பொது --- 1007. வேடர் செழுந்தினை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வேடர் செழுந்தினை (பொது)

 

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன

     தானன தந்தன தாத்தன ...... தனதான

 

 

வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி

     லோசன அம்புக ளாற்செயல் ...... தடுமாறி

 

மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு

     வேளைபு குந்தப ராக்ரம ...... மதுபாடி

 

நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி

     னாலுல கங்களு மேத்திய ...... இருதாளில்

 

நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம

     நாடஅ ருந்தவம் வாய்ப்பது ...... மொருநாளே

 

ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ

     ராயிர வெம்பகு வாய்ப்பணி ...... கயிறாக

 

ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு

     ளாயனு மன்றெயில் தீப்பட ...... அதிபார

 

வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய

     வாழ்வென வஞ்சக ராக்ஷதர் ...... குலமாள

 

வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன்

     வானுல குங்குடி யேற்றிய ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

வேடர் செழும் தினை காத்துதண் மீதில் இருந்த பிராட்டி,

     விலோசன அம்புகளால் செயல் ...... தடுமாறி,

 

மேனி தளர்ந்துருகாப் பரிதாபம் உடன்புனமேல் திரு

     வேளை புகுந்த பராக்ரமம்,...... அதுபாடி,

 

நாடு அறியும்படி கூப்பிடு நாவலர் தங்களை,ஆர்ப் பதி-

     னாலு உலகங்களும் ஏத்திய ...... இருதாளில்,

 

நாறு கடம்பு அணியாப் பரிவோடு புரந்த பராக்ரமம்

     நாடஅருந்தவம் வாய்ப்பதும் ...... ஒருநாளே?

 

ஆடக மந்தர நீர்க்கு அசையாமல் உரம்பெற நாட்டி,ஒர்

     ஆயிர வெம் பகுவாய்ப் பணி ...... கயிறாக,

 

ஆழி கடைந்துமுது ஆக்கிநேகர் பெரும் பசி தீர்த்தருள்,

     ஆயனும்ன்று எயில் தீப்பட,...... அதிபார

 

வாடை நெடுங்கிரி கோட்டிய வீரனும்,எம்பரம் மாற்றிய

     வாழ்வு என,வஞ்சக ராக்கதர் ...... குலம் மாள,

 

வாசவன் வன்சிறை மீட்டுவன் ஊரும் அடங்கலும் மீட்டு,வன்

     வான் உலகும் குடி ஏற்றிய ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

            ஆடக மந்தரம் --- பொன் மயமான மந்தர மலையை 

 

            நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி --- திருப்பபாற்கடலில் அசையாதபடி வலிமை பொருந்தும்படி நிறுவி,

 

            ஒரு ஆயிரம் வெம் பகுவாய்ப் பணி கயிறாக --- ஓராயிரம் வெம்மையான வாய்களை உடைய வாசுகியைத் தாம்புக் கயிறாகப் பிடித்து,

 

            ஆழி கடைந்து --- திருப்பாற்கடலைக் கடைந்து 

 

            அமுது ஆக்கி --- அமுதத்தை உண்டாக்கி,

 

            அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் --- இந்திரனாதி இமையவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி அருள்புரிந்த

 

            ஆயனும் --- ஆயர் குலத்தில் அவதரித்த திருமாலும்,

 

            அன்று எயில் தீப்பட --- அந்த நாளில் முப்புராதிகளின் மதில்கள் எரிந்து அழியும்படி,

 

            அதிபார வாடை நெடும்கிரி கோட்டிய வீரனும் --- மிகுந்த கனமுள்ள நீண்ட வடமேரு கிரியை வில்லாக வளைத்த சிவபரம்பொருளும்,

 

            எம் பரம் ஆற்றிய வாழ்வு என --- "அமரரைக் காக்கும் எங்களது பாரத்தைத் தணித்த செல்வமே" என்று துதிக்க,

 

            வஞ்சக ராக்கதர் குலம் மாள --- வஞ்சனையைச் செய்யும் அசுரர்களுடைய குலம் மாளச் செய்து,

 

            வாசவன் வன்சிறை மீட்டு --- தேவேந்திரனின் வலிமையான சிறையை நீக்கி,

 

            அவன் ஊரும் அடங்கலும் மீட்டு --- அவனுடைய அமராவதி நகரத்தையும்ஏனைய எல்லாயவற்றையும் மீட்டுத் தந்து,

 

            அவன் வான் உலகும் குடி ஏற்றிய பெருமாளே --- அவன் தனது உலகமாகிய விண்ணுலகத்தில் என்றும் நின்று நிலவுமாறு குடியாக வைத்து அருள் புரிந்த பெருமையின் மிக்கவரே!

 

            வேடர் செழும் தினை காத்து --- வேடர்களுடைய செழுமை வாய்ந்த தினைப் புனத்தைக் காவல் செய்து,  

 

           இதண் மீதில் இருந்த பிராட்டி --- பரண் மீதில் இருந்த வள்ளிபிராட்டியாருடைய

 

            விலோசன அம்புகளால் செயல் தடுமாறி --- விசாலமாகிய கண்கள் ஆகிய கணைகளினால் செயல் தடுமாறியது போல் நடித்து,

 

            மேனி தளர்ந்து உருகா --- உடல் தளர்ந்துஉள்ளம் உருகி நின்று

 

            பரிதாபமுடன் --- இரக்கத்தோடு கிழ வடிவு கொண்டு,

 

            புனம் மேல் --- தினைப்புனத்திற்கு

 

            திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி --- சிறந்த சமயத்தில் சென்ற தேவரீரது வல்லபத்தைப் புகழ்ந்து பாடி,

 

            நாடு அறியும்படி கூப்பிடு நாவலர் தங்களை --- உலகம் அறிய அழைக்கின்ற புலவர்களை,

 

            ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய --- மணம் கமழ்கின்ற பதினான்கு உலகங்களும் துதிக்கின்ற,

 

            நாறு கடம்பு அணியா --- மணம் கமழும் கடப்பமாலையை அணிந்த 

 

           இரு தாளில் --- இரண்டு திருவடிகளில்,

 

           பரிவோடு புரந்த பராக்ரமம் --- அன்புடன் ஆட்கொண்ட திருவருளின் வலிமையை

 

            நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே --- நாடி நிற்கஅருமையான தவப் பயனால் அடியேனுக்கு அருள் கூடும்படியான ஒரு நாள் கிட்டுமோ?

 

பொழிப்புரை 

 

             பொன் மயமான மந்தர மலையை திருப்பபாற்கடலில் அசையாதபடி வலிமை பொருந்தும்படி நிறுவி,  ஓராயிரம் வெப்பமான வாய்களை உடைய வாசுகியா தாம்புக் கயிறாகப் பிடித்துதிருப்பாற்கடலைக் கடைந்து அமுதத்தை உண்டாக்கிஇந்திராதி இமையவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி அருள்புரிந்தஆயர் குலத்தில் அவதரித்த திருமாலும்அந்த நாளில் முப்புராதிகளின் மதில் எரிந்து அழியும்படிமிகுந்த கனமுள்ள நீம்ட வடமேரு கிரியை வில்லாக வளைத்த உருத்திரமூர்த்தியும்அமரரைக் காக்கும் எங்களது சுமையைத் தணித்த செல்வமே என்று துதிக்க,  வஞ்சனையைச் செய்யும் அசுரர்களுடைய குலம் மாளச் செய்து,தேவேந்திரனின் வலிமையான சிறையை நீக்கிஅவனுடைய அமராவதி நகரத்தையும்ஏனை எல்லாப் பொருள்களையும் மீட்டுத் தந்து,அவனுடைய உலகமாகிய விண்ணுலகத்தில் என்றும் நின்று நிலவுமாறு குடியாக வைத்து அருள் புரிந்த பெருமையின் மிக்கவரே!

 

            வேடர்களுடைய செழுமை வாய்ந்த தினைப் புனத்தைக் காவல் செய்து,  பரண் மீதில் இருந்த வள்ளிபிராட்டியாருடைய கண்கள் ஆகிய கணைகளினால் செயல் தடுமாறியது போல் நடித்துஉடல் தளர்ந்துஉள்ளம் உருகி நின்றுஇரக்கத்தோடு கிழ வடிவு கொண்டுதினைப்புனத்திற்கு சிறந்த சமயத்தில் சென்ற வல்லபத்தைபு புகழ்ந்து பாடி,உலகம் அறிய அழைக்கின்ற புலவர்களை,  மணம் கமழ்கின்ற பதினான்கு உலகங்களும் துதிக்கின்றமணம் கமழும் கடப்பமலர் மாலையை அணிந்த இரண்டு திருவடிகளில்,அன்புடன் ஆட்கொண்ட திருவருளின் வலிமையை நாடி நிற்கஅருமையான தவப் பயனால் அடியேனுக்கு அருள் கூடும்படியான ஒரு நாள் கிட்டுமோ?

 

விரிவுரை

 

வேடர் செழுந்தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி ---

 

வள்ளி நாயகி தினைப்புனத்தில் பரண் மீது இருந்து தினைப் பயிரை இனிது காவல் புரிந்ததன் உட்பொருள் கீழ்வருமாறு...

 

நெஞ்சமாகிய வயலிலேஆணவமாகிய காட்டை வெட்டிஅகங்காரமாகிய கல்லைப் பிளந்துகடினமாகிய மேட்டை எடுத்துஉண்மையாகிய உழவைச் செய்துமௌனம் என்ற வித்தை விதைத்துஅன்பு எனற தண்ணீரைப் பாய்ச்சிசாந்தமாகிய வேலியிட்டுஞானமாகிய பயிரை வளர்த்துஅதில் தோன்றிய முத்தி என்ற கதிரைக் கொய்ய வந்த காம க்ரோதமாதி பறவைகளைவைராக்கியமாகிய பரண்மீது இருந்துஆன்மாவாகிய வள்ளிபத்தி என்ற கவணிலேஇறைவனது திருமாநங்களாகிய கற்கை வைத்து எறிந்துஇனிது காவல் புரிந்தனள் என்று உணர்க.

 

காராரும் ஆணவக் காட்டைக் களைந்து,அறக்

                        கண்டுஅகங் காரம் என்னும்

            கல்லைப் பிளந்து,நெஞ் சகமான பூமிவெளி

                        காணத் திருத்தி,மேன்மேல்

பாராதி அறியாத மோனமாம் வித்தைப்

                        பதித்துஅன்பு நீராகவே

            பாய்ச்சி,அது பயிராகு மட்டு,மா மாயைவன்

                        பறவைஅணு காதவண்ணம்

நேராக நின்று,விளை போகம் புசித்து,உய்ந்த

                        நின்அன்பர் கூட்டம்எய்த

            நினைவின் படிக்குநீ முன்நின்று காப்பதே

                        நின்னருட் பாரம்என்றும்

ஆராரும் அறியாத சூதான வெளியில்வெளி

                        யாகின்ற துரியமயமே

            அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி

                        ஆனந்த மானபரமே.              ---  தாயுமானார்.

 

திருவேளை புகுந்த பராக்ரமம் அது பாடி ---

 

பலகாலும் மாதவம் செய்த சுந்தரவல்லியைமான் வயிற்றில் பிறந்து குறவர் குடியில் வளருமாறு கந்தவேள் கட்டளையிட்டு அருளினார்.  அவ்வண்ணம் பிறந்துவளர்ந்துதினைகாவல் புரிந்து இருந்தனர் எமது ன்னையாகிய வள்ளிநாயகியார். காமனை எரித்த கனல் கண்ணிலே இருந்து வெளிப்பட்ட ஞானபண்டிதனாகிய முருகப் பெருமான், வள்ளியம்மையின் தவப் பண்புக்கு உள்ளம் உவந்துமனம் உருகிநாரதர் அன்று சொன்ன சகாயத்தின்படிக்கு, பக்குவத்தை அறிந்து வள்ளிமலைக்குச் சென்று அருள்புரிந்தனர்.

 

இருவினை ஒப்புமலபரிபாகம் எய்திசத்திநிபாதம் அடைந்த வேளையில் இறைவன் வெளிப்படுவான்.

உணக்குஇலாது ஓர்வித்து மேல்விளை யாமல்

என்வினை ஒத்தபின்

கணக்குஇலாதது ஓர்கோலம் நீவந்து காட்டினாய்

கழுக் குன்றிலே.

 

என்பது மணிவாசகம்.

 

வடிவேல் பெருமான் வள்ளி நாயகிக்கு அருள் புரிந்தது அவருடைய பரம கருணையின் முதிர்ச்சி என்க. அதனால் அக் கருணையையும்வள்ளியம்மைக்கு அருள் புரியச் சென்ற அடிமலரையும் மிகவும் பாராட்டி மெய்ஞ்ஞானிகள் புகழ்ந்து பாடுகின்றனர்.

 

மஞ்சு தவிழ்சாரல் அஞ்ச யிலவேடர்

        மங்கை தனைநாடி                 வனமீது

     வந்த சரணார விந்தம் அதுபாட

        வண்த மிழ்விநோதம்           மருள்வாயே... ---  (அஞ்சுவித) திருப்புகழ்.

 

மேவிய புனத்து இதணின் ஓவியம் எனத்திகழு

மேதகு குறத்திதிரு         வேளைக்காரனே.  ---  திருவேளைக்காரன் வகுப்பு.

 

நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்---

 

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்க முடியாத முருகனுடைய பெருமையையும்கருணையின் எளிமையையும்உலகம் அறிந்து உய்யும்படி முழக்கமாக மொழிந்துஉலக மாந்தரைக் கந்தவேள் கருணையைப் பெறுமாறு அறைகூவி அருட்புலவர்கள் அழைப்பார்கள். தாம் பெற்ற இன்பம் தரணி பெறவேண்டும் என்ற கருணையால் என்று அறிக.

 

இவை ஒழியவும் பலிப்பது

            அகலவிடும் உங்கள் வித்தை-

            யினை இனி விடும் பெருத்த பார்உளீர்;                

 

மயிலையும்அவன் திருக்கை

            அயிலையும்அவன் கடைக்கண்

            இயலையும் நினைந்து இருக்க வாருமே.  ---  திருக் கடைக்கணியல் வகுப்பு.

 

நாவிலே வன்மை உடையவர் நாவலர். நறுந்தமிழை ஓதி உணரும் நாவலருடைய நாவில் முருகவேளின் திருவடி உறையும்.

 

பலகலை படித்துஓது பாவாணர் நாவில்உறை

     இருசர ணவித்தார வேலாயு தா,உயர்செய்

          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ..மணவாளா

 

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்

     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்

          பழநிவ ருகற்பூர கோலாக லா,அமரர் ...... பெருமாளே.  ---  (தலைவலி) திருப்புகழ்.

 

பதினாலு உலகங்களும் ஏத்திய இருதாள்---

 

திருவேலிறைவன் திருவடிப் பெருமை அளவிடற்கரியது. தேவரும் மூவரும் அறிகிலர்...

 

சுருதி மறைகள்இருநாலு திசையில் அதிபர்முநிவோர்கள்,

     துகள்இல் இருடி எழுபேர்கள், ...... சுடர்மூவர்,

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர்,நவநாதர்,

     தொலைவில் உடுவின் உலகோர்கள், ...... மறையோர்கள்,

 

அரிய சமயம் ஒருகோடிஅமரர் சரணர் சதகோடி,

     அரியும் அயனும் ஒருகோடி, ...... இவர்கூடி

அறிய அறிய அறியாத அடிகள் அறியஅடியேனும்

     அறிவுள் அறியும் அறிவுஊற ...... அருள்வாயே. --- திருப்புகழ்.

 

 ஆலம்உண்ட கோன்,அகண்ட லோகம்உண்ட மால்,விரிஞ்சன்,

   ஆரணங்கள் ஆகமங்கள்               புகழ்தாளும்,

ஆனனங்கள் மூவிரண்டும்ஆறிரண்டு தோளும்,அங்கை

   ஆடல்வென்றி வேலும்என்று          நினைவேனோ..   ---  (தோலெலும்பு) திருப்புகழ்.

 

பரிவோடு புரந்த பராக்ரமம் ---

 

பலகலை படித்து ஓதும் சீலமுள்ள செந்தமிழ்ப் புலவர்களை செவ்வேள் பரமன் தனது செந்தாமரைத் தாளில் வைத்துக் காத்தருளுகின்றான். நக்கீரர்சிகண்டி முனிவர்சிதம்பர சுவாமிகள்குமரகுருபரர்பொய்யாமொழிப் புலவர்பாம்பன் அடிகள் முதலிய அருட்புலவர்களை ஆண்டருளிய கருணையை அகில லோகமும் அறியும்.

 

நாட அருந்தவம் வாய்ப்பதும் ஒரு நாளே---

 

பாற்ரைப் புரந்த பரங்கருணைத் தடங்கடலாகிய பன்னிருகைப் பரமனது பாததாமரையை நாடுவதர்குப் பல பிறவிகளில் செய்த நிஷ்காமிய தவம் வேண்டும். "தவமும் தவம் உடையார்க்கு ஆகும்" என்பார் செந்நாப் போதார்.

 

முருகவேளின் திருவடியைப் பணிவதற்கு நான் என்ன தவம் செய்தேனோ என்று அடிகள்அநுபூதியில் கூறுமாறும் காண்க.

 

காளைக் குமரேசன் எனக் கருதித்

தாளைப் பணியத் தவம் எய்தியவா..         

 

ஒரு நாளே --- ஒரு நாளும் உண்டாகுமோ என்று வினாவுகின்றார்.  ஏகாரம் வினாப் பொருளில் வந்தது.

 

சிவமே பரம்பொருள் என்று பணியும் பேறு பெற்றதனால்அப் பெறல் அரும் பேற்றைக் குறித்துமாதவச் சிவஞான சுவாமிகள் வியந்து கூறும் தேனினும் இனிய செழும் பாடலைக் காண்க.

 

ஆனேறு உயர்த்தருளி அன்றினார் ஊர்எரித்த

கோனே எனக்குக் குலதெய்வமாம் பேற்றால்

யானே தவமுடையேன்யானே தவமுடையேன்,

யானே தவமுடையேன் எல்லா உலகினுமே.

 

ஆடக மந்தர......  ஆயனும்---

 

இந்த இரண்டு அடிகளில் திருமால் திருப்பாற்கடலைக் கடைந்து பண்ணவர் பசி அகற்றிய பராக்கிரமத்தை உரைக்கின்றனர்.

 

பொன்மேரு மலை மத்தாகவாசுகி தாம்பாகசந்திரன் தறியாகதிருமால் கூர்மம் ஆகித் தாங்கஅமரர் ஆழி கடைந்தனர்.

 

தேவர்கட்கு நரை திரை மூப்பு மரணம் முதலிய துன்பங்கள் இருந்தன. அவற்றை அகற்றும் பொருட்டு பாற்கடல் கடைந்து அமிர்தம் அருந்துமாறு கருதினர். மேரு மந்தர மலையை மத்தாக விடுத்துசந்திரனைத் தூணாக நிறுத்திவாசுகியைத் தாம்பாகப் பிடித்துநெடிதுகாலம் கடைந்து அயர்ந்தனர். அதுபோது திருமால் தனது கரங்களால் கடைந்து அதினின்றும் எழுந்த அமிர்தத்தை ஜெகன் மோகினி அவதாரம் எடுத்துஅமரர்கள் பசியகல வழங்கி ஆண்டனர்.

 

மாதிரமும் மந்தரமும் நீரும்நில னுங்கனக

    மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய 

மகரசலி லங்கடைந்து இந்த்ராதி யர்க்குஅமுது

    பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள் …. ---  பூதவேதாள வகுப்பு.

 

சிவார்ச்சனை செய்பவர்களில் முதன்மை பெற்ற திருமால் அமுதத்தை சிவபத்தர்களுக்கே அளித்தனர். 

 

அன்று எயில் தீப்பட …..... கிரிகோட்டிய வீரனும்---

 

முப்புராதியர் கொடுமைக்கு ஆற்றாது அமரர் அரனாரிடம் முறையிட்டனர். திரிபுர சம்மாரத்தின் பொருட்டு தேவர் ஒரு தேரையும் அமைத்துத் தந்தனர்.

 

பூமி தேர்த் தட்டாககீழேயுள்ள எழு தலங்களும் மேலே உள்ள ஏழு உலகங்களும் தேரின் கீழும் மேலுமுள்ள பகுதிகளாகவாளகிரி அச்சாகசந்திர சூரியர் சக்கரங்களாகமுப்பத்து முக்கோடி தேவர்களும் தேர்ப் பதுமைகளாகஏழு மேகங்களும் தேர்ச் சீலைகளாகஎண்திசைக் காவலர்கள் எட்டு குத்துக்கால்களாகமேருமலை வில்லாகசேடன் நாணாகதிருமால் கணையாகஅக்கணைக்கு அழற்கடவுள் வாயாகவாயு குதையாகசாரதிகேள்வன் சாரதியாகநான்மறைகள் புரவிகளாக அமைந்தன.  நம்முடைய துணையினாலேதான் சிவபிரான் திரிபுர சம்மாரம் செய்கின்றனர் என்று இமையவர்கள் எண்ணினார்கள். அந்த எண்ணத்தை அறிந்த இறைவர்நமக்கு ஒரு துணையும் வேண்டுமோ என்று திருவுள்ளத்தில் சிந்தித்துசிறிது சிரித்து அருலினார். அதிலே தோன்றிய ஒரு சிறிய தீப்பொறியால் திரிபுரம் சாம்பாரகியது.

 

மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்

     மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு

          மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி ......லொருமூவர்

 

மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்

     தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்.....     ---  (ஆனாதஞான) திருப்புகழ்.

 

எம்பரம் ஆற்றிய வாழ்வு என---

 

தேவர்களைக் காத்தலும்அசுர சங்காரமும் முருகவேள் புரிந்ததனால்காத்தல் தொழிலை உடைய திருமாலுக்கும்சங்காரத் தொழிலை உடைய சிவமூர்த்திக்கும் பாரம் குறைந்தது. அதனால்எமது சுமையைக் குறைத்த குமரவேளே என்று துதித்தனர்.

 

ஆற்றுதல் --- குறைத்தல். மாற்றிய எனினும் அமையும். பரம் --- பாரம். குறுகல் விகாரம் பெற்றது.

 

காக்கக் கடவியநீ காவாது இருந்தக்கால்

ஆர்க்குப் பரம்ஆம் அறுமுகவா...

 

என்ற இடத்திலும் இவ்வாறு வருவதை அறிக.

 

அரிக்கும் அரனுக்கும் உள்ள சுமையைக் குறைத்த குமரவேள்நமது வினைப் பாரத்தையும் குறைத்து அருளுவார்.

 

கருத்துரை

 

முருகா! பாவலரை ஆட்கொண்ட உமது பாதத்தைப் போற்ற அருள்புரிவீர்.

 

 

 

  

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...