044. குற்றம் கடிதல் --- 09.வியவற்க எஞ்ஞான்றும்

 

திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 44 -- குற்றம் கடிதல்

 

     உயிர்க்குசிறுமை (காமம்)வெகுளி (குரோதம்)கடும்பற்றுள்ளம் (உலோபம்)மாணா உவகை (மோகம்)செருக்கு (மதம்)மாண்பு இறந்த மானம் (மாற்சரியம்) எனப்படும் ஆறுவகையான குற்றங்களையும் தோன்றாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. இந்த ஆறு குற்றங்களையும்அறுபகை என்பர். வடமொழியில் "அரிட்ட வர்க்கம்" என்பர்.

 

"காமஉள் பகைவனும் கோபவெம் கொடியனும்

கனலோப முழுமூடனும்,

கடுமோக வீணனும் கொடுமதம் எனும்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்,

 

ஏமம்அறு மாற்சரிய விழலனும் கொலை என்று

இயம்பு பாதகனும் ஆம்,

இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும்

எனைப் பற்றிடாமல் அருள்வாய்"

 

என்று வள்ளல்பெருமான்,உயிருக்கு உண்டாய் உள்ள ஆறுவகையான குற்றங்களையும் குறித்துப் பாடி உள்ளமை காண்க.

 

இதன் பொருள் ---

 

     கருவிலே தோன்றிகுழந்தைப் பருவத்தே முளைத்துஇளமை வளர வளர்ந்துபிற உடம்புகளைப் படைக்கும் காளைப் பருவத்தே முகிழ்த்து மலரும் இயல்பினது ஆதலின்,காம இச்சையானது நன்மையை விடவும் தீமை பெரிது செய்வது பற்றிக் "காம உள் பகைவன்என்று கூறுகிறார். பொறியறிவு சிறிது வளர்ந்தவுடன் தோன்றி முற்றவும் கெடாத தன்மையினை உடைய கோபம்நலத்தினும் கேடு மிக விளைப்பது பற்றியும்உடலை வெதுப்பி முகத்தைச் சிவப்பித்து வெவ்விய சொற்களை வெளிப்படுத்திக் கொடுமை செய்தலாலும் கோபத்தை"கோப வெங்கொடியன்" என்கின்றார். திருவள்ளுவ நாயனார், "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" என்றது அறிக."கன லோபம்"நில்லாது செல்லும் செல்வத்தின் மீது உண்டாகும் கடும்பற்று. கஞ்சத்தனம் என்று சொல்வார்கள். செல்வப் பற்று அறிவை மறைத்து மேலே செய்வகை எண்ணாதவாறு சிந்தையைத் திகைப்பித்தலின், "கனலோப முழுமூடன்என்று மொழிகின்றார். சிந்தையில் தெளிவு பிறவாதபடி மயக்கும் குற்றத் தன்மையைக் "கடுமோகம்" என்றும்அறிவு மயக்கத்தில் செய்யும் செயல்கள் பயனின்றிக் கெடுவது பற்றிக், "கடு மோக வீணன்" என்றும் கூறுகின்றார். உடல் நலம்உடைமை நலங்களால் அறிவு இல்லாமல்நினைவு சொல் செயல்களில் நான் எனும் தன்முனைப்போடு உண்டாகுவது மனச் செருக்கு என்பதால், "கொடுமதம் எனும் ஆங்காரி" என்றார். ஆங்காரம்நான் எனும் தன்முனைப்பு. ஆங்காரத்தை உடையது என்பதால்மதம் ஆங்காரி என உபசரிக்கப்பட்டது. மதத்தால் துட்டச் செய்கைகளும்ஆங்காரத்தால் நலம் தீங்குகளை நல்லவர் அறிவித்தாலும்அவர் காட்டிய வழி நடவாத தன்மையும் உண்டாதலால் "கொடு மதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரி" என்று பழிக்கின்றார். மாற்சரியம் "மாச்சரியம்" என வந்ததுஅது தமிழில் "செற்றம்" என வழங்கும். உடல் வலியும் மனவலியும் அறிவு வலியும் அழிந்த நிலையில் பகைமை உணர்வைப் பலநாளும் நெஞ்சில் கொள்ளும் குற்றத்தன்மை இது என்பதால்அதனை "ஏமம் அறும் மாற்சரியம்என்றும், (ஏமம் --- பாதுகாவல்) அதனை உடையவன் ஆளாய்த் தோன்றுவது தவிரஎதற்கும் எவர்க்கும் பயன் படான் என்பதால் விழலன்என்றும் எள்ளுகின்றார். (விழல்--- பயனில்லாதது.)

 

     எனவேஇந்த ஆறுவகையான குற்றங்களையும் கடிந்து ஒழுகுதல் தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தரும் என்பதை, "குற்றம் கடிதல்" என்னும் இவ் அதிகாரத்தில் விளக்கி அருளினார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தான் மிகவும் உயர்ந்திருக்கும் காலத்தில் கூடஎப்போதும் தன்னை ஒருவன் மதம் காரணமாக வியந்து கொள்ளக் கூடாது. தனக்கு நன்மை தராத செயல்களில் விருப்பம் கொள்ளாது இருக்கவேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் செல்வத்தினால் மிக உயர்ந்த தகுதியை அடைந்த காலத்திலும்தன்னை அதகிமாக எண்ணிக் கொள்ளுதல் கூடாது. தன்னினும் மேம்பட்டார் இல்லைதன்னை வெல்வார் இல்லை என்று கருதுவானானால், அது அவனுக்குப் பெரும் தீங்காக முடியும். தன்னால் ஒரு காரியமும் ஆகாத நிலை இருந்த போதும்செல்வச் செருக்கினால் தான் எந்தச் செயலையும் செய்து முடிப்பேன் என்று தருக்கி இருப்பானாயின்அவனுக்குப் பழியும்பாவமும்கெடுதியுமே வரும் அல்லாதுநன்மை ஏதும் வராது. 

 

     குற்றங்களுள் மதம் என்னும் குற்றத்தைப் பற்றியும்மானம் என்னும் குற்றத்தைப் பற்றியும் இவ்வாறு கூறினார்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

வியவற்க எஞ்ஞான்றும் தன்னைநயவற்க

நன்றி பயவா வினை.             

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     எஞ்ஞான்றும் தன்னை வியவற்க--- தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக

 

     நன்றி பயவா வினை நயவற்க--- தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக.

 

     (தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும்அறனும் பொருளும் இகழப்படுதலானும்எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின்அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின்அவற்றை 'நயவற்கஎன்றும் கூறினார். இதனான்மத மானங்களின் தீமைகூறப்பட்டது.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்....

 

எம்மை அறிந்திலிர் எம்போல்வார் இல் என்று

தம்மைத்தாம் கொள்வது கோள் அன்று: - தம்மை

அரியரா நோக்கி அறன் அறியும் சான்றோர்

பெரியராக் கொள்வது கோள்.          ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     எம்மை அறிந்திலிர் எம்போல்வார் இல் என்று தம்மைத் தாம் கொள்வது கோள் அன்று --- ‘எமது தகுதியை நீங்கள் அறிந்திருக்கவில்லைஎம்மைப் போன்ற தகுதி உடையார் பிறர் இங்கு இல்லைஎன்று தம்மைத் தாமே பெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாதுதம்மை அரியரா நோக்கி அறன் அறியுஞ் சான்றோர் பெரியராக் கொள்வது கோள் --- தம்மை அருமை உடையராகக் கருதிஅறத்தை உணரும் சான்றோர் பெரியர் என்று மதித்து ஏற்றுக் கொள்ளுதலே பெருமையாகும்.

 

            தம்மைச் சான்றோர் எனப் பெரியர் என மதித்து ஏற்குமாறு தாம் செய்கையில் ஒழுகுதலை விடுத்துதம்மைத் தாமே பெரியர் எனத் தம்மைத் தாமே தமது வாயால் புலப்படுத்திக் கொள்ளுதல் மதிப்புடைமையாகாது.

 

கற்றனவும்,கண்அகன்ற சாயலும்,இற்பிறப்பும்,

பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்;தான் உரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தன் என்று எள்ளப் படும்.      ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் --- தான் கற்ற கல்விகளும்காட்சி பரந்த தன் சாயலும்தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமை அடையும்;  தான் உரைப்பின் --- அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால்மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன் என்று எள்ளப்படும் --- தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால்மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

 

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல்,தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், –  தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவதுஇன்பம்

நயவாமை அன்றே நலம்.         ி

 

இதன் பொருள் ---

 

     தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் --- தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல்தீச்சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று --- குளிர்ந்த நீரை விட்டு எரியும் நெருப்பை வளர்த்தது போலாம்ஆதலால்தன்னை வியவாமை அன்றே வியப்பாவது --- தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளாமை அன்றோ நன்மதிப்பாகும்இன்பம் நயவாமை அன்றே நலம் --- இன்பத்தை விரும்பாமை அன்றோ இன்பமாகும்?

 

            தீ வளரும் என்று நீர் விட்டால்,முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ,அதுபோலவேதனக்கு மதிப்பு மிகும் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பு மிகாது அழிந்தே போகும் என்பது. 

 

 

சடம் அதைக் கழுவ உன்னிச்

     சகதியில் தோய்தல் போலும்,

சுடரினைத் தூண்ட வேண்டி

            ஊதியே தொலைத்தல் போலும்,

மடமையால் தன்னைத் தானே

            புகழுவோன் வசைகள் எல்லாம்

புடவியே எடுத்து உரைக்கப்

             பூணுவன் நிந்தை அம்மா.             --- நீதிநூல்.

            

இதன் பொருள் ---

 

     குளிக்க நினைத்துப் போய்ச் சேற்றில் மூழ்குதலும்விளக்கைத் தூண்ட விரும்பி ஊதி அணைத்தலும் போலஒருவன் அறியாமையால் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வானானால் உலகோர் அவனுடைய பழியை எடுத்து உரைப்பர். அதனால் இகழ்வு பெறுவன்.

 

தற் புகழ்வோன் தனைப் பழிக்கும் தாரணி,

சொற்புகழ் விரும்பிடான் தனைத் துதித்திடும்,

நற்புகழ் பெறுவழி நன்ன டக்கையோடு

அற்பமும் தற் புகழாமை ஆகுமே.      --- நீதிநூல்.

            

இதன் பொருள் ---

 

     தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவனை உலகோர் பழிப்பர். தன் புகழைப் பிறர் கூறக் கேட்கவும் விரும்பாதவனை உலகோர் போற்றுவர். நல்ல புகழைப் பெறும் வழியானதுபிறருக்குநன்மை செய்தலும்,சிறிதும் தற்புகழ்ச்சி இல்லாமையும் ஆகும்.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...