041. கல்லாமை --- 07. நுண்மாண் நுழைபுலம்

 

திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 41. கல்லாமை

 

     அறிவு நூல்களைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளை, "கல்வி" என்னும் அதிகாரத்துள் விளக்கி அருளிய நாயனார்கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கல்லாமையால் வரும் கேட்டினை இந்த அதிகாரத்துள் அறிவுறுத்துகின்றார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "நுட்பமும் மாட்சிமையும் உடைய பல நூல்களைக் கற்று அறிவு விளக்கம் இல்லாதவனது எழுச்சியும் அழகும்மண்ணினால் மாட்சிமை உண்டாகப் புனையப்பட்ட பொம்மையின் (பதுமையின்) அழகை ஒக்கும்" என்கின்றார் நாயனார்.

 

     அறிவிற்கு மாட்சிமையாவதுநூல்களின் பொருளை விரைவாக உணர்தலும்உணர்ந்தவற்றை மறவாமையும் ஆகும். உருவினால் அழகு மிக்க உடம்பை ஒருவன் பெற்றிருப்பது அரிதாகையால்அவனது எழில் நலமும் விரும்பத் தக்கதே. ஆனாலும்நூலறிவு இல்லாதவனுடைய வடிவழகு காலத்தால் அழியக் கூடியது. கல்வி அறிவு அழியாதது. எனவேபுற அழகு பயனில்லாமை சொல்லப்பட்டது. 

 

     புற அழகால் பயனில்லை. அக அழகாகிய கல்வி அறிவால் பயன் உண்டு. கல்வி அழகே அழகு என்பது காட்டப்படும்.

 

நுண் புலம் --- நுட்பமாய்க் கூர்ந்து ஓர்ந்து உணர்வது.

மாண்புலம் --- மாண்பு உடையதையே மதித்துத் தெளிவது.

நுழைபுலம் --- எதையும் ஊடுருவித் துருவித் தெளிவது.

 

திருக்குறளைக் காண்போம்...

 

நுண்மாண்நுழைபுலம்இல்லான் எழில்நலம்,

மண்மாண் புனை பாவை அற்று.  

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     நுண்மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்- நுண்ணியதாய்மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்

 

     மண்மாண் புனை பாவை அற்று--- சுதையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.

 

     (அறிவிற்கு மாட்சிமையாவதுபொருள்களைக் கடிதிற் காண்டலும் மறவாமையும் முதலாயின. 'பாவைஆகுபெயர். 'உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான்எழில் நலங்களும் ஒரு பயனே எனினும்நூலறிவு இல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர் வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

குஞ்சி அழகும்,கொடுந்தானைக் கோட்டு அழகும்,

மஞ்சள் அழகும்,அழகு அல்ல;- நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.               --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     குஞ்சி அழகும் கொடுதானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல --- மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரை அழகும் மஞ்சள் பூச்சின் அழகும் மக்கட்கு முடிந்த அழகுகள் அல்லநெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு --- நாம் நல்லவராக ஒழுகுகின்றோம் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.

 

            நல்லொழுக்கம் பயக்கும் கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.

 

     தலைமயிர் அழகுஉடை அழகு இரண்டும் ஆண்பெண் இருபாலர்க்கும் பொருந்தும் என்பது அறிக.

 

 

இடைவனப்பும் தோள்வனப்பும்,ஈடின் வனப்பும்,

நடைவனப்பும்,நாணின் வனப்பும்,- புடைசால்

கழுத்தின் வனப்பும்,வனப்பு அல்ல;எண்ணோடு

எழுத்தின் வனப்பே வனப்பு.            --- ஏலாதி.

 

இதன் பொருள் ---

 

     இடை வனப்பும் --- இடுப்பின் அழகும்தோள் வனப்பும் --- தோள்களின் அழகும் ஈடின் வனப்பும் --- செல்வத்தின் அழகும்நடை வனப்பும் --- நடையின் அழகும்நாணின் வனப்பும் --- நாணத்தின் அழகும்புடைசால் --- பக்கங்கள் தசை கொழுவியகழுத்தின் வனப்பும் --- கழுத்தின் அழகும்வனப்பு அல்ல --- உண்மை அழகாகாஎண்ணோடு எழுத்தின் வனப்பே --- மக்கட்கு இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகேவனப்பு --- உண்மையழகாகும்.

 

     மக்கட்குக் கல்வியழகே உண்மையழகாம். இங்கே எடுத்துக்காட்டப்பட்ட வனப்புக்கள்,ஆண் பெண் இரு பாலார்க்கும் ஒத்திருத்தல் உணரற்பாலது. 

 

     அமித்திர முனிவனுக்காக அமைந்த நெல்லிக்கனியைப் பாஞ்சாலி விரும்புகின்றாள். தனது விருப்பத்தை அருச்சுனனுக்குத் தெரிவிக்கின்றாள். முனிவனுக்காக அமைந்த நெல்லிக்கனியை அருச்சுனன் தனது அம்பால் வீழ்த்துகின்றான். அதனைக் கண்டோர்இதனை முனிவர் அறிந்தால் என்ன ஆபத்து உண்டாகுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றார்கள். இதனை அறிந்த தருமன் நொந்துகொள்ள, "பழத்தை விழ எறிந்தவன் நான்தான். என்னைத் தவிர யாரையும் முனிவர் சபிக்கமாட்டார். எனவேகவலை வேண்டாம்" என்கின்றான் அருச்சுனன். "உனக்குத் துயர் வரநாங்கள் பொறுத்திருப்போமோ?" என்கின்றான் தருமன். அனைவரும் கண்ணனைச் சிந்திக்கின்றாரகள். கண்ணன் வருகின்றான். 

 

            கண்ணன் அவர்களைப் பார்த்து, "உதார குணத்தால் மேம்பட்டவர்களே! நீங்கள் ஐந்து பேரும்வேள்வித் தீயில் வந்தவளாகிய இந்தப் பாஞ்சாலியும்உங்கள் உள்ளத்தில் பட்டதை உள்ளபடி சொன்னால்இந்த நெல்லிக் கனியானதுதான் தோன்றிய மரத்தின் கிளையில் மீண்டும் சென்று சேர்ந்துவிடும்" என்று ஓர் உபாயத்தைக் கூறுகின்றான். 

 

"திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும்இத்

            தீயிடைப் பிறந்த சேயிழையும்,

உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு 

            உரைத்திடகோட்டில் மீண்டு ஒன்றும்;

வண்மையால் உயர்ந்தீர்! என்று செம்பவள

            வாய் மலர்ந்து அருளினான்மாயோன்.

தண்மைஆர் கருணைத் தராபதி முதலோர் 

            சாற்றுவார்தம் மனத்து இயல்பே".

 

            தராபதி --- அரசன். இங்கேகுளிர்ந்த உள்ளமும்கருணையும் கொண்டவன் ஆன தருமனைக் குறித்தது. தருமன் முதலானோர் தத்தமது மனத்தில் உண்டான கருத்தை வெளியிடுகின்றார்கள். இரட்டையர்களில் முந்தியவனானநகுலன் தனது கருத்தைப் பின்வருமாறு சொல்லுகின்றான்.

            

"குலம்மிக உடையர்எழில்மிக உடையர்குறைவு இல்

     செல்வமும் மிக உடையர்,

நலம் மிக உடையர்என்னினும்கல்வி 

     ஞானம் அற்பமும் இலாதவரை,

வலம்மிகு திகிரிச் செங்கையாய்! முருக்கின் 

     மணம் இலா மலர் என மதிப்பேன்,

சலம் மிகு புவியில் என்றனன்வாகைத்

     தார் புனை தாரைமா வல்லான்".

            

     வெற்றிமாலையை அணியவல்லதாரையை உடைய குதிரை ஓட்டும் தொழிலிலே வல்லவனான நகுலன், (கண்ணனை நோக்கி) வெற்றி பொருந்திய சக்கரப் படையைச் சிவந்த திருக் கைகளில் உடையவனே! நிலையாமை மிக்க இந்த உலகத்திலேஒருவர்சிறந்த உயர் குடிப்பிறப்பினை உடையவர். மிக்க அழகினை உடையவர்.குறைவில்லாத மிக்க செல்வமும் உடையவர். நற்காரியங்களை மிகுதியாக உடையவர். என்றாலும்கல்வியினால் ஆகிய அறிவு சிறிதும் இல்லாத மானுடரைமுருக்க மரத்தின் வாசனை இல்லாதபார்வைக்கு மாத்திரம் அழகாகத் தோன்றுகிறமலர் போலமதிப்பேன்.

 

    மலருக்குச் சிறப்புஅதனுடைய நறுமணத்தினால் உண்டாகும். நறுமணம் சிறிதும் இல்லாமல்பார்வைக்கு மாத்திரம் பகட்டாகத் தோன்றும் மலர்களை யாரும் மதிப்பதில்லை. அதுபோலஎல்லா நலங்களையும் ஒருவன் பெற்றிருந்தாலும்கல்வி அறிவு இல்லாதவன் மதிக்கப்படமாட்டான் என்னும் திருவள்ளுவ நாயனார் கருத்தைவில்லிப்புத்தூரார் இவ்வாறு வெளிப்படுத்தினார்.

 

மண்ணில் செய் பாவை மீது 

     வயங்குபொன் பூச்சோ?தண்பூங்

கண்ணியை மாற்றிச் சூடுங் 

     காட்சியோ?பழம்பாண் டத்தில்

பண்ணிய கோலமோநற் 

     பண்பொடு ஞானங் கல்வி

புண்ணியம் ஏதும் இல்லான் 

     பூண்ட பேரெழில் உடம்பே.            --- நீதிநூல்.

            

இதன் பொருள் ---

 

     குணம்,மெய்யுணர்வு,படிப்பு,நலத்தொண்டு முதலிய ஒன்றும் இல்லாதவன் கொண்டுள்ள உடலழகுமண் பாவைமீது பூசும் பூச்சோஅழகிய பூமாலையைத் துடைப்பத்தில் கட்டிக் காணும் காட்சியோபழைய ஏனத்தில் செய்த அழகோ?

 

 

மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை, தான் செல்லும்

திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை, இருந்த

அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை,தனக்குப்பாழ்

கற்று அறிவில்லா உடம்பு.        ---  நான்மணிக் கடிகை.

 

இதன் பொருள் ---

 

     மனைக்குப் பாழ்வாள் நுதல் இன்மை --- மனைக்குப் பாழாவதுஒளி பொருந்திய நெற்றியினை உடைய மனையாளை இல்லாமை;தான் செல்லும் திசைக்குப் பாழ் நட்டாரை இன்மை --- தான் போகும்ஊர்ப்புறங்கட்குப் பாழாவதுஅவ்விடங்களில் நண்பர்கள் இல்லாமைஇருந்த அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை --- பலரும் கூடியிருந்த அவைக்குப் பாழாவதுகல்வி கேள்வி முதலியவற்றாற் சிறந்த சான்றோரை இல்லாமைதனக்குப் பாழ் கற்றறிவு இல்லா உடம்பு --- பிறவி எடுத்த தனக்குப் பாழாவது,கல்வியறிவு பெறாத வெறும் புலாலுடம்பு உள்ளமையாம்.

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...