047. சிற்றினம் சேராமை --- 05. மனம் தூய்மை

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை

 

     சிற்றினம் சேராமையாவதுசிறியார் இனத்தைப் பொருந்தாமை. 

 

     சிறிய இனமாவதுநல்வினையின் பயனாக சுகமும்,தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும்பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும்உள்ளே பகையும்உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும்கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார். 

 

     அறிவினை வேறுபடுத்திதீநெறியில் செலுத்திஇம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால்பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால்பெரியாரைத் துணைக் கொள்வதோடுசிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஒருவனுக்குச் சிறப்பான அறிவு வெளிப்படுதற்கு இடமாகிய மனத் தூய்மைசெயல் தூய்மை ஆகிய இரண்டும்,அவன் சார்ந்துள்ள இனத்தின் தூய்மை பற்றியே அமையும்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் நல்லினத்தைச் சேர்ந்து ஒழுகுவானாயின்அவனுக்கு இற்கையாகவே உள்ள அறியாமையானது நீங்கிமனம் தூய்மை பெறும். மனம் தூய்மை பெறவேஅவனது சொல்லும்செயலும் தூய்மையானதாகவே இருக்கும்.

 

     ஒருவனுடைய இயற்கை அறிவு நன்றாக இருப்பினும்அவன் சிற்றினத்தாரோடு கூடுவானாயின்அவனுக்கு இயல்பாக உள்ள நல்லறிவு கெட்டுமனத் தூய்மை கெடுவதுடன்அவனது சொல்லும்செயலும் அவன் சார்ந்த இனத்தைப் பொறுத்து கெடுதியாகவே அமையும்.

 

திருக்குளைக் காண்போம்...

 

மனம் தூய்மைசெய்வினை தூய்மை இரண்டும்,

இனம் தூய்மை தூவா வரும்.          

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்--- அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும்

 

     இனம் தூய்மை தூவா வரும் --- ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக்கோடாக உளவாம்.

 

       (மனம் தூயனாதல் ஆவதுவிசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவதுமொழி மெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் 'தூவறத் துறந்தாரை (கலித். நெய்த,1 ) என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டுஅதனால் சொல்லும் செயலும் தூயனாம் எனஇதனான் இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்.... 

 

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்,

மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா,

மனவாக்குக் கெட்டவன் வாதனை தன்னால்

தனைமாற்றி ஆற்றத் தகும்ஞானி தானே. --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     உயிர்களின் மனமும்வாக்கும்காயமும் நேர்முறையில் செயற்படாதுகோடும் முறையில் செயற்பட்டால் உயிர்கட்குநீக்குதற்கரிய வலிய வினைகள் உளவாகும். அவை அவ்வாறின்றிநேர்முறையில் செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படாது. (எனினும் அஞ்ஞானம் உடையவர்களது மனோவாக்குக் காயங்கள் நேர்முறையில் செயற்படமாட்டா). இனி ஒருவன் அஞ்ஞானத்தின் நீங்கி மெய்ஞ்ஞானத்தைப் பெற்றுமனோவாக்குக் காயங்களின் பிடியில் அகப்படாது விடுபட்டானாயினும்பழைய வாசனை காரணமாக ஒரோவழி அவை தம்மியல்பில் வந்து அவனைத் தாக்குதல் கூடும். அப்பொழுது அவன் தற்போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உடையவனாய் அவற்றைச் செயற்படுத்தினால்அவன், `ஞானிஎன்னும் நிலையினின்று நீங்கான்.

 

 

ஊர் அங்கண நீர் உரவுநீர் சேர்ந்தக்கால்

பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; --- ஓரும்

குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்

நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.              ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஊர் அங்கண் நீர் உரவு நீர் சேர்ந்தக்கால் --- ஊரின் சாக்கடை நீர் கடலைச் சேர்ந்தால்பேரும் பிறிதாகித் தீர்த்தம் ஆம் --- பேரும் கடல் நீர் என்று வேறாகி அருள் நீராகும்ஒரும் குலமாட்சி இல்லாரும் --- மதிக்கத்தக்க நற்குலப் பெருமையில்லாத கீழோரும்,குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து --- குணப்பெருமை வாய்ந்த நல்லாரைச் சார்ந்து அவர் நற்றன்மையில் மலைபோல் அசைதலின்றி நிலைத்து விளங்குவர்.

 

      கீழோரும் மேலோரைச் சேர்ந்தால்மேலோரேயாவர்.

 

 

மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்

உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க

இனநலம் நன்குடைய வாயினும் என்றும்

மனநலம் ஆகாவாம் கீழ்.   ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     மிக்கு பெருகு மிகு புனல் பாய்ந்தாலும் --- மிகப் பெருகி நன்மை மிகுதலான நன்னீர் கடலில் வீழ்ந்தாலும்உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல் --- தன்னிடத்துள்ள உவர்ப்பு நீங்காத ஆரவாரிக்கும் கடலைப்போல்கீழ் --- கீழ்மக்கள்மிக்க இனநலம் நன்கு உடைய ஆயினும் --- மிகவும் நல்லோரினத்தோடு சேர்ந்து வாழும் நன்மையை நன்றாகப் பெற்றிருந்தாலும்என்றும் மனநலம் ஆகாவாம் --- எப்பொழுதும் மனத்தின்கண் தூய்மை பெறுதல் இலர்.

 

      கீழ்மக்கள் பெரியார் இணக்கம் பெற்றிருப்பினும் மனச்செம்மை அடையார்.

 

      கடல் தன்னிடத்து வந்த நன்னீரை உவர்ப்பாக்குதல் போல்கீழ்மக்கள் தம்முடன் இருக்கும் பெரியோர்களைத் தம்மைப்போல் ஆக்குவர். இணக்கம் பெற்ற நாம் அவர்வழி ஒழுகாது நம் வழியில் அவரை ஒழுகச்செய்தோம் என்ற மகிழ்ச்சியால் ஆரவாரிப்பார்.

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...