045. பெரியாரைத் துணைக்கோடல் --- 03. அரியவற்றுள் எல்லாம்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 45 -- பெரியாரைத் துணைக்கோடல்

 

     உயிர்க்கு இயல்பாக அமைந்த காமம் முதலாகிய ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால்குற்றங்கடிதல் பற்றிச் சொன்ன நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "பெரியவர்களைஅவர் மகிழுமாறு செய்துஅவரைத் தம்மவராகக் கொள்ளுதல் என்பதுஅரிய செயல்கள் அனைத்துள்ளும் அரிய செயல் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் அடையக் கூடிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த பேறுகளை அடையவேண்டுமாயின்அவற்றை எல்லாம் அடைவித்தற்கு உரிய பெரியாரைஅவர் மகிழ்வனவற்றைச் செய்துஅவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

அரியவற்றுள் எல்லாம் அரிதேபெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.                   

 

இதற்குப் பரிமேழகர் உரை ---

 

     பெரியாரைப் பேணித் தமராக் கொளல்--- அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்

 

     அரியவற்றுள் எல்லாம் அரிது--- அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.

 

     (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய,"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

சிந்தாமணி கிடைத்து என் தென்னற்கு?இறை அருளால்

வந்தாரைப் போல எது வாழ்விக்கும், --- அந்தோ!

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.    

 

            என் --- என்ன பயன். தென்னன் --– கூன்பாண்டியன். இறை அருளால் வந்தார் --- திருஞானசம்பந்தர். வாழ்வித்தல் ---  கூனை நிமிர்த்தல்.

 

     தென்னவன் நெடுமாற பாண்டியன் மதுரையம்பதியைத் தலைமை இடமாகக் கொண்டு அரசாட்சி புரிந்து வந்தான். அரசனாக இருந்தும் அவனுக்கு உடல் கூனாக இருந்ததோடுஉள்ளமும் கூனாகிதொன்மையான சைவசமயத்தை விடுத்துசமணம் சார்ந்து,தானும் துன்புற்றுதனது மக்களையும் துன்புறுத்தி வந்தான். அவன் சைவம் சாரும் நாள் எந்நாள்என்று மிக வருந்தினர்அவனது தேவியாகிய மங்கையர்க்கரசியாரும்முதலமைச்சரான குலச்சிறை நாயனாரும். திருஞானசம்பந்தப் பெருமான்திருமறைகாட்டிற்கு எழுந்தருளி உள்ளதைக் கேள்வியுற்றுதூதர்களை அனுப்பிபாண்டி நாட்டிற்கு எழுந்தருளி உய்விக்குமாறு வேண்டினர். திருஞானசம்பந்தப் பெருமான் திருவுள்ளம் இரங்கி பாண்டி நாட்டிற்கு எழுந்தருளிஅங்கிருந்த சமணர்களோடுதிருநீற்றுப் போரை நிகழ்த்தி,தென்னவனுக்கு உற்ற வெப்பு நோயை மாற்றி அருளியதோடுசமணர்கள் விரும்பியபடியே அவர்களோடு அனல் வாதம்,புனல் வாதம் புரிந்து,வென்றுபாண்டி நாட்டில் மீளவும் எல்லை இல்லாத் திருநீற்று நெறி தழைத்தோங்க அருளினார். அது மட்டுமல்லாமல்பாண்டியனைப் பற்றிய இருந்து கூனும் நீங்கியது.

 

     பாண்டியன்பெரியாராகிய திருஞானசம்பந்தப் பெருமானைப் பேணிஅவருக்கு அடிமையானதால்அவன் நாடும் உய்ந்ததுஅவனும் உய்ந்தான் என்பதை,

 

"எம்பிரான் சிவனே எல்லாப் 

     பொருளும்" என்று எழுதும் ஏட்டில்,

தம்பிரான் அருளால் வேந்தன் 

     தன்னைமுன் ஓங்கப் பாட,

அம்புய மலராள் மார்பன் 

     அனபாயன் என்னுஞ் சீர்த்திச்

செம்பியன் செங்கோல் என்னத் 

     தென்னன்கூன் நிமிர்ந்தது அன்றே"

 

என்னும் பெரியபுராணப் பாடலால் அறியலாம்.

 

     ஒருவன் நினைத்ததை எல்லாம் அளிக்கக் கூடியது சிந்தாமணி. எல்லாவிதமான நலங்களைப் பெற்றுபாண்டியன் அரசாட்சி புரிந்து இருந்தாலும்அதனால் அவனுக்கும்அவனது மக்களுக்கும் நன்மை இல்லை என்பதை, "சிந்தாமணி கிடைத்தும் என்?" என்றார். இறையருளால் வந்தவரான திருஞானசம்பந்தப் பெருமானால் அவனுக்கு வாழ்வு வந்தது.  அவனுடைய உடலில் இருந்து கூனும் நீங்கியது. உள்ளத்தில் உண்டாகி இருந்து கூனும் நீங்கிநல்லாட்சி புரிந்தான்.

 

     அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாகதிராவிட மாபாடியக் கர்த்தரானமாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

                                                                        

எத்திறமும் ஏயர்கோன் நட்புஆமாறு எண்ணணினரே

சுத்தநெறி ஆரூரர்,சோமேசா! --- வைத்த

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

 

      பெரியார் என்றது வலியால் பெரியராகிய அரசர் மேலும்தவத்தால் பெரியர் ஆகிய முனிவர் மேலும் நிற்கும். அன்றியும் அறிவு பருவம் ஒழுக்கம் முதலிய மூன்றானும் உயர்ந்தோரையும் குறிக்கும்.

 

இதன் பொருள்---

 

      சோமேசா! பெரியாரைப் பேணி --- பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்துதமரா கொளல் --- தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்வைத்த அரியவற்றுள் எல்லாம் --- அரியன என்று வைத்து எண்ணப்பட்ட பேறுகள் எல்லாவற்றினும்அரிது --- அருமையுடையதாகும்,

 

       சுத்தநெறி ஆரூரர் --- குற்றமற்ற தூய தோழமை நெறியில் நின்று ஒழுகிய நம்பியாரூரர்எத் திறமும் --- எல்லா வகையானும்ஏயர்கோன் --- ஏயர்கோன் கலிக்காம நாயனார்நட்பு ஆமாறு எண்ணினர் --- நட்புக்கு உரியவர் ஆகும்படி நினைத்தார் ஆகலான் என்றவாறு.

 

       எத்திறமும் எண்ணினார் என்பது ஏயர்கோன் கலிக்காம நாயனார்,சுந்தரர் வரவை நான் காண்பேன் ஆகில் வருவது என் ஆம் கொல்?என்று செற்றத்துடன் இருத்தலைக் கேட்டுப் பிழை உடன்பட்டுத் தீர்வு வேண்டிச் சிவபெருமான்பால் விண்ணப்பம் செய்திருந்தமைஇறைவர் கட்டளைப்படி கலிக்காமர்க்குச் சூலைநோய் தீர்க்கவரும் திறம் செப்பி விட்டமைஉடைவாளினால் வயிற்றோடும் சூலைநோயைக் கிழித்து வீழ்ந்திருந்த கலிக்காமரைக் கண்ட சுந்தரர்,"நானும் நண்ணுவேன் இவர் முன்பு" என்றமைஉடைவாளைப் பற்றியபோது இறைவர் அருளால் அவரும் உய்ந்து,விரைந்து எழுந்து வாளினைப் பிடித்துக் கொண்டமைஇருவரும் எழுந்து தழுவிக் கொண்டமைஇடைவிடா நண்பினால் மகிழ்ச்சி கொண்டமை முதலியன. எத்திறமும் எண்ணுதல் --- நன்கு மதித்தல்உயரச் செய்தல்அவர் வரை நிற்றல் என்பன முதலாயினவும் கொள்க.

 

     சோழநாட்டில் திருப்புன்கூர் என்னும் திருத்தலத்திற்கு அருகில் திருப்பெருமங்கலம் என்று ஒரு ஊர். அவ் ஊரில் வேளாண் மரபில் ஏயர்குடியில் தோன்றியவர் கலிக்காமர்.

 

      சோழ மன்னனிடத்தில் சேனைத் தலைவராய் அமர்ந்திருந்தார். அது அவருடைய பரம்பரைத் தொழிலாகும்.  திருப்புன்கூர் என்னும் தலத்திற்கும்கலிக்காமருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அத் திருப்பதியில் அவரால் பல திருப்பணிகள் செய்யப்பட்டன.

 

      சுந்தரமூர்த்தி சுவாமிகள் தியாகேசப் பெருமானைப் பரவையார்பால் தூது விட்ட செய்தி கலிக்காமருக்கு எட்டியது.  எட்டவேஅவர் வெம்பி வெம்பி வீழ்ந்தார். துன்பத்தில் ஆழ்ந்தார். "ஆண்டவனை அடியான் ஒருவன் தூது விடுவதாநல்லதுநல்லது" என்பார். "இச் செயலுக்குத் துணிந்தவனும் ஒரு தொண்டனாஇக் கொடுமை கேட்டும் என் ஆவி சோரவில்லையே" என்று வருந்தி இருந்தார். "ஒரு பெண்ணின் பொருட்டா ஆண்டவனைத் தூது விடுவதுஆண்டவன் இசைந்தாலும்அவனைத் தூதுக்கு ஏவலாமோஓர் இரவு முழுவதும் ஐயன் தூதனாக உழன்றானாம்என்ன கொடுமை?" என்பார். "இக் கொடுமைக்கு மனம் கம்பியாத ஒருவனைக் காணும் நாள் எந்நாளோஅவனைக் காண நேர்ந்தால் என்ன விளையுமோ?" என்பார். இவ்வாறு கலிக்காமர் மனம் நொந்து கிடந்தார்.

 

      கலிக்காமர் நிலைவன்தொண்டருக்குத் தெரிய வந்தது. இதனை வன்தொண்டர் ஆண்டவனிடம் முறையிட்டுக் கொண்டு இருந்தார். சிவபெருமான் இருவரையும் ஒருமைப் படுத்தத் திருவுள்ளம் கொண்டார். கலிக்காமர்பால் சூலை நோயை ஏவினார். அந்நோய் நாயனாரைப் பற்றிமுடுக்கிக் குடைந்தது.  நாயனார்சிவபெருமானை நினைந்துநினைந்துஉருகினார். போற்றினார். சிவபெருமானும் கலிக்காமர் முன்னே தோன்றி, "அன்பனே! இந் நோய் எவராலும் தீராது. இதைத் தீர்க்க வல்லான் ஒருவனே. அவன் வன்தொண்டன்" என்றார். என்றதும்நாயனார்சிவபெருமானைப் பார்த்து "எம்பிரானே! அடிகளுக்கு வழிவழித் தொண்டு செய்யும் மரபில் தோன்றியவன் நான்.  வன்தொண்டனோ புதிதாக அடிமைப்பட்டவன். அவனா என் நோயைத் தீர்க்க வல்லான்?  அவன் வந்து எனுத நோயைத் தீர்ப்பதை விடநோயால் வருந்துவதே எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

 

       உடனே சிவபெருமான் வன்தொண்டர்பால் சென்று, "தோழனே! கலிக்காமர் சூலை நோயால் பீடிக்கப்பட்டு வருந்துகிறார். அது நமது ஏலவால் நேர்ந்தது. நீ அவனிடம் சென்று அவன் நோயைத் தீர்ப்பாயாக" என்று அருளினார். வன்தொண்டருக்கு மகிழ்ச்சி பொங்கித் ததும்பி வழிந்தது. அவர்,தாம் சூலை நோயைத் தீர்க்க வருவதைக் கலிக்காமருக்குத் தெரிவித்துப் புறப்பட்டார்.

 

       கலிக்காமர், "பெண் பொருட்டு ஆண்டவனைத் தூது விட்ட ஒருவனா இங்கு வருகிறான்அவன் வந்து நோயைத் தீர்த்தற்கு முன்னர்என் வயிற்றைக் கிழித்துக் கொள்வேன்" என்று உடைவாளை எடுத்தார். தான் எண்ணியவாறே செய்து கொண்டார்.  

 

       இக் காட்சியைக் கண்ட நாயனார் மனைவியார்தாமும் உயிர் துறக்கத் துணிந்தார். அவ் வேளையில் சிலர் வந்து, "வன்தொண்டர் வருகிறார்" என்று சொன்னார்கள். அம்மையார் திடுக்கிட்டார். அங்கே அழுது கொண்டிருந்தவர்களைப் பார்த்து, "அழாதேயுங்கள்" என்று கட்டளை இட்டார். சுவாமிகளை எதிர்கொள்ளுமாறு அங்கிருந்தவர்களை ஏவினார். அவர்கள் அவ்வாறே சென்று சுவாமிகளை எதிர்கொண்டனர். சுவாமிகள் கலிக்காமர் இல்லம் போந்தார். அங்கே இடப்பட்டு இருந்த பீடத்தில் அமர்ந்தார். அவருக்கு அருச்சனை முதலியவைகள் செய்யப்பட்டன. அவர்களைத் தம்பிரான் தோழர் ஏற்று, "கலிக்காமர் ஏங்கேஅவருக்கு உற்ற நோயைத் தீர்த்துஅவரோடு நான் இருத்தல் வேண்டும்" என்று கேட்டார்.

 

       அம்மையார் ஏவலாளர்களை அழைத்து, "நாயனார்க்குக் கெடுதி ஒன்றும் இல்லை. அவர் உள்ளே உறங்குகிறார் என்று வன்தொண்டருக்குச் சொல்லுங்கள்" என்றார். ஏவலாளர்கள்அவ்வாறே வன்தொண்டருக்கு அறிவித்தனர். அதற்கு வன்தொண்டப் பெருமான், "நாயனாருக்குத் தீங்கு இல்லையாயினும்என் மனத்திற்குத் தெளிவு ஏற்படல் வேண்டும்" என்றார். மேலும் மேலும் பெருமான் தம் கருத்தை வலியுறுத்தினார். ஏவலாளர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை.  அவர்கள் வன்தொண்டருக்குக் கலிக்காமரைக் காட்டினார்கள்.

 

       வன்தொண்டப் பெருமான் நாயனாரைப் பார்த்தார். அவர் தம் நிலையை உணர்ந்தார். உணர்ந்ததும், "நானும் உயிர் துறப்பேன்" என்று உடை வாளை எடுத்தார். அப்பொழுதேஆண்டவன் அருளால் கலிக்காமர் உயிர்பெற்று எழுந்தார். எழுந்ததும், "அந்தோ! கெட்டேன்" என்று விரைந்து போய்ச் சுவாமிகள் கையில் இருந்த வாளைப் பற்றினார். வன்தொண்டப் பெருமான் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். நாயனாரும் சுவாமிகளை வணங்கினார். அன்று தொட்டு இருவரும் கெழுதகை நண்பர் ஆயினர்.

 

       இருவரும் திருப்புன்கூருக்குப் போய்த் திருவாரூரை அடைந்துஆண்டவனை வழிபட்டுக் கொண்டு இருந்தனர்.  சிலநாள் கழிந்த பின்னர்கலிக்காம நாயனார் விடைபெற்றுக் கொண்டு தமது பதியைச் சேர்ந்தார்.  நாயனார் அங்கே திருத்தொண்டுகள் பல செய்து ஆண்டவன் திருவடி நீழலை அடைந்தார். 

 

     கலிக்காம நாயனார்தம்மினும் பெரியார் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு நட்பாக இருக்குமாறு ஆண்டவன் பணித்தார். அவ்வாறே நாயனாரும் வாழ்ந்தார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்!

விட்டாரை அல்லால் கொளல்வேண்டா --- விட்டார்

பொறிசுணங்கு மென்முலைப் பொன்அன்னாய்! உய்ப்பர்

மறிதரவு இல்லாக் கதி.           --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     நறுமென் கதுப்பினாய் --- நறுமணம் பொருந்திய மெல்லிய கூந்தலை உடையவளே!நட்டாரை வேண்டின் --- நட்பினரை அடைய விரும்பின்விட்டாரை அல்லால் கொளல் வேண்டா --- பற்றற்ற பெரியோர்களை அல்லது பிறரை நட்பினர்களாகக் கொள்ள வேண்டாபொறி சுணங்கு மென்முலை பொன் அன்னாய் --- பொலிவினையும் தேமலையும் மென்மையினையுங் கொண்ட கொங்கையினையுடைய இலக்குமி போன்றவளே!விட்டார் --- அப் பற்றற்ற பெரியோர்கள்மறிதரவில்லாக் கதி உய்ப்பர் --- பிறவாமைக்கு ஏதுவாகிய வீடுபேற்றினை அடைவிப்பர்.

            

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து

இலங்கைக் கிழவற்கு இளையான் --- இலங்கைக்கே

போந்து இறை ஆயதூஉம் பெற்றான்,பெரியாரைச்

சார்ந்து கெழீஇயிலார் இல்.       ---  பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     இலங்கைக் கிழவற்கு இளையான் --- இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன்,பொலர் தார் இராமன் துணையாக --- பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாகதான் போந்து --- தான் சென்று (அவனது சார்பைப் பெற்று)இலங்கைக்கே போந்து இறையாயதும் பெற்றான் --- இலங்கைக்கே தலைவனாய அரச பதவியை அடைந்தான், (ஆதலால்) பெரியாரைச் சார்ந்து --- பெரியோர்களைச் சார்பாகப் பெற்று,கெழீஇ இலார் இல் --- (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்) பயன் அடையாதார் இல்லை.

 

            பெரியோரைச் சார்ந்தொழுகுவார் பெரும்பயன் பெறுவர் என்பதாம்.

 

 

இரும்பின் இரும்பு இடை போழ்ப - பெருஞ்சிறப்பின்

நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின்

அரிய அரியவற்றால் கொள்ப - பெரிய

பெரியரான் எய்தப் படும்.          ---  நான்மணிக்கடிகை.

 

இதன் பொருள் --- 

 

     இரும்பின் இரும்பு இடை போழ்ப --- இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டே  இரும்பைக் குறுக்கே வெட்டுவர்பெரும் சிறப்பின் நீர் உண்டார் நீரால் வாய் பூசுப --- மிக்க சிறப்புடைய,பாயசம் முதலிய நீருணவுகளை உண்டவர்களும்,நீர் கொண்டேவாய் கழுவுவர்தேரின் அரிய அரியவற்றால் கொள்ப --- ஆராய்ந்தால்அரிய செயல்களைஅருமையான முயற்சிகளால்முடித்துக் கொள்வர்பெரிய பெரியரான் எய்தப்படும் --- பெரிய பேறுகள்கல்வி கேள்விகளையுடைய தவப் பெரியோரால் அடையப்படும்.

 

            இரும்புக் கருவிகளால் இரும்பை வெட்டுவர்சிறந்த நீருணவுகளை உண்டார் நீரினால் வாய் கழுவுவார்அரிய செயல்களை அரிய முயற்சிகளாற் கொள்வர்பெரிய பேறுகளைப் பெரியோரால் எய்துவர்.

 

இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்

பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள்

பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்

நண்பாற்றி நட்கப் பெறின்.             ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பிறப்பினுள் --- தாம் பிறந்த பிறப்பில்பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றி நட்கப் பெறின் --- பிறர்க்கு உதவி செய்யும் நெஞ்சம் உடையவர்களான பெரியார்களோடு எப்போதும் நேயஞ் செய்து அணுகியிருக்கப் பெற்றால்இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும் முனியார் --- மிக ஆராயுமிடத்துத் துன்பந் தருவது என்றாலும் அப் பிறப்பினை யாரும் வெறுக்கமாட்டார்கள்.

 

            பிறவி துன்பந் தருவதாயினும் நல்லாரினத்தோடு நேயங் கொண்டிருக்கப் பெறின் அதனை யாரும் வெறுக்கமாட்டார்கள்.

 

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...