047. தெரிந்து செயல்வகை --- 10. எள்ளாத எண்ணி

 



திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவது, தான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இது, பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது. என்பதால்சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "இகழ்ந்து தள்ளிவிடக் கூடாத செயல்களை ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும். மேற்கொள்ளுவதற்குப் பொருந்தாதவற்றை உலகம் ஒப்புக் கொள்ளாது" என்கின்றார் நாயனார்.

 

     தம் நிலைக்குத் தக்க உபாயங்களால் செய்து கொள்ள வேண்டும். அதுதம்முடைய வல்லமை அறிந்து கொடுத்தலும்இன்சொல் சொல்லுதலும்,வேறு பிரித்தலும்தமது வல்லமைக்குத் தக்கவாறு மெலியாரைத் தண்டித்தலும் ஆகும். அவ்வாறு அல்லாமல்தாம் பொருள் இல்லாது இருக்கபொருள் உடையார் போன்றுமெலியாருக்குக் கொடுத்தலும்இன் சொல் சொல்லக் கூடாதவர்க்கு இன்சொல் சொல்லுதலும்வேறுபிரிக்கக் கூடாதவர் வேறு பிரித்தலும்தம்மினும் வலியாரைத் தண்டிக்கக் கருதலும்பலரால் இழித்துக் கூறுவதற்கு இடமாவதுடன்எண்ணிய செயல்களும் முற்றுப் பெறாமல் போதல் கூடும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும்தம்மொடு

கொள்ளாத கொள்ளாது உலகு.                   

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது--- அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும்

 

     எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும்--- ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.

 

      ('தம்என்பது ஆகுபெயர்தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவதுதாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும்மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாதுஎன்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

பாண்டவர்செல் வம்கவர்வான் பண்டுதுரி யோதனன்தான்

மூண்டுஇழிந்தான் மாய்ந்தும்,முருகேசா! - வேண்டும்கால்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு.              

 

இதன் பொருள் ---

 

     முருகேசா --- முருகப் பெருமானே!  பண்டு துரியோதனன் --- முன்னாளிலே துரியோதனன்பாண்டவர் செல்வம் கவர்வான் --- பாண்டவர்களுடைய செல்வத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டுமூண்டு இழிந்தான் --- மிகுந்த இழிசெயலில் இறங்கினான். வேண்டும்கால் --- விரும்புமிடத்தில்உலகு --- உலகத்தார்கள்எள்ளாத --- இகழத் தகாத செயல்களைஎண்ணிச் செயல் வேண்டும் --- ஆராய்ந்து செய்தல் வேண்டும். தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு --- தமக்குப் பொருந்தாதவைகளை உலகினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

 

      முன்னாளில் துரியோதனன் பாண்டவர்களுடைய செல்வத்தைக் கவர்ந்து கொள்ளும் பொருட்டு மிகுந்த முயற்சி செய்து அதனால் இறந்தொழிந்தான். உலகத்தார்கள் இகழாத காரியங்களை ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.  உலகத்தார்கள் தங்களுக்குப் பிடிக்காதவைகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதாம்.

 

      துரியோதனனுக்குச் செல்வம் மிகுதியாக இருந்தது.  ஆயினும் அவன் அதனோடு அமைதி பெறாமல், சகுனி முதலியோருடைய பேச்சைக் கேட்டுப் பாண்டவர்களுடைய செல்வத்தையும் கவர்ந்து கொள்ள எண்ணி, அறத்தொடு பொருந்தாத பல முயற்சிகளைச் செய்து, பிறகு பாண்டவர்களோடு போரிலே ஈடுபட்டுத் தன்னுடைய சுற்றத்தார்களோடு மாண்டு ஒழிந்தான். துரியோதனனுடைய செயல் நேர்மையற்றதாக இருந்தபடியால் உலகத்தார் இன்று வரையில் அவனைப் பொல்லாதவனென்று இகழலானார்கள்.

 

பின்வரும் பாடல் ஒப்பாக அமைந்துள்ளது காண்க...

                                                                        

மணியிலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;

துணிவில்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;

பணியாத மன்னர்ப் பணிவு இன்னா;இன்னா

பிணி அன்னார் வாழும் மனை.        --- இன்னா நற்பது.

 

இதன் பொருள் ---

 

     மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா --- ஓசையினால் தன் வருகையைப் பிறர்க்கு அறிவிக்கும் மணியை அணியப் பெறாத யானையை அரசன் ஏறிச் செல்லுதல் துன்பமாம்துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா --- பகையை வெல்லும் துணிவு இல்லாதார்கூறும் வீரமொழிகள் துன்பமாம்பணியாத மன்னர்ப் பரிவு இன்னா --- வணங்கத் தகாத அரசரை வணங்குதல் துன்பமாம்பிணி அன்னார் வாழும் மனை இன்னா --- (கணவருக்குப்) பிணி போலும் மனைவிய ர்வாழ்கின்ற இல்லம் துன்பமாம்.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...