047. தெரிந்து செயல்வகை --- 01. அழிவதூஉம் ஆவதூஉம்

 


 

திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவது,தான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இத் பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது என்பதால்சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒரு செயலைச் செய்யுங்கால்அதனால் அழியக் கூடியதையும்ஆகக் கூடியதையும்செய்து முடித்த பின்னர் உண்டாகும் பயனையும் ஆய்ந்து செய்தல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

     அழிவது பொருளின் அளவு. ஆவது அதனால் வரும் விளைவு.

 

     ஒரு செயலைச் செய்வதாய் இருந்தால்நிகழ் காலத்தில் அழியும் பொருளும்ஆகும் பொருளும் தம்முள் ஒத்து இருந்தால்அந்தச் செயலைத் தொடங்குதல் கூடாது. அழியும் பொருள் அதிகமாயும்ஆகும் பொருள் குறைவாயும் இருந்தால்அத்தகைய செயலைச் செய்யாது விட்டுவிட வேண்டும். அழியும் பொருள் குறைவாகவும்ஆகும் பொருள் அதிகமாகவும்பின்வரும் பொருள் விருத்தி அடைவதாகவும் இருத்தல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்....  

 

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகிவழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.        

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      அழிவதூஉம்--- வினை செய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும்

 

     ஆவதூஉம்--- அழிந்தால் பின் ஆவதனையும்

 

     ஆகி வழி பயக்கும் ஊதியமும்--- ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும்

 

     சூழ்ந்து செயல் --- சீர் தூக்கி உறுவதாயின் செய்க.

 

      (உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்குஎதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின்எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்என்றார். எனவேஅவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும்,ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.)

 

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க.

 

செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவது அன்றி,

செய்யின் மனத்தாபம் சேருமே,--- செய்யஒரு

நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப்

பொற்கொடியைச் சேர்துயரம் போல்.   --- நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

            செய்கின்ற செயலை நன்றாக ஆராய்ந்து செம்மையாகச் செய்வதல்லாமல்வேறு விதமாகச் செய்தால் வருத்தம் தான் சேரும். முன் ஒரு காலத்து நல்ல குழந்தை ஒன்றைச் செம்மையாகப் பாதுகாத்துக் கொண்டு இருந்த கீரிப்பிள்ளையை ஆராயமல் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்குச் சேர்ந்த துன்பம் போன்றதாகும் அது.

 

            (மனத்தாபம் --- வருத்தம்துன்பம். நற்குடி --- நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை. நகுலன் --- கீரிப்பிள்ளை.)

 

பொற்கொடி நகுலனை ஆராயாமல் கொன்ற கதை.

 

            முன் ஒரு காலத்தில் ஒரு பார்ப்பனப் பெண் ஒருத்தி, தனக்குக் குழந்தை இல்லாமையால்ஒரு கீரிப் பிள்ளையைக் குழந்தைபோல் பாவித்து அன்போடு வளர்த்து வந்தாள். சில ஆண்டுகள் கழித்து அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது.  குழந்தை பிறந்தாலும் கீரிப்பிள்ளையிடம் அன்பு குறையாமல் அதையும் வளர்த்து வந்தாள். ஒரு நாள் தன் குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தூங்கவைத்துஅதற்குக் காவலாகக் கீரிப்பிள்ளையைப் பக்கத்தில் விட்டுவிட்டுநீர் கொண்டு வரக் குடத்தை எடுத்துக் கொண்டு குளத்திற்குச் சென்றாள். அச்சமயத்தில் குழந்தை உறங்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பாம்பு ஊர்ந்து வந்தது. அதனைக் கண்ட கீரிப்பிள்ளை அப் பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் கொன்றது.  கீரிப்பிள்ளையின் வாயில் இரத்தம் ஒழுகியது. அந்த நிலையில் தன்னுடைய எசமானியிடம் தன் மகிழ்ச்சியைக் காட்ட எண்ணி வெளியில் வந்தது. நீர்க்குடத்தோடு வந்த பார்ப்பனிகீரிப்பிள்ளையின் வாயில் இரத்தம் ஒழுகுவதைக் கண்டுகுழந்தையைத் தான் கீரிப்பிள்ளை கொன்று விட்டது என்று எண்ணிநீர்க்குடத்தை அதன்மேல் போட்டு உடைத்தாள். கீரிப்பிள்ளை இறந்து விட்டது. உள்ளே சென்று பார்த்தாள்.  குழந்தை உயிரோடு இருந்ததையும்பாம்பு இறந்து கிடந்ததையும் பார்த்தாள். தன் குழந்தையைக் காப்பாற்றவேகீரிப்பிள்ளை பாம்பைக் கடித்துக் கொன்றது என உணர்ந்துஆராயாமல் கீரிப்பிள்ளையைக் கொன்றதை நினைந்து வருந்தி உயிர் துறந்தாள்.

 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...