046. சிற்றினம் சேராமை --- 04. மனத்து உளது போல

 



திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை

 

     சிற்றினம் சேராமையாவதுசிறியார் இனத்தைப் பொருந்தாமை. 

 

     சிறிய இனமாவதுநல்வினையின் பயனாக சுகமும்,தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும்பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும்உள்ளே பகையும்உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும்கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார். 

 

     அறிவினை வேறுபடுத்திதீநெறியில் செலுத்திஇம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால்பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால்பெரியாரைத் துணைக் கொள்வதோடுசிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "ஒருவனுக்கு அவனது மனத்தின் இடத்தே உள்ளது போலத் தோன்றும் சிறப்பான அறிவானது,அவன் சேர்ந்த இனத்தால் உண்டானது ஆகும்"

 

     உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் ஒருவனது அறிவு அவனது இயற்கையாகிய குணம் போலத் தோன்றினாலும்உற்று நோக்கினால்அந்த அறிவானது அவனது இயல்பான அறிவாக இல்லாமல்அவன் சேர்ந்த இனத்தின் கூட்டுறவால் மாறுபட்டு நின்றதாக உள்ளதை அறியலாம்.

 

     இதனால்இயல்பாகவே நல்லறிவு உடையவராக இருந்தாலும்சிற்றினத்தாரோடு கூடுவாரானால்அவர் அத் தகுதியையே உடையவராய் இருப்பார் என்பது அறியப்படும்.

 

 

திருக்குறளைக் காண்போம்...

 

மனத்து உளது போலக் காட்டிஒருவற்கு

இனத்து உளது ஆகும்அறிவு.          

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

            அறிவு--- அவ் விசேட உணர்வு

 

     ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி--- ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி

 

     இனத்து உளதாகும்--- அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் .

 

    (மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டிஎன இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு் புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.

 

     பின்வரும் பாடல் இத் திருக்குளுக்கு ஒப்பாக உள்ளது அறிக.

 

அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறியல்ல செய்து ஒழுகி யவ்வும்,--- நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே,வெயில்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.       ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகியவும் --- அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில் அடங்கி ஒழுகாத தீயோருடன் சேர்ந்து முறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும்வெயில் முறுகப் புல் பனிப்பற்று விட்டாங்கு --- வெயில் கடுகுதலால் புல்நுனியைப் பனியின் பற்றுதல் விட்டாற்போலநெறியறிந்த நற்சார்வு சாரக் கெடும் --- நன்னெறி தெரிந்தொழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச் சார்ந்து பழகுதலால் கெடும்.

 

            தீய குணங்கள் நீங்கும்பொருட்டு நல்லாரினத்திற் சார்ந்து பழகுதல் வேண்டும்.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...