042. கேள்வி --- 03. செவியுணவில் கேள்வி

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 42 -- கேள்வி

 

     முன் அதிகாரங்களில் கற்றலின் இன்றியமையாமைகல்லாமையால் வரும் கேடு ஆகியவற்றை உணர்த்திய நாயனார்இந்த அகிதாரத்தில்கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 

 

     இந்தக் கேள்வியானதுகேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின்அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவன் ஆயின்அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

 

     கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல்கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால்இது பெரும் செல்வம் ஆயிற்று.பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

 

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "செவிக்கு உணவாகிய கேள்வியினை உடையவர்இந்த நிலவுலகத்தில் இருப்பவர் ஆயினும்அவியாகிய உணவினை உடைய தேவருக்கு ஒப்பு ஆவார்" என்கின்றார் நாயனார்.

 

     செவியால் கேட்கப்படும் கேள்வியை உணவு என்றார். உணவு உடம்புக்கு திடம் செய்வது போல்கேள்வி உயிருக்குத் திடம் செய்யும். அவி உணவு என்பது தேவர்களுக்கு யாகத்தில் கொடுக்கப்படும் படையல்.

 

     தேவர்களுக்குத் துன்பம் இல்லை. அறிவால் நிறைந்த ஆன்றோரும் துன்பம் அறியார். எனவேதேவருக்கு ஆன்றோர் ஒப்பு ஆவர்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

செவி உணவின் கேள்வி உடையார்அவி உணவின்

ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.                

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     செவி உணவின் கேள்வி உடையார்--- செவியுணவாகிய கேள்வியினை உடையார்,

 

     நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர்--- நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.

 

      (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும்துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர்என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய"சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

வெய்யமரப் பேர் உரைத்த வேடனும் வான்மீகி எனும்

தெய்வமுனி ஆனான்,சிவசிவா! --- துய்ய

செவியுணவில் கேள்வி உடையார் அவியுணவின்

ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.                

 

வெய்யமரம் --- மராமரம். 

 

     வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகரர். வழிப்பறிக் கொள்ளையனாகத் தனது இளமைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத முனிவர் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகரர். முனிவரை மரத்தில் கட்டிப்போட்டு விட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது அந்த முனிவர், "யாருக்காக இப்படி வழிப்பறி செய்கிறாய்?" என வினவினார். "எனது குடும்பத்துக்காகத்தான்என்றார் ரத்னாகரர்.  "உனது செல்வத்தில் பங்கு போட்டுக்கொள்ளும் உனது குடும்பத்தினர்உனது பாவத்தில் பங்கு போட்டுக் கொள்வார்களா?” என வினவினார் நாரதமுனி. 

 

     ரத்னாகர் மனக் குழப்பத்துடன் தனது வீட்டுக்குச் சென்று அனைவரிடமும் கேட்டார். யாரும் அவரது பாவத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வாழ்க்கையை வெறுத்த ரத்னாகரர்திரும்பவும் நாரத முனிவரிடம் வந்துதாம் பாவங்களிலிருந்து விடுபட அருள்புரியும்படி வேண்டிக்கொண்டார்.

 

     நாரதர்அவரை இராம நாமத்தை ஜபிக்கும்படிக் கூறினார். ஆனால்ரத்னாகருக்கு நாரதர் கூறிய இராம மந்திரத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. எனவேநாரதர் அருகிலிருந்த ஒரு மரத்தைக் காட்டிஅந்த மரத்தின் பெயரைக் கூறும்படிக் கேட்டார். ரத்னாகர் அந்த மரத்தின் பெயர் 'மராஎன்று கூறினார். அந்தப் பெயரையே ஜபிக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றார் நாரதர். ரத்னாகரரும், 'மராமராஎன்று தொடர்ந்து உச்சரிக்கஅதுவே நாளடைவில் இராமநாம ஜபம் ஆகிவிட்டது. காலப்போக்கில் அவர் மீது புற்று வளர்ந்துவிட்டது. அதன் காரணமாக அவருக்கு 'வால்மீகிஎன்ற பெயர் ஏற்பட்டது. அவருடைய இராமநாம ஜபத்தின் பலனாக அவருக்குக் காட்சி தந்த பிரம்மதேவர், ``உன்னுடைய இராமநாம ஜபத்தின் பயனாக நாம் உனக்கு தரிசனம் தந்ததுடன்கவிபாடும் திறமையும் அருள் புரிந்தோம். ஏற்கெனவே நாரத முனிவரிடம் இராம சரிதத்தைக் கேட்ட நீராமனின் சரிதத்தைக் காவியமாகப் படைப்பாய்என்று அருளினார். ராம காவியம் பிறந்தது.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்

மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்

புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்

திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.  --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     முத்தி என்பது `அறம்பொருள்இன்பம்என்னும் உலகியற் பொருள்களையும்வேதத்தின் கன்மகாண்டம்உபாசனா காண்டம்ஞானகாண்டம் என்னும் மெய்ந்நெறிப் பொருள்களையும் வல்லார்வாய்க் கேட்டார் பெற்ற பயனேயாம்.

 

விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்

தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது

வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்

இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.  ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     `உண்மையான கல்வியும்கேள்வியும்ஞானச் செய்தியும் யாவைஎன்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்துஅது பிழைபட்டுப் பொய்ம்மையில் விழாதிருப்பின்சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.

 

உறுதுணை ஆவது உயிரும் உடம்பும்,

உறுதுணை ஆவது உலகு உறு கேள்வி,

செறிதுணை ஆவ சிவனடிச் சிந்தை,

பெறுதுணை கேட்கில் பிறப்பில்லை தானே.  ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     உயிரும் உடம்பும் ஒன்றற்கு ஒன்று உறுதுணை யாவன. அவை அவ்வாறு நிற்றற்கு உறுதுணையாய் நிற்பதே உலகியல் பற்றிய கேள்வி; (என்றதுயாண்டும் உயிர் உடம்பொடு நிற்றலாகிய பிறப்பு நிலையை நீக்க மாட்டாது;அதன்கண் சில நன்மையைத் தருவதே என்றபடி) இனி உயிரோடு ஒட்டி நிற்கும் துணையாவன சிவபெருமானது திருவடிச் சிந்தனையைத் தூண்டும் சிவநெறிக் கேள்விகளேபெறுதற்குரிய துணையாகிய அக்கேள்விகளைக் கேட்டபின்பிறப்பு இறப்புக்கள் இல்லாத வீடு கூடுவதாம்.

 

 

தவல் அருந் தொல்கேள்வித் தன்மையுடையார்

இகல் இலர் எஃகு உடையார் தம்முட் குழீஇ

நகலின் இனிதாயில் காண்பாம் அகல்வானத்து

உம்பர் உறைவார் பதி.                  ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     தவல் அரு தொல் கேள்வித் தன்மையுடையார் இகல் இலர் எஃகுஉடையார் தம்முள் குழீஇ நகலின் இனிதாயின் ---அழிதல் இல்லாத பழைமையான நூங்களைக் கற்றதோடுகேள்வியிலும் சிறந்தவர்கள்பகைமைக் கணம் இல்லதவர்கள். கூர்த்த அறிவும் உடையவர்கள். இப்படிப் பட்டோருடன் கூடிக் கலந்து மகிழ்வதை விட இனிமை உடையதாக இருக்குமாயின்காண்பாம் அகல் வானத்து உம்பர் உறைவார் பதி --- அகன்ற விண்ணின் மேலிடத்தில் உறையும் தேவர்களின் திருநகரைக் காண முயல்வோம்.

 

மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்.   --- கொன்றை வேந்தன்.

 

இதன் பொருள் ---

 

     பெரியோர் சொல்லிய வார்த்தையானது தேவாமிர்தம்போல் இன்பத்தைச் செய்யும்.

 

செவி வயின் அமிர்தக் கேள்வி

   தெவிட்டினார். தேவர் நாவின்

அவி கையின் அளிக்கும் நீரார்.

   ஆயிரகோடி சூழ.

கவிகையின் நீழல். கற்பின்

   அருந்ததி கணவன். வெள்ளைச்

சிவிகையில். அன்னம் ஊரும்

   திசைமுகன் என்னச் சென்றான்.   ---  கம்பராமாயணம்எழுச்சிப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     கற்பின் அருந்ததி கணவன் --- கற்புடைய அருந்ததிக்குக் கணவனான வசிட்ட முனிவன்செவி வயின் --- (தம்) செவி மூலமாகஅமுதக் கேள்வி --- அமுதம் போல் இனிய நூல்  கேள்விகளைதெவிட்டினார் --- தெவிட்டும் அளவிற்கு மிகுதியாகக் கேட்டவர்களும்தேவர் நாவின் --- தேவர்கள் நாவினால்அவிகையின் --- சுவைக்கின்ற  அவிசைத் தம் கைகளால்;   அளிக்கும் நீரார் --- கொடுக்கும்இயல்புடைய அந்தணர்களும்;  ஆயிரங்கோடி சூழ --- ஆயிரவர் தன்னைச் சூழ்ந்து வரகவிகையின் நீழல் --- குடை நிழலிலேவெள்ளைச்சிவிகையின் ---வெண்மையான பல்லக்கிலே;  அன்னம் ஊரும் ---அன்ன ஊர்தியிலே ஏறிச் செல்லும்திசைமுகன் என்ன --- நான்முகன் போலசென்றான் --- போனான்.

 

     அருந்ததி கணவனான வசிட்டன் ஆயிரங்கோடி அந்தணர் சூழக்கவிகையின் நீழலில் வெள்ளைப் பல்லக்கில் நான்முகனைப் போலச்சென்றான்.

 

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...