ஆடு தழை தின்றாற் போல்....

 


ஆடு தழை தின்றாற் போல்....

----

 

            ஆடு தழைகளை மேய்ந்து தின்னும். இங்கு சிறிதும்அங்கு சிறிதுமாக மேயும். மேய்வது சீராக இருக்காது என்பதால் தான் மேய்ப்பதற்கு ஒருவன் தேவைப்படுகின்றான். ஒரு செடியில் உள்ள தழைகளை முழுமையாகத் தின்னாமல்கொஞ்சம் தின்று விட்டுஅடுத்த செடிக்குத் தாவும். கீழே எட்டும் நிலையில் உள்ள தழையைத் தின்னாமல்கால்களை நீட்டிஉயரத்தில் உள்ள தழைகளை எட்டித் தின்னும். இங்கே கொஞ்சம் தின்னும்இங்கே கொஞ்சம் தின்னும். தேவையற்ற இடத்திற்கும் செல்ல முற்படும். தழை ஆட்டின் வளர்ச்சிக்குத் தேவையானது என்பதால் அது உள்ள இடத்தை நாடிஅதன் விருப்பம் போல் செல்லும்.

 

     ஒருவன் ஒன்றினை மட்டும் பெற்றுஅதைக் கொண்டே அனைத்தையும் பெற வேண்டுமானால்அவனிடத்தில் அறிவுடைமை இருக்கவேண்டும். அறிவுடைமை என்றதுஅறிவை உடையவனாய் இருக்கவேண்டும் என்றது. அது மட்டும் இருந்துவிட்டால்அவனிடத்தில் மற்ற எல்லாம் இருக்கும். எனவே, "அறிவு உடையார் எல்லாம் உடையார்அறிவு இல்லார் என்னுடையரேனும் இலர்" என்றார் திருவள்ளுவ நாயனார். பரிமேலழகர்ஒரு படி மேலே சென்றுஅறிவுடைமை என்பதற்கு, "கல்வி கேள்விகளால் உண்டான அறிவோடுஉண்மை அறிவையும் பெற்று இருத்தல்" என்றார். 

 

     உலகத்தில் தோன்றிய மக்கள் யாவரும் ஒருதலையாக விரும்புவது இன்பமே ஆகும். அறிவு உடையவராய் இருப்பவர்க்கே இது கைகூடும். நூல்களைக் கற்பதோடுகற்றாரிடம் கேட்டுத் தெளிவது. தெளிந்த அதனைக் கொண்டுஅனுபவ அறிவு என்னும் உண்மை அறிவைப் பெற்றுக் கொள்வதுஉண்மை இன்பத்தைத் தரும். உண்மை அறிவுநூல்களைக் கற்ற வழியில் நிற்போர்க்கே அமையும்.

 

     அறிவு என்பது ஒருவனுக்குப் பிறப்பால் வருவது அல்ல. பிறந்த குலத்தால் வருவது அல்ல. மொழித் திறனால் வருவதும் அல்ல. அதிகாரத்தால் வருவதும் அல்ல. பொருளால் வருவதும் அல்ல. நூல்களைக் கற்பதோடு,கல்விஅறிவு ஒழுக்கங்களால் உயர்ந்து விளங்குபவரின் அன்புக்குப் பாத்திரம் ஆகிஅவர் காட்டிய வழியில் ஒழுகுவதால் வரும். அதுவும் கூடஇறைவன் திருவருளால் உண்டாகும். நூல்கள் என்னும்போதுஉயிருக்கு அறிவை விளங்கப்பண்ணும் நூல்ளையே கொள்ளுதல் வேண்டும்.

 

      கல்விகேள்வி என்பது மனிதனுக்கு அறிவு வளர்ச்சிக்குத் தேவையானது. இளமையிலேயே கல்வி கற்கச் செல்லும்போதுஅதில் நாட்டம் இல்லாமல் வகுப்பறையில் இருப்பதும்,வகுப்பிற்குச் செல்லாமல்விருப்பம் போல் சுற்றித் திரிவதும் உண்டு. அது ஆன்மாவின் இயல்பு. எதில் நாட்டம் உள்ளதோஅதையே விரும்பும். எது தேவையோ அதை விரும்பாது. "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்பது போல்இந்தப் பழக்கம் பலருக்கும் இறுதி வரையில் இருக்கும்.

 

      People want hear only what they want. They don't want to hear what is needed for them. It's not uncommon for these characteristics to outweigh reason itself. This is why, they say we only hear what we want to hear. This is due to selective attention and its functioning. It consists of only focusing on determined aspects, leaving the other ones aside, especially when it comes to opinions and beliefs.

 

      காதால் கேட்பது வேறு. உள்வாங்குவது வேறு. உள்வாங்காமல் கற்பதால்கேட்பதால்,கற்றதும் கேட்டதும் பயனில்லாமல் போய்விடுகின்றது.


      Listening is when you allow other people's words to go into your ears. Hearing is when you allow their words to go into your heart. You can listen without hearing, but you can't hear without listening.

 

      பயனற்ற இந்த இழிநிலைக்கு மிக இரங்கிதாயுமான அடிகளார்"கன்று மனத்துடன்ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகிக் கலக்குற்றேனே" என்றும் "இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டுப் பொய் உலகன் ஆயினேன்நாயினும் கடையான புன்மையேன்"பாடி வருந்தினார். 

 

     "கன்றுதல்" எனும் சொல்லுக்குஅடிபடுதல்வெயிலால் கருகுதல்பதன் அழிதல் என்று பொருள். கற்றதாலும்கேட்டதாலும்அறிவு முதிர்ச்சி உண்டாக வேண்டும். பிஞ்சிலே பழுத்தது (கன்றிப் போனது) என்னும்படியாககற்றதாலும்கேட்டதாலுமே உண்மை அறிவு வந்துவிட்டது போல் பாவனை செய்துகொண்டு பதன் அழிந்து நிற்றல் கூடாது. அது "அசுத்த பாவனை" ஆகும். "சுத்த பாவனை" வந்து நிற்கவேண்டும்.

 

     "பழுது அற ஓதிக் கடந்துபவ வினை தீரத் துறந்து" என்றார் அருணகிரிநாதர். நூல்களைப் பழுது அற (ஐயம் திரிபு அற) ஒதுதல் வேண்டும். அப்படி ஓதியதன் வழி ஒழுகினால்உள்ளத்தில் உள்ள பழுதுகள் அறும். அதனால்பிறவிக்கு வித்தாகிய வினைகள் தீரும்.

 

     நம்மில் சிலரும் கற்கின்றோம். பாடல்களைப் பாடுகின்றோம். ஆனால்பொருள் உணர்ந்து வருந்திதிருந்துவது இல்லை.

 

     ஒன்றில் விருப்பம் வந்து விட்டால்திரும்பத் திரும்ப அதையே கேட்கின்றோம்கற்கின்றோம். சிலநாளில்வேறு ஒன்றில் விருப்பம் வந்து விட்டாலும் அப்படியே. இன்று திருவாசகம்நாளை தேவாரம்மறுநாள்,திருப்புகழ்மறுநாள் இராமாயணம்பாரதம்இன்ன பிற. இப்படி இங்கும் இங்குமாகஇவர் நன்றாகச் சொல்லுகின்றார். இவர் சொல்வது நன்றாக இல்லை. இவர் நன்றாகப் பாடுகின்றார். அவர் அப்படி இல்லை என்பவர்கள் உண்டு. கந்தர் சஷ்டி வந்துவிட்டால் திருச்செந்தூர். தைப்பூசம் வந்துவிட்டால்பழநிஆடிக் கிருத்திகை வந்துவிட்டால் திருத்தணிகை. எத்தனை சூரசம்மாரம் கழிந்ததுஎத்தனை பூசம் கழிந்ததுஎத்தனை கிருத்திகை கழிந்ததுஎத்தனை சிவராத்திரி வந்ததுஎத்தனை நவராத்திரி வந்தது?  என்ன விளங்கியது

 

      கங்கையில் நீராடினால் புண்ணியம் என்றனர். ஓடினோம் கங்கைக்கு. "கங்கையில் புனிதமாய காவிரி" என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடினார் என்றும், "ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி ஒடும் மாகாவிரி" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடினார் என்றும் படித்தும் கேட்டும், "கங்கா நதியே அதிகம்அதன் கன்மம் தொலைக்கும் காவிரியே மங்கா அதிகம்" என்று சோழமண்டல சதகம் கூறியது எனக் கேட்டும், "ஐயோ நமக்கு அருகில் உள்ள காவிரியை மறந்தோமே" என்று மனம் வருந்திகாவிரியில் நீராட ஓடினோம். இன்னும் பலப்பல தீர்த்தங்களை நாடினோம். சில தீர்த்தங்கள் இன்று வற்றியே போய்விட்டன. "ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்" என்று மணிவாசகப் பெருமான் அருளியது போல்தீர்த்த வடிவிலேஎல்லா தீர்த்தங்களிலும் எங்கும் உள்ளான் என்றும், "உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்மெல்லக் குடைந்து நீராடார் வினைகெட" என்று திருமூல நாயனார் அருளியதையும் பலகாலும் கற்றும்கேட்டும் உள்ளோம். ஆடு தழை தின்றாற் போலத் தானே ஆனது. இற்றை நாள் வரை நாம் கற்றதும்கேட்டதும் அவலமாகத் தானே போனது.

 

      ஆடு தழை தின்றது போன்ற நிலையை விளக்கிமணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் ஒரு பாடலை அருளி உள்ளார்.

 

"அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றுஇங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே

பத்து ஏதும் இல்லாதுஎன் பற்று அறநான் பற்றிநின்ற

மெய்த்தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ".

 

இதன் பொருள் ---

 

      கோத்தும்பீ --- அரச வண்டே! அவர் தேவர் --- அவரே கடவுள்,அத் தேவர் தேவர் --- அவரே அந்தத் தேவர்களுக்கு எல்லாம் தேவர்என்று --- என்றுஇங்ஙன் --- இவ்வாறுபொய்த் தேவு பேசி --- கடவுளர் அல்லாதவர்களைப் புகழ்ந்து,புலம்புகின்ற --- பிதற்றுகின்றபூதலத்தே --- பூலோகத்தில்பத்து ஏதும் இல்லாது --- உலகப் பற்று சிறிதும் இன்றிஎன் பற்று அற --- என்னுடைய பற்றுகள் அறும்படிநான் பற்றி நின்ற --- நான் பற்றிக் கொண்டிருக்கிறமெய்த் தேவர் தேவர்க்கே --- உண்மையாகிய தேவர் பிரானிடத்தேசென்று ஊதாய் --- போய் ஊதுவாயாக.

 

      சிவபிரான் ஒருவனைத் தவிர ஏனையோரைப் பரம்பொருள் என்று கொள்ளுதல்உபசாரம். அது உண்மை அல்ல என்பதால், ‘பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே’ என்றார். உலகப் பற்றை விடுதற்கு இறைவனது பற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பார், ‘பத்து ஏதும் இல்லாது என் பற்று  அறநான் பற்றி நின்ற மெய்த் தேவர்’ என்றார், ‘பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்ற திருவள்ளுவநாயனார் அருள் வாக்கையும் ஒப்பு நோக்குதல் வேண்டும்.

 

       "நவில் தொறும் நூல் நயம்" என்றார் திருவள்ளுவ நாயனார். நூல் நயம் விளங்கவில்லை என்றால்கற்றதும் கேட்டதும் ஆடு தழை தின்றது போல் ஆனது என்பது பொருள். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்றார் மணிவாகப் பெருமான். சொல்லிய பாட்டின் பொருளை உணர்ந்து சொல்லுபவர் அருட்செல்வத்தை உடையவர். அவர் "சிவபுரத்தின் உள்ளார்" என்றார். சிவபுரம் என்றதுநாம் அனுபவிக்கும் பேரின்பத்தை. இந்த உடலோடு கூடி இருக்கும் காலத்திலேயே அழியாத இன்பத்தை அனுபவிக்க முடியும்.

 

      ஆடு தழை தின்றது போல்அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல்ஏதாவது ஒரு நூலை முழுமையாகக் கற்றுத் தெளிய வேண்டும். நல்லாசிரியர் ஒருவரை நாடவேண்டும். இன்று ஒரு குரு. நாளை ஒரு குரு என்றுஆடு தழைதின்பது போல்ஒன்று விட்டு ஒன்று பற்றுதல் கூடாது. பரம்பொருள் எது என்று தெளிந்துஅதனிடத்திலேயே பற்றினை வைத்துமற்ற பற்றுக்களை உதறித் தள்ளவேண்டும். ஒன்றை விட்டால்தான்,ஒன்றைப் பெறமுடியும். அறியாமை அகன்றால்அறிவு தலைப்படும். ஒளி கண்டால் இருள் ஓடும். முதலைப் போட்டால்தான் இலாபத்தைப் பெறமுடியும். "முதல் இல்லார்க்கு ஊதியம் இல்" என்றார் திருவள்ளுவ நாயனார். ஆடுதழை தின்றது போல்கடவுள் வழிபாடும் அமைதல் கூடாது.

 

      ஐந்து வயதுக் குழந்தைக்குத் திருக்குறளைச் சொல்லித் தர முடியாது. அதை வாங்கிக் கொள்வதற்கேற்ற அறிவுத் திறன்அதாவது பக்குவம்அக் குழந்தைக்கு அப்பொழுது இல்லை. எழுத்துக் கூட்டிப் படிக்கின்ற அளவுக்குத் தான் அதன் அறிவு நிலை உள்ளது. அறிவு நிலை படிப்படியாக வளர்ந்த பிற்பாடுதான் நுண்ணிய நூல்களைக் கற்க முடிகின்றது. மாணவர்கள் ஒரே திருக்குறளைத் தான் கீழ் வகுப்பிலும் பயில்கின்றனர். இளங்கலை வகுப்பிலும் பயில்கின்றனர். முதுகலை வகுப்பிலும் பயில்கின்றனர். மேல் மேல் வகுப்புகளில் செல்லச் செல்லதிருக்குறளின் பொருள் மேல் மேல் விளக்கம் அடைகிறது. அதனை நுணுகி உணர முடிகிறது. மாணாக்கரின் அறிவுநிலை படிப்படியாக நுணுகிச் செல்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அறிவு நுணுக்கமே பக்குவம் எனப்படுவது. 

 

      உலகியல் கல்விக்கே தகுதி வேண்டுமானால்மெய்ப்பொருளை உணர்தலாகிய ஞானத்தைப் பெறுவதற்குப் பக்குவம் வேண்டும் என்பது விளங்கும். உயிரின் அறிவை அறியாமையுள் படுத்தி மயங்கச் செய்வது ஆணவமலம். ஆணவமலம் வன்மையாய் உள்ள வரையில் அது உயிரறிவை நுணுகிச் செல்லவிடாது,பருப்பொருளாகிய உலகத்தையே நோக்கும்படி செய்யும். அந்த ஆணவ மலம் தேய்ந்து தேய்ந்து வரும்போதுதான் உயிரறிவு படிப்படியே அறியாமையிலிருந்து விடுபடும். அதிலிருந்து விடுபட விடுபடஉயிரறிவு நுணுகி நுணுகிச் செல்லும். நுண் பொருளாகிய இறைவனை உணரும் செவ்வியை எய்தும். அந்நிலையில்உயிரானது,உலகத்தை நோக்காது இறைவனது திருவருளை நோக்கத் தலைப்படும்.

 

      "ஓதுவது ஓழியேல்" என்றது முதல் நூலாகிய ஆத்திசூடி. அதன் விளக்கமாக, "ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்" என்றது கொன்றைவேந்தன்.

 

      ஓதுவதைப் பொருள் உணர்ந்து ஓதவேண்டும். சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைபோல் காலம் முழுதும் இருத்தல் பயன் தராது. வயது ஏற ஏறஅறிவு விளக்கம் பெறவேண்டும். அறிவு விளக்கம் பெற்றால் அறியாமை நீங்கும்.

 

     அட்டைப் பகட்டுடன் வருகின்ற நூல்கள் எல்லாம் அறிவை மயக்கும். உலகியலிலேயே உழலச் செய்யும். அருள்நூல்களே அறிவு மயக்கதைப் போக்கிநம்மை நல்வழியில் கொண்டு செலுத்தும். நல்வழியில் ஒழுகினால்பிறவி அறும். சிறப்பைத் தருகின்ற அருள்நூல்களை எப்படிஎப்போது கற்கவேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான் அறிவுறுத்துகின்றார்.

 

"அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்

எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர்,எரி மூண்டது என்ன

விழித்துப் புகைஎழப் பொங்கு வெம்கூற்றன் விடும் கயிற்றால்

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே?".

 

     நமது தீவினைகளை அழித்துஇன்னொரு தாயின் வயிற்றில் சென்று பிறக்க ஒட்டாமல் தடுத்துபேரின்ப வீட்டை வழங்குகின்றவை கூர்மை பொருந்திய ஞானசத்தி என்னும் வேலைத் தாங்கி உள்ள முருகப் பெருமானுடைய அருட்புகழை ஓதுகின்ற பாடல்கள். அவற்றை இடைவிடாத மெய்யன்புடன்எழுத்துக் குற்றங்கள் சிறிதும் இல்லாதபடிக்குப் பயிலாமல் இருக்கின்றீர்களே. நீங்கள் எப்போது உங்களை மாற்றிக் கொள்ளப் போகின்றீர்கள். நெருப்பு மூண்டு எரிவது போலக் கண்களை உருட்டிப் பார்த்துபுகை எழுவது போல் சீறுகின்ற இயமன் பாசக் கயிற்றை வீசி,உங்கள் கழுத்திலே சுருக்குப் போட்டுஉங்களது உயிரைப் பற்றி இழுக்கின்ற, (உங்களது பொறி புலன்கள் கலங்கிநெறி மயங்கிஅறிவு அழிந்து நிற்கின்ற) அந்த நாளிலாஇறைவன் அருட்புகழைக் கற்கப் புகுவது?

 

     எனவேநாம் கற்பதும் கேட்பதும் ஆடு தழை தின்றாற்போல அமைந்து விடுதல் கூடாது.

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...