001. கடவுள் வாழ்த்து - 07. தனக்கு உவமை





திருக்குறள்
அறத்துப்பால்

பாயிர இயல்
முதல் அதிகாரம் - கடவுள் வாழ்த்து.

           இதில் வரும் ஏழாவது திருக்குறள், "தனக்கு என ஒப்பு இல்லாதவனுடைய திருவடிகளை அடைந்தவர்க்கே மனத் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதல் கூடும்; அல்லாதார்க்கு மனக் கவலையைப் போக்குதல் இயலாது" என்கின்றது.

உவமை இல்லாதவன் -- ஒப்பு இல்லாதவன்.  ஒப்பு இல்லாதவன் எனவே, தன்னினும் உயர்வு உடைமையும் இல்லாதவன் என்பது தெளிவு.

"மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான்" என்கின்றார் அப்பர் பெருமான்.

ஈடும் எடுப்பும்இல் ஈசன்
மாடு விடாதுஎன் மனனே,
பாடும்என் நாஅவன் பாடல்,
ஆடும்என் அங்கம் அணங்கே.

என்பது திருவாய்மொழி. 

"தாழ்ந்தவன் என்று ஒருவனை ஏற்றுக்கொள்ளாது விடுதலும், உயர்ந்தவன் என்று ஒருவனை ஏற்றுக்கொள்ளுதலும் இல்லாத இறைவனுடைய பக்கத்தை என் மனம் விடாது; என் நாக்கும் அவன் பாடல்களையே பாடும்; என் சரீரமும் தெய்வம் ஏறியவர்களைப் போன்று ஆடா நிற்கும்" என்பது இதன் பொருள்.

ஈடும் எடுப்பும் இல் ஈசன் - சிலரை வெறுத்தல், சிலரை ஏற்றுக் கொள்ளுதல் செய்யாத சர்வேசுவரன். அப்படிப்பட்ட இறைவனுடைய திருவடிகளை அடையப் பெற்றவருக்கு மனக் கவலை ஏதும் இல்லை.

மனக் கவலை ஏதும் இன்றி, உனக்கு அடிமையே புரிந்து,
     வகைக்கும் மநு நூல் விதங்கள் ...... தவறாதே,
வகைப்படி மனோ ரதங்கள் தொகைப்படியினால் இலங்கி,
     மயக்கம் அற, வேதமும் கொள் ...... பொருள்நாடி,

வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து, வகையால் நினைந்து,
     மிகுத்த பொருள் ஆகமங்கள் ...... முறையாலே,
வெகுட்சி தனையே துரந்து, களிப்பின் உடனே நடந்து,
     மிகுக்கும் உனையே வணங்க ...... வரவேணும்.

என்றார் அருணகிரிநாதப் பெருமான். இறைவனுக்கு அடிமைப்பட்டவருக்கு மனக்கவலை இல்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனக் கவலை. பிள்ளைகட்குப் படிக்க வேண்டுமே என்ற கவலை. தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமே என்ற கவலை. மனைவிக்கு வேண்டியவற்றை எல்லாம் வாங்குவதில் கவலை. பிள்ளை இல்லை என்ற கவலை. நிரம்பவும் பிறக்கின்றனவே என்ற கவலை. பணம் தேடவேண்டும் என்ற கவலை. தேடிய பொருளைக் கைப்பற்றுவதில் கவலை. பிள்ளைகள் சொற்படி நடக்கவில்லையே என்ற கவலை. வயது முதிர்ந்து விட்டதே என்ற கவலை. நோய்களால் கவலை. மரணம் வருகின்றதே என்ற கவலை! இப்படி, பிறந்தது முதற்கொண்டு இறுதிக்காலம் வரையில் எத்தனையோ கவலைகள்!

இந்த மனக்கவலைகட்கு மருந்து எந்த மருத்துவரிடமும் கிடையாது. தனக்கு உவமை இல்லாத தனிப் பரம்பொருளாம் இறைவன் திருவடி தான் மனக்கவலை மாற்றும் மருந்து.

ஒரு மேஜையின் மீது பல பொருள்கள் இருக்கின்றன. அந்த மேஜையின் மீது மிகப் பெரிய பொருள் ஒன்றை எடுத்து வைப்போமானால் அதில் இருக்கும் பொருள்கள் தாமே கீழே விழுந்துவிடும். அதுபோல் இறைவன் திருவடியாகிய (பெரிய) ஒன்றை நினைக்கும் போது, சிறிய சிறிய எண்ணங்களும் அவற்றால் வரும் கவலைகளும் தாமே விலகி விடும்.

நாம் ஆர்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்,
    நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,
ஏமாப்போம், பிணி அறியோம், பணிவோம் அல்லோம்,
    இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன
    சங்கரன், நல் சங்கவெண் குழையோர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

என்பது அப்பர் திருத்தாண்டகம்.

தான் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மையானவன் இறைவன். அவனே தனக்கு உவமை இல்லாதவன். அவனைச் சார்ந்தவர்க்கு அவனது தன்மையே வாய்க்கும்.

திருக்குறளைப் பார்ப்போம்......

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக் கவலை மாற்றல் அரிது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---              

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் --- ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது;

மனக்கவலை மாற்றல் அரிது --- மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.

("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)

இத் திருக்குறளையும், சாத்திர தோத்திரங்களையும் ஓதித் தெளிந்த கமலை வெள்ளியம்பலவாண முனிவர், தாம் இயற்றிய "முதுமோழிமேல் வைப்பு" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் வெண்பாவைப் பாடி உள்ளார்.


பெற்றது அவர் சைவத்துப் பேத சமாதிஅன்றி
மற்று ஞானாந்தம் என வந்தது இது --- முற்றும்
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக் கவலை மாற்றல் அரிது.

அவர் என்றது பக்குவிகளை. சமாதி --- யோகம். அவர் சைவத்துப் பெற்றது, ஞானானந்தம். பக்குவிகள் யோக மார்க்கத்தை அன்றி ஞான முடிவைப் பெற்றவர்கள். இது என்றது பின்னுள்ள தனக்கு உவமை என்னும் திருக்குறளை. இத் திருக்குறள் கருத்தின்படிக்கு, பக்குவ நிலை வாய்க்கப் பெற்றவர்கள், பேரின்ப நிலையை அடைவதால், அவர்களுக்கு மனத்தில் உண்டாகும் கவலை ஏதும் இல்லை.

இத்திருக்குறள் காமத்துப்பாலைத் தன்னுள் அடக்கிக்கொண்டு உள்ளது என்பர் சித்தாந்திகள். பிறவிக்கு ஏதுவாகிய காம வெகுளி மயக்கங்கள் பற்றி வரும் மனக்கவலையை நீக்கல் ஞானமார்க்கத்தவர்களுக்கே சாத்தியமாகும். மற்ற மார்க்கங்களாகிய சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்று செய்கைகளும் பதமுத்திகளை அளிக்க, ஞானச்செயல் ஒன்றே பரமுத்தி அளித்தலின், அவற்றிலும் அது சிறந்தது ஆயிற்று.

கூற்றுவ நாயனார் தமக்கு இருந்த மனக் கவலையை, தில்லைவாழ் அந்தணர்களை அணுகிப் போக்க முயன்றார்.  முடியவில்லை. இறைவனுடைய திருவடிகளைப் பற்றினார். அவர் எண்ணம் ஈடேறியது. மனக்கவலை இல்லாமல் போனது.

        "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்பார் பாடிய பாடல் வருமாறு...
                                                              
 
ஆற்றரிதாம் ஈசன் அடிமுடியா கப்புனைந்து
போற்றி மனக்கவலை போக்கினார் - கூற்றர்
தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.                      

களந்தை என்னும் பதியிலே குறுநிலமன்னர் குலத்திலே கூற்றுவ நாயனார் அவதரித்தார். அவர் திருவைந்தெழுத்தை விதிப்படி கணிப்பவர். சிவனடியார்களைச் சிவன் எனவே பாவித்து வழிபாடு செய்பவர். திருவருட் பெருக்கால் அவர் பெருஞ்செல்வம் உடையர் ஆயினார். தேர் யானை குதிரை காலாட்கள் முதலிய நால்வகைச் சேனைகளும் நிறைந்தவராய், வீரச்செருக்கிலே மேம்பட்டு விளங்கினார். பல அரசர்களுடன் போர் செய்து அவர்களை வென்றார். அவர்களுடைய நாடுகளைத் தமதாகக் கொண்டார். அரசச் செல்வம் உடையவராயினும் முடி ஒன்று இல்லாக் குறையே அவருக்கு இருந்தது.

உலகத்தை ஆளும்பொருட்டுத் தமக்கு முடி சூட்டும்படி தில்லைவாழ் அந்தணர்களை அவர் வேண்டினார். "நாங்கள் சோழ குலத்து அரசருக்கே அன்றி மற்றவர்களுக்கு முடி சூட்டமாட்டோம்" என அவர்கள் கூறி மறுத்தார்கள்.

கூற்றுவ நாயனார் மனக் கவலை அடைந்தார். சபாநாயகரைப் பணிந்தார். "எம்பெருமானே! அடியேனுக்குத் திருவடியையே முடியாகத் தந்தருளல் வேண்டும்" எனப் பிரார்த்தித்தார். அன்றிரவு சபாநாயகர் அவர் கனவிலே எழுந்தருளிக் காட்சி தந்தார். தம்முடைய திருவடிகளை முடியாகச் சூட்டியருளினார். நாயனார் அவைகளையே அரசமுடியாகச் சூடிப் பூமி முழுவதையும் பொது நீக்கி ஆண்டார். சிவத்தலங்களில் சென்று வணங்கித் திருப்பணிகள் செய்தார். 

ஒருவாற்றானும் தனக்கு நிகரில்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது, மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது என அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார்.

இத் திருக்குறளுக்கு ஒப்புமை உள்ள அருட்பாடல்கள் சிலவற்றை இங்கே தருகின்றேன்.

தாயவன் உலகுக்கு தன்ஒப்பு இல்லாத்
தூயவன் தூமதி சூடி எல்லாம்
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்கும்
செயவன் உறைவிடம் திருவல்லமே. --- திருஞானசம்பந்தர்.

பொன்நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்நேர் சடைகள் உடையான் மீயச்சூரானை,
தன்நேர் பிறர் இல்லானைத் தலையால் வணங்குவார்
அந்நேர் இமையோர் உலகம் எய்தல் அரிது அன்றே. --- திருஞானசம்பந்தர்.

உய்யும் காரணம் உண்டுஎன்று கருதுமின் ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்புஅணைப் பள்ளிகொள் அண்ணலும் பரவநின்றவர் மேய
மைஉலாம் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
கையினால் தொழுது அவலமும் பிணியும்தம் கவலையும் களைவாரே.      
                                                                    --- திருஞானசம்பந்தர்.

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
         மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்
ஒப்புஉடையன் அல்லன் ஒருவன் அல்லன்
         ஒரூரன் அல்லன் ஒர் உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணும்
         அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
         இவன்இறைவன் என்றுஎழுதிக் காட்ட ஒணாதே. --- அப்பர்.

பொன்னேபோல் திருமேனி உடையான் தன்னை
         பொங்குவெண் நூலானை புனிதன் தன்னை
மின்னானை மின்இடையாள் பாகன் தன்னை
         வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் தன்னை
தன்னானைத் தன்ஒப்பார் இல்லாதானை
         தத்துவனை உத்தமனை தழல்போல் மேனி
அன்னானை ஆரூரில் அம்மான் தன்னை
         அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே. --- அப்பர்.

ஊராகி நின்ற உலகே போற்றி
         ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேர்ஆகி எங்கும் பரந்தாய் போற்றி
         பெயராது என்சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
         நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
கார்ஆகி நின்ற முகிலே போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.   --- அப்பர்.

மற்றுஆரும் தன்ஒப்பார் இல்லான் கண்டாய்
         மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றுஆடு அரவுஅணிந்த புனிதன் கண்டாய்
         பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்
         ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத்து அமர்ந்துஉறையும் கூத்தன் கண்டாய்
         கோடிகா அமர்ந்துஉறையும் குழகன் தானே. --- அப்பர்.

நினையப் பிறருக்கு அரிய நெருப்பை
         நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனை ஒப்பாரை இல்லாத தனியை
         நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம்
கனைய, கண்ணீர் அருவி பாயக்
         கையுங் கூப்பிக் கடிமலரால்
புனையப் பெறுவதென்று கொல்லோ என்
         பொல்லா மணியைப் புணர்ந்தே. --- திருவாசகம்

ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன்
         உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!
மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு
         விழுமியது அளித்ததோர் அன்பே!
செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ!
         செல்வமே! சிவபெருமானே!
எய்ப்பு இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
         எங்கு எழுந்து அருளுவது இனியே.   --- திருவாசகம்.



No comments:

Post a Comment

இறைவனைப் புகழ்வது எப்படி?

  இறைவனைப் பாடுவது எப்படி? ---- கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்கு...