046. சிற்றினம் சேராமை --- 03. மனத்தான் ஆம்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை

 

     சிற்றினம் சேராமையாவதுசிறியார் இனத்தைப் பொருந்தாமை. 

 

     சிறிய இனமாவதுநல்வினையின் பயனாக சுகமும்தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும்பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும்உள்ளே பகையும்உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும்கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார். 

 

     அறிவினை வேறுபடுத்திதீநெறியில் செலுத்திஇம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால்பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால்பெரியாரைத் துணைக் கொள்வதோடுசிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

     

     இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "மனிதர்க்குப் பொது அறிவானதுஅவரது மனத்தின் இயல்புக்கு ஏற்ப அமையும். அவன் இன்னான் என்று சொல்லப்படுகின்ற சொல்லானதுஅவன் சார்ந்து உள்ள இனத்தால் அமையும்" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவனுக்கு இயற்கை அறிவு,அவனது மனம் காரணமாக உண்டாகின்றது. அதற்கு இனமாகிய காரணம் வேண்டுவது இல்லை. செயற்கை ஆகிய சிறப்பு அறிவு பற்றிஒருவனை நல்லவன் என்றாவதுதீயவன் என்றாவது சொல்லும் சொல்லுக்குக் காரணம்முறையே அவன் சார்ந்து உள்ள நல்லவர்களின் சேர்க்கையும்தீயவர்களின் சேர்க்கையும் என்று கொள்ளவேண்டி உள்ளது.

 

திருக்குறளைக் காண்போம்...

 

மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி,இனத்தான் ஆம்

இன்னான் எனப்படும் சொல்.                

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

            மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம்--- மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்;

 

     இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம்---'இவன் இத்தன்மையன்என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாம்.

 

            (இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின்அதனை மனத்தான் ஆம் என்றும்செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின்அதனை 'இனத்தான் ஆம்என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது 'அத் திரிபும்மனத்தான் ஆம் என்பாரை நோக்கிஇதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

மனத்தான் மறுவு இலரேனும்,தாம் சேர்ந்த

இனத்தால் இகழப்படுவர்; --- புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,

எறிபுனந் தீப்பட்டக் கால்.               ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     புனத்து வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேம் எறிபுனம் தீப்பட்டக்கால் --- காட்டினுள்ள மணம் கமழ்கின்ற சந்தன மரமும் வேங்கை மரமும் பெருங்காற்று வீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால்,வெந்து அழிந்துவிடும்மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர் --- ஆதலால்,சான்றோர் தம் மனநலத்தால் மாசு இல்லாதவராயினும் தாம் சேர்ந்த தீய இனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.

 

            சான்றோர் மனநலம் நன்கு உடையராயினும்,தீயினச் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர்.

 

 

வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்

தீஞ்சுவை யாதும் திரியாதாம்ஆங்கே

இனந்தீது எனினும் இயல்புடையார் கேண்மை

மனந்தீதாம் பக்கம் அரிது.              ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     வேம்பின் இலையுள் கனியினும் வாழை தன் தீஞ்சுவை யாதும் திரியாது --- வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையில் சிறிதும் வேறுபடாதுஆங்கே இனம் தீது எனினும் இயல்புடையார் கேண்மை மனம் தீது ஆம்பக்கம் அரிது --- அது போலவேதமக்கு நேர்ந்த சார்பு தீயதெனினும் இயற்கையறிவு உடையாரது நட்பு மனம் தீயதாய் மாறும் வகை அரிதாயிருக்கும்.

 

     தம் இயல்பில் அறிவுடைமைதீய சார்பினின்று காக்கும்.

 

கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும்மலைசார்ந்தும்

உப்பு ஈண்டு உவரி பிறத்தலால்தத்தம்

இனத்தனையர் அல்லர் எறிகடல் தண் சேர்ப்ப!

மனத்தனையர் மக்கள் என்பார்.    --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     எறி கடல் தண் சேர்ப்ப --- அலைகள் வீசுகின்ற கடலின் குளிர்ந்த கரையை உடையவனே!,கடல் சார்ந்தும் இன் நீர் பிறக்கும் மலை சார்ந்தும் உப்பு ஈண்டு உவரி பிறத்தலால் --- கடலை அடுத்தும் இன்சுவை மிக்க ஊற்று நீர் தோன்றுதல் உண்டுமலையை யடுத்தும் உவர்ப்பு மிக்க உப்புநீர் உண்டாதலால்மக்கள் என்பார் இனத்தனையர் அல்லர் மனத்தனையர் --- பகுத்தறிவுடைய மக்களென்று சிறப்பிக்கப் படுவோர் தமது சார்போடு ஒத்த இயல்பினர் அல்லர்தத்தம் இயற்கையறிவோடு ஒத்த நிலையினராவர்.

 

     மக்கள் தத்தம் இயற்கை அறிவிற்கு ஏற்பவே ஒழுகுவராதலின்,அவ்வறிவினை அவர் தகுதியாகப் பெற்றிருத்தல் நன்று. பகுத்தறிவு உடையவர் தீழரோடு கூடி இருந்தாலும்தமது நல்லியல்பில் இருந்து மாறமாட்டார். பகுத்தறிவு இல்லாதவர் தமது சார்புக்கு ஏற்ற அறிவினை உடையவர் ஆவார்.

 

தக்கார் வழிகெடாது ஆகும்தகாதவரே

உக்க வழியராய் ஒல்குவர்--- தக்க

இனத்தினான் ஆகும் பழியும் புகழும்,

முத்தினான் ஆகும் மதி.      ---  சிறுபஞ்சமூலம்.

 

இதன் பொருள் ---

 

     தக்கார் வழி கெடாது ஆகும் --- தகுதியுடையாரது சந்ததிஎன்றும் தளராது விருத்தி அடைவதாகும். தகாதவர் உக்க வழியராய் ஒல்குவர் --- தகுதியற்றவர்அழிந்த வழியை உடையவராய்த் தளர்வார்பழியும் புகழும் தக்க இனத்தினான் ஆகும் - ஒருவனுக்கு உளவாகும் பழியும் புகழும்அவன் சேர்ந்த இனத்தினால் உள ஆகும்மதி --- அறீவானதுமனத்தினான் ஆகும் --- (ஒருவனது) மனத்தினளவே உண்டாகும்.

 

 

முயலவோ வேண்டா முனிவரை யானும்

இயல்பினர் என்ப தினத்தால் அறிக,

கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா

அயலறியா அட்டூணோ இல்.      --- பழமொழி நானூறு.

 

இதன்பொருள் ---

 

     கயல் இயலும் கண்ணாய் --- சேலை ஒத்து விளங்கும் கண்ணை உடையாய்!அயல் அறியா அட்டு ஊணோ இல் --- அயல் மனையாரால் அறியப்படாது சமைக்கப்படும் உணவோ இல்லை, (ஆதலால்) முயலவோ வேண்டா --- ஒருவரது இயல்பை அறிய மற்றொன்றால் அறிய வேண்டுவதில்லைமுனிவரையானும் --- முனிவரேயாயினும்இயல்பினர் என்பது இனத்தால் அறிக --- நல்ல இயல்பினை உடையார் தீய இயல்பினை உடையார் என்பதை அவரால் கூடப்பட்ட இனத்தாரால் அறிக. (ஆகையால்) கரியர் வேண்டா --- சாட்சி சொல்வோர் வேண்டுவதில்லை.

 

     ஒருவருடைய இயல்பை அவரது இனத்தால் அறியலாம்.

 

 

கொம்பு உளதற்கு ஐந்துகுதிரைக்கு பத்துமுழம்,

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி.      --- நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

     கொம்பு உள்ள விலங்குகளுக்கு ஐந்து முழத் தொலைவிலும்குதிரைக்குப் பத்து முழத் தொலைவிலும்சினம் உள்ள யானைக்கு ஆயிரம் முழத் தொலைவிலும் விலகி இருக்கவேண்டும். ஆனால்கொடுமைகள் மிகுந்துள்ள தீயவர்களின் கண்களுக்குக் காணமுடியாத தொலைவில் விலகி இருப்பதை நல்லது. தீயோரைக் காண்பதுவும் தீதே என்பதை எண்ணுக.

 

 

அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்

செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ?- திவ்வியநல்

கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது

கந்தம் கெடுமோ கரை.      ---  நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

 

     மேலான நல்ல மணப்பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும் வெள்ளைப் பூண்டின் நாற்றம் மாறுமோ. அதுபோலபொறாமை நெஞ்சம் கொண்ட அறிவற்ற தீயோரை நல்லவர் ஆக்கும் செயல் ஏதும் உண்டா. இல்லை.

 

 

நிந்தையிலாத் துயவரும் நிந்தையரைச் சேரில்அவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே, - நிந்தைமிகு

தாலநிழில் கீழ்இருந்தான் ஆன்பால் அருந்திடினும்

பால்அதுஎனச் சொல்லுமோ பார்.--- நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

     இழிவு மிகுந்த பனைமரத்தின் கீழ் அதன் நிழலில் அமர்ந்து பசுவின் பாலைக் குடித்தாலும்பிறர் அதனைப் பால் அருந்துவதாகச் சொல்லுவார்களோநீ அதனை எண்ணிப்பார்.  கள் குடிப்பதாகவே சொல்லுவார்கள். அதுபோலபழிக்கப்படாத மேன்மக்களும் பழிக்கப்படும் கீழ்மக்களைச் சேர்ந்தால்அப் பழிப்புக்கு உரிய மக்களின் பழிப்புரை தம்மிடமும் வந்து சேர்வதற்கு ஏதுவாகும்.

 

 

நல்லொழுக்கம் இல்லார் இடம்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்கம் இல்லாச்சொல் நண்ணுமே, --கொல்லும்விடப்

பாம்புஎன உன்னாரே பழுதையே ஆனாலும்

தூம்பமரும் புற்றுஅடுத்தால் சொல்.         --- நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

     உள் தொளை பொருந்திய புற்றுக்குப் பக்கத்தில் கிடப்பது பழுதைக் கயிறே ஆனாலும்,இரவில் அதனைக் காண்பவர் கொல்லும் விடத்தைக் கொண்ட பாம்பு என அதனைச் சொல்ல மாட்டார்களோ?  அதுபோலநல்லொழுக்கம் இல்லாத தீயவரைச் சேர்ந்த நல்லவர்க்கும் ஒழுக்கம் இல்லாத பழிச்சொல்லே வந்து சேரும்.

 

மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை,ஒருவனைப்

பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியை,- பெய்த

கலம் சிதைக்கும் பாலின் சுவையை,குலம்சிதைக்கும்

கூடார்கண் கூடி விடின்.      ---  நான்மணிக் கடிகை.

 

இதன் பொருள் ---

 

     ஒற்றுமை இன்மை ஒருவனை மொய் சிதைக்கும் --- தக்காரோடு ஒற்றுமை இல்லாமைஒருவனது வலிமையை ஒழிக்கும்பொய் பொன் போலும் மேனியைச் சிதைக்கும் --- பொய்ம்மையான ஒழுக்கம்பொன்னிறத்தைப் போன்ற அழகிய உடம்பைவாடச்செய்யும்பெய்த கலம் பாலின்சுவையைச் சிதைக்கும் --- நிரப்பி வைக்கப்பட்ட பாண்டம்பாலின் இனிய சுவையைக்கெடுக்கும்கூடார்கண் கூடி விடின் குலம் சிதைக்கும் --- கூடத் தகாதாரிடத்தில்நட்புக்கொண்டு கூடிவிட்டால்,அச்செய்கை தன் குலத்தை அழிக்கும்.

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...