முயல் விட்டுக் காக்கைப் பின் போவது

 


முயல் விட்டுகாக்கைப் பின் போவது

-----

 

     இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள். எளிமையாகச் செய்யக்கூடிய ஒரு செயலை விட்டு,செய்து முடிக்க இயலாத ஒரு செயலைச் செய்வதால் பயனில்லை என்பதை, "முயல் விட்டுக் காக்கைப் பின் போவது" என்றும் "இருப்பதை விட்டுப் பறப்பதை பிடிக்கப் போவது" என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.

 

     "முயல் விட்டுக் காக்கைப் பின் போனவாறு" என்று பயனற்ற செயலைச் செய்கின்ற மக்களைப் பார்த்துநக்கீரதேவ நாயனார்பதினோராம் திருமுறையில், "கோபப் பிரசாதம்" என்னும் அகவல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பயனற்ற செயல்களைச் செய்கின்ற மக்களைஇயமன் கொண்டு போகாமல் இன்னும் உலகில் வைத்திருப்பது ஏன் என்றுஇயமன் மீது கோபம் கொண்டு பாடிய பாடல். ஆதலால், "கோபப் பிரசாதம்" எனப்பட்டது. மிக நீண்டதொரு பாடலை,சுருக்கித் தந்து உள்ளேன்.

 

"நீற்றிடைத் திகழும் நித்தனைமுத்தனை,

வாக்கும் மனமும் இறந்த மறையனை,

பூக்கமழ் சடையனைபுண்ணிய நாதனை,

இனைய தன்மையன் என்று அறிவு அரியவன்

தனைமுன் விட்டுத் தாம் மற்று நினைப்போர்,

மாமுயல் விட்டுக்

காக்கைப் பின்போம் கலவர் போலவும்....

.....                    .....                 .....

முன்னே அறியா மூர்க்க மாக்களை

இன்னே கொண்டு ஏகாக் கூற்றம்

தவறு பெரிது உடைத்தேதவறு பெரிது உடைத்தே".

 

இதன் பொருள் ---

 

திருநீற்றில் பொலியும் திருமேனியனாகிய சிவபெருமானைஇயல்பாகவே பாசத்தின் நீங்கியவனைசொல்லுக்கும் மன உணர்வுக்கும் எட்டாத வேதப் பொருளாய் உள்ளவனைமலர்கள் மணக்கும் திருச்சடையை உடையவனைபுண்ணிய நாதனைஇன்ன தன்மையை உடையவன் என்று அறிவதற்கு அருமையானவனைஇளமைக் காலத்திலேயே வழிபடுவதை விடுத்து,வேறு ஒன்றை நினைப்பவர்முயலை விட்டுக் காக்கையின் பின் செல்கின்ற வேடர்களைப் போன்றவர்கள். இவர்களைக் கூற்றுவன் இப்பொழுதே கொண்டு போகாதது பெரும் தவறு ஆகும்.  

 

வேட்டையாடுபவன் முயலின்பின் விடாது சென்றால் பயன் பெறுவான். அதை இடையில் விட்டுவிட்டுக் காக்கைப்பின் போனால் என்ன பயன் பெறுவான்ஒன்றையும் பெறான். இது பயன் தருவதை விட்டுப் பயன் தாராததைத் தொடர்வதற்கு உவமையாகும். 

 

கலவர் --- படைக்கலம் எந்தியவர்வேட்டையாடுபவர்.

 

இளமைக் காலத்திலேயே,சிவபரம்பொருளை வழிபட்டுதிருவருளைப் பெறுவதைவிட்டுசமணர்களைச் சார்ந்து இருந்ததற்கு இரங்கி அப்பர் பெருமான்பாடிய தேவாரப்பாடல் ஒன்று....

 

"என்பு இருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு,

            என்னை ஓர் உருவம் ஆக்கி,

இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு,

            என் உள்ளம் கோயில் ஆக்கி,

அன்பு இருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு

            அருள் செய்த ஆரூரர் தம்

முன்பு இருக்கும் விதி இன்றி முயல்விட்டுக்

            காக்கைப்பின் போனவாறே".

 

இதன் பொருள் ---

 

எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்துஎனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்துஇன்பங்களை நுகர் பொருளாக வைத்துமுன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கிஅடியேனுடைய உள்ளத்தைத் தம் இருப்பிடமாகச் செய்துஅடியேன் உள்ளத்தில் அன்பினை நிலைநிறுத்திஅடியேனை ஆளுதலைக் கடமை (கூழைமை) யாகக் கொண்ட திருவாரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழ விட்டுகைப் பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக்கொண்டாலும் உண்பதற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே!

 

அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த ஆரூரருடைய திருமுன் இருக்கும் விதியில்லாதவன் என்று தன்னை நொந்து கொள்கின்றார். முன்பு இருக்கும் விதியில்லை என்றதால் பின்பு இருக்கும் விதி உள்ளது என்பது பெறப்பட்டது. 

 

திருமங்கை ஆழ்வாரும், "சிறிய திருமடல்" என்னும் ஒரு அகவல் பாடலில்இக் கருத்தை வைத்துப் பாடி உள்ளார்.

 

"ஆராயில் தானே அறம்பொருள் இன்பம் என்று

ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார்,

சீரார் இருகலையும் எய்துவர் --- சிக்கென மற்று

ஆரானும் உண்டு என்பார்என்பதுதான் அதுவும்

ஓராமை அன்றேஉலகத்தார் சொல்லும் சொல்

ஓராமை ஆமாறு அது உரைக்கேன்கேளாமே

கார்ஆர் புரவி ஏழ் பூண்ட தனிஆழி

தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு

ஆரா அமுதம் அங்கு எய்திஅதினின்றும்

வாராது ஒழிவது ஒன்று உண்டே. அது நிற்க,

ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே".

                                                

இதன் பொருள் ---

 

நூலின் பயன் என்று சொல்லப்பட்ட அறம்பொருள்இன்பம் என்னும் மூன்றனுள் இன்பத்தைப் பெறுவோர்சிறப்புள்ள அதன் பகுதிகளான அறம் பொருள் என்னும் இரண்டையும் பெறுவர். இவை அல்லாமல் சிறந்தது வேறு உண்டு என்று உலகத்தார் சொல்லுவது அறிவின்மை ஆகும். அது எவ்வாறு என்று கூறுகின்றேன் கேளுங்கள். மேக மண்டலத்தில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ஒரே சக்கரம் உடைய தேரில் சஞ்சரிக்கின்றான். வெப்பக் கிரணங்களை உடைய அச் சூரியனின் மண்டலத்தைத் தாண்டிமேலே பரமபதத்தைச் சென்று அடைந்துஅங்கு திருப்தி பிறக்காமல்அமுதமாகிய பரம்பொருளை அடைந்துஅவ்விடத்தில் இருந்து திரும்பி வராமல் இருத்தல் ஒன்று உண்டோபுலாலை விரும்புவோர்உடலில் தசைப் பகுதி அதிகமாக உள்ள முயலைத் தொடராமல்,வானில்,மரக்கிளைகளில் பறக்கும் காக்கையைப் பிடிக்க வேட்டையாடித் தொடர்வதோ?

 

அர்ச்சை நிலையானது பற்றுவதற்கு எளிதாய் இருக்கஅதை விடுத்துப் பரத்துவத்தை நாடுவதோ என்பது கருத்து.

 

இதே கருத்தில் அமைந்த ஒரு பாடல் "பழமொழி நானூறு" என்னும் நூலில் இருந்து....

 

அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை

முற்ற அறிந்தார் முதல் அறிந்தார், --- தெற்ற

முதல்விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்

முயல்விட்டுக் காக்கை தினல்.

 

இதன் பொருள் ---

 

அறச் செயல்களைச் செய்வதற்கு அடிப்படையாக உள்ளத்தில் அருளை (அன்புகருணைஇரக்கம்) உடையவராக இருத்தல் சிறந்த பண்பாகும். இதனையே தமது ஒழுக்கமாகக் கொண்டுமுழுதும் நல்லொழுக்கத்தின் சிறப்பை அறிந்தவர்கள் எவரோ. அவரே தெளிந்து அறிவோடுஅறம் செய்யவேண்டியதன் காரணத்தை முழுதுமாக அறிந்து அறச் செயல்களை செய்பவர் ஆவார்.

 

எல்லாராலும் அறச் செயல்களைச் செய்வது என்பது முடியாது. அறத்தைத் தொடர்ந்து செய்தவதற்கும் திருவருள் வேண்டும். திருவருள் ஒன்றின் துணைக் கொண்டே எதையும் சாதிக்க இயலும். அறத்திற்கு முதலாக இருக்கவேண்டிய பண்பாகிய அருளைப் பெறுவதை  விட்டுஅறச் செயல்களின் திறத்தை அறியாமல்,செய்யப் புகுந்துஅறச் செயல்களை இடையில் கைவிட்டவருடைய பாதுகாப்பு அற்ற ஒழுக்கமானதுநிலத்தில் ஓடுகின்றதசைப் பகுதி நிறைந்ததும்உண்பதற்குச் சுவை உள்ளதும் ஆகிய முயலைப் பிடிப்பதை விட்டுவிட்டுவானத்தில் பறந்து செல்லுகின்ற காக்கையைப் பிடித்துத் தின்ன ஆசைப்பட்டதைப் போன்றது.

 

முயல் காக்கையை விடச் சிறந்தது. அதுபோலவேநல்லொழுக்கம் சிறந்த பயனைத் தருவது. எளிதில் அடையக் கூடியதை விட்டு,அரிது முயன்றும் அடையக் கூடாத செயலுக்கு ஆளப்படும் பழமொழி, 'முயல் விட்டுக் காக்கை தினல்என்பது.

 

அவரவர்க்கு ஏற்ற நிலையில் இயல்பாக இருந்து எளிதில் அடையக் கூடியதை நினைக்காமல்அரிய செயல்களைச் செய்து அடைய எண்ணுதல் வேண்டாம். வேகமாக ஓடக் கூடிய முயலின் பின் தொடர்ந்து சென்றால்ஒருவேளை அதை அடையவும் கூடும். அதை விடுத்துவானத்தில் பறக்கின்றஎளிதில் அடையக் கூடாத காக்கையைப் பிடிக்க முயல்வது அறிவின்மை ஆகும்.

 

அரிய யோகம் முதலானவைகளைப் பயின்றுஉடம்பை வருத்திஇறையருளைப் பெறுவதை விடஅவரவர் இருக்கும் நிலையில் இருந்து கொண்டேபெருமுயற்சி ஏதும் இல்லாமல்இயல்பாக வாழ்ந்தால்இறையருள் தானாகவே வந்து பொருந்தும். இயல்பாக வாழ்வது தரையில் ஓடுகின்ற முயலைப் பிடிக்க முயல்வது போல. என்றாவது ஒருநாள் கைகூடும். யோகம் முதலியவற்றைப் பயில்வதுவானத்தில் ஓடுகின்ற காக்கையைப் பிடிக்க முயல்வது போன்றது.

 

இயல்பான வாழ்க்கையை வாழ்வது என்பது அப்படி ஒன்றும் அரிதான செயல் அல்ல. "வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்மாட்டா ஒருவன் வாளா எறியினும்நில்த்தின் விழா அக் கல்லே போல நலத்தின் வழார் நின் நாமம் நவின்றோரே" என்றார் பட்டினத்து அடிகள்.

 

உடல் வலிமை உள்ள ஒருவன் மிக முயன்று ஒரு கல்லை உயரத்தில் வீசி எறிகின்றான். வலிமை அற்ற ஒருவனால் அந்த அளவுக்கு அதே கல்லை வீச முடியாது. ஆனாலும்இருவர் வீசிய கல்லும் நிலத்தில் வந்து விழுந்துதான் ஆகவேண்டும். வலிமை இல்லாதவன் வீசிய கல்தான் முதலில் வந்து நிலத்தில் விழும். உடல் வலிமை உள்ளவனைத் துறவறத்தில் முயல்பவனாகவும்வாளா வீசுகின்றஉடல் வலிமை இல்லாதவனைஇயல்பாக இல்லறத்தில் வாழுபவனாகவும் காட்டிப் பாடினார் பட்டினத்து அடிகள்.

 

     இதைத் தான் அருணகிரிநாதர் வலியுறுத்திப் பாடி உள்ளார்.

 

"துருத்தி எனும்படி கும்பித்துவாயுவைச் சுற்றிமுறித்து

அருத்தி உடம்பை ஒறுக்கில் என்ஆம்,சிவயோகம் என்னும்

குருத்தை அறிந்துமுகம் ஆறுஉடைக் குருநாதன் சொன்ன

கருத்தைமனத்தில் இருந்தும் கண்டீர் முத்தி கைகண்டதே". --- கந்தர் அலங்காரம்.

 

உலைக் களத்தில் பயன்படுவது தோலால் செய்யப்பட்ட காற்றுத் துருத்தி. இந்த உடல் ஒரு சோற்றுத் துருத்தி ஆகும். அந்தத் துருத்தியில் காற்றை அடைப்பது போஇந்தச் சோற்றுத் துருத்தியில் பிராணவாயுவைப் பிடித்துகுடல் நிறைய நிறுத்தி அசைவற்று இருத்தல் கும்பகம் ஆகும். இது பிராணாயாத்தின் ஒரு பகுதி. இது அடயோகம் ஆகும். இதனால்உடல் வலிமை பெறும். ஆயுள் நீடிக்கும். ஆனால்இது ஞானத்தைப் பெறுவதற்குச் சாதனம் ஆகாது. சாதனையில் சற்றே தவறினாலும்தீங்கு உண்டாகும். எல்லோராலும் பயிலவும் முடியாது. 

 

எனவே, "சோற்றுத் துருத்திச் சுமை சுமப்பக் கண் பிதுங்கக் காற்றைப் பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே" என்றார் தாயுமான அடிகளார். 

 

எனவேதோலினால் செய்யப்பட்ட துருத்தி என்று சொல்லும்படி வாயுவைக் கும்பகம் செய்துபிராணவாயுவைச் சுழற்றி முறியச் செய்வதாலும்அந்த வாயுவையே உணவாகக் கொண்டு யோகத்தைப் பயின்றுஇந்த உடலை வருத்துவதால் பயன் இல்லை. சிவயோகம் என்னும் முளையைத் தெரிந்துஆறுதிருமுகங்களை உடையஅருட்குருநாதன் ஆகிய முருகப் பெருமான் உபதேசித்து அருளிய கருத்தை உங்கள் மனத்தில் நிலைபெறச் செய்தீர்களானால்முத்தி இன்பமானது கைக்கு எட்டியதாக வந்து அமையும் என்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள்.

 

"தடுங்கோள் மனத்தை,விடுங்கோள் வெகுளியைதானம் என்றும்

இடுங்கோள்,இருந்தபடி இருங்கோள்,எழுபாரும் உய்யக்

கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்

விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே".

 

என்னும் இந்தக் கந்தர் அலங்காரப் பாடலின் மூலம் மிகவும் எளிமையாக இறையருளைப் பெறுகின்ற வழியைக் காட்டி அருளுகின்றார் அருணகிரிநாதர்.

 

     நான்கு வழிகளை இந்தப் பாடலில் காட்டுகின்றார். 1. உங்கள் மனத்தைப் பொறிபுலன்களின் வழியே செல்லாமல் தடுத்து இருங்கள். 2. கோபத்தை அறவே விட்டு விடுங்கள். 3. எப்போதும் ஏழைகளுக்குத் தானம் செய்துகொண்டு இருங்கள். 4. நீங்கள் இருந்தவண்ணமே இயல்பாக இருங்கள் (இப்படி இருக்கவேண்டும்அப்படி இருக்கவேண்டும் என்று பிறரைப் பார்த்தோபிறர் சொல்வதைக் கேட்டோ வாழ முயலாதீர்கள்) இவ்வாறு செய்வீர்களானால்ஏழு உலகங்களும் உய்யுமாறு,கொடிய கோபத்துடன் கூடிய சூரபதுமனுடன்கிரவுஞ்ச மலையும் அழிந்து போகும்படிகூர்மை பொருந்திய வேலை விடுத்து அருளிய முருகப் பெருமானது திருவருளானது தானாகவே வந்து உமக்கு வெளிப்பட்டுஉங்களை ஆட்கொள்ளும் என்று காட்டுகின்றார். பலகாலமும் முயன்று தவத்தைப் புரிந்தாலும் பெறமுடியாத இறையருளானது தானாகவே நம்மைத் தேடிவரும் என்று அறிவுறுத்திய அற்புதம் அறிந்து இன்புறத் தக்கது.

 

     இந்த உபாயத்தையே பின்வரும் திருப்புகழ்ப் பாடலிலும் அடிகளார் காட்டி அருளுகின்றார்.

 

அனித்தம் ஆன ஊன் நாளும் இருப்பது ஆகவேநாசி

     அடைத்து,வாயு ஓடாத ...... வகை சாதித்து,

அவத்திலே குவால் மூலி புசித்து வாடும்,ஆயாச

     அசட்டு யோகி ஆகாமல்,...... மலமாயை

 

செனித்த காரிய உபாதி ஒழித்து,ஞான ஆசார

     சிரத்தை ஆகி,யான்வேறு,என்...... உடல்வேறு,

செகத்து யாவும் வேறு ஆக,நிகழ்ச்சியா மநோதீத,

     சிவச் சொரூப மாயோகி ...... எனஆள்வாய்.

 

     "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். இந்த உடம்பானது நிலையற்றதது. நாளும் விகாரப்பட்டுக் கொண்டே வளர்ந்துஒருநாள் அழிந்து போகக் கூடியது.நிலையற்றதாகிய இந்த உடம்பு நெடுநாளைக்கு இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன்மூக்கை அடைத்து பிராணவாயு வெளியே செல்லாத வண்ணம் அடக்கும் அடயோக முறையை மேற்கொண்டுஅதனைச் சாதித்துஞானமாகிய பயனைப் பெறாமல்நிரம்பவும் குவியல் குவியலாக மூலிகைகளை ஓயாது புசித்தும்வாடி இளைத்துப் போகின்றஅசட்டுத் தனமான அடயோகியாக அடியேன் ஆகாமல் படிக்கு,மூலமாகிய ஆணவமலம் மாயாமலம் அதில் இருந்து தோன்றிய கன்மமலம் ஆகிய மூன்று தடைகளையும் நீக்கிஉண்மை அறிவுடன் கூடி அகத் தூய்மை பெறுவதில் ஊக்கம் உடையவன் ஆக இருந்துஆன்மாவாகிய நான் வேறுஎனது உடல் வேறுஇந்த உலகில் உள்ள ஆன்மாக்கள் எல்லாம் வேறு என்று பிரித்து உணர்ந்துஅறிவு மயமாகவே திகழ்கின்றதும்,மன உணர்விற்கு எட்டாததும்சீவத் தன்மை போய்சிவத் தன்மையை அடைந்து நிற்கும் பெருமை உடையதும் ஆகிய சிவயோகியாக விளங்குமாறு அடியேனை ஆட்கொள்வீர் என்று இந்தப் பாடலில் வேண்டுகின்றார்.

 

அடயோகத்தால் ஆயுள் நீடிக்கும். அது ஞானத்திற்குச் சாதனம் ஆகாது. மூச்சைப் பிடித்து மூலிகைகளைத் தின்று காயகல்பம் புரிந்து கற்பகாலம் இருந்தாலும்,ஒருநாள் அழியவேண்டி வரும். ஞானமே முத்திக்குச் சாதனம். அந்த ஞானம் இறையருளால் வாய்க்கும்.

 

எனவேஇயல்பான வாழ்க்கையை வாழ்ந்துமனத்தை அது போன போக்கிலே விடாமல்நல்வழிகளில் மட்டுமே செலுத்திதன்னலம் கருதி யார் மீதும் சினம் கொள்ளாமல்,தனக்கு உள்ள பொருளில் ஒரு பகுதியைஇல்லாத பிறருக்குத் தானமாக வழங்குவதை மேற்கொண்டுதனக்கு உரிய இயல்பு நிலையிலேயே வாழ்க்கையை வாழ்ந்து வருதல் வேண்டும். "Be yourself" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். Be true to your core identity rather than faking a different one because you think it will be attractive to others. இவ்வாறு வாழ்ந்தாலேஇறையருளை எளிதாகப் பெறமுடியும்.

 

     எனவேமுயல் விட்டுகாக்கைப் பின் போவது கூடாது.

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...