046. சிற்றினம் சேராமை --- 02. நிலத்து இயல்பால்

 


 

திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை

 

     சிற்றினம் சேராமையாவதுசிறியார் இனத்தைப் பொருந்தாமை. 

 

     சிறிய இனமாவதுநல்வினையின் பயனாக சுகமும்,தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும்பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும்உள்ளே பகையும்உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும்கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார். 

 

     அறிவினை வேறுபடுத்திதீநெறியில் செலுத்திஇம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால்பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால்பெரியாரைத் துணைக் கொள்வதோடு,சிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

     

     இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "நீரானது தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினாலே தனது தன்மை வேறுபட்டுஅந் நிலத்தினது தன்மையைச் சாரும்.  அதுபோலமனிதரது அறிவும் தான் சேர்ந்துள்ள இனத்தினது தன்மையாலே மாறுபட்டுஅந்த இனத்தினது தன்மையை அடையும்" என்கின்றார் நாயனார்.

 

     வானில் இருந்து இழிந்த நீரானதுயாதொரு நிறமும்சுவையும் இல்லாமல்தனது தன்மையோடு கூடி இருந்தும்நிலத்தில் வந்து சேர்ந்த காலத்துஎந்த எந்த நிலத்தில் சேருகின்றதோஅந்த அந்த நிலத்தின் குணத்திற்குத் தக்க அளவாகநிறத்தினையும்சுவையினையும் கொள்ளுவது போல,மிகப் பெரியோராக இருந்தாலும்சிற்றினத்தைச் சார்ந்து இருந்தால்தமது இயல்பாகிய குணம் கெட்டுசார்ந்த இனத்தினது குணம் செயல் முதலியவைகளை அடைவார்கள். எனவேஉவர் நிலத்தைச் சேர்ந்த நீர்உவர்ப்புத் தன்மையை அடைவது போலசிற்றினத்தைச் சேர்ந்து சிற்றறிவு விளங்கப் பெறாது இருத்தல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...  

 

நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகும்மாந்தர்க்கு

இனத்து இயல்பு அது ஆகும் அறிவு.              

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும்--- தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம்

 

     மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும்--- அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம்.

 

     (எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழிநிறம்சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போலதனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவுபிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் எனஇதனான் அதனது காரணங் கூறப்பட்டது.)

 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

பாலோடு அளாயநீர் பால் ஆகும்ல்லது

நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம்; -தேரின்

சிறியார் சிறுமையும் தோன்றாதாம்நல்ல

பெரியார் பெருமையைச் சார்ந்து.--- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பாலோடு அளாய நீர் பாலாகும்ல்ல அது நீராய் நிறம் தெரிந்து தோன்றாது --- பாலோடு கலந்த நீர் பாலாகித் தோன்றும். அல்லது  நீராய்த் தன் நிறம் விளங்கித் தோன்றாதுதேரின் --- ஆராய்ந்தால்சிறியார் சிறுமையும் தோன்றாது நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து --- உயர்ந்த பெரியாருடைய பெருந்தன்மையைச் சார்தலால் சிறியார் குறைபாடுந் தோன்றாமல் பெருமையே ஆகும்.

 

      மக்கள் பெரியாரோடு சேர்ந்திருந்து,தம் குறை நீங்கிப் பெருமையடைதல் வேண்டும்.

 

மண் இயல்பால் குணம் மாறுந் தண்புனல்,

கண்ணிய பொருள்மணங் கலந்து வீசும் கால்

புண்ணியர் ஆதலும் புல்லர் ஆதலும்

நண்ணு இனத்து இயல்பு என நவிலல் உண்மையே.  ---  நீதிநூல்.

            

இதன் பொருள் ---

 

     குளிர்ச்சி பொருந்திய தண்ணீர் தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினால் தன்மையில் மாறுதல் அடையும். காற்று தான் பொருந்திய பொருளின் மணத்தைக் கலந்து வீசும். அவைபோல் மக்கள் உயர்ந்தோர் ஆதலும் தாழ்ந்தோர் ஆதலும் அவரவர் சார்ந்த கூட்டத்தின் தன்மை எனக் கூறுவது உண்மையாகும்.

 


'புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு

குலத்து இயல்பு அழிந்ததுகொற்றம் முற்றுமோ?

வலத்து இயல் அழிவதற்கு ஏதுமை அறு

நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்.  --- இராமாயணம்கும்பகர்ணன் வதைப்படலம்.

 

இதன் பொருள் ---

 

     புலத்தியன் வழிமுதல் வந்த --- புலத்தியனுடைய மரபிலே வந்தபொய்யறு குலத்து இயல்பு அழிந்தது --- தருமவழி  நீங்காத குலத்தின் தன்மைஉனது செயலால் அழிந்துவிட்டது

வலத்து இயல் அழிவதற்கு ஏது --- அதுவே வெற்றித் தன்மை  அழிவதற்குக் காரணமாகும்கொற்றம் முற்றுமோ --- அதனால்  உனக்கு வெற்றி கிட்டுமோ?;   மையறு நிலத்து இயல்  நீர் இயல்  என்னும் நீரதால் --- இது குற்றமற்ற நிலத்தின்  இயல்பே நீரின் இயல்பு என்ற முறைமைக்கு ஏற்றுள்ளது.

 

     நிலத்தின் இயல்புக்கேற்ப நீரின் இயல்பு அமைதல் போலச் செயலின்  இயல்புக்கு ஏற்றவாறு விளைவின் இயல்பு என்றவாறு. இனி அரக்கியாகிய உனது தாயின் இயல்புக்கேற்ப இத்தன்மை அமைந்தது போலும் என்ற குறிப்பும் உண்டு.

 

அப்பு என்றும் வெண்மையது ஆயினும்,

     ஆங்கு அந் திலத்து இயல்பாய்

தப்பு இன்றியே குண வேற்றுமை 

     தான் பல சார்தலினால்,

செப்பில் அபக்குவம் பக்குவமமாய் 

     உள்ள சீவரிலும்

இப்படியே நிற்பன் எந்தை பிரான்,

     கச்சி ஏகம்பனே!             --- பட்டினத்தார்.

 

இதன் பொருள் ---

 

     திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி உள்ள ஏகம்ப நாதனே! நீரானது எப்பொழுதும் வெண்ணிறம் உடையதானாலும்அது மேகத்தினின்றும் வீழ்ந்த காலத்துஅப் பூமியின் தன்மையை உடையதாகிகுற்றம் இல்லாமலே,தன் இயற்கைக் குணத்தினின்றும் பல வேறுபட்ட குணங்களை அடைதலால்சொல்லுமிடத்துஅபக்குவமாயும் பக்குவமாயும் இருக்கிற சீவர்களிலும்எமது தந்தையாகிய சிவபிரான் இவ்விதமாகவே (பக்குவ அபக்குவ குணன் ஆக வேறுபாட்டை அடைந்து) நிற்பன்

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...