறகு செட்டியார், ரெட்டியார், முதலியார், ஐயர் என்ற பட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் பெயர்களுக்குப் பின் எந்தச் சாதிக்காரர்களாக இருந்தாலும் "அம்மாள்" என்ற பட்டமே உள்ளது. லட்சுமி அம்மாள், சரசுவதி அம்மாள், பாகீரதி அம்மாள் என்று எந்தப் பெண்மணியாக இருந்தாலும் அம்மாள் என்று அழைப்பதே வழக்கம். அண்ணன், தனது தங்கையை 'அம்மா' என்றே அழைக்கும் பாங்கும் இருந்தது.  தந்தையும் தனது மகளை, 'அம்மா' என்றே அழைப்பார். மனைவியைத் தவிர மற்ற பெண்கள் எல்லாரும் அம்மாவே. காமத்தை வெல்ல வேண்டியவர்கள் உலகிலுள்ள பெண்களைத் தாயாகப் பார்க்க வேண்டும். தாயாகப் பழக வேண்டும். தாயிடம் பேசுவது போலப் பேசவேண்டும். பெண்டாட்டி என்ற சொல்லுக்கு இயல்பான பொருள் பெண் என்பதுதான். அதற்கு இப்போது மனைவி என்ற பொருள் வந்துவிட்டது. மனைவி ஒருத்தியைத்தான் பெண்ணாகக் கண்டார்கள்.  மற்றவர்களைத் தாயாகப் பார்த்தார்கள். 

திருவள்ளுவர், பேராண்மை என்று சொல்கிறார். இதற்கு வீரம் என்றும் பொருள். மனிதன்,  அகவீரம், புறவீரம் என்று இரண்டு விதமான வீரம் உடையவன்.  உடம்பின் ஆற்றலால் தன்னை எதிர்க்கின்றவர்களோடு போராடி வெல்வது புறவீரம். அகவீரம் என்பது காமத்தை வெல்லும் வீரம். உலகிலுள்ள பெண்களைத் தாயாகப் பாவித்து, தன் உள்ளத்தில் எழுகின்ற வெங்காமத்தைப் பொசுக்கி வெல்கின்ற வீரமே அகவீரம். "புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்" என்பார் ஔவைப் பிராட்டியார்.

அகப் பகையை வென்றவர்கள் முனிவர்கள். புறப் பகையை அடக்கும் ஆண்மை உடையவர்களுக்கும், வீரம் மிக்கவர்களுக்கும் உட்பகையாகிய காமத்தை அடக்குவது அருமை. புறப்பகையை அடக்க ஆண்மை வேண்டுமென்றால் அகப்பகையை அடக்கப் பேராண்மை வேண்டும். அகப்பகையை வென்றவர் மாபெரும் வீரர். திருவள்ளுவ நாயனார், "பிறன்மனை நோக்காத பேராண்மை" என்கின்றார். 

முருகப் பெருமான் திருவருளே புணையாக, கலங்காத திட சித்தத்தைக் கொண்டு, பொதுமார் இன்பம் என்னும் காமசமுத்திரத்தைக் கடந்து விட்டதாக அருணகிரிநாதர் பாடுகின்றார்.  

“கடத்தில் குறத்தி பிரான்அருளால் கலங்காத சித்தத்

திடத்தில் புணைஎன யான்கடந் தேன்,சித்ர மாதர்அல்குல்

படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பணையில்உந்தித்

தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.”   --- கந்தரலங்காரம்.


கொம்பு நால் உடைய வெண் கம்ப மால் கிரி --- 

நான்கு தந்தங்களைக் கொண்டதும், வெண்மையான தூண் போன்ற கால்களை உடையதும் இந்திரனுடைய வெள்ளையானை. 


கொண்டல் --- 

கொண்டல் – மேகம். மேகத்தை வாகனமாக உடையவன் இந்திரன். எனவே, அவன் கொண்டல் எனப்பட்டான். 


புலோமசையள் ---

இந்திரன் தேவியான இந்திராணிக்கு புலோமசை என்று ஒரு பெயர் உண்டு. 


ஆனையை மணம் செயும் வீரா --- 

ஆனை – தேவயானை. தேவலோகத்தில் உள்ள இந்திரனின் யானையால் வளர்க்கப் பெற்றவர். ஆனையை மணந்தவர் என்பதால், முருகப் பெருமானை, “ஆனைதன் நாயக” என்று பிறிதொரு திருப்புகழில் போற்றினார் அடிகளார்.


அம்புராசி --- 

பெரிய கடல்.


நெடும் குன்று --- 

நெடிய மலை. இங்கே கிரவுஞ்ச மலையைக் குறித்தது. 

        மாயைகள் பலவற்றைப் புரிந்த கிரவுஞ்ச மலையானது அஞ்சும்படியாக முருகப் பெருமான் வேலாயுத்ததை ஏவி அருளினார். ஏழு கடல்களும் வற்றிப் போயின. அரக்கர் குலம் முழுதும் விண்ணுலகுக்குச் சென்றது.

கிரவுஞ்ச மலை - வினைத்தொகுதி.

தாரகன் - மாயை. 

சூரபதுமன் - ஆணவம்.

சிங்கமுகன் - கன்மம்.

கடல் - பிறவித் துன்பம்.

        இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார். "மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.


"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

      துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி, அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

     சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!" -- திருப்பரங்குன்றத் திருப்புகழ்

        கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

    "நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

    வேல் - வெல்லும் தன்மை உடையது. பதிஞானம். பதிஅறிவு. "ஞானபூரண சத்தி தரித்து அருள் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவே. ஆன்மாக்களின் வினையை வெல்லும் தன்மை உடையது வேல்.


மா மரமும் அன்று அஞ்ச, வானவர் உறும் சிறை மீள அம் கை வேல் உற விடும் பெருமாளே --- 

        முருகப் பெருமானுடைய விசுவ ரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான்.  கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தான். ஆலகாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான்.  அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.

“நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,

பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,

எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்,

கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்.”

“தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,

மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,

பாவலர்க்கு எளியாய் ஓலம்,  பன்னிரு புயத்தாய் ஓலம்,

மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம், ஓலம்.”


    "எம்பெருமானே! அடியவர்களாகிய எங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கிவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருள் உருவம் அழிந்தது.

 

“ஏய் என முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்

ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்

தீ அழல் சிகழி கான்று சென்றிட, அவுணன் கொண்ட

மாஇருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே.”

 

    அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவிலே ஒளித்தான். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.

 

“திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்

உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்”.  ---  வேல் வகுப்பு.

                                                                                                            

        சூரபதுமன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்று, மண்ணும் விண்ணும் நிழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு, ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரபதுமன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.

 

“புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை இடையின் ஏகி

அங்கியின் வடிவம் நீங்கி, அருள்உருக் கொண்டு, வான்தோய்

கங்கையில் படிந்து மீண்டு, கடவுளர் இடுக்கண் தீர்த்த

எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற்று இருந்ததுஅன்றே.”

 

    சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபதுமன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.

 

“தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா

மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிர் இரண்டு கூறும்

சேவலும் மயிலும் ஆகி சினங்கொடு தேவர் சேனை

காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான்.”

 

    அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும்,  சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார்.  

        ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபதுமன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான். அது அவனது தவத்தின் பெருமை! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையை அளக்க வல்லார் யார்?  ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.

 

“மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன், எந்தை

அருள்கெழு நாட்டம் சேர்ந்த ஆங்குஅவன் இகலை நீங்கித்

தெருள்கெழு மனத்தன் ஆகி நின்றனன், சிறந்தார் நோக்கால்

இருள்கெழு கரும்பொன் செம்பொன் ஆகிய இயற்கை யேபோல்.”

 

“தீயவை புரிந்தா ரேனும் முருகவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோ, அடுசமர் அந்நாள் செய்த

மாயையின் மகனும் அன்றோ வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்.”

 

    இடுக்கண் தீர்ந்த இமையவர், முருகப்பெருமான் மீது பூமழை பொழிந்தனர். பாமலர் மொழிந்தனர். தேவர்கள் சிறை மீண்டனர்.

 

“வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்

சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய

துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா

ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என

மேவத் தனித்து உயர்த்த மேலோனே!”  --- கந்தர் கலிவெண்பா.


கருத்துரை


முருகா! காமக் கடலினின்றும் முத்திக் கரை சேரத் திருவருள் புரிவாய்.




























































48. குளிர் காய நேரம் இல்லை


"உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்

   வளர்க்கஉடல் உழல்வ தல்லால்

மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்

   தினம்பணிய மாட்டேன்! அந்தோ!

திரு இருக்கும் மணிமாடத் தண்டலைநீள்

   நெறியே! என் செய்தி யெல்லாம்

சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய

   நேரம்இல்லாத் தன்மை தானே!"


இதன் பொருள் ---


திரு இருக்கும் மணிமாடத் தண்டலை நீள் நெறியே - செல்வம்  நிலைத்த மணிமாடங்கள்  நிறைந்த "திருத்தண்டலை" என்னும் திருத்தலத்தில் "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!


உரு எடுத்த நாள் முதலா  ஒருசாணும்  வளர்க்க உடல் உழல்வது அல்லால் - இந்த உடம்பைத் தாங்கி வந்த நாள்முதலாக ஒருசாண்  வயிற்றைக் காக்கவே இந்த உடம்பைக் கொண்டு உழைப்பது அல்லாமல்,  அந்தோ - ஐயோ! மரு இருக்கும் நின் பாதமலர் தேடித் தினம் பணியமாட்டேன் - மணங்கமழும் தேவரீருடைய திருவடி மலரை நாடி ஒவ்வொரு நாளும் வணங்காமல் விட்டு விட்டேன்! (என் செயலை என்ன யென்று சொல்லுவது?) 


என் செய்தி எல்லாம் - என் செய்கை யாவும், சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய நேரம் இல்லாத் தன்மை தானே - (குளிரைப் போக்க எண்ணியவனுக்கு) சருகு அரிக்க நேரம் இருக்குமே ஒழியக் குளிர்காய்வதற்கு நேரம் இல்லாத இயல்பு போலும்!


      உழைத்துப் பொருள் சேரப்பதிலேயே கருத்து இருக்கும். இறைவன் தந்தது என்று அவனை வழிபட மனம் இருக்காது. வயிறார உண்டு உடுப்பதற்கோ அல்லது இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுவதற்கோ மனம் வராது என்பது கருத்து. “சருகு அரிக்க நேரமே ஒழியக் குளிர் காய நேரம் இல்லை' என்பது பழமொழி. 


நல்லோர்கள் வாழும் முறை

“கூடியே சோதரர்கள் வாழ்தலா லும்,தகு

     குழந்தைபல பெறுதலாலும்,

குணமாக வேபிச்சை யிட்டுண்கை யாலும்,

     கொளும்பிதிர்க் கிடுதலாலும்,


தேடியே தெய்வங்க ளுக்கீத லாலும்,

     தியாகம் கொடுத்தலாலும்,

சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச்

     சினத்தைத் தவிர்த்தலாலும்,


நாடியே தாழ்வாய் வணங்கிடுத லாலும்,மிக

     நல்வார்த்தை சொல்லலா லும்,

நன்மையே தருமலால் தாழ்ச்சிகள் வரா; இவை

     நல்லோர்கள் செயும்முறைமைகாண்!


வாடிமனம் நொந்துதமிழ் சொன்னநக் கீரன்முன்

     வந்துதவி செய்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர!ஈசனே!


இதன் பொருள் ---


     மனம் வாடி நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன்வந்து உதவி செய்த முருகா - உளம் சோர்ந்து (திருமுருகாற்றுப்படை என்னும்) தமிழ்ப்பாடலைப் பாடிய நக்கீரதேவர்முன் எழுந்தருளி அருள்புரிந்த முருகப் பெருமானே!,

     மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

சோதரர்கள் கூடியே வாழ்தலாலும் - உடன்பிறந்ததோர் ஒன்றாகக் குடி இருந்து வருவதாலும், தகு குழந்தை பல பெறுதலாலும் -  நல்ல மக்கள் பலரைப் பெறுவதாலும், குணமாகவே பிச்சை இட்டு உண்கையாலும் - நற்பண்புடன் பிறருக்குப் பகுத்து உண்டு சாப்பிடுவதாலும், கொ(ள்)ளும் பிதிர்க்கு இடுதலாலும் – ஏற்றுக் கொள்ளும் தென்புலத்தார்க்குக் கொடுப்பதாலும், தெய்வங்களுக்குத் தேடியே ஈதலாலும் - தெய்வங்களை நாடி வழிபாட்டு, தெய்வத் திருப்பணிகளுக்குப் பொருளைக் கொடுப்பதாலும், தியாகம் கொடுத்தலாலும் - வறியோர்க்கு வழங்குவதாலும், சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச் சினத்தைத் தவிர்த்தலாலும் - அறிவில் சிறியோர் புரியும் தப்புகளை மன்னித்துக் கோபம் கொள்ளாமல் விடுதலாலும், நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் - (பெரியோர்களை நாடிச் சென்று அவர்களைப் பணிந்து வணங்குவதாலும், மிக நல்வார்த்தை சொல்லலாலும் - சாலவும் இனிய சொற்களையே பேசுவதாலும், நன்மையே தரும் அ(ல்)லால் தாழ்ச்சிகள் தரா - நன்மையே உண்டாகும் அல்லாது குறைவுகள் உண்டாகமாட்டா; இவை நல்லோர்கள் செய்யும் முறைமை - இவைகள் நல்லோர்களின் இயல்புகள்.

     தென்புலத்தார் (பிதிரர்) - நம் முன்னோர்களில் இறந்தவர்கள். அவர்களுக்கு இடுதலாவது அவர்களுடைய ஆன்மா அமைதி அடைய வறியோருக்குக் கொடுத்தல். ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை' என்றார் திருவள்ளுவ நாயனார். தெபுலத்தார் என்னும் சொல்லுக்கு, வ.உ.சி. அவர்கள், அறிவில் சிறந்தோர் என்றே பொருள் கொண்டு உள்ளதும் அறியத் தக்கது.

நக்கீரனுக்கு அருளிய கதை:     

கீரம் - சொல், நக்கீரர் - நல்ல இனிய சொற்களை உடையவர். இவர் கடைச் சங்கத்து நாற்பத்தொன்பது புலவர்களில் தலைமை பெற்றவர். அஞ்சா நெஞ்சும் ஆழ்ந்த அறிவும் உறுதியும் உடைய நல்லிசைப் புலவர்.

    சிவ பூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண்பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களையெல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக் குகையில் அடைத்து வைத்து அவர்க்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.


    நக்கீரர் ஒரு சமயம் தலயாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்துவிட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.

    அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்து சேர்ந்தாய். நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே; பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமே? என்ன செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். முன்னொரு காலத்தில் இலக்கத்து ஒன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால், அவன் திருக்கை வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டி 'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய  கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையும் காத்தருளியது.

“அருவரை திறந்து, வன் சங்க்ராம கற்கிமுகி அபயம் இட, அஞ்சல் என்று அம் கீரனுக்கு உதவி” என்பது அருணகிரிநாதர் அருளிய பூதவேதாள வகுப்பு “பழுத்தமுது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் இசைக்கு உருகி வரைக் குகையை இடித்துவழி காணும்” என்பது அருளகிரிநாதர் அருளிய வேல்வகுப்பு.


“ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்

     உண்கின்ற கற்கி முகிதான்

ஒன்று குறை ஆகிவிடும் அன்று நக்கீரர்வர,

    ஓடிப் பிடித்து, அவரையும்   

காராய குன்றத்து அடைத்து,உரிய நியதிக்

    கடன் துறை முடிக்க அகலக்

கருதி முருகாறு அவர் உரைத்தருள, நீலக்

    கலாப மயில் ஏறி அணுகிப்

பேரான குன்றம் திறந்து,இவுளி முகியைப்

    பிளந்து, நக்கீரர் தமையும்

பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,

    பிரான் முகலி நதியின் மேவச்

சீராய திருவருள் புரிந்தகரன் ஊராளி

    சிறுதேர் உருட்டி அருளே,

செய செயென அமரர்தொழ, அசுரர் மிடி சிதறுமுனி

    சிறுதேர் உருட்டி அருளே."              --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.


47. குற்றம் குற்றமே

“மற்றவரோ தமிழ்பாடி நாட்டவல்லார்?

     நக்கீரர் வலிய ராகி

வெற்றிபுனை மீனாட்சி சுந்தரநா

     யகரடுத்து விளம்பும் போதில்,

பற்றுளதண் டலைவாழும் கடவுளென்றும்

     பாராமற் பயப்ப டாமல்

நெற்றிவிழி காட்டுகினும் குற்றமே

     குற்றம்என நிறுத்தி னாரே.”


இதன் பொருள் –


வெற்றி புனை மீனாட்சிசுந்தர நாயகர் அடுத்து விளம்பும் போதில் – வெற்றியை உடைய  மீனாட்சி சுந்தரேசர் வந்து  தமது பாட்டில் குற்றம் கூறியபொழுது, நக்கீரர்  வலியராகி - நக்கீரர்  மொழித் திறன் உடையவராய், பற்று உள தண்டலை வாழும் கடவுள் என்றும் பாராமல் பயப்படாமல் - (வந்திருப்பது தமக்குப்) பற்றாக உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருகோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருள் என்று எண்ணாமலும், அஞ்சாமலும், நெற்றிவிழி காட்டுகினும் குற்றமே குற்றம் என நிறுத்தினார் - நெற்றி விழியைக் காட்டினாலும் குற்றம் குற்றமே ஆகும் என நிலை நிறுத்தினார்.


தருமி என்னும் அந்தணருடைய வறுமையைத் தீர்க்கச் சோமசுந்தரக் கடவுள் ‘கொங்குதேர் வாழ்க்கை' என்னும் செய்யுளை எழுதிக் கொடுத்தார். அதனைக் கொண்டுசென்று பாண்டியனிடம் காட்டினார் தருமி. பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்று தான் நினைத்த கருத்து அச் செய்யுளில் இருப்பது கண்ட பாண்டியன் அதற்கென முடித்திருந்த பொன் முடிப்பைச் சங்கத்தாரிடம் பெற்றுக்கொள்ளச் சொன்னான். சங்கத் தலைவரான நக்கீரர், அச் செய்யுள் குற்றமுடையது என்று  திருப்பிவிட்டார். தருமி சோமசுந்தரரிடம் முறையிட்டான். அவர் ஒரு புலவனாக வந்து வினவியபோது ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு' என இருப்பதால் அச் செய்யுள் குற்றமுடையது என்றார் நக்கீரர். சிவபிரான் தம் நெற்றிவிழி காட்ட, நெற்றிவிழி காட்டினும் குற்றம் குற்றமே என வாதித்தார். பிறகு, நெற்றிவிழியின் வெம்மையால் தாக்கப்பெற்றுப் பொற்றாமரையில் வீழ்ந்தார். புலவர்கள் வேண்ட, அருள்கூர்ந்து நக்கீரரை வெளியேற்றி அகத்தியரால் இலக்கணம் உணரச் செய்து திருத்தினார் சோமசுந்தரப் பெருமான்.


நன்மை தராத செயல்கள்

“அண்டிவரும் உற்றார் பசித்தங் கிருக்கவே

     அன்னியர்க் குதவுவோரும்,

ஆசுதபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்பின்

     அற்பரை அடுத்தபேரும்,


கொண்டஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக்

     கொண்டாடி மருவுவோரும்,

கூறுசற் பாத்திரம் இருக்கமிகு தானமது

     குணம்இலார்க் கீந்தபேரும்,


கண்டுவரு புதியோரை நம்பியே பழையோரைக்

     கைவிட் டிருந்தபேரும்,

கரிவாலை விட்டுநரி வால்பற்றி நதிநீர்

     கடக்கின்ற மரியாதைகாண்!


வண்டடர் கடப்பமலர் மாலிகா பரணம்அணி

     மார்பனே அருளாளனே!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


இதன் பொருள் –


வண்டு அடர் கடப்பமலர் மாலிகா ஆபரணம் அணி மார்பனே - வண்டுகள் நெருங்கும் கடப்பமலரால் ஆன மாலையையும் அணிகலனையும் அணிந்த திருமார்பினரே!


அருளாளனே – அருளை உடையவரே!


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் – தன்னை நாடி வரும் உறவினர் பசியுடன் இருக்க, பிறர்க்கு உதவி செய்பவரும், 


ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டுப் பின் அற்பரை அடுத்த பேரும் - குற்றம் அற்ற நல்லோரிடம் கொண்ட நட்பை விடுத்து, கீழ்மக்களிடம் நட்புக் கொண்டவரும், 


கொண்ட ஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக் கொண்டாடி மருவுவோரும் – மணம் புரிந்துகொண்ட இல்லாள்  ஒருத்தி இருக்கவும் வேசையைப் பாராட்டி, அவளோடு கலந்து இன்புற்று இருப்போரும், 


கூறு சற்பாத்திரம் இருக்கக் குணம் இலார்க்கு மிகு தானம் அது ஈந்த பேரும் – சொல்லப்பட்ட ஒழுக்க நெறியில் நிற்கும் தக்கவர்கள் இருக்க, தகாதவர்களுக்கு மிகுந்த பொருளைத் தானமாக வழங்கியவரும், 


கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரைக் கைவிட்டு இருந்த பேரும் - (அப்போதுதான்) தன்னைப் பார்க்க வருகின்ற  புதியவர்களை நம்பி, முன்னமே பழகி இருந்தவர்களைக் கைவிட்டு இருந்தவர்களும்,


கரி வாலை விட்டு, நரிவால் பற்றி நதிநீர் கடக்கின்ற மரியாதைகாண் - யானையின் வாலை விட்டுவிட்டு, நரியின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றுநீரைக் கடக்கும் தன்மை உடையவர்கள் என்பதை அறிக.


விரிவுரை


‘மாலிகா’ என்னும் வடசொல், தமிழில் மாலை என்று பொருள்படும். ஆசு - குற்றம். தபுதல் - கெடுதல். சற்பாத்திரம் – ஒழுக்க நெறியில் நின்றோரும், அதிதிகளும். 

“கரிவாலை விட்டு நரிவால் பிடித்தல்” என்பது ஒரு பழமொழி. பிறரை ஏமாற்றி, வஞ்சித்துத் தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணம் நரிக்கு உண்டு என்று சொல்லப்படும். அத்தகைய எண்ணம் உடையோர்கள் நரிக்குணம் உடையோர் என்று சொல்லப்படுவர். நரியின் வாலைப் பிடித்தக் கொண்டு நதியைக் கடக்க எண்ணுவது ஒருவனுக்குப் பெருந்துன்பமாகவே முடியும். கரி – யானை. யானையின் வாலைப் பிடித்துக் கொண்டால், நதியைக் கடக்க முடியும்.


அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் –--

தான் அடைந்த பெரிய செல்வத்தால், தனக்கும் தனக்குத் துணையாக இருக்கும் சுற்றத்தவர்க்கும் எல்லா வித நன்மைகளையும் செய்துகொள்வதற்கு அறியாமல், பெற்ற செல்வத்தைப் பெருக்கவும், காக்கவும் வல்லமை இல்லாமையால், தன்னோடு சம்பந்தம் இல்லாத அயலவர் அதனால் உண்டான பயன்களை நிறைய அனுபவித்து இருக்க, சுற்றத்தார் பசி நோயால் வருந்துவர். அறிவில்லாதவன் பெற்ற செல்வமானது உதவ வேண்டியவர்க்கு உதவாமல், அயலவர் அனுபவிப்பதற்கு உரியது ஆகும் என்பதை காட்ட, “ஏதிலார் ஆர, தமர் பசிப்பர், பேதை பெரும்செல்வம் உற்றக் கடை” என்னும் திருக்குறளை அருளினார் நாயனார். “செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்” என்பது ‘வெற்றிவேற்கை’


“விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்

வருந்தும் பசிகளையார், வம்பர்க்கு உதவல்,

இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ஆற்றக்

கரும்பனை அன்னது உடைத்து.”      --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


இரும் பணை வில் வென்ற புருவத்தாய் - பெரிய மூங்கிலால் ஆகிய வில்லினைத் தனது வடிவத்தால் வென்ற புருவத்தினை உடையவளே! விரும்பி அடைந்தார்க்கும் - உணவிற்கு ஒன்றும் இன்மையால் வருந்தி, அறிமுகம் உள்ளதால் தன்னை விரும்பி வந்து அடைந்த அதிதிகளுக்கும், சுற்றத்தவர்க்கும் - தம் உறவினர்க்கும், வருந்தும் பசி களையார் - அவர்களை வருத்துகின்ற பசியினை நீக்காதவராகி, வம்பர்க்கு உதவல் – புதிதாக வரும் அயலார்க்கு உதவி செய்தல், ஆற்ற கரும்பனை அன்னது உடைத்து - மிகவும் (தன்னைப் பாதுகாத்து வளர்த்ம்ர்க்குப் பயன்படாது நெடுங்காலஞ் சென்று பிறர்க்குப் பயன்படும்) கரிய பனையைப் போலும் தன்மையை உடையது.


“பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட

மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்று உகுக்கும்;

வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்

வண்மையும் அன்ன தகைத்து.” --- நாலடியார்.


இதன் பொருள் ---


பொன் நிறச் செந்நெல் பொதியொடு பீள் வாட மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும் - பொன்னின் நிறத்தை உடைய உயர்ந்த செந்நெல் என்னும் பயிரானது, மேலே மூடியுள்ள தாளுடன் உள்ளிருக்கும் கருவும் வாட, மின்னல் மிளிரும் மேகம் கடல்பகுதியில் நீர் சொரிந்து பெய்யும்; வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக் கால் வண்மையும் அன்ன தகைத்து - அறியாமையுடைய புன்மக்கள் சிறந்த செல்வத்தை அடைந்தால் அவருடைய கொடைத் திறமும் அதுபோன்ற இயல்பினதே ஆகும். (புன்மக்கள் செல்வம் தேவையற்றோர்க்கு எல்லாம் கொடுக்கும்படி நேர்ந்து வீணாகச் செலவழியும்.)


ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டுப் பின் அற்பரை அடுத்த பேரும் ---


ஆசு – குற்றம். தபுதல் – நீக்குதல். பெரியோரைத் துணைக் கொண்டு வாழ்ந்தால், ஒருவனிடத்து உள்ள குற்றங்கள் அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறையும். தெய்வத்தாலாவது, மனிதராலாவது தனக்கு வந்த துன்பங்களை நீக்கும் விதத்தை அறிந்து நீக்கி, பின்னர் அது போன்ற துன்பங்கள் வாராதபடி, முன்னமே அறிந்து காக்கவல்ல தன்மையினை உடையாரை, அவர் மகிழத் தக்கனவற்றைச் செய்து, அவரைத் துணையாக்கிக் கொள்ளவேண்டும். 


தெய்வம் என்பது ஊழைக் குறிக்கும். எனவே, ஊழால் வரும் துன்பங்களான மழையில்லாமையாலும், அதிக மழையாலும், காற்று, தீ, பிணி முதலியவற்றாலும் வருவன. இத் துன்பங்கள் தம்மோரையும், கடவுளரையும் நோக்கிச் செய்யும் சாந்தி முதலியவைகளால் நீக்கப்படும். மக்களால் வரும் துன்பங்கள் ஆவன; பகைவர், கள்வர், சுற்றத்தார், தொழில் புரிவோர் ஆகிய இவர்களால் வருவன. அத் துன்பங்கள் சாம, பேத, தான, தண்டம் என்னும் நால்வகை உபாயங்களுள், தக்க உபாயத்தால் நீக்கப்படும்.


தெய்வத்தால் வரும் துன்பங்களை தீ நிமித்தம் அல்லது அறிகுறிகள் ஆகியவைகளால் அறிந்து, சாந்திகளால் காத்துக் கொள்ளலாம். மனிதரால் வரும் துன்பங்களை அவரது குணம், இங்கிதம், ஒழுக்கம், செயல் ஆகியவற்றால் அறிந்து, நால்வகை உபாயங்களுள் ஒன்றால் காத்துக் கொள்ளலாம். இவ்விரண்டுக்கும் பெரியோரது துணை நிச்சயம் தேவை. எனவேதான், “உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்” என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.


“மூத்தோர் சொல்லும் முழுநெல்லிக் காயும் முன் துவர்க்கும் பின் இனிக்கும்” என்னும் பழமொழிக்கு ஏற்ப மூத்தோர் கூறும் அறிவுரைகள் தொடக்கத்தில் இன்பம் தருவனவாக இரா. "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்பது, மூத்தவர்களின் அறிவுரைகள் ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றினாலும், இறுதியில் இனிமையான பயனைத் தரும் என்பதை உணர்த்தும் ஒரு பழமொழி. இது, மூத்தவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் வழங்கும் வழிகாட்டுதல்கள், வாழ்வின் கசப்பான உண்மைகளைப் போன்றே, ஆரம்பத்தில் சில சிரமங்களைத் தந்தாலும், பின்னாளில் அவை நமக்கு நன்மைகளையும், தெளிவையும் அளிக்கும் என்பதால் அமிர்தம் போன்றது என்பதை அறிவுறுத்த வந்த பழமொழி. “பெரியோர்களிடைக் கரவாகி” என்பார் அருணகிரிநாதர். சிறியோர் அறியாமையால் செய்யம் தவறுகளைச் சுட்டிக்காட்டி, பெரியோர் இடித்து உரைப்பர். அது சிறியோருக்குத் துன்பம் தருவதாகத் தோன்றும். எனவே, பெரியோர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் விலகுவதும், அவரைக் காண நேர்ந்தால் காணாதது போல் விலகிச் செல்வதும் பேதைகளின் இயல்பு.


“செயல்வேண்டா நல்லனசெய்விக்கும்; தீய

செயல்வேண்டி நிற்பின் விலக்கும்; இகல்வேந்தன்

தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்

முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


மூத்தார் வாய்ச்சொல் - அறிவால் மூத்த அமைச்சர்கள் கூறும் சொற்கள், செயல் வேண்டா நல்லன செய்விக்கும் - செய்யமுடியாத நல்லனவற்றைச் செய்விக்கும்; தீய செயல் வேண்டி நிற்பின் - அரசன் தீயசெயல்களைச் செய்ய முனைந்து நிற்பின், விலக்கும் - இடைநின்று தடுத்தலைச் செய்யும், இகல் வேந்தன் தன்னை - பகை அரசனை, நலிந்து - வலியுறுத்தி, தனக்கு உறுதி கூறலால் - அவனுக்கு உறுதியாயினவற்றைக் கூறுதலால்.முன் இன்னா - முன்னே துன்பம் தருவதாக இருக்கும் (பின்னே மிக்க இன்பத்தை அளிக்கும்.)


அமைச்சர் கூறும் சொற்கள் நல்லன செய்விக்கும் தீயன விலக்கும் என்பதாம். அமைச்சருக்குச் சொன்னதால், இது மனித இனத்துக்கே பொருந்தும் எனக் கொள்ளுதல் வேண்டும்.


“கங்கைநதி பாவம், சசிதாபம், கற்பகம்தான்

மங்கல் உறும்வறுமை மாற்றுமே, - துங்கமிகும்

இக்குணம்ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில்

அக்கணமே போம்என்று அறி.” ---  நீதி வெண்பா.


இதன் பொருள் ---


கங்கை நதியானது பாவத்தை நீக்கும். திங்கள் வெப்பத்தைப் போக்கும், கற்பகமரம் எல்லா நன்மைகளையும் மங்குமாறு செய்யும் வறுமையையும் நீக்கும். பாவம் தாபம் வறுமை ஆகிய இந்த மூன்று தீய குணங்களும், உயர்வு மிக்க பெரியோரிடம் சேர்ந்தால், அந்தக் கணத்திலேயே அழிந்து போகும் என்று நீ அறிந்து கொள்வாயாக.


கொண்ட ஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக் கொண்டாடி மருவுவோரும் –--

கொண்ட கணவன் இருக்க, வேறு ஓர் ஆடவனை விரும்பும் பெண்ணும் பரத்தை என்றே கருத வேண்டும். விரும்பி மணம் புணர்ந்து கொண்ட மனையாள் இல்லத்தில் இருக்க அவளோடு கூடி இன்பத்தைத் துய்க்காது, பரதாரம் துய்த்தல், மாக வயப்பட்டு அறிவு மயக்கம் கொண்டவர்கள் செய்யும் தகாத செயல். நீதிமுறை தவறி, பிறனுடைய மனையாளிடத்தல் இன்பம் வேண்டிச் செல்வோனிடத்து, பகையும், குடிப் பழியும், அச்சமும், பாவமும் என்னும் இந் நான்கு குற்றங்களும் என்றும் நீங்காமல் இருப்பன, அவன் இம்மை மறுமை நலன்களை இழப்பான் என்பதை அறிவுறுத்த, “பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவா ஆம் இல் இறப்பான்கண்” என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.


“அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்

நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும்

கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்

நம்பற்க நாணுடை யார்.” ---  நாலடியார்.


இதன் பதவுரை ---


அச்சம் பெரிதால் - உண்டாகும் அச்சம் பெரிதாதலாலும், அதற்கு இன்பம் சிற்றளவால் – அந்தப் பெரிய அச்சத்துக்கு ஈடாக அடையும் இன்பம் சிறிதளவே ஆதலாலும், நிச்சம் நினையுங்கால் கோ கொலையால் - நாள்தோறும் நினைக்கும் இடத்து அதற்கு ஏற்ற தண்டனை என்பது உண்மையாக அரசனது கொலைக் கட்டளையாக அமையும் என்பதாலும், நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் - நாள்தோறும் “கும்பிபாகம்” நரகத்துக்கே செல்வதற்கு உருவாகிய செயல் அது ஆதலாலும். பிறன் தாரம் நம்பற்க நாண் உடையார் -பழி பாவங்கட்கு அஞ்சுதல் உடையார் பிறன் மனைவியை விரும்பாமல் இருக்கவேண்டும்.


“அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்

பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா, - பிறன்தாரம்

நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம் என்று

அச்சத்தோடு இந்நாற் பொருள்.” --- நாலடியார்.


இதன் பதவுரை ---


அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - புண்ணியம், புகழ், தக்கார் நேயம், ஆண்மை என இந் நான்கும்; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன் மனைவியை விரும்புவாரிடத்தில் சேரமாட்டா; பகை பழி பாவம் என்று அச்சத்தோடு இந் நாற்பொருள் - பிறர் பகையும் பழியும் பாவமும் அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும், பிறன் தாரம் நச்சுவார்ச் சேரும் - பிறன் மனைவியை விரும்புவாரிடத்துச் சேரும்.


“புக்க இடத்து அச்சம், போதரும் போது அச்சம்,

துய்க்கும் இடத்து அச்சம் தோன்றாமல் காப்பு அச்சம்,

எக்காலும் அச்சம் தருமால், எவன்கொலோ

உட்கான் பிறன்இல் புகல்.” ---  நாலடியார்.


இதன் பதவுரை ---


புக்க இடத்து அச்சம் – பிறன் மனைவி இருக்கும் இடத்தில் புகும்போது அச்சம்; போதரும் போது அச்சம் - திரும்பி வரும்போது அச்சம்; துய்க்கும் இடத்து அச்சம் - இன்பத்தை நுகரும்போது அச்சம்; தோன்றாமல் காப்பு அச்சம் - பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ள வேண்டுமே என்னும் அச்சம்; எக்காலும் அச்சம் தரும் - இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும்; எவன் கொலோ உட்கான் பிறன் இல் புகல் - இவற்றை எல்லாம் கருதாமல், ஒருவன் பிறன் மனைவியை விரும்பி ஒழுகுதல் ஏனோ? (பிறன் மனைவியை விரும்பி ஒழுகுதலில் முழுதும் அச்சமே அல்லாமல் இன்பமே இல்லை)


“காணின் குடிப்பழியாம் ; கையுறின் கால்குறையும்;

ஆண்இன்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்

துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட

இன்பம் எனக்கெனைத்தால் கூறு.” --- நாலடியார்.


இதன் பதவுரை ---


காணின் குடிப்பழி ஆம் - பிறர் கண்டு விட்டால் குடிக்குப் பழிச்சொல் வந்து சேரும்; கையுறின் கால் குறையும் - கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் - ஆண்மை இல்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - நெடுங்காலம் நரகத் துன்பத்தைப் பின்பு உண்டு பண்ணும். துச்சாரி - தீயொழுக்கம் உடையவனே! நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு - நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு? எனக்குச் சொல்.


"ஓவியம் அமைந்தநகர் தீ உண உளைந்தாய்,

கோஇயல் அழிந்தது என, வேறொரு குலத்தோன்

தேவியை நயந்துசிறை வைத்த செயல் நன்றோ?

பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ?". - கம்பராமா. யுத்த. மந்திரப்படலம், 

இதன் பதவுரை ---


கோ இயல் அழிந்தது என - நமது ஆட்சியின் தன்மை அழிந்து விட்டது என்று; ஓவியம் அமைந்த நகர் - சித்திரங்களால்  அலங்கரிக்கப்பட்ட இலங்கை மாநகரத்தை;  தீ உண உளைந்தாய் - (அனுமன்  வைத்த) தீ உண்டமைக்கு மனம் வருந்தினாய்; வேறு ஒரு குலத்தோன் தேவியை  நயந்து - அரக்கர் இனம் அல்லாத வேறு ஒரு குலத்தவனான இராமனுக்கு உரிய மனைவியான சீதையை விரும்பி; சிறை வைத்த செயல் நன்றோ - (கவர்ந்து வந்து) சிறையில் வைத்த  உனது செயல் நல்லதோ? பாவியர் உறும் பழி - பாவம் செய்தவர்   அடையும் பழிகளிலே;  இதின் பழியும் உண்டோ - இதை விடவும் கொடிய பழி வேறு  உள்ளதோ?

 

“கொலை அஞ்சார் பொய்ந் நாணார் மானமும் ஓம்பார்

களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார் - பழியோடு

பாவம் இஃது என்னார், பிறிதுமற்று என்செய்யார்?

காம்ம கதுவபட் டார்.” -- நீதிநெறி விளக்கம்       


இதன் பதவுரை ---


காமம் கதுவப்பட்டார் - காமத்தால் பற்றப்பட்டவர்கள், கொலை அஞ்சார் - கொலை புரியப் பயப்படார், பொய் நாணார் - பொய் சொல்லக் கூசார், மானமும் ஓம்பார் - தம் பெருமையையும் பாதுகாவார், களவு ஒன்றோ - களவு செய்தல் ஒன்று மட்டுமா? (அதற்கு மேலும்) ஏனையவும் செய்வார், மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும் செய்வார், இஃது - இந்தக் காமம், பழியொடு பாவம் என்னார் - பழியொடு பாவம் ஆகுமே என்றும் நினையார், (அங்ஙனமாயின் அவர்) பிறிது என் செய்யார் - வேறு யாதுதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செய்கைகளும் செய்வார்.


“இன்பமோ சிறிது ஆகும், இதில்வரும்

துன்பமோ கரை இல்லாத் தொடுகடல்

என்பது, ஆரும் இவனால் அறிய, இவ்

வன்பது அன வினையால் வருந்துவான்.” - தி.வி. புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.


இதன் பதவுரை ---


இன்பமோ சிறிது ஆகும் - (காமத்தால் வரும்) இன்பமோ அற்பமாகும், இதில் வரும் துன்பமோ கரை இல்லாத் தொடு கடல் - இதனால் விளையும் துன்பமோ கரையில்லாத கடலாகும், என்பது - என்னும் உண்மையை, ஆரும் இவனால் அறிய - யாவரும் இப்பாவியினால் அறிந்து கொள்ள, இவ்வன்பது ஆன வினையால் வருந்துவான் - இக் கொடுமையான தீவினையால் வருந்துவான் ஆயினன்.


கூறு சற்பாத்திரம் இருக்க, குணம் இலார்க்கு மிகு தானம் அது  ஈந்த பேரும் –-


கூறு - புகழ்ந்து சொல்லப்படுகின்ற. சற்பாத்திரம் – நல்ல பாத்திரம். நற்குணம் பொருந்தியவர்களை இது குறிக்கும். கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் நிறைந்த நல்லோருக்குத் தானம் கொடுத்தால், அது பெரும்பயனைத் தரும். அல்லாதாருக்குச் செய்த உதவி பாவத்தையே கொடுக்கும்.


மிகு தானம் – மிகுதியாகத் தானம் கொடுத்தல் தானம் அல்லது உதவி என்பது மூன்று வகைப்படும். கைம்மாறு கருதியோ, அச்சம் காரணமாகவோ செய்யப்படுவது 'அதமதானம்'. 'மத்திம தானம் ' என்பது, ஏழை, குருடர், முதலியோர்க்குப் புண்ணியம் கருதிக் கொடுத்தல். 'உத்தம தானம்' என்பது, நல்வழியில் ஈட்டிய பொருளை, கைம்மாறு கருதாமல், புண்ணியம் என்ற எண்ணமும் இல்லாது, வறியவர்க்கும், தக்கார்க்கும் கொடுத்து உதவுதல்.  தக்க பெரியோர்க்குச் செய்த உதவியானது, அவர்க்குப் பயன்படாது, அவர் மூலமாகப் பிற நல்ல செயல்களுக்குப் பயன்படுவதால், அந்த தானம் "உத்தம தானம்" எனப்பட்டது.

 

தீயவர்க்குச் செய்த உதவியானது, அவர்க்கே நன்மையாய் முடியும். சில சமயங்களில், தீமையாகவே முடிவதும் உண்டு என்பதால் அது சிறப்பிக்கப்படவில்லை. தீயவர் என்றால், அவர்க்கு உதவியே செய்யக் கூடாதா? என்னும் ஐயம் எழும். அவர்க்குப் பசி தணிவித்தல் மட்டுமே புரிக என்றார் வள்ளல்பெருமான். காரணம், பசி என்பது அரசன், ஆண்டி, செல்வர், வறியவர் எல்லார்க்கும் உள்ளது.

 

இதனை வைத்தே, ஔவைப் பிராட்டியார், பின்வரும் பாடலை "மூதுரை" என்னும் நூலில் அருளிச் செய்தார்...

 

"நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே, --- அல்லாத

ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர்மேல் எழுத்திற்கு நேர்."

 

இதன் பதவுரை ---

 

     நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் - நற்குணம் உடைய ஒருவர்க்குச்  செய்த உதவியானது, கல்மேல் எழுத்துபபோல் காணும் - கருங்கல்லின் மேல் செதுக்கப்பட்ட எழுத்தைப் போல அழியாது விளங்கும். (ஆனால்) அல்லாத ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் - நல்லவர் அல்லாத, உள்ளத்தில் அன்பு இல்லாத மனத்தை உடையவர்க்குச் செய்த உதவியானது, நீர்மேல் எழுத்திற்கு நேர் - நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு, ஒப்பாக அப்போதே அழிந்து விடும். (அல்லாத - நல்லவர் அல்லாத. ஈரம் இலா - அன்பு இல்லாத.)

 

      நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலைபெற்று விளங்கும். தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும் என்பது இப் பாடலின் கருத்து.

 

கயவர்களின் அறிவு, நன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்து எண்ணி நிற்கும். "உதவி வரைத்து அன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து." என்னும் இத் திருக்குறளின் மூலம் "ஒருவருக்குச் செய்யும் உதவியானது, அதற்கான காரணமும், பொருளும், காலமும் ஆகிய மூன்று வகையாலும் செய்த உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல. அந்த உதவியைப் பெற்றுக் கொண்டவரின் தகுதியைப் பொறுத்தே அதன் சிறப்பு அமையும்" என்கின்றார் நாயனார். மூன்று வகையாலும் அல்லாத உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்ததும், தக்க காலத்தில் செய்ததும், பயனை எதிர்நோக்காது செய்த உதவியும் ஆகும். அதாவது, பிறர் செய்த உதவியை ஏற்றுக் கொண்டவர், அவருக்கு அவர் செய்த உதவியின் காரணம் மற்றும் உதவி செய்த பொருளின் அளவு, ஆகியவற்றிற்கு ஏற்ப பிரதி உதவி (கைம்மாறு) செய்யாது, தமது தகுதிக்கு ஏற்பச் செய்தல் ஆகும்.

 

     உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்வதும், ஆபத்து நேர்ந்த காலத்தில் செய்வதும், பயனை எதிர்பாராது செய்வதும், 

பிறர் செய்த உதவிக்கு ஏற்றவண்ணம், பிரதி உதவி (கைம்மாறு) செய்யாது, அவர் மனம் மகிழும் வண்ணம், தமது தகுதிக்கு ஏற்றவாறு மறு உதவி செய்வதும் ஆகும். எனவே, காரணம் கருதியும், பொருள் கருதியும், காலம் கருதியும் செய்யும் உதவியானது, ஒரு பயனை நோக்கியதாக இருத்தலால், அது சிறந்தது ஆகாது.

 

     நல்லோர்க்குச் செய்த உதவியானது எப்போதும் நிலைத்து நின்று, நல்ல பயனையே தரும் என்பதற்குப் பின்வரும் பாடல்களைக் காணலாம்.

 

"உறக்கும் துணையது ஓர் ஆலம்வித்து, ஈண்டி

இறப்ப நிழல் பயந்தாஅங்கு, - அறப்பயனும்

தான்சிறிது ஆயினும், தக்கார்கைப் பட்டக்கால்

வான்சிறிதாப் போர்த்து விடும்."           --- நாலடியார்.

 

இதன் பதவுரை ---

 

     உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து - (செயல் ஏதும் இல்லாமல் ஒடுங்கி இருக்கின்ற) மிகச்சிறிய அளவினதான ஓர் ஆலம் விதையானது, ஈண்டி இறப்ப நிழல் பயந்தாங்கு - (மண்ணில் விழுந்து முளைத்துத்) தழைத்துப் (பெரிய மரமாகி) பல நூறு பேர் வந்து தங்கி, இளைப்பாற) மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப் பயனும் தான் சிறிதாயினும் - அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தருகின்ற பொருளும், அளவில் சிறியதே ஆனாலும், தக்கார் கைப்பட்டால் - தகுதியுடைய பெரியோர் கையில் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்து விடும் - வானமும் சிறிது என்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.

  

"கடித் தாமரைக் கண்ணன் விழிக் கமலம் தர,

அடித் தாமரைச் சுடர்ப் பரிதி அளித்தருளினை, அதனால்

புதுமலர்ப் பொழில் தில்லை வாண!

உதவியின் வரைத்தோ அடிகள் கைம்மாறே.

 

என்கின்றார் "சிதம்பர செய்யுட் கோவை" என்னும் நூலில் குமரகுருபர அடிகள்.

 

இதன் பொருள் ---

 

     தாமரைக் கண்ணன் ஆகிய திருமால் தனது  கண்ணை இடந்து, சிவபெருமான் திருவடியில் இட்டுப் பூசையை நிறைவு செய்தான். அதற்கு,  சிவபெருமான் சூரியன் போலப் போரொளி விளங்கும் (சலந்தராசுரனை வதம் செய்த) சக்கரப்படையைத் திருமால் கையில் தந்தான். எனவே, மேலோர்க்குச் செய்த உதவி மேலான பயனை விளைக்கும். சிவபெருமான் அருளிய உதவி, திருமால் புரிந்த பூசைக்கும் மேலானது. எனவே, சிவபெருமான் திருமால் புரிந்த பூசனைக்குக் கைம்மாறாகப் புரிந்த உதவியானது மிக உயர்ந்தது. மேலான பரம்பொருளைப் பூசித்ததால், மேலான பலனைத் திருமால் பெற்றார்.

 

தக்கார்க்குச் செய்த உதவியானது, பின்னர் பல்கிப் பெருகிப் பயன் தருவது போல, சரயு நதியின் வெள்ளப் பெருக்கு இருந்த்து என்கிறார் கவிச்சக்கரவர்த்தி.  


"மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனுநெறி

போன தண்குடை வேந்தன் புகழ் என,

ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்

தானம் என்ன, தழைத்தது நீத்தமே."    ---  கம்பராமாயணம்.

 

இதன் பதவுரை ---

 

     மானம் நேர்ந்து - மான உணர்வு பொருந்தி; அறம் நோக்கி - தருமநெறி கருதி;  மனுநெறி போன - மனுநீதிப்படி நடக்கும், தண் குடை வேந்தன் புகழ் என - குளிர்ந்த வெண்கொற்றக் குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும்;  ஞானம் முன்னிய - ஞான வழியை நாடுகின்ற;  நான்மறையாளர் கைத் தானம் என்ன - நான்கு  மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும்;  நீத்தம் தழைத்தது - சரயு ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.

 

     மானம் பேணி அறநெறி நோக்கி உயிர்க் குலத்திற்கு நல்லருட் காவல் வழங்கும் மன்னவனின் புகழ் ஓங்கும். தக்கார்க்கு வழங்கிய  கொடையின் பயன் ஓங்கும். அதுபோல, சரயு நதியின் வெள்ளப் பெருக்கு ஓயாது இருந்தது

 

     ஓலக்க மண்டபத்துடன் அரியாசனத்தின் மேல் நிழற்றும்   வெண்கொற்றக் குடை நிழலுக்காக ஏற்பட்டது இல்ல.  துன்புறும் உயிர்க் குலத்தின் துயர்  துடைக்கும் அருளுக்கு ஓர் அடையாளம் அது. மாவலிச் சக்கரவர்த்தி, "உனது காலடிகளால் மூன்று அடி மண்ணை அளந்து கொள்க" என்று கூறிக்கொண்டு வாமனன்  கையிலிருந்த குண்டிகை நீரை வாங்கித் தாரை வார்த்தான். மாவலி தாரை வார்த்த நீரரானது, தனது கையில் பட்டதும், பெற்றவர்களும் இகழும்படியான மிகச்சிறிய வடிவத்தை உடைய  வாமனமூர்த்தி,  வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு வானளாவ உயர்ந்தான். அவன் உயர்ந்த்து எப்படி இருந்தது என்றால், உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவது போல இருந்தது. "உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்ற திருக்குறள் கருத்துத் தோன்ற, உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல, வாமனமூர்த்தி வானுற ஓங்கி வளர்ந்து நின்றான் என்றார் கம்பநாட்டாழ்வார்.

 

"கயம்தரு நறும்புனல் கையில் தீண்டலும்

பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து, எதிர்

வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்,

உயர்ந்தவக்கு உதவிய உதவி ஒப்பவே."   ---  கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

     கயம் தரு நறும் புனல் - குண்டிகையில் இருந்த, குளத்தின் நறுமணமுள்ள அந்த நீரானது; கையில் தீண்டலும் - தனது கைகளில் தீண்டபப்பட்ட உடனே; பயந்தவர்களும் இகழ் குறளன் - பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமனமூர்த்தி; எதிர் பார்த்து வியந்தவர் - எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்;  வெருக் கொள -அஞ்சும்படியாக;  உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப - அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல;  விசும்பின் ஓங்கினான் - வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.     

 

     இதையே "சிவஞானசித்தியார்" என்னும் மெய்கண்ட சாத்திர நூல் கூறுவதையும் காணலாம்...

 

"சிவஞானச் செயல்உடையோர் கையில் தானம்

          திலம்அளவே செய்திடினும், நிலமலைபோல் திகழ்ந்து,

பவமாயக் கடலின் அழுந் தாதவகை எடுத்து,

          பரபோகந் துய்ப்பித்து, பாசத்தை அறுக்கத்

தவம்ஆரும் பிறப்புஒன்றிற் சாரப் பண்ணி,

          சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே,

நவம்ஆகும் தத்துவஞா னத்தை நல்கி,

          நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே."  

 

இதன் பதவுரை ---

 

      சிவஞானச் செயல் உடையோர் கையில் தானம் திலம் அளவே செய்திடினும் - (விதிவழி இன்றிப் பத்தி வழியில் நின்கின்ற) சிவஞானிகள் கையில் தானம் செய்து அளித்த பொருள் சிறிதே ஆயினும், நிலம் மலைபோல் திகழ்ந்து - நிலமும் மலையும் போல விரிவாகி ஓங்கி விளங்கும். (அத் தானம் செய்த அந்த பத்தருக்கு), 

பரபோகம் துய்ப்பித்து - மேலாகிய (சிவசாலோகம் முதலிய பதங்களில் பொருந்தி உள்ள) இன்பங்களை அனுபவிக்கச் செய்து,  பவ மாயக் கடலில் அழுந்தாத வகை எடுத்து - சனனம் மரணம் என்னும் கடலின்கண் அமிழ்ந்தாத வண்ணம் எடுத்து, பாசத்தை அறுக்க - பாசத்தினை நீக்க (முத்தியை அளிக்க), தவம் ஆரும் பிறப்பு ஒன்றில் சாரப் பண்ணி - தவம் செய்தற்கு உரிய (உயர்ந்த குலத்தில்) ஒரு பிறவியை அடையச் செய்து, சரியை கிரியா யோகம் தன்னினும் சாராமே - சரியை கிரியை யோகங்கள் (ஏனோர்க்குப் போலக் கால நீட்டிப்பும் அருமையும் இன்றி) எளிதில் கைகூடி முற்றுப் பெறச் செய்து, நவம் ஆகும் தத்துவ ஞானத்தை நல்கியே நாதன் அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தான் - (முடிவில்) புதுமையாகிய உண்மை ஞானநெறியைத் தலைப்படுத்தி முதல்வனது செங்கமல மலர்போலும் திருவடியாகிய வீட்டினை எய்துவிக்கும்.


நமது கருமூலம் ஆறுக்க வந்த திருமூல நாயனாரும் இக் கருத்தை வலியுறுத்திப் பாடி உள்ளார்.

 

"திலம் அத்தனையே சிவஞானிக்கு ஈந்தால்,

பலமுத்தி சித்தி பரபோகமும் தரும்;

நிலம் அத்தனைப் பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்,

பலமும் அற்றே, பரபோகமும் குன்றுமே." ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னே ஆயினும், அதனைச் சிவஞானம் கைவரப் பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெரும் சித்திகளையும், பதமுத்தி, பரமுத்தி, அபர முத்திகளையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல இருந்துகொண்டு, யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலம் அத்தனைப் பொன்னைக் கொடுத்தாலும், அது யாதும் பயன் தராது. அல்லாமல், ஞானம் குறைதற்கும் ஏதுவாகி விடும்.


எனவே, தக்கார்க்கே உதவி செய்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.


கண்டு வரு புதியோரை நம்பியே, பழையோரைக் கைவிட்டு இருந்த பேரும் ---


பழைமை என்னும் ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவ நாயனார் இதற்காகப் படைத்து உள்ளார். அதனை ஓதி உணர்க. நெடுநாள் பழகியவரை, அவரிடத்துக் காணும் சிறுகுறை காரணமாக விலக்குதலும் கூடாது. புதிதாக வந்தோரை நம்பி அவர்களைக் கைவிடுதல் கூடாது. பின்வரும் பாடல்களைக் காண்க.


“நல்லார் எனத் தாம் நனிவிரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்;

நெல்லுக்கு உமிஉண்டு, நீர்க்கு நுரைஉண்டு,

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.” --- நாலடியார்.


இதன் பதவுரை ---


நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும் --- நல்லவர் என்று தாம் பலகாலும் ஆராய்ந்து மிகவும் நேசித்துக் கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர் நல்லவர் அல்லாராய் பிழைபட்டார் எனினும் அதனைப் பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கிக் கொள்ளல் வேண்டும்; நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டு புல் இதழ் பூவிற்கும் உண்டு - ஏனென்றால், பயன்படுதல் உடைய, நெல்மணிக்கு அதிலிருந்து நீக்குதற்குரிய உமி உண்டு, அவ்வாறே நீர்க்கு நுரை உண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு. (உலகத்தில் குற்றம் இருத்தல் இயற்கை. ஆதலால், நண்பரிடத்து அதனைப் பாராட்டுதல் ஆகாது.)


“தமர் என்று தாம் கொள்ளப் பட்டவர் தம்மைத்

தமர் இன்மை தாம் அறிந்தாராயின், அவரைத்

தமரினும் நன்கு மதித்துத் தமர் அன்மை

தம்முள் அடக்கிக் கொளல்.” --- நாலடியார்.


இதன் பதவுரை ---


தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம் அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக் கொண்டவரிடத்து இடையே நண்பர் ஆகாத் தன்மையைத் தாம் அறிந்தால், அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல் - அவரை நண்பரினும் மிகுதியாகப் போற்றி அவரது நண்பரல்லாத நிலையைப் புறத்தே தூற்றாமல் தமக்குள் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மிக அருமையான கருத்துச் செறிவு கொண்ட இப் பாடல் கருத்துக்கு ஏற்ற விளக்கத்தினை அரிதில் முயன்று தந்து உள்ளேன். அன்பர்கள் படித்துப் பயன் பெற்றுக் கொள்வதோடு, பிறர்க்கும் பயன் விளையத் தருதல் வேண்டும்.


பொது --- 1108. தந்தமும் துன்ப

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

தந்தமும் துன்ப (பொது)


முருகா! 

உன்பால் அன்பு இன்றி, 

பொதுமாதர் மீது வைத்த அன்பால் விளையும் 

துன்பம் தீர அருள்வாய்.


தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்

     தந்தனந் தந்தனந் ...... தனதான


தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்

     தண்டவொன் றன்றொடுங் ...... கிடுமாவி


தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்

     தன்றுமென் றுந்தனந் ...... தனைநாடி


நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்

     சின்கணன் பொன்றில்மங் ...... கையர்நேசம்


நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந்

     தின்பமொன் றின்றியிங் ...... குழல்வேனோ


சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்

     தொண்டனென் றன்றுகொண் ...... டிடுமாதி


தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன்

     பங்கடிந் தென்பொடுந் ...... தொலையாநீர்


அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்

     தன்றுமின் றும்புனைந் ...... திடும்வேணி


அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென்

     றண்டரண் டந்தொழும் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு, அந்தகன்

     தண்ட ஒன்ற அன்று ஒடுங் ...... கிடும் ஆவி,


தஞ்சம் என்றும் பரிந்து, இன்சொல் வஞ்சம் தெரிந்து

     அன்றும் என்றும் தனம் ...... தனைநாடி,


நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி, நன்று என்று நெஞ்

     சின்கண் அன்பு ஒன்றில் மங் ...... கையர் நேசம்


நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்து,

     இன்பம் ஒன்று இன்றி இங்கு ...... உழல்வேனோ?


சுந்தரன் பந்தமும் சிந்த வந்து, அன்புடன்

     தொண்டன் என்று அன்று கொண் ...... டிடும், ஆதி,


தும்பை செம் பொன்சொரிந்தும் தரும் கொன்றை, துன்-

     பம் கடிந்து என்பொடுந் ...... தொலையாநீர்


அந்தம் முந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து

     அன்றும் இன்றும் புனைந் ...... திடும்வேணி,


அன்பர் நெஞ்சு இன்புறும் செஞ்சொலன் கந்தன் என்று

     அண்டர் அண்டம் தொழும் ...... பெருமாளே.


பதவுரை


சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி --- சுந்தரமூர்த்தி நாயனாரின் பந்தபாசம் நீங்கும்படியாக, பரிவுடன் வந்து “இவன் எனது அடிமை” என்று முன்னொரு நாள் அவரைத் தடுத்து ஆட்கொண்ட முதல்வரும்,


தும்பை --- தும்பை மலரையும்,


செம் பொன் சொரிந்து தரும் கொன்றை --- செம்மையான பொன் போன்ற இதழ்களைச் சொரிந்து விளங்கும் கொன்றை மலரையும், 


துன்பம் கடிந்து என்பொடும் --- உயிர்களின் வினைத் துன்பத்தைத் தொலைக்கும் எலும்பு மாலையுடன்,


தொலையா நீர் --- வற்றாத கங்கை நதியையும்,


அந்தம் முந்து இந்துவும் --- அழகு மிக்கு விளங்கும் பிறைச்சந்திரனையும்,


கெந்தம் மிஞ்சும் கொழுந்து --- நறுமணம் மிகுந்த மருக்கொழுந்து, (ஆகியவற்றை)


அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி அன்பர் ---  பழங்காலம் முதல் இக்காலதிலும் அணிந்த திருச்சடையை உடையவரும், அன்பு வடிவானவரும் ஆகிய சிவபெருமானுடைய


நெஞ்சு இன்புறும் செம் சொ(ல்)லன் கந்தன் என்று --- மனம் குளிரும்படியாக இனிமையான சொற்களைப் பேசுபவனாகிய கந்தச் சுவாமி என்று


அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே --- தேவர்களும் அண்டங்களில் உள்ளோரும் வணங்கித் தொழுகின்ற பெருமையில் மிக்கவரே!


தந்தமும் --- கோரப் பற்களையும்,


துன்ப வெம் சிந்தை கொண்டு – துன்பத்தை விளைவிக்கும் கொடிய மனத்தையும் கொண்டவன் ஆகிய,


அந்தகன் --- இயமன்,


தண்ட ஒன்ற அன்று --- சினத்துடன் எழுந்து நெருங்கி வருகின்ற அக்காலத்தில், 


ஒடுங்கிடும் ஆவி ---  உடலில் இருந்து நீங்கிவிடும் உயிர். (இந்த உண்மைதனை அறிந்து இருந்தும்)


தஞ்சம் என்றும் --- (பொதுமகளிரிடம்) உனது அடைக்கலம் நான் என்றும்,


பரிந்து இன்சொல் வஞ்சம் தெரிந்த அன்றும் என்றும் தனம் தனை நாடி ---  அன்புப் பேச்சுக்களைப் பேசும் அந்த மாதரின் உள்ளத்தில் வஞ்சம் உள்ளது என்று தெரிந்த அன்றும், அதற்குப் பிறகும் கூட, அவர்களுக்குக் கொடுக்கப் பொருளை நாடி (அலைந்து திரிந்து)


நின் தன் அன்பு என்பது ஒன்று இன்றி --- தேவரீரது திருவடிக்கண் அன்பு என்பது சிறிதளவும் இல்லாமல்,


நன்று என்று --- இதுவே நன்மை தருவது என்று மனத்தில் கொண்டு,


நெஞ்சின் கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம் நின்று அளந்தும் --- உள்ளத்தில் அன்பு என்பது ஒரு சிறிதும் இல்லாத மங்கையர்களின் நேசத்தையே கருதி இருக்கின்ற


சளம் கொண்டிடும் புன்கண் நந்த --- மூர்க்கத் தனத்தால் உண்டான துன்பமானது வளர,


இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ --- இன்பம் என்பது ஒரு சிறிதும் இன்றி இந்த உலகில் அடியேன் அலைந்து கொண்டு இருப்பேனோ?

பொழிப்புரை

சுந்தரமூர்த்தி நாயனாரின் பந்தபாசம் நீங்கும்படியாக, பரிவுடன் வந்து “இவன் எனது அடிமை” என்று முன்னொரு நாள் அவரைத் தடுத்து ஆட்கொண்ட முதல்வரும்; தும்பை மலரையும், செம்மையான பொன் போன்ற இதழ்களைச் சொரிந்து விளங்கும் கொன்றை மலரையும், உயிர்களின் வினைத் துன்பத்தைத் தொலைக்கும் எலும்பு மாலையுடன், வற்றாத கங்கை நதியையும், அழகு மிக்கு விளங்கும் பிறைச்சந்திரனையும், நறுமணம் மிகுந்த மருக்கொழுந்து, ஆகியவற்றைப் பழங்காலம் முதல் இக்காலத்திலும் அணிந்த திருச்சடையை உடையவரும், அன்பு வடிவானவரும் ஆகிய சிவபெருமானுடைய மனம் குளிரும்படியாக இனிமையான சொற்களைப் பேசுபவனாகிய கந்தச் சுவாமி என்று தேவர்களும் அண்டங்களில் உள்ளோரும் வணங்கித் தொழுகின்ற பெருமையில் மிக்கவரே!

கோரப் பற்களையும், துன்பத்தை விளைவிக்கும் கொடிய மனத்தையும் கொண்ட இயமன் சினத்துடன் எழுந்து நெருங்கி வருகின்ற அக்காலத்தில், உடலில் இருந்து நீங்கிவிடும் உயிர். இந்த உண்மைதனை அறிந்து இருந்தும் பொதுமகளிரிடம் உனது அடைக்கலமாகப் புகுந்து இருந்தும், மனத்தை மயக்கும் அன்புப் பேச்சுக்களைப் பேசும் அந்த மாதரின் உள்ளத்தில் வஞ்சம் உள்ளது என்று தெரிந்த அன்றும், அதற்குப் பிறகும் கூட, அவர்களுக்குக் கொடுக்கப் பொருளை நாடி அலைந்து திரிந்து, தேவரீரது திருவடிக்கண் அன்பு என்பது சிறிதளவும் இல்லாமல், இதுவே நன்மை தருவது என்று மனத்தில் கொண்டு, உள்ளத்தில் அன்பு என்பது ஒரு சிறிதும் இல்லாத மங்கையர்களின் நேசத்தையே கருதி இருக்கின்ற மூர்க்கத் தனத்தால் உண்டான துன்பமானது வளர, இன்பம் என்பது ஒரு சிறிதும் இன்றி இந்த உலகில் அடியேன் அலைந்து கொண்டு இருப்பேனோ?


விரிவுரை

சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி --- 

பந்தம் சிந்த – உலகப் பற்றானது தொலையும்படியாக.

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதிசைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரர் என்பதாகும். நம்பியாரூரர் என்பதை ஆரூரர் என்று சுருக்கி அழைப்பர். சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். இவருடைய அழகினையும் பொலிவினையும் கண்டு, சிறுவன் சுந்தரனை மகன்மையாகக் கொண்டு, அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். வைதிகத் திருவும் மன்னர் திருவும் பொலிய நம்பியாரூரர் வளர்ந்து வந்தார்.

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நம்பியாரூரர் திருமணக் கோலம் கொண்டு மணம் வந்த புத்தூரில் திருமணப் பந்தருக்கு வந்து சேர்ந்தார். மணவறையில் அமர்ந்தார்.

அந்த வேளையில், திருக்கயிலாயத்திலே, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு வாக்களித்தபடியே, அவரைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டு,  சிவபெருமான் ஒரு முதிய வேதியர் கோலம் தாங்கித் தண்டு ஊன்றி திருமணப் பந்தருள் நுழைந்து, அங்கிருந்த சபையாரை நோக்கி, "இந்த நாவல் நகர் ஊரன் எனது அடிமை" என்றார். சுந்தரர் வெகுண்டு, "அந்தணர் வேறு ஒர் அந்தணருக்கு அடிமை ஆவதில்லை. பித்தனோ மறையோன்" என்றார். வேதியர், "அந்தக் காலத்தில் உனது பாட்டன் எனக்கு எழுதித் தந்த அடிமை ஓலை இருக்கிறது. என்னை இகழாதே" என்றார். "அந்த அடிமை ஓலையைக் காட்டும்" என்றார் சுந்தரர். சபை முன்னே காட்டுவேன் என்றார் வேதியர். சுந்தரர் அவரைத் தொடர்ந்து ஓடி, ஓலையைப் பிடுங்கிக் கிழித்து எறிந்தார்.

அங்கிருந்தவர்கள் அந்தணரைப் பார்த்து, "ஐயரே இந்த உலகத்தில் இல்லாத வழக்கைக் கொண்டு வந்தீர். நீர் இருப்பது எங்கே" என்று கேட்டனர். அதற்கு, "நான் இருப்பது திருவெண்ணெய்நல்லூர். இவன் ஓலையை வலிந்து பிடுங்கிக் கிழித்து எறிந்தான். அதனாலேயே இவன் எனது அடிமை என்பது உறுதி ஆயிற்று" என்றார். அதுகேட்ட சுந்தரர் "உமது ஊரிலேயே இந்த வழக்கைப் பேசலாம்" என்றார். வேதியரும் "அப்படியே செய்வோம். அங்கே மூல ஓலையைக் காட்டி சாதிப்பேன்" என்றார்.

எல்லோரும் திருவெண்ணெய்நல்லூரை அடைந்து, வேதியர்கள் நிறைந்த சபையில் தனது வழக்கை வேதியர் சொன்னார். சபையார் வேதியரைப் பார்த்து, "அந்தணர் அடிமை ஆகும் வழக்கம் இல்லையே" என்றனர். வேதியர் "என் வழக்கு நியாயமானது. இவன் வலிந்து கிழித்த ஓலை படியோலை. மூல ஓலை இதோ பாருங்கள்" என்று காட்டினார். அதில், "திருநாவலூரிலே வாழும் ஆதிசைவனாகிய ஆரூரன் திருவெண்ணெய்நல்லூரில் வாழும் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும் என் மரபினரும் திருவெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு வழித்தொண்டு செய்ய அகமும் புறமும் ஒத்து உடன்படுகின்றோம். இங்ஙனம் ஆரூரன்" என்ற வாசகம் இருந்தது. 

“அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை

பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால்

வரு முறை மரபு உளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை

இருமை யால் எழுதி நேர்ந்தேன்; இதற்கு இவை என் எழுத்து.”  -- பெரியபுராணம்.

சபையார், அந்த ஓலையையும், சுந்தரரின் பாட்டனாருடைய வேறு கையெழுத்துக்களையும் ஒப்பு நோக்கி, சுந்தரரைப் பார்த்து, இந்த வேதியருக்கு அடிமையாய் இருப்பது உமது கடன் என்றனர்.

அந்த வேளையில் சபையார் வேதியரைப் பார்த்து, “முதியவரே! ஓலையில் உமது ஊர் இவ்வூர் என்று உள்ளது. உமது வசிப்பிடத்தைக் காட்டும்” என்றனர். “காட்டுகிறேன் வாரும்” என்று நடந்த வேதியரின் பின்னே சுந்தரமூர்த்தி சுவாமிகளும் மற்றவர்களும் நடந்தனர். அவ்வூரில் உள்ள ‘திரு அருட்டுறை” என்னும் திருக்கோயிலின் உள்ளே நுழைந்து மறைந்தார் வேதியர். எல்லோரும் திகைத்தனர். அப்போது சிவபெருமான் உமாதேவியாருடன் ம்பழவிடைமேல் காட்சி கொடுத்து, “சுந்தரனே! முன்பு நீ நமக்குத் தொண்டன். திருக்கயிலாயத்தில் நமது அணுக்கத் தொண்டனாக இருஉந்த காலத்தில், மாதர் மீது மனம் வைத்தாய். அதனால், நமது ஏவலின்படி இந்த மண்ணில் பிறந்தாய். இவ்வுலக பாசம் உன்னைப் பற்றாதபடிக்கு நாமே தடுத்து ஆட்கொண்டோம்” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

“முன்பு நீ நமக்குத் தொண்டன், முன்னிய வேட்கை கூரப்

பின்பு நம் ஏவலாலே பிறந்தனை; மண்ணின் மீது

துன்பு உறு வாழ்க்கை நின்னைத் தொடர்வு அறத் தொடர்ந்து வந்து

நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம்’ என்றார்.”   --பெரியபுராணம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனின் திருக்கருணையை வியந்து போற்றினார். இவ்வாறு, சமர்த்தாக வெற்றி கொண்டு சுந்தரரை ஓலை காட்டி ஆட்கொண்ட சிவபெருமானுடைய திருக்குமாரரே என்று அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பாடிப் பரவுகின்றார்.


தொலையா நீர் --- 

வற்றாத நீர்ப் பெருக்கை உடைய கங்கை நதி.


அந்தம் முந்து இந்துவும் --- 

அந்தம் முந்து - அழகு மிக்கு விளங்கும். இந்து – சந்திரன். இங்கே  பிறைச்சந்திரனைக் குறித்தது.


கெந்தம் மிஞ்சும் கொழுந்து --- 

கெந்தம் – நறுமணம். கொழுந்து – மருக்கொழுந்து. 


தந்தமும் --- 

தந்தம் – பல். இங்கே இயமனுடைய கோரப் பற்களைக் குறித்தது.


தண்ட ஒன்ற அன்று --- 

தண்டுதல் – சினம் மூண்டு எழுதல்.


பரிந்து இன்சொல் வஞ்சம் தெரிந்த அன்றும் என்றும் தனம் தனை நாடி ---  

பரிந்து – பரிதல் – அன்பு காட்டுதல். தனம்தனை நாடி – பொருளைத் தேடி.

அன்பை நாடாது பொருளையே நாடி இருக்கும் பொதுமகளிரின் உள்ளத்தில் வஞ்சமே நிறைந்து இருக்கும். அது தெரிந்தும், அவர் தரும் கலவிச் சுகத்தைப் பெரிதும் விரும்பி, அவர்க்குக் கொடுப்பதற்காகப் பொருளைத் தேடி காமுகர் அலைவர். பொருளுக்காக அற்பர்களை எல்லாம் புகழ்ந்து கூறி இச்சகம் பேசுவர். அவர்மீது கவிகளையும் பாடுவர்.

அறிவுஇலாப் பித்தர், உன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்

     அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத

அவலர்மேல் சொற்கள் கொண்டு, கவிகள் ஆக்கிப் புகழ்ந்து,

     அவரை வாழ்த்தித் திரிந்து, ...... பொருள்தேடி,

சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,

     தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்

திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, பரிந்து,

     தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே.                        – கச்சித் திருப்புகழ்.


சளம் கொண்டிடும் புன்கண் நந்த --- 

சளம் – மூர்க்கம். புன்கண் – துன்பம். நந்துதல் – வளர்தல். 


கருத்துரை


முருகா! உன்பால் அன்பு இன்றி, பொதுமாதர் மீது வைத்த அன்பால் விளையும் துன்பம் தீர அருள்வாய்.


46. பூனை பிடித்தது விடுமோ?

“பொலியவளம் பலதழைத்த தண்டலைநீள்

     நெறிபாதம் போற்றி நாளும்

வலியவலம் செய்தறியீர்? மறம்செய்வீர்!

     நமன்தூதர் வந்து கூடி

மெலியவரைந் திடுபொழுது கலக்கண்ணீர்`

     உகுத்தாலும் விடுவ துண்டோ?

எலியழுது புலம்பிடினும் பூனைபிடித்

     ததுவிடுமோ? என்செய் வீரே?”


இதன் பொருள் –


பலவளம் பொலியத் தழைத்த தண்டலை நீள்நெறி பாதம் நாளும் போற்றி - பலவகை வளங்களும் அழகுற விளங்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின்  திருவடிகளை எப்போதும் வாழ்த்தி, வலிய வலம்செய்து அறியீர் – (யாரும் வலியுறுத்தாமல்) நீங்களாகவே வலம் வந்து அறியமாட்டீர்கள்! 


(ஆனால்), மறம் செய்வீர் – பாவச் செயல்களைச் செய்வீர்கள்!, 


நமன் தூதர் வந்து கூடி மெலிய வரைந்திடு பொழுது - எமனுடைய தூதர் வந்து சேர்ந்து (நீங்கள்) சோர்வுறும்படி (வாழ்நாளை) எல்லை முடிந்ததைக் கொண்டு, (உடலில் இருந்து உயிரைக் கூறுபடுத்திக் கொண்டு போகும்பொழுது, கலக் கண்ணீர் உகுத்தாலும் விடுவது உண்டோ – கலம் கலமாகக் கண்ணீர் விட்டு அழுதாலும் எமதூதர்கள் உங்களை விட்டுச் செல்வது கூடுமோ?


எலி அழுது புலம்பிடினும் பூனை பிடித்தது விடுமோ - எலியானது கதறி அழுதாலும் (அதனைப் பிடித்த) பூனையானது, தனது பிடியை விட்டுவிடுமோ?, என் செய்வீர் - (எமன்தூதர் அழைக்கும் போது) என்ன செய்வீர்?


விளக்கம் –


    உயிர்களுக்கு அவற்றின் வினைப் போகத்திற்கு ஏற்ப,  உடலைப் படைத்து அருள்புரிகின்றான் இறைவன். உயிரானது உடம்பில் பொருந்துகின்ற கரு உண்டான காலத்திலேயே, அதன் சாதி, ஆயுள், போகம் ஆகியவை நிச்சயிக்கப் பெறுகின்றன. வினை நுகர்வு தீர்ந்து விட்டால், ஒரு கணம் கூட இந்த உடம்பு நில்லாது. "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப்போது அளவும் நில்லாது கண்டாய்" என்றார் பட்டினத்து அடிகள்.

 

      உயிரை உடம்பில் இருந்து கூறு செய்து, உடம்பை விட்டு, உயிரைக் கொண்டுபோக கூற்றுவன் வருவான். அவனது ஏவலின்படிக்கு அமைந்தவன் கூற்றன். உடம்பையும் உயிரையும் கூறு செய்வதால் கூற்றன் எனப்பட்டான். அவன் எப்போது வருவான் என்பது யாராலும் அறிந்துகொள்ள முடியாதது.

 

    எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போக, கூற்றுவன் என்பான் வருவான். அந்த சமயத்தில், அந்தக் கூற்றுவன் ஆனவன், தன்னைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான்,  'வேண்டிய பொருளைத் தருகின்றோம், விட்டுவிடு' என்று மிக்க பொருளைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான வார்த்தைகளைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை அவன் நாளடைவில் பிடித்துச் சென்று இருந்தாலும், நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகாது. ஆகையினால், நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான்.  தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான்.  தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான், தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான். மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான். ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒரு கணப் பொழுதும் தாமதிக்கவே மாட்டான், அவன் அஞ்சா செஞ்சம் படைத்தவன், உயிரைத் தன்னோடு கொண்டு போவான், உடம்பைக் கொண்டு போக மாட்டான். (அது பயன்றறது என்று தள்ளி விடுவான். அருகில் உள்ள சுற்றத்தார் செய்வது ஒன்றும் அறியாது துக்கப்படுவார்கள்.  இயமனிடம் ஒரு கோடி பொன் கொடுத்து, ஒருநாள் வாழச் செய்ய முடியாது.


“நான்முகன் படைத்த நானா வகையுலகில்

ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்,

ஆண் முதிதோ? பெண் முதிதோ? அன்றி அலி முதிதோ

நாள் முதிதோ? கோள் முதிதோ?

நல்வினை முதிதோ? தீவினை முதிதோ?

செல்வஞ்சி றப்போ? கல்வி சிறப்போ?

அல்லது உலகின் அறிவு சிறப்போ?


தொல்லை மாஞாலந் தோற்றமோ? படைப்போ?

எல்லாப் பிறப்பும் இயற்கையோ? செயற்கையோ?

காலத்தால் சாவரோ? பொய்ச் சாவு சாவரோ?

நஞ்சுறு தீவினை துஞ்சுமோ? துஞ்சாதோ?

துஞ்சும் பது அந்தப் பஞ்சேந்திரியம்


என்செயா நிற்குமோ? எவ்விடத்து ஏகுமோ?

ஆற்றல் உடையீர் அருந்தவம் புரிந்தால்

வேற்று உடம்பாகுமோ? தமது உடம்பாகுமோ?

உண்டியை உண்குவது உடலோ? உயிரோ?

கண்டுஇன் புறுவது கண்னணோ கருத்தோ? 15


உலகத்தீரே உலகத்தீரே !

நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து

சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்,

மனிதர்க்கு வயது நூறுஅல்லது இல்லை

ஐம்பது இரவில் அகலும் துயிலினால்,


ஒட்டிய இளைமையால் ஓரைந்து நீங்கும்,

ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்,

எழுபது போக நீக்கி இருப்பன முப்பதே (அவற்றுள்)

இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று

துன்புறு நாளும் சிலவே, ஆதலால்


பெருக்காறு ஒத்தது செல்வம், பெருக்காற்று

இடிகரை ஒத்தது இளமை, இடிகரை

வாழ்மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்,

ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்

நன்றே செய்யவும் வேண்டும், அந்நன்றும்


இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்

இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்

நாளை நாளை என்பீர் ஆகில்,

நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்,

நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்,


எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,

அப்போது, அந்தக் கூற்றுவன் தன்னைப்

போற்றவும் போகான், பொருளொடும் போகான்,

சாற்றவும் போகான், தமரொடும் போகான்,

நல்லார் என்னான், நல்குவு அறியான்,


தீயார் என்னான், செல்வர் என்று உன்னான்,

தரியான் ஒருகணம், தறுகணாளன்,

உயிர் கொடுபோவான், உடல்கொடுபோகான்,

ஏதுக்கு அழுவீர், ஏழை மாந்தார்காள்,

உயிரினை இழந்தோ? உடலினை இழந்தோ?


உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீர் ஆகில்,

உயிரினை அன்றும் காணீர், இன்றுங்காணீர்,

உடலினை அன்றும் கண்டீர், இன்றுங்கண்டீர்,

உயிரினை இழந்த உடலது தன்னைக்

களவு கொண்ட கள்வனைப் போலக்


காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்

கூறை களைந்து, கோவணம் கொளுவி,

ஈமத் தீயை எரியெழ மூட்டிப்

பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்

போய்த் தமரோடும் புந்தி நைந்து அழுவது

சலம் எனப் படுமோ? சதுர் எனப் படுமோ?


என்னும் "கபிலர் அகவல்" கருத்தை இங்கு வைத்து எண்ணுக.


உடம்பில் உயிர் உள்ளபோதே, இறைவன் திருவடியை வாழ்த்தி வணங்கி, நல்வினைகளை ஆற்றி நற்கதிக்கு வழியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டது. “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்னும் ஔவையின் அருள்வாக்கு மறவாமல் கடைப்பிடிக்க வேண்டியது.


மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு, ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும், நாவகமே நாடின் நகை...