047. தெரிந்து செயல்வகை --- 03. ஆக்கம் கருதி

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவது,தான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இது, பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது. என்பதால்சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "எதிர்வரும் பயனைக் கருதிகையில் உள்ள முதற்பொருளை இழக்கும் செயலினைஅறிவு உடையவர் மேற்கொள்ள மாட்டார்" என்கின்றார்.

 

     ஒரு செயலைச் செய்து, பெரியதோர் ஊதியத்தை அடையலாம் என்று எண்ணித் தன்னிடத்தில் உள்ள முதலையும் இழக்கும்படியான செயலைத் தொடங்குதல் அறிவு உடையவர் செயல் ஆகாது. எனவேதானே நன்றாக எண்ணியும்தக்கோரிடத்துக் கலந்து ஆய்ந்தும்செலவழித்த முதலுடன் ஊதியம் தருகின்ற தொழிலையே செய்தல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

  

ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை,

ஊக்கார் அறிவு உடையார்.                            

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை--- மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை

 

     அறிவுடையார் ஊக்கார்--- அறிவு உடையார் மேற்கொள்ளார்.

 

     ('கருதிஎன்னும் வினையெச்சம் 'இழக்கும்என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்றுதம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினைஎன்றார்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாதிராவிட மாபாடியக் கர்த்தரானமாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

சானகியை இச்சித்துத் தன்உயிரும் போக்கினனே

தூநீர் இலங்கையர்கோன்,சோமேசா! - ஆனதனால்

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

 

இதன்பொருள்---

 

      சோமேசா! தூ நீர் இலங்கையர் கோன் --- தூய்மையுடைய கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு அசரனாகிய இராவணன்சானகியை இச்சித்து --- சனகராசன் புதல்வியாகியஇராமன் மனைவியான சீதைய விரும்பிதன் உயிரும் போக்கினான் --- தன் உயிரையும் இழந்தான்ஆனதனால் --- அந்தச் செயலினால்,   

 

      ஆக்கம் கருதி --- மேல் எய்தக் கடவதாகிய ஊதியத்தினை நோக்கிமுதல் இழக்கும் --- முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாகியசெய்வினை --- செய்வினையைஅறிவுடையார் ஊக்கார் --- அறிவுடையார் மேற்கொள்ளார் என்றவாறு.

 

     ஆக்கமேயன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன --- வலியும் காலமும் இடமும் அறியாது பிறர் பொருள் கொள்ளச் சென்றுதன் பொருளையும் இழத்தல் போல்வன. 

 

     இங்கு, ஆக்கம் என்றது இன்பத்தை. முதல் என்றது உயிரை.  சானகி --- சனகராசன் புத்திரி.  முன்னை வினை வந்து சூழ்ந்ததாகலின் செய்வினை என்றார். செய்வினை வினைத்தொகை.   

 

      இரகுகுல உத்தமனான இராமன் தனது சிற்றன்னையாகிய கைகேசி சூழ்வினையால் நாடிழந்துகாடடைந்து நின்ற நிலையில்இலக்குமணனால் உறுப்பு அறுப்புண்ட சூர்ப்பணகை என்னும் அரக்கிசீதையை இராமனில் பிரிக்க எண்ணிதன் தமையனாகிய இராவணனிடம் போய்ச் சீதையின் பேரழகைப் பலபடி வருணிக்கஅவ் வருணனை கேட்ட இராவணன் சீதைபால் மோகம் கொண்டு சந்நியாச வேடத்தோடும் சீதராமலட்சுமணர்கள் இருந்த பஞ்சவடியை அடைந்து தன் மாமனாகிய மாரீசனைப் பொன்மானாகப் போக்கிஇராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையை பர்ணசாலையொடு பெயர்த்துக் கொணர்ந்துஇலங்கைக்கண் அசோக வனத்தில் சிறை வைத்துத் தன் எண்ணம் முடிவுறாது நிற்கஇராமன் சுக்கிரீவன் நட்புப் பெற்று அனுமனை நாடவிட்டுச் சீதை இலங்கையில் சிறை இருந்து வருந்துவது உணர்ந்துவானர வீரர்களோடு திருவணை கட்டிக் கடலைத் தாண்டி, இலங்கை சேர்ந்து அரக்கர் யாவரையும் மடித்துமுடிவில் இராவணனையும் தன் அம்பிற்கு இலக்காக்கினான்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாக"திருப்புல்லாணி மாலை"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

                                                

ஏக்கால் ஓர்ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவு உடையார் என்பதால்,புல்லையூரமுதல்
போக்காது இருத்து,தன் தந்தை மற்று ஆக்கம்  பொருந்தலின்றி,
வாக்கால் உரைத்து உண்மை வாழ்ந்தான் இரணியன்                                                    மைந்தனன்றே.

 

இதன் பொருள் ---

 

     திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமாளே! ஏக்கத்தினால் எதிர்வரும் பயனைக் கருதிகையில் உள்ள முதற்பொருளை இழக்கும் செயலினை,அறிவு உடையவர் மேற்கொள்ளமாட்டார் என்பதால்தன்னை அழித்துக் கொள்ளாமல்தனது தந்தைக்கும் அவர் எண்ணிய ஆக்கம் வந்து அவரைப் பொருந்தாதபடிக்குமெய்ப்பொருளைச் சொல்லி  நல்வாழ்வு பெற்றான் இரணியன் மைந்தனான பிரகலாதன்.

 

     ஏக்கால் --- ஏக்கத்தினால். ஆக்கம் பொருந்தலின்றி --- நன்மையை அடையாமல். இரணியன் மைந்தன் --- பிரகலாதன்.

                                    

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காணலாம்...

 

ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்

மேஎந் துணை அறியான்,மிக்குநீர் பெய்து இழந்தான்,

தோஓம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே

தாஅம் தரவாரா நோய்.       ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     உலகம் ஆண்டவன் --- உலகத்தினை அரசு செய்த மாவலிமே(வு)ம் துணை அறியான் --- தன்னோடு பொருந்தி இருக்கும் அமைச்சன் ஆன சுக்கிரன் கூறியவற்றை அறியாதவனாய்எனக்கு எளிது ஆம் என்று --- மூவடி நிலம் கொடுப்பது எனக்கு எளிய செயலாகும் என்று சொல்லிமிக்கு --- செருக்கு மிகுந்துநீர் பெய்து --- தானமாக நீர் வார்த்துக் கொடுத்துஇழந்தான் --- உலகமெல்லாம் இழந்தான். (ஆதலால்),தோம் உடைய தொடங்குவார்க்கு --- குற்றமுடைய காரியங்களைத் தொடங்குகின்றவர்களுக்குதாம் தர வாரா நோய் இல்லை --- தாமே தமக்குத் தேட வாராத துன்பங்கள் இல்லை.

 

     குற்றமுள்ள காரியத்தைச் செய்யத் தொடங்குவார் தாமே தமக்குத் துன்பங்களை விளைவித்துக் கொள்வாராவர்.

 

     சுக்கிராச்சாரியார் அறிவுறுத்தியும் கேளாமல், வாமனருக்கு மூன்று அடி மண்ணைத் தானமாக ஈந்து, மாவலி உலகத்தை இழந்தமையால் தனக்குக் கேடு தானே தேடிக்கொண்டவன் ஆகின்றான். ஆகவேகுற்றமுடைய காரியத்தைத் தொடங்குவார் தமக்கு வேண்டிய துன்பங்கள் எல்லாவற்றையும் தாமே விளைத்துக் கொள்வர் என்பதாயிற்று.

 

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...