045. பெரியாரைத் துணைக்கோடல் --- 10. பல்லார் பகைகொளளின்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 45 -- பெரியாரைத் துணைக்கோடல்

 

     உயிர்க்கு இயல்பாக அமைந்த காமம் முதலாகிய ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால்குற்றங்கடிதல் பற்றிச் சொன்ன நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "ஒருவன் நல்லவர் ஒருவரோடு உள்ள தொடர்பினை விடுத்தல் என்பதுதனி ஒருவனாய் இருந்துகொண்டுபலருடைய பகையையும் தேடிக் கொள்ளுவதை விடவும் பத்துப் பங்கு தீமையைத் தரும்" என்கின்றார்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே,

நல்லார் தொடர் கைவிடல்.            

 

இதற்குப் பரிமேழகர் உரை ---

 

      பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து--- தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து

 

     நல்லார் தொடர் கைவிடல்--- அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.

 

      (பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லதுஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின்இது செய்தல் அதனினும் தீது என்பதாம்.

 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...

 

பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னா;

அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா;

பரியார்க்குத் தாம்உற்ற கூற்றுஇன்னா;இன்னா

பெரியோர்க்குத் தீய செயல்.       --- இன்னா நற்பது

 

இதன் பொருள் ---

 

     பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா --- பெரியவருடன்கொண்டதொடர்பை விடுவது துன்பமாம்அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா --- செய்தற்கரிய காரியங்களைச் செய்து முடிப்போம் என்று சொல்லுதல் துன்பமாம்பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா --- (தம்மிடத்தில்) அன்பு கொள்ளாதவர்க்குத் தாம் அடைந்த துன்பங்களைக் கூறுவது  துன்பமாம்பெரியார்க்குத் தீய செயல் இன்னா --- பெருமையுடையார்க்குத் தீயனவற்றைச் செய்தல் துன்பமாம்.

 

       பெரியார் தொடர் விடுதல் இன்னா என்பதனைப் ‘பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்என்னுந் திருக்குறளானும் அறிக. பெரியார் - ஈண்டுக் கல்வியறிவு நற்குண நல்லொழுக்கங்களிற் சிறந்த நல்லோர்.  ‘அரியவை செய்துமென உரைத்தல் இன்னாஎன்றது தாம் செய்யக் கருதிய அரிய செயல்களைச் செயலால் வெளிப்படுத்தலன்றி உரையால் கூறுதல் தக்கதன்று என்றபடிதம்மால் செய்ய இயலாதவற்றைச் செய்து தருவேம் எனப் பிறர்க்கு வாக்களிப்பது இன்னாவாம் எனப் பொருள் கூறினும் அமையும். பரிதல் - அன்பு செய்தல் : இரங்குதலுமாம். பெரியார்க்குத் தீங்கு செயல் இன்னா என்பதனை ‘எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்உய்யார்பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்என்னும் வாயுறைவாழ்த் தானும் அறிக. 

 

நல்லார்செயுங் கோண்மை நாடோறும் நன்றாகும்,

அல்லார்செயுங் கேண்மை ஆகாதே,- நல்லாய்! கேள்,

காய்முற்றின் தின்தீங் கனியாம்,இளந்தளிர் நாள்

போய்முற்றின் என்னாகிப் போம்.   ---  நன்னெறி.

 

இதன் பொருள் ---

 

     நல்ல பெண்மணியேகாய் முற்றினால் இனிய சுவைக் கனியாகும். இளந்தளிர் நாள் கடந்து முற்றினால் என்ன ஆகும். அதுபோலநல்லோர் நட்பு நாளும் நன்றாக வளரும்.  அல்லாதவர் நட்பு அவ்வாறு ஆகாது.

 

 

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...