அடிமுடி தேடிய வரலாறு

 


திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய வரலாறு

-----

 

 

     ஒரு காலத்தில் பிரமனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் நெருப்புப் பிழம்பாய் காட்சி அளித்தார். அறிவு நிறைந்திருந்தால்ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்பர். அறியாமை நிறைந்து இருந்தால்எல்லாம் எனக்குத் தெரியும் என்று அகந்தை கொண்டு இருப்பர். அறியாமை மிகுந்து இருந்த திருமாலும் பிரமனும் நானே கடவுள்’ ‘நானே கடவுள்என்று வாதுப் போர் புரிந்த நிலையில்இருவரும்அச்சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அதுவரை அறிந்திராத வேறு ஒரு பொருளாக இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச் சோதிப்பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ,அவரே அவர்களில் பெரியவர் என்று தம்முள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

 

"பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,

அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ".     ---  திருவாசகம்.

 

     திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். 

 

     பிரமனோகல்வியில் மிகுந்தவன் அல்லவாஅன்னப்பறவை உருவெடுத்துமுடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காணமுடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இசையவில்லை. காரணம் கல்விச் செருக்கு. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேச வைத்தது. தான் சோதிப் பிழம்பின் முடியைக் கண்டதாக பிரமனே பொய் சொன்னார். வேதங்களை ஓதிக் கொண்டு இருப்பவன்அதன்படி நடப்பதை விட்டுபொய் சொல்லுவதாகிய குற்றத்தைப் புரிதல் கூடாது. தான் சோதிப் பிழம்பின் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.

 

"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படி கண்டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி,

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,

முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே"  ---திருமந்திரம்.

 

     வேதங்களாலும் காணமுடியாத நிலையில் உள்ளது சிவபரம்பொருள். "வேதங்கள்ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்பார் மணிவாசகப் பெருமான். அப்படிப்பட்ட பரம்பொருளை "நாம் அறிவோம்" என்னும் அகந்தையால்அறியாமையால் மூடப்பட்டு உள்ள மூடர்கள்தமது புறக்கண்ணால் காணவே முடியாது. உள்ளக் கண்ணால் காணவேண்டும். "அருட்கண்ணால் காணாதார் அல்லாதாரே" என்றார் அப்பர் பெருமான். "மால் அறியாநான்முகனும் காணா மலையினைநாம் போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்பால் ஊறு தேன் வாய்ப் படிறீ" என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவை. பொக்கங்களே --- பொய்களே பேசுகின்ற பெண்ணே என்றார். அவள் எப்படிப்பட்டவள்பாலும் தேனும் கலந்தது போன்று இனிமையாகப் பேசுகின்ற வாயை உடையவள். வாயிலை இனிமை. உள்ளத்தில் பொய். உருப்பட முடியுமா?

 

"எண்ணாயிரத்து ஆண்டுயோகம் இருக்கினும்

கண்ணார் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை;

உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்

கண்ணாடி போலக்கலந்து நின்றானே".

 

என்றார் திருமூல நாயனார்.

 

"பண்நால் மறைமுடியும் தேறாப் பரசிவனை

எண்ணால் அளவிறந்த எக்கலையால் கண்டும்ளக்

கண்ணால் அறியாதார் வீட்டுஇன்பம் காண்பரோ?

மண்ணாதி ஆறாறு நீத்த தனி மாதவரே".

 

என்பது திருவிளையாடல் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     மண்முதலிய முப்பத்தாறு தத்துவங்களையும் களைந்த பெருந்தவத்தினை உடைய முனிவர்களேஇசையமைந்த நான்கு வேதங்களின் அந்தமும் (வேதாந்தம்அல்லது மறைமுடிவுஎன்னும் உபநிடதம்) கண்டு அறியாத பரசிவத்தைஎண்ணினால் அளவில்லாத எந்தக் கலைகளின் உணர்வினால் கண்டு வைத்தும்உள்ளக் கண்ணினால் அறியாதவர்முத்தியின்பத்தைக் காண்பார்களோ (காணமாட்டார் என்றபடி).

 

     திருமால் பிரமன் என்னும் இருவரின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம்அத் தீயிலிருந்து வெளிப்பட்டுபிரமனுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்தார். பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரமனும்திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன்இருவரின் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார். 

 

     செருக்கும் தருக்கும் இருப்பவர் என்னதான்வித்தாரமாகப் பூசைகளை இயற்றினாலும்அவர்களுக்கு இறையருள் சித்திக்காது. அன்போடு உருகி அகம் குழைவார்க்குஇறையருள் வெளிப்பட்டுத் தோன்றும் என்பதைக் கருத்தில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும்.

 

     தனது இருபது கைகளாலும்திருக்கயிலை மலையைப் பேர்த்து எறிய முயன்ற இரவாணன் தனது வலிமை செயற்படாது வருந்தினான். தனது குற்றத்தை உணர்ந்துஇறைவனை வாயாரப் புகழ்ந்து பாடினான். முன்னர் தண்டித்த இறைவனேஇப்போது அவனுக்குநாளும் வாளும் அருளினார். அதுபோலவேதருக்குக் கொண்டு தேடிய இருவர்க்கும் காண அரிதாகி நின்ற சிவபரம்பொருள்,தமது செருக்கை விட்டுவழிபாடு செய்ய நேர் நின்று காட்சி கொடுத்து அருளினார். இதைத் திருவிளையாடல் புராணம் அழகாக எடுத்துக் காட்டும்.

 

"பொருப்பு அகழ்ந்து எடுத்தோன் சென்னி

            புயம் இற மிதித்தாய் போற்றி!

இருக்கு இசைத்து அவனே பாட,

            இரங்கி வாள் கொடுத்தாய் போற்றி!

தருக்கொடும் இருவர் தேடத்

            தழற்பிழம்பு ஆனாய் போற்றி!

செருக்கு விட்டு அவரே பூசை

            செய்யநேர் நின்றாய் போற்றி!"

 

     இந்தப் பாடல்தமது கல்விச் செருக்கால்இறைவன் அருளிய திருப்பாட்டில் பிழை கண்டு,அதனால் குற்றப்பட்டு,இறைவனது நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டுபின்னர் இறையருறைப் பெற்ற நக்கீரர் பாடியதாகத் திருவிளையாடல் புராணத்தில் வருவது.

 

இதன் பொருள் ---

 

     திருக்கயிலையைப்பெயர்த்து எறிய முயன்ற இராவணனதுபத்துத் தலைகளும்இருபது கோள்களும் இற்றுப் போகும்படியாகதனது திருவடி விரலால்மிதித்து அருளியவனேவணக்கம். அந்த இராவணனே வேதத்தைக் இசைத்துப் பாடகருணை கூர்ந்து அவனுக்கு வாட்படையை அருளியவனே வணக்கம்செருக்கோடு திருமாலும் பிரமனும் தேடஅவர்களிடையில் நெருப்புப்பிழம்பு ஆனவனே வணக்கம்அவ்விருவருமேதமது செருக்கை விட்டுப் பூசை செய்ய

நேரில் தோன்றி அருளியவனே வணக்கம்.

 

     கல்விச் செருக்குசெல்வச் செருக்கு உள்ளத்தில் இருக்குமானால்அவர்கள் என்னதான் வழிபாடு செய்தாலும்இறையருளைப் பெறமுடியாது. உள்ளன்போடு உருகி வழிபாடு செய்தால் இறையருளைப் பெறமுடியும் என்பது இதனால் விளங்கும்.

 

திருமாலும் அயனும் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள் வருமாறு....

 

(1)       கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது இராஜச குணம். தாமத குணம் என்பது மந்த புத்தி. இராஜச குணம் என்பது ஆட்சி புத்தி. இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே (அமைதிக் குணம்) இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

 

(2)       இறைவன் திருவடி - தாமரை. திருமுடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி இறைவனது பாததாமரையையும்தாமரையில் வாழும் அன்னம் சடைமுடியாகிய காட்டையும் தேடிஇயற்கைக்கு மாறாக முயன்றதால்அடிமுடி காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

 

(3)       திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய கலைவாணிக்கு நாயகன். இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும்படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணமுடியும். "பத்தியால் யான் உனைப் பலகாலும் பற்றியே" என்றார் அருணகிரிநாதர்.

 

(4)       "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. நான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள். "யான் எனது என்று அற்ற இடமே திருவடி" என்பது கந்தர்கலி வெண்பா.

 

(5)       "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது. தன் முனைப்பு நீங்கிய இடத்தில் தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து". "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணகிரிநாதர்.

 

(6)       புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பிஅன்பு என்னும் வலையினை வீசிஅகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

 

(7)       பிரமன் --- வாக்கு. திருமால் --- மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

(8)       பிரமன் --- நினைப்பு. திருமால் --- மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே” என்றார் அருணகிரிநாதர்.

 

இறுதியாக ஒரு கருத்து ---- 

 

திருமால் அளவுக்கு செல்வத்தில் மிகுந்தவர் நம்மில் யாரும் இல்லை. பிரமன் அளவுக்கு வேதத்தில் வல்லவரும் நம்மில் யாரும் இல்லை. செல்வத்தில் மிகுந்த திருமாலும்கல்லியில் மிகுந்த பிரமனுமே காண முடியாத பரம்பொருளைசொற்ப செல்வமும்அற்ப அறிவும் கொண்டுள்ள நம்மால் எப்படிக் காணமுடியும்

 

     செல்வம்,கல்விஅதிகாரம் ஆகிய இன்ன பிறவற்றால் உண்டாகும் செருக்கை விட்டுஉள்ளத்தில் உண்மையானபணிவுடன்கடமையைச் செவ்வனே செய்து வந்தால் காணலாம். 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...