கயவர் குணத்தை மாற்ற முடியாது

 


கயவர் குணத்தை மட்டும் மாற்ற முடியாது

-----

 

            பதர் குறித்த பதிவுகளைப் பார்த்தோம் "துட்டனைக் கண்டால் தூர விலகு" என்னும் முதுமொழியும் உண்டு. பதர்களையும் துட்டர்களையும் இந்தக் கலியுகத்தில் அடையாளம் கண்டுகொள்வது எவ்வாறு என்னும் ஐயம் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு.

 

    கிருத யுகத்தில் மக்கள் அறநெறியுடன்  வாழ்ந்தார்கள். அறிவுதியானம்தவம் என்பன சிறந்து இருந்த யுகம் இது. 


     திரேதா யுகத்தில்,  நான்கில்மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்ந்தார்கள். இராமாவதாரம் இந்த யுகத்தில் நிகழ்ந்த்து என்று கூறுவர். 

 

     துவாபர யுகத்தில்,  சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்ந்தார்கள். மகாபாரதம் தோன்றியது இந்த யுகத்தில்தான் என்று கூறுவர். 

 

     கலியுகத்தில்,  நான்கில்ஒரு பகுதி அறநெறியுடனும்,மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000  ஆண்டுகளைக் கொண்டதாகும். இந்த யுகத்தில் மக்கள் அவரவர் தமது சுயநலத்திற்காக அதர்ம வழியில் சென்று பாவங்களை செய்வதால் பகைமைக் குணமும்பொறாமைக் குணமும்மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர்.

 

     "கலி" என்னும் சொல்லுக்குஆரவாரம்துன்பம்,செருக்குவஞ்சகம்,வறுமை என்னும் பொருள்கள் உண்டு. எனவேகலியுகத்தில் இவை எல்லாம் உண்டு. இவற்றோடு தான் நமது வாழ்நாளைக் கழிக்கவேண்டி உள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்கஇறையருள் உண்டு என்பதையும் மறக்கலாகாது. 

 

        யுகங்கள்தோறும் மக்களில் தீயவர்களும்கீழானவர்களும் உண்டு.  கீழ்மக்கள் என்பவரைஅவரது உருவத்தால் அடையாளம் காணமுடியாது. அவரது சொல்லையும்செயல்களையும் கொண்டே அடையாளம் காணமுடியும்.

 

       இங்குஇரு புராண நிகழ்வுகளைச் சொல்லியாக வேண்டும்.முதலில் மகாபாரத நிகழ்வு ஒன்றைக் காண்போம்.

 

       உள்ளத்தில் கள்ளம் என்பது சிறிதும் இல்லாத பாண்டவர்கள் மீது பொறாமையும்வெறுப்பும் உள்ளூரக் கொண்டு இருந்தவன் திருதராஷ்டிரன். அதை அவ்வப்போது வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு இருந்தவர்கள் துரியோதனன்சகுனிகர்ணன்துச்சாதனன் ஆகியவர்கள்.இந்த ஐவரும் கூடிபாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்புவதன் மூலம்அத்தினாபுரத்தை விட்டு வெளியேற்ற எண்ணினர்.

 

       சிறிய தந்தையாகிய திருதராஷ்டிரன்தங்களை வாரணாவதம் செல்லுமாறு பணித்ததுதமது நன்மை கருதியே என்றுஉள்ளத்தில் தூயவரான தருமபுத்திரர் நம்பினார். ஆனால்,

திருதராட்டிரன் முதலானோரின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்தவிதுரர்,அவர்களுடைய வஞ்சகத்தை அறிந்துசூசகமாக, "காடு பற்றி எரியும் போதுஎலிகள் வளைக்குள் புகுந்து தப்பிவிடும்" என்று சொல்லி பாண்டவர்களை வாரணாவதம் செல்ல வழியனுப்பி வைக்கின்றார். அத்தோடு அவர்கள் உய்யும் உபாயத்தையும் செய்து வைத்தார்.

 

       திருதராஷ்டிரன் சொன்ன சொல்லில் வஞ்சகம் தெரியவில்லை. அவனது செயலில்தான் வஞ்சகம் ஒளிந்து இருந்தது.

 

       அடுத்துபெரியபுராணத்தில் ஒரு நிகழ்வைக் காண்போம்...

 

       மெய்ப்பொருள் நாயனாரின் புகழையும்பெருமையையும் சகியாதுபலமுறையும் அவரை எதிர்த்துதோற்ற முத்தநாதன் என்னும் ஓர் அரசன்வஞ்சனையால் அவரை வெல்லக் கருதிசிவசின்னங்கள் தாங்கி"தொழுத கை உள்ளும் படை ஒடுங்கும்" என்று திருவள்ளுவ நாயனார் குறிப்பிட்டது போலஉடைவாளைப் புத்தகக் கவளியில் மறைத்துக் கட்டித் தவவேடத்தோடு அவர் அரண்மனை புகுந்தான். அந்தப்புர வாயில் காப்போனான தத்தன் தடுப்பவும்நாயனார்க்கு ஞானோபதேசம் செய்ய வந்ததாகக் கூறி உள்சென்று நாயனாரைக் கண்டான். அவனுடைய சிவவேடத்தைக் கண்டுஉண்மை தெளியாத நாயனார்அந்த வஞ்சகனை ஓர் ஆசனத்தில் இருத்திஎதிரில் வணங்கி நிற்கஅப் பாதகன் புத்தகம் எடுப்பது போல உடைவாளை எடுத்துத் தன் எண்ணத்தை முடித்தான். நடந்தவற்றை எல்லாம் கருத்தோடு பார்த்திருந்த தத்தன் ஒரு கணப் பொழுதினுள் வந்து தன் வாளை ஓச்ச,பூமியில் வீழ்கின்ற நாயனார், "தத்தா நமர்" என்று தடுத்து வீழ்ந்தார். நாயனார் பணியை மேற்கொண்டு தத்தன் அவனை அழைத்து வெளிச்சென்று அவன் செய்கை அறிந்து அவனைக் கொல்லச் சூழ்ந்தவர்களை எல்லாம் விலக்கிஅந் நகர் எல்லையளவும் உடன் சென்று வழிவிட்டுமீண்டு வந்து, "சிவனடியாரை இடையூறின்றி நகர்ப்புறத்து விட்டனன்" என்று சொல்லும் வரை உயிர்தாங்கி இருந்த நாயனார், "திருநீற்று அன்பு பாதுகாத்து அளிப்பீர்" என்று மந்திரி முதலியவர்க்குச் சொல்லிசிவனடி நீழல் அடைந்தார்.

 

       வேடத்தைக் கண்டு ஏமாந்தார் மெய்ப்பொருள் நாயனார். ஆனால்முத்தநாதனை நன்றாக கவனித்தவாயில் காப்போன் அவனது வஞ்சகத்தை அறிந்து கொண்டான்.

 

       எனவேதீயவர்களை,மூர்க்கர்களைகீழ்மக்களை அவர்களது வெளித் தோற்றத்தை வைத்து மதிப்பிட முடியாது.அவர்களது செயல்களை வைத்தே மதிப்பிட்டுக் கொள்ள முடியும் என்பது தெளிவாகும். புறத் தோற்றத்தில் தீயவர்கள் நல்லவர்களாகத் தான் தெரிவார்கள். புறத் தோற்றத்திற்கு எல்லாரும் மனிதராகத் தான் தோற்றுவார்கள். யாரிடத்தில் என்ன குணம் பொருந்தி உள்ளது என்பதைஅவர்களது செயல்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். விலங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். அவனிடத்தில் பிறவிகள்தோறும் பொருந்தி வந்த விலங்குத் தன்மை இருக்கும். அதில் இருந்து விடுபட்டுதன்னை மனிதனாக்கிக் கொள்ளநல்லறிவு பெற வேண்டும். நல்லறிவு பெறுவதற்கு அறிவுநூல்களைப் பயிலவேண்டும்.

 

     "அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்றவரோடுகல்லாதவரை ஒப்பிட்டு நோக்கஅவர் நன்மை உடைய மனிதர்,இவர் தீமையை உடைய விலங்கு போல்பவர்" என்கின்றார் திருவள்ளுவ நாயனார். மனிதர் யாவரும் உருவத்தால் ஒத்து இருக்கின்றனர். நன்மை உடையவர் நூல்களைக் கற்று வல்லவர்கள் கல்லாதவர் மனித உருவில் இருந்தாலும்தீமை தரும் விலங்கு மனத்தை உடையவர் என்பதை அறிவுறுத்த,

 

விலங்கொடு மக்கள் அனையர்இலங்கு நூல்

கற்றாரோடு ஏனை அவர்.         

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார்.

 

     இரக்கம் கொள்ளாமலிருப்பது மிருகங்களின் இயற்கையும் அல்லபட்சிகளின் இயற்கையும் அல்ல . அவைகளுமே இரக்கம் கொள்ளுகின்றன.விலங்கு வடிவில் இருந்தாலும்எல்லா நன்னெறிகளையும் அறிந்து இருந்தவன் வாலி. அப்படி இருந்தும்அறநெறிக்கு மாறாக நடந்துகொண்டது வாலியின் குற்றம். இராமபிரானிடம் அவன் அறநெறிகளை உரைத்துக் கூறிஇராமனது செயலில் குற்றம் கண்டுபிடித்ததில் இருந்து இது தெளிவாகும். இராமபிரானிடத்தில் அவன் கூறிய சொற்களே அவன் அறநெறி எது என்பதை நன்கு அறிந்தவன் என்பதைப் புலப்படுத்தி விட்டது. தன்பால் குற்றம் இல்லை என்று வாலி கூறிய சொற்களை மறுத்துஅவனுடைய செயல் குற்றம் உடையதே என்கின்றார் இராமபிரான். நல்லது தீயது பகுத்தறியும் அறிவு இல்லாமல் வாழ்வதுதான் விலங்கின் தன்மை என்பது காட்டப்பட்டது.                                 

 

"நன்றுதீதுஎன்று இயல் தெரி நல் அறிவு

இன்றி வாழ்வது அன்றோவிலங்கின் இயல்?

நின்ற நல் நெறிநீ அறியா நெறி

ஒன்றும் இன்மைஉன்வாய்மை உணர்த்துமால்".  --- கம்பராமாயணம்வாலிவதைப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     விலங்கின் இயல் --- விலங்குகளின் இயல்பாவதுநன்று தீது என்று ---நல்லது இதுதீயது இது என்றுஇயல் தெரி --- அதனதன் இயல்புகளைஉள்ளபடி உணர்கின்றநல் அறிவு இன்றி --- நல்ல அறிவில்லாமல்வாழ்வதுஅன்றோ --- (மனம் போனவாறு) வாழ்வது அல்லவாநின்ற நல் நெறி ---நிலைபெற்ற நல்ல அறநெறிகளில்நீ அறியா நெறி --- நீ ஆராய்ந்து உணராதஅறவழி;  ஒன்றும் இன்மை --- ஒன்றும் இல்லை என்பதைஉன் வாய்மைஉணர்த்தும் --- இப்பொழுது நீ பேசிய உனது வாய்மொழியே உணர்த்தும்.     

 

'தக்க இன்னதகாதன இன்னஎன்று

ஒக்க உன்னலர் ஆயின்உயர்ந்துள

மக்களும் விலங்கேமனுவின் நெறி

புக்கவேல்அவ் விலங்கும் புத்தேளிரே.   --- கம்பராமாயணம்வாலிவதைப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     தக்க இன்ன --- ஏற்கத் தகுதியானவை இவைதகாதன இன்ன --- ஏற்கத்தகுதியில்லாதவை இவைஎன்று --- என்று தெளிந்துஒக்க --- நீதி நூல் முறைமைக்கு ஏற்பஉன்னலர் ஆயின் --- எண்ணாதவர்களானால்உயர்ந்துள மக்களும் --- உருவத்தாலும் பிறப்பாலும் உயர்ந்துள்ள மனிதர்களும்விலங்கே ---விலங்குகளுக்கு ஒப்பானவரே ஆவர்மனுவின் நெறி புக்கவேல் ---மனுதர்மம் வகுத்த நன்னெறியில் நடக்குமாயின்அவ் விலங்கும் ---அஃறிணைப் பிறப்பினவாகிய விலங்குகளும்புத்தேளிரே --- தேவர்களுக்குஒப்பானவையே.

 

     ஐம்பொறி உணர்வும்உணவு உறக்கம் போன்ற செயல்களும்மக்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாய் அமைந்தவை. நல்லவை இவைதீயவை இவை எனப் பகுத்துணர்ந்து வாழும் முறை விலங்குகளினும்மனிதர்களுக்கு இருப்பதால் மனித இனம் சிறப்புடைய இனமாகக் கருதப்படுகிறது. ஆதலால்மனிதராய்ப் பிறந்தும் பகுத்துணர்ந்து வாழும் அறவாழ்வு அமைத்துக் கொள்ளவில்லையானால் அம் மனிதர் விலங்கு நிலையில் எண்ணப்படுவர்.  

 

     விலங்காய்ப் பிறந்தும் நீதி நெறியோடுவாழுமாயின் விலங்கும் தேவர்கட்குச் சமமாக மதிக்கப்படும் என்பதாம். நன்று தீது உணர்ந்த விலங்குக்கு உள்ள சிறப்பு விளக்க 'விலங்கும் புத்தேளிரேஎன்றார்.

 

     இதனைபின்வரும் திருக்குறளால்நாயனார் நம்மைத் தெளிவுபடுத்துகின்றார்.

 

"கணை கொடிதுயாழ்கோடு செவ்விதுஆங்குஅன்ன

வினைபடு பாலால் கொளல்".

 

இதன் பொருள் ---

            

     அம்பு வடிவில் நேராக இருப்பினும்செயலால் தீங்கு விளைவிப்பது. கழுத்தில் வளைந்து யாழ் இருப்பினும்அது தரும் இனிமையான இசை இன்பத்தைத் தரும். 

 

     அதுபோலவேஒருவரை நல்லவர் தீயவர் என்பதை அவருடைய புறத்தோற்றத்தால் கூற இயலாது. ஆகவேஒருவரை புறத்தோற்றத்தாலும் அல்லது அவர் வகிக்கும் பதவியாலும்பிற நிலைகளாலும்மதிப்பிடக் கூடாது. அவர் செய்யும் செயலைக் கொண்டே நல்லவராதீயவரா என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

 

     புறத்தோற்றத்தில் எல்லோரும் மனித வடிவில் தான் உள்ளனர். அவர் சொல்லும் சொல் கூட மிக இனிமையாகத்தான் இருக்கின்றது. ஆனால்அவரது சொல் வேறுசெயல் வேறாக இருக்கும் என்பதை வாழ்வியலில் நாம் அறிந்திருக்கலாம். 

 

      காட்டில் வாழும் மிருகங்கள் ஒவ்வொன்றும் வடிவத்தாலும்செயலாலும் வேறுபட்டு இருப்பவை. அவைகளிடம் இருந்து தப்பிப்பதற்கு உபாயங்கள் உள்ளன. ஆனால்கயவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான உபாயத்தைஅறிவு நூல்களை ஓதுவதன் மூலமாகவும்கற்ற பெரியோர்கள் சகவாசத்தாலுமே அறிந்து கொள்ள முடியும்.

 

       எந்த விதமான சாதனைகளையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியும். ஆனால்கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல்"குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.

 

"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டு உட்படுத்தி விடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,

 

உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்து கூத்தாட்டி விடலாம்,

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்

 

பிணமதை எழுப்பலாம்அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம்காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,

 

மணலையும் கயிறாத் திரிக்கலாம்கயவர்குணம்

     மட்டும் திருப்பவசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".

 

இதன் பொருள் ---

 

       மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

       குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் --- நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம்.

கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் --- கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் --- நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களைஅவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்துஅவைகளை  நீக்கிவிடலாம். உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் --- தக்க முறைகளைக் கையாண்டுகிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம்.உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் --- பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். அக்கினி சுடாமல் பெரும் புனல் எனச் செய்யலாம் --- அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பைமிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். பிணியையும் அகற்றலாம் --- நோயையும் அகற்றலாம். கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் --- காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். மணலையும் கயிறாத் திரிக்கலாம் --- மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ  -- கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.

 

     எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால்கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். கயவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று "கயமை" என்னும் ஓர் அதிகாரத்தில்

 

"மக்களே போல்வர் கயவர்அவர் அன்ன

ஒப்பாரி யாம் கண்டது இல்"

 

என்னும் திருக்குறளின் வழிகீழ்மக்கள் என்பவர் தோற்றத்தால் மக்களைப் போலவே இருப்பர். அவரைப் போல ஒப்பினை நாம் வேறு எங்கும் கண்டது இல்லை என்கின்றார்.

 

"தேவர் அனையர் கயவர்அவரும் தாம்

மேவன செய்து ஒழுகலால்"

 

என்னும் திருக்குறளின் வழிகீழ்மக்கள் என்பவர் எப்படியாவது தாம் விரும்புவனவற்றையே செய்து வாழ்ந்து வருவர். அத் தன்மையால் அவரகள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்கின்றார். 

 

 

 

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...